ஒரு ஆணும், பெண்ணும் தற்செயலாய் பிரான்ஸின் ஒதுக்குபுறமான நகரொன்றில் சந்திக்கின்றனர். சொற்ப காலந்தானே பழகப்போகின்றோம், எனவே உண்மையான அடையாளங்களை மறைத்தபடி பழகலாமென முடிவெடுகின்றனர். ஆண் தன்னை 'டொன்' எனவும், பெண் 'மோனா டார்லிங்' எனவும் பழைய திரைப்படக் கதாபாத்திரங்களின் பெயர்களைத் தங்களுக்குச் சூட்டியும் கொள்கின்றனர். அந்நகரையும், அருகிலுள்ள காடுகளையும், மலைகளையும் இணைந்து சுற்றுகின்றனர். மெல்ல மெல்ல அந்தப் பெண்ணுக்கு டொன் மீது காதல் அரும்புகின்றது. திடீரென பயணத்தில் தொலைந்த சூட்கேஸும் பாஸ்போர்ட்டும் கிடைத்துவிட, சட்டென்று அந்தப் பெண் இந்தியாவிற்குப் பயணமாகிவிடுகின்றார்.
இடையில் சிறுவன் 'டொன்'னின் கதை சொல்லப்படுகின்றது. எப்போதும் கதைகள் கேட்பதிலும், வாசிப்பதிலும் ஆர்வமிருக்கும் சிறுவனை தந்தை படி படி என கஷ்டப்படுத்துகின்றார். நாடோடிகளாய் அலைபவர்களிடம் வீட்டில் காசு களவெடுத்துச் சென்று கதை கேட்குமளவிற்கு சிறுவன் 'டொன்' கதைகளின் மீது ஈர்ப்புக்கொண்டவனாக இருக்கின்றான். பல்வேறு இதிகாசப் பாத்திரங்களோடு கற்பனையின் விளைநிலங்களில் பறந்து போகின்ற சிறுவன் பதின்மங்களுக்கு வரும்போது, நீ இப்படியிருக்கமுடியாது கணிதம் நன்கு கற்று பொறியியலானாக வரவேண்டுமென வீட்டிலிருந்து ஹொஸ்டலுக்கு அனுப்பப்படுகின்றான். அந்தப் படிப்பு பிடிக்கவில்லை என்றாலும் தந்தையிற்காய் தன்னை வருந்திக் கற்கின்றான்.
பிரான்ஸிலிருந்து இந்தியாவிற்குத் திரும்பும் பெண்ணான மகேஸ்வரியின் தந்தையார் மிகப்பெரும் ரீ தொழிற்சாலையை வைத்திருக்கின்றார். மகளான மகேஸ்வரி அந்நிறுவனத்தின் இலாபத்தை அவரின் திறமையால் உயர்த்துகின்றார். என்கின்றபோதும் பிரான்ஸில் 'டொன்னோடு' பழகிய காலங்கள் அவரைத் தொடர்ந்து தொந்தரவுபடுத்தியபடியே இருக்கிறது. டொன்னை மீண்டும் சந்திப்பதற்கான வாய்ப்புக்களும் ஏதுமில்லை. எனெனில் இனி மீண்டும் சந்திப்பதில்லை என்று முடிவெடுத்துத்தான் இருவரும் அடையாளங்களை மறைத்துப் பழகியதோடு மட்டுமின்றி, தொடர்பு கொள்வதற்கான எந்த முகவரிகளையும் இருவரும் விட்டும் பிரியவில்லை.
டொன்னின் நினைவுகள் சுழன்றடிக்க சட்டென்று மகேஸ்வரிக்கு ஒரு விடயம் நினைவுக்கு வருகின்றது. டொன் Catch-22 நாவலை பிரான்ஸில் இருக்கும்போது வாசித்துக்கொண்டிருந்ததையும், அது டெல்கியில் இருக்கும் ஒரு புத்தகசாலையில் வாங்கப்பட்டதையும் கண்டுகொள்கிறார். சந்திப்பு நடந்து சில வருடங்களான பின், மகேஸ்வரி டெல்கியிற்குச் செல்கிறார். அந்தப் புத்தகசாலையில் பெரும்பொழுதுகளைக் கழிக்கும்போதாவது டொன்னை எப்போதாவது சந்திக்கவிடக்கூடுமென ஆசைப்படுகின்றார்.
காலத்தின் நீட்சியில் அதே புத்தகசாலையில் தற்செயலாய் டொன்னை மகேஸ்வரி சந்திக்கின்றார். தனக்கு அவரில் அளவிறந்த காதல் இருப்பதாக தன் நிலைமையை உணரச்செய்கின்றார். தொடர்ந்து இருவரும் பழகுகின்றனர். டொன் ஒரு அலுவலகத்தில் மானேஜராக இருக்கின்றார். அவரின் ஒரேமாதிரியான நாளாந்த வாழ்க்கையும், அலுவலகத்தில் மிகவும் கீழ்ப்படிவான ஊழிய வாழ்க்கையும் மகேஸ்வரிக்கு வியப்பைத் தருகின்றது. பயணங்களில் உற்சாகமாகவும், கதைகள் பல சொல்லித் திரிந்த டொன் எங்கே மாயமாய்ப் போனான் என வினாவுகிறார். டொன் இதுதான் எனது நிஜ முகம், நீ பார்த்தது கற்பனையான ஒருவன் என்கின்றார். இந்த சராசரியான அலுவலக வாழ்க்கையிற்குள் சிக்கிக்கொண்ட ஒருவனை என்னால் நேசிக்க முடியாதென, டொன் நண்பர்களுக்கு முன்னிலையில் திருமணஞ் செய்யக் கேட்கும்போது மகேஸ்வரி நிராகரிக்கின்றார்.
தன் வழமையான வாழ்க்கையிற்குள் டொன் மீண்டும் போகின்றார். அவ்வப்போது schizophreniaவிற்குள்ளும் விழும் டொன், மகேஸ்வரி தன் தவறை உணர்ந்து மீண்டும் காதலை யாசிக்கும்போதும் அதை நிராகரிக்கின்றார். கொஞ்சம் கொஞ்சமாய் தனது அசலான முகத்தைத் தேடத் தொடங்குகின்றார். இடையில் ஒரு ஓட்டோக்காரரை டொன் சந்திக்கின்றார். தனது நகரத்தில் பெரும் பாடகனாக இருந்த அவரை, எப்படி நாளாந்த வாழ்க்கை ஒரு ஆட்டோக்காரராக டெல்கியில் கொண்டு வந்து சேர்த்தென தன் கதையை அந்த ஓட்டோக்காரர் சொல்கிறார்.
அதிலிருந்து ஒரு தீப்பொறி டொன்னுக்குள் நுழைகிறது. தனது கதைசொல்லல்களை மக்களுக்குள் நிகழ்த்திக்காட்டுகின்றார். எப்போதும் சமரசம் செய்து, வேறொரு முகமூடியை அணியச் செய்யும் பெருநிறுவன வேலையை உதறித்தள்ளி, ஆறு மாதங்களாய் அலைந்துவிட்டு, சிம்லாவிலிருக்கும் வீட்டுக்குச் செல்கின்றார். வேலையை விட்டுவிட்டார் என அறிந்த தந்தையும் தாய் பதறுகின்றனர். மீண்டும் வேலையைத் தேடு என அவரைச் சொற்களால் வதைக்கின்றனர்.
அல்லாடும் மனத்திடையே தான் சிறுவனாக இருந்தபோது கதைகளச் சொன்னவரிடம் டொன் மீண்டும் போகின்றார். ஏன் எப்போதும் மகிழ்ச்சி குறுகிய காலமே தங்குகின்றது, மிகுதிக்காலம் முழுதும் துயராக வடிகிறது என சோர்ந்து போகும் டொன், தனது எதிர்காலம் என்னவாகும் இருக்கும் எனக் கேட்கின்றார். மிகவும் முதிர்ந்துபோய் பார்வையும் ஒரளவு இழந்திருக்கும் அந்த கதைசொல்லி, 'நீ பொய்யாக வாழ்கிறாய்...உனது வாழ்க்கையின் கதை எப்படியென என்னிடம் கேட்காதே, உனக்காக கதையை நீதான் சொல்லவேண்டும் அதைத் தேடு' எனத் துரத்திவிடுகின்றார்.
டொன்னின் தேடல் பிறகு என்னவாகிறது? மகேஸ்வரியால் அவரையும், அவரால் மகேஸ்வரியும் புரிந்து கொள்ளப்படுகின்றனரா என்பது இதன் நீட்சியில் நிகழ்கின்றன. டொன்னின் குழந்தைப்பருவம், பதினம், பிறகு தற்போதைய காலம் என மூன்று காலங்களும் ஒரு தொடர்ச்சியின்றி இத்திரைப்படத்தில் சொல்லப்படுகின்றது. மனித மனம் என்பதே நிகழ்காலத்தில் இருக்கும்போதே கடந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் அலைந்துகொண்டிருப்பதுதான் அல்லவா?
இந்தக் கதை இன்றைய நவீன மனிதனின், அதுவும் பெருநிறுவனங்களில் தங்களின் அசல் முகங்களைத் தொலைத்தவர்களைப் பற்றியது எனச் சொல்லலாம். இன்னொருவகையில் நாம் வாழ விரும்பும் வாழ்க்கையிற்கும், வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கையிற்கும் இடையில் நெரிபடும் நம் எல்லோருடைய பிரதிபலிப்புத்தான் டொன் எனலாம்.
Beautiful mindல் நாஷிற்குக் வாய்க்கும் ஒரு துணை போல, Tamasha வில் டொன்னுக்குக் கிடைக்கும் காதலி போல எல்லோருக்கும் அமைவது அரிது என்பது ஒருபுறமிருந்தாலும், இதையெல்லாவற்றையும் விட நாம் நமக்கு விரும்பியதைச் செய்வதற்கான தயக்கங்களையும் பயங்களையும் தாண்டிச் செல்வதுதான் நம் எல்லோருக்கும் முன்னாலுள்ள பெரும் சவால் போலவும் தோன்றுகின்றது.
(நன்றி: தீபம்)
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment