ராமானுஜத்திற்கும் வான்கோவிற்கும் இடையிலான ஒற்றுமைகளே எனக்குள் விரியத்தொடங்கின. வான்கோ போலவே ராமானுஜமும் மனப்பிளவிற்குள் ஆளானவர். வான்கோ போலவே ராமானுஜத்திற்கும் பாடசாலைப் படிப்பு பிடித்ததில்லை. ராமானுஜம் இடை நடுவில் பாடசாலையிலிருந்து விலகி ஓவியக்கல்லூரியில் சேர்கின்றார். தனித்தும், அதிகம் பேசாதவராகவும் ராமானுஜம் இருந்திருக்கின்றார். வான்கோவிற்கு தியோ இருந்ததுமாதிரி, ராமானுஜத்தின் திறமையைக் கண்டுபிடித்தவர் கே.பணிக்கர். ஆகவேதான் வீட்டால் புறக்கணிக்கப்பட்டு தெருக்களில் ஓரிடமில்லாது அலைந்து திரிந்த ராமானுஜத்தை, பணிக்கர் சோழமண்டலத்திற்குள் இருத்துகின்றார்.
ஓவியம் வரைவதே அக/புற உலகினுள் இருந்து தப்புவதற்கு ஒரேயொரு வழியாக இருவருக்கும் இருந்திருக்கின்றது. வான்கோவின் ஓவியங்களை ஆம்ஸ்டடாமில் 'வான்கோ மியூசியத்தில்' நேரடியாகப் பார்த்தபோது பல விடயங்களை வான்கோவின் ஓவியங்களுக்கு அப்பால் அறிய முடிந்திருந்தது, வான்கோ தான் வரையும் ஓவியங்களை வீட்டின் முன்னால் பிறருக்கு காட்சியிற்கு வைப்பதைப் போல, ராமானுஜமும் ஓவியக்கல்லூரியில் தன் அறையின் முன் வைத்திருக்கின்றார். அவ்வப்போது வரைந்த ஓவியங்களை உணவு போன்ற நாளாந்த விடயங்களை மிகக்குறைந்த விலைக்குக் கொடுத்து தம் தேவைகளை இருவரும் நிறைவேற்றியுமிருக்கின்றார்கள்.

இன்று பல லட்சங்கள் மதிப்பிருக்கும் ராமானுஜத்தின் ஓவியங்கள் அவரிருந்த காலத்தில் அந்தளவிற்கு மதிப்பிருக்கவில்லை. விற்பனை செய்யப்படவுமில்லை. வான்கோவும் எப்படி அவரின் இறப்பின்பின் பிரபல்யமடைந்தார் என்பதைப் பற்றிச் சொல்லத்தேவையில்லை.
மேலும், வான்கோ தன் 37 வயதிலும், ராமானுஜம் தன் 33 வயதிலும் தமக்கான மரணத்தை தற்கொலைகள் மூலம் தேர்ந்தெடுத்தும் கொண்டனர்.
0 comments:
Post a Comment