1.
நீ வாசித்துப் புரியா மொழியில் நமக்கான காதலை எழுதிக்கொண்டிருக்கின்றேன். நமக்குப் பொதுவான மொழியில் எழுதினால்தான் என்ன என்கிறாய்.
தனித்திருந்து வாழ்வை, அதன் ஏகாந்தத்தை இரசிக்கத் தெரிந்தவனுக்கு, தன் காதல் உணர்வுகளையும் கட்டாயம் யாருக்கும் சொல்லவேண்டும் என்கின்ற அவசியமில்லை. பிறரோடு பகிராமலே எத்தனை அழகிய காதல்கள் ஒவ்வொருவருக்குள்ளும் முகிழ்ந்திருக்கின்றன, பொழுதுகளைச் சிலிர்க்க வைத்திருக்கின்றன.
எல்லாவற்றிற்கும் ஏதாவது காரணங்களை வைத்திருப்பவன் நீ என்றாய்
எல்லாவற்றின் மீதும் விமர்சனங்களை வைத்திருக்கும் உன்னை நெருங்கவே முடியாது என்பதன் கடந்தகாலத்தின் எதிரொலியா இது- தெரியவில்லை.
அன்பே, ஒரு முத்தம் சொல்லித்தருவதை விட இந்த மொழி எதைத்தான் நமக்கு கற்பித்துவிடப்போகிறது?
02.
வசந்தகாலத்தின் வருகையை முதலில் தெரிவிப்பது அந்த மரந்தான். எல்லா மரங்களும் பசுமையைத் தேடியலைய, இது மட்டும் இலையெல்லாம் மஞ்சளாக விரித்து சிரிப்பதென்பது ஓர் அதிசயந்தான். இன்னொருபுறத்தில் சாம்பல் நிறத்தில் ஒரு குருவி சிறுகச்சிறுக கூடு கட்டிக்கொண்டிருக்கின்றது.
நேசமென்பதும் மழைபெய்ய பறவையொன்று சட்டென்று சிறகை விரியவும், சிலிர்க்கவும் செய்கின்ற ஒரு நிகழ்வு. அதன் வருகையிற்காக கடந்தகாலத்தில் பெற்ற எல்லாத் துயரங்களையும் மறந்துவிடலாம் போலிருக்கின்றது.
மண்ணிறக்காரியான நீ மென்மஞ்சள் ஆடையுடன் வந்தபோது மஞ்சளாய் இலைகள் விரித்த மரத்தையும், சாம்பல் நிறக்குருவியின் கழுத்து ஆரத்தையும் மீண்டும் நினைவுபடுத்தினாய்.
உன்னை அணைத்தலென்பது இயற்கையை ஆரத்தழுவலும் கூட.
03.
கடல் எப்போதும் தனக்குள் சிறகு முளைத்து பறக்கத்துடிக்கும் பல்வேறு கதைகளைப் பதுக்கி வைத்திருக்கின்றது. கரைதொடும் அலைகளை வாஞ்சையோடு வருடத் தெரிந்தவர்க்கு அது தன் கதைகளை ஒவ்வொன்றாய் அவிழ்த்துக் காட்டுகின்றது. கடலோடு விடிகாலையில், வெயிலேறிய மதியத்தில், அந்தி சாயும் மாலையில், இருள்மூடிக்கிடக்கும் நள்ளிரவில் கலக்கத் தெரிந்தவர்க்கு - அது நகர்ந்து செல்கின்ற ஒரு போதிமரம்.
ஆதியிலே சொற்களில்லாத பெரும் மெளனம் இருந்தது. இரைந்து கொண்டிருக்கும் அலைகளுக்கிடையில் அமைதியைக் காண முடிந்தவர்க்கு, எட்டித் தொடுகின்ற தூரத்தில் ஒரு போதிசத்துவா காத்துக்கொண்டிருக்கின்றான்.
மனிதர்கள் நிழல்களைப் போல மறைந்துகொண்டிருக்கும் வாழ்வில் நாம் எதைத் தேடிக்கொண்டிருக்கின்றோம். நீரில் விழும் நிலவின் வர்ணத்தைக் கைகளில் பிடித்துவிட முடியுமென்று நம்பும் மழலையைப் போலத்தான் எல்லாப் பொழுதும் எதுவுமற்றுக் கரைகின்றனவோ?
கடக்கமுடியாத் தனிமையை இங்கேதான் கரைத்து மீளவும் எழுந்தேன் என கடலொன்றைக் காட்டிக்கொண்டிருக்கின்றேன். வெறுங்கால்களுடன் நடக்கும் எம் தடங்களை அலைகள் வந்து சுவடுகளின்றி அழித்தபடி போய்க்கொண்டிருக்கின்றன.
பூரணை நிலவு.
நிலவைச் சுட்டிக்காட்டும் விரல்களைப் பார்த்தபடி அழகிய நிலவை தவறவிட்ட கதைதானோ இதுவரை கடந்துவந்த வாழ்வு என நெஞ்சலறி அதிர்கின்றது. மனதின் தவிப்பு புரிந்தோ அல்லது புரியாமலோ என் விரல்களை இதமாய் கோர்த்துக்கொள்கின்றாய்.
அன்பே, நேற்று, நம்மிடையே கவிழ்ந்திருந்த பெரும் மெளனத்தினூடு நாம் இதுவரை கடக்காத்தூரங்களைப் பேசிக் கடந்தோம்.
04.
இலையுதிர்த்து உறங்குநிலைக்குப் போயிருந்த மரங்களிலெல்லாம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் மென்பச்சை துளிர்கள் தளிர்க்கத் தொடங்கிவிட்டன. இருக்கும் துண்டுநிலத்திலும் எதையாவது கட்டிவிடத்துடிக்கும் மனிதர்களின் பேராசையைப் பார்த்தபடியும் இன்னும் பச்சையம் இழக்காத இந்த மரங்கள்தான் எத்தகைய மகத்துவம் வாய்ந்தவை.
ஒவ்வொரு வருடமும் சொந்தமாக ஒரு சைக்கிளை வைத்திருக்கவேண்டும் என்கின்ற ஆசை இறுதியாய் நிறைவேறிவிட்டது. நமது சைக்கிள் சக்கரங்கள் உருண்டு கொண்டிருக்கின்றன, அதைவிட வேகமாய் 'விசையுறு பந்தினை'ப்போல மனம் விரைகின்றது. மேடும் பள்ளமான நிலங்கள் கடந்து, தான் தோன்றித்தனமாய் வளர்ந்திருந்த செடிகளின் பூக்களின் அழகில் கிறங்கி , வாவி நோக்கி பறக்கும் இரண்டு பறவைகளில் சிறகசைப்பை நிதானமாய் இரசித்து நீள உழக்கின்றோம் எமது சைக்கிள்களை.
இதுதான் நான் படித்த உயர்கல்லூரியென சூரியஒளி சுவர்களில் சிதறி மிதந்துகொண்டிருந்த ஒரு இடத்தைக் காட்டினாய். இங்கேதான் எனது முதல்காதல் முகிழ்ந்து இந்த இடத்தில்தான் எனது முதல் முத்தத்தைப் பெற்றேனென இரண்டு கட்டிடங்களுக்குள் இடையிலிருந்த பெருமரமொன்றைக் சுட்டினாய். எனது முதல் முத்தமும் மரத்தின் கீழேதான், ஆனால் கல்லூரியில் அல்ல, பூங்காவில் எனச் சொல்கிறேன்.
பூங்காக்களில் மறைந்துபோனவர்களின் ஞாபகமாய் மரங்களை நாட்டி பெயர்களைக் குறிப்பதுபோல, ஏன் நமது முத்தங்களின் நினைவுகளுக்கும் மரங்களை நடக்கூடாதென கேட்டேன். அவற்றுக்கு முத்தமரங்களென பெயர் சூட்டி, இங்கே முத்தமிடுவதற்கு மட்டுமே அனுமதியெனவும் எழுதி வைக்கலாமென சொல்லிச் சிரித்தாய் நீ .
அருகிலிருந்த DQ யில் வாங்கிய ஜஸ்கிறிமை பாடசாலை மைதானத்துப் பெஞ்சில் இருந்து குடித்துக்கொண்டிருந்தபோது, விளையாட்டுக்கள் மீதிருக்கும் பெருவிருப்பையும் எனக்குப் பிடித்த ஆட்டங்களையும் சொல்லிக்கொண்டிருந்தேன். வெற்றியையும் தோல்வியையும் நிர்ணயிக்காத விளையாட்டுக்கள் மீதே உனக்கு ஈர்ப்பிருக்கிறதெனக் கூறினாய். எதை நோக்கியோ அல்லது ஒரு முடிவை நோக்கி விரைந்துசெல்வதே வாழ்விற்குரிய இலட்சியமாகவும், இலட்சணமாகவும் நிர்ணயிக்கப்படுகின்ற காலத்தில் விளையாட்டுக்களும் அதையே எல்லைகளாகக் கொண்டிருப்பதும் பெரிய விடயமில்லை என்றாய். தோற்பதில் எந்த அவமானமில்லையென்றும் தோற்பவராலேயே புதிதாய் நிறையக் கற்றுக்கொள்ளமுடியுமெனவும் முன்னெப்போதோ எழுதியது எனக்குள் மின்னிவிட்டு மறைந்தது.
ஏற்றம், இறக்கம், சமதரையென எல்லா நிலப்பரப்புக்களையும் சைக்கிளால் கடப்பதுபோல ஒருநாள் வாழ்வென்பதும் அனைத்துத் தருணங்களையும் கொண்டது. இதுதான் நல்லதென எந்த இடத்திலும் நின்றுவிடமுடியாது. ஒவ்வொரு புள்ளியையும் வாழ்வு உருண்டோடிக் கடந்துகொண்டேயிருக்கின்றது.
ஒவ்வொரு நேசிப்பின் பின்னால் வெறுப்பும், ஒவ்வொரு உறவின் பின்னால் பிரிவும் எப்போதும் மறைந்துகொண்டிருக்கின்றது என்று நன்கறிந்தபின்னும் ஏன் நாம் நேசிக்க விழைகின்றோம். நமக்குள் பெருகிக்கொண்டிருக்கும் அன்பினைப் பிறருக்கு பகிர்தலே அற்புதமென காதலிக்கும் நாம் ஏன் அதைக்கொண்டே பின்னர் இன்னொருவரை கட்டிப்போட முயல்கின்றோம்.
எனக்கு முன்னே கேசம் காற்றில் பறக்க, கழுத்தில் வியர்வை வழிய, ஒற்றைக் காற்கொலுசோடு சைக்கிள் ஓடிக்கொண்டு போகும் உன்னைவிட என் கேள்விகள் இன்னும் வேகமாய் விரைகின்றன.
என்னுடைய பலவீனங்களுடன், எழுத்தில் வைக்கின்ற வாழ்வுநிலைக்கு இன்னமும் போகவே முடியாத நான், உன்னை நேசிக்காமலே இருந்திருக்கலாமோ எனச் சந்தேகங்கள் காற்றில் அலையத் தொடங்க சோர்ந்து போகின்றேன்.
காதலென்பது எதன்பொருட்டும் சமரசம் செய்யாதது மட்டுமல்ல, சுதந்திரத்தின் சிறுநுனியையும் கருக்காமல் இருப்பதும் கூட. எப்போதேனும் ஒருநாள் நாங்கள் பிரிந்துபோனாலும் இதே காதலுடன் உன்னை அனுப்பிவைக்கும் மனம் வாய்க்க வேண்டும்.
05.
எப்போதும் தனிமையிற்குள் புதைய விரும்பும் நான், அந்த மாலையை விரும்பியே உருவாக்கினேன். வருவதற்கு நேரமாகும் என்ற நீ சொன்னபோதும், காத்திருக்கின்றேன் என புத்தகத்தை விரித்து வைத்திருந்தேன்.
இம்முறை செல்லுமிடத்தை என்னைத் தீர்மானிக்கச் சொன்னாய். நாங்கள் அந்த pubற்கு நடந்து போய்க்கொண்டிருந்தபோது மாலைச்சூரியன் உன் பொன்முடிகளில் ஒளிர்ந்துகொண்டிருந்தது. மெல்லிருள் சூழ்ந்த மெல்லிசை கசிந்த இடத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்கின்றோம். உனக்குப் பிடித்தமானது ஷெர்ரி மிதக்கும் cocktails என்றாலும் இன்றென் தேர்வென்பதால் பெருங்குவளை நிரம்ப பியருக்கு ஓடர் கொடுத்தோம்.
உன்னோடு மட்டுமின்றி பிறரோடும் ஒரு எல்லைக்கு மீறி எதுவும் தொடர்ந்து கதைக்கமுடியாது வந்துவிடும் அலுப்பு இன்றும் எட்டிப் பார்த்துவிடுமோ பயந்துகொண்டிருந்தேன். இப்படி எங்கையோ தொலைந்துவிடுவது என் இயல்பே தவிர, அது எதிரே இருப்பவரின் தவறுகளல்ல.
எமக்குத் தரப்பட்ட குவளைகளில் 'அலெக்ஸாண்டரை' நிரப்பிக்கொள்கின்றோம். மிதமாகப் பொரிக்கப்பட்ட இறால் துணைக்கு வந்து நிற்கின்றன. ஜோர்ஜ் எஸ்ராவின Budapest பாடலின்
"Give me one good reason/ Why I should never make a change/Baby if you hold me/Then all of this will go away" வரிகளில் நின்று நிதானித்து மீள்கின்றேன்.
பெற்றோர் இன்னொரு நாட்டிலிருக்க பதின்மத்தில் இந்நாடு ஏகியவள். இங்கே வந்த தொடக்கத்தில் நெருக்கமாயிருந்த தோழியொருத்தியை நெடுங்காலத்தின் பின் விலத்தவேண்டிய ஊடலைச் சொல்லிக்கொண்டிருந்தாய். நட்பென்பது அவ்வப்போது அடிபடுவதும் பிறகு அரவணைத்துக்கொள்வதுந்தானே. ஆனால் அதைச் சொல்லாது பியரை அவ்வப்போது நம் கிண்ணங்களில் நிரப்பியபடி பொறுமையாய்க் கேட்டுக்கொண்டிருந்தேன்.
மணித்தியாலங்கள் கழிவது தெரியாது நிறையக் கதைத்துக் கொண்டிருந்தோம். உணவருந்தி வெளியே வந்தபோது இரவு இன்னும் அழகாய்த் தெரிந்தது. பெருநகரத்தில் திசைகள் தொலைந்து சப்வேயைத் தேடி நடந்தபடியே இருந்தோம். ஆனால் அது அலுப்போ சோர்வோ தராத நடை.
சிலவேளை இந்தப் பொழுது இப்படியே கைநழுவிப்போய்விடக்கூடாது என்றுதான் திசைகளைத் தொலைத்தமாதிரி அலைந்து கொண்டிருந்தோமோ தெரியாது.
நீ இன்னும் அழகாய் இருப்பதாகவும், நான் இன்று நிறையச் சிரித்துக்கொண்டிருப்பதாகவும் இருவரும் மாறி மாறி நம்மைப் பாராட்டியும் கொண்டோம்.
என்றேனும் ஒருநாள் நெறியாள்கை செய்யும் என் நாடகத்திற்கு நீ கட்டாயம் வரவேண்டும் என அழைத்தேன். மொழி தெரியாவிட்டாலும் அரங்கிற்கு வந்து உன் ஆர்வத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றேன் என்றாய்.
அன்றைய என் தனித்த சப்வே பயணம் எனக்கு வழமைபோலில்லாது இனிமையாய் இருந்தது. Broadway ஸ்ரேசனைக் கடக்கும்போது ரொறொண்டோவின் அழகை மறைக்கின்றதாய் எரிச்சல் தரும் நெடிதுயர்ந்த கட்டடங்கள் ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை.
என்னிருக்கையிற்கு எதிரே முத்தமிட்டுக் கொண்டிருந்த இணையிற்கு, எப்போதாவது அரிதாய்த் தோன்றும் புன்னகையொன்றைப் பரிசளித்தேன்.
எவரது வெளியையும் எவரும் குறுக்கிடாத, எவர் மீது எவரும் சார்ந்திடாது, இது என்னவகையான உறவென்று தெரியா நேசம் இரவில் ஒரு மின்மினியைப் போல் இன்னமும் பறந்துகொண்டிருக்கின்றது.
இது போல ஒரு பொழுது இனி இப்படி வனப்பாய் அமையுமா தெரியாது. இதே அனுபவம் இன்னொருமுறை வாய்த்தால் இப்படி நிறைவாய் இருக்குமா என்றும் தெரியவில்லை.
நாங்கள் காதலர்களுமில்லை. நாம் காதலர்களாவதற்கான எந்தச் சிறு நிகழ்தகவும் ஒருபோதும் சாத்தியமுமில்லை.
காதலில் மட்டுந்தானா எல்லாம் தொலைந்து பறத்தல் சாத்தியம்?
இல்லை என்றது இந்த நாள் மற்றும் நீ.
06.
'எல்லாவற்றையும் பொதுவில் பகிரும் நீயேன் இதையும் பகிரக்கூடாது?'
'பகிர்வதில் எந்தப் பிரச்சினையுமே இல்லை. எனது விருப்பு மிக எளிதானது.'
'அப்படியெனில் சொல்லு...'
'எப்போதும் என் எல்லாப் பயணங்களிலும் உற்சாகமாய் வரக்கூடிய ஒரு சகபயணி. கொஞ்சம் தமிழ் வாசிக்கத் தெரிந்தால் நல்லது; மூக்குத்தி அணிய விருப்பமுடையவராய் இருப்பின் இன்னும் இனிது.'
'அவ்வளவுதானா?'
'இவ்வளவேதான்.'
07.
எப்போதாவது நின்று நிதானித்து உங்கள் கடந்தகாலத்தைத் திரும்பிப் பார்த்திருக்கின்றீர்களா? எதிர்காலத்தை எட்டிப் பிடிக்கவே நேரமில்லாதபோது, நிகழ்காலமே நழுவிப்போய்க்கொண்டிருக்கும்போது கடந்தகாலந்தான் இப்போது முக்கியமென நீங்கள் முறைக்கவும் கூடும். மேலும் கடந்தகாலம் தேவையில்லாத நினைவுகளையெல்லாம் குப்பைகளாய்க் கூட்டிக்கொண்டுவந்துவிடுமென முணுமுணுப்பதையும் அலட்சியம் செய்துவிடமுடியாதுதான். ஆனால் ஏதாவது புகைப்படத்தையோ அல்லது ஏதேனும் ஒரு நினைவையோ தற்செயலாய்ச் சந்திக்கும்போது உங்களிடம் ஒரு புன்னகை மலர்வதை மறைக்கமாட்டீர்களல்லவா?
நான் புன்னகை மலரச்செய்யும் அந்தக் கணத்தைத்தான் உள்ளங்கையில் பொத்திவைத்தபடி உங்களைத் தொடர்ந்து உரையாடக் கேட்கின்றேன். அந்த அழகிய கடந்தகாலத்தின் தருணம் - உங்கள் வாழ்க்கை கடந்தகாலத்தில் வீணாகப் போகவில்லை என மெல்லியகுரலில் ஒரு பாடலாய் இசைப்பது கேட்கின்றதா? எதுவுமே இறந்தகாலத்தில் செய்யவில்லையென்ற அலுப்பை, இல்லை நிறையவே கண்டும் அனுபவித்தும் வந்திருக்கின்றேன் என இந்தப்பாடல் உள்ளத்தைப் பூரிக்கச் செய்கின்றதா? வாழ்க்கையில் சின்னச் சின்னத் தருணங்கள் முக்கியமானவையென மீண்டும் மீண்டும் கடந்தகாலம் உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றதல்லவா?
'நீ இந்த நள்ளிரவில் இன்னும் நித்திரைகொள்ளவில்லையா?'
'நானொரு ஆந்தை; ஆந்தைகள் ஆரவாரிப்பதற்கெனவே இரவுகள் வருகின்றன.'
'அப்படியா?'
'மிக மிக அமைதியான இரவில் மழைபொழிந்துகொண்டிருப்பதை மட்டுமின்றி அதனோடும் அதுவில்லாமலும் இருளில் கரையும் சிறிய சப்தங்களைக் கேட்பதும் எனக்கு மிகப்பிடித்தமானது.'
'நீ Paulo Coelhoவின் Alchemistல் வந்த protagonist ஐ எனக்கு நினைவுபடுத்துகின்றாய்'
'அந்த நூலைக் கேள்விப்பட்டிருக்கின்றேன். கதையும் ஒரளவிற்குத் தெரியும், ஆனால் வாசித்தில்லை.'
'அப்படியொருவனை என் வாழ்க்கையில் சந்திக்கவேண்டுமென விரும்பியிருந்தேன். உன்னைச் சந்திப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.'
'நன்றி. நான் அந்தளவு மகிழ்ச்சிகொள்வதவற்கு உரித்தானவனல்ல. இயற்கையை, சிறுசத்தங்களை இரசிக்கும், ஆலங்கட்டி மழையில் மனமும் உடலும் நனைகின்ற ஆயிரக்கணக்கான தறிகெட்டதுகள் இன்னும் இந்த உலகில் இருக்கின்றன.'
நாட்கள்; வாரங்கள்: மாதங்கள்.
கதை; சிரிப்பு; பகிர்தல்கள் மற்றும் பகிரல்கள்.
யன்னலோரம், நீ தந்த ஐந்தூரியம் பூக்கத் தொடங்கிவிட்டன. சாப்பாட்டு மேசை மூங்கில் குருத்துக்களும் சிரிக்கின்றன. அணில்கள் அந்தப் பழைய பைன்மரத்திலேறி ஏறி குருவிகளைத் துரத்துகின்றன. சென்றமுறை காயப்பட்ட ரெட் ரொபினை கராஜிற்குள் தனிமையில் விட்டு பூனையிடம் பலிகொடுத்தமாதிரி இல்லாது இம்முறை இன்னும் கவனமாக இருக்கவேண்டும்.
'நீ இப்பவாவது சொல்வாயென எதிர்பார்த்தேன்'
'என்ன?'
'இவ்வளவு காலமாய் கதைத்துக்கொண்டிருக்கின்றோமே?'
'நான் நெருக்கமாய்ப் பழகுபவர்கள் மிகக்குறைவு. அதிலும் அவர்களோடு நிறையப் பகிர்வதென்பது இன்னும் அரிது'
'அப்படியெனில் நான் அவர்களிலிருந்து வித்தியாசமானவள்.'
'நிச்சயமாக.. அதனால்தானே ஒருநாளின் சலிப்பிலிருந்து, துயரிலிருந்து, சட்டென்று புன்னகைக்க வைக்கும் தருணங்கள் வரை என எல்லாவற்றையும் உன்னோடு பகிர்ந்துகொண்டிருக்கின்றேன்.'
'எல்லாம் சரி. ஆனால் நீயின்னும் என்னிடம் அதை உரியமுறையில் கேட்கவில்லை.'
'எதை?'
'உண்மையிலே தெரியாதா?'
'சிலவேளைகளில் என்னால் உன் அலைவரிசையைச் சட்டெனப் புரிந்துகொள்ள முடிவதில்லை'
'Dont you ever think to propose me?'
'................'
மெளனம்...இடைவெளி.
பிடித்த விழிகளையே நேருக்குநேராயப் பார்க்கமுடியாத் தவிப்பு.
'ஒன்றுமே சொல்ல மாட்டாயா?'
'என்ன சொல்வதென்று தெரியவில்லை.'
மீண்டும் அமைதி.
சின்னச் சின்னச் சப்தங்கள் பிடிக்கும். ஆனால் இப்போதில்லை.
'உனக்கு மூக்குத்தி அணிபவர்களைத்தானே பிடிக்கும். அதுதான் என்னைப் பிடிக்கவில்லை.'
எழுந்து போகிறாய். இவ்வளவு காலமும் கதைத்ததைவிட இன்னும் நிறைய அந்த நேரத்தில் கதைக்கவிரும்பினேன். ஆனால் எதையும் திரும்பிப் பேசாதது மட்டுமின்றி உன்னைப் போகவேண்டாமெனச் சொல்லவுமில்லை.
(நன்றி: ‘காலம்’ இதழ் 49, எப்ரல், 2016)
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment