ஆதியிலே ஷோபாசக்தியோடு முரண் இருந்தது - பகுதி 03
ஷோபாசக்தி எனது கேள்விகளுக்கு அளித்த பதில்களை முன்வைத்து சில குறிப்புக்களை எழுதுகின்றேன். கேள்வி பதில்...பிறகு பதிலுக்கு மேலும் கேள்விகள் என ஒரு முடிவுறாத வட்டத்திற்குள் சிக்காமல் இருப்பதற்காய் சில அவதானக் குறிப்புக்களை எழுதுகின்றேன்.
(1) ஷோபா குறிப்பிட்ட மாற்றம்/மாற்றத்திற்கான காரணங்கள் என்பவற்றையும் நானும் ஒப்புக்கொள்கின்றேன். காலச்சுவடு, இந்தியா ரூடே போன்றவற்றில் எழுதிக்கொண்டிருந்த ரவிக்குமார்,ராஜ்கெளதமன் போன்றவர்களையும் அதே நிலைப்பாட்டிலேயே நானும் ஆதரித்து வந்திருக்கின்றேன். அதை எனது தளத்திலும் எழுதியுமிருக்கின்றேன்.
நான் சுட்ட விரும்பியது, மாற்றத்தையல்ல. புலம்பெயர் சூழலில் இலக்கியச் செயற்பாடுகளுக்கும், சஞ்சிகைகள் வெளிவருவதற்கும் எவ்வளவு அல்லாட வேண்டியிருக்கிறது என நாமெல்லோரும் அறிவோம். படித்துக்கொண்டிருந்த காலத்தில் எனக்கும், நண்பனொருவருக்கும் சஞ்சிகை வெளியிடும் ஆசை வந்து, அப்போது இங்கு வந்திருந்த 'உயிர்நிழல்' கலைச்செல்வனோடும் இது பற்றி உரையாடியிருந்தோம். அவர் தான் 'உயிர்நிழல்' வருவதற்காய், தான் வேலை செய்துவரும் பணம் முழுவதையுமே செலவிடவேண்டியிருக்கிறதென அது குறித்த இடர்களை எங்களுடன் பகிர்ந்திருந்தார். மேலும் 'உயிர்நிழல்' சஞ்சிகையை இலங்கை/இந்தியாவிலிருப்பவர்களுக்கு விற்பதில்லையென்ற முடிவில் அவர்களுக்கு இலவசமாகவே அனுப்புவதாய்க் குறிப்பிட்டதும் நினைவு. எனவே உயிர்நிழலோ, எக்ஸிலோ பிற சஞ்சிகைகளோ புகலிட சூழலிருந்து மிகுந்த நெருக்கடிகளிலிருந்தே வெளிவந்தன என்பதை நாமனைவரும் அறிவோம். எக்ஸில் சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் இருந்தவர்களின்(?) அரசியல் எனக்கு உடன்பாடில்லாவிட்டாலும், அவர்கள் விளம்பரங்களைத் தங்கள் சஞ்சிகையில் பிரசுரிக்கும்போது, சாதி வெறியர்களிடமோ/மத வெறியர்களிடமோ போகமாட்டார்கள் என்பதை நிச்சயமாக என்னைவிட ஷோபாசக்தி நன்கு அறிவார். அப்படிப்பட்ட நண்பர்கள் விளம்பரங்களைத் தங்கள் சஞ்சிகைகளில் சேர்ப்பதை விமர்சித்த ஷோபா, தமது வியாபார நோக்கங்களுக்காய் எந்த அடிப்படை அறமுமில்லாது விளம்பரங்களைப் பிரசுரிக்கும் நிறுவனங்களின் சஞ்சிகைகளில் எழுதப்போகும்போது, எக்ஸில் சஞ்சிகை நடத்திய நண்பர்களிடமும் தனது தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டிருப்பாரா என்பது கேள்விக்குரியது. நாம் யாரை விமர்சிக்கின்றோம் என்பதையோ அல்லது எப்போது நாம் மாறுகின்றோம் என்பதையோ தவறெனச் சொல்ல வரவில்லை. ஆனால் காலநேரங்களுக்கு ஏற்ப நமக்கு எது சாதகமாக இருக்கின்றோமே அதைச் செய்துவிட்டு 'சும்மா சாட்டு' பிறகு சொல்வதற்கு இன்னொரு பெயர் சந்தர்ப்பவாதம் என்பதையும் குறிப்பிட விரும்புகின்றேன்.
இந்த விடயத்துக்கு இன்னொரு உதாரணத்தையும் பார்ப்போம். புதிய பார்வை என்றொரு சஞ்சிகையை எல்லோருக்கும் தெரியும். அந்த சஞ்சிகையின் பதிப்பாசிரியர் நடராஜன். அவரின் சாதி எதுவென எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அதே சஞ்சிகையில் அ.மார்க்ஸ் பத்திகள் எழுதிவருகின்றார். முத்துராமலிங்கம் அவர்களின் நூற்றாண்டுவிழாவில் அது ஒரு சிறப்பிதழ் வெளியிடுகின்றது. அ.மார்க்ஸை ஷோபாவைப் போல எல்லாப்பொழுதும் ஆதரிக்கும் சுகுணாதிவாகரிடம், இதே காலப்பகுதியில், 'முத்துராமலிங்கத்தை விதந்தோத்தும் ஒரு இதழில் அ.மார்க்ஸ் எழுதுவது என்ன நியாயம்?' என ஒரு கேள்வியைக் கேட்கின்றேன். அதற்கு அவர், 'ஆமாம். இனி அ.மார்க்ஸ் புதிய பார்வையில் எழுதமாட்டார்' எனப் பதில் சொல்கின்றார்.
தலித்திய அரசியலை முன்னெடுத்த அ.மார்க்ஸுக்கு நடராஜன் பற்றி எதுவுமே தெரியாமலா அங்கே எழுதத் தொடங்கினார் என்பது முதற்கேள்வி. நடராஜன் தன் சாதி நீக்க அரசியலை எங்கேயாவது முன்வைத்து அதை நம்பித்தான் அ.மார்க்ஸ் போனார் என்பதற்கு ஏதாவது ஆதாரமுண்டா? ஆக, அ.மார்க்ஸ் புதியபார்வையில் எழுதியதை எதன் அடிப்படையில் புரிந்துகொள்வது?
இதே சம்பவத்தை எனது பத்மநாப அய்யரின் கேள்வியோடும் ஒருவர் ஒப்பிட்டுப் பார்க்கலாம். அங்கே நான் குறிப்பிட்டது 'சாதிப்பெயர்களை எடுத்துவிட்டு சாதிமான்களாய் உலாவருபவர்களையும் நீங்கள் அறியாததுமல்ல?' என்பது. இதற்கு ஒரு உதாரணமாய் நடராஜன் இருக்கின்றார். இங்கே நாம் நடராஜனை அதிகம் விமர்சிக்கவேண்டுமா அல்லது அய்யர் என்ற பெயரை மட்டும் வைத்திருப்பதற்காய் பத்மநாப அய்யரை அதிகம் விமர்சிக்கவேண்டுமா? இந்த 'வித்தியாசங்களை' நாம் கணக்கிலெடுக்க வேண்டுமெனத்தான் திரும்பத் திரும்ப ஷோபாவிடம் வற்புறுத்துகின்றேன்.
(2) ஒரு முக்கிய விடயத்துக்கு அது நிகழ்ந்த நேரத்தில் ஏன் ஷோபா எதிர்வினையாற்றவில்லை என்ற எனது முக்கியகேள்வியைச் ஷோபா மிக எளிதாகக் கடந்துபோகின்றார். ஷோபா ஏன் எல்லாவற்றுக்கும் எதிர்வினை செய்யவேண்டுமா என ஒருவர் கேட்கவும் கூடும். முதலாவது இது ஷோபா அதிகம் புழங்கும் இலக்கியவெளி. இரண்டாவது ஷோபா தலித்தியச் செயற்பாடுகளில் அதிகம் ஈடுபாடுடையவராகக் காட்டிக்கொள்பவர். இவை எல்லாவற்றுக்கும் மேலாய் ஷோபாவின் நெருங்கிய நண்பர்கள் குறித்த சம்பவ இடத்தில் இருந்ததோடன்றி, அவர்களில் ஒருசிலர் மீதும் சுகிர்தராணியால் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கின்றது. ஒன்றுமேயில்லாத சீமானின் 'தம்பி' படத்துக்கு வரிந்து வரிந்து எழுதுகின்ற ஷோபா இந்த விடயத்தில் மவுனமாக ஏன் இருந்தார் என்பதும் முக்கிய கேள்வி. அந்த வகையில் ஷோபாவினதும் சுகனினதும் மவுனம் 'கள்ளமவுனமே' என்பதை இங்கே மனவருத்ததுடன் பதிவு செய்கின்றேன். (சுகிர்தராணியின் இக்கட்டுரைக்கான ஒரு விவாதம் எனது பேஸ்புக்கில் நிகழ்ந்ததையும் ஒரு குறிப்பாக இங்கே விட்டுச்செல்கின்றேன்)
(3) காலச்சுவடு/உயிர்மை/கிழக்குப் பதிப்பகங்களை நாடி புலம்பெயர்ந்தவர்கள் செல்வது எனக்கும் வருத்தமளிக்கும் விடயந்தான். ஆனால் அவ்வாறு போகும் எல்லோரும் எம்மைப் போல இணையக்கடலில் எப்போதும் மூழ்கிக்கிடப்பவரும் அல்லர். நடப்பவை அனைத்தையும் அறிந்தவர்களும் அல்லர். எனவே தொடர்ந்து பலர் இவ்வாறான பதிப்பகங்களைத் தேடிச் செல்லத்தான் போகின்றார்கள். அவ்வாறு செல்கின்றவர்களைப் பார்த்து வருத்தங்களையும், 'பாம்பென்றால் மனிதனைக் கடிக்கும்' என்று 'தத்துவங்களை'ப் பேசிக்கொண்டிருந்தால் மட்டும் போதுமா? தொடர்ந்து பாதிப்பவர்களுக்காய் நாம் ஒரு சொல் ஆதரவு அளித்தோ அல்லது குறிப்பிட்ட பதிப்பகங்களை அம்பலப்படுத்தி எழுதுதலுமே நியாயமாகும். ஷோபா அண்மையில் பட்டியலிட்ட நம்பிக்கையான படைப்பாளிகளில் ஒருவர் மெலிஞ்சிமுத்தன். அவர் ஒரு பதிப்பகத்துடனான தன் கசப்பான அனுபவத்தைக் கூறும்போது நாம் அதற்குத் தார்மீக ஆதரவு கொடுக்கவேண்டியது நம் அனைவரினதும் கடமையல்லவா?
'மனிதன் பாம்பைக் கடித்தால்தான் செய்தி. பாம்பு மனிதனைக் கடிப்பது சாதாரணம். அருந்ததிராய் பிரச்சினை அவ்வகைப்பட்டது' என்கின்ற உதாரணம் எவ்வளவு அபத்தமானது என்பதைப் பாருங்கள். எப்போதும் 'கவனத்தை ஈர்க்கும்' விடயங்களுக்கு மட்டுமே குரல் கொடுப்பேன் என்கின்ற மறைமுக குரல் இதற்குள் ஒலிக்கிறதா இல்லையா ஷோபா? பாம்பு எப்போதும் பாம்புதானே? மனிதன் பாம்பைக் கடித்தான் என்றால் எதற்கு இவ்வளவு பதற்றப்படுகின்றீர்கள்? நச்சில்லாத மனிதன் கடித்து பாம்புக்கு என்ன பாதிப்பா வரப்போகின்றது என நானொரு புதிய வியாக்கியானம் சொன்னால் அதுவும் சரியாக வருமல்லவா? இதைத்தான் ஏற்கனவே (1)ல் குறிப்பிட்டமாதிரி தனக்கேற்ற சந்தர்ப்பமும் சூழலும் வருகின்றபோது மட்டும் தன்னை வெளிப்படுத்தும் ஷோபாவின் மனோநிலை என்கின்றேன்.
(4) நீங்கள் இந்தக் கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்லாதவரை, நீங்கள் அருந்ததி ரோயின் மீது வைக்கும் விமர்சனம் வேறு உள்நோக்கை அடிப்படையாகக் கொண்டது என்றே இப்போதும் சந்தேகிக்கின்றேன்
(5)ஆங்கிலம் தெரியாதது ஒரு குறையேயல்ல. நீங்கள் பிரெஞ்சில் இரண்டுவரி கேட்டால் எனக்கும் பதில் கூறத் தெரியாதுதான். ஆனால் அந்த மோசடிக் கட்டுரை குறித்து நீங்கள் வெளிப்படையாக அந்தக் காலப்பகுதியிலேயே மன்னிப்புக்கேட்டிருக்கவேண்டும். எனெனில் அதை வைத்தே 'பின் நவீனத்துவம் பேசுபவர்கள் அனைவருமே போலிகள்' என முத்திரை குத்தப்பட்டதை அறிவீர்கள். பின் நவீனத்துவம் குறித்து தேடலும்,அறிய ஆர்வமும் உடைய ஒருவருக்கு இத்தகைய விடயங்கள் எவ்வாறான ஒரு மனப்பதிவைக் கொடுக்குமென்று நினைக்கின்றீர்கள்? எனெனில் அந்தப்பகுதியிலேயே நானும் பின் நவீனத்துவம் குறித்து அறிய ஆவல் கொண்டிருந்தேன் என்பதால் அந்த நிலைமைகள் எனக்குப் புரியும். இன்று கூட அதேமாதிரியான சில பிம்பங்களைச் சுமந்துகொண்டு பின் நவீனத்துவம் குறித்து கேலி செய்துகொண்டிருக்கின்ற சில 'புரட்சிவீரர்களை' நீங்கள் அறியாததுமல்ல. தவறுகள் செய்யாத மனிதர்கள் இருக்கின்றார்களா என்ன? அறிந்தே எத்தனையோ தவறுகளைச் செய்து மன்னிப்பும் கேட்டுக்கொண்டிருக்கும்போது, அறியாமல் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்க நாம் ஏன் தயங்கவேண்டும்?
(6) ஷோபா உங்களுக்கு தமிழ் மட்டுமேயல்ல பிரெஞ்சும் நன்கு தெரியுமென எனக்குத் தெரியும். எனவே அதை ஒரு விடயமாகச் சொல்லத் தேவையில்லை. சாருவின் 'உன்னத சங்கீதம்' நல்ல கதை எனச் சான்றிதழும் தருகின்றீர்கள். நன்று. ஆனால் பெண்கள் சந்திப்பு மலரில் (ஆதாரம் காட்ட என்னிடம் பிரதி வசமில்லை) பல பெண்கள் இக்கதை குறித்து வைத்த எதிர்வினைகளுக்கு, ஒரு தொகுப்பாளன் என்றவகையிலும், கதை பிடித்தது என்றவகையிலும் எங்கேயாவது விரிவாக எழுதியிருக்கின்றீர்களா? இன்றுவரையும் அதுகுறித்து ஒரு இறுகிய மவுனத்தைத்தானே பதிலாகத் தந்திருக்கின்றீர்கள்? சாரு தன் உனனதசங்கீதத்தை நியாயப்படுத்த தொடர்ந்து ழார் பத்தாயின் 'விழியின் கதை'யையும், ஷேக்ஸ்பியரின் 'ரோமியோ ஜூலியட்டை'யும் உதாரணம் காட்டிக்கொண்டேயிருப்பார். ஆனால் விழியின் கதை தொடங்கும் இடத்தைப் பாருங்கள், 'I was nearly sixteen when I met Simone, a girl my own age, at the beach in X.' என்றே பதின்மவயதுகாரன் சொல்லக் கதை தொடங்கும். அதேபோன்று ரோமியோ ஜூலியட்டில், 13 வயதில் இருந்து 14ற்கு வயதுக்கு மாறுகின்ற ஜூலியட்டுக்கு அவள் வயதைவிட ஒன்றிரண்டு வயது கூடிய ரோமியோவே காதலன்.
18வயதுக்கு மேற்படாத ஒரு பெண்ணோடு. 18வயதைத்தாண்டிய ஒரு ஆண் உறவுகொள்வதென்பது சட்டப்படி குற்றம்; ஆனால் அதேசமயம் கிட்டத்தட்ட பதின்மவயது பெண்ணோடு அவள் வயதையொட்டிய ஆண் உறவில் இருப்பது குறித்துப் பிரச்சினையில்லை. இந்த வித்தியாசங்களையும், தான் காட்டும் உதாரணங்களுக்குள் இருக்கும் முரண்களையும் தெரியாதுதான் சாரு தன்னை நியாயப்படுத்துகிறார் என்பது இன்னொரு விவாதத்திற்கான புள்ளி. புனைவில் எதை எழுதலாம்/எழுதக்கூடாது என நாம் சத்தம் போடமுடியாதுதான். ஆனால் சாருவின் 'நோநோ' சிறுகதைத் தொகுப்பையெல்லாம் வாசித்துவிட்டு, 'உன்னதசங்கீதம்' போன்ற தட்டையான கதையைச் 'சிறந்த கதை' எனப் பாராட்டும் உங்கள் வாசிப்பை எப்படிப் புரிந்துகொள்வதென யோசித்துக்கொண்டிருக்கின்றேன்.
இரண்டாவது இந்தக்கதையை முன்வைத்து வைக்கப்படும் குற்றச்சாட்டு, இந்திய இராணுவம் சிங்களப் பெண்ணைப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்துவது குறித்து. இப்படியொரு சந்தர்ப்பம் உண்மையில் நடந்திருக்கிறதா? சரி புனைவுதானே அங்கே எதையும் எப்படியும் முன்வைக்கலாம் என்ற வாதத்தை நீங்கள் முன்வைப்பீர்களாயின், நீங்கள் எழுதிய ஒரு சிறுகதையில் ரஞ்சி(சுவிஸ்)யின் பெயரையும், ஊரையும் குறிப்பிட்டு எழுதியதற்கு அவர் கண்டனம் தெரிவித்தபோது அவரின் பெயரை அகற்றியிருந்தீர்கள். அந்தச் சந்தர்ப்பத்தில் ஏன் நீங்கள் புனைவில் வரும் கதைசொல்லி அதைச் சரியாகவோ பிழையாகவோ சொல்லியிருக்கலாம், அதை மாற்றுவதற்கான சுதந்திரம் எனக்கில்லையெனச் சொல்லவில்லை? இந்த இரு சம்பவங்களையும் முன்வைத்து உங்களை எந்தவகையில் புரிந்துகொள்வது?
(7) எஞ்சியிருப்பவர்களின் வாழ்வுக்காய் பகை மறப்பும், மீளிணக்கமும் முக்கியம் என்பதே எனதும் நிலைப்பாடு. ஆனால் அதேசமயம் வெற்றிபெற்றவர்கள் திணிக்கின்றதாய் இந்த விடயங்கள் இருக்கக்கூடாது என்பதோடு, தோற்றவர்கள் வென்றவர்கள் மீது நம்பிக்கை கொள்வதற்கான நகர்வுகளை வென்றவர்களே செய்யவேண்டும் என்பதையும் நாம் வற்புறுத்தியாக வேண்டியிருக்கிறது. இந்த வெற்றி எப்படிப் பெறப்பட்டது என்பது குறித்த கேள்விகளையும் நாம் மறந்துவிடக்கூடாது. மேலும் வென்றவர்கள் எழுதும் சரித்திரமே 'வரலாறாக'ப் போய்விடுவது குறித்தும் அவதானமாக இருக்கவேண்டும்.
இதற்கு ஒரு உதாரணமாக போலந்தில் போலிஷ்காரர்களுக்கு நடந்த Katyn படுகொலைகளைக் குறிப்பிட விரும்புகின்றேன். போலந்தை ஆக்கிரமித்திருந்த நாசிப்படைகளை வெற்றிகொண்ட சோவியத் படைகள் நாசிகளே இதைச் செய்தார்கள் என நெடுங்காலமாகக் கூறிவந்திருக்கின்றனர். அண்மையிலேதான் இத்தனை வருடத்துக்குப் பிறகு தாங்களே படுகொலைகளைச் செய்ததாக ரஷ்ய அரசு வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறது. காலம் கடந்த தீர்ப்புகளுக்கு சிலவேளைகளில் அர்த்தமேயிருப்பதில்லை என்பதையும் நாமறிவோம். எனவே 'பகை மறப்பு' மற்றும் 'மீளிணக்கம்' என்பவற்றை முன்வைத்து நாம் வென்றவர்களின் பக்கம் முற்றுமுழுதாகச் சாயவேண்டிய அவசியம் இல்லை எனச் சொல்ல விரும்புகின்றேன். காலம் தாண்டி வெளிவந்த உண்மைகளுக்கு ஒரு உதாரணமாய் இந்தச் சம்பவம் இருப்பதுபோல ஈழப்போரிலும் புதைக்கப்பட்டிருந்த பல உண்மைகள் இருக்கும் என்பதை ஷோபாவும் நினைவில் கொள்ளவேண்டுமென விரும்புகிறேன்.
பகை மறப்பை முன்னிறுத்தி இலங்கையில் நடக்கும் விடயங்களுக்கு ஆதரவு கொடுப்பவர்கள் எல்லோருமே எப்படி இலங்கை அரசின் ஆதரவாளர்கள் இல்லையோ, அப்படியே இலங்கை அரசின் செயற்பாட்டை விமர்சிப்பவர்கள் அனைவரும் பகை மறப்புக்கும், மீளிணக்கத்திற்கும் எதிரானவர்கள் என்பதும் இல்லை என்பதையும் நாம் கவனத்திற் கொள்ளவேண்டும்.
((8) இந்தக் கேள்வியின் முக்கியமே, சாதிப்பெயர்களை நீக்கியவர்கள் எல்லோரும் சாதி நீக்கம் செய்தவர்களுமல்ல, சாதிப்பெயர்களோடு இருப்பவர்கள் எல்லோரும் சாதி வெறியர்களும் அல்ல என்பதே. இந்த வித்தியாசங்களை அறியாது 'பெயர்களை' மட்டும் கருத்திற்கொண்டு நட்பு சக்திகளையும் எதிர்த்திசையில் வைத்து உரையாடுவது எந்தளவில் சரியென்பதை யோசிக்கவேண்டும். இன்று ஹரி தனக்குப்பின்னால் வரும் பெயரை எடுத்துவிட்டார், அவர் அதை எடுக்காதுவிட்டிருந்தால், ஷோபா எவ்வாறான உதாரணத்தைச் சொல்லித் தப்பித்துக்கொண்டிருப்ப்பார் எனவும் யோசிக்கின்றேன்.
(9)'தொழிலாளிக்கு தாய்நாடு கிடையாது என்ற கார்ல் மார்க்ஸின் பார்வையும் நானொரு தேசத்தரோகி என்ற பெரியாரின் அறைகூவலுமே எனது வழிகள்.'
இவ்வாறான பிரகடனங்களும், சூளுரைப்புக்களும் நல்லதே. எனினும் ஷோபா நீங்கள் இந்தியாவிற்குப் போக விஸா எடுக்கும்போது இவை உங்களுக்கு உதவி புரியாது. நீங்கள் உங்களை இலங்கையனாகவோ அல்லது பிரெஞ்சுக்காரனாகவோ அடையாளங்காட்டினால்தான் விஸா தருவார்கள் அல்லவா? இவ்வகையான தேர்வுகள் தான் இலங்கையில் இருப்பவர்களுக்கும் இருக்கும் என்பதை எப்படி மறுதலிப்பீர்கள்?
போர் துரத்திய காலந்தொட்டு ஈழத்தில் இருந்தவரை ஏன் நான் தமிழனாய் பிறந்தேன் எனக் கவலைப்பட்டிருக்கின்றேன். போருக்குள் அகப்பட்டிறந்தால் அடுத்த பிறப்பு என்று ஒன்றிருந்தால் தமிழனாய் அல்லாது பிறக்க வேண்டுமெனவே பிரார்த்தித்துமிருக்கின்றேன். நான் எனது அடையாளங்களைத் துறக்க விரும்பியபோதும் என் மீது தமிழன் என்ற அடையாளம் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் திணிக்கப்பட்டது.
அவ்வாறு ஒரு அடையாளத்தை வைத்து ஒடுக்கப்படும்போது, அந்த அடையாளத்தை வைத்து கிளர்ந்தெழுவது தவிர்க்கமுடியாது. வரலாறு முழுதும் அதுவே நிகழ்ந்திருக்கின்றது. தலித் என்ற அடையாளத்தை வைத்து ஒடுக்குதல்கள் நிகழும்போது தலித்துக்கள் அதன் பெயரிலே கிளர்ந்தெழுவது எவ்வாறு தவிர்க்கமுயலாதோ, அவ்வாறே தமிழர் என்ற பெயரில் ஒடுக்கப்படும்போது தங்களை ஒரு இணைந்த சக்தியாக ஒடுக்கப்படுவதற்கு எதிராகப் போராட்டங்களை நடத்துவதையோ நாம் ஒதுக்கிவிட முடியாது. நமக்கு வழிகாட்டிகளாக இருந்தவர்களும், நம்மை வழிநடத்தியவர்களும் தவறாக இருந்தார்கள் என்பதற்காக நம் மீது நடந்த ஒடுக்குமுறைகள் இல்லை என்றாகிவிடாது.
உங்களைப் போலவே தேசியத்தின் மீது நம்பிக்கை எனக்கில்லையென வெளிப்படையாகக் கூறியிருக்கின்றேன். அவை இறுதியாய் எங்கே போய் முடியுமென்பதையும் குறிப்பிட்டிருக்கின்றேன். ஆனால் தன் தேசிய அடையாளத்தின் பெயரால் ஒடுக்கப்படுகின்ற ஒரு இனம், தன் தேசியத்தின் பெயரால் ஒருங்கிணைவதை நாம் தவறென்றும் கூறிவிடமுடியாது. இவ்வாறான உங்கள் சூளுரைப்புகளுக்கு அப்பால் இருக்கும் யதார்த்தையும் புரிந்துகொள்ள வேண்டுகின்றேன். உங்களைப் போலவே எனக்கும் பிடித்தமான பெரியார், (இப்போது இருந்தால்) தான் வெளிநாடு செல்லும்போது தன்னை இந்தியன் என பாஸ்போட்டில் குறிப்பிட்டிருப்பாரா அல்லது தேசத்துரோகியெனக் குறிப்பிட்டிருப்பாரா எனவும் யோசித்துப் பார்க்கவும்.
(10) சுகனைப் பற்றிக் கேட்ட கேள்விக்கு இப்படி விரலைச் சூப்புகின்ற குழந்தையாய் அப்பாவித்தனமாய் திருப்பிக் கேள்வி கேட்கின்றீர்களே ஷோபா? இணையத்தில் சும்மா தேடினாலே சுகன் பற்றிய விமர்சனங்கள் நிறையக் கிடைக்குமே? நீங்கள் இப்படி 'அப்பாவி'க்குழந்தையாய்தான் இருப்பீர்கள், ஆனால் எதிர்காலத்தில் நீங்கள் வளர்ந்து தொலைந்துவிட்டாலும், இந்தவிடயத்தை அறியவேண்டுமென்பதற்காய்தானே பானுபாரதியின் பேஸ்புக்கையும் உதாரணம் காட்டியிருந்தேன். 'உயிரெழுத்தில்' எழுதுவதால் அவர்கள் உங்கள் நட்பு வட்டத்திற்குள்ளே இருப்பார்கள் என நம்புகின்றேன். சந்தர்ப்பம் வாய்க்கும்போது அவர்களிடம் கேளுங்கள், ஏன் சுகனிடம் உங்களுக்கு இப்படி கடுமையான விமர்சனம் இருக்கிறதென்று. என்னாலான உதவி இப்போதைக்கு இவ்வளவுதான்.
(11)'தனிநபர்கள் மீது அவதூறு பரப்புதைத் தடுப்பதற்காக பின்னூட்டங்களில் மட்டுறுத்தல் நீக்கல் மூடல் எல்லாமே செய்வேன். தனிநபர்கள் மீது அவதூறு பரப்புதைத் தடுப்பதற்காக பின்னூட்டங்களில் மட்டுறுத்தல் நீக்கல் மூடல் எல்லாமே செய்வேன். நீங்கள் உங்களுடைய வலைப் பதிவில் எழுதுவதை நான் தடைசெய்தால்தான் அதற்குப் பெயர் கருத்துச் சுதந்திர மறுப்பு'
நான் அவதானித்தவரை நீங்கள் பேஸ்புக்கில் அகற்றியவர்கள் எல்லாம் உங்கள் மீதல்லவா விமர்சனம் வைத்திருந்தார்கள். இறுதியில் நேற்றுக்கூட ஒருவரை அகற்றியதாக என் ஃபேஸ்புக் மூலம் அறியமுடிந்திருந்தது.
நுணலும் தன் வாயால் கெடும் என்று சும்மாவா கூறினார்கள். இப்படி நீங்கள் எழுதியதையே சற்று விரித்துப் பார்ப்போம். இதையே ஒரு இயக்கம் அல்லது தலைமை தாங்குபவர், நான் என் இயக்கத்தில் இருப்பவரைச் சித்திரவதை செய்வேன், விரும்பினால் போட்டுக்கூடத் தள்ளுவேன், எனெனில் இது என் இயக்கம், நீ வாயைப் பொத்திக்கொண்டு போ' என்று சொல்வதற்கு எவ்வளவு நேரம் எடுக்கும் என நினைக்கின்றீர்கள். அவர்களும் யாரையும் போட்டுத்தள்ளிவிட்டு, 'இந்த நபர் எங்கள் இயக்கம் பற்றி அவதூறு பரப்புகின்றார்' எனச் சொல்லிவிட்டுப் போகலாம் அல்லவா? இதுதானே கடந்த காலங்களில் நிகழ்ந்தும் இருக்கிறது அல்லவா ஷோபா? இதைத்தான் ஏற்கனவே சொன்னேன், எங்களிடம் எத்தகைய சகிப்புத்தன்மையும், பொறுப்புணர்ச்சியும் இல்லாதபோது நாம் சனங்களுக்காய் பேசுவது என்பது சுத்த பம்மாத்து என்கின்றேன். எங்களை நம்பி சனம் வருகின்றது என்றால், அது அவர்கள் தங்களுக்குத் தாங்கள் கழுத்தில் தூக்குக் கயிற்றைப் போட்டமாதிரியே என இப்போதும் தெளிவாகச் சொல்கின்றேன்.
(13) புலிகள் எப்போதும் ஆயுதப்போராட்டம் அதன் மூலம் தமிழீழம் என்றவகையில் மட்டுமே சிந்தித்தவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அவர்கள் சாதி ஒழிப்பு மட்டுமின்றி பிற எந்த விடயங்களுக்கும் ஒருபோதும் வேலைத்திட்டத்தை முன்வைத்ததோ நடைமுறைப்படுத்தியதோ இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. இன்குலாப் போன்ற புலிகளின் தீவிர ஆதரவாளர்களே, புலிகள் எழுச்சியுடன் இருந்த காலத்திலேயே, 'தமிழீழம் கிடைத்தால்கூட அதன்பிறகும் அங்குள்ள மக்கள் இன்னொரு போராட்டத்திற்குத் தயாராகவேண்டும். அது சாதிக்கு எதிரான போராட்டம்' என எப்போதோ கூறியுமிருக்கின்றார்கள். ஆக உங்களைப் போன்ற 'மாற்று' அரசியல் பேசியவர்களுக்கு மட்டுமின்றி புலிகளைத் தீவிரமாக ஆதரித்தவர்கள் கூட இதைச் சொல்லியிருக்கின்றார்கள்.
ஆனால் உங்களைப் போன்றவர்கள் தொடர்ச்சியாக ஏதோ புலிகள் மற்ற எல்லாவற்றையும் செய்துவிட்டு சாதியை மட்டும் வளர்க்கத் துணைபோகின்றார்கள் என்ற பரப்புரையைச் செய்துகொண்டிருந்தீர்கள் என்பதை நாமனைவரும் அறிவோம். இப்போது ' புலிகள் மீதான எனது விமர்சனம் அவர்கள் சாதியத்தை வளர்தார்கள் என்பதல்ல. சாதியைக் கில்லியெறிய அவர்கள் ஆழமான வேலைத்திட்டங்களை வைக்காததையே எப்போதும் எனது விமர்சனமாக வைத்து வந்திருக்கிறேன்' என நீங்கள் கீழிறங்கி வந்திருப்பதே வரவேற்கக்கூடிய விடயந்தான். எனெனில் இப்படி நீங்கள் வெளிப்படையாகக் முன்பு கூறி நான் வாசித்த நினைவும் இல்லை.
இது ஒருவகையில் புரிந்துகொள்ளக்கூடிய மனோநிலைதான் ஷோபா. எனெனில் புலி அல்லாதவராய் இருப்பவரைவிட புலிக்குள் இருந்து வெளியே வந்து, புலியை விமர்சிப்பவர்க்கு நிறைய பிரச்சினைகள் உண்டு. தனது விமர்சனத்தைக் காட்டமாய் கண்மூடித்தனமாய் வைத்தாலானறி அவர் தன்னை நிலை நிறுத்திக்கொள்ளுதல் கடினம். இது உங்களுக்கு மட்டுமல்ல நிகழ்ந்திருக்கின்றது. வேறு இயக்கங்களில் இருந்து புலிகளோடு பிற்காலத்தில் சேர்ந்தவர்களும் -சாதாரணமானவர்க்கு இருக்கும் புலி ஆதரவை விட- கண்மூடித்தனமான புலி ஆதரவைக் காட்டுவார்கள். ஷோபா இதுவே உங்களுக்கு கடந்தகாலத்தில் நிகழ்ந்தென உறுதியென நம்புகின்றேன், அதாவது கண்மூடித்தனமான புலி எதிர்ப்பு. அதுவேதான், இன்று ஈழத்தில் புலிகள் இல்லாத காலத்தில், உங்கள் நிலைப்பாடுகளைப் படுகுழிக்குள் தள்ளிக்கொண்டிருக்கின்றது. முறையான மாற்றரசியல் செய்திருந்தீர்களாயின் இப்படித் தடுமாற்றங்களோ சரிவுகளோ வந்திருக்காது.
(14) முழுப்பூசணிக்காயைச் சோற்றில் கூட மறைக்கலாம்; ஆனால் நான் விரிவாக விபரித்து எழுதிய கேள்விக்கு தொடர்பின்றிப் பதில் சொல்கின்றீர்களே ஷோபா. நேரடியாகக் கேள்வி கேட்டும் உங்கள் 'விவாதத் திறமை'யை இங்கும் செருகிவிடுதல் நியாயமா?
இன்றைய உங்கள் கருத்துக்களின் அடிப்படையில் நான் நேரடியாகக் கேட்டது, நாளை புலிகள் ஒரு அரசியல் கட்சியாகி, அங்கிருக்கும் மக்களின் ஆதரவோடு தனித் தமிழீழமும் பெற்றால் ஆதரிப்பீர்களா அல்லது புலிகள் என்ற காரணத்திற்காய் எதிர்ப்பீர்களா என்பது... ஏன் இப்படிச் சுற்றிவளைத்துப் பதில் கூறுகின்றீர்கள்.
உங்களைப் போலவே நானும் ' தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக் குரலுக்கு ஆதரவாய் இருப்பவன்' எனவே கூறவிரும்புகின்றேன். உதாரணத்திற்கு கனடாவிலிருக்கும் கியூபெக் மாகாணம் தனி நாட்டுக்கான கோரிக்கையை மீண்டும் முன்வைக்கிறதென வைப்போம் (ஏற்கனவே அருந்தப்பில் தனிநாடாகாமல் இருக்கிறதென்பதை நீங்களும் அறிவீர்களென நம்புகிறேன்). அங்கிருக்கும் மக்கள் தனிநாட்டுக்கு ஆதரவளிக்கின்றனர். அப்போதும் நான் 'தேசிய இனங்களின் இணைப்பாட்சி முறையே இப்போதைக்கு ஏற்ற தீர்வு எனக் கருதுகிறேன்' எனக் கூறிக்கொண்டிருப்பது எவ்வளவு அபத்தமாக இருக்கும்? அவ்வாறாக அல்லவா உங்களின் பதிலும் இருக்கிறது.
அதைவிடக் கொடுமை என்னவென்றால் நான் கேள்வி (9)ல் 'தேசியம் குறித்து உங்களின் பொதுவான வரைவிலக்கணம் என்ன? இலங்கையில் தமிழ்த்தேசியத்திற்கான அவசியம் இருக்கின்றதா? ஆம்/இல்லை எதுவெனிலும் உங்கள் பதில்களை முன்வைக்கவும்.' எனக் கேட்க ஏதோ புத்திசாலித்தனமாகப் பதிலளிப்பதாய் நினைத்து தொடர்பிலாது ஏதோ பதிலளித்துவிட்டு இப்போது 'தேசிய இனங்களின் சுயநிர்ணயம்' குறித்துப் பேசுகின்றீர்களே? இதைத்தான் கடந்த பகுதியில் கூறினேன் ஸ்பைடர்மான் மாதிரி தாவித் தாவிப்பாயும் உத்தி.
சரி உங்களின் குயுக்தி முறைகளையாவது விடுவோம். நீங்கள் கார்ல் மார்க்ஸையும் ஆசானாக வைத்திருக்கின்றீர்கள் அல்லவா? உங்கள் அளவுக்கு மார்க்ஸை லெனின் முறையாகக் கற்றிருக்காவிட்டால் கூட, லெனின் ஒரு தேசிய இனம் அது தான் விரும்பினால் தனிநாடாகப் பிரிந்துபோகின்ற உரிமை அதற்கு உரியது எனவும் கூறியிருக்கின்றார் அல்லவா? அதைக்கூடவா ஞாபகம் வைக்காமல் இருக்கின்றீர்கள்?
'நான் ஒரு தேசத்துரோகி, நான் எப்போதும் தேசிய இனங்களின் இணைப்பாட்சி முறையே இப்போதைக்கு ஏற்ற தீர்வு எனக் கருதுகிறேன்... 'என எப்போதும் எல்லாவற்றுக்கும் ஒன்றையே கூறிக்கொண்டிருப்பது எவ்வளவு அபத்தமென்பதைத்தான் மேலேயுள்ள கேள்விகளின் மூலம் சுட்டிக்காட்டியிருக்கின்றேன். ஏற்கனவே தயாரித்த விடைகளை வைத்துக்கொண்டு எல்லா இடங்களிலும் பொருத்திப் பார்த்துக்கொண்டு உங்களை ஒரு பின் நவீனத்துவத்தில் ஆர்வமுள்ள ஒருவராய் எப்படி இனங்காட்ட முயல்கின்றீர்களென வியப்பாகவே என்னால் இப்போதும் பார்க்க முடிகின்றது.
-------------------
இறுதியாய் எனக்கிருக்கும் சந்தேகம். நீங்கள் ஊரில்/உலகத்தில் இருக்கும் பலருக்கு சுவரொட்டிகளும் எதிர்வினைகளும் செய்திருக்கும்போது தமிழ்ச்சூழலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஜெயமோகன் பற்றி எதுவுமே எழுதவில்லை? உங்களுக்கும் எனக்கும் பிடித்தமான பெரியாரை மட்டுமின்றி, உங்களில் அதிகம் பாதிப்புச் செலுத்தும் அ.மார்க்ஸையும் அவர் நேரங்கிடைக்கும்போது அடித்துத் துவைக்கிறாரே? ஏன் ஒரு சொல் அது குறித்து நீங்கள் பேசுவதில்லை? சிலவேளை இதற்கும் 'மனிதன் பாம்பைக் கடித்தால்தான் செய்தி. பாம்பு மனிதனைக் கடிப்பது சாதாரணம்' எனப் பெரும் சந்தர்ப்பம் வருவதற்காகக் காத்திருக்கின்றீர்களோ தெரியாது? இதைவிட நீங்களும் அ.மார்க்ஸும் திட்டித்தீர்க்கின்ற யமுனா ராஜேந்திரன்தான், உங்கள் மார்க்ஸையும் காப்பாற்ற வரவேண்டியிருக்கிறது என்பது இன்னொரு முரண்நகை.
கடந்த இரண்டு வாரங்களாய் இந்த விடயங்களோடு ஈடுபட்டிருந்ததால் என்னால் ஃபேஸ்புக்கில் நடக்கும் பிறவற்றை தொடர்ந்து வாசிக்கமுடியவில்லை. இன்று காலை இதை வாசிக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. இதில் கூறப்படும் விடயங்களை ஆழமாகக் கவனிக்காததால் உள்நுழைந்து கருத்துச் சொல்ல இப்போது விருப்பம் இல்லை. ஆனால் இக்கட்டுரையில் உங்களை ஒரு தலித்தாகவே தொடர்ந்து அடையாளப்படுத்தியதாகக் கூறப்படுகின்றது. அடையாளங்களை மறுதலிப்பது தவறேயல்ல, ஆனால் உயர்சாதி அடையாளங்களை மறுப்பதால் அதன் நிகர் தலித் என்றாகிவிடாது. அது மிகப்பெரும் மோசடி. இவ்வாறு அந்தக் கட்டுரையில் கூறப்பட்டிருப்பதுபோல் நீங்கள் உங்களை ஒரு 'தலித்' எனக் கூறியிருப்பின் எனது கண்டனங்களைப் பதிவு செய்துகொள்கின்றேன்.
-----------------
இத்துடன் ஷோபாசக்தியுடனான விவாதத்திலிருந்தும் இத்தொடரிலிருந்தும் விலகிக்கொள்கின்றேன். ஷோபாசக்தி தனது தளத்தில் வளர்மதியின் (எனதுமான) 6 கேள்விகளுக்குப் பதில் அளித்திருக்கின்றார். அந்தப் பதில்களை இன்னும் ஆறமர இருந்து வாசிக்கவில்லை. அவற்றைப் பற்றி ஏதேனும் எழுதவேண்டியிருப்பின் எப்போதாவது ஒருநாள் எழுத முயற்சிக்கிறேன்.
(இறுதியாய் நிதானமாய் உரையாடவந்த ஷோபாவிற்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனெனில் என் அனுபவங்களின்படி பலருக்கு அவர்களைப் பற்றி சின்ன விமர்சனத்தை வைத்தாலே, தொடர்பேயின்றி எதையெதையோ கோபத்தில் பேசிவிட்டு அதுவரைகால நட்பையே முறித்துவிட்டுச் சென்றுவிடுபவர்களாக இருந்திருக்கின்றார்கள். அந்தவகையில் என்னைவிட தெளிவாகவே இது தனிப்பட்ட காழ்ப்பின் அடிப்படையிலான உரையாடல் இல்லை என்பதைக் கூறி தொடர்ந்து உரையாடிய ஷோபாவிற்கு நன்றி. ஷோபா எப்படி எள்ளல்களாய் எனக்குப் பதில் அளித்தாரோ அதைவிட எள்ளலாகவே நானும் மறுமொழிந்திருக்கின்றேன். எனக்கு எப்படி சிலவேளைகளில் ஷோபாவின் எள்ளல் எரிச்சலைத் தந்திருக்குமோ அதையளவுக்கு அவருக்கு எனது எள்ளல்கள் எரிச்சல்களைக் கொடுத்திருக்கும் என்பதை என்னால் உணரமுடிகின்றது. அதற்கு மன்னிப்பும், இதுவும் விவாதத்தின் ஒருபகுதியே எனப் பெரிதுபடுத்தாதுவிட்ட ஷோபாவிற்கு நன்றியும்.)