நானுன்னை முத்தமிடுகையில்

நானுன்னை முத்தமிடுகையில்
அனுபவப்புனைவு

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

நாடற்றவனின் குறிப்புகள்

நாடற்றவனின் குறிப்புகள்
கவிதை

பெருமாள் முருகனின் 'ஆலவாயன்'

Wednesday, June 22, 2016


மாதொருபாகனில்' பொன்னா குழந்தையில்லாது பதினான்காம் திருவிழாவில் இன்னொரு ஆடவனோடு உறவுகொள்வதாகவும், காளி அதைக் கேள்விப்பட்டு கோபத்துடன் வீடு திரும்புவதுமாய் முடிகிறது. மாதொருபாகனில் எவ்விதமான முடிவை இறுதியில் காளி எடுக்கின்றார் என்பது வாசகருக்கு திறந்தவெளியாக விடப்பட்டிருக்கின்றது. அதன் தொடர்ச்சியாக பெருமாள் முருகனின் எழுதிய இரண்டு நாவல்களில் ஒன்றே 'ஆலவாயன்'. மற்றது 'அர்த்தநாரி'.

ஆலவாயன்' காளி தனக்கான முடிவை எடுத்து தூக்கில் தொங்குவதுடன் தொடங்குகின்றது. 'அர்த்தநாரி'யில் (அடுத்து வாசிக்க இருப்பது) காளி உயிருடன் இருப்பதாய் வைத்து எழுதப்பட்டிருக்கின்றது. உண்மையில் 'ஆலவாயன்' முழுக்க முழுக்க பெண்களை வைத்து எழுதப்பட்ட பிரதியெனச் சொல்லப்படவேண்டும். பொன்னா எப்படி காளியின் தற்கொலையைத் தாங்கிக்கொள்கின்றார், அந்தத் துயரிலிருந்து எவ்வாறு மீள்கின்றார் என்பதெல்லாம் மிக விரிவாக எழுதப்பட்டிருக்கின்றது. அவரது தயாரும், மாமியாரும் அவரைத் துயரிலிருந்து மீட்டெடுப்பது மட்டுமில்லாமல், பொன்னா பதின்காம் நாள் திருவிழாவிற்குப் போனதால்தான் காளி தற்கொலை செய்தார் என்பதையும் மிக நுட்பமாக வேறுகதையொன்றை கட்டியெழுப்பது மூலம் மறைத்து அவர்கள் பொன்னாவைக் காப்பாற்றுகின்றனர். துயரிலிருந்து மீளும் பொன்னா, எப்படி காளி செய்த தோட்ட(காட்டு) வேலைகளை தானே தனித்த்ச் செய்யத்தொடங்குகின்றார் என்பதையும், அவரின் தாயார்/மாமியார் எவ்வாறு அந்த மீளுயிர்ப்புக்கு ஒத்துழைக்கின்றனர் என்பதாகவும் கதை நீளும். இதற்கிடையில் பொன்னா கர்ப்பமாகுவதும், அதை காளியின் மூலமே பொன்னா கர்ப்பமானார் என்றமாதிரி தாயும்/மாமியும் ஊரை நம்பவைக்கின்றனர். இந்த உண்மை தெரிந்த வேறு சிலரும் அந்த உண்மையை வெளியே வரச்செய்யாது பொன்னாவைக் காப்பாற்றுகின்றனர்.

ருவகையில் பார்த்தால் இந்தக் கதை பொன்னா கர்ப்பமாவதிலிருந்து 'ஆலவாயன்' என்கின்ற தன் ஆண் குழந்தையைப் பிரசவிக்கின்றவரை நீள்கின்றதெனச்  சொல்லலாம். நாவலில் ஒரு குறிப்பிட்ட சாதியின் பழக்க வழக்கங்கள், உறவுகளுக்கிடையிலான ஊடாட்டங்கள், வாழ்வு முறையில் ஒருவகையான மானுடவியல் பிரதியாக பார்க்கக்கூடியதாய் இருக்கின்றதென்றாலும் சிலவேளைகளில் ஒரு நாவலுக்குரிய மீறிய சித்தரிப்புக்கள் தேவையா என அலுப்பும் வரத்தான் செய்கின்றது. ஆனால் நாவலுக்குள் நல்லாயன் என்கின்ற ஒரு பாத்திரம் வந்தவுடன் நாவல் சுவாரசியமாகிவிடுகின்றது. தான் தோன்றித்தனமாய் எங்கும் அலைந்து திரியும் நல்லாயன் பாத்திரத்தினூடாக அதே குறிப்பிட்ட சாதியின் கீழ்மைகளும், கள்ளத்தனங்களும் நகைச்சுவையாக எடுத்துரைக்கப்படுகின்றது.

ஒரு குறிப்பிட்ட சாதியின் கதையென்றாலும் அந்தச் சாதியின் காட்டில் வேலை செய்யும் பெண், சாமீ என்றும் கவுண்டச்சி எனவும் சாதிக்குரிய மரியாதை கொடுத்து அழைக்கும்போது பொன்னு என்று மட்டும் கூப்பிடு அது போதுமென பொன்னா சொல்லும்போது சாதியை மீறும் தருணங்களை பெருமாள் முருகன் சுட்டவிழைவது இதத்தைத் தருகின்றது.

இது முழுக்க முழுக்க பெண் பாத்திரங்கள் நடமாடும் பிரதியென்றபோதும், இவ்வளவு நுட்பமாய் பெண்களை எப்படிப் படைக்கமுடிந்ததென வியப்பே வந்தது. இந்த இடத்தில் இமையத்தின் பெண் பாத்திரங்கள் - முக்கியமாய் 'எங் கதெ' - ஏனோ நினைவிற்கு வந்தது. பெருமாள் முருகனின் அநேக நாவல்களை வாசித்தவன் என்றவகையில் அவரளவிற்கு பெண்களை சித்தரிக்கும் எல்லைக்கு வருவதற்கு இமையம் போன்றவர்க்கு நீண்டகாலம் எடுக்குமெனவே தோன்றியது.


தமக்குரிய அல்லது தமக்கு வழங்கப்பட்ட எல்லாப் பாடுகளையும் சகித்துக்கொண்டு அதற்குள்ளால் தமக்கான வாழ்வை வாழ்கின்ற பெண்களை மிக இயல்பாகக் கொண்டுவந்த பெருமாள் முருகனைத்தான் இனி எதையும் எழுதக்கூடாதென்று பயமுறுத்திய குரல்களை நினைக்கும்போது, அவர்கள் எந்தத்திசை நோக்கி தம் சமூகத்தைக் கொண்டுசெல்லவிரும்புகின்றார்கள் என்று யோசிக்காமல் இருக்கவும் முடியவில்லை.

(Jan 24, 2016)

0 comments: