கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ஒரு யாழ்ப்பாணியின் சோக‌ வாக்குமூல‌ம்

Thursday, April 15, 2010

-நெடுங்க‌தை-

1.
அவ‌ளைக் காண‌வில்லை என்று தெரிந்த‌போது நான் பெரிதாக‌ முத‌லில் எடுத்துக்கொள்ள‌வில்லை. வ‌குப்பு முடிந்த‌வுட‌ன் வ‌ழ‌மையாக‌ச் ச‌ந்திக்கும் இட‌த்தில் அவ‌ள் இல்லாத‌போது வேறெத‌னும் வேலையாக‌ப் போயிருப்பாள் -தாம‌த‌மாக‌ வ‌ரலாம்- என்று காத்துக்கொண்டிருக்க‌த் தொட‌ங்கினேன். கோடை கால‌த்தில் இந்த‌ வ‌ளாக‌த்தைச் சுற்றி ஓடும் ந‌தியிற்கு அதிக‌ வ‌ன‌ப்பு வ‌ந்துவிடுகின்ற‌து. ப‌டிக்கும் நாங்க‌ள் ப‌ல்வேறு தாய்மொழிக‌ளைப் பேசிக்கொண்டு திரிவ‌துபோல‌ ந‌தியும் க‌ல‌க‌ல‌ப்பாக‌ப் ப‌ல‌மொழிக‌ளைப் பேசிக்கொண்டு ந‌க‌ர்வ‌து போல‌ப்ப‌ட்ட‌து.

இய‌ற்கைச் சூழ‌லை இர‌சிக்க‌த்தொட‌ங்கிய‌தில் நான் எத‌ற்காய் இங்கு வ‌ந்து காத்துக்கொண்டிருக்கின்றேன் என்ப‌தும் ம‌ற‌ந்துபோய்விட்ட‌து. ஒருக்காய் முறிக‌ண்டிப்ப‌க்க‌ம் போய் த‌லையைக் காட்டிவிட்டு வ‌ர‌லாம் என்றாலும், இவ‌ள் அத‌ற்குள் வ‌ந்துவிட்டாள் என்றால் பெரும் பிர‌ச்சினையாகிவிடும். 'ஏன் அந்த‌ப் ப‌க்க‌ம் போனாய்' என்று அவ‌ள் எழுப்பும் கேள்வியோடு புகையைத் தொட‌ங்கும் ச‌ண்டையின் பெருநெருப்பை, மூன்று கிலோமீற்ற‌ர் தூர‌த்திலிருக்கும் க‌னேடிய‌ பிர‌த‌ம‌ர் வாச‌ல்த‌ல‌த்தால் கூட‌ தீர்த்துவைக்க‌ முடியாது. க‌ன‌டாவில், அதுவும் அத‌ன் த‌லைந‌க‌ரில் முறிக‌ண்டி எப்ப‌டி வ‌ந்த‌து என்று நீங்க‌ள் உங்க‌ள் மூளையைத் திருகு திருகென்று திருக‌வும்கூடும். முறிக‌ண்டி ம‌ட்டுமில்லை, க‌ன்னிய‌ர் ம‌ட‌ம், வ‌ழுக்கையாறு என்ப‌தெல்லாம் கூட‌ எங்க‌ளின் வ‌ளாக‌த்தில் இருக்கின்றன. முறிக‌ண்டி என்ப‌து நீங்க‌ள் எங்க‌ள் வ‌ளாக‌த்தின் சுர‌ங்க‌ப்பாதைக்குள்ளால் ந‌ட‌ந்துபோனால் வ‌ருகின்ற‌ ஒரு முச்ச‌ந்திப் பிர‌தேச‌மாகும். முச்ச‌ந்தியில் ஒருபுற‌ம் கோப்பிக்க‌டையும், இன்னொரு ப‌க்க‌ம் Barம் இருக்கும். வ‌ளாக‌த்துக்கு வாற‌ போற‌ பெட்டைய‌ள் ஏதோ ஒரு வ‌குப்புக்காக‌வேனும் அந்த‌ முச்ச‌ந்தியைக் க‌ட‌ந்துபோய்க் கொண்டிருப்பார்க‌ள் என்ப‌தால் அது ஒரு கேந்திர‌ முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌ இட‌மாய் மாறிவிட்ட‌து. என‌க்கென்ன‌வோ இந்த‌ப் பொடிச்சிக‌ள், தாங்க‌ள் அன்ற‌ன்றைக்கு செய்கின்ற‌ அல‌ங்கார‌த்தைப் பெடிய‌ங்க‌ளுக்குக் காட்சிப்ப‌டுத்தி பாராட்டைப் பெறுவ‌த‌ற்காய்த்தான் அடிக்க‌டி முறிக‌ண்டிப் ப‌க்க‌மாய் ந‌டைப‌வ‌னி செய்கின்றார்க‌ளோ என்கின்ற‌ ஒரு சந்தேகமும் உண்டு. அத்தோடு ப‌க்க‌த்திலை ஒரு பாரும் இருக்க‌ அதுக்குள்ளை தாக‌ந் தீர்க்க‌, இங்காலை க‌ண்ணுக்கு குளிர்ச்சிக்கென‌ இர‌வு ஒன்ப‌து ப‌த்து ம‌ணிவ‌ரை ச‌ன‌ம் நிறைய‌ப் புழ‌ங்கிக்கொண்டிருக்கிற‌ இட‌மாய்தான் முறிகண்டியிருக்கும். இப்ப‌டி வெளியிலை வெயிலுக்குள்ளை நிண்டு என‌க்கும் ஒரே தாக‌மாய்தானிருக்கிற‌து, முறிகண்டிச் ச‌ந்திக்குப் போய் வாயைக் கொஞ்ச‌ம் ந‌னைச்சுட்டு வ‌ந்திட‌லாம் என்றால் இவ‌ளொருத்தி வ‌ருவ‌தாய்ச் சொன்ன‌து நினைவுக்கு வ‌ந்து ப‌ய‌முறுத்துகிற‌து

ஒருமுறை இப்ப‌டித்தான் முத‌லாம் ஆண்டு பெட்டையொருத்திக்கு ஒற்றை ரோஸ் கொடுத்து காத‌லைச் சொல்ல‌ ந‌ண்ப‌ரொருவ‌ன் முறிக‌ண்டியில் காத்துக்கொண்டிருந்தான். அவ‌னும் ரிப்ரொப்பாய் வெளிக்கிட்டு, ரென்ச‌னைக் குறைக்க‌ கொஞ்ச‌ம் 'வாசித்து'விட்டு சுதியாய்த்தான் நின்றான். அந்த‌ப் பெட்டை வ‌ருகின்ற‌ நேர‌ம‌ள‌வில் ஒற்றை ரோஸை எங்க‌ள் கையில் த‌ந்துவிட்டு, த‌ன்ரை ரென்ச‌னைக்குறைக்க‌ பாத்ரூம் போய்விட்டு வ‌ந்திருந்தான். பெட்டை முறிக‌ண்டியைக் க‌ட‌க்கையில் 'உங்க‌ளோடு கொஞ்ச‌ம் க‌தைக்க‌வேண்டும்' என்று ஒர் ஓர‌த்தில் கூப்பிட்டு அந்த‌மாதிரி ரொமாண்டிக்காய் முழ‌ங்காலிட்டு I love you என்ற‌ப‌டி ஒற்றை ரோஸைக் கொடுத்தான். அந்த‌ப் பெட்டைக்கு கொஞ்ச‌ம் அதிர்ச்சி என்றாலும், இப்ப‌டி ஒருத்த‌ன் ரொமாண்டிக்காய் இருக்கின்றானே என்ப‌தில் ஒரு நெகிழ்ச்சி வ‌ர‌ ரோஸையும் வாங்கிவிட்டாள். ஆனால் ரோஸை அவ‌ள் முக‌ர்ந்து பார்த்த‌தில்தான் எல்லாப் பிர‌ச்சினையும் தொட‌ங்கிய‌து. 'You bloody drinker, அவ்வ‌ப்போது நீ குடிக்கிற‌தென்றால் கூட ப‌ர‌வாயில்லை, அத‌ற்காய் ப்ர‌போஸ் ப‌ண்ணுகிற‌ கேர்ளிற்குத் தருகிற‌ ரோஸைக் கூட‌ குடிக்க‌ வைத்துத் த‌ந்திருக்கிறாயே, உன்னையெல்லாம் ந‌ம்பி நான் எப்ப‌டிக் காத‌லிக்க‌ முடியும்' என்று ந‌ல்லாய்த் திட்டிவிட்டு ரோஸையும் குப்பைத்தொட்டிக்குள் எறிந்துவிட்டு அவ‌ள் ம‌றைந்துவிட்டாள். ந‌ண‌ப‌னுக்கோ என்ன‌ ந‌ட‌ந்த‌தென்று பெருந்திகைப்பாக‌ இருந்த‌து. நாங்க‌ள்தான் கொடுப்புக்குள் ந‌முட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தோம். கையில் கொஞ்ச‌ நேர‌ம் வைத்திருக்க‌ச் சொன்ன‌ ரோஸை பிய‌ர் பிச்ச‌ருக்குள் அமிழ்த்தி எடுத்த‌து நாங்க‌ள்தான்.. பெட்டை முறிகண்டிக்கு வாற‌ ரென்ச‌னிலை ந‌ண்ப‌னால் ரோஸிலிருந்த‌ வ‌ந்த‌ 'ந‌றும‌ண‌ம்' ஒன்றையும் இன‌ம்பிரித்த‌றிய‌ முடிய‌வில்லை.

இங்கே முன்னே ஒடிக்கொண்டிருக்கிற‌ ரீடோ ஆற்றுக்கு நாங்க‌ள் இட்ட‌பெய‌ர்தான் வ‌ழுக்கையாறு. ஆறே இல்லாத‌ யாழ்ப்பாண‌த்திலை ம‌ழை நிறைய‌ப் பெய்து வெள்ள‌வாய்க்காலுக்குள்ளாலை நீரோடும்போது அது வ‌ழுக்கையாறாக‌ மாறிவிடுவ‌துண்டு. நானொரு அச‌ல் த‌மிழ‌ன். என்ன‌ தான் ஆயிர‌க்க‌ண‌க்கான‌ மைல்க‌ள் தாண்டி க‌ன‌டாவுக்கு வ‌ந்தாலும் எங்க‌டை ஊர்க‌ளை ம‌ற‌க்க‌க்கூடாதுதான். சில‌வேளை என்ரை பெட்டை வாய் த‌வ‌றி ரீடோ ஆற்றுப்ப‌க்க‌மாய்ச் ச‌ந்திப்போம் என்றாலும், நான் 'வ‌ழுக்கையாறு என்று சொல்லும்' என்று திருத்த‌ ஒருபோதும் ம‌ற‌ப்ப‌தேயில்லை. ஈழ‌த்தில் பாளியாறு ப‌த‌வியா ஆறு, ம‌காவ‌லியாறு என்று எத்த‌னையோ ஆறுக‌ளிருக்க‌ இப்ப‌டியொரு போலி ஆற்றின் பெய‌ரைத் தேர்ந்தெடுத்த‌துதான் ஒரு யாழ்ப்பாணிக்குரிய‌ சாம‌ர்த்திய‌ம்.

2.
இவளை ஏன் இன்ன‌மும் காண‌வில்லை. வ‌ழுக்கையாற்ற‌டிக்கு வ‌ந்தே கிட்ட‌த்த‌ட்ட‌ ஒரு ம‌ணித்தியால‌த்திற்கு மேலே ஆகிவிட்ட‌து. இத‌ற்கிடையில் நாலைந்து முறை அவ‌ளை செல்போனில் அழைத்தும் பார்த்துவிட்டேன், ஒரு ப‌திலையும் காண‌வில்லை. காத‌லுக்காய் த‌மிழ்ப்ப‌ட‌ங்க‌ளில் வ‌ருகின்ற‌ கதாநாய‌க‌ன்க‌ள் போல‌ என்னால் இனியும் காத்துக்கொண்டிருக்க‌ முடியாது. அவ‌ர்க‌ளுக்காவ‌து காத‌லி வ‌ந்துவிட்ட‌த‌ன்பிற‌கு கொஞ்ச‌ம் கோபித்து, கொஞ்ச‌ம் செல்ல‌ம் கொஞ்சி, பிற‌கு ஏதாவ‌து வெளிநாடொன்றுக்குப் ப‌ற‌ந்து டுய‌ட் ஆட‌வாது முடிகின்ற‌து. என‌க்கு இஃதொன்றும் நிக‌ழ‌ப்போவ‌தில்லை. இப்ப‌டி நீண்ட‌நேர‌க் காத்திருப்ப‌தாலேயே ஒரு க‌டுப்பு வ‌ந்துவிட்டிருக்கும். இவ‌ள் வ‌ந்த‌வுட‌னே அது எள்ளும் கொள்ளுமாய் வெடிப்ப‌தாய்த்தான் முடியும். பிற‌கு ச‌ண்டை, க‌ண்ணீர், கெஞ்ச‌ல், ஆற்றுப்ப‌டுத்த‌ல் என ஒருவார‌ம் இருவ‌ரும் ம‌ன‌ உளைச்ச‌ல்க‌ளோடுதான் இருக்க‌வேண்டியிருக்கும். எத‌ற்கு இந்த‌ப் பொல்லாப்பு. 'என்னால் இனியும் காத்திருக்க‌முடியாது நான் வீட்டை போகின்றேன்' என்றொரு ரெக்ஸ் மெஸேஜ் அனுப்பிவிட்டுப் போக‌வேண்டிய‌துதான்.

இப்போது இர‌வு எட்டு ம‌ணியாகிற‌து. ம‌த்தியான‌ம் இவ‌ளைச் ச‌ந்திக்காம‌ல் வீட்டை வ‌ந்து ந‌ன்கு நித்திரை கொண்டு எழும்பியாகியும் விட்டாச்சு. ஒருமுறை அவ‌ளை செல்போனில் அலைத்துப் பார்ப்போம். ம‌த்தியான‌ம் காத்திருந்த‌ அலுப்பை கொஞ்ச‌மாக‌வேனும் காட்டாம‌ல், காத‌லில் உருகி எப்ப‌டிக் க‌தைப்ப‌து என்று ஒருமுறை என‌க்குள் ஒத்திகை செய்துகொண்டேன். காத‌லிக்கும்போது எப்போதும் மிக‌வும் க‌ஷ்ட‌ப்ப‌ட்டு ந‌ல்ல‌ ப‌க்க‌ங்க‌ளை ம‌ட்டுமே காட்ட‌வேண்டும் என்று எங்கையோ வாசித்த‌து இந்த‌ச் சூழ‌லுக்கு எவ்வ‌ள‌வு பொருந்துகிற‌து பாருங்க‌ள். ஏன் இவ‌ள் தொலைபேசியை எடுக்கிறாளில்லை. என்ன‌ ந‌ட‌ந்த‌து இவ‌ளுக்கு? சில‌வேளை என்னை வெட்டிவிட்டு வேறு யாரைவ‌து பிடித்துவிட்டாளா? சீ...ஏன் என்னைப் போல‌வே அவ‌ளையும் நினைக்கிறேன். வேறு ஒருத்த‌னைப் பிடிக்க‌வேண்டியிருந்தால் இந்த‌ இர‌ண்டு வ‌ருச‌த்துக்குள்ளையே எத்த‌னையோ ச‌ந்த‌ர்ப்ப‌ம் அவ‌ளுக்கு வாய்த்திருக்கும். அதையெல்லாம் ம‌றுத்த‌ப‌டிதானே என்னோடு இருந்த‌வ‌ள். அப்ப‌டியேதும் ந‌ட‌ந்திருக்காது. அப்ப‌ ஏன் இப்ப‌ தொலைபேசியை எடுக்கிறாளில்லை. ச‌ரி எத‌ற்கும் அவ‌ளின் அறைத்தோழிக்கு அழைத்துப் பார்க்க‌வேண்டிய‌துதான். 'என்ன‌ அவ‌ள் கால‌மை வ‌ளாக‌த்து வெளிக்கிட்ட‌த‌ற்குப் பிற‌கு இன்னும் அறைக்கு வ‌ர‌வில்லையா?' எங்கை போய் இவ‌ள் தொலைந்துவிட்டாள். இத‌ற்கு முன் இப்ப‌டியேதும் நிக‌ழ்ந்து இல்லையே. வேறெங்காவ‌து இப்ப‌டி போவ‌தாய் இருந்தால் கூட‌ தொலைபேசியில் அழைத்தோ, ஈமெயிலிலோ அல்ல‌து ரெக்ஸ் மெஸேஜ் செய்துவிட்டோதானே போகின்ற‌வ‌ள். என்ன‌வாயிற்று இவ‌ளுக்கு.

இவ‌ளுக்கு இங்கை இர‌ண்டு அண்ணாமார் இருக்கின‌ம். ஒருத்த‌ர் ப‌க்க‌த்திலை இருக்கிற‌ ம‌ற்ற‌ யூனிவ‌(ர்)சிற்றியில் ப‌டிக்கிறார். ம‌ற்ற‌வ‌ர் ப‌டித்துமுடித்துவிட்டு ஜேடிஎஸ்சில்தான் வேலை செய்கின்றார். இவ‌ளுடைய‌ அண்ணன்மாருக்கு எங்க‌டை விச‌ய‌ம் சாடைமாடையாய்த் தெரியும். இவ‌ளென்னைக் காத‌லித்துக்கொண்டிருப்ப‌து அவ‌ர்க‌ளுக்கு அவ்வ‌ள‌வு விருப்ப‌மில்லை என்ப‌தும் என‌க்கு ந‌ன்கு தெரியும். இப்ப‌த்தையான் நிலைமையில் க‌வுர‌வ‌ம் அது இதென்டு ஒன்றையும் பார்த்துக்கொண்டிருக்க‌ முடியாது. சில‌வேளை அவ‌ர்க‌ளோடுதான் இவ‌ள் நிற்கிறாளோ தெரியாது. ஒருக்காய் அவ‌ர்க‌ளுக்கும் அழைத்துப் பார்க்க்க‌வேண்டிய‌துதான். என்ன‌து அங்கையும் இவ‌ள் போக‌வில்லையா? இந்த‌ விச‌ரி எங்கைதான் போய்த்தொலைந்தாளோ?

3.
ந‌ள்ளிர‌வு ப‌ன்னிரெண்டும் ஆகிவிட்ட‌து. இனி இப்ப‌டியே வீட்டிலிருந்து சும்மா பார்த்துக்கொண்டிருக்க‌முடியாது. இவ‌ளுடைய‌ அண்ணன்மார் இருவ‌ரும் என்ரை அப்பார்ட்மெண்டிற்கும் வ‌ந்துவிட்டின‌ம். இவ‌ளுக்குத் தெரிந்த‌வ‌ர் எல்லோரையும் விசாரித்தாயிற்று. என‌க்கு ஒரே ப‌ய‌மாய்க் கிட‌க்கிற‌து. எல்லாச் சுத‌ந்திர‌மும் இருக்கிற‌தென்று பீத்திக்கொள்கின்ற‌ க‌ன‌டாவில் எல்லாவற்றையும் செய்வ‌த‌ற்கான‌ சுத‌ந்திர‌மும் இருக்கிற‌து என்ப‌தையும் ம‌ற‌ந்துவிட‌முடியாது. இவ‌ளுக்கு ஏதாவ‌து ந‌ட‌ந்திருக்குமா என்று வ‌ருகின்ற‌ எண்ண‌த்தை இலையான் க‌லைக்கிற‌ மாதிரி துர‌த்திக்கொண்டேயிருந்தேன். 'இனியும் இப்ப‌டியே வாளாவிருக்க‌ முடியாது, வாருங்க‌ள் போவோம்' என்று இவ‌ளுடைய‌ அண்ணன்மாரையும் அழைத்துக்கொண்டு பொலிஸில் புகார் கொடுக்க‌ வெளிக்கிட்டோம்.

பொலிஸ்கார‌ன்க‌ள், ஒன்றும் ந‌ட‌ந்திருக்காது, தாங்க‌ளும் தேடுகிறோம், யாருடைய‌ வீட்டிலையாவ‌து போய் நிற்க‌க்கூடும், நாளைக்கு வ‌ந்திருவா என்று சொல்லுறாங்க‌ள். எங்க‌டை த‌மிழ்ச்ச‌மூக‌த்திற்குள்ளை குடும்ப‌ங்க‌ளுக்குள் ஏதாவ‌து பிண‌க்குப்ப‌ட்டு, ம‌னுசிமார்க‌ள் கோப‌த்தில் சொல்லாம‌ல் கொள்ளாம‌ல் யாருடைய‌ வீட்டிலையாவ‌து போய் இர‌வில் நின்றுவிட்டு, கால‌மைக‌ளில் 'க‌ல்லானாலும் க‌ண‌வ‌ன் புல்லானாலும் புருச‌ன்' என்ற‌ தத்துவ‌ ஞான‌ம் கிடைத்து க‌ண‌வ‌ன்மாரோடு போய்ச் சேர்ந்துவிடுவ‌துண்டு. இவ்வாறான‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளிலும் சில‌வேளைக‌ளில் ம‌னுச‌ன்மார் ம‌னுசியைக் காண‌வில்லை என்று ம‌னுக்கொடுப்ப‌துண்டு. இப்ப‌டிப் புகார் கொடுப்ப‌து, உண்மையில் ம‌னுசி காண‌வில்லை என்ப‌தால் வ‌ந்த‌ அக்க‌றையாலையா அல்ல‌து நாளை மனுசிக்கு ஏதும் ந‌ட‌ந்தால் பொலிஸ் த‌ன்னைச் ச‌ந்தேக‌த்தில் பிடித்துவிட‌க்கூடும் என்ற‌ முன் எச்சரிக்கையாலையா என்ப‌து புகார் கொடுக்கும் ம‌னுச‌ன்மார்க‌ளின் ம‌ன‌தைப் பொறுத்து வேறுப‌ட‌க்கூடிய‌து. இவ்வாறான‌ கார‌ணங்க‌ளால் இந்த‌ப் பொலிஸ்கார‌ன்க‌ள் உண்மையான‌ அக்க‌றையோடு இவ‌ளைத் தேடுவான்க‌ளோ என்ப‌தில் என‌க்கு ஐமிச்ச‌ம் இருந்த‌து.

அடுத்த‌ நாள் ம‌த்தியான‌ம் போல‌ வ‌ளாக‌த்திற்கு பொலிஸ் வ‌ந்து இவ‌ளைப் ப‌ற்றிய‌ விப‌ர‌ங்க‌ளை இவ‌ளின் ந‌ண்ப‌ர்க‌ள், பேராசிரிய‌ர்க‌ளிட‌ம் விசாரித்த‌போது ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம் முழுதும் இவ‌ளைக் காண‌வில்லை என்ற‌ செய்தி ப‌ர‌விவிட்ட‌து. அத்தோடு இவ‌ள் காணாம‌ற்போன‌து வ‌ளாக‌ச் சுற்றாட‌லுக்குள்தான் என்ப‌தை இவ‌ள‌து அறைத்தோழியும் தெளிவாக‌ச் சொல்லியிருக்கிறாள். எனென்றால் நேற்றுக் காலை இவ‌ர்க‌ள் இர‌ண்டு பேரும் சேர்ந்துதான் அறையிலிருந்து வ‌குப்புக்க‌ளுக்காய் வெளிக்கிட்டிருக்கின‌ம். இவ‌ள் காணாம‌ற் போயிருந்த‌து வ‌ளாக‌த்திற்குள் என்ப‌தால் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ நிர்வாக‌த்திற்கும் பெரும் பிர‌ச்சினையாகிவிட்ட‌து. என்னிட‌ம், ந‌ண்ப‌ர்க‌ளும் பொலிஸும் அடிக்க‌டி வ‌ந்து விசாரித்துக்கொண்டிருந்தார்க‌ள். எங்க‌ளுக்குள்ளை ஏதாவ‌து பிர‌ச்சினைப்ப‌ட்டுத்தான் அவ‌ள் காணாம‌ற்போய்விட்டாளா என்று தொட‌க்க‌த்தில் பொலிஸுக்கு என்னிலை ஒரு ச‌ந்தேக‌மிருந்த‌து. நான் தான் ஏதோ இவ‌ளுக்குச் செய்துவிட்டு காண‌வில்லையென்று நாட‌க‌ம் ஆடுகின்றேனோ என்று அவ‌ர்க‌ளுடைய‌ வ‌ழ‌மையான‌ பொலிஸ் புத்தி சிந்தித்திருக்கின்ற‌து. ஆனால் கிட்ட‌த்த‌ட்ட‌ இவ‌ள் காணாம‌ற்போயிருந்த‌ நேர‌த்தில் நான் வ‌குப்பொன்றுக்குள் இருந்த‌து தெளிவாக‌ நிரூபிக்க‌ப்ப‌ட்ட‌தால் வேறு யாரோதான் இவ‌ள் காணாம‌ற்போன‌த‌ற்கு கார‌ண‌மாயிருக்க‌வேண்டுமென‌ப் பொலிசுக்கு பிற‌கு தெரிந்துவிட்ட‌து. என்றாலும் என்னையும் எப்போது தாங்க‌ள் தொட‌ர்புகொண்டாலும் பொலிஸ் நிலைய‌த்திற்கு வ‌ர‌வேண்டுமென‌ அறிவுறுத்தியிருந்தார்க‌ள்.

இவ‌ள் காணாம‌ற்போய் மூன்றாவ‌து நாளாகியும் விட்ட‌து. இவ‌ளின் அண்ண‌ன்மார் ம‌ற்றும் ரொர‌ண்டோவிலிருந்த‌ இவ‌ள‌து பெற்றோர் என‌ எல்லோரும் ஒரேயிட‌த்தில்தான் நிற்கிறோம். எல்லோர் முக‌ங்க‌ளிலும் சோக‌மும் சோர்வும் அப்பிக்கிட‌க்கிற‌து நானும் என‌து மூளையைக் கச‌க்கி அவ‌ளின் நினைவின் மிட‌றுக‌ளிலிருந்து அவ‌ள் தொலைந்துபோயிருக்க‌க்கூடிய‌ இட‌ங்க‌ளைப் ப‌ற்றி வ‌டிக‌ட்டிக்கொண்டிருக்கின்றேன். இப்போதுதான் இந்த‌ விட‌ய‌மொன்று நினைவுக்கு வ‌ருகின்ற‌து. இவ‌ள் சொல்லுவாள், மார்க்க‌மிலிருக்கிற‌ ம‌ச்சான் முறையான‌ ஒரு பெடிய‌னுக்கு தான் உய‌ர்க‌ல்லூரியில் ப‌டித்துக்கொண்டிருக்கிற‌ பொழுதிலிருந்தே த‌ன்னில் விருப்ப‌மென்று. அடிக்க‌டி த‌ங்க‌ளின் பாட‌சாலைக்கு வ‌ந்து த‌ன்னை 'நேசியும‌ன் நேசியுமன்' என்கின்ற‌ அவ‌னின் தொல்லை தாங்காது த‌ன் அண்ணாமாரிட‌ம் சொல்ல‌, அவ‌ர்க‌ள் அவ‌னைக் கூப்பிட்டு இதெல்லாம் ச‌ரியில்லையென‌ எச்ச‌ரித்துவிட்டிருக்கின்றார்க‌ள் என்று சொல்லியிருக்கிறாள். ஆனால் இப்ப‌ இவ‌ள் வ‌ளாக‌ம் வ‌ந்த‌ன்பிற‌கு கூட‌, யாரிட‌மிருந்தோ தொலைபேசி எண்ணெடுத்து ம‌ச்சான் த‌ன்னை நேசிக்கும்ப‌டி அவ்வ‌ப்போது வ‌ற்புறுத்திக்கொண்டிருப்ப‌தாய் சொல்லியிருந்தாள். 'நீரென்னை நேசித்துக் கொண்டிருப்ப‌தாய் சொல்ல‌வில்லையா' என்று அவ‌ளிட‌ம் ஒருமுறை கேட்ட‌போது 'அதையும் அந்த‌ விச‌ர‌னுக்குச் சொன்ன‌னான். ஆனால் அவ‌ன் நீர் பொய்சொல்கின்றீர். நீரில்லாவிட்டால் உயிர் வாழ‌வே மாட்டானென‌ உறுதியாய்க் குர‌லில் கூறினான்' என்றாள். 'இந்த‌ நாச‌மாய்ப் போன‌ த‌மிழ்ப்ப‌ட‌ங்க‌ளைப் பார்த்து பார்த்து இவ‌ங்க‌ள் சரியாகக் கெட்டிட்டாங்க‌ள், உருப்ப‌ட‌வே மாட்டாங்க‌ள்' என்று ஓர் அறிவுஜீவியின் பாவ‌னையில் நான் கூறிய‌தும் என‌க்கு நினைவுண்டுதான்.

4.
எத‌ற்கும் ஒருக்காய் இவ‌ளின் இந்த‌ ம‌ச்சானை விசாரித்துப் பார்த்தால் என்ன‌ என்று இவ‌ளின் அண்ணாவிட‌ம் சொன்னேன். த‌க‌வ‌ல் பொலிசுக்கும் தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌து. நாங்க‌ள் அவ‌னின் தொலைபேசி இல‌க்க‌த்தை அழைத்த‌போது அவ‌னும் எடுக்கிறானில்லை. அவ‌னொரு வீட்டின் நில‌வ‌றையில் தான் வ‌சித்துவ‌ந்தான். பொலிஸ் போய் வீட்டைத்த‌ட்டிய‌போது அவ‌ன் திற‌க்க‌வில்லை என்ற‌போது பொலிசுக்கு ச‌ந்தேக‌ம் வ‌ந்துவிட்ட‌து. க‌த‌வை உடைத்துப் பார்த்த‌போது, அங்கே இவ‌ளை அறைக்குள் பூட்டிவைத்திருந்த‌து தெரிந்த‌து. ஆம் ந‌ண்ப‌ர்க‌ளே, உங்க‌ளுக்கு ந‌ம்புவ‌த‌ற்குக் க‌டின‌மாயிருந்தாலும் காத‌லுக்காய் ஒரு க‌ட‌த்த‌ல்தான் க‌னடாவில் நிக‌ழ்ந்திருந்த‌து. எங்க‌ள் எல்லோருக்கும் அப்பாடா இவ‌ள் ஒரு பிர‌ச்சினையுமில்லாம‌ல் கிடைத்துவிட்டாள் என்ப‌தில் பெரிய‌ நிம்ம‌தி. இப்போது இவ‌ளுக்கு மூன்று நாட்க‌ளுக்கு முன் என்ன‌ நிக‌ழ்ந்த‌தென்ற‌ விட‌ய‌ம் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் ப‌னிக்கட்டியொன்று உருகிய‌மாதிரித் தெரிய‌த்தொட‌ங்கிவிட்ட‌து. இவ‌ள் அன்றைக்கு வ‌குப்பு முடிந்துவ‌ந்த‌போது இந்த‌ ம‌ச்சான்கார‌னும், அவ‌னுடைய‌ இர‌ண்டு ந‌ண்ப‌ர்க‌ளும் காரில் காத்துக்கொண்டிருக்கின்றார்க‌ள். இவ‌ளுக்கும் இவ‌ர்க‌ளைக் க‌ண்டு பெரிய‌ அதிர்ச்சி. 'வாருங்க‌ள் காருக்குள் இருந்து க‌தைக்க‌லாம்' என்று இவ‌ளை கூட்டிக்கொண்டுபோய் அப்ப‌டியே மார்க்க‌த்திற்கு அவன்கள் க‌ட‌த்திக்கொண்டு போய்விட்டார்க‌ள். காத‌லிப்ப‌து பிழையில்லைத்தான். . ஆனால் இப்ப‌டிக் க‌ட‌த்திக்கொண்டு போய் த‌னியே வீட்டில் வைத்திருந்தால் இவ‌ளுக்குக் காத‌ல் வ‌ந்துவிடும் என்றோ அல்ல‌து இவ‌ளை அவ‌னுக்கு க‌லியாண‌ஞ் செய்துவைத்துவிடுவார்க‌ள் என்றோ ஒரு த‌மிழ்ப்ப‌ட‌த்துக்கு நிக‌ராய் அவ‌ன் யோசித்த‌துதான் பெரும் சிக்க‌லுக்கு வ‌ழிவ‌குத்துவிட்ட‌து.

ஒன்ற‌ரை ம‌ணித்தியால‌ம் ஓட‌க்கூடிய‌ ஓர் ஆங்கில‌த் திரில்ல‌ர் மாதிரி இந்த‌ மூன்று நாட்க‌ளில் ந‌ட‌ந்த‌ இவ‌ளின் க‌தை இருந்தாலும், பிற‌குதான் என‌க்கும் இவ‌ளுக்கும் இடையில் எல்லாம் புகைய‌த் தொட‌ங்கின‌. இப்ப‌டி மூன்று நாட்க‌ள் ஒரு பெடிய‌னின் வீட்டில் வைக்க‌ப்ப‌ட்ட‌வ‌ள் ப‌ற்றி உற‌வுக‌ளும் ச‌முக‌மும் 'என்ன‌ க‌தைக்கும்' என்ப‌து புரிய‌க்கூடிய‌தாக‌ இருந்தாலும், என்னுடைய‌ நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்க‌ள் கூட‌ நான‌றிய‌க்கூடிய‌தாக‌ இந்த‌ விட‌ய‌ம் ப‌ற்றியும் இவ‌ளைப் ப‌ற்றியும் அப்ப‌டியும் இப்ப‌டியுமாய்க் க‌தைத்துக் கொண்டு திரிந்த‌தைத்தான் தாங்க‌முடியாதிருந்த‌து. அதிலும் ஒருத்த‌ன், 'எப்ப‌டி மூன்று பெடிய‌ங்க‌ள் இருக்கைக்கே காருக்குள் ஏறி இவ‌ள் க‌தைக்க‌ப் போன‌வ‌ள்' என்று கேட்டான். இன்னொருத்த‌ன் 'என்ன‌தான் இருந்தாலும், இவ‌ளின் ச‌ம்ம‌த‌மில்லாம‌ல் அவ‌ங்க‌ள் மார்க்க‌ம் ந‌க‌ருக்குக் கொண்டுபோய் இருக்கமாட்டார்க‌ள் என்றான். என்னுடைய‌ நெருங்கிய‌ தோழி கூட‌, 'அவ‌ள் ந‌ல்ல‌வ‌ள் என்று இனியும் ஏமாளியாக‌ இருக்காதே, ஒரு யாழ்ப்பாண‌த்துப் பெடிய‌னாக‌ அடுத்தென்ன‌ செய்வ‌தென்று யோசி' என்று அறிவுரையை க‌ன்னிய‌ர் மட‌த்தில் வைத்துச் சொன்னாள். என‌க்கு எல்லாம் ஒரே குழ‌ப்ப‌மாக‌ இருக்கிற‌து. ஒருத்தியை அவ‌ளின் விரும்பமின்றி ஒருத்த‌ன் கொண்டுபோய் வைத்துவிட்டான் என்ப‌த‌ற்காய் இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ள் நேசித்த‌து எல்லாம் பொய்யாகிவிடுமா என்ன‌?  இத்த‌னை அல்லாட‌ல்க‌ளுக்குமிடையில், இவ‌ள் த‌ன்னைக் க‌ட‌த்திக்கொண்டு போன‌வ‌ர்க‌ளின் மீது வ‌ழ‌க்கு ப‌திந்துவிட்ட‌து, இனி அவ‌ன்க‌ளின் வாழ்க்கை முற்றும் பாழென்று புல‌ம்பிக்கொண்டிருந்தாள். இவ‌ள் த‌ன‌து ம‌ச்சானின் வாழ்க்கை நாச‌மாகிவிட்ட‌தென‌ இர‌க்க‌ப்ப‌டுகின்றாளா அல்ல‌து ம‌ச்சான் மீதான் த‌ன‌து காத‌லை ம‌றைமுக‌மாய் என‌க்குக் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றாளா என்று நான் யோசித்துப் பார்த்த‌தில் என‌க்கு த‌லையிடிதான் வ‌ந்து சேர்ந்த‌து.

5.
இப்ப‌டியாக‌ நாட்க‌ள் போக‌ப்போக‌ எங்க‌ள் உற‌வில் எங்க‌ளைய‌றியாம‌லே விரிச‌ல் வ‌ந்துவிட்ட‌து. இவ‌ளுக்கு அந்த‌க் க‌ட‌த்திப் போன‌ பெடிய‌ன் மீது ஏதோ ஈர்ப்பிருந்திருக்கிற‌தோ என்ற‌ எண்ண‌ம் அடிக்க‌டி வ‌ருவ‌தை என்னால‌ த‌டுத்து நிறுத்த‌வும் முடிய‌வில்லை. ச‌ந்தேக‌ம் போன்ற‌ வியாதி ரொர‌ண்டோவில் வ‌ந்த‌ SARSஐ விட‌ அபாய‌க‌ர‌மான‌து. எந்த‌ ம‌ருந்து கொடுத்தாலும் அவ்வ‌ள‌வு கெதியாய் மாறிவிடாது. இந்த‌ முறை கோடை வ‌குப்புக்க‌ள் எதுவும் எடுப்ப‌தில்லையென‌ முடிவுசெய்து ரொர‌ண்டோ மாந‌க‌ரில் பொழுதை க‌ழிப்ப‌தென‌ முடிவு செய்தேன். த‌ன‌க்குச் சில‌ பாட‌ங்க‌ள் எடுக்க‌விருக்கிற‌தென‌ இவ‌ள் வ‌ளாக‌த்திலேயே த‌ங்கிவிட்டாள். ரொர‌ண்டோ வ‌ந்த‌த‌ன்பிற‌கும் என்னால் இவ‌ள‌து விட‌ய‌த்தில் தெளிவான‌ ஒரு முடிவுக்கு வ‌ர‌ முடியாம‌ல் இருக்கிற‌து. ப‌ல‌ர‌து பேர‌ன்புக்கும் பெரும‌திப்புக்குமுரிய‌ சிறி ராம‌பிரானே -எல்லாம் அறிய‌க்கூடிய‌ க‌ட‌வுளாய் இருந்தும்கூட‌- சீதா தேவியை நெருப்பில் நீந்த‌ச்சொல்லி ஏற்றுக்கொண்ட‌போது சாமானிய‌னாய் -அதுவும் யாழ்ப்பாண‌ம் என்னும் பூகோள‌த்தில் சிறு புழுக்கை போன்ற‌ ஊரிலிருந்து வ‌ந்த‌- நான் என்ன‌தான் செய்ய‌முடியும்? இப்ப‌டியிருக்கும்போதுதான் ஸகாபுரோவில் எக்ளின்ட‌ன் வீதியிலுள்ள‌ சிறில‌சிறி ஆதி ர‌ம்பா ஆச்சிர‌ம் ப‌ற்றி ந‌ண்ப‌ரொருவ‌ன் குறிப்பிட்டு, ஆதி ர‌ம்பாவிட‌ம் போனால் உன‌து ம‌ன‌ச்ச‌ஞ்ச‌லம் -ம‌ழை காணா ம‌ண்ணில் மூத்திர‌ம் பெய்தால் த‌ட‌மின்றிப் போவ‌துபோல‌- தூசாய்ப் ப‌ற‌ந்துபோய்விடுமென‌ புத்திம‌தி சொன்னான்.

ஆதி ர‌ம்பா அவ‌ர்க‌ள் சாத்திர‌ம் பார்ப்ப‌திலிருந்து தியான‌ம் போன்ற‌ ப‌ல‌வ‌ற்றில் தேர்ந்த‌ வித்த‌கியாக‌ இருந்தார். ஆதி ர‌ம்பாவின் பூர்வீக‌ம் தெலுங்கு தேச‌மாயிருக்க‌வேண்டும், ஆனால் ச‌ன் ரீவி நிக‌ழ்ச்சித்தொகுப்பாள‌ர்க‌ளைப் போல‌ 'ந‌ன்கு த‌மிழ்' பேச‌க்கூடிய‌வ‌ராக‌ இருந்தார். வ‌ய‌தும் அவ்வ‌ள‌வு ஒன்றும் பெரிதாக‌ இல்லை. இந்த‌ வ‌ய‌திலும்...... வேண்டாம் இத‌ற்கு மேல் ஏதும் விப‌ர‌ங்க‌ள் த‌ந்தால் நீங்க‌ள் பிற‌கு சிறில‌சிறி ஆதி ர‌ம்பாவை ம‌ற‌ந்து ந‌டிகை ர‌ம்பாவை நினைக்க‌த் தொட‌ங்கிவிடுவீர்க‌ள் என்ப‌தால் நிறுத்திக்கொள்கின்றேன். என‌து கையைத் த‌ன‌து ம‌டியில் வைத்துப் பார்த்த‌ப‌டி 'த‌ம்பி நீங்க‌ள் ச‌ரியான குழ‌ப்ப‌த்தில் இருக்கின்றீர்க‌ள்?' என்று கூறினார். இந்த‌ உல‌க‌த்தில் குழ‌ப்ப‌மில்லாத‌ மனுச‌ர் என்று எவ‌ரேனும் இருக்கின்றார்க‌ளா என்ன‌ என்று கேட்க‌ விரும்ப‌மிருந்தாலும், ஆதி ர‌ம்பா அவ‌ர்க‌ள் என் கைக‌ளை வ‌ருடிய‌ப‌டி சாத்திர‌ம் கூறும் இத‌மான‌ அனுபவ‌த்தைக் குலைக்க‌ நான் விரும்ப‌வில்லை. இவ்வாறாக‌ நான் சிறில‌சிறி ஆதி ர‌ம்பாவின் ஆச்சிர‌ம‌த்தில் அதிக‌ள‌வு பொழுதைக் க‌ழிக்கும் ஒரு ப‌க்த‌னாய் மாறிவிட்டேன். அங்கே செய்ய‌ப்ப‌ட்ட‌ தியான‌மும் ப‌ஜ‌னையும் புத்துண‌ர்வைத் த‌ந்த‌தோ இல்லையோ என்னால் இவ‌ளைப் ப‌ற்றிய‌ குழ‌ப்ப‌ங்க‌ளிலிருந்து ஒரளவுக்காவது த‌ப்பித்திருக்க முடிந்திருந்த‌து. தியான‌ம் ப‌ஜ‌னைக‌ளின்போது ஒரேயோரு தொந்த‌ர‌வு ம‌ட்டுமேயிருந்த‌து. ஆச்சிர‌ம‌த்திற்கு அடுத்த‌தாய் இருந்த‌ க‌டையிலிருந்து க‌ம‌க‌ம‌க்க‌ வ‌ந்துகொண்டிருக்கின்ற‌ த‌ந்தூரி சிக்க‌ன் வாச‌ந்தான் என்னை அடிக்க‌டி தியான‌த்திலிருந்து -இப்போது கோழியின் எந்த‌ப் பாக‌ம் பொரிந்துகொண்டிருக்கும்- என்று ம‌ன‌தின் திசையை மாற்றிக்கொண்டிருந்த‌து.

இப்ப‌டி என்னைப் போல‌வே சிறில‌சிறி ஆதி ர‌ம்பா அவ‌ர்க‌ளின் ஆச்சிர‌ம‌த்திற்கு ப‌ஜ‌னைக்கென‌ அடிக்க‌டி வ‌ந்துபோய்க்கொண்டிருக்கின்ற‌ ஒருத்தியை அவ‌தானித்துக்கொண்டிருந்தேன். அவ‌ள் என்னை ஈர்த்த‌ற்கு அதிக‌ கார‌ண‌ம், இடைவ‌ரை நீண்டிருந்த‌ அவ‌ள‌து கூந்த‌லும், காதில் தொங்கிக்கொண்டிருந்த‌ நீண்ட‌ சிமிக்கித் தோடுக‌ளுந்தான். நான்கு மாத‌ங்க‌ளே கோடை வ‌ருகின்ற‌ க‌ன‌டா போன்ற‌ நாட்டில் இடுப்பு வ‌ரை நீண்ட‌ கூந்த‌லைப் ப‌ராம‌ரிப்ப‌து என்ப‌து எவ்வ‌ள‌வு க‌டின‌மான‌ காரிய‌ம் என்று எவ‌ருக்கும் சொல்லித்தான் தெரிய‌வேண்டுமென்ப‌தில்லை. அத்தோடு என்னைப் போல‌ யாழ்ப்பாண‌ க‌லாசார‌த்தைக் கைவிட‌க்கூடாதென்ப‌தில் பிடிவாத‌மாய் அவ‌ளிருக்கிறாள் என்ப‌தை அவ‌ளுட‌ன் பேசும்போது தெரிந்த‌து. இங்கு வ‌ந்த‌த‌ன் பிற‌கு கூட‌ ரெக்ஸோனா சோப்பும் பேபி ப‌வுட‌ரும் போடுவ‌தை இத்த‌னை ஆண்டுகளானபின் கூட‌ அவ‌ள் ஒதுக்கிவிட‌வில்லை என்றால் பாருங்க‌ள். அன்றைக்கொரு நாள் ப‌ஜ‌னை முடிந்து எல்லாவ‌ற்றையும் சுத்த‌மாக்கி முடிந்த‌போது நேர‌ம் ப‌த்து ம‌ணியாகிவிட்ட‌து. அவ‌ளுக்கு நான் தான் என்னுடைய‌ காரில் ride கொடுத்தேன். பேசிக்கொண்டு போகும்போது தான் வீட்டிலை மூன்று பெடிய‌ங்க‌ளுக்கு ஒரு பெட்டை என்றாள். யாழ்ப்பாண‌த்திலையே ந‌ல்ல‌ தென்ன‌ஞ்சோலையுள்ள‌ இர‌ண்டு வீடுக‌ள் த‌ங்க‌ளுக்கு இருக்கிற‌தென்றும் ஓர் உப‌குறிப்பாய்ச் சொன்னாள். கொண்டுபோய் அவ‌ளை வீட்டில் இற‌க்கிய‌போது இப்போது இங்கையிருக்கிற‌ வீடும் ந‌ல்ல‌ வ‌ச்தியாக‌த்தான் தெரிந்த‌து. வீட்டுக்கு முன் ஒரு Lexusம் BMWம் நின்ற‌து. இவ்வ‌ள‌வு கார்க‌ள் வீட்டிலிருந்தாலும் ப‌ஜ‌னைக‌ளுக்கு வ‌ரும்போது என்னுடைய‌ காரிலேயே வ‌ர‌ விரும்புகின்ற‌வ‌ளாய் அவ‌ள் இருந்தாள். அவ‌ள‌து வீட்டிலும் நான் யாழ்ப்பாண‌த்தில் எந்த‌ ஊர்க்கார‌ன் என்றும், அந்த‌ ஊரில் எந்த‌த் திசையில் எங்க‌ள் வீடு இருந்த‌தென்ப‌தையும் 'விசாரித்து' ஏற்க‌ன‌வே அறிந்து வைத்திருந்த‌தால், அவ‌ர்க‌ளுக்கு அவ‌ள் என்னோடு காரில் வ‌ருவ‌தில் பெரிய‌ பிர‌ச்சினையிருக்க‌வில்லை. அத்தோடு சிறில‌சிறி ஆதி ரம்பாவின் தீவிர‌ ப‌க்த‌னாக‌ நான் இருப்ப‌தும், ஒரு கும‌ர்ப்பெட்டையை என்னோடு த‌னியே விடுவ‌தில் வ‌ர‌க்கூடிய‌ த‌டையை உடைத்திருக்க‌வேண்டும்.

6.
கோடை முடிந்து இலையுதிர்கால‌ம் ஆர‌ம்பிக்க‌, நான் ரொர‌ண்டோவை விட்டு நீங்கி வ‌ளாக‌ம் போக‌வேண்டியிருந்த‌து. ரொர‌ன்டோவிலிருக்கும்போது அவ்வ‌ப்போது -க‌ட‌த்தப்ப‌ட்ட‌ இவ‌ளோடு- தொலைபேசியில் க‌தைத்துக்கொண்டிருந்தாலும் முன்புபோல‌ அவ்வ‌ள‌வு ஈடுபாட்டோடு க‌தைப்ப‌தில்லை. இவ‌ளுக்கும் நானும் ஏதோ சில‌ கார‌ணங்க‌ளுக்காய் த‌ன்னைவிட்டு வில‌கிப்போய்க்கொண்டிருப்ப‌தாய்த் தோன்றியிருக்க‌க் கூடும்.

இலையுதிர்கால‌ம் என்றாலும் இன்ன‌மும் கோடை மிஞ்சியிருந்த‌து: மிதமான‌ வெப்ப‌நிலை இருந்த‌து. நீண்ட‌ மாத‌ங்க‌ளுக்குப்பிற‌கு இவ‌ளை முத‌ன் முத‌லில் பார்த்த‌போது மிகுந்த‌ அதிர்ச்சியாக‌ இருந்த‌து. ப‌ளீரென்ற‌ வெள்ளை சோர்ட் ஸ்கேர்ட்டை முழ‌ங்காலுக்கு ஒரு சாண் மேலே நிற்க‌க்கூடிய‌தாக‌ அணிந்த‌ப‌டி வ‌ந்துகொண்டிருந்தாள். என‌க்கென்றால் வான‌த்திலை இருக்கிற‌ சூரிய‌ன், கையிலை எட்ட‌க்கூடிய‌ தூர‌த்தில் இருந்தால் அதைப் பிடுங்கி எறிந்து இவ‌ளை எரித்துவிட‌லாமோ என்ற‌ள‌வுக்கு கோபம் கொப்ப‌ளிக்க‌த் தொடங்கிய‌து. என்னோடு இருந்த‌ இவ்வ‌ள‌வு கால‌மும் இப்ப‌டி shortயாய் எதுவும் போட்ட‌தேயில்லை. இதெல்லாம் இவ‌ளின் க‌ட‌த்திப்போன‌ ம‌ச்சான் கொடுத்த‌ ஊக்குவிப்பாய்தான் இருக்க‌வேண்டும். அத்தோடு முந்தி தோள்வ‌ரை நீண்டு கிட‌ந்த‌ கூந்த‌லை இன்னும் குட்டையாக‌ வெட்டி 'பொப்' ஆக்கியுமிருந்தாள். இவ‌ள் என்னுடைய‌ ஆண்மைக்கு ச‌வால் விடுவ‌த‌ற்கு என்றே இதையெல்லாம் வேண்டுமென்றே செய்திருக்கின்றாள் போல‌ப்ப‌ட்ட‌து. ஆண்மைக்கு ச‌வால் விட்டால் கூட‌ப்ப‌ர‌வாயில்லை, நான் இவ்வ‌ள‌வு கால‌மும் க‌ட்டிக்காத்துக்கொண்டிருந்த‌ யாழ்ப்பாண‌த்துக் க‌லாசார‌த்தையே காலில் போட்டு மிதிக்கின்ற‌ பாவ‌னையில் அல்ல‌வா ந‌ட‌ந்து வந்து கொண்டிருக்கிறாள். இப்ப‌டிப்ப‌ட்ட‌வ‌ளை நான் நாளைக்கு க‌லியாண‌ங்க‌ட்டினால் எங்க‌டை யாழ்ப்பாண‌த்துச் ச‌ன‌ம் போற‌ வாற‌ இட‌ங்க‌ளுக்கு எந்த‌ முக‌த்தோடு நான் கூட்டிக்கொண்டு போக‌ முடியும்? இப்ப‌வே முடிவெடுத்துவிட்டேன். இனி இவ‌ளைக் கைக‌ழுவிவிட்டு விட‌வேண்டும். இராம‌பிரானுக்கு அனுமான் நின்று வ‌ழிகாட்டிய‌து போல‌ என‌க்கு சிறில‌சிறி ஆதி ர‌ம்பாவும் அவ‌ர‌து அணுக்கப் ப‌க்தை அனுவும் இருக்கும்போது நான் ஏன் இவ‌ளை என்ரை த‌லையில் க‌ட்டி வைத்துக் க‌ஷ்ட‌ப்ப‌ட‌வேண்டும். அந்த‌க்கால‌த்திலை 'க‌ற்பு' ப‌ற்றிய‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்த‌போது நெருப்பில் குதிக்கத் த‌யாராக‌ அல்ல‌வா சீதையை எல்லாம் வ‌ள‌ர்த்திருக்கின்றார்க‌ள். இப்போது க‌ற்பிலோ பிற‌வ‌ற்றிலோ ச‌ந்தேக‌ம் வ‌ருகிற‌தென்று கேட்டால் -இப்ப‌டி குட்டையாய் பாவாடை அணிகின்ற‌வ‌ள்- பாவாடையை உய‌ர்த்திப்பிடித்து பின்ப‌க்க‌த்தைக் காட்டிப் ப‌ழித்துவிட்டுப் போனாலும் போய்விடுவாள். பிற‌கு என‌க்குத்தான் அசிங்க‌மாய்ப் போய்விடும். .

நான் இப்ப‌டியான‌ கோல‌த்திலை இவ‌ளைக் க‌ண்ட‌த‌ன்பிற‌கு அவ்வ‌ள‌வாய் இவ‌ளோடு க‌தைக்க‌ விரும்பவில்லை. வேறு வேலையிருக்கிற‌தென்று வ‌ழுக்கையாற்ற‌டியிலிருந்து ந‌ழுவிப்போயிருந்தேன். பிற‌கு வேண்டுமென்றே அவ‌ள‌து தொலைபேசி அழைப்புக்க‌ளையும் நேர‌டிச் ச‌ந்திப்புக்க‌ளையும் த‌விர்க்க‌த் தொட‌ங்கினேன். இதெல்லாம் போதாத‌து என்று அவ்வ‌போது என்னுடைய‌ ந‌ண்ப‌ர்க‌ள், 'என்ன‌டா உன்ரை ஆள் அந்த‌ மாதிரி உடுப்புப் போட்டுக்கொண்டு இப்ப‌ திரிகிறா' என்று நாளாந்த‌ வ‌ர்ண‌னை செய்துகொண்டிருந்தார்க‌ள். என‌க்கென்றால் நான் இவ்வ‌ளவு கால‌மும் இவ‌ளுக்குக் க‌ற்றுக்கொடுத்த‌தெல்லாம், ம‌ழைநீரில் க‌ரைகின்ற‌ ம‌ண்ணாங்க‌ட்டியாய் போய்க்கொண்டிருக்கின்ற‌தே என்கின்ற‌ க‌வ‌லைதான் வ‌ந்த‌து.

ஒரு நாள் பின்னேர‌ம் எக்க‌னாமிக்ஸ் வ‌குப்பு முடிந்து முறிக‌ண்டிச் ச‌ந்திய‌டிக்கு கிட்ட‌ வ‌ந்துகொண்டிருந்த‌போது இவ‌ள் என்னை வ‌ழிம‌றித்தாள். 'உங்க‌ளோடு பேச‌வேண்டும் கொஞ்ச‌ நேர‌ம் நிற்க‌ முடியுமா?' என்று கேட்டாள். நான் இன்றைக்கும் இவ‌ள் ஷோர்ட் ஸ்கேர்ட் ஏதாவ‌து போட்டிருக்கின்றாளா என்றுதான் முத‌லில் ப‌ரிசோதித்துப் பார்த்தேன். அப்ப‌டி எதுவும் போடாத‌ப‌டியால்தான் ஆறுத‌லாக‌க் க‌தைப்ப‌த‌ற்கு ஒத்துக்கொண்டிருந்தேன். 'என்ன‌ ந‌ட‌க்கிற‌து எங்க‌ளுக்குள்ளை?' என்றாள். நான் என்னுடைய‌ குழ‌ப்ப‌ங்க‌ளை எல்லாம் சொன்னேன், ஆனால் புத்திசாலித்த‌ன‌மாய் சிறில‌சிறி ஆதி ர‌ம்பா ஆச்சிர‌ம‌த்தில் ச‌ந்தித்த‌ அனு ப‌ற்றிய‌ விப‌ர‌ம் எதையும் சொல்ல‌வில்லை. இவ‌ள் க‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ அந்த‌ மூன்று நாட்க‌ளில் என்ன‌ நிக‌ழ்ந்திருக்குமென்ப‌து என‌க்கு பெர்மூடா முக்கோண‌ம் போல‌ ஒரே ம‌ர்மமாய் இருக்கிற‌தென்றேன். இவை எல்லாவ‌ற்றையும் விட‌ முக்கிய‌மாய் எங்க‌ள் யாழ்ப்பாண‌த்துக் கலாசார‌த்தைக் குலைக்கிற‌ மாதிரி இப்ப‌டி இவ‌ள‌ ஆடைக‌ள் போடுவ‌து என‌க்கு அதிக‌ம் தொந்த‌ர‌வாய் இருக்கிற‌தென்றேன்.

தான் ஆடைகள் அணிவதற்கான சுத‌ந்திர‌ம் த‌ன‌க்கு ம‌ட்டுமே உரிய‌தென்று உய‌ர்த்திய‌ குர‌லில் சொன்னாள். பின், 'இப்ப‌டியெல்லாம் க‌தைக்கும் நீர், என்னைக் க‌லியாண‌ங்க‌ட்டிய‌ பிற‌கு புண‌ர்ச்சியின்போது கூட‌, ஆடைக‌ளோடு சேர்த்துத்தான் புண‌ருவீரா?' என்றாள். என்னால் இத‌ற்கு மேலும் பொறுமையாக‌ இருக்க‌முடிய‌வில்லை. 'You are a bitch, நீரொரு அச‌ல் யாழ்ப்பாண‌த்தியாய் இருந்தால் இப்ப‌டியெல்லாம் க‌தைத்திருக்க‌ மாட்டீர். உம்மை இப்ப‌ பார்க்க‌ யாரோ என்ரை உட‌ம்பிலை எண்ணெய் ஊற்றி எரிக்கிற‌மாதியான‌ உண‌ர்வுதான் வ‌ருகிறது. இப்ப‌டியெல்லாம் நீர் க‌தைப்பீர் என்று தெரிந்துதான் நான் ரொர‌ண்டோவில் நின்ற‌ நேர‌ம் யாழ்ப்பாண‌த்துக்காரி ஒருத்தியை ப்ர‌போஸ் செய்துவிட்டேன். இனி நீரும் உம்ம‌டை ல‌வ்வும், ஒரு மண்ணாங்கட்டியும் என‌க்கு வேண்டாம்' என்றேன். இஃதொரு பெரிய‌ அடியாக‌ அதிர்ச்சியாக‌ இவ‌ளுக்கு இருக்க‌ப்போகின்ற‌தென‌ இவ‌ள‌து எதிர்வினைக்காய்க் காத்துக்கொண்டிருந்தேன். எந்த‌ அதிர்ச்சியும் இல்லாது மெல்லிய‌ புன்முறுவ‌லோடு, 'நீரொரு அச‌ல் யாழ்ப்பாணி என்றென‌க்கு ந‌ன்கு தெரியும். இன்னொருத்தியைக் காத‌லிக்கின்றேன் என்ப‌தைக் கூட‌ நெஞ்சுக்கு நேரே சொல்ல‌ முடியாத‌ கோழையைத்தான் இவ்வ‌ள‌வு கால‌மும் நேசித்திருக்கின்றேன் என்ப‌தைய‌றியும்போது என‌க்குத்தான் வெட்க‌மாயிருக்கிற‌து. உங்க‌ளுக்கு எல்லாம் எத‌ற்கு வாய்? அது நேர்மையாக‌ இருக்கின்ற‌வ‌ன்க‌ளுக்குத்தான் தேவையாயிருக்கும். நீங்க‌ளெல்லாம் குண்டியால் குசுகுசுக்கொண்டிருக்க‌த்தான் பொருத்த‌மான் ஆட்க‌ள்' என்று கூறிவிட்டு ச‌ட்டென்று அந்த‌ இட‌த்திலிருந்து போய்விட்டாள்.

இவ்வ‌ள‌வு தெளிவாய் என்னை எடுத்தெறிந்து பேசிவிட்டு ஒரு துளி க‌ண்ணீரோ, அதிர்ச்சியோ இல்லாம‌ல் இவ‌ள் போன‌து கூட‌ அவ்வ‌ள‌வு பெரிய‌ விட‌ய‌மில்லை. ஆனால், நான் போற‌ வாற‌ பெட்டைய‌ளின்ரை குண்டிக‌ளைப் பார்த்துக்கொண்டிருந்த‌து, ஒரு த‌மிழ்ப்பெட்டையான‌ இவ‌ளுக்கு எப்ப‌டியோ தெரிந்துவிட்ட‌தே என்ப‌துதான் எல்லா அவ‌மான‌ங்க‌ளுக்கும் மேலான‌ அவ‌மான‌மாய் என‌க்குத் தோன்றிய‌து. ஒரு அச‌ல் யாழ்ப்பாணியான‌ என் மீது விழுந்து விட்ட‌ இந்த‌க்க‌றையை, நான் வ‌ங்க‌க்க‌ட‌லையெடுத்து என் மீது வாரியிறைத்துக் கொட்டினால் கூட‌ என்றைக்கும் அக‌ற்ற‌முடியாது போல‌த்தான் தெரிகிற‌து..

(2008)
(ந‌ன்றி: கால‌ம் ‍-34)

9 comments:

தமிழன்-கறுப்பி... said...

இந்தக்கதைக்கு இன்னமும் பின்னூட்டம் வரவில்லை என்பது என்னுடைய முதல் கேள்வி...

6/20/2009 04:15:00 AM
பாரதி.சு said...

சீச்சீ...என்ன அவமானம்...
என்னால் தாங்கிக்கொள்ளவே முடியல...
நானும் யாழ்ப்பாணி என்பதாலா???
-------------
வணக்கம்!!டிசே,
இயல்பான கதை சொல்லும் பாங்கு..
சூப்பர்ப்ப்.
என்ன..இருந்தாலும் இப்படியா நம்மள "அம்மணப்படுத்தி" காட்றது...இதை யாழ்ப்பாணி கலாசாரத்தில் "ஊறிக்" கிடக்கும் நான் வன்மையாக கண்டிக்கிறேன்.:)
--------------------
என்னுடைய ஈழத்தின் மற்றப் பிராந்திய நண்பர்கள்..
"நாங்களும் எங்கள மாதிரி மூக்கால தான் "மோப்பம்" பிடிக்கிறதென்று என்னோட மல்லுக்கு நிக்கிறாங்கள்....
அவங்களுக்கும் ஒருக்கா சொல்லுங்கோ "யாழ்ப்பாணி" மட்டும் தான் மூக்குத்துவாரத்தால் மோப்பம் பிடிக்கிறதென்று....
நான் சொன்னால் கேட்கிறாங்களில்லை.

6/21/2009 11:23:00 PM
பாரதி.சு said...

தமிழன்-கறுப்பி,
வாசிச்ச "யாழ்ப்பாணி' எல்லோரும் மொட்டாக்கு போட்டுக்கிட்டு தலைதெறிக்க ஓடிட்டாங்கள்..
என்னைத் தவிர..

6/21/2009 11:25:00 PM
vanathy said...

யாழ்ப்பாணத்தின் பெண்வர்க்கத்தை சேர்ந்தவள் என்ற முறையில் இதனை மிகவும் ரசித்தேன்
யாழ்ப்பாண ஆண்கள் என்றில்லை,பொதுவாகவே நமது தமிழ் ஆண்பிள்ளைகளின் மனங்களில் பதுங்கி இருக்கும் குழப்ப சிந்தனைகளை அப்படியே trouser,shirt,vest,underwear என்று layer,layer ஆக கழட்டி நிர்வாணப் படுத்தி விட்டீர்கள்.

-vanathy.

6/23/2009 03:00:00 AM
DJ said...

த‌மிழ‌ன்-க‌றுப்பி‍, பார‌தி ம‌ற்றும் வான‌தி உங்க‌ள் ப‌கிர்த‌ல்க‌ளுக்கு ந‌ன்றி.

6/23/2009 11:57:00 AM
வினவு said...

காதலனது இரட்டை வேடம் இவ்வளவு பகிரங்கமாக அவனது மனதில் உடைபடுமா என்று தெரியவில்லை. அது சற்று நாசுக்காக தன்னை என்ன இருந்தாலும் நியாயவானாகத்தான் கற்பித்துக் கொள்ளும் என்று தோன்றுகிறது. இருப்பினும் யாழ்ப்பாணத்து ஆதிக்க மனத்தை காட்டியதற்கும், காட்டப் போவதற்கும் வாழ்த்துக்கள். இதை படிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த தமிழ் மணத்திற்கு நன்றி

6/23/2009 12:36:00 PM
அருண்மொழிவர்மன் said...

நல்ல சமுதாயக்கோபத்தை சுய எள்ளலாக வெளிப்படுத்தி உள்ளீர்கள். நாம் எமது கலாசாரத்தைக் காக்க என்று தந்தூரி சிக்கன் கடையின்பின் சுவறில் நல்லூர் கந்தசாமி கோயிலும்,இரண்டாம் மாடி வீடும், முத்லாம் மாடி கோயிலுமாய் துர்க்கையம்மன் கோயிலுமாய் கட்டி அடிக்கும் கூத்துகளை நினைத்தால் சிரிப்புத்தான் வரும். அத்லும் தமக்குரிய சுதந்திரத்தை பெருமளாவில் க்ளப், பார், ஸ்ட்ரிப் பார் என்று எல்லா மட்டத்திலும் அனுபவிக்கும் ஆண்கள் பெண்களை அதே யாழ்ப்பாண கலாசாரத்தில் வளார்க்க முற்படும் முரண் வேடிக்கையானதே.

எனது கல்லூரிக் காலத்தில் ஒரு பெண் தலைமுடிக்கு “ஹைலைட்” பண்ணிணாள் என்று அவளது தலை முடியை ஒட்ட வெட்டி தமிழ் தலிபானாகி கலாசாரம் காத்தான் கடுக்கனும் மூக்குத்தியுமிட்டு தலைக்கு டைஅடித்து குடுமி கட்டி ஒரு கயனீஸ் காதலியுடன் சதா திரியும் ஒருவன். அவன் செய்வதை நான் பிழை என்று சொல்லவில்லை. ஆனால் ஹை லைட் பண்ணியதற்காக தலை முடியை வெட்டியவன், அவள் வேறு நாட்டு தோழனுடன் பேசினால் தலையையே வெட்டியிருக்கமாட்டானா?

இது தான் நாம் கட்டி காக்கும் வெத்துவேட்டுக் கலாசாரம்

6/23/2009 01:45:00 PM
DJ said...

ந‌ன்றி வின‌வு & அருண்மொழிவ‌ர்ம‌ன்.
....
/எனது கல்லூரிக் காலத்தில் ஒரு பெண் தலைமுடிக்கு “ஹைலைட்” பண்ணிணாள் என்று அவளது தலை முடியை ஒட்ட வெட்டி தமிழ் தலிபானாகி கலாசாரம் காத்தான் கடுக்கனும் மூக்குத்தியுமிட்டு தலைக்கு டைஅடித்து குடுமி கட்டி ஒரு கயனீஸ் காதலியுடன் சதா திரியும் ஒருவன். அவன் செய்வதை நான் பிழை என்று சொல்லவில்லை. ஆனால் ஹை லைட் பண்ணியதற்காக தலை முடியை வெட்டியவன், அவள் வேறு நாட்டு தோழனுடன் பேசினால் தலையையே வெட்டியிருக்கமாட்டானா?/

இன்னும் ப‌ல‌ பெற்றோர்க‌ள், த‌ம‌து ம‌க‌ன்க‌ள் வேறு மொழி பேசும் பெண்க‌ளோடு திரிவ‌தைச் ச‌ற்றுப் பெருமையாகச் சொல்லித் திரிவ‌தையும், அதேவேளை த‌ம‌து மக‌ள்க‌ள் இப்ப‌டி வேற்றின‌ ஆண்க‌ளோடு திரிந்தால் க‌லாசார‌மே கெட்டுவிட்ட‌தாக‌ அவ‌ர்க‌ளுக்கு அறிவுரை கூறித் 'திருத்துவ‌தையும்' பார்த்திருக்கின்றோம் தானில்லையா அருண்?

6/24/2009 10:59:00 AM
துர்க்கா-தீபன் said...

ஹேமா அக்கா"வில் இருந்த அதிர்வு "யாழ்ப்பாணியின் சோக வாக்குமூலத்தில்" இல்லைத்தான் இருந்தாலும் தொய்வில்லாமல் வாசிக்க சுவாரசியமான கதையாக இருந்தது. முடிவை ஊகிக்ககூடிய வகையில் கதையை அமைத்திருப்பதும் வாசிக்கின்ற எல்லா யாழ்ப்பாணியையும் இந்த கதையோடு தம்மை உணரச் செய்கின்ற உத்தி என்றே எனக்குத் தோன்றுகிறது.


மற்றது இளங்கோ, நண்பர்களின் பின்னூட்டங்களில் வரும் திகதி மாதம் மற்றும் ஆண்டு பிந்திக் கிடக்கிற மாதிரித் தெரியுது ஒருக்காப் பாருங்கோ :)

4/25/2010 11:50:00 PM