ஷோபாசக்தியிற்கு வரவர என்னவாயிற்றென புரியவில்லை. இப்போதெல்லாம் மிகவும்
ஒற்றைப்படையாக எழுதிக்கொண்டே போய்க்கொண்டிருக்கின்றார். போர்னோகிராபியை தடைசெய்வது பற்றியெழுதிய அவரது பதிவு ஒருவகை 'உணர்ச்சி' வாசிப்பில்
எல்லோருக்கும் உற்சாகமளிக்கக்கூடியது. ஆனால் ஆழமாகப் பார்த்தால் எவ்வளவு
அபத்தமெனத் தெரியும்.
'தடை' என்ற வார்த்தையை மிக நிதானமாகவே நாம்
பாவிக்கவும், அனுமதிக்கவும் வேண்டியிருக்கின்றது. அதிலும் மிகுந்த
அதிகாரங்கள் நிரம்பிய 'அரசு' மற்றும் 'அரசாங்கம்' என்பவற்றினூடாக வரும்
'தடை' என்பவை குறித்து இன்னும் கவனமாகவும் இருக்கவேண்டியிருக்கிறது.
எனெனில் அரசு தனக்குப் பிடிக்காத எல்லாவற்றையும் 'தடை'க்குள் கொண்டுவர
இந்தத் 'தடை'கள் ஒருவகையில் எளிதாய்க் காரணமாகிவிடும்.
இன்று
தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கும் 'டாஸ்மாக்' தடை போராட்டங்கள் குறித்து
கருத்துச் சொல்ல விரும்பவில்லை. ஆனால் ஒரு உதாரணத்திற்கு குடியினாலும்
கூடத்தானே (தரவுகள் கூட ஆதாரமாய் இருக்கும்) நிறைய குடும்பவன்முறைகள்
நடக்கின்றன, எத்தனையோ சிறுவர்களின் வாழ்க்கை பாழாக்கப்படுகின்றன எனச்
சொல்லி இந்தியா முழுக்க முற்றாக குடியை அரசு 'தடை' செய்யவந்தால் ஷோபாவின்
பதில் என்னவாக இருக்கும்? அவரின் 'போர்னோ லொஜிக்'கின்படி இதற்கும் ஆதரவாகவே
இருக்குமெனவே நம்புகின்றேன். இதை இன்னும் நீட்சித்து மாடு
சாப்பிடக்கூடாது, கோமியம் மட்டுமே குடிக்கவேண்டும் என்று நிறைய தடைகளைச்
சொல்லிக்கொண்டு போகலாம். ஆகவேதான் மீண்டும் மீண்டும் 'தடை' என்பதை அதுவும்
முக்கியமாய் அதிகாரம் நிறைந்த அரசிடம் இருந்து எழும்போது மிகக்கவனமாக
இருக்கவேண்டும் எனச் சொல்ல விரும்புகின்றேன்.
போர்னோகிராபியில்
பாவிக்கப்படும்/பண்டமாக்கப்படும் பெண்கள் குழந்தைகள் குறித்து எல்லோருமே
கவலைப்படத்தான் வேண்டும் ஆனால் அதேசமயம் ஷோபா மென்மையாகக் குறிப்பிட்டு
தப்பித்துச்செல்லும் இவ்வாறாக கடத்தப்படும் பெண்களும், சிறார்களும்
அதிகளவில் பாலியல் தொழில்களுக்கே பயன்படுத்தப்படுகின்றனர் என்பதே உண்மை.
ஏன் அரசோ அல்லது ஷோபாவோ போர்னோகிராபியைத் தடைசெய்யமுன்னர் அல்லது
தடைசெய்கின்ற சமாந்தரத்தில் பாலியல் தொழிலையும் தடைசெய்யவேண்டுமென முதலில்
கோரக்கூடாது. இன்னமும் இந்தியாவில் சில விதிமுறைகளுடன் பாலியல் தொழில்
செய்யலாமெனவே சட்டம் சொல்கின்றது. கனடாவில் கூட பாலியல் தொழில் செய்யலாம்,
ஆனால் விதிமுறைகள் இருக்கின்றன. இந்த 'விதி'கள் கூட பாலியல் தொழிலாளர்க்கு
எதிராகத்தான் இருக்கின்றதே தவிர, அவர்களைத் தேடிச் செல்வோருக்கு எதிராக
அல்ல என்பதையும் நாம் தெளிவாக விளங்கிக்கொள்ளவேண்டும். ஆகவேதான்
இங்கேயிருக்கும் பாலியல் தொழிலாளர்கள் விதிமுறைகளைத் தங்களுக்குச்
சாதகமாய் மாற்றும்படி கனடா நீதிமன்றங்கள் எங்கும் ஏறியபடி இருக்கின்றனர்.
போர்னோகிராபியை விட பாலியல் தொழிலுக்காகவே பெண்கள் சிறுவர்கள் பல
மில்லியன்களில் கடத்தப்படுகின்றனர். மிக மோசமாகச் சித்திரவதை செய்யப்பட்டு
'தொழிலுக்கு'ப் பழக்கப்படுத்தப்படுகின்றனர். சென்ற வாரம் கூட இது குறித்து
நிறையத் தகவல்களுடன் ஒரு தேவாலயத்தின் முன் Human Trafficking ற்கு
எதிராகக் கையெழுத்து வைக்கும்படி கேட்டுக்கொண்டிருந்தனர். எனக்கு
கையெழுத்திடுவதில் மறுப்பபெதுவுமில்லையெனினும் மதம் சார்ந்தவர்களினூடாக -பல
விடயங்களில் அவர்களின் நம்பிக்கையோடு ஒத்துவராததால்- முதலில்
தயக்கமிருந்தது. எனினும் நல்லவை நடக்கும்போது முழுச்சித்திரத்தையும்
பார்க்கத்தேவையில்லை என்ற அடிப்படையில் கையெழுத்திட்டிருந்தேன். கனடாவில்
கூட இப்படி பெண்கள் கடத்தப்பட்டு தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றார்களா என
கூடவே வந்த நண்பருக்கு வியப்பு. அந்த நண்பரைப் போலவே பலர் இன்னும்
அப்பாவிகளாய் இங்கு இருக்கின்றனர் என்பது வேறு விடயம். கனடாவிற்குள்ளும்
அமெரிக்காவிற்குள்ளும் இதற்காய் கடத்தப்படுகின்றவர்கள் உலகத்திலேயே பெரும்
விகிதத்தில் இருக்கின்றார்களென்பதையே தரவுகள் சொல்கின்றன.
ஆக,
போர்னோகிராபியை ஷோபா தடைசெய்யக் கோருவதைப் போல, நாம் பாலியல் தொழிலைத் தடை
செய்ய இந்தியாவில் மட்டுமில்லை உலகெங்கும் கோருவோம். அவ்வாறே எழுதி ஆதரவு
காட்டாது மட்டுமில்லாது, போர்னோவைத் தடைசெய்வதற்கு ஆதரவு கொடுத்து நமது
'பெருந்தன்மை'யைக் காட்டுவதைப் போல, ஆண்களாகிய நாம் பாலியல் தொழிலாளிகளைத்
தேடிப் போவதையும் முதலில் நிறுத்தியும் கொள்வோம்.
இறுதியாய் ஷோபா எழுதுவது இன்னொரு வகையான க்ளிஷே...
"நாளை நீங்கள் அல்லது உங்கள் பிள்ளைகள், துணையோடு சம்போகத்தில் ஈடுபடும்
காட்சி இவ்வகை இணையத்தளங்களில் 'லைவ்'வாக ஒளிபரப்பப்படுவதற்கு எல்லாவகையான
சாத்தியங்களும் உண்டென்பதை மறவாதீர்கள்."
இதைத்தான் பெண்கள்
முகநூலில் படம்போடுவதிலிருந்து எல்லாவற்றுக்கும்... பெண்களே கவனம்
எச்சரிக்கை என எல்லோரும் எழுதித் தீர்க்கின்றார்கள். நீங்களுமா ஷோபா? உடல்
குறித்தோ செக்ஸ் குறித்தோ நாம் குற்றங் கொள்ளத்தேவையில்லை.
எமது உடல்களும்
சம்போகங்களும் எந்தக்கணத்திலும் திறந்தவெளியில் அவிழ்த்துவிடப்படக்கூடிய
அந்தரங்கமற்ற இன்றைய காலத்தில் அவ்வாறு சித்தரிக்கப்பட்டால்/காட்டப்பட்டால்
அதற்காய் எமது காதலிகளோ மகள்களோ சகோதரிகளோ கவலையோ குற்றமோ -முக்கியமாய்
உங்களை நீங்களே கொல்லத்தேவையில்லை என- அவர்களுக்குத் திரும்பத் திரும்பச்
சொல்வோம். அவ்வாறாக திறந்தவெளியில் இந்த விடயங்களை காட்சிப்படுத்துபவனே,
தான் ஒரு சக மனிதப்பிறவியாக இருக்கச் சாத்தியவன் அல்ல என அவன்
குற்றவுணர்வையும் வெட்கத்தையும் கொள்ளவேண்டுமே தவிர, உங்களில் எந்தத்
தவறுமில்லையென நமக்குத் தெரிந்த பெண்களின் ஆழ்மனதில் பதிய வைப்போம்.
மேலும் இன்றைய சூழலில் போர்னோகிராபியால் மட்டுமல்ல நம்மைப் போன்ற
ஒருகாலத்தில் காதலன்களாகவோ துணைவர்களாக நெருங்கிப் பழகிய ஆண்களாலேயே பல
நெருக்கமான புகைப்படங்களும்/விடீயோக்களும் வெளியிடப்படுவதையும் நாம்
மறந்துவிடவும் கூடாது.
ஆகவே எல்லோருடனும் சேர்ந்து தொபுக்கடீரென
விழுந்து நம்மை நியாயவான்களாய்க் காட்டமுன், ஆண்களாகிய நாம் இவற்றை
அதிகாரம் கொண்டு தடைசெய்வதைவிட, நம்மிலிருந்து எப்படித் தொடங்கலாம் என
சிந்தித்துப் பார்க்கலாம்.
எனவே மீண்டும் கூறுகின்றேன்
போர்னோகிராபியைத் தடை செய்வதற்கு முன் பாலியல் தொழிலைத் தடை செய்யுங்கள்.
இந்த இரண்டையும் செய்வதற்கு முன் ஆண்களாகிய நாங்கள் பாலியல் தொழிலாளிகளைத்
தேடிப் போவதை முதலில் நிறுத்திக்கொள்வோம்.
(Aug 06, 2015)
ஷோபா சக்தியின் பதிவு: https://www.facebook.com/shoba.sakthi.1/posts/10207207104757453?hc_location=ufi
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
யோசிக்கவேண்டியது ?
6/30/2016 01:28:00 PMPost a Comment