நானுன்னை முத்தமிடுகையில்

நானுன்னை முத்தமிடுகையில்
அனுபவப்புனைவு

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

நாடற்றவனின் குறிப்புகள்

நாடற்றவனின் குறிப்புகள்
கவிதை

ஈழ இலக்கியம் குறித்த எதிர்வினை

Tuesday, May 08, 2018

எப்போதும் உரையாடல்கள் அவசியமானவை. அதுவும் பாடசாலையில் தமிழ் கற்பித்த ஆசிரியரோடு விவாதிப்பது என்பது இன்னும் சுவாரசியமானதுதான் அல்லவா?

(1) நமது ஈழத்து/புலம்பெயர் சூழல் ஏன் நம் முன்னோர்களைக் கைவிட்டதென்பதை அறிவதற்கு சில வரலாற்றுக் காரணங்களைக் கவனிக்காமல் நகரமுடியாது. முக்கியமானது நமது 30 வருடகால ஆயுதப்போராட்ட வரலாறு. உயிர் தப்புவதே பெரும் விடயமாக இருக்கும்போது, இலக்கியம்/வாசிப்பென்பது  பெருமளவு நிகழாது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஆனால் நாம் போரை மட்டும் காரணங்காட்டி தப்பிவிடவும் முடியாது. ஆகவே இன்னொரு காரணம் நம் முன்னே விரிகின்றது. அது நம் தொடர்ச்சியான விமர்சன மரபு கட்டியமைக்கப்படாமல் விடுபட்டது பற்றியது. ஏன் நாமின்றும் முற்போக்கு இலக்கியக் காலத்தை (அதன் பலவீனங்களைத் தவிர்த்து) இப்போதும் பேசுகின்றோம் என்றால் அது  ஒரு இறுக்கமான விமர்சனமரபை தனக்கென முன்வைத்தது. அப்படி ஒரு தீவிரம் இருக்கும்போது அதை மறுத்து வேறு பல விமர்சன மரபுகள் எழுதலும் இயல்பானது.

கைலாசபதி, சிவத்தம்பி போன்றவர்கள் ஒரு விமர்சன மரபை உருவாக்க, அதிலிருந்து வெளியேறி/வெளித்தள்ளி மு.தளையசிங்கம், எஸ்.பொ போன்றோர் வேறொன்றை உருவாக்கினர். அதேசமயம் இந்த உரையாடல்கள்  கே.டானியல் சிவசேகரம், நுஃமான், மு.பொன்னம்பலம், அ.யேசுராசா, தெணியான் போன்ற எண்ணற்றவர்களை புனைவு/அபுனைவு சார்ந்து எழுதவதற்கு முன்னகர்த்தி உதவியது. மேலும் இன்று முற்போக்கு இலக்கியக்காரர்கள் மீது விமர்சனம் இருந்தாலும், அவர்களே பலரைத் தொடர்ந்து முன்னிறுத்தியவர்கள் என்பது மறுக்கமுடியாது. அந்தப் பரம்பரையைச் சார்ந்தோமறுத்தோ  வந்தவர்கள் இன்றும் எழுதிக்  கொண்டிருக்கின்றார்கள்.

தமிழகச் சூழலில் கூட ஜெயமோகனை ஏதோ ஒருவகையில் சிலர் அங்கீகரித்துக்கொண்டிருக்க, எம் சூழலில் ஒவ்வொருவரும் எதிர்நிலைகளில் நின்றாலும் நுஃமானோ, மு.பொன்னம்பலமோ, சிவசேகரமோ, அ.யேசுராசாவோ என எந்த ஒருவருமே ஜெயமோகனை அவ்வளவு எளிதில் அங்கீகரித்ததில்லை. சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் ஜெயமோகனை விமர்சித்தபடிதான் அவர்கள் இருக்கின்றார்கள். இன்று ஜெயமோகனைச் சார்ந்தே தமிழக எழுத்துலகம் ஒருவகையில் இயங்குகின்றதான பிரமை நம்பவைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் காலத்தில், நமது முன்னோடிகள் தமது சுயங்களை இழக்காமல் இருப்பதையிட்டு நாம் பெருமைகொள்ளவேண்டும் (ஜெயமோகனோடு தனிப்பட்டு நட்பாக இருக்கலாம். அது சிக்கலில்லை. எழுத்து என்று வரும்போது அதில் சமரசம் செய்துகொள்ளாத தன்மையை இங்கு குறிப்பிடுகின்றேன்).

(2) அ.இரவி போன்றோர்  உட்பட ஈழத்தில் இருக்கும் எமக்கு அடுத்த தலைமுறை கவனிக்காத விடயம் என்னவெனில், தமிழகத்தில் நிறைய எழுதுபவர்களும், தொடர்ச்சியாக முன்வைப்பவர்களும் மட்டுமே இலக்கியம் செய்கின்றார்கள் என்று நம்ப முயற்சித்துக்கொண்டிருப்பது. இலக்கியப் போக்குகள் பல்வேறுவகையில் இருக்கின்றன. அவர்களை மட்டுமே வாசித்துக்கொண்டிருந்தால் அது மட்டுமே இலக்கியம் போன்ற பார்வைகள் நமக்கு தன்னியல்பிலேயே வந்துவிடும்.

இப்போது எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சாரு போன்றவர்கள் வெகுசன ஊடகங்களிலும் (விகடன், தமிழ் இந்து,குமுதம், குங்குமம் - நகைச்சுவை என்னவென்றால் கருணாநிதி மற்றும் திராவிடக்கட்சிகள் துளியும் பிடிக்காத ஜெமோ அவர்களின் சார்பான குங்குமத்தில் எழுதுவதையும் நாம் 'அறம்' எனக்கொள்வோம்) எழுதுவதால் அவர்கள்  கருத்துவருவாக்கிகளாய் எளிதாய் ஆகியும் விடுகின்றனர். எப்படி தமிழ் இலக்கியம் சாதியாலும், ஆண்களாலும் மேல்நிலையாக்கம்  செய்யப்பட்டு, பிறர் விளிம்புநிலையாக்கப்பட்டபோது (தலித்துக்களும், பெண்களும்) தமக்கான இலக்கிய வகைமைளை உருவாக்கினார்கள் என்பதையும் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

(3) இன்றும் கே.டானியல்தான் தலித் இலக்கிய பிதாமகனாய் தமிழகத்திலும் கொண்டாடப்படுகின்றார். விமர்சன ஆய்வுமுறைகளுக்கு, முக்கியமாய் சங்ககால/திரைப்பட ஆய்வுகளுக்கு கைலாசபதி, கா.சிவத்தம்பி போன்றவர்களே தமக்கு முன்னோடிகளென அ.மார்க்ஸ், ரவிக்குமார் மட்டுமின்றி ராஜ் கெளதமன், எம்.எஸ்.பாண்டியவர் போன்றவர்கள் கூட இவர்களை நன்றியுடன் பல்வேறு இடங்களில் நினைவுகூர்ந்திருக்கின்றனர். எனவே நாம் நமது கண்ணாடியாலா அல்லது வேறு யாருடைய கண்ணாடிகளுக்குள்ளாலா இலக்கியத்தைப் பார்க்கின்றோம் என்பதையும் நிதானமாய் யோசித்துப் பார்க்கவேண்டும்.

(4) நிறைய எழுதுவது, அது இதென்று பலமுறை எழுதி அலுத்தாயிற்று. திரும்பத் திரும்பச் சொல்வது ஈழத்துப் பராம்பரியம் குறைய எழுதினாலும் நன்றாக எழுதியவர்களை நமக்கு நினைவில் வைத்திருக்கக் கற்றுத் தந்திருக்கின்றது. ஏற்கனவே இதையொரு நீண்ட கட்டுரையில் விவாதித்ததுதான், தமிழகத்திலும் அப்படிப் பலர் ஒருகட்டத்தில் நிறைய எழுதிவிட்டு மறைந்துவிடுகின்றார்கள். ஆனால் அவர்களின் எண்ணிக்கை பெருமளவு என்பதால், அந்த இடைவெளியை மற்றவர்கள் நிரப்புவதால் நமக்கு அந்த விலத்தல் வெளிப்படையாய்த் தருவதில்லை.

நாகார்ஜூனன், எம்.டி.எம், பிரேம் போன்றவர்கள் அப்படி ஒருகாலத்தில் தலைமறைவுக்குப் போனவர்கள். திரும்பி வந்தபோதும் அவர்களுக்கான இடம் இருந்திருக்கின்றது. அவர்களைப் பின் தொடர்பவர்கள், நீங்கள் இப்படி இடைநடுவில் போனவர்கள் உங்களை வரவேற்கமாட்டோம் என தெரிவித்தவர்களுமில்லை. மேலும் நிறைய எழுதவேண்டும், உற்சாகமாக எழுதவேண்டும் என்பதெல்லாம் நல்லதுதான். ஆனால் அவர்களால் மட்டுமே இலக்கியம் படைக்கமுடியும் என்று சொன்னால், வேறுவழியில்லை அப்படியில்லையென தெளிவாக மறுக்கவேண்டியிருக்கின்றது.

ப.சிங்காரம்  எழுதியது இரண்டு நாவல்கள்தான். புயலிலே ஒரு தோணியும், கடலுக்கு அப்பாலும். ஆனால் ப.சிங்காரத்தை மறுத்து நாம் இலக்கியம் பேசமுடியுமா? க.ஆதவனும் காகித மலர்கள், என் பெயர் ஆதிசேஷன் என இரண்டே இரண்டு நாவல்களைத்தான் எழுதியிருக்கின்றார்.. ஆதவனின் சிறுகதைகளை விடுவோம். இந்த நாவல்களில் மட்டுமே ஆதவன் என்றென்றைக்குமாய் உயிர்த்திருக்கமாட்டாரா என்ன? இப்படி குறைவாய் எழுதிய எண்ணற்ற உதாரணங்கள் நம்மிடையே இருக்கின்றன.

(5) அசோகமித்திரனைப் போல, ஜெயகாந்தனைப் போல நம்மிடையே ஒருவரும் எழுத மட்டும் செய்யும் வாழ்வுமுறையைத் தெரிவு செய்யவில்லை என்பது சற்றுக் கவலைதான்.   எனினும் இப்போது நம்மிடையே ஷோபா அப்படியான ஒரு வாழ்வைத்தானே வாழ்ந்துகொண்டிருக்கின்றார். அதற்காய் எப்போதும் எழுதிக்கொண்டிருந்தால் நல்ல இலக்கியம் வந்துவிடுமா என்ன? ஷோபா இவ்வளவு காலத்தில் 3 நாவல்களே எழுதியிருக்கின்றார். குணா கவியழகனும் குறுகியகாலத்தில் 3 நாவல்களை எழுதி 4ம் நாவலுக்கும் தயாராகிவிட்டார். எனக்கு இருவரது நாவல்களும் பிடிக்கும். எந்த இடத்திலும் 'உச்சம்' அடைந்தார்கள் எனச் சொல்லவுமில்லை. சொல்லப்போவதுமில்லை. உச்சமடைந்தால் பிறகேன் ஒருவர் எழுதவேண்டும்?

ஷோபாவும் குணாவும் எழுதிய இந்த 6 நாவல்களை மட்டுமே வைத்து தமிழகத்தில் நிறைய நாவல்களை எழுதியவர்களோடு உரையாட இப்போதும் நான் தயாராகவே இருக்கின்றேன். எனக்குப் பிடித்த எஸ்.ராமகிருஷ்ண்னன் ஆனாலென்ன அல்லது ஜெயமோகன் ஆனாலென்ன, சாருவாயிருந்தலென்ன அவர்கள் இதுவரை எழுதிய நாவல்கள் எல்லாம் உச்சத்தையா தொட்டிருக்கின்றன. எஸ்.ராமகிருஷ்ணனின் எல்லா நாவல்களையும் (அண்மைய இடக்கை வரை) வாசித்தவன் என்றளவில் அவரின் உபபாண்டவமும், யாமமும், நிமித்தமும் தவிர மிகுதி எல்லாம் என்னைக் கவராதவை. முக்கியமாய் சஞ்சாரமும், இடக்கையும் ஏதோ ஒவ்வொரு வருடமும் ஒரு நாவலை எழுதிவிடவேண்டும் என்று  கட்டாயத்திற்காய் எழுதியவைபோலவே தோன்றியது. எனக்குப் பிடித்த ஒரு எழுத்தாளர் அவர் என்றாலும் இந்த நாவல்களை அவரின் சரிவாகப் பார்க்கின்றேன்.   சரி அதை விடுவோம்.

நம் தமிழ்ச்சூழலை பேயாய் பிடித்தாட்டும் ஜெயமோகன் எத்தனை நல்ல நாவல்களைத் தந்திருக்கின்றார். விஷ்ணுபுரமும், கொற்றவையும், காடும், ஏழாம் உலகமும் மட்டுமே கவனிக்கத்தக்கவை. சாருவின் ஜீரோ டிகிரியையும் (வேண்டுமானால்) ராசலீலாவையும் சேர்த்துக்கொள்ளலாம்.
ஆனால் இவர்களைத் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றோம் என்றால் இவர்கள் தங்களைச் சுற்றி பேசுபவர்களை உருவாக்கிவைத்திருக்கின்றார்கள். அவ்வப்போது இவர்கள் தங்களுக்குள் அடிபட்டுக்கொண்டாலும், 'சமாதான காலத்தில்' மாறி மாறி புகழ்ந்தும் கொள்கின்றனர். ஹிட்லர் காலத்தில் கோயாபஸ் செய்ததுபோல, இவர்களைச் சுற்றியே தமிழ் இலக்கியம் சுற்றிக்கொண்டிருப்பதாய் ஒரு பிரமையே நாமும் அறிந்தோ அறியாமலோ கட்டமைக்கத் தொடங்குகின்றோம்.

ஜெயமோகன் இலக்கிய ஆளுமைகளைப் பற்றி எழுதிய சிறுபுத்தகங்களை அவதானமாக ஒருவர் வாசிப்பாராயின் அவர் அந்த ஆளுமைகளைப் பேசுவதாகச் சொல்லிக்கொண்டே தன்னைப்பற்றிய விம்பங்களைக் கட்டியமைப்பதைக் காணமுடியும். இதை சுந்தர ராமசாமி முன்னரே செய்தார் என்றாலும், அவருக்கென்று ஒரு பெயர் வந்ததன்பிறகே சு.ரா செய்தார். மற்றது ஜெமோ மாதிரி அவர் இந்தளவிற்கு தன்னைத்தானே புகழ்ந்தவருமில்லை. இன்னும் நான் சொல்வதை நம்பவில்லை என்றால் ஜெமோ எழுதிய 'நாவல்'  என்கின்ற கட்டுரைத் தொகுப்பை வாசித்துப் பாருங்கள். தமிழிலேயே 'நாவல்'களே இதுவரை எழுதப்படவில்லை எனத்தொடங்கி தனது நாவல்தான் முதல் நாவல் என்பதை நுட்பமாய் செருகியிருப்பார்.

மேலே ஜெமோ, எஸ்.ரா, சாரு  பெயர்களைக் குறிப்பிடுவதால் அவர்களின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிடுகின்றேன் என்பதல்ல அர்த்தம். அவர்களுக்கான இடம் அவர்களுக்கிருக்கின்றது. ஆனால் அவர்கள் மட்டுமே இலக்கியம் படைக்கின்றார்கள் என்று நம்புகின்றவர்க்காய் அதைக் காவிக்கொண்டு திரிபவர்களுக்காய் இவற்றையெல்லாம் குறிப்பிடவேண்டியிருக்கின்றது.

(6) இதையெல்லாம் குறிப்பிட்டதால் நாம் ஏதோ சரியாக செய்துகொண்டிருக்கின்றோம் என்பதல்ல அர்த்தம். நம்மைப் போன்ற எழுதுகின்ற எத்தனை பேர் நமது சக படைப்பாளிகளின் படைப்புக்களைத் தேடி வாசிக்கின்றோம். விவாதிக்கின்றோம். பகிர்ந்துகொள்கின்றோம் என எப்போதாவது யோசித்திருக்கின்றோமா? சரி நமது முன்னோடிகளை விடுங்கள். இத்தனை நாவல்களைப் பட்டியலிடுகின்ற பெயர்களில் எத்தனை பேர் மற்றவர்களின் சமகாலத்தைய நாவல்களை வாசித்தும் எழுதியுமிருக்கின்றார்கள்.

படைப்பாளியாக இருக்கும் எனது ஆசிரியரே அவர் வாழ்ந்துகொண்டிருக்கும் நாட்டிலிருக்கும் விமல் குழந்தைவேலுவின் நாவல்களை இன்னும் வாசிக்கவில்லை என்பது எவ்வளவு துயரமானது. நமது அரசியல் முரண்களை மட்டும் வைத்துக்கொண்டு, வாசிக்காமலே இரண்டு வரி எழுதிவிடுவதுதானே நமது இன்றைய இலக்கிய செல்நெறியாக இருக்கின்றது. சுகனைப் போன்றோர் சயந்தனைப் போன்றோரின் நாவல்களை சில பக்கங்கள் வாசித்தவுடனேயே நிராகரிக்கின்றனர் என்றால், குணாவிற்கோ தமிழ்நதியிற்கோ, ஜீவமுரளியையோ அல்லது நடேசனையோ வாசித்து விமர்சிக்கின்ற மனோநிலை இருக்கின்றதா? இங்கேதான் நமது விமர்சன மரபு தலைகுப்புற வீழ்கிறது என்பதோடு, சக படைப்பாளிகளை நம்மால் மனமுவந்து விமர்சித்து வரவேற்க முடிகிறதா என்பதையும் நாம் நம்மை நாமே கேட்கவேண்டும்.

இத்தனை எழுதிக்குவிக்கும் அ.முத்துலிங்கம் எத்தனை ஈழத்துப்படைப்பாளிகளை அறிமுகஞ்செய்திருக்கின்றார் என எப்போதாவது எவரேனும் யோசித்துப் பார்த்திருக்கின்றோமா?  தமிழ் பேசாத எழுத்தாளர்களையெல்லாம் தேடித்தேடி நேர்காணலும் கண்டு மாய்ந்து மாய்ந்து எழுதுகின்றார். ஆகக்குறைந்தது அருகில் இருக்கும் தேவகாந்தனின் படைப்புக்கள் குறித்தாவது ஓரிரு வரிகளாவது எழுதியதுண்டா?

மேலும் வெற்றிச்செல்வியின் எழுத்துக்களை மட்டும்  வாசிப்பதோடு நிறுத்தாது, தமிழ்க்கவியையும், தமிழினியையும் எவ்வித முன் நிபந்தனையற்றும் என் ஆசிரியரைப் போன்றவர்கள் வாசிக்கவேண்டும். தம் வாசிப்புக்களை பொதுவெளியில் முன்வைக்கவேண்டும். விவாதிக்கவேண்டும். அதுவே நம் சூழலுக்கு வளத்தைத் தருமே தவிர, நம் முன் அனுமானங்களோடு அவர்களின் அரசியலை முன்வைத்து நிராகரிப்பதால் எதுவும் நிகழ்ந்துவிடப்போவதில்லை.  நமது அரசியலுக்கு சார்பாக இருப்பதால் சிலரை உச்சிமுகர்வதால் வேண்டுமெனில் நமக்கு சந்தோசம் வரக்கூடும். ஆனால் இலக்கியத்திற்கு எந்தவகையிலும் பயன் தராது என்க.

(7) நம் காலத்தில் அண்மைய வரவுகளில் முக்கியமானது சயந்தனின் ஆதிரை. அவரின் சமகாலத்தவனாக இருப்பதால் என்னளவில் பெருந்தாக்கத்தை அது ஏற்படுத்தாவிடினும், இந்த நாவலை நன்குபிடித்த சில நண்பர்களிடம் இது குறித்து ஒரு உரையாடலைத் தொடர்ச்சியாகச் செய்யவேண்டுமெனவே சொல்லியிருக்கின்றேன். ஏனெனில் இவ்வாறுதான் தமிழகத்தில் பலருடைய நாவல்களை திரும்பத்திரும்பப் பலர் உரையாடித்தான் அவற்றை மறுக்கமுடியாத நாவல்களாய் நம்மிடையே ஆக்கியிருக்கின்றனர்.

(8) புலம்பெயர்/ஈழத்தில் தமிழகத்தோடு ஒப்பிடும்போது மிகக்குறைவான படைப்புக்களே வந்தபோதும் அவற்றைக் கூட நாம் திரும்பித் திரும்பிப் பேசமுடியாச் சூழலை நாம்தான் உருவாக்கியிருக்கின்றோம். அதிலிருந்துதான் நாம் மீளவேண்டுமே தவிர, தொடர்ச்சியாக எழுதவில்லை, முழுநேரமாய் எழுதவில்லை என அனுங்கிக்கொண்டிருப்பதில் எந்தப் பிரயோசனமுமில்லை.

அசோகமித்திரனும், ஜெயகாந்தனும் தமிழகத்திலேயே இருக்கட்டும். நமக்கு மு.தளையசிங்கம், எஸ்.பொ போன்றவர்களே போதும். இப்போதும் நம்மிடையே  ஷோபா சக்தி, குணா கவியழகன் போன்ற விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள்தான் என்றாலும், நாம் பெருமைகொள்ள இருக்கின்றார்கள். இனியும்  புதியவர்கள் வருவார்கள், அது சுடரேந்திய தொடரோட்டம். நிகழ்ந்தபடியே இருக்கும்.

(அ.இரவியின் பதிவிற்கு எழுதிய எதிர்வினை இது.
https://www.facebook.com/iravi.arunasalam/posts/10154879141124036)

(Dec 20, 2016)

1 comments:

tamilblogs.in திரட்டி said...

தங்கள் அருமையான பதிவுகளை இங்கும் இணைக்கலாமே http://tamilblogs.in

5/08/2018 09:03:00 AM