கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

*பால‌ஸ்தீன‌ எதிர்ப்பிசையின் இல‌ய‌ங்க‌ள்

Sunday, November 15, 2009

பாலஸ்தீன எதிர்ப்பு இசை
-அஹமட் ஹபீப்

தமிழாக்கம்: டிசே தமிழன்

திரைப்பட இயக்குநரும், நெறியாளருமான, ஜாக்கி ரீம் சலூம், பாலஸ்தீனக் கலைகளை உலக அளவில் எடுத்துவருவதில் முக்கியமான ஒருவராக இருந்து வருகின்றார்.

பாலஸ்தீன மற்றும் சிரியாப் பெற்றோருக்கு, டியபோர்ன் மிக்சிக்கனில் பிறந்த சலூமின் கலைப்படைப்புக்களில் ஒரு புலம்பெயர்ந்த அரபு இளம்பெண்ணுக்குரிய பாதிப்பு இருக்கின்றது. சலூம் தனது பதின்ம இறுதிகளில், நியூயோர்க் பல்கலைக்கழகத்திலுள்ள கலைக் கல்லூரியில் படித்திருக்கிறார்.

2005ம் ஆண்டில் சண்டான்ஸ் திரைப்படவிழாவில், 'அரேபியர்களின் உலகம்' என்கின்ற ஒன்பது நிமிடப் படத்தை சலூம் தயாரித்து அளித்திருக்கிறார். இப்படம் எப்படி அரேபியர்கள் ஊடகங்களில் சித்தரிக்கப்படுகின்றார்கள் என்பதைக் காட்சிப்படுத்துகிறது. எனினும், சலூம் அவரது அண்மைய படமான 'slingshot hip hop' மூலமாக அதிக கவனத்தைப் பெற்றதுடன், இப்படம் ரொறொண்டோவில் நிகழ்ந்த பாலஸ்தீனியத் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டிருக்கிறது.

இந்த 80 நிமிட ஆவணப்படத்தில், சலூம் எவ்வாறு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில் பாலஸ்தீன ஹிப் ஹொப் கலைஞர்களின் வாழ்வும் கலையும் இருக்கிறது என்பதைக் கவனப்படுத்துகின்றார்.

இஸ்ரேலுக்குள் இருக்கின்ற DAM மற்றும் Lyd போன்ற குழுக்களும், காஸாவில் இருக்கின்ற P.R போன்ற குழுக்களும் தங்கள் இசையை ஒரு கலாசார எதிர்ப்பாய் அறிமுகப்படுத்துகிறார்கள்.

அல்ஜீசிராவிற்காய் இந்நேர்காணலைக் கண்டவர்: அஹமட் ஹபீப்

அஹமட் ஹபீப்: ஏன் நீங்கள் உங்கள் திரைப்படத்தை ஒருவிதமான எதிர்ப்பு எனக்கூறிக்கொள்கின்றீர்கள்?

சலூம்: அர‌புக்கார‌ர் ஒருவ‌ர், பொதுப்புத்தி ம‌ற்றும் அர‌சு/ வெளிநாட்டுக் கொள்கைக‌ளை எதிர்க்கும் ஒரு ப‌டைப்பைக் கொண்டு வ‌ருதலோ அல்ல‌து எங்க‌ள் க‌லாசார‌த்தையும் வ‌ர‌லாற்றையும் பிர‌திப‌லிக்கும் ப‌டைப்புக்க‌ளை உருவாக்குவது என்பதோ, ஒரு எதிர்ப்பினூடாக‌வே நிக‌ழ்த்த‌வேண்டியிருக்கிற‌து.

இந்த‌த் திரைப்ப‌ட‌த்தை தொட‌ர்ச்சியாக‌ உல‌கின் ப‌ல்வேறுபகுதிக‌ளிலுள்ள‌ திரைப்ப‌ட‌ விழாக்க‌ளில் திரையிடும்போது, ப‌ல‌ ம‌க்க‌ள் முத‌ற்த‌ட‌வையாக‌ பால‌ஸ்தீனர்க‌ளையும், பால‌ஸ்தீனம் பற்றிய படிமங்களையும் பார்க்கின்றார்க‌ள்.இப்ப‌ட‌த்தில் வ‌ருகின்ற‌ ராப் பாட‌க‌ர்க‌ள், பால‌ஸ்தீனர்க‌ளின் வாழ்க்கையில் புதிய‌ ய‌ன்ன‌ல் ஒன்றைத் திற‌ந்துவிடுகின்றார்க‌ள்.

இன்னொருவ‌கையில் இந்த‌ப்ப‌ட‌ம் க‌ற்பித்தலிற்கான ஓர் உப‌க‌ர‌ண‌மும் கூட‌. அமெரிக்காவிலுள்ள‌ ப‌ல‌ உய‌ர்க‌ல்லூரிக‌ள் மற்றும் க‌ல்லூரிக‌ளின் பாட‌விதான‌த்தில் இந்த‌ப்ப‌ட‌ம் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டுகின்ற‌து.

ப்ரோக்ளின் போன்ற‌ ப‌குதிக‌ளிலிருந்து வ‌ரும் மாண‌வ‌ர்க‌ள் ‍-முக்கிய‌மாய் க‌றுப்பின, இல‌த்தீனிய‌ இனத்தைச் சேர்ந்தவர்கள்- பால‌ஸ்தீன்ர்களின் போராட்ட‌த்தினால் க‌வ‌ர‌ப்ப‌ட்ட்டிருக்கின்றார்க‌ள். இவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் பிர‌ச்சனைக‌ளுக்கும், ஆக்கிரமிக்கப்பட்ட பால‌ஸ்தீனத்திலும், இஸ்ரேலிலும் இருந்து பாலஸ்தீன ராப் பாடகர்கள் பாடும் த‌ங்க‌ளின் வாழ்வு ப‌ற்றிய‌ கதைகளுக்கும் இடையில் தொட‌ர்புக‌ளைக் க‌ண்டுபிடிக்கின்ற‌ன‌ர். அமெரிக்காவிலிருக்கும் சில மாண‌வ‌ர்க‌ள், பால‌ஸ்தீன ராப் பாட‌க‌ர்க‌ளைக் க‌வுர‌ப்ப‌டுத்தும் முக‌மாய் ஹிப் ஹொப் பாட‌ல்க‌ளை அர‌பு-அமெரிக்க‌ க‌ல‌ப்பு இசையில் எழுதியுமிருக்கின்றார்க‌ள்.

இந்த‌ப்ப‌ட‌ம் ஒருவ‌கையான‌ 'எதிர்ப்பு' என்று கூறுவ‌த‌ற்கு இவ்வாற‌ன‌வை ஒரு சில‌ உதார‌ண‌ங்க‌ளாகும்.

அஹமட் ஹபீப்: : எவ்வாறான‌ த‌டைக‌ளை இப்ப‌ட‌த்தை உருவாக்கும்போது ச‌ந்தித்திருந்திருந்தீர்க‌ள்?

சலூம்: நான் இத்திட்ட‌த்திற்காக‌ ப‌ண‌த்தைச் சேக‌ரிக்க‌த் தொட‌ங்கிய‌போது, இப்ப‌ட‌ம் பால‌ஸ்தீனர்க‌ளின் ஹிப் ஹொப் இய‌க்க‌ம் ப‌ற்றிய‌து என்ப‌தை எப்போதும் நினைவுப‌டுத்திக்கொண்டு இருக்க‌வேண்டியிருந்த‌து.

அநேக‌மான‌வ‌ர்க‌ள் இப்ப‌ட‌ம் இஸ்ரேலிய‌ர்க‌ளும், பால‌ஸ்தீனர்க‌ளும் எப்ப‌டி ஹிப் ஹொப்பால் இணைகின்றார்க‌ள் என்ப‌தாக‌ இருக்குமென‌ நினைத்தார்க‌ள். ஆனால் இது பால‌ஸ்தீனிய‌ர்க‌ளைப் ப‌ற்றிய‌து மட்டும் என்று அவ‌ர்க‌ள் உண‌ர்ந்த‌போது, அவ‌ர்க‌ளில் ப‌ல‌ர் இந்தத் திட்டத்தில் ஈடுபாட்டைக் காட்ட‌வில்லை.

இறுதியில், என்னிட‌மிருந்த‌ ப‌ண‌ம் அனைத்தும் செல‌வழிந்து என‌து பெற்றோருட‌ன் திரும்பச்சென்று வாழ‌ வேண்டிய‌ நிலை ஏற்ப‌ட்ட‌து. அங்கே என‌து பெற்றோருக்குச் சொந்த‌மான‌ ஜ‌ஸ்கிறிம் க‌டையில் வேலை செய்திருக்கின்றேன். இவ்வாறாக‌ வேலை செய்துகொண்டு, இர‌வில் படத்தை எடிட் செய்வ‌துமாய் இருந்தேன். ஐஸ்கிறிம் பார்ல‌ரினால் வ‌ந்த‌ லாப‌ம் எல்லாவ‌ற்றையும் இந்தப்படத்திற்காய்ச் செல‌வ‌ழித்தேன்.

அத‌னால் தான், இப்ப‌ட‌ம் முடியும்போது, 'குளிர்ச்சியான ஜ‌ஸ்கிறிம் த‌யாரிப்புக்க‌ளுக்கு' என்று ச‌ம‌ர்ப்பித்திருப்ப‌தை நீங்க‌ள் காண்பீர்கள்.

இவையும், ச‌மூக‌த்தின‌தும் ம‌ற்ற‌ க‌லைஞ‌ர்க‌ளின் உத‌வி இல்லாதிருந்துவிட்டால் இப்ப‌ட‌த்திற்கு நிதியே வ‌ந்திருக்காது.

அத்தோடு இப்ப‌ட‌த்தை இஸ்ரேலில் எடுத்துக்கொண்டிருந்த‌போது, ப‌ல‌வித‌ த‌டைக‌ளைச் ச‌ந்தித்திருந்தேன். ஓர் அர‌பு அமெரிக்க‌ராய், ரெல் அவிவிலுள்ள‌ பென் குரிய‌ன் விமான‌ நிலைய‌த்திற்குப் போவ‌தென்ப‌தும் எப்போதும் மிக‌ப்பெரும் ச‌வாலான‌ அனுப‌வ‌மாக‌வும் அதைவிட‌ காஸாவிற்குள் நுழைவ‌து என்பது இன்னும் க‌டின‌மானதாக‌வும் இருந்திருக்கின்ற‌து.

நானொரு பால‌ஸ்தீனிய‌ப் பின்புல‌த்தில் இருப்ப‌தை அவ‌ர்க‌ள் அறியும்போது இது இன்னும் மோச்மாக இருந்தது. என்னை ஒவ்வொருமுறையும் விசாரணைக்காக தடுத்தி நிறுத்தி வைத்திருந்திருக்கின்றார்கள், சில‌ நேர‌ங்க‌ளில் ஏழு ம‌ணித்தியால‌ங்க‌ளுக்கு மேலாக‌வும்.

இன்ன‌மும் ம‌ன‌அழுத்த‌ம் இருப்ப‌து எங்கே என்றால், நான் (இஸ்ரேலின்) உள்ளே அனும‌திக்க‌ப்ப‌டுவேனா என்ப‌தை அறிய‌முடியாம‌ல் இருக்கும்போது; எனெனில் என‌க்குத் தெரிந்த ப‌ல‌ அர‌பு ந‌ண்ப‌ர்க‌ளுக்கு இஸ்ரேலின் உள்ளே பிர‌வேசிக்கப்ப‌டுவ‌து ம‌றுக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து. ஒருமுறை இஸ்ரேலிய‌ அதிகாரிக‌ள் என‌து க‌ம‌ராவைத் திருப்பித் த‌ருவ‌த‌ற்கு முன் உடைத்திருக்கின்றார்க‌ள். அத‌ன் பின், நான் டேப்புக்க‌ளையோ, உப‌க‌ர‌ண‌ங்க‌ளையோ ப‌ய‌ணிக்கும்போது கொண்டு செல்வ‌தில்லை.

நாங்க‌ள் இஸ்ரேலின் இவ்வாறான‌ செய்கைக‌ள் குறித்து எந்த‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளையும் ஒருபோதும் கேட்ட‌தில்லை. ராச்ச‌ல் கோரி போன்ற‌ அமெரிக்க‌ குடியுரிமையுள்ள‌வர்கள் இஸ்ரேலிய‌ புல்டோச‌ர்க‌ளால் கொல்ல‌ப்ப‌ட்ட‌போது கூட‌, இஸ்ரேலின் செயற்பாடுகளை -அவ‌ர்க‌ள் காஸாவிலுள்ள 'தீவிர‌வாதிகளிற்கு' எதிராக‌ச் ச‌ண்டைபிடிக்கின்றார்க‌ள் என்ற‌வ‌கையில் ஊட‌க‌ங்க‌ளினால் நியாய‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌.

அஹமட் ஹபீப்: : எவ்வாறான உற‌வுக‌ள் பால‌ஸ்தீன ம‌ற்றும் இஸ்ரேலிய‌ ராப் பாட‌க‌ர்க‌ளுக்கிடையில் இருக்கிற‌து?

சலூம்: நான் பால‌ஸ்தீனர்க‌ளும் இஸ்ரேலிய‌ர்க‌ளும் எப்ப‌டி ராப் பாட‌ல‌களினுடாக‌ ஒற்றுமையாக‌ சேர்ந்து வ‌ருகின்றார்க‌ள் என்ப‌தைப் ப‌ற்றிப் ப‌ட‌ம் எடுக்க‌வில்லை எனெனில் ய‌தார்த்த‌தில் அவ்வாறான‌ ஒரு நிலை ஹிப் ஹொப்பில் அங்கே இருக்க‌வேயில்லை.

அத்துட‌ன் குறிப்பிடும்ப‌டியான‌ ஒருங்கிணைவு பால‌ஸ்தீன ம‌ற்றும் இஸ்ரேல் ராப்ப‌ர்க‌ளிடையே இருக்க‌வில்லை. மிக‌வும் பிர‌ப‌ல்ய‌மான‌ இஸ்ரேலிய‌ ஹிப் ஹொப் க‌லைஞ‌ரே ஒரு வ‌ல‌து சாரி சியோனிஸ்டாக‌ இருப்ப‌தோடு, அர‌புக்க‌ளை கொல்லுமாறுதான் த‌ன‌து நிக‌ழ்வுக‌ளில் இர‌சிக‌ர்க‌ளுக்குப் பாடிக்கொண்டிருக்க்கின்றார்.

பால‌ஸ்தீன ராப்ப‌ர்க‌ளும் அவ‌ர்க‌ள‌து இர‌சிக‌ர்க‌ளும் ஒருபோதும் இஸ்ரேலிய‌ர்க‌ளையோ யூத‌ர்க‌ளையோ கொல்ல‌ச் சொல்லிப் பாடுவ‌தில்லை.

ஒரு சில‌ இஸ்ரேலிய‌ ராப்பர்க‌ள் மித‌வாதிக‌ளாக‌வும், பால‌ஸ்தீனர்க‌ளின் ஹிப் ஹொப்பிற்கு ஆத‌ர‌வாக‌வும் இருப்ப‌தோடு, டாம் ம‌ற்றும் அர‌பு‍-இஸ்ரேலிய‌ ராப்ப‌ர்க‌ளோடு சேர்ந்து வேலை செய்ப‌வ‌ர்க‌ளாக‌வும் இருக்கின்றார்க‌ள்.

என்கின்ற‌போதும், இவ்வாறான மிக அரிய ஒன்றிணைவுகள் எதுவும் அவ்வ‌ள‌வாய் மைய‌நீரோட்ட‌த்திலுள்ள‌ இஸ்ரேலிய‌ ஹிப் ஹொப் உல‌கில் பிர‌திப‌லிப்ப‌தில்லை.

அஹமட் ஹபீப்: : அர‌புப் பெண்க‌ள் க‌லைக‌ளில் அதிக‌ம் ஈடுப‌ட‌வேண்டும் என்று நீங்க‌ள் அழைப்பு விடுத்துள்ளீர்க‌ள்?

சலூம்: பெண்க‌ளின் குர‌ல்க‌ள் எல்லா இட‌ங்க‌ளில் கேட்க‌ப்ப‌ட‌வேண்டும் என்ப‌து எப்போதும் மிக‌ முக்கிய‌மான‌து.

இளைய‌ அர‌புக்க‌ளுக்கு அவ‌ர்க‌ள் ஆண்க‌ளாய் இருந்தாலென்ன‌ பெண்க‌ளாய் இருந்தாலென்ன‌ இவ்வாறான‌ க‌லை ச‌ம்ப‌ந்த‌மான‌ விடய‌ங்க‌ளில், தங்களுக்கு ஈடுபாடு இருக்கிறது என்பது ப‌ற்றித் த‌ம‌து குடும்ப‌ங்க‌ளுக்குக் கூறுவது என்ப‌து மிக‌வும் க‌டின‌மாயிருக்கிற‌து.

வீட்டிலிருக்க‌வும், ச‌மைக்க‌வும் சுத்த‌ம் செய்ய‌வும் வேண்டிய‌வ‌ர்க‌ள் பெண்க‌ள் என்கின்ற‌ க‌ருத்துக்க‌ளுக்கு எதிராக‌ இவ்வாறான‌ விட‌ய‌ங்க‌ளில் ஈடுப‌டுவ‌து என்ப‌து ய‌தார்த்த‌தில் பெண்க‌ளுக்கு இன்னும் மிக‌வும் க‌டின‌மாயிருகிற‌து. நான் என‌து பெற்றோருக்கு க‌லைப்ப‌டிப்பு ப‌டிக்க‌ப்போகின்றேன் என்று கூறிய‌போது, அவ‌ர்க‌ள் வேண்டாம், ஒரு பார்ம‌ஸிக்காரியாகவோ நூலகக்காரியாகவோ ஆகத்தான் ப‌டிக்க‌ச் சொன்னார்க‌ள்.

அவ‌ர்க‌ளைச் ச‌ம‌ர‌ச‌ம் செய்வ‌த‌ற்காய் கிராபிக் டிசைனை தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அத‌னால் அவ‌ர்க‌ள் என்னை ஊக்குவித்தார்க‌ள். ஆனால் நான் தொடர்ச்சியாக ஓவிய‌ங்க‌ளை வ‌ரைந்து அது ஊட‌க‌ங்க‌ளின் க‌வ‌ன‌த்தையும் பெற்ற‌போது அவ‌ர்க‌ள் (பெற்றோர்) என்க்கு மிக‌ உத‌வியாக‌வும் பிற‌ அர‌புப் பெற்றோர்க‌ளுக்கும் அவ‌ர்க‌ளின் பிள்ளைக‌ளை ஓவிய‌ர்க‌ளாக‌, இய‌க்குந‌ன‌ர்க‌ளாக‌, பாட‌க‌ர்க‌ளாக‌ வ‌ர‌ ஊக்குவிக்க‌ச் சொல்லிக் கூறியிருந்தார்கள்.

பால‌ஸ்தீனக் க‌லைஞ‌ராக‌ இப்ப‌ட‌த்தில் வ‌ருகின்ற‌ அபீர், மேடைக‌ளில் ஏறிப்பாடும்போது த‌ன‌து உற‌வின‌ர்க‌ளின் ப‌ய‌முறுத்த‌ல‌க‌ளுக்கு எதிராக‌ப் போர‌ட‌வேண்டியிருந்த‌து. அதிக‌மான‌ வேளைக‌ளில் பாடுவ‌தை இர‌க‌சிய‌மாக‌ச் செய்ய‌வேண்டியிருந்த‌து.

இவை எல்லாவ‌ற்றுக்கும் அப்பால், அபீர் எது த‌ன‌க்க்கு அதிக‌ம் பிடித்த‌தாக‌ இருந்த‌தோ அதைத் தொட‌ர்ந்து செய்துகொண்டிருந்தார்.... அது தானே பாட‌ல்க‌ளை உருவாக்கிப் பாடுவது என்பதாக இருந்தது.

ஜோர்டான், லெப‌னான், பால‌ஸ்தீனம் ம‌ற்றும் அமெரிக்காவில் இப்ப‌ட‌ம் திரையிட‌ப்ப‌ட்ட‌திலிருந்து ப‌ல‌ இளம் பெண்க‌ள் அபிரூக்கு த‌ங்க‌ள் ஆதரவையும், அபீர் செய்யும் பணிக்கான கவுரவத்தையும் மின்ன‌ஞ்ச‌ல்க‌ள் மூல‌ம் கூறிக்கொண்டிருக்கின்றார்க‌ள். அவ‌ர்க‌ளில் அநேக‌ர் தாங்க‌ளும் அபீரைப் போல‌வே ப‌ல‌வேறு ச‌வால்க‌ளைச் ச‌ந்தித்துக்கொண்டிருப்ப‌தாக‌க் கூறியிருக்கின்றார்க‌ள். அபீருக்கு பால‌ஸ்தீன ராப்ப‌ர்க‌ளிட‌மிட‌மிருந்தும் அதிக‌ அதரவு கிடைத்திருக்கின்ற‌து. அவ‌ர்க‌ள் த‌ம‌து திட்ட‌ங்க‌ளிலிருந்து அபீரை அக‌ற்றுவ‌தை ம‌றுத்த‌துட‌ன், அர‌புச் ச‌மூக‌ங்க‌ள் பெண்க‌ளை ந‌ட‌த்தும் வித‌த்தையும் விம‌ர்சித்தும் இருக்கின்றார்க‌ள்.

அர‌பு உல‌கிலுள்ள‌வ‌ர்க‌ளுக்கு, அபீர், அரிய‌பெய‌ட் போன்ற‌ இள‌ம் பெண்க‌ளைக் காட்ட‌வேண்டும் என்ப‌திலும், ஹிப் ஹொப் உல‌க‌ம் என்ப‌து அமெரிக்கா மற்றும் அர‌பு நாடுக‌ளிலிருந்து வ‌ரும் இனிப்பு பூச‌ப்ப‌ட்ட‌ பொப் இசை போன்ற‌த‌ல்ல‌ என்ப‌தை உண‌ர்த்த‌வேண்டும் எனவும் நான் மிகவும் விரும்பினேன்.

அஹமட் ஹபீப்: : இந்தப் படத்தை தயாரித்துக்கொண்டிருந்தபோது, எவ்வகையான மறக்கமுடியாத் தருணங்களைச் சந்தித்திருந்தீர்கள்?

சலூம்: மேற்குக் கரையில் எப்போதும் எங்கள் உறவினர்கள் வாழ்ந்துகொண்டிருந்தார்கள் என்பதனால் எனக்கு ஆக்கிரமிப்பு வாழ்வு மிகவும் பழக்கப்பட்டதாக இருந்தது.

இஸ்ரேலியர்களுடான தொடர்பு என்பது எனக்கு காவலரண்களைத் தாண்டும்போதோ, விமான நிலையத்தால் வரும்போதோ தான் இருந்திருக்கின்றது. இல்லாதுவிட்டால் அவர்கள் டாங்கிகளில் வரும்போதோ அல்லது சினைப்பர் ர(ட)வர்களில் இருக்கும்போதுதான் அவர்களைச் சந்திக்கவேண்டியிருந்தது. எனினும் இந்தப்படம் எனக்கு இஸ்ரேலியர்களின் 1948ம் ஆண்டு ஆக்கிரமிப்பின்பின் பாலஸ்தீனர்கள் தங்கள் நிலங்களில் எவ்வாறு வாழ்கின்றார்கள் என்ப‌தை அறிமுகப்படுத்தியது.

இஸ்ரேலிய குடியுரிமை இருந்தும் கூட மக்கள் மிகவும் மோசமான ஒடுக்குதலுக்கும், புறக்கணிப்புக்கும் இஸ்ரேலில் உள்ளாகின்றார்கள் என்பது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

முக்கியமாக பலவேறு நிலைகளில் பாலஸ்தீனர்கள் என்ற ஒரு பொது அடையாளத்திற்குள் அடைக்கப்பட்ட்டு ஒருமைப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள். சில இளையவர்களை நான் சந்தித்தபோது அவர்களுக்கு தமது பாலஸ்தீன அடையாளம் குறித்த குழப்பம் இருந்ததுடன், த்ங்களை எவ்வாறு அடையாளப்படுத்துவது என்பதும் தெரியாமல் இருந்தது.

இவையெல்லாம் சேர்ந்து ஆக்கிரமித்த மக்களைப் பல்வேறு வழிகளில் பிரிக்கின்றது. அத்துடன் மேற்குக் கரையிலும், இஸ்ரேலிலும், காஸாவிலும் வாழும் பாலஸ்தீனர்களுக்கு ஒருவரை ஒருவர் சென்று பார்ப்பது எனபது மிகவும் சிரமமாக இருக்கின்றது.

இந்தப்புள்ளியில்தான் ஹிப் ஹொப் இசை பாலஸ்தீன இளையவர்களை ஒன்றாகக் கொண்டுவருவதில் முக்கியம் பெறுகின்றது.

அஹமட் ஹபீப்: நாங்கள் உங்களின் அடுத்த திட்டமாய் எதை எதிர்ப்பார்க்கலாம்?

சலூம்: இந்தப் படத்திற்காய் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களைச் செலவழித்திருக்கின்றேன். Slingshot hip hop படம் வெளிவந்துவிட்டதால் அதன் வெற்றிக்காக உழைக்க விரும்புகின்றேன்.

இறுதியாய், நான் அரபு கலைஞர்களின் வீடியோ இசை ஆல்பங்களில் வேலை செய்ய விரும்புகின்றேன். என்னால், தரப்படும் மூன்று நிமிடங்களுக்குள் ஒரு கதையைப் பாடலில் சொல்லமுடியுமென நினைக்கின்றேன்.

இன்றையநாட்களில் பாடல்களில் ஆக்கிரமித்திருக்கும் மெழுகுவர்த்திகள், நீர் மற்றும் பெண்களைப் பயன்படுத்தும் சூத்திரங்கள் என்பவற்றுக்கு மாற்றாய் வித்தியாசமாய் செய்ய நான் விரும்புகின்றேன்.

நன்றி: அல் ஜீசிரா
(உன்னதம், Nov, 2009)

*த‌லைய‌ங்க‌த்தைப் பொருத்த‌மாய் த‌மிழாக்கித்த‌ந்த‌ வ‌ள‌ர்ம‌திக்கு ந‌ன்றி.

9 comments:

Raj Chandra said...

உறுத்தாத மொழிப்பெயர்ப்புக்கு நன்றி. ராப் இசையை ரய் பாடகர் காலீத்-ம் ஒரு பாடலில் (நான் கேட்ட வரை) உபயோகப் படுத்தியிருப்பார் (’அலீஷா’ எனத் தொடங்கும் பாடல் என்று நினைக்கிறேன்).

11/15/2009 09:51:00 PM
ஆபிதீன் said...

அன்பு DJ,

தலைப்பு குழப்பம் தருகிறது. மாற்ற இயலுமா? நன்றி.

ஆபிதீன்

11/16/2009 02:16:00 AM
DJ said...

ஆபிதீன், இதைக் குறிப்பிட்ட‌மைக்கு ந‌ன்றி. Palestine Rhymes of Resistance என்ப‌தை நேர‌டியாக‌ மொழிபெய‌ர்ப்ப‌தில் மிகுந்த‌ சிக்க‌லிருந்த‌து. ஆக‌வே உன்ன‌த‌திற்கு அனுப்பிய‌போதும் Palestine Rhymes of Resistance என்ற‌ ஆங்கில‌ப்பெய‌ரிலேயே அனுப்பியிருந்தேன். 'பால‌ஸ்தீனிய‌ எதிர்ப்பு இசை' என்ப‌தைக் கூட‌ முத‌லில் 'பால‌ஸ்தீனம்: எதிர்ப்பின் இல‌ய‌ங்க‌ள்' என்றுதான் இத்த‌ள‌த்தில் ப‌திவ‌த‌ற்கு முன் மாற்றியிருந்தேன். எனினும் அத்தோடு ம‌ன‌ம் அவ்வ‌ள‌வாய் ஒன்ற‌வில்லை.

இப்போது வ‌ள‌ர்ம‌தியோடு உரையாடிய‌பின், 'எதிர்த்திசைக்கும் பலஸ்தீனிய லயங்கள்' ம‌ற்றும் 'பால‌ஸ்தீன‌ எதிர்ப்பிசையின் இல‌ய‌ங்க‌ள்' என்று இர‌ண்டு த‌மிழாக்க‌ங்க‌ளை வ‌ள‌ர் முன்மொழிந்த‌துட‌ன் இதைப் பொதுவிலும் வைக்க‌ச் சொன்ன‌ர். இப்போது என‌க்கும் 'பால‌ஸ்தீன‌ எதிர்ப்பிசையின் இல‌ய‌ங்க‌ள்' த‌லைப்பு பொருத்த‌மாயிருப்ப‌தாய்த் தோன்றுவ‌தால் மாற்றிவிடுகின்றேன். வேறு ஏதேனும் ந‌ல்ல‌தொரு த‌மிழ்ப்ப‌டுத்த‌லை யாரேனும் முன்வைத்தால் அதையும் ஏற்றுக்கொள்வேன். ந‌ன்றி.

11/16/2009 10:13:00 AM
DJ said...

நன்றி ராஜ் சந்திரா.
கெளதம சித்தார்த்தன் கேட்டதன்பேரில் குறுகிய காலத்தில் இதைத் தமிழாக்கம் செய்து கொடுத்திருந்தேன். மேற்குறிப்பிட்ட ஆவணப்படத்தையும் பார்த்திருந்தால் பலவிடயங்ளை உள்வாங்கி இன்னும் நேர்த்தியாக மொழிபெயர்த்திருக்கலாம் என நினைக்கின்றேன்.
....
நீங்கள் குறிப்பிட்ட காலீத்- இன் பாடலைக் கேட்டதில்லை. தேடிப்பார்க்கிறேன்.

11/16/2009 06:38:00 PM
Jega said...

ராஜ், ராப் இசையை ரய் பாடகர் காலீத் ஒரு போதும் பாடியதில்லை என நினைக்கிறேன்.
இதோ உங்களிற்காக ஆயீஷா......
http://www.youtube.com/watch?v=iIyyPsqRweE

11/16/2009 11:45:00 PM
ஆபிதீன் said...

இப்போது நெருடவில்லை DJ, நன்றி. நண்பர் வளர்மதிக்கு என் நன்றியைச் சொல்லுங்கள்

ஆபிதீன்

11/17/2009 06:48:00 AM
Raj Chandra said...

Jegan: Thanks...I didn't use the right word, I guess. I should have said he mixed a Rap song in his.

Also, the song name is incorrect. "Oran Marseille" is the one which Khaled composed with the rapper "I AM".

Sorry for the confusion.

11/17/2009 12:58:00 PM
Sri Rangan said...

அன்பு டி.ஜே,நீங்கள் ஒவ்வொரு வார்த்தைக்கும் எச்சரிக்கையாகவே அர்த்தங்காண முனைகிறீர்கள்.

இதுதான் அவசியமானது.

நான் இதையிட்டுப் பெருமைப்படுகிறேன்.

அடுத்துத் தமிழில் வார்த்தைகளுக்கு பல அர்த்தங்கள் கொடுக்க முடியும்-நீங்கள் அறியாததல்ல.எனினும்,சுட்டி விடுகிறேன்:

வாக்கியத்தில் வினைப் பிழைகள் பெரும்பாலும் செயற்படு பொருளிலிருந்து ஆரம்பிப்பது.

"பாலஸ்த்தீனக் கவிதைகள்" என்பது அந்தத் தேசத்துக் உரியதென்று பொருள் தரும். "பாலஸ்தீன எதிர்ப்பிசையின் இலயங்கள்" என பாலஸ்த்தீனத்துக்கு இடையில் வினை வரும்போது,அது பாலஸ்தீனத்துக்கு எதிரானதெனப் பொருள் தருகிறது.

இதை:"பாலஸ்தீனத்தினது எதிப்பிசை இலயங்கள்" எனும்போது அர்த்தம் குழப்பமின்றிப் போகிறது.

அன்றி, "பாலஸ்த்தீனத்தின் எதிர்ப்பிசையினது இலயங்கள்" என்றும் சுட்டுவது சிறப்பு.

Resistance -றெசிஸ்ரன்ஸ் எனும் கலைச் சொல்,நோய் எதிர்ப்புயிரி"கிருமி"க்குப் பழக்கப்பட்டுப்போவதால் ஏற்படும் விளைவுக்குப் பொருத்தமானது.அவ்வண்ணமே பாலஸ்த்தீனியர்களுக்கு எதிரான ஒடுக்குமுறை பாலஸ்த்தீனியர்களுக்குப் பழக்கப்பட்டு,அதை எளிதில் முறியடிக்கும் கலைக்கு அவர்களிட்ட அவ்வார்த்தை மிகச் சரியானது.
ஆனால்,தமிழில் இதனது சரியான நேரடிச் சொல் இன்னும் உணர்வுக்குள் வரவில்லை.

இதற்கு,விடைகாண,இராம கி.போன்ற தமிழ் அறிஞர்களே சரியானவர்கள்.

தேவையான மொழியாக்கம்.நன்றி.

11/18/2009 03:10:00 AM
DJ said...

அன்பின் சிறிர‌ங்க‌ன், விரிவான‌ பின்னூட்ட‌டத்திற்கு ந‌ன்றி. நீங்க‌ள் குறிப்பிடுகின்ற‌மாதிரி சில‌வேளைக‌ளில் க‌வித்துவ‌மான‌ ஆங்கில‌ச் சொற்க‌ளைத் த‌மிழ்ப்ப‌டுத்தும்போது நேர‌டியாக‌ மொழிபெய‌ர்க்க‌ முடியாது என்ப‌து விள‌ங்குகின்ற‌து. இங்கே of என்ற‌ சொல்லை பால‌ஸ்தீன‌த்தில் பாவிக்காத‌ப‌டியால் 'பால‌ஸ்தீன‌த்தின‌து' என்று நேர‌டியாக‌ ஆங்கில‌த்திலிருந்து த‌மிழுக்கு மாற்ற‌முடியாது. ஆனால் அதே ச‌ம‌ய‌ம் த‌னியே 'பால‌ஸ்தீன‌ எதிர்ப்பிசையின் இல‌ய‌ங்க‌ள்' என்று த‌மிழ்ப்ப‌டுத்தும்போது எதிர்ம‌றையான‌ அர்த்த‌த்தைத் த‌ந்துவிடும் அபாய‌மும் உண்டு என்ப‌தையும் ஒப்புக்கொள்கிறேன். இதைத்தான் ஆபதீனும் த‌லைய‌ங்க‌ம் குழ‌ப்ப‌மாக‌ இருக்கிற‌தென‌த் தொட‌க்க‌த்திலேயே குறிப்பிட்டிருந்தார். 'பால‌ஸ்தீன‌த்தின‌து எதிர்ப்பிசையின் இல‌ய‌ங்க‌ள்' என்ப‌துதான் இல‌க்க‌ண‌ப்ப‌டி ச‌ரியென்பதை ஏற்றுக்கொண்டு ஒரு க‌வித்துவ‌மான‌ த‌லைய‌ங்க‌மாய் 'பால‌ஸ்தீன‌ எதிர்ப்பிசையின் இல‌ய‌ங்க‌ளை' இப்போதைய‌ த‌லைய‌ங்க‌மாய் விட்டுவிடுகின்றேன்.
ந‌ன்றி.

11/19/2009 04:18:00 PM