சிலவாரங்களுக்கு முன் நூலகத்திற்குச் சென்றபோது 'ஈழத்தமிழர் புகலிட வாழ்வும் படைப்பும்' என்ற ஆய்வுநூலைப் பார்த்தேன். இந்நூலை த.வெற்றிச்செல்வன் தனது முதுகலை ஆய்விற்காக எழுதியிருக்கின்றார். ஆய்வுப் பேராசிரியர்/ நண்பர்கள் இது அவ்வளவு எளிதான் காரியமில்லை என்றபோதும் சோர்வடையாது ஒரளவு பரவலாக வாசிக்கவும் தகவல்களையும் சேகரிக்கவும் வெற்றிச்செல்வன் செய்திருக்கின்றார் என்பது மகிழ்ச்சியாக இருந்தது. சுமதி, வசந்தி ராஜா, திருமாவளவன், செழியன், பிரதீபா, செல்வம் என கனடாவிலிருக்கும் நிறையப்பேரின் கவிதைகளும், ஏனைய பிற படைப்புக்களும் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கின்றன. அண்மையில் காலமான திருமாவளவனின் கவிதைகள் நிறைய இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. திருமாவளவன் இந்த நூலைப் பார்த்திருப்பாரோ தெரியவில்லை. பார்த்திருந்தால் நிச்சயம் அவர் மகிழ்ந்திருப்பார்.
ஒரு கவிதைத் தொகுப்பை நான் வெளியிட்டதே எனக்கு கிட்டத்தட்ட மறந்துபோன நிலையில் எனது கவிதைகள் சிலவும் இந்த நூலில் காணக்கிடைத்தது என்னளவில் ஆச்சரியமே. ஆனால், நான் கொழும்பில் வசித்துக்கொண்டிருப்பதாய் உசாத்துணையில் தவறாக எழுதப்பட்டுமிருந்தது.
இதில் சேர்க்கப்பட்டிருக்கும் கவிதைகளில் ஒன்று இலங்கையில் இந்திய
அமைதிப்படை வந்த காலங்களில் நிகழ்த்திய கொடுமைளையே பேசுகின்றது. அது
மட்டுமின்றி என் சிறுகதைத் தொகுப்பில் முதலாவதாய் இருக்கும் கதையான 'ஹேமாக்கா' கூட இந்திய அமைதிப்படைக்காலம் பற்றியது. அதிகாரத்தை கையில்
வைத்தபடி, அமைதிப்படை காலத்திலிருந்து இன்றும் தமிழகத்திலுள்ள அகதி
முகாங்கள் வரை பெண்கள் மீதான் பாலியல் வன்கொடுமைகள்
நிகழ்ந்துகொண்டிருப்பதை பாலன் எழுதிய 'சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை
முகாம்' என்ற நூலில் கூடக் காணலாம்.
ஆனால் நாங்கள் என்றுமே மறந்துவிடாது -சொற்களால் எதுவும் நிகந்துவிடப் போவதில்லையெனினும்- தொடர்ந்து அதைப் பேசுவோம்.
அமைதியின் மணம்
-----------------------------
ஒவ்வொரு
பெருந்துயர்களின் பின்னும்
நீளும் நம்பிக்கையின் துளிர்ப்பிலே
வாழ்வு பெருகும் எமக்கு
நேற்றுப்பரவிய வெறுமை
துடைத்தெறித்து
நாளையை மீண்டும் சுகிக்க
எங்கிருந்தோ எழும் மிடுக்கு
அவ்வாறான மகிழ்வின்சாயல் கலந்துருகியகணத்தில்
புத்தரையும் காந்தியையும் குழைத்துப்பூசியபடி
அந்நியமான சிலர்
எங்கள் தேசத்தில் பரவினர்
எந்தக்கேள்விகளுமில்லாது
சிரித்தபடிவந்தவர்கள்
முகங்கள் இறுகியபடி
முள்ளுக்கம்பிகளுக்குள் புதைந்ததற்கு
காலம்மாறி வீசிய
அமைதியின் புயலும் காரணமெனலாம்
பிறகு எண்ணெய் மணமும்
அணிவகுப்புத்தடமும்
கலந்து பெருக பீதியில் உறைந்தன
தெருக்கள்
பொழுதெல்லாம் விழிமூடாது
ஊர்களின் அமைதிக்காய்
ஒற்றைக்கால் தவமியற்றியவர்கள்
அதிகாலையில் மட்டும்
துயின்றுபோகும் அதிசயம்
உருக்குலைந்த உடல்கள்
பனிப்புகாரில் மிதக்கையில் மட்டுமே நிகழ்ந்தன
சாரமும்
கைகள் பின்னே வளைக்கப்பட்டிருக்கும் கோலமும்
விழிகள் வெறித்தபடியிருக்கும் கோரமும்
அரணுக்குள்ளிருப்பவர்கள்
அழிவுகளில்லாது திரும்பிச்செல்லல் கூடாதென
நெஞ்சு விம்மித்தணியும்
எதிர்வீட்டு அக்காவின்
ஆடைக்குள் குண்டிருப்பதாய்
எச்சில் தெறிக்கும் பரிகசிப்புடன்
அமைதியானவர்கள் முலைகள்திருகி
கூட்டாய்ப்படர்கையில் அசையாய்ச்சாட்சிகளாவது
நானும் மதியவெயிலும்
நிகழ்வுகளின் தொடர்ச்சியில்
ஆழ்மனதின் துலங்கல்கள் சிதைவுற
மழலையாகிச் சிரித்தபடி
காணாமற்போனாள் அக்கா
ஓர்நாள்
இப்போது புலம்பெயர்வாழ்வு.
நினைவுகளின் செட்டையைக்கழட்டிவிட்டு
துருவக்கரடியின் தோலான போர்வைக்குள்
நடுநடுங்கியபடி விரகமெழும்
உறைபனிக்காலம்
நேற்று நடந்தவையெதுவும்
என்னைப்பாதிக்காதெனும் திமிருடன்
கொஞ்சம் கொச்சைத்தமிழும்
அதிகம் ஆங்கிலமும்
நாவில் சுழலும் அன்புத்தோழியுடன்
மரபுகளைச் சிதைத்தபடி
கலவியும் கிறங்கலுமாய்
கழிகிறது வாழ்வு
எனினும் அவள் முலைகள் சுவைத்து
முயங்கும்பொழுதெல்லாம்
எண்ணெய் பிசுபிசுக்கும்
அமைதியின் மணமும்
குறியென விறைத்துநிற்கும்
துப்பாக்கிமுனையின் நினைவும்
ஏனோ பீறிட்டெழுகிறது
எல்லாவற்றையும் புறக்கணித்து.
2001.11.02
அதிகாலை 4.04
0 comments:
Post a Comment