1.
சமகால ஈழத்து இலக்கியம் என்பது பரந்த தளத்தில் அணுகவேண்டியது. விரிவான வாசிப்பும், ஆழமான விமர்சனப்பண்பும் இல்லாது ஒரு வாசிப்பை முன்வைத்தல் என்பது கடினமானது.. ஈழத்திலிருந்து எனக்கு வாசிக்க கிடைத்த பிரதிகள் மிகச் சொற்பமே. எனவே ஈழத்திலக்கியம் என்ற வகைக்குள் ஈழத்திலிருந்தும் புலம்பெயர்ந்தும் வந்த படைப்புக்களை சேர்த்து, சில வாசிப்புப் புள்ளிகளை முன்வைக்கலாமென நினைக்கின்றேன். அத்துடன், இது எதற்கான முடிந்த முடிபுகளோ அல்ல என்பதையும் தயவுசெய்து கவனத்திற் கொள்ளவும். மேலும் போர் தின்றுவிட்டுப் போயிருக்கின்ற ஈழத்துச் சூழலில், இன்று இலக்கியம் பேசுவது கூட ஒருவகையில் அபத்தமானதுதான்.
சமகால ஈழத்திலக்கியம் என்பதை 2000ம் ஆண்டுக்குப் பிறகான சில பிரதிகளினூடாக அணுக விரும்புகின்றேன். ஈழத்திலக்கியத்தில், மிக நீண்டகாலமாக புனைவுகளின் பக்கம் தீவிரமாக இயங்கியவர்கள் என, எவரேயையேனும் கண்டுகொள்ளுதல் சற்றுக் கடினமாகவே இருக்கிறது. விமர்சனத்துறையில் ஒரு தொடர்ச்சியும், தொன்மையும் இருந்ததைப் போல, புனைவுகளின் வழியே நம்மிடையே ஒரு தொடர்ச்சி இருந்ததில்லை. அவ்வாறு இல்லாதது நல்லதா கூடாதா என்பதைப் பிறகொரு நேரத்தில் பார்ப்போம். இந்தக் காலப்பகுதியில், ஒரளவு தொடர்ச்சியாக கவிதைத் தளத்தில் தீவிரமாய் இயங்கிவந்த வில்வரத்தினத்தை இழந்திருக்கின்றோம். இன்னொரு புறத்தில் மிகவும் நம்பிக்கை தந்துகொண்டிருந்த எஸ்.போஸை மிக இளமவயதில் துப்பாக்கியிற்குப் பலியும் கொடுத்திருக்கின்றோம். ஆகவே ஈழ இலக்கியத்தை வாசிப்புச் செய்யவரும் ஒருவர், புறநிலைக் காரணிகளான, தொடர்ச்சியான போர், இடம்பெயர்தல், சுதந்திரமாக எதையும் எழுதமுடியாத சூழல் என்பவற்றைக் கவனத்தில் கொள்ளுதல் அவசியமாகின்றது. இதை விமர்சகர்களுக்கு முக்கியமாய் இந்தியாவில் சொகுசான சூழலில் இருந்துகொண்டு, வருமான வசதிகளுக்காய் கோடம்பாக்கத்தில் புரண்டு கொண்டிருப்பவர்களுக்கு விளங்கப்படுத்துவது கடினம.
ஈழத்திலக்கியம் என்பதே அவற்றின் நிலப்பரப்புகளுக்கும், கலாசார தளங்களுக்கும் ஏற்ப உட்பிரதேசங்களிலேயே வித்தியாசப்படுபவை. உதாரணமாக யாழில் வெளிவரும் படைப்புக்களுக்கு, பிரயோகிக்கும் விமர்சன அலகுகளை மலையகத்தில் முன்வைக்கமுடியாது. முற்றிலும் வித்தியாசமான சூழல் மலையகத்தினுடையது. கவிதை எழுதும் மலையகப் பெண்ணொருவர் ஒரு நேர்காணலின்போது, தான் ஒரு படைப்பு எழுதி அனுப்புவது என்றால் கூட 4 மைல் நடந்துவந்தே தபால் பெட்டிக்குள் போடவேண்டியிருக்கின்றது என்பதன், பின்னாலுள்ள புறச்சூழல்களை முன்வைத்தே நாம் மலையகப் படைப்புக்களை அணுகவேண்டியிருக்கின்றது. அதேபோன்று வடக்கிலிருந்து துரத்தப்பட்ட முஸ்லிம்களினதும், கிழக்கில் இருக்கும் முஸ்லிம்களினதும் வாழ்வு நிலை என்பது கூட முற்று முழுதிலும் வேறுபடக்கூடியது. இந்த வித்தியாசங்கள் அவர்களின் படைப்புக்களில் ஊடாடுவதை விளங்கிக்கொள்ளாது ஒரு வாசிப்பை நாம் எளிதாகச் செய்துவிட முடியாது. இவ்வாறே முற்றுமுழுதாக வாழ்வு குலைக்கப்பட்டு புதிய நாட்டுச் சூழலில் வாழத்தொடங்கும் புலம்பெயர்ந்தவர்களுக்கும் வேறுவிதமான பிரச்சினைகள் இருக்கின்றன.
2.
2001ம் ஆண்டு ஷோபாசக்தியின் 'கொரில்லா' ஒரு புதிய பாய்ச்சலை தமிழ்ச்சூழலில் ஏற்படுத்துகின்றது. கதைக் களத்தில் மட்டுமில்லாது புனைவின் மொழியிலும் அது வித்தியாசத்தைக் கொண்டிருந்தது. அழுது வடிந்துகொண்டிருந்த மொழியில், கதை சொல்லிக்கொண்டிருந்த ஈழத்தமிழர் படைப்புக்களத்தில், இது ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. மிக உக்கிரமான அரசியலை, அங்கதத்தோடு இணைத்துக்கொண்டதால் -எப்போதுமே அரசியல் பேசப்பிடிக்கின்ற தமிழர்களை- அது வெகுவிரைவாக தனக்குள் இழுத்துக்கொண்டது. அதே ஆண்டு அ.முத்துலிங்கத்தின் 'மகாராஜாவின்
ஷோபாசக்தியைப் போல, மிகப்பெரும் பாய்ச்சலை புனைவுத்தளத்தில் நிகழ்த்தக் கூடியவர் என்று, மிகவும் நம்பப்பட்ட சக்கரவர்த்தி 'யுத்ததின் இரண்டாம் பாகத்தோடு' ஒருவித உறக்கநிலைக்குப் போனது ஈழத்து இலக்கியப்பரப்பில் ஏமாற்றமே. யுத்தத்தின் இரண்டாம் பாகத்தின் சில கதைகள் உணர்ச்சித்தளத்தில் மட்டும் இருக்கின்றன என்றாலும், அதில் உண்மைகள் நேர்மையாகவும் துணிச்சலாகவும் கூறப்பட்டிருக்கின்றது என்பதால் முக்கியம் வாய்ந்ததாகிவிடுகின்றது. மேலும் மட்டக்களப்பு மொழியின் வாசனை கதையெங்கும் மலர்ந்தபடியே இருப்பதுவும் கவனிக்கத்தது. இதே காலகட்டத்தில் இலக்கிய உலகில் காலம் சற்றுப் பிந்தி நுழைந்தாலும் மிகுந்த சொற்சிக்கனத்தோடும் அழகியலோடும் திருமாவளவன் நுழைகின்றார். பனிவயல் உழவில் முன்னவர் சிலரின் பாதிப்பு இருந்தாலும் சிறந்த கவிதைகள் சிலவற்றையாவது அதில் அடையாளங்காண் முடியும். பனிவயல் உழவிற்குப் பிறகு அஃதே இரவு அஃதே பகலில் வேறொரு தளத்தில் கவிதைகளை திருமாவளவன் நகர்த்த முயன்றிருக்கின்றார். ஆனால் அவரது 3வது தொகுப்பான இருள்-யாழி இவ்விரு தொகுப்புக்களை விடுத்து முன்னகர வேண்டியதற்குப் பதிலாக சற்றுத் தேங்கிப் போனது ஒருவகையில் ஏமாற்றமே. இதே காலப்பகுதியில் கனடாவிலிருந்து தேவகாந்தனின் 'கதா காலம்' காலம் பதிப்பாக வருகின்றது. மகாபாரதம் நமது ஈழத்துச் சூழலிற்கு ஏற்ப மறுவாசிப்புச் செய்யப்படுகின்றது.நாம் அறிந்த மகாபாரத பாத்திரங்கள் கதா காலத்தில் வேறு வேறு வடிவங்கள் எடுக்கின்றன.. வாசிப்புக் கவனத்தைக் கோரும் இப்புதினம், ஏற்கனவே வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் உபபாண்டவத்தின், பெரும் வெளிச்சத்தில் பின் தங்கிவிட்டதோ, என்கின்ற ஆதங்கம் இப்போதும் எனக்கு உண்டு.
2001ல் ஈழத்தில் ஏற்பட்ட சமாதானக் காலம், வன்னியிலிருந்து நாம் இதுவரை அறியாத கதைகளை எம்முன்னே கொண்டுவரத் தொடங்குகின்றது. ஏற்கனவே அறியப்பட்ட தாமரைச் செல்வியின் 'அழுவதற்கு நேரமில்லை' சிறுகதைத் தொகுப்பு வெளிவருகின்றது. அதேபோன்று தனது பிள்ளைகளை ஈழப்போருக்குப் பலிகொடுத்து, தானும் ஒரு போராளியாக இருந்த தமிழ் மகள் என்ற கதைசொல்லியின் 'இனி வானம் வெளிச்சிரும்' வருகின்றது. வறுமைக்குள் வாழ்ந்து, திருமணமாகி சில வருடங்களில் கணவனால் கைவிடப்பட்ட உறுதிமிகு ஒரு வன்னிப் பெண்ணின் கதை, மிக அற்புதமாக அதில் பதியப்பட்டிருக்கின்றது. இதுவரை ஆண்களின் குரல்களின் வழியே விழுந்த போராட்டம் குறித்த கதையாடல்களை தமிழ்மகள் வேறொரு விதத்தில் அணுகுகின்றார். இந்நாவலின் ஆண்கள் வியந்தோத்தும் வீரத்தை அதிகம் கொண்டாடாது, இப்போராட்டம் தமக்கு வேறு வழியில்லாது திணிக்கப்பட்டது, தமது இருத்தல் என்பதே இப்போராட்டத்தோடு இணைந்துள்ளதென நினைக்கும், ஒரு பெண்ணின் மனோநிலையில் எழுதப்பட்டிருக்கின்றது. போர் குறித்தும் போர் நடத்தப்பட்டது குறித்தும் நமக்கு பல்வேறு கேள்விகள் இருக்கின்றபோதும் தாம் உறுதியாய் நம்பிய ஒரு நிலைப்பாட்டுக்காய் தங்களை அர்ப்பணித்துக்கொண்டவர்களின் புதினம் என்றவகையில் இந்நாவல் முக்கியமானதே. மக்சிம் கார்க்கியின் தாயிற்கு நிகரான எத்தனை ஆயிரமாயிரம் தாய்களை நாம் நமது நிலப்பரப்புக்களில் கண்டிருக்கின்றோம். அவ்வாறான ஒரு தாயின் கதையே இது. மேலும் புலிகளின் அரசியல் துறையில் இருந்த மலைமகள் எழுதிய 'புதிய கதைகளிலும்', வெளிச்சம் சஞ்சிகையால் தொகுக்கப்பட்ட 'வாசல் ஒவ்வொன்றும்' சிறுகதைத் தொகுப்பிலும் போர்க்கால வன்னிச்சூழல் அங்கே வாழ்ந்தவர்களால் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. அதேபோல மலையக பெண்களின் கவிதைகள் தொகுக்கப்பட்ட 'இசை பிழியப்பட்ட வீணை'யையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
(தொடரும்...)
(காலம் இலக்கிய நிகழ்வான 'ஈழமின்னல் சூழ் மின்னுதே' வில் வாசிக்கப்பட்ட கட்டுரை)
2 comments:
அ. முத்துலிங்கத்தின் தொகுப்பு 'மகாராஜாவின் ரயில்வண்டி'
10/17/2011 05:00:00 AMநன்றி முருகேசு. திருத்திவிட்டேன்.
10/17/2011 09:50:00 AMPost a Comment