ஒரு பெருவணிகர் தன்னுடைய எதிரியான இன்னொரு வணிகரைப் பயமுறுத்த பத்திரிகை ஒன்றைத் தொடங்க விரும்புகின்றார். உண்மையிலேயே பத்திரிகையைத் தொடர்ந்து நடத்துவதற்கு கூட அவருக்கு விருப்பமில்லை. இப்படி ஒரு பத்திரிகை வரப்போகின்றது, எதிரியான வர்த்தகர் அம்பலப்படுத்தப்படப்போகின்றார் என்று எச்சரிக்கை செய்யவே பத்திரிகை தொடங்கப்படுகின்றது. எதிரி சரணடைந்தவுடன் அல்லது இப்படி பத்திரிகை வரப்போகின்றது என்று அவர் பயந்தவுடனேயே பத்திரிகையை நிறுத்துவதே அந்தப் பெருவணிகரின் எண்ணம். ஆனால் இந்த உண்மையறிந்தவர்கள் ஒரு சில பேரே. மிகுதி அனைவரும் புதிய பத்திரிகை வரப்போகின்றது என பல்வேறு கனவுகளுடன் 'நாளை' (Domani) எனப் பெயரிடப்படுகின்ற பத்திரிகையில் வந்து சேர்கின்றனர். இந்த உண்மையை ஒரளவு அறிந்த ஒருவரே இந்தப் புதினத்தில் கதையை வருகின்றார்.
கதைசொல்லியான Colonna கடந்தகாலத்தில் எழுத்துத் திருத்தம் பார்ப்பவராகவும், பிறருக்கு படைப்புக்களை எழுதிக்கொடுக்கின்ற ghost writerராகவும் இருந்திருக்கின்றார். இவருக்கு அந்தப் பத்திரிகையில் பொறுப்பாசிரியருக்கு அடுத்த பெரும் பொறுப்புக் கொடுக்கப்படுகின்றது. பத்திரிகை அச்சுக்குப் போவதிற்கு முன்னர் 0-1, 0-2,.....0-12 வரை பன்னிரண்டு இதழ்களைத் தயாரிப்பதே இவர்களின் முதன்மையான வேலையாக இருக்கின்றது. புதிய பத்திரிகையினூடாகப் பல புதிய விடயங்களைச் செய்து பார்க்கலாம் என பல்வேறு கனவுகளுடன் பலர் வருகின்றனர். அதிலும் ஒரு பெண், ஏற்கனவே நடிகர்களின் கிசுகிசுக்களை வேறொரு பத்திரிகையில் எழுதி வந்த அலுப்பில் சொந்தமாய் புதிய ஆக்கங்களை எழுதலாமென வருகின்றார். அவருக்கு மரண அறிவித்தல்களை எழுதும் பொறுப்புக் கொடுக்கப்படுகின்றது. இவ்வாறு குறுக்கெழுத்து, சோதிடம் போன்ற வழமையான பதிவுகளே பிறருக்குக் கொடுக்கப்படுகின்றது.
2.
அந்த உண்மை என்னவெனில் இத்தாலியில் பாஸிஸ்ட்டாக இருந்த முசோலினி உண்மையில் வெளியில் சொல்லப்படுவதைப் போலக் கொல்லப்படவில்லை என்பதே. முசோலினி எனக் கொல்லப்பட்டு உலகிற்கு வெளிப்படையாக அறிவிக்கப்பட்டவர், அவரைப் போல டூப்பாக, முசோலினியால் உலாவ விடப்பட்ட இன்னொருவர் என்று Braggadocio உறுதியாக நம்புகின்றார். அதற்கான பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு வருகின்றார். இறுதிநேரத்தில் முசோலினி ஜேர்மனிப் பக்கமாய் தப்பிப் போகும்போது கொல்லப்பட்டதாய்ச் சொல்லப்பட்டபோது, அசல் முசோலினி இத்தாலியின் வேறொரு பகுதியில் இருந்தார் என்றும், வத்திகான் தேவாலயத்தின் உதவியுடன் ஒரு பழமைவாய்ந்த தேவாலயத்தினூடாக சுரங்கப்பாதையினூடு தப்பிப் போயிருக்கின்றார் எனவும் சொல்லப்படுகின்றது.
அமெரிக்கா நேசப்படைகளும், அதன் உளவு நிறுவனங்களும் அவரை அப்படித் தப்பச் செய்ததாகவும், அன்றைய சோவியத் ஒன்றியத்தின் ஆதரவுடன் இயங்கிய புரட்சிகர செம்படை இத்தாலியில் முன்னணியிற்கு வந்தால் முசோலினியை மீண்டும் களத்தில் இறக்கவும் அமெரிக்கா தயாராக இருந்தததாகவும் Braggadocio நம்புகின்றார் . தனது வாதங்களுக்கு வரலாற்றின் ஓட்டைகள்/பலவீனங்கள் இருந்த பகுதிகளில் இருந்து ஆதாரங்களை அள்ளி வழங்குகின்றார். மேலும் முசோலினியின் ஆதரவுடன் ஒரு பெரும் படை இத்தாலியின் உள்ளே இரகசியமாகக் கட்டியமைக்கப்பட்டதாகவும், முசோலினியின் மீள்வரவுடன் இத்தாலி மீண்டும் கைப்பற்றப்படத் தயாராக இருந்ததாகவும் கூறுகின்றார், ஆனால் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டிருந்த முசோலினி திடீரென இறந்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டதாகவும், அதனால் முசோலினி தப்பி வாழ்ந்த காலம் வரலாற்றிலிருந்து அப்படியே மறைக்கப்பட்டதாகவும் இவர் கண்டுபிடிக்கின்றார். இது ஒரு conspiracy theory என்ற தொடக்க்கத்தில் உதறித்தள்ளிய Colonna, ஒருகட்டத்தில் Braggadocio கூறுவதை நம்பத்தொடங்குகின்றார்.
இந்த உண்மையை உலகம் முழுவதற்குச் சொல்வதற்கு முன்னர் ஒரேயொருவரிடம் கேட்டு உறுதி செய்துவிட்டால் போதுமென Braggadocio ஒருநாள் விடைபெற்றுப் போகின்றார். அவர் சந்திக்கப் போகும் நபர் இத்தாலிய உளவு நிறுவனத்தில் வேலை செய்கின்றவர். அவ்வாறு அந்த உளவு நிறுவனத்தில் இருப்பவரைச் சந்தித்துவிட்டு இரவில் தனியே நடந்து வரும்போது Braggadocio கொல்லப்படுகின்றார்.
3.
அந்தக் கொலையோடு அனைத்து நிலைமைகளும் மாறிப்போகின்றன. அடுத்த நாள் பொலிஸ் இவர்களின் பத்திரிகை அலுவலகத்திற்குள் நுழைகின்றது. கொல்லப்பட்ட நபரின் ஆவணங்களை எல்லாம் கைப்பற்றுகின்றது. அவரோடு நெருங்கிப் பழகியவர்கள் யாரென விசாரிக்கின்றது. இந்தக் கதைசொல்லியும் விசாரிக்கப்படுகின்றார். ஆனால் அவர் கவனமாய் தனக்குச் சொல்லப்பட்ட முசோலினி பற்றிய conspiracy theoryஐ மறைத்துவிடுகின்றார்.
பத்திரிகைக்கு பொறுப்பானவர் இனி பத்திரிகை வராதெனவும் இனியெவருக்கும் வேலையில்லையெனவும் எல்லோரையும் இரண்டு மாதச் சம்பளத்துடன் வீட்டுக்கு அனுப்புகின்றார். அவருக்கும் Colonnaவிற்கும் மட்டுமே முசோலினி பற்றிய இந்தப் புதுக்கதை தெரியும். இதனால் இனி தனக்கு ஆபத்தெனவும் தான் இத்தாலியை விட்டு வேறொரு நாட்டுக்குச் சென்று தலைமறைவாக வாழப்போகின்றேன் என்றும், அவ்வாறே Colonnaவையும் எங்கேயாவது சென்று வாழச் சொல்கின்றார்.
Colonnaக்கு தன்னை யாராவது கொலை செய்ய வந்திருவார்கள் என்ற அச்சம் எழுகின்றது. அடுத்தடுத்த நாட்களில் வெளியில் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றார். தான் உறங்கிக்கிடந்தபோது யாரோ இரகசியமாக வீட்டுக்குள் நுழைந்திருக்கின்றார் என நம்பவும் செய்கின்றார்.
Colonnaக்கு வயது ஐம்பத்துக்கு மேல் ஆகிவிட்டதென்றாலும், பத்திரிகையில் புதிதாய் வந்து சேர்ந்த ஒரு இளம்பெண்ணோடு காதலும் இருக்கின்றது. இனி மிலானில் வசிக்கமுடியாது என முடிவுசெய்து, அந்தக் காதலிக்கு சொந்தமாய் ஒதுக்குப்புறமான கிராமத்தில் இருக்கும் வீட்டுக்குச் சென்று காதலியோடு ஒளிந்துகொள்கின்றார். அப்படியே இருவரும் கிழக்கு ஐரோப்பியா நாட்டுக்கோ அல்லது தென்னமெரிக்கா நாடொன்றுக்கோ தப்பிச் செல்வதே அவர்களின் முடிவாக இருக்கின்றது. பழக்கமில்லாத ஸ்பானிய மொழியை கற்று வழமைபோல பழைய தொழிலைத்தான் செய்யலாமென்றும், காதலியும் வழமையான எழுதும் திரைத்துறை சார்ந்த கிசுகிசுக்களை எழுதி வாழ்க்கையை நகர்த்தலாமெனவும் தீர்மானிக்கின்றனர்.
நாவலின் முடிவில் கூட Colonnaவால் முசோலினி பற்றிய இந்தக்கதை conspiracy theoryயா அல்லது உண்மையில் அப்படி இருந்திருக்கலாமோ என முடிவுசெய்ய இயலாது இருக்கின்றது. உம்பர்த்தோ ஈக்கோவின் இந்த நாவலை வாசிக்கும்போது அவரின் இன்னொரு நாவலான Foucault's Pendulum நமக்கு நினைவுக்கு வரலாம். நமக்கு உண்மையெனச் சொல்லித் தரப்பட்ட வரலாற்றை, ஏன் வேறு விதமாய் இருந்திருக்கக்கூடாது என கேள்விக்குட்படுத்துவதில் ஈக்கோ திறமையானவர். இங்கேயும் எது உண்மையாக இருக்கும் எது கற்பனையாக இருக்கும் என நம்மை கேள்விக்குட்படுத்துவதில் நிறைய விடயங்களை வரலாற்றிலிருந்து எடுத்துக் கொண்டுவருகின்றார். ஒருகட்டத்தில் கதைசொல்லியான Colonna நம்புவது போல, முசோலினி நமக்குச் சொல்லப்பட்டவகையில் கொல்லப்பட்டிருக்கமாட்டாரோ என நம்பவைப்பதில் ஈக்கோவின் எழுத்தின் ஆழம் நமக்குத் தெரியவருகின்றது.
(நன்றி: 'அம்ருதா' - ஏப்ரல்/2016)
0 comments:
Post a Comment