கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

காசித்தும்பைப்பூ குறிப்புகள்

Tuesday, December 23, 2014

நஞ்சுண்டகாடு

அண்மையில் தமிழில் வந்திருப்பதில் தவறவிடாது வாசிக்கவேண்டிய ஒரு நாவல் இது. 2004ல் எழுதிமுடிக்கப்பட்டு பிரசுரமாவதற்கு இருமுறை தடைகளைச் சந்தித்து இப்போது (2014) பிரசுரமாயிருக்கிறது.

போரை நீண்ட சகாப்தங்களாய் ஈழத்தமிழர் சந்தித்தபோதும், ஏன் அழுத்தமான பதிவுகள் இன்னும் வரவில்லை என எழும் கேள்விகளுக்குப் பதிலாய், ஒரு நம்பிக்கைக் கீற்றைத் தருவதைப் போல 'நஞ்சுண்டகாடு' வந்திருக்கின்றது. இது போர்/இயக்கம் பற்றிய கதையென்றபோதும் ஒரு மினிமுகாம் தாக்குதல் மட்டும் சில பந்திகளால் நிரப்பப்பட்டு மிகுதி அனைத்துப் பக்கங்களிலும் போராளிகள்/மக்களின் மனங்கள் மிக நெருக்கமாய்ப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

அண்மைக்காலமாய்ப் ஈழப்போராட்டம் சார்ந்து எழுதப்படும் புனைவுகளில் அளவுக்கதிகமாய் நகைச்சுவை/எள்ளல் பாவிக்கப்படுவது சிலவேளைகளில் கூறவரும் விடயங்களை நீர்த்துப்போகச் செய்வதாய் இருப்பதை நாம் அவதானித்திருக்கக்கூடும். ஆனால் இந்நாவலில் நம்மையறியாமலே புன்னகை செய்துவிடச் செய்யும் இடங்களிலிருந்தாலும் அது நாவலிற்குள் துருத்தித் தெரிவதில்லை. பயிற்சி முகாங்களில் ஒருவரையொருவர் சந்தேகித்தபடியும், கோள்மூட்டியபடியும் இருப்பவர்கள் பின்னர் எப்படி தங்களுக்குள் நெருக்கமாகின்றார்கள் என்பதை மிக இயல்பாய்ச் சித்தரிக்கின்றது. இவ்வளவு நுணுக்கமாய் இயற்கையையும், போராட்டமென்று கூட்டுமனப்பான்மை வந்தாலும் ஒவ்வொரு மனித மனங்களுக்குள் நிகழும் அந்தரங்கமான உரையாடல்களையும் -குணாவின் முதல்நாவல் இது என்றுணாரா வண்ணம்- இதில் அருமையாக வளர்த்துச் செல்கின்றார்.

இந்த நாவல் நடைபெறும் காலகட்டம் (என் வாசிப்பின்படி) புலிகள் ஆனையிறவு முகாம் மீது முதன்முறை தாக்குதல் நடத்தித் தோல்வியடைந்த 'ஆகாய-கடல்-வெளி'யை அண்டித் தொடங்கி, யாழ் பெரும் இடம்பெயர்வு, சமாதானக்காலம் எனறு மூன்று வெவ்வேறு கட்டங்களைத் தொட்டு நிற்கின்றது. குணா கவியழகன் 2009ம் வரை இறுதி ஆயுதப்போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடியும்வரை நின்றதோடு, முள்வேலி தடுப்பு முகாமிலிருந்து வெளியேறி தற்போது வெளிநாடொன்றில் வாழ்வதாகக் கூறப்படுகின்றது. புனைவின் மொழி மிக இயல்பாய்க் கைவரப்பெற்றிருக்கும் குணா, தான் கடந்துவந்த பாதைகளை இன்னும் விரிவாக இனிவருங்காலங்களில் எழுதுவாரென நம்புகின்றேன்.

ஒரேயிரவில் என்னை எங்கும் அசையவிடாது, மனதின் ஆழங்களை ஊடுருவி நெகிழவைத்த 'நஞ்சுண்ட காட்டை' இந்த ஆண்டில் வெளிவந்த முக்கிய படைப்புக்களில் ஒன்று எனச் சொல்வதில் எனக்கு எவ்விதத் தயக்கமுமில்லை.


இரண்டு இழப்புக்கள்

-எம்.எஸ.எஸ்.பாண்டியன்

எம்.எஸ்.பாண்டியனை முதன்முதலாகவும் இறுதியாகவும் சந்தித்தது, ரொறொண்டோவில் நடந்த தமிழியல் மாநாட்டில். அவர் சிறப்புப் பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்தார். "Nation Impossible"  என்ற தலைப்பில் பேசியிருந்தார். காலையிலிருந்து பல்வேறு அமர்வுகளில் அம்ர்ந்திருந்ததால் பாண்டியனின் உரையை ஆழ்ந்து கவனிக்க முடியாது போயிருந்தது. மேலும், பிறரை விட அறிவுசார் புலமையாளர்களை மிகுந்த சந்தேகத்துடன் பார்க்கும் என்னியல்பால் அன்றையகாலத்தில் பாண்டியனை நெருங்க அணுகவும் முடியவில்லை.

ஆனால் பிறகு வெளியரங்கில் தேவகாந்த்ன், எஸ்.வி.ராஜதுரையின் இல்லத்தில் பாண்டியனை நக்சலட்டுக்கள் தீவிரமாய் இயங்கிய காலங்களில் அடிக்கடி சந்தித்த அனுபவங்களைப் பகிர்ந்தபோது சுவாரசியமாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். பாண்டியனின் தனிப்பட்ட கட்டுரைகளை அவ்வப்போது வாசித்தபோதும் அவர் எழுதிய மூன்று புத்தகங்களில் எதையும் வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனால் அவர் திராவிட இயக்கங்களின் தீவிர பற்றுள்ளவராக இருந்தபோதும், அண்ணாத்துரை(?) பற்றி மோசமாய் சித்தரித்துக் கார்ட்டூன் வரையப்பட்டபோது கருத்துச் சுதந்திரத்திற்காய் காட்டூனிஸ்ட் பக்கம் நின்றதும், அண்மையில் டெல்கி பல்கலைக்கழகத்தில் ஏ.கே.ராமானுஜத்தின் ராமாயாணக் கட்டுரை நீக்கப்பட்டபோது, அதற்குத் தனது எதிர்ப்பை அழுத்தமாய்ப் பதிவு செயததுமென அவரை இன்னும் நெருங்கமாய்ப் பார்க்கும் சந்தர்ப்பங்கள் வாய்த்திருந்தன.

இப்போது எஸ்.வி.ஆரின் அஞ்சலிக் குறிப்பை வாசிக்கும்போது, அவர் தாம்பரம் கல்லூரியில் சேரும்வரை ஆங்கிலத்தை முறையாகக் கற்றவரில்லை; பின்னரே தன் முயற்சியில் சிறந்த ஆங்கிலப் புலமையாளராக மாறினார் என்பதை அறிய நேர்ந்தது. ஆங்கில மோகம் கொண்டவர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒரு குறிப்பு இது. ஒருவர் தன் வேர்களை தனது தாய்மொழியில் அறியாமல், இன்னொரு மொழியினூடாக ஆழமாக அறியவோ ஆய்வு செய்யவோ முடியாது. இன்னொரு மொழி நமக்குத் தேவையானபோது நம்மை வந்தடையச் செய்யும். நமது தாய்மொழியைக் கைவிட்டுத்தான் இன்னொரு மொழியைக் கற்கவேண்டும் என்கின்ற எந்த அவசியமுமில்லை. ஆகவே எம்.எஸ்.எஸ்.பாண்டியன் இந்த்விடயத்தில் நமக்கு நல்லதொரு உதாரணமாய் வாழ்ந்துவிட்டுப் போயிருக்கின்றார்.

மேலும், ராஜன்குறையின் இந்தக் குறிப்பில் "உண்மையில் கல்விப்புலம் சாராது சிந்தனையாளர்களாகவும், ஆய்வாளர்களாகவும் இருப்பவர்கள்மீது அவர் மிகுந்த மரியாதையும், பிரியமும் கொண்டிருந்தார். அதை வெளிப்படுத்தாது பல சமயம் அத்தகையோரிடம் கறாராக பேசுவதாக காட்டிக்கொள்வார்; உண்மை என்னவென்பது அருகிலிருந்து தொடர்ந்து அவதானித்த என் போன்றோருக்கே தெரியும்" எனக் குறிப்பிடும்போது பாண்டியனை இன்னும் நெருக்கமாய் உணர்கின்றேன். பட்டம் பெற்று பல்கலைக்கழக வளாகத்தில் விரிவுரையாளராய் நுழைந்தவுடனேயே சுயம்புவாய்த் தோன்றிய மாற்கு மாஸ்ரரையும், அவரின் பாதிப்பில் உருவாகிய தனித்துவமான ஓவியர்களையும் நிராகரித்த ஓரு 'அறிவுசார் புலமையாளரையும்' எம்.எஸ்.எஸ்.பாண்டியனைச் சந்தித்த அதே தமிழியல் மாநாட்டிலேயே நானும் சந்தித்திருக்கின்றேன் என்பதால் பாண்டியன் பலருக்கு ஒரு முன்னுதாரணமாக இருந்திருக்கின்றார், இனியும் இருப்பார் என்பது இதமாயிருக்கின்றது.

-ருத்ரைய்யா

'அவள் அப்படித்தான்' திரைப்படம் நான் பிறப்பதற்கு முன்னரே வெளிவந்த படம். ஆனால் எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு பார்த்தபோதும் அவ்வளவு நெருக்கமாகவும் புதுமையாகவும் இருப்பது என்பதுதானே இன்னும் முக்கியமானது.

சில வருடங்களுக்கு முன் நணபரொருவரினூடு ஒரு தோழி அறிமுகமானார். அந்தத் தோழியோடு சிலதடவைகள் பொழுதைக் கழித்தபோதும், ஒருநாள் தற்செயலாய் அவரின் last name அறிந்தபின்னர், ஏதோ நினைவு வர, உங்கள் தந்தையின் பெயர் ருத்ரைய்யா என்றிருக்கின்றதே. நீங்கள் 'அவள் அப்படித்தான்' இயக்கிய ருத்ரைய்யாவின் மகளா என அவரிடம் சும்மா கேட்டேன். ஆனால் நிஜத்திலே அவர் ருத்ரைய்யாவின் மகள் என்றபோது எனக்கு வந்த பரவசத்தை விபரித்துவிட முடியாது. தன் தந்தையின் பெயரால் அறிமுகமாவதை விரும்பாததாலோ என்னவொ அவர் அப்படி அறிமுகப்படுத்திக் கொள்ளாவிட்டாலும், நானாக அவரைக் கண்டுபிடித்ததில் எனக்குச் சிறு பெருமிதம் அன்று இருந்திருந்தது. பிறகு என் நண்பர்களுக்கு எல்லாம் அதே பரவசத்துடன் இந்தத் தோழியை அறிமுகப்படுத்தினேன். அவரின் வீட்டிலும்/வெளியிலும் சென்று விருந்துண்பதிலிருந்து, ரொறண்டோ தமிழ் திரைப்பட விழாவிற்கு நடுவர்களாய் சேர்ந்து சிறந்த படங்களைத் தெரிவுசெயவதிலிருந்து, நாம் நடத்திய 'சுடருள் இருள்' நிகழ்வுகளிற்கு வருவது வரை என நெருக்கமாயிருந்தோம்..

அப்படி அவர் நெருக்கமாயிருந்தபோதும், அன்றையகாலங்களில் என்னுடன் நெருக்கமாயிருந்த நண்பரிடம் அவர் ருத்ரைய்யாவின் மகள் என்று அடிக்கடி பரவசப்பட்டபடி கதைத்துக்கொண்டிருப்பேன். நண்பரோ எத்தனைமுறைதான் இதையே திரும்பச் திரும்பச் சொல்லிக்கொண்டிருப்பாய் என அலுத்துக்கொள்ளுமளவிற்கு 'அவள் அப்படித்தான்' மீது மோகத்தில் இருக்கும் ஒருவன் நான்.

ருத்ரைய்யா தொடர்ந்து படங்கள் செய்வதற்கென சில திரைப்படக்கதைகளுடன் இருந்தார் என அவரின் மகள் சொல்லக் கேட்டிருக்கின்றேன். இப்போது சமயவேல் எழுதிய இந்தக் குறிப்பில் "அவள் அப்படித்தான்" வெற்றிக்குப் பிறகு அவரது எதிரிகள் அதிகரித்தார்கள். "சீரியஸ் சினிமா" தமிழில் வரக்கூடாது என்று ஒரு கூட்டம் தமிழ்த் திரையுலகில் அன்றிலிருந்து இன்று வரை அலைந்து கொண்டிருக்கிறது. அவரது அடுத்த படத்தைத் தொடங்க முடியாத சதிகாரர்கள் தீவிரமாக உழைத்தார்கள். அவரை இயங்கவிடாமல் முடக்கினார்கள்." என்பதில் உண்மை இருக்கத்தான் செய்கின்றது. இல்லாவிட்டால் ஏன் ருத்ரைய்யா தன் திரைப்படக் கதைகளை இறுதிவரைப் படமாய் எடுக்கமுடியாது தவிக்கவேண்டியிருந்தது.

ஒருவகையில் இது ருத்ரைய்யாவிற்கான இழப்பல்ல, நம்மைப் போன்ற திரைப்பட இரசிகர்களுக்கான இழப்பாய்த்தான் எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கின்றது. இவ்வாறு நல்ல படங்கள் வர அனுமதிக்கா தமிழ்த் திரைப்படச்சூழலைச் சபிப்பதைவிட வேறெதைத்தான் செய்யமுடியும்?

ஆனாலும் என்ன, ஈழத்து இலக்கியச் சூழல் குறித்து எழுதும்போதெல்லாம், 'தொடர்ச்சியாக எழுதுவதல்ல முக்கியம், குறைவாய் எழுதினாலும் நிறைவாய் எழுதினாலே, அந்தப் படைப்பாளிகளை நினைவில் என்றென்றைக்குமாய் வைத்திருக்கும் மரபொன்று எங்களுக்கு இருக்கின்றதென்று' அடிக்கடி நினைவுபடுத்தியிருக்கின்றேன். அவ்வாறே ருத்ரைய்யா இரண்டு படங்களோடு நிறுத்திக்கொண்டாலும், அவரை என்றும் நினைவு கொள்ள 'அவள் அப்படித்தான்' எங்களிடையே இருப்பாள்.

தந்தையின் இழப்பில் தவிக்கும் தோழிக்கு என் ஆறுதல்கள்.


காவியத்தலைவன்

கதையின் சில பாத்திரங்களின் சாயல்களை ஏற்கனவே தெரிந்ததாலோ என்னவோ ஏற்கனவே தெரிந்த கதையைப் பார்ப்பது போன்ற உணர்வே இருந்தது. இறுதிமுடிவைக் கூட இப்படித்தான் முடியும் என்று ஊகித்திருந்தேன். வசந்தபாலனும் ஜெயமோகனும் சேரும் படங்களென்றால் இப்படி மனதை அழ/அழுத்த வைப்பார்கள் என்பதால் அவ்வாறு நினைத்திருந்தேனோ தெரியவில்லை. நாசர் இருக்கும்வரை படம் சுவாரசியமாகப் போனது. 'இருவர்' படத்தின் அரசியல் பற்றி எவ்வளவோ பேசலாம் என்றாலும், அந்த 'இருவருக்கிடையிலான' பொறாமை/போட்டி என்பது வெகு இயல்பாய்க் காட்டப்பட்டிருப்பதாய் நினைவு. இங்கே இரு நடிகர்களுக்குள் தம்மை முன்னிறுத்த விரும்பும் விழைவுகளில் ஒருவரை மட்டும் வழமையான 'வில்லன்' பாத்திரத்திற்குள் அடக்கிவிடும்போது வழமையான 'நாயக-வில்லன்' பாத்திரங்களிற்குள் சிக்கிவிட்டதாய்த் தோன்றியது.

உண்மையில் ராஜபாட் பாத்திரம் ஏற்கக்கூடிய/ அல்லது அதை தன் லட்சியமாகக் கொள்ளும் ஒருவரை விலத்தி, குரு தன்னை அந்த வேசம் கட்டச்சொல்லும்போதே, அதை ஏற்கும் பாத்திரத்திற்கு அது குறித்த அற/மனப்போராட்டம் நிகழ்ந்திருக்கும். ஆசான் சொன்ன சொல்லைத் தட்டக்கூடாதென்று அவர் கூறியதை சிரமேற்கொண்டாலும், தன்னைச் சகோதரனாக (அல்லது தான் சகோதரனாக நினைக்கும்) பாத்திரம் குறித்தும் சற்றேனும் யோசித்திருக்குமல்லவா? ஆனால் படத்தில் எந்தக் காட்சிகளும் அவ்வாறு இல்லை.

ஜெயமோகன் இது குறித்து எழுதியதை வாசித்தபோது அது தெருக்கூத்திலிருந்து வரும் மிகையுணர்ச்சி நடிப்பு X யதார்த்த நடிப்பு என்கின்ற இரு வேறுபட்ட நடிப்பிலிருந்தே இவ்விரு முக்கிய பாத்திரங்களும் உருவாக்கப்பட்டன என்று அறிந்தாலும், படத்தில் அதை அவ்வாறு உணரும்படியாக காளியின் பாத்திரம் இல்லை. ஒரேயிடத்தில் மட்டும் 'கர்ணமோட்சம்' நிகழும்போது மட்டும், நாடகம் முடிந்தபின் ஒரு காட்சியாக அர்ஜூனனின் உள்ளக்கிடக்கை விரியும்போதே கொஞ்சம் தொட்டுச் செல்கின்றது.

ஜெயமோகனின் 'சம்பாஸணை'யில் 'அம்மா, வேண்டுமென்றால் உன்னை அம்மாவாக்கின்றேன்' என்று நொடிநேர கிளுகிளுப்பிற்காய் ஒரு பாத்திரம் பேசுவதைச் சகித்துக்கொள்ளலாம். ஆனால் ஒரு ஆணின் மீது எவ்வளவு மையலிருந்தாலும் 'உங்களின் குழந்தையிற்குத் தாயாவதே என் பாக்கியம்' என்றெல்லாம் அதி நாடகீயமான வசனமிருக்கும்போது, பெர்னாட் ஷாவிடம் ஒரு அழகி கேட்டார் என்ற ஒரு 'நகைச்சுவை'யே நினைவிற்கு வருகின்றது. அன்றையகாலத்தில் இப்படிப் பேசியிருக்கலாம் என்றாலும், இன்றையகாலத்திலாவது ஒரு ஆண்/பெண் மீதான காதல் என்பது இறுதியில் குழந்தை பெறுவதில்தான் இருக்கிறது என்பதையாவது மாற்றி யோசிக்கவேண்டாமா? அதைவிட சகிக்கமுடியாதது இலக்கியம் அறிந்த இவர்களே 'பொட்டை' போன்ற வசனங்களைச் சேர்த்திருப்பது.

வசந்தபாலனின் 'வெயில்' எனக்குப் பிடித்த படங்களில் ஒன்று. 'அங்காடித்தெரு' ஒரே அழுகையான/துயரம் தொடர்ச்சியாக சூழ்ந்துகொண்டிருப்பதை அளவுக்கதிகமாய் திகட்டத் திகட்டத் தந்த படமென எழுதியிருக்கின்றேன். 'அரவானை' அது திரைப்படமாக்கிய விதத்தை விட, அது 'காவல்கோட்டத்தோடு' எவ்வளவு ஒத்தியியைகிறது/விலகுகிறது எனப் பார்ப்பதே என்னளவில் சுவாரசியமாயிருந்ததெனக் கூறினேன். வரலாற்றுப் படங்களை எடுப்பது என்பது எவ்வளவு கடினமென்றும், அதற்கான அவ்வளவு 'வியாபாரச்சூழல்' இல்லையென்றபோதும் அந்த ஆபத்தான பாதையையே வசந்தபாலன் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பது நன்கு புரிந்தாலும், இவ்விரு படங்களிலும் பார்ப்பவர்களை உள்ளிழுக்கும் எதுவோ இல்லாமற்போகின்ற திரைக்கதை இருக்கின்றதை அவர் கண்டுகொள்ளவேண்டும்.

எனக்கு இப்படத்தில் பிடித்திருந்த விடயம் பெண் பாத்திரங்கள். இரு பெண் பாத்திரங்களும் மிக இயல்பாய்ச் செய்கின்றார்கள். மேலும் கதையின் போக்கிற்குத் துருத்தித்தெரியாது premarital sex ஐ இயல்பாய்க் கொண்டு சென்றிருக்கின்றார்கள். ஏற்கனவே ஒரு பெண்ணைக் காதலித்தவன்/ அவளோடு நெருங்கிப்பழகியவன் என்பதை நன்கறிந்தும், தன்னைத் தொடர்ந்து காதலிக்கும் இன்னொரு ஆணையும் உதாசீனம் செய்து, ஒரு பெருங்குடிகாரனை அவ்வளவு ஆழ்ந்து நேசிக்க ஒரு பெண்ணுக்கு நிச்சயம் பல்வேறு காரணங்கள் இருந்திருக்கும். அதனூடாக வேதிகாவின் பாத்திரத்தை செழுமைப்படுத்தியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்,

எவ்வளவோ அபத்தமான படங்கள் வரும்போது இவ்வளவு நுணுகிப் பார்க்கவேண்டுமா எனக் கேள்வி எழுதலும் இயல்பு. ஆனால் வசந்தபாலன் நிறைய வாசிப்பவராகவும், தமிழின் கவனிக்கத்தக்க எழுத்தாளர்களை தன் திரைப்படங்களில் பயன்படுத்திக் கொள்கின்றவராகவும் இருப்பதால் எதையாவது இன்னும் வித்தியாசமாக -பார்ப்பவர்களும்- எதிர்பார்ப்பதும் இயல்பே.

இவ்வாறு கூறுவதால் 'காவியத்தலைவன்' மோசமான படம் என்பதல்ல அர்த்தம். வசந்தபாலன் மீது இன்னும் நம்பிக்கை வைத்து எப்போது திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்த்து முதல்நாள் காட்சி பார்க்கும் ஒருவரின் எதிர்பார்ப்புக்களை அவ்வளவு நிறைவேற்றவில்லை எனவே கூறவருகின்றேன். மேலும் தம் படைப்புக்களினூடாக வீழ்ந்தும், எழுந்தும் செல்லாத கலைஞர்கள் என்றும் எவருமில்லை.

கோணங்கி

Friday, December 12, 2014

கோணங்கியிற்கு 'விளக்கு' விருது அறிவிக்கப்பட்டபோது கோணங்கி பற்றிய புதிய கட்டுரைகள் நிறைய வருமென எதிர்பார்த்தேன். 'விளக்கு' விருதிற்கென ஒரு அரசியல் இருந்தாலும், சிவரமணி எழுதியதுமாதிரி 'நிராகரிக்கப்பட முடியாதவள் நான்/இனியும் என்ன/தூக்கியெறியப்பட முடியாத கேள்வியாய்/நான்/பிரசன்னமாயுள்ளேன்' போல கோணங்கி தமிழில் தவிர்க்கமுடியாத ஆளுமை என்பதால் விளக்கு விருது கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று நான் புரிந்துகொள்கிறேன்.

ஜெயமோகன் நிறைய எழுதி, எத்தனையோ தீவிர வாசகர்கள் அவருக்கு இருந்தாலும், அவரின்  எழுத்து நடையின் பாதிப்பிலிருந்து எழுத வந்தவர்கள் என எவரையுமே அவ்வளவு எளிதில் சுட்டிக்காட்ட முடியாது. ஆனால் கோணங்கி எந்த வட்ட/சதுர வாசகர்களைக் கொண்டிராதபோதும், அவரின் பாதிப்பில் உருவாகி வந்த ஒரு புதிய தலைமுறையை எளிதாய் நாம் அடையாளங் கண்டு கொள்ள முடியும். உதாரணத்திற்கு கல்குதிரை இதழ்களை விரித்துவைத்து பார்த்துக்கொண்டிருந்தாலே இது எளிதாய் இன்னும் புரியும்.

கோணங்கியிற்கு விளக்கு விருது கிடைத்தபோது, அவரின் நண்பர்களிடமிருந்து மட்டுமில்லை, அவரை தம் முன்னோடியாக கொண்டவர்களிலிருந்தும் பல்வேறு தளங்களில் கோணங்கியை பற்றிய மறுவாசிப்பு நிகழுமென நினைத்திருந்தேன். ஆனால் அநேகமாய் எல்லோரும் வாழ்த்துக்களோடு மட்டும் நின்று எதையும் விரித்தெழுதாது கோணங்கியை அவர்போக்கில்  தனித்து அலைய விட்டுவிட்டனர். நாம் நமக்கு பிடித்த படைப்பாளியொருவரை பல்வேறு விதமாய் வாசிப்புச் செய்தும், தொடர்ந்து அறிமுகம் செய்தபடி இருப்பதும் அவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றியாக இருக்கும். கோணங்கியைப் போன்ற சித்தன்போக்கில் அலைபவர்கள் இதைத் தனிப்பட விரும்பமாட்டார்கள் என்றாலும் புதிதாய் வாசிக்க வருபவர்களுக்கு மட்டுமில்லை, தமிழ் இலக்கியச் சூழலில் 'மும்மூர்த்திகளின் தளங்களுக்கு' மாற்றாக கோணங்கியை முன்வைக்கும் அவசியமும் இருக்கின்றது.

உண்மையில் இன்னமும் கோணங்கியின் பெருநாவல்கள் ('பாழி', 'பிதிரா', 'த') எதனுள்ளும் என்னால் நுழையமுடியாதிருக்கின்றது. கோணங்கியிற்கு விருது கிடைத்த செய்தி கேள்விப்பட்டபோது, எப்படியென்றாலும் கஷ்டப்பட்டு தினம் 10 பக்கங்களாவது 'பாழி'யில் இருந்து வாசிக்கத் தொடங்குவோம் என நினைத்திருக்கின்றேன். ஆனால் இன்றையகால என மனச்சூழலில் எளிய வாசிப்புக்களையே தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பதால் அதைத் தொடர முடியாது இருக்கின்றது. ஆனால் கோணங்கியின் நாவல்களை வாசித்தவர்கள் அவை குறித்து எழுதலாம்; எப்படி அந்த நாவல்களிற்குள் நுழைவது என்ற மாயப்பாதையின் வரைபடத்தை மேலோட்டமாய் வரைந்தும் காட்டலாம்.

ந்த எழுத்தாளரும் தன் படைப்பு விளங்கிக்கொள்ளப்படக்கூடாது என்று நினைத்து எழுதுவதில்லை. கோணங்கியே ஓரிடத்தில் 'எனக்கு முன்பு எழுதிய மொழியில் தொடர்ந்து எழுதுவது சலிப்பாய் இருந்தது. எனவே புதிய மொழியைத் தேடவேண்டியது அவசியம் இருந்தது' என கூறியிருக்கின்றார். நாம் பதின்மங்களில் இருக்கும்போது ஒருவகையான எழுத்து மொழியை வைத்திருப்போம். இப்போது அதே மொழியில் எழுதிவிடமுடியாது. அப்படி எழுதினால் கூட அதை வாசித்துப் பார்க்கும்போது நமக்கே கூச்சம் வரும். அவ்வாறான ஒரு நிலையைத்தான் கோணங்கி தன் பழைய நடையில் பார்க்கின்றார் போலும்.

கோணங்கியிற்கு விருது கிடைத்த மகிழ்ச்சியில், அவரின் படைப்பு(நாவல்) பற்றி இணையத்தில் தேடியபோது கிடைத்தது பிரம்மராஜன் எழுதிய எதிர்மறையான இந்த விமர்சனம்:  விமர்சனம் எப்படியிருந்தாலும் அது ஒருவகையில் வாசிப்பவரைப் பாதித்திருக்கின்றது என்றும், எதிர்மறையாக இருந்தால் கூட அந்த படைப்பாளியின் மீதிருக்கும் நம்பிக்கையினால்தான் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது என உறுதியாக நம்புகின்ற ஒருவன் நான். சிலவேளை ஒரு எதிர்மறையான விமர்சனம் கூட அந்தப் படைப்பு அவ்வளவு மோசமானதா எனத் தேடவைத்து உங்களை ஈர்க்கக்கூட வைக்கும். உதாரணத்திற்கு 'காவல் கோட்டம்' வந்தபோது எஸ்.ராமகிருஷ்ணன் மிக எதிர்மறையான விமர்சனத்தை அதற்கு வைத்திருந்தார். எஸ்.ராவின் விமர்சனத்தை வாசித்தபோது, எவரையும் அவ்வளவு சீண்டிப்பார்க்காதவராயிற்றே, இவ்வளவு பொங்கி எழுதுகின்றாரே அந்த நாவல் அவ்வளவு மோசமானதா என்ற குறுகுறுப்புடன் 'காவல்கோட்டத்தை' வாசிக்கத் தொடங்கினேன். அதிசயமாய் எனக்கு அந்த நாவல் மிகப் பிடித்துப் போனது. ஆக ஒரு விமர்சனம் கடுமையாக இருந்தால் கூட சிலவேளைகளில் நம்மைக் கவரவும் கூடும் என்பதற்கு இது ஒரு சான்று.

பிரம்மராஜனின் இந்த விமர்சனத்தை ஏற்கனவே சிலதடவைகள் வாசித்தபோதும்,  இப்போது மீண்டும் வாசிக்கின்றபோது கூட எனக்கு கோணங்கி விலகிப்போன ஒருவராக இருக்கவில்லை. நான் கோணங்கியின் நாவல்களை முழுமையாய் வாசிக்கும்போது சிலவேளைகளில் இந்த எதிர்மறை விமர்சனத்திற்கு -காவல்கோட்டத்திற்கு நிகழ்ந்தது போல- நன்றி சொல்லக்கூடியவனாகக் கூட மாறிவிடவும் கூடும்.

கோணங்கி பற்றிய இன்னொரு கட்டுரை, பவா செல்லத்துரை எழுதிய 'கோணங்கி பெண் பார்க்கப்போன கதைகள்': . இதையும் முன்னர் வாசித்ததாக நினைவு.  ஆனால் எப்போது வாசித்தாலும் அதிலிருக்கும் நகைச்சுவையிற்கு அப்பால் மனம் நெகிழ்ந்து போகின்றவனாக ஆகிவிடுகின்றேன். கோணங்கி தன்னை வாசித்த ஒரு பெண்ணிடம் காதல் கொள்கின்ற சந்தர்ப்பத்தில் என்னை நான் அங்கே கண்டுகொண்டேன். இந்நிகழ்வு நடந்து அடுத்த நாள் விடிகாலையில் எவரும் அறியாமல் நகர் நீங்கிப் போய்விடுகின்ற கோணங்கியை நான் பின் தொடர விரும்பினேன்.  அவரின் கரங்களைப் பற்றி காதல் பிரிவோ, ஒரு நிரந்திர உத்தியோகம் இல்லை என்பதோ தனிமையையோ துயரத்தையோ தரக்கூடியதாக இருக்கலாம். இவற்றோடு சமரசம் செய்துகொண்ட எத்தனையோ பேர்கள் இருக்கின்றார்கள். நீங்கள் இவற்றையெல்லாம் உதறித்தள்ளிவிட்டு அலைந்துகொண்டிருப்பதால்தானே இன்னுமின்னும் எங்களை வசீகரித்துக்கொண்டிருக்கின்றீர்கள். வழிகாட்டியாக நீங்கள் முன்னே போய்க்கொண்டிருந்தாலும் உங்களைப் பின் தொடர முடியா அவலத்துடன் கண்ணிற்குத்தெரியாக் கண்ணிகளை அறுத்தெறிய முடியாது நாம் போராடிக்கொண்டிருக்கின்றோம்' எனக் கூற வேண்டும் என நினைத்துக்கொள்வேன்.

கோணங்கியின் இயற்பெயரும் சிலப்பதிகாரத்தை எழுதியவரின் பெயரும் ஒன்றே. முன்னவர் துறவியாக அலைந்ததைப் போல கோணங்கியும் தனது பயணத்தைத் தொடர்கின்றவர். அவரின் தனிமையான பயணங்களை நாம் பின் தொடராதபோதும் எம்முடைய அன்பும் வாழ்த்தும் அவரை என்றும் அரவணைத்தபடி இருக்கும்,

ஈழத்துச் சூழலில் மிக முக்கியமானவரான ஏ.ஜே கனகரட்ண தன்னைப் பற்றிய பாராட்டுவிழா(?) நடந்தபோது அந்த இடத்திற்கே காலடி எடுத்துவைக்கவே கூச்சப்பட்டு போகாமலே இருந்தவர். அவரைப் பற்றிய சிறப்பிதழ்  புலம்பெயர் இதழொன்றினால் வெளியிடப்பட்டு அவரின் கையில் கொடுக்கப்பட்டபோது கூட  தூக்கியெங்கோ ஓரத்தில் வீசியெறிந்தவர். அந்தளவிற்கு தன் மீதான ஒளிவட்டத்தை வெறுத்தவர். இன்றையகாலத்தில் எல்லோருமே தம்மைத்தாமே விளம்பரப்படுத்திக்கொண்டிருக்கின்ற சூழலில்,  ஏஜேயைப் போல தன்னை முன்வைக்க கூச்சம் மட்டுமின்றி அதுகுறித்து சிறிதும் அக்கறையில்லாத கோணங்கி போன்றவர்களைப் பார்ப்பதே மிக அரிது. அவ்வாறான ஒருவரை முன்னோடியாய்க் கொள்வதில் எப்போதும் எனக்கு மகிழ்ச்சியே.

(Oct 17, 2014)

வர்ணங்களை உதிர்க்கும் வண்ணத்துப்பூச்சிகள்

Monday, December 08, 2014

-சுகுமாரனின் 'வெல்லிங்டன்' குறித்த வாசிப்பனுபவம்-

ரு ஊரைக் கடந்து போகையில் நாம் அதனை நினைவுகொள்ள எத்தனையோ விடயங்கள் இருக்கலாம். ஆனால் நாம் பார்க்காத, கடக்காத ஓர் இடத்தை நெருக்கமாக உணர சிலவேளைகளில் ஒரு புத்தகமே போதுமாயிருக்கும். அவ்வாறு நாம் விலகியோ/விலத்தியோ போக முடியாதவளவிற்கு 'வெல்லிங்டன்' என்கின்ற தான் சிறுவயதுகளில் வசித்த ஊரை இந்தப் புதினத்தில் மிக நுட்பமாகக் கட்டியெழுப்பியிருக்கின்றார் சுகுமாரன். சிறுவர்கள் வயதுக்கு வரும் நாவல்களிற்கு சாலிஞ்சரின் "Catcher in the Rye'ல் இருந்து அண்மையில் வெளிவந்த மைக்கல் ஒண்டாச்சியின் 'Cat's Table' வரை நிறைய உதாரணங்களைக் காட்ட முடியும். வெல்லிங்டன் உருவாகிய வரலாற்றை ஆங்கிலேயரின் குறிப்புக்களிலிருந்து தொடங்கி, அங்கே விஸ்தரிக்கப்படுகின்ற இராணுவ முகாங்களால் எவ்வாறு மக்கள் வெளியேற்றப்படுகின்றார்கள் என்பதையும், காடுகளும் மலைகளும் அழிக்கப்பட்டுக்கொண்டிருப்பதையும் சிறுவன் பாபுவின் பார்வையினூடு வெளிக்கொணரப்படுகின்றது.

மனிதர்கள் எங்கு போனாலும் 'மனிதர்களாகவே' இருக்கின்றார்கள். அன்பாய் வாழப் பிரியப்படுகின்றார்கள், பிடித்த யாரோடோ ஓடிப்போகின்றார்கள், பிறன்மனை தேடி அலைகின்றார்கள், சிறுவர்கள் மீது வன்முறை செலுத்துகின்றார்கள், மற்றவர்களுக்குக் கிடைப்பது தங்களுக்கு வாய்க்கவில்லையென பொறாமைப்படுகின்றார்கள், காதலுக்குத் துரோகம் செய்கின்றார்கள், துயரத்தின் மிகுதியின் வாழமுடியாது தற்கொலை செய்யவும் துணிகின்றார்கள். நாவலை வாசித்து முடிக்கும்போது நீங்களும் வெலிங்டனுக்குள், இன்னும் வாழ்ந்திருக்கலாமே என்று ஒரு பாத்திரமாக நிச்சயம் மாறியிருப்பீர்கள். சரஸ்வதி ரீச்சர் ஊரை விட்டு முற்றுமுழுதாக விலகும்போது ஏன் கண்கள் ஈரமாயின என்பதற்கு இப்போதும் சரியான காரணத்தைச் சொல்லத் தெரியவில்லை. பாபுவிற்கு பிரியமான, காமத்தின் முதல் அரும்பை கிளர்த்திய சக்குக்காவைப் போல, யாரேனும் ஒருவரைத் தாண்டாது நம்மில் அநேகர் வந்திருக்கவே முடியாது.

இந்த நாவலைப் போலவே, இந்த நாவல் எழுதியது பற்றி சுகுமாரன் எழுதிய பின்னுரையும் முக்கியமானது. நாவலை எழுதத் தொடங்கிய காலம்,  ஆரம்ப காலத்தில் எழுதியவை பிடிக்காமல் போனது, நாவலிற்கான மொழி கைவராமல் ஒரு தற்கொலையிற்கான மனதைப் போல சோர்ந்து நின்றது, பிறகு எழுதியதை நிறைய வெட்டியெறிந்துவிட்டு வேறொரு திசையில் எழுதிப்போனது, நாவலிற்கு ஆதாரமாய் வாசித்த நூற்கள், ஒருகட்டத்தில் நாவலை அதன்போக்கிலே போகவிட்டு, அதனைப் பின் தொடர்ந்து போனது என்று எழுதுகின்ற சுகுமாரனின் குறிப்புகள், நாவல்கள் எழுதப் பிரியப்படும் எந்த ஒருவருக்கும் மிகவும் பயன்படக்கூடியவை.

சுகுமாரன் பாபுவினூடாக முன்வைக்கும் அக்காக்கள் பலரின் வாழ்க்கை, எனக்கும் நெருக்கமானது. சிறுவன்களுக்கும் அக்காக்களுக்கும் உறவை, சிலவேளைகளில் அம்மாக்களால் கூட அறிந்து கொள்ளவோ/ விளங்கிக்கொள்ளவோ முடியாத அந்தரங்கங்களை உடையது. அக்காக்கள் காட்டும் அல்லது அவர்களின் பார்வையினூடு விரியும் ஒரு உலகைக் காணும் சிறுவன்கள் ஏதோ ஒருவகையில் வித்தியாசமான பருவத்தை பதினமங்களில் அடைகின்றார்கள். ஊரில் இருந்தபோது மட்டுமின்றி பிறகு இடம்பெயர்ந்து அலைந்தபோதும் நான் வெவ்வேறான அக்காக்களில் அரவணைப்பிற்குள்ளே இருந்திருக்கின்றேன். பதினமங்களை அடைந்தபோது, என் வயதொத்த பெண்களை விட, அக்காக்கள் போன்ற அனுபவங்களுள்ள பெண்களைத் தேடியே அலைந்திருக்கின்றேன், அது ஏனென்று நினைக்கும்போது சற்று வியப்பே வருகின்றது.

வெல்லிங்டனை வாசிக்கும்போது அந்த நிலப்பரப்பிற்குள் நம்மை அழைத்துச் செல்கிறது. அதன்பிறகு நாமும் ஒரு சாட்சியாக மாறும்போது நம்மால் நாவலின் பலத்தைப் பாராட்ட மட்டுமில்லை, பலவீனங்களைக் கூட புரிந்து ஏற்றுக்கொள்ள முடிகின்றது. நம்மை அதன் நிலப்பரப்பிற்குள்/பின்னணியிற்குள் அழைத்துச் செல்லாத நாவல் எத்தகைய சிறப்பாக இருந்தாலும், நாம் அதற்கு அந்நியராகிப் போய் முற்றுமுழுதாக அதனோடு ஒட்டிக்கொள்ள முடியாது போய்விடுகிறது. ஏன் வெலிங்டனோ, பூனையின் மேசையோ, சடங்கோ, காடோ, யாமமோ எனக்கு மிக நெருக்கமாய் இருக்கிறதென்று யோசிக்கும்போது, அவை தமக்கான நிலப்பரப்பை வாசிப்பவரிடையே ஆழமாய் உள்ளிறக்கியவை என்பது ஒரு முக்கிய காரணமென நினைக்கின்றேன்

நிறைய நண்பர்களோடு அலையும் பாபு, நண்பர்கள் ஒவ்வொருவராய் ஊர் விட்டு நீங்கி வேறு நகர்களுக்குப் போகின்றபோது, தனிமையில் உளைந்தலைகின்றார். பின்னர் தனிமையை தனக்குப் பிடித்தமான ஒன்றாக ஆக்கி, நெருக்கமும் கொள்கின்றார். அவ்வாறு பழக்கப்படுத்திக்கொண்டதாலேயே சரஸ்வதி ரீச்சர் ஊர் நீங்கிப் போகும்போதோ, கெளரி அக்கா வேலை நிமித்தம் செல்லும்போதோ துயரத்துடன் அந்நிகழ்வுகள் தரும் வெறுமையைத் தாங்கிக்கொள்ள முடிகின்றது. இவ்வாறு அனுபவங்கள் நமக்கு பல பாடங்களைக் கற்பிக்கும்போது, நாம் அவற்றைக் கடக்கையில் வளர்ந்த மனிதர்களாக ஆகிவிடுகின்றோம் அல்லவா?  இதை மிக நேர்த்தியாக சுகுமாரன் இந்நாவலில் கொண்டு வருகின்றார். இங்கேதான் சிறுவனான பாபு, வளர்ந்தவனாகி விடுகின்றான் என்பதையும் வாசிக்கும் நாங்கள் கண்டுகொள்கின்றோம்.

சுகுமாரன் இந்த நாவலெழுதிய வரலாற்றைச் சொல்லும்போது, மார்க்வெஸின் 'தனிமையின் நூறு ஆண்டுகள்' பாதிப்பு இதில் தன்னையறியாமலே வந்திருக்கின்றது எனச் சொல்லி மார்க்வெஸின் நாவலில் ஒரு பாத்திரம் அறிமுகமாகும்போதெல்லாம் மஞ்சள்நிற வண்ணத்துப்பூச்சி பறக்கின்றமாதிரி, தனது நாவலில் வரும் பாத்திரமான மம்மது வரும்போதும் வண்ணத்துப்பூச்சிகள் பறக்கின்றன என்கின்றார். ஒருநாள் மாலையில் வெலிங்டனை வாசித்துக்கொண்டிருந்தபோது, நாவல் மீதான பித்தத்தில் நள்ளிரவு தாண்டி இரவுணவைக் கூட சாப்பிடாது தொடர்ந்து வாசித்து முடித்தபோது, இடையில் என்னறைக்குள் ஒரு வெள்ளை நிற வண்ணத்துப்பூச்சி வந்து பறந்துகொண்டிருந்தது தற்செயலானது என்றாலும் மறக்கமுடியாத தருணந்தான் அதுவும்.

ஒரு கவிஞராக அறிமுகமாகி, தனது 50களில் முதல் நாவலென்றாலும் முக்கியமான புனைவை எழுதிய சுகுமாரன், நாம் எழுத விரும்பும் கதையை எப்போதேனும் எழுதிவிட முடியும் என்று நம்பிக்கை தந்திருக்கின்றார். இந்தக் கணத்தில் என்னோடு நாவல் வாசிப்பில் கூடவே பறந்த வண்ணத்துப்பூச்சியிடம் சுகுமாரனிற்கான என் கதகதப்பான நேசத்தை நன்றியுடன் அனுப்பிவைக்கின்றேன்.

(நன்றி: 'காலம்' - இதழ் 45)

பூவசரம்பூ குறிப்புகள்

Friday, December 05, 2014

Birdman

Alejandro González Inárritu இம்முறையும் ஏமாற்றவில்லை. இது Amores Perros, 21 grams, Babel வகைப் படமல்ல. Biutifull வகையிற்கு ஒரளவு அருகில் வரக்கூடிய படம். ஆனால் Biutiful அதிக மனவழுத்ததிற்கு கொண்டுபோகும், மகிழ்ச்சியிற்கான சிறு இடத்தையும் தராத படம். Birdman சிரித்துப் பார்க்கக்கூடிய படம். எனினும் அதற்குப் பின்னால் இருக்கும் துயரத்தையும் மனவழுத்தத்தையும் நேர்த்தியாய்க் கொண்டுவருகின்றது.

ஒருகாலத்தில் super hero படங்களில் நடித்து, புகழ் மங்கிய காலத்தில் Broadwayயிற்கு வருகின்ற ஒரு முன்னாள் திரைப்பட நடிகரின் கதை. நாடக மேடையிற்காய் அவர் ரேமண்ட் கார்வரின் 'What We Talk About When We Talk About Love' கதையை எடுத்து இயக்கவும் நடிக்கவும் செய்கிறார். மனைவியைப் பிரிந்தவர்; மகள் rehab லிருந்து திரும்பி வருகின்றார்; மேலும் இவரின் நாடகத்திற்குள் தற்செயலாய் நுழையும் இன்னொரு நபர் அதற்கான எல்லாப் புகழையும் எடுத்துக்கொள்கிறார் என அனைத்தையும் அந்தரமாய் எதிர்கொள்ளவேண்டிய ஒருவரின் வாழ்க்கையைப் பின் தொடரும் திரைப்படம். இசையும், ஒளிப்பதிவும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது. எந்த வகையில் கமராக் கோணங்கள் வைக்கப்பட்டிருக்கிறது என்பதை நாமறியாமலே வெவ்வேறு சூழலிற்கு காட்சிகளுக்கு நகர்த்தப்படுவது ஒருவகையான வித்தைதான்.

வணிகச் சினிமாவையும், மில்லியன்கணக்கில் லாபம் ஈட்டும் super hero திரைப்படங்களையும் இது ஒருவகையில் கேலி செய்கின்றது. அது மட்டுமின்றி இன்றைய நவீன தொழில்நுட்ப ஃபேஸ்புக், ட்வீற்றர் போன்றவற்றைத் தெரியாத/அணுகாத ஒரு சமூகத்திற்கு இனியான எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதையும், பிறகு ஒரு தற்செயலான -முட்டாள்சம்பவத்தினால்- எப்படி இந்த நடிகர் சமூக ஊடகங்களில் பிரபல்யம் ஆகின்றார் என்பதையும் அதற்கேயுரிய அபத்தங்களுடன் நம்முன்னே வைக்கப்படுகின்றது.

யதார்த்த்தை மீறிய இலத்தீன் அமெரிக்கர்களைப் பாதிப்புச் செய்யும் மாய யதார்த்தமும் இந்தப் படத்தில் கலந்திருக்கின்றது. ஆகவேதான் தற்கொலை என நாம் நினைப்பதைச் சடுதியாய் மாற்றி பறப்பதாய்க் காட்டமுடிகின்றது. இறுதிக்காட்சியில் கூட என்ன நடந்திருக்குமென நமக்குக் காட்டாது 'பறவைமனிதனின்' மகள் எதையோ பார்த்துப் புன்னகைப்பது கூட ஒரு முடிவுறாத சிறுகதை போன்று நம்மை இன்னுமின்னும் அத்திரைப்படத்தைப் பற்றிச் சிந்திக்க வைக்கின்ற புள்ளியே.


The Tiger Vanquished (LTTE's story)

எம்.ஆர். நாராயண் சுவாமியின் The Tiger Vanquished நூலை வாசித்துக்கொண்டிருக்கின்றேன். நாராயண் சுவாமி நல்லாய்க் கதை சொல்லக்கூடியவர் என நினைக்கின்றேன், ஏதோ எல்லாவற்றையும் அருகிலிருந்து பார்த்தமாதிரி, என்னவெல்லாம் நடந்திருக்கும் என்பதைக் கூறும்போது அப்படி நினைக்காமல் வேறெப்படி நினைக்க முடியும். இப்படி 'நன்றாகக் கதை' சொல்லக்கூடிய இன்னொருவர் டி.பி.எஸ்.ஜெயராஜ். தனக்கு கிடைத்த 'சோஸ்களை'க் கூட ஒழுங்காய்த் தராது டிபிஎஸும் அருகிலிருந்து பார்த்தமாதிரி எழுதுவார். அதனால்தான் நிறையப் பேர் சுவாரசியமாக இவர்களை வாசிக்கின்றார்கள் என்பது வேறுவிடயம். டிபிஎஸின் அநேக கட்டுரைகளில் விபரிக்கப்படும் பல சம்பவங்களை ஏற்கனவே வேறு யாராவது எழுதியிருப்பதைப் பார்த்திருக்கின்றேன். ஆனால் டிபிஎஸ் அதைப் பற்றிய எல்லாம் கவலைப்படாது ஏதோ தனக்கு மட்டுமே கிடைத்த தகவல் என்கின்றமாதிரி எழுதிக்கொண்டு போவார்.

எம்.ஆர்.நாராயண் சுவாமி ஒரு பத்திரிகையாளர் என்றாலும், அவர் றோவோடு நெருங்கிய தொடர்புள்ள ஒருவராக இருக்கலாம் என்பதற்கான புள்ளிகளையும் இதில் அவரையறியாமலே தருகின்றார். இந்தியாவில் நிறையப் பத்திரிகையாளர்கள் இப்படி இருக்கின்றார்கள் அல்லது பின்னால் றோவால் உள்வாங்கப்படுகின்றார்கள் என்பதும் அவ்வளவு பரம இரகசியம் அல்ல.

ஈழப் போராட்டம் குறித்து புனைவுகள் எழுதப்படவேண்டும்; அதையெவரும் மறுக்கப்போவதுமில்லை. அதேபோலவே வரலாற்றுத் தரவுகளோடு ஆய்வுரீதியான கட்டுரைகளும் இன்னும் அவசியமாய்த் தேவைப்படுகின்றன. இல்லாவிட்டால் மீண்டும் ஒரே வட்டத்திற்குள் நுழைந்துவிடும் அபாயம் ஈழம் சார்ந்து இன்னமும் இருக்கின்றது. புலிகளை ஒரு 'தீவிரவாத இயக்கமாய்' கட்டமைத்து நாராயண் சுவாமி எழுதுவதில் பிரச்சினையில்லை. ஆனால் புலிகள் அவ்வாறு ஆக்கப்பட்டுவிட்டால் இந்திய இராணுவமோ அல்லது இலங்கை இராணுவமோ 'நல்லவர்களாக/தியாகிகளாக' மறுஜென்மம் எடுத்துவிடுவார்கள் என்று நாராயண் சுவாமி போன்றவர்கள் நம்புவதை நினைக்கத்தான் சற்று வியப்பாய் இருக்கிறது.

நாராயண் சுவாமியிற்கு இந்திய/இலங்கை அரசுக்களின் மீது அபரிதமான அன்பிருந்தால் கூட சிலவேளைகளில் உண்மையைக் கூறிவிடுகின்றார். புலிகளுக்கும் - இலங்கை அரசுக்கும் இடையிலான (நோர்வே) சமாதானப் பேச்சுக்களை முதலில் ஆரம்பித்ததே இந்தியாவின் றோதான் என்ற முக்கிய உண்மையை இந்த நூலில் குறிப்பிடுகின்றார்,. ஒரு நாட்டிற்குள் நடக்கும் உள்நாட்டுப் பிரச்சினையைத் தீர்ப்பது என்றால் அல்லது சமாதானத்தைக் கொண்டுவருவது என்றால் ஒரு அரசல்லாவா தன்னை வெளிப்படையாக முன்வைத்து வெளிவரவேண்டும். ஆனால் ஒரு நாட்டின் உளவுப்பிரிவான றோதான் உள்ளே இருந்து சமாதான நடவடிக்கையைத் தொடங்குகின்றனர் என்றால் நாம் யோசிக்கவேண்டும் அல்லவா? மேலும் அன்றைய காலகட்டத்தில் புலிகள் இலங்கை இராணுவத்தினருக்கு நிகரான அமைப்பாக போர்க்களங்களில் தம்மை நிலைநிறுத்திக் கொண்டிருந்த காலமும் கூட என்பதைக் கவனித்தாக வேண்டும்.

அதுமட்டுமில்லாது, சந்திரிக்கா அரசாங்கம் புலிகள் மீது தாம் சார்பாக இருக்கக்கூடும் என்று நினைக்கக்கூடும் என்பதால், றோ அதேகாலகட்டத்தில் இலங்கை அதிரடிப்படையினரை அழைத்து இந்தியாவில் பயிற்சி கொடுத்திருக்கின்றனர் என்பதையும் நாராயண சுவாமி குறிப்பிடுகின்றார்.

ஆக றோ(இந்தியா) ஒருகாலத்தில் தன் இயல்பில் தொடங்கிய தமிழ் போராட்டக் குழுக்களை இந்தியாவிற்கு அழைத்து பயிற்சியும், ஆயுதங்களும் கொடுத்து, இலங்கையிற்குப் போய் மற்றவர்களையும் அழியுங்கள் உங்களையும் அழியுங்கள் எனக் கற்றுக்கொடுத்தனர். பிறகு சமாதானக் காலத்திலும், சிங்களவர்க்கு ஆயுதப் பயிற்சி கொடுத்து, இப்போது சமாதான காலம் என்றாலும் விரைவில் உங்களுக்கு நாங்கள் வேறொரு வேலை தருகின்றோம் எனச் சொல்லிக் கொடுத்திருக்கின்றார்கள் போலும்.

ஈழப்போராட்டத்தின் இறுதிக்கட்டங்களில் மட்டுமல்ல, ஜேவிபி கிளர்ச்சிகளின்போதெல்லாம் இலங்கை அரசுக்கு இந்திய அரசு உதவிய கடந்தகாலங்கள் எல்லாம் உண்டல்லவா?

இதையெல்லாம் நாராயண் சுவாமி போன்றவர்கள் விவரித்து எழுதமாட்டார்கள். அதற்கு அவர்களின் 'பத்திரிகா தர்மம்' மட்டும் அல்ல, இந்தியத் தேசியப் பெருமிதமும் கைகொடுக்காது என்பதே உண்மை.


சிலநாட்களுக்கு முன்னர் தோழியொருவருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது ராஜம் கிருஷ்ணனின் மரணத்தைப் பற்றிய பேச்சு வந்தது. ராஜம் கிருஷ்ணனின் இறுதிக்காலத் தனிமையையும், வேதனையையும் போலத்தான் நமக்கும் நிகழ்ந்துவிடுமா எனக் கதைத்துக்கொண்டிருந்தோம். தனிமையிலே கழியக்கூடிய சாத்தியமுள்ள நம்முடைய முதுமையில் யார் வந்து நம்மைப் பார்ப்பார்கள் என்று கூறிவிட்டு தோழி, தன் சகோதரிகளின் குழந்தைகள் வந்து பார்க்ககூடும் என்றார். நானும் இப்போது என்னோடு நெருக்கமாய் இருக்கின்ற அண்ணாக்களின் பிள்ளைகள் வந்து பார்க்கக்கூடுமென நினைத்துக்கொண்டேன். ஆனால் அவர்கள் இங்குள்ள கலாசாரத்திற்குள் பிறந்து வளர்ந்ததால் இப்படி எதிர்ப்பார்ப்பது கூட சரியானதோ தெரியவில்லை என அந்தத் தோழியிடம் கூறினேன்.

இப்போது அம்பை, சு.கிருஷ்ணமூர்த்தியின் மறைவைப் பற்றி 'அஞ்சலி: பாதையின் முடிவு' எழுதியிருப்பதை வாசித்தேன். அதில் "குடும்பம் இல்லாத எழுத்தாளர்கள், குடும்பத்திலிருந்து வெளியே வந்தவர்கள், முதுமையிலும் உற்சாகமாக இயங்கிக்கொண்டிருப்பவர்கள், நோயுற்ற எழுத்தாளர்கள் இவர்கள் தங்கக்கூடிய ஆரோக்கியமான சூழல் உடைய இடம் ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. வெளிநாட்டுக் கலைஞர் ஒருவரை ஒருமுறை சந்தித்தபோது கலைஞரான அவர், அன்னையைக் கலைஞர்களுக்கான ஓர் இல்லத்தில் சேர்த்திருப்பதாகக் கூறினார். ஓவியர்கள், பாடகர்கள், நடனக் கலைஞர்கள், எழுத்தாளர்கள் என்று பலரும் இருக்கும் இல்லம் அது என்றார். அப்போது அந்தமாதிரி ஓர் இல்லம் இங்கு அமைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. முதுமையைக் கழிப்பதற்கான இல்லம் இல்லை. முதுமையை அனுபவிக்கும் இல்லம்; முதுமையைக் கொண்டாடும் இல்லம். இளவயதினர் வந்துபோகும் இல்லம். "
 பற்றி எழுதியிருப்பார். ஆகக்குறைந்தது என்னைப் போன்றவர்கள் முதுமையிற்குள் நகருவதற்குள்- அமைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

ஆனால் இது குறித்து சுந்தர ராமசாமி அம்பையிடம் கேட்ட கேள்வியும் நான் தொடர்ந்து சொல்லிவருவதுதான். எனக்கும் எழுதுவது பிடிக்கும். பிற எல்லாவற்றையும் விட இதில் ஈடுபடும்போது மிகுந்த அமைதி அடைகின்றதும் உண்மையே ஆனால் அதற்காய் எழுத்தைச் சிறப்புச் சலுகையாக்குவதை அல்லது அவ்வாறு ஆக்குபவர்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடிவதில்லை. ("சுராவிடம் ஒருமுறை இதுபற்றிப் பேசியபோது, எழுத்தாளர்கள் எந்த வகையில் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் இத்தகைய சிறப்புச் சலுகைகள் பெற என்ற கேள்வியை எழுப்பினார். அது சரியான கேள்விதான். எழுதுவது என்பது எந்த வகையிலும் தனிச் சிறப்பு உள்ள ஒன்றில்லைதான். ")

இங்கும் நம்மிடையே இருக்கும் நண்பர் ஒருவரும் அடிக்கடி கம்யூன் தொடங்குவது குறித்து பேசிக்கொண்டிருப்பார். அம்பை விரும்புவதைப் போல எழுத்தாளர்களுக்கென ஒரு இல்லம் அமைக்காதுவிட்டால் கூட, நான் முதுமையடைவதற்குள் நமக்குப் பிடித்தமாதிரி ஒரு கம்யூனாவது இருந்தால் எவ்வளவு நிம்மதியாயிருக்கும்.


சென்ற வாரம் முன்பு படித்த ஒரு பாடசாலையின் நிகழ்விற்குச் சென்றிருந்தேன். கனடா வந்த புதிதில் அடிக்கடி அங்கே முகத்தைக் காட்டிக்கொண்டிருந்தாலும், பின்னர் எல்லா 'அமைப்பு'க்களிற்கும் இருக்கும் அதிகாரப் போட்டியில் இங்குமிருப்பதைப் பார்த்து வெறுத்துப்போய், 'ஞானம் பிறக்க புத்தனுக்கு ஒரு போதிமரம் போதும்/ இந்த வயசுப்போனதுகள் தெளிய/ எத்தனை போதிமரங்கள் தேவை' என எழுதிக்கொடுத்திருந்தேன். என்னதான் இருந்தாலும் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளும் பண்பு இருப்பதால், அதையும் அன்றைய ஆண்டு மலரில் பிரசுரித்திருந்தார்கள்.

அமைப்பாய் இல்லாதபோது, தனிப்பட்டு பலர் நல்ல நண்பர்களாகவே இருக்கின்றார்கள். எப்போதாவது அவர்கள் அழைக்கும்போது கலைவிழா நிகழ்வுகளுக்குப் போவதுண்டு. ஆனால் அங்கேயும் அரங்கத்திற்கு வெளியே ஏதாவது வேலை செய்யவோ இல்லை இடைவேளையில் சாப்பாடு கொடுப்பதற்கு பொறுப்பாகவோ அனுப்பிவிடுவார்கள் என்பதால் ஒருபொழுதும் நிகழ்ச்சிகளை ஒழுங்காய்ப் பார்க்க முடிந்ததில்லை.

நிறைய மனிதர்கள் கூடும் இடங்கள் எனக்கு எப்போதும் அந்தரத்தைத் தந்துகொண்டிருப்பவை. மால்களில் சில கடைகளுக்குப் போனவுடனேயே தலைசுற்றும் நிலை வந்துவிடும் விசித்திரதன்மை எனக்கு இருக்கிறது. இம்முறை கலை நிகழ்விற்கு அண்ணாவின் பிள்ளைகளான எழிலும், நிலாவும் நிகழ்ச்சிகள் செய்வதால் போகலாமென்றிருந்தேன். போனாலும் எங்கேயாவது பிறர் கண்ணில்படாமல் ஒளிந்துவிடவேண்டும் என்று நினைத்திருந்தேன். மண்டபத்தில் பல்கணி இருக்கைகள் இருந்ததால் அங்கே எளிதாய்ப் பதுங்கிவிட முடிந்தது.

ஏற்கனவே 15வயதிற்குட்பட்ட பிள்ளைகளுக்குப் பாடல் போட்டிகள் நடத்தபட்டு, அவர்களில் 6 பேர் தெரிவுசெய்யப்பட்டு, ஒவ்வொருவரும் ஒரு கீர்த்தனையும், ஒரு சினிமாப்பாட்டும் பாடினார்கள். மிக நல்லாய்ப் பிள்ளைகள் பாடினார்கள். சினிமாப் பாடல்களில் நிறைய ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களை (மார்கழித் திங்கள் அல்லவா, 'வெள்ளைப் பூ') பாடியதால் எனக்கு இன்னும் பிடித்திருந்தது. நன்றாகத் தமிழை உச்சரித்துப் பாடியது மகிழ்ச்சியளித்திருந்தது.

நடன நிகழ்ச்சிகளும் நடந்தது. அப்போது என்னோடு இங்கே உயர்கல்லூரியில் படித்த தோழியையும் சந்திக்க முடிந்திருந்தது. அவர் எங்கள் பாடசாலையில் பல்கலாச்சார நிகழ்வுகள் நடக்கும்போது நடனமாடுவார். அரங்கில் என்னோடு இருந்து பார்க்கும் தோழிகள், ஆகா எவ்வளவு அழகாய் கண்ணை உருட்டி ஆடுகின்றார் என வியப்பார்கள். எனக்குத் தூரப்பார்வை பிரச்சினையென்பதால் இவ்வாறான 'நுண்ணிய தளங்கள்' எல்லாம் புலப்படுவதில்லை. அந்த நடனமாடும் தோழியை பார்வையாளராய்ப் பார்த்தபோது, நமக்கான காலங்கள் போய்விட்டது அல்லவா எனக் கூறவேண்டும் போலத்தோன்றியது. இன்னொரு பெண் என்னை அடிக்கடி பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்கு என்னை இலங்கையிலோ, கனடாவிலோ அல்லது இடைநடுவிலோ தெரிந்திருக்கக் கூடும். எனக்குத் தெரிந்தும் தெரியாமலும் நிறைய 'சம்பவங்கள்' நிகழ்ந்திருப்பதால் அவரை நெருங்கிக் கதைக்கவும் பயமாயிருந்தது.

நாடகம் தொடங்கியபோது, வயிற்றுக்கு உண்டியிடுவதில் நேரத்தை நிறையக் கழித்ததால் இடைநடுவிலேயே பார்க்கத்தொடங்கினேன். இரண்டு பேர் நிறையக் காலம் காதலித்து திருமணம் செய்கின்றார்கள். திருமணத்தின்பின் பெண் தன் நாயோடு நிறைய நேரம் செலவளிக்கிறார் என ஆணும், கணனியோடு எந்தநேரமும் துணைவர் இருக்கிறார் என பெண்ணும் சண்டை பிடித்து, பிறரால் சமரச முயற்சி செய்யப்பட்டும் பிரிந்து போகின்றார்கள்.

சில வருடங்களின் பின் அந்த ஆண் வேறொரு திருமணம் செய்துகொள்கின்றார். பெண்ணோ தன் குழந்தையோடு வாழுவதே தனக்குப் போதுமென இருந்துகொள்கிறார். இருவரும் ஓரிடத்தில் சந்திக்கும்போது தங்களால் பழைய காதலிலிருந்து விடுபடமுடியவில்லை, அது எவ்வளவு அருமையாக இருந்ததென நினைப்பதுடன் நாடகம் முடிகின்றது.

நல்லதொரு நாடகமே. ஆனால் அதில் ஒரு பாத்திரம் என்னதான் நடந்தாலும் சேர்ந்திருப்பதுதான் எங்கள் தமிழ் கலாசாரம் என நிறைய அறிவுரை கூறுவார்.அதற்குப்பிறகு நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கிய ஒரு வானொலி அறிவிப்பாளரும் எங்களுக்கு கலாசாரம் முக்கியம், அதற்கு தமிழ்மொழியை அறிந்துகொள்வது முக்கியம் என மேலும் கருத்துரை வழங்கினார். தமிழ் மொழியை அறிவது நல்லவிடயந்தான். அதில் சந்தேகமில்லை. ஆனால் தமிழ்க் கலாசாரத்தில்தானே களவொழுக்கம், காந்தர்வமணம் என நிறைய இருக்கின்றனவே. நமது விருப்பங்களுக்கு ஏற்ப நடந்தால் அது நம் கலாசாரம். நம் விருப்பங்களுக்கு அப்பால் நிகழ்ந்தால், அது நம் கலாசாரம் அல்ல.

எல்லா மொழிகளுக்கும், கலாசாரங்களுக்கும் இருப்பதுபோலத்தான் நம்மிடமும் எல்லாமே இருக்கின்றன. நாமெவரையும் விட தாழ்ந்தவருமில்லை. அதேபோல் எவரை விட உயர்ந்தவருமில்லை என்பதோடு, இதையும் சொல்லிக்கொள்ளலாம், 'தீதும் நன்றும் பிறர் தர வாரா'.

( படங்கள்: நன்றி: கூகிள் தேடல்)

ஹெக்டரும், மகிழ்ச்சியைத் தேடும் பயணமும்

Monday, December 01, 2014

நாம் எம்மை யாரென்பதை அறிய இடையறாது தொடர்ந்து தேடிக்கொண்டிருப்பதைப் போல, நமக்கான மகிழ்ச்சியும், நிம்மதியும் எதுவாயிருக்குமெனவும் தேடுகின்றோம். ஆனால் மகிழ்ச்சியிலிருந்து மகிழ்ச்சியின்மையையும், நிம்மதியிலிருந்து நிம்மதியின்மையும் பிரிக்கமுடியாது என்பதே யதார்த்தமானது. மேலும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்கும்போது இறுதியில் எந்த ஒன்றுமே மிச்சமாவதும் இல்லை. ஹெக்டர் ஒரு மனநல மருத்துவர். அவருக்குச் சொகுசான வாழ்வும், எதையும் செய்துகொடுக்கும் துணையிருந்தாலும் அவருக்கு வாழ்வு அர்த்தமில்லாதது போலத் தோன்றுகின்றது. அவரிடம் உளநலத்திற்காய் ஆலோசனை கேட்க வரும் நோயாளிகளையும், அவரால் நிம்மதியான/மகிழ்ச்சியான தளத்திற்கு நகர்த்த அவ்வளவு எளிதாய் முடிவதும் இல்லை. இது இன்னும் அவரை மனவழுத்ததிற்குள் இழுத்துச் செல்கின்றது.

உண்மையான மகிழ்ச்சி எதுவாயிருக்குமென அவருக்குக் கேள்வி வருகின்றது. அதை அறிவதன் மூலம் தனக்கு மட்டுமில்லை தன்னிடம் வரும் நோயாளிகளுக்கும் உதவமுடியும் என திடீரென்று பயணம் ஒன்றைத் தொடங்குகின்றார். அவரோடு இணைந்து வாழும் துணையான கிளாராவிற்கு இதில் அவ்வளவு சம்மதமில்லை என்பதை அறிந்தே ஹெக்டர் புறப்படுகின்றார்.

மகிழ்ச்சியைத் தேடும் அல்லது மகிழ்ச்சி என்பது எதிலிருக்கிறது எனத் தேடும் தன் பயணத்திற்கு ஹெக்டர் முதலில் சீனாவைத் தேர்ந்தெடுக்கின்றார். அந்தப் பயணத்தின்போது ஒரு பெரும் பணக்காரரை விமானத்தில் சந்திக்கின்றார். அவரிடம் தன் பயணத்தின் நோக்கம் பற்றி பகிரும்போது, மகிழ்ச்சி என்பது பணத்தில் இருக்கிறதெனக் கூறி ஹெக்டருக்கு ஷங்காயின் இடாம்பீக நள்ளிரவு வாழ்க்கையைக் காட்டுகிறார், அங்கே சந்திக்கும் இளம்பெண் ஒருவர் மீது ஹெக்டர் மையல் கொள்கிறார். அப்போது அவர் கிளாராவையும் நினைவுகூர்ந்து 'மகிழ்ச்சி என்பது ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை ஒரே நேரத்தில் நேசிப்பதாலும் வரலாம்' என நினைத்துக்கொள்கிறார்.ஆனால் தொடர்ச்சியான நாட்களில் அந்தச் சீனப்பெண் ஒரு பாலியல் தொழிலாளி எனத் தெரியும்போது 'மகிழ்ச்சி என்பது சிலவேளைகளில் முழுக்கதையையும் தெரியாமல் இருப்பதிலும் இருக்கிறது' என தனது குறிப்புப் புத்தகத்தில் எழுதுகிறார்.

துயரமாய் முடிந்த இத்தேடலின் பின் பனிப்பிரதேசத்திலிருக்கும் திபெத்திய புத்தமடலாயத்தில் ஹெக்டர் போய்த் தங்குகின்றார். ஒருநாள் சூரிய வெளிச்சத்தில் மினுங்கும் கொடிகளைப் பார்த்து உற்சாகமாயும் மகிழ்ச்சியாகவும் நடனமாடும் துறவிகளைப் பார்த்து, இதிலென்ன இருக்கிறதென ஹெக்டருக்கு வியப்பாயிருக்கின்றது. ஒரு துறவி 'மகிழ்ச்சியிற்கான பாதையை, மகிழ்ச்சியில்லாத விடயங்களைத் தவிர்த்து ஒருபோதும் அடைய முடியாது' என மகிழ்ச்சியும் மகிழ்ச்சியின்மையும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கமுடியாதென்பதை வேறொருவகையில் ஹெக்டருக்கு உணர்த்துகின்றார்.

சீனா/திபெத் பயணத்தின்பின், ஹெக்டர் ஆபிரிக்க நாடொன்றுக்குப் பயணிக்கின்றார். அங்கே அவரது பல்கலைக்கழகக்கால நண்பர் வேலை செய்துகொண்டிருக்கின்றார். ஒரு ஆபிரிக்காப் பெண்மணியை இடையில் சந்திக்கும்போது, ஹெக்டரை அவர் விருந்திற்கு வரச் சொல்கிறார். உற்சாகமாய் விருந்தைக் கொண்டாடும் ஹெக்டர் திரும்பி வரும்வழியில் ஒரு குழுவினரால் ஆயுதமுனையில் கடத்தப்பட்டு மரணத்தின் விளிம்பிற்குச் சென்று மீண்டு வருகின்றார். அதிலிருந்து வெளியே வரும்போது மகிழ்ச்சி என்பது எவ்வாறாக இருக்கக்கூடும் என்பதைத் தன் அனுபவத்தினூடாக கண்டுகொள்கிறார். அதேசமயம் அவரது பல்கலைக்கழக நண்பர், தான் gay என்பதை ஹெக்டருக்கு உணர்த்தி, 'மகிழ்ச்சி என்பது நீங்கள் எதுவாக இருக்கின்றீர்களோ, அதன் நிமித்தம் நீங்கள் நேசிப்படுவதில் இருக்கிறது' என்கின்றார் அந்த நண்பர்.

இவ்வாறாக ஹெக்டர் தன் பயணத்தின்போது சந்திக்கும் ஒவ்வொருவரிடம் 'நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றீர்களா? மகிழ்ச்சி என்பது என்ன?' எனக் கேள்விகளைக் கேட்டுப் பதில்களைப் பெற முயல்கின்றார். இடையில் இலண்டனில் இருக்கும் கிளாராவோடு ஸ்கைப் மூலம் உரையாட முயலும்போதெல்லாம், ஏதோ இருவருக்குமிடையில் விரிசல் வந்துவிட்டது மாதிரி இருவரும் உணர்கின்றனர். உரையாடல்களையெல்லாம் இடைநடுவில் நிறுத்தியும் கொள்கினறனர். மேலும், தொடக்கத்தில் ஹெக்டர் திடீரென்று பயணத்தைத் தொடங்கும்போது கிளாரா, ஹெக்டர் அவரது முன்னால் காதலியோடு இருக்கும் புகைப்படம் ஒன்றையும் கண்டுபிடிக்கின்றார். ஹெக்டர் சந்தோசத்தைத் தேடிப் போவதாய்ச் சொன்னாலும், அவர் தன் பழைய காதலியைத் தேடித்தான் செல்கின்றார் என்கின்ற சந்தேகமும் கிளாராவிற்கு வருகின்றது.


அதே போன்று தன்னால் முழுமையான சந்தோசமாய் இருக்க முடியாததற்கு, தன் பழைய காதலி சிலவேளைகளில் ஒரு காரணமாய் இருக்கலாமோ என்பதை அறிய, ஹெக்டர் ஆபிரிக்காவிலிருந்து லொஸ் ஏஞ்சல்ஸிற்குப் பயணிக்கின்றார். விமானப் பயணத்தில் மூளைப் புற்றுநோயில் இறுதிக்கட்டத்திலிருக்கும் ஒரு பெண்ணைச் சந்திக்கும் ஹெக்டர், அவருடைய கடினபயணத்தில் உறுதுணையாக இருக்கின்றார். அப்போது அந்தப் பெண், 'மரணத்தைப் பற்றி அறியாத ஒருவராலும் வாழ்வைப் பற்றி அறிய முடியாது. நான் அதை அறிந்தவள்; எனக்கு மகிழ்ச்சியாக இருக்கத் தெரியும்' என மகிழ்ச்சியிற்கான புது விளக்கம் ஒன்றைக் ஹெக்டருக்குக் கொடுக்கின்றார். மேலும் மகிழ்ச்சி என்பது 'எப்படிப் பிறர் கூறுவதை நிதானமாய்க் கேட்பது என்பதைக் கற்றுகொள்வதிலும் இருக்கிறது' என்கின்றார். ஹெக்டர் அவ்வாறானதொரு கனிந்த மனிதரெனவும் அந்தப் பெண் குறிப்பிடுகின்றார்.

இறுதியில் லொஸ் ஏஞ்சல்ஸிற்குப் போகும் ஹெக்டருக்கு என்ன நிகழ்கின்றது? கிளாராவிற்கும் ஹெக்டருக்குமான உறவு என்னவாகிறது, ஹெக்டர் அவருக்குரிய மகிழ்ச்சியைக் கண்டுபிடிக்கின்றாரா என்பதை நீளும் திரைப்படத்தில் பார்க்கமுடியும்.

இப்படி மகிழ்ச்சி எப்படி இருக்குமென அறியப் பயணிக்கும் ஹெக்டரை ஒப்பிட்டுப் பார்க்க உடனே நினைவிற்கு வருவது 'Eat, Pray, Love' . அது பெண் ஒருவருடைய தன்னைப் பற்றிய தேடல் என்றால் இந்தத் திரைப்படத்தை ஆணின் மகிழ்ச்சியிற்கான தேடலென எடுத்துக்கொள்ளலாம். இரண்டுமே அதிக சலுகைகள் உள்ள வெள்ளையினத்தவர்களைப் பற்றியது (white privilege) எனினும் 'Eat, Pray, Love யில் எலிஸபெத் சென்ற ஆழத்திற்குள் ஹெக்டரின் பயணம் அமையவில்லை. எலிஸபெத் நாளொன்றின் சிறிய விடயங்களில் மகிழ்ச்சியைக் கண்டதுமாதிரி ஹெக்டர் தனக்கான சந்தோசத்தைச் சிறிய விடயங்களில் கண்டுகொள்ள முனையவேயில்லை. ஆண்களுக்குரிய இன்னுமின்னும் சாகசம் செய்து பார்ப்பதில் இருக்கும் கவனத்தினால், மிகச்சிறிய விடயங்களின் அழகான தருணங்களை கோட்டை விட்டு விடுகின்றனர் போலும்.

ந்தப் படம் மகிழ்ச்சியை/நிம்மதியைத் தேடிப்போகும் ஒரு ஆணின் பயணம் என்றளவில் என்னை கவர்ந்திருந்தாலும், இது வேறு பல சிக்கல்களையும் கொண்டிருக்கின்றது. சீனாப் பயணத்தின்போது ஹெக்டர் சந்திக்கும் ஒரேயொரு பெண்ணும் பாலியல் தொழிலாளியாகவே இருக்கின்றார். அதுவும் ஹெக்டர் இறுதியில் அந்தப் பெண் தன் அடையாளத்தை மறைத்து தன்னை ஏமாற்றியவர் என்று எதிர்மறையாகத்தான் அவரைப் பற்றி நினைக்கின்றார். ஆபிரிக்கா நாடொன்றின் பயணத்தின்போது, 'ஆபிரிக்கா' எனவே கூறப்படுகின்றது. ஆபிரிக்காக் கண்டத்தில் எத்தனையோ நாடுகள் இருக்கின்றன. அவற்றின் ஒரு பெயரைக் குறிப்பிட மறுத்து ஆபிரிக்கா எனப் பொதுப்படையாக குறிப்பிடுவது இன்னுமிருக்கும் காலனித்துவ மனோநிலையன்றி வேறெதுவாக இருக்கும்.

ஆபிரிக்க நாடொன்றில் நிகழும் விமானப்பயணத்தைக் கூட மிக மோசமாய் விமானத்திற்குள் சிகரெட் பிடிப்பவர்களாய், காலநிலைக்கு தாங்கமுடியா பழைய விமானமாய், இன்னும் கொண்டுபோகும் கோழி குலுக்கலில் முட்டையிடுவதாய்க் காட்டுவதெல்லாம் ஆபிரிக்கா கண்டத்து மக்கள் பற்றிய 'வெள்ளையினத்தவரின் பொதுப்புத்தியே' தான். அது மட்டுமில்லாது ஹெக்டரின் ஆபிரிக்காப் பயணம் முழுதும் ஆயுதக்குழுக்களும், இராணுவமுமே காட்டப்படுகின்றன, இவையெல்லாம் தற்செயலான நிகழ்வு என்று எவரும் சொல்லமுடியாதளவிற்கு காட்சிப்படுத்தப்படுகின்றது.

மகிழ்ச்சியை/நிம்மதியைத் தேடிக்கொண்டிருக்கும் அல்லது அது எதுவாய் இருக்குமென தேடிக்கொண்டிருப்பவர்க்கும், பயணங்களின் மீது தீராக் காதல் இருப்பவர்க்கும் இத்திரைப்படம் வசீகரிக்கவே செய்யும். ஆனால் அதேவேளை, காலனித்துவ எச்சங்களுடன் வெள்ளையின மேலாதிக்கத்துடன் எடுக்கப்பட்ட பல்வேறு காட்சிகள் எரிச்சலைத் தருவதையும் மறுக்கமுடியாது,

மேலும் மகிழ்ச்சி என்பது இன்னொருவரால்/இன்னொன்றால் தரப்படுவதில்லை. அது நம் அகமனதோடு சம்பந்தப்பட்டது. சிலவேளைகளில் பயணங்கள் மூடப்பட்டிருக்கும் அந்த அகமனதைத் திறந்துவிடக் கூடியன. மேலும் எதுவுமே நிரந்தரமில்லாதது போல, மகிழ்ச்சியும் கணப்பொழுதுகளில் மாறிவிடக்கூடியதே. அதைத் தெளிவாக உணராதவரை நாம் மகிழ்ச்சி என்கின்ற கருத்துருவாக்கங்களினால் மட்டுமே சிறைப்பட்டிருப்போம். ஹெக்டர் கண்டடைகின்ற பாதை அவருக்குரியது. ஒவ்வொருத்தருக்கும் அவரவர்க்கான தனித்துவமான வழிகள் என்றுமே திறந்தபடியே இருக்கின்றன. புத்தர் ஒருவகையில் கூற விழைந்ததும் இதையேதான்.

(Movie: Hector and the Search for Happiness)
(நன்றி: 'அம்ருதா' - கார்த்திகை இதழ்)

பிற்குறிப்பு:இத்திரைப்படம் Francois Lelordன் பிரெஞ்சுப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. நிஜவாழ்வில் Francois Lelord ஒரு உளவியல் நிபுணராக இருந்து, பல்வேறு வாழ்வு முன்னேற்றப் புத்தகங்களையும் எழுதியிருக்கின்றார். ஒருகட்டத்தில் அவ்வாறான நூற்களை எழுதுவதில் சோர்வு வந்து ஹொங்கொங்கில் நின்றபொழுது(2002ல்) ஹெக்டர் என்ற பாத்திரத்தை உருவாக்கி புனைவுகளை எழுதத் தொடங்குகின்றார். பின்னர், நீண்டகாலம் செய்து வந்த ஆலோசனை வேலையைத் துறந்து, சார்ஸ் தொற்றுநோய் பரவிய காலத்தில் வியட்னாமில் பணிபுரியச் செல்கின்றார். அங்கேயே அவர் தனது இன்றையகால துணையைச் சந்திக்கின்றார். இன்று பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுவிட்ட 'ஹெக்டரும் அவரது மகிச்சியைத் தேடும் பயணத்துடன்' ஹெக்டர் என்ற பாத்திரத்தை வைத்து மேலும் பல்வேறு நூற்களை அவர் எழுதிவிட்டார். 1953ல் பிறந்த Francois Lelord தற்சமயம் தனது துணையுடன் தாய்லாந்தில் வசித்து வருகின்றார்.