‘தாழம்பூ’வும், ‘தோற்றப்பிழை’யும் நூற்றாண்டுகள் தாண்டிய கதையைச் சொல்வதில் ஒரே நேர்கோட்டில் வைத்து வாசிக்கப்படவேண்டியவை. பெண்களான தாழம்பூவும், ஆயியும் வரலாற்றுச் சம்பவங்களிலிருந்து முளைத்துவருகின்றார்கள். காலத்தின் தடங்களிலிருந்து இன்னமும் அழிந்துவிடாது, யாருடடையதோ தொடர்ச்சியாக அவர்கள் இருக்கின்றார்கள். ஒருவகையில் பார்த்தால் அவர்களினூடாக பெண்களின் துயரங்களும், பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளும் இன்னமும் முடிவடையவில்லை எனவும் கூட வாசிக்கலாம்.
‘மாயக்குதிரை’யில் வரும் பெண் கஸினோவிற்குள் தன்னைத் தாரை வார்த்துக்கொடுப்பதைப் போல, ‘கடன்’ கதையில் வரும் ஆண், பிறருக்காய்க் கடன் வாங்கிக்கொடுப்பதால் தன் வாழ்வைச் சீரழிக்கின்றான். ‘கடன்’ கதை ஒரு நல்ல கதையாக ஆகமுடியாமைக்கு, அவன் கடனாளியாவதற்குக் காரணமாக இருந்த தன் தங்கையின் கணவனையோ அல்லது வன்கூவருக்கு தப்பிச் சென்ற தங்கையையோ அறையாமல், தனக்கு அறாவட்டியில் கடன் தந்த தன் நண்பனை மட்டும் அறைவதில் முடிவதும் ஒரு காரணமாக இருக்கின்றது.
புலம்பெயர் வாழ்வில் ஒட்டமுடியாமைக்குப் பலருக்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அதன் பாதகமான ஒருபகுதியை மட்டும் புலம்பெயர் வாழ்வாக தமிழ்நதி சித்தரிக்கும்போது ஒருவகையில் சிக்கல் வருகின்றது. ‘கறுப்பன் என்றொரு பூக்குட்டி’யிலும், ‘மெத்தப் பெரிய உபகாரத்திலும்’ வரும் புலம்பெயர்ந்தவர்கள் தமது பெற்றோரில் அன்பைக் காட்டுவதைவிட, சொத்தில் மீது அபரிதமான ஆசை வைத்திருப்பவர்களாக வருகின்றார்கள். அதேபோல தமிழ்நதியின் அநேக புலம்பெயர் பாத்திரங்கள், தாம் இழந்துவந்துவிட்ட தாய் நிலத்தை மட்டுமே சொர்க்கமாகப் பார்க்கின்றன.
ஒருவகையில் தமிழ்நதியின் கதைகளை பொதுவாக வாசிக்கும்போது புலம்பெயர் வாழ்வு ஒரு திணிக்கப்பட்டுவிட்ட துயரம் என்கின்றதொரு சித்திரம் மட்டுமே எஞ்சுகின்றது. இதைச் சுயவிமர்சனத்திற்குட்படுத்த தமிழ்நதி முயலவேண்டும். இத்தொகுப்பில் தொடக்கத்தில் தமிழ்நதி கனடா-தமிழகம்-ஈழம் என்கின்ற பல்வேறு நிலப்பரப்புக்களில் வாழ்கின்றார் என்ற ஒரு குறிப்பு வருகின்றது. தமிழ்நதி கனடாவிற்கு வராது, இலங்கையில் மட்டும் வாழ்ந்திருந்தால் இவ்வாறு அவர் விரும்பிய நிலப்பரப்புக்களுக்குச் சென்று வாழும் ஒரு 'வசதி'யான வாழ்வு அவருக்குக் கிடைத்திருக்காது என்பதை அவர் நினைத்துப் பார்க்கவேண்டும். ஆகவே புலம்பெயர் வாழ்வானது துயரத்தை மட்டுந்தானா தந்திருக்கின்றதா என்பதை அவர் தன் கதைகளினூடாக எழுதியோ/ மீள வாசித்தோ பார்க்கவேண்டும்.
இத்தொகுப்பிலிருக்கும் ‘காத்திருப்பு’ கதை அது வெளிவந்த காலத்திலேயே சர்ச்சைக்குள்ளாகிய கதை. காணாமல் போகின்ற ஒரு மகனைத் தாய் தேடுவது அதன் பேசுபொருள். அவரது மகன் இராணுவத்தால் பிடிக்கப்பட்டுச் சித்திரவதைக்குள்ளாகி சிறையில் இருந்து வந்தபின், நேரடியாக இயக்கத்தில் சேர்ந்து மரணமடைந்திருக்கின்றார் என்பதைப் பல ஆண்டுகள் காத்திருப்பின் பின் ஒரு தற்செயலான நிகழ்வாய் அந்தத் தாய் அறிந்துகொள்கின்றார். நெடுங்காலத் தேடலிலிருந்த அந்தத் துயரைவிட தாயிற்கு, மகனுக்கு என்ன நிகழ்ந்ததென்று அறிந்த நிம்மதியில் நிறைவாகச் சாப்பிடத் தயாராகின்றார் என்பதாக அந்தக் கதை முடியும். இதுகுறித்த சர்ச்சைகளுக்கு தமிழ்நதியும் தனது தரப்பு விளக்கத்தை அளித்து வாசித்ததாகவும் நினைவு.
அந்தச் சர்ச்சையில் சொல்லப்பட்டதைவிட எனக்கு இந்தக் கதையோடு இருக்கும் சிக்கல் என்னவென்றால், இன்று காணாமல் போன பிள்ளைகளுக்காக/சகோதரர்களுக்காக/துணைகளுக்காக எத்தனையோ பெண்கள் வருடங்கள் தாண்டியும் போராட்டங்கள் செய்து கொண்டிருக்கையில் இவ்வாறான கதைகள் அதன் வீரியத்தை dilute செய்துவிடும் என்பதாகும். இந்தக் கதைபோல காணாமல் ஆக்கப்பட்டவர்கள் திரும்பிவந்து இயக்கத்தில் சேர்ந்து இறந்துபோனது என்பது விதிவிலக்கான ஒன்று. அரிதாகவே நடக்கக்கூடிய ஒன்று.
அத்தோடு இக்கதையிலிருக்கும் பலவீனம் என்னவென்றால் அந்த இளைஞர் 2001ல் இறப்பதாகச் சொல்லப்படுகின்றது. புலிகள் இயக்கத்தில் சேரும்போது சேருபவரின் விபரங்களைக் கட்டாயம் எடுப்பார்கள். அதுபோலவே அவர்கள் மரணமடையும்போதும் உரிய மரியாதையைக் கொடுப்பதுபோல, பெற்றோரிடம் விபரத்தை எப்பாடுபட்டேனும் தெரிவிப்பார்கள். இறப்பு இறுதிப்போர் நிகழும்போது நடக்கும் நிகழ்வல்ல. 2001ல் மரணம் நடந்த பின், சிலவருடங்கள் சமாதான உடன்படிக்கை வந்து, சற்று அமைதியாக வன்னிநிலம் இருந்தபோது புலிகள் அதைப் பெற்றோருக்கு அறிவிக்காமல் விடுவார்களென்று – கதையாக இருந்தபோதும்- நம்பமுடியாது இருக்கின்றது.
சிலருக்கு எழுதுவதற்குக் கதைகள் இருக்கும். ஆனால் எழுதும் முறையில் எங்களுக்குத் தலைவலியைக் கொண்டுவருவார்கள். வேறு சிலருக்கு எழுதும் மொழி வாய்த்தாலும், அவர்கள் திணிக்கும் அரசியல் சார்புகள் தொடர்ந்து வாசிக்க முடியாது எரிச்சலைக் கொண்டு வந்துவிடும். இன்னுஞ் சிலர் பாலியல்/உளவியல் கதைகள் எழுதுகின்றேன் என்று தொடங்கி, எங்களின் இரத்தத்தைக் கொதிநிலைக்கு ஏற்றிவிடுவார்கள்.
தமிழ்நதி தனக்கென்று வெளிப்படையான ஒரு அரசியல் சார்பு வைத்திருந்தாலும், அதைத் தாண்டியும் வாசிக்க தமிழ்நதியிற்கு வசமாக்கியிருந்த எழுத்து நடை எங்களை உந்தித் தள்ளுகின்றது. இத்தனை விமர்சனங்களையும் எதிர்கொண்டு நம் தமிழ்ச்சூழலில் தொடர்ந்து ஒருவர் இயங்குவது அவ்வளவு எளிதுமல்ல. அந்தவகையில் தமிழ்நதி பாராட்டுக்குரியவர். நாடகீயமான பாவனைகளை அவ்வப்போது தன் எழுத்துக்களிலும் தன்னைப்பற்றியும் உருவாக்குவதிலிருந்தும் அவர் சற்று வெளியே வரவேண்டும் என ஒரு வாசகராக –வேண்டுமானால்- அவருக்குச் சொல்லிக்கொள்ளலாம்.
அண்மையில் வெளிவந்து உதிரிகளாக வாசித்துக்கொண்ட எத்தனையோ கதைகளை விட – ஒருகாலத்தில் நன்றாக எழுதியவர்கள் என்று நினைத்துக்கொண்டவர்களின் கதைகள் உட்பட- மாயக்குதிரையில் இருக்கும் கதைகள் பல தன்னளவில் மேலுயர்ந்தே நிற்கின்றன. அந்தவகையிலும் ‘மாயக்குதிரை’ தொகுப்பு அண்மையில் வந்தவற்றில் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒரு தொகுப்பாகும்.
........................
(நன்றி: 'அம்ருதா' - சித்திரை/2018)
0 comments:
Post a Comment