நானுன்னை முத்தமிடுகையில்

நானுன்னை முத்தமிடுகையில்
அனுபவப்புனைவு

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

நாடற்றவனின் குறிப்புகள்

நாடற்றவனின் குறிப்புகள்
கவிதை

ஞாயிறு குறிப்புகள் - 02

Saturday, November 10, 2018

1.
அண்மையில் வாங்கியிருந்த மெளனியின் முழுத்தொகுப்பைக் கையில் வைத்து நீண்டநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். 24 கதைகளை மட்டுமே எழுதிய ஒருவர் எழுத்தால் இன்னும் உயிர்வாழ்ந்துகொண்டிருப்பது ஒருவகையில் அதிசயம் போலத் தோன்றியது. எழுதிய 24 கதைகளில் அரைவாசியளவுக்கு, சாதாரண கதைகளாக உதிர்ந்துபோக சாத்தியமிருப்பினும் மெளனி இன்றும் நம்மிடையே பேசப்பட்டுக்கொண்டே இருக்கின்றார் என்பதே சிறப்பு.

1936ல் முதல் கதையிலிருந்து ஆறுகதைகள் வரை அந்த ஆண்டிலேயே மணிக்கொடி இதழில் பிரசுரமாயிற்று. அவரது தொடக்கக் கதைகளான 'ஏன்?', 'சுந்தரி', 'காதல் சாலை', 'கொஞ்சத் தூரம்' என்பவற்றை நல்ல கதைகளாக எழுதுவதற்கான முயற்சியென எடுத்துக்கொண்டால், 'குடும்பத் தேர்' நல்ல கதையாகி, 'பிரபஞ்ச கானம்' சிறந்த கலைப்படைப்பாக தன்னை நிலை நிறுத்திக்கொள்கிறது. 'பிரபஞ்ச கானம்' கதையைப் பற்றிப் பலர் விரிவாகப் பேசிவிட்டாலும், பிரமிளைப் போல சிலாகித்துப் பேசியவர் எவருமில்லை என்பதே என் துணிபு.

பெரும்பாலான இந்தக்கதைகளில் வரும் முக்கியபாத்திரம் தனக்குள்ளே ஒரு 'ஏன்'ஐ வைத்தபடி அலைந்தபடி இருக்கின்றது. சில கதைகளில் அந்த ஏன்களுக்கு ஒரு விடையைக் கண்டுபிடித்து அமைதிகொள்கின்றது. சிலதில் அந்த ஏன்கள் இன்னும் நிறைய ஏன்களை பெருக்கியபடியும் இருக்கின்றது. 'குடும்பத்தேர்' கதையில் ஒரு மகனுக்கும் தாயுக்குமான உறவு பற்றிப்பேசப்படுகின்றது. இளவயதில் மட்டும் அல்ல, முதியவயதிலும் தாய் ஒரு வழிகாட்டியாக இருப்பதை மகன் பாத்திரம் தெளிவாக உணர்ந்துகொள்கின்றது. தன்னை வெளியுலகம் திறமையுள்ள மனிதன் எனப் பாராட்டுவதெல்லாம் தன் தாயினால் தனக்குக் கிடைக்கும் அணுசரனையால் என்பதைத் தெளிவாகவே மகன் பாத்திரத்திற்கு விளங்குகின்றது.

முதிய வயதில் தாய் இறக்கும்போது அவரின் இழப்பு மகனில் பெரும் வெற்றிடத்தை உருவாக்குவதோடு, தன்னால் எதையும் தாயில்லாது தனித்துச் செய்யமுடியாது என்று பதற்றமும் கொள்ளச் செய்கின்றது.  இவ்வாறு பல்வேறு வகைகளில் குழப்பித் தவிப்பினும் இறுதியில் 'குடும்பம் ஒரு விசித்திர யந்திரம் - பழுதுபட்ட ஒரு பாகத்தினால் அது நிற்பதில்லை. அதற்குப் பிரதி மறுபாகம் தானாகவே உண்டாகிவிடும்.. என எண்ணிக்கொள்கின்றது.  குடும்பம் என்றில்லை, உறவுகள், வேலை என இன்னபலவும் இவ்வாறே ஏதோ ஒருவரால்/ஒன்றால் பிரதிசெய்யப்பட்டுவிடுகின்றது. ஆனால் மனித மனங்கள்தான் இதெல்லாம் இயல்பு என ஏற்றுக்கொள்ளத் தயக்கங்கொள்கின்றன.

இவ்வாறு ஒன்றை ஏதோ இன்னொன்று பிரதிசெய்துவிடும் என்கின்ற மெளனியின் சொற்களை, அவரின் படைப்புக்களை வேறொன்று இன்னும் பிரதிசெய்துவிடாதிருப்பதுடன், அவர் பின்பற்றிய சனாதன வாழ்க்கை முறையைத்தாண்டியும் அவர் படைப்புக்கள் இப்போதும் விகசித்துக்கொண்டிருப்பதுதான் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒன்று.

2.

சென்றவாரம் நானும், நண்பரொருவரும் ஒரு நிகழ்வுக்குச் சென்று கொண்டிருந்தோம். நிகழ்ச்சி நடத்துபவர்கள் பற்றிய பெரும் அபிப்பிராயம் இல்லையெனினும், அதில் பங்குபெறும் -தெரிந்த- நண்பருக்குத் தார்மீக ஆதரவு கொடுக்கவேண்டுமென வெளிக்கிட்டிருந்தோம். இவ்வளவு தூரம் போய் நிகழ்ச்சியைப் பார்த்து மனது சோர்வடைந்தால் என்ன செய்வதென, லிங்கன் ஜஸ்கிறிம் பாருக்குக் காரைத் திருப்பியிருந்தோம். இடையில் இன்னொரு நண்பரையும் ஏற்றிவிட்டிருந்தோம்.

இரண்டு வருடங்களுக்கு முன், அடிக்கடி கோடைகாலத்தில் ஐந்தாறு கிலோமீற்றர்களுக்கென நடையுலா போவோம். ஒழுங்காய் வியர்த்து விறுவிறுக்க நடக்கின்றோமோ இல்லையோ நடைப்பவனி முடிந்தவுடன் லிங்கன் ஜஸ்கிறிம் உறுதி என்பது மட்டும் எனக்கு நன்கு தெரியும். அவ்வப்போது நடைக்கு புறமுதுகுகாட்டித் தப்பிக்கும் என்னை, உன்னையெல்லாம், ஊறப்போட்ட அரிசியோடு ஒரு கிழமைக்கு பங்கருக்குள் போட்டு மூடி புளொட்டில் கொமண்டோ ரெயினிங் கொடுப்பது போன்றுதான் தண்டனை தந்து திருத்தி எடுக்கவேண்டும் என்று வேறு, என் நண்பர் பயமுறுத்துவார்.

இப்போதெல்லாம் நாமெல்லோரும் நடப்பதற்கே நேரமில்லாது அலைந்தபடி இருக்கின்றோம் என ஐஸ்கிறிமைச் சுவைத், கதைத்தபடி இருந்தபோதுதான், மேற்குத் தொடர்ச்சிமலை படத்தை எல்லோருமாய்ச் சேர்ந்து வீட்டில்போய்ப் பார்ப்போமா என ஒரு எண்ணம் வந்தது. என் தலைமுறைக்கு மட்டுமில்லை இங்கே பிறந்த தலைமுறையும் கலையின் நுட்பத்தை அறிந்துகொள்ளக்கூடாது எனக் கங்கணம் கட்டியதுமாதிரி, இங்கே தியேட்டர்களில் மேற்குத் தொடர்ச்சி மலையையோ, பரியேறும் பெருமாளையோ திரையிடமாட்டார்கள். ஆக மேற்குத் தொடர்ச்சிமலையை வீட்டில் இருந்தே பார்த்தோம்.

மேற்குத்தொடர்ச்சி மலை பார்க்கும்போது, இரண்டு விடயங்கள் மனதில் ஓடியபடி இருந்தன. இவ்வாறு ஒரு கடூழியமான வாழ்க்கை முறை தரப்படாததால் நாங்கள் பாக்கியசாலிகளா அல்லது  இப்படி இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழமுடியாது சபிக்கப்பட்டவர்களா நாங்கள் என்பதைப் பற்றியது.

நவீனத்துவகால வளர்ச்சி பற்றி விதந்துரைப்பவர்கள் கவனிக்கத் தவறுவது, உண்மையில் இந்த 'வளர்ச்சி'யானது கஷ்டப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்களை இன்னும் உயர்த்தியிருக்கின்றதா அல்லது இல்லையா என்பதைப் பற்றியாகும். ஏற்கனவே இருந்த வாழ்க்கையைவிட இன்னும் சிக்கலான, புறக்கணிக்கப்பட்ட வாழ்க்கையைத்தான் வளர்ச்சி கொடுக்குமென்றால் நாங்கள் நிறையவே யோசிக்கவேண்டும் எனத் தூண்டுவதையும் மேற்குத்தொடர்ச்சிமலை செய்கின்றது.

முழுமையடையாமல் இருப்பதும் கலையின் அழகியல் என நம்புகின்றவன் நான் என்பதால் இப்படத்தில் இருக்கும் தளம்பல்களை இப்போதைக்கு விட்டுவிடலாம். எனினும் இவ்வளவு அன்பாக இருக்கும் மனிதர்கள், பிறரைக் கொலை செய்யவும் போவார்களா என மனம் ஏற்றுக்கொள்ளத்தயங்கியதையும் குறிப்பிடவேண்டும். ஆகக் குறைந்தது திரைக்கதையில் அதற்கான வலுவான பின்னணியை இழைத்திருக்கலாம் என யோசித்தேன். எனினும் அறம், மேற்குத்தொடர்ச்சி மலை என மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து வெளிவருவதும், இவற்றுக்கு தமிழ்ச்சூழல் ஆதரவை மனமுவந்து அளிப்பதும் மகிழ்ச்சி தரக்கூடியவை.

மேலும் இலக்கியம் போலவே சினிமாவையும் ஒற்றை 'அழகியல்' பார்வைக்குள் வலிந்து திணிப்பவர்க்கு மத்தியில், அது மட்டுமல்ல, இப்படி பன்மைத்துவமாக விரிந்து சடைப்பவையும், மக்களின் குரல்களைப் பேசுபவைகளும் கூட கலைகளே என நாம் உதாரணம் காட்டுவதற்கும் இவை நமக்காய் இருப்பதுவும் நிறைவைத்தரக்கூடியது.

3.

ஜி.நாகராஜனின் 'டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழுவேட்டியும் அணிந்த மனிதர்' தொகுப்பை (தொகுத்தவர்: சுரேஷ்குமார இந்திரஜித்) நண்பருக்காய் வாங்கி வந்திருந்தேன். காலச்சுவடு கிளாஸிக்குகளுக்கு அருமையான அட்டைகளை வடிவமைப்பதைக் குறிப்பிட்டுச் சொல்லத்தான் வேண்டும். இப்போது பெருமாள் முருகனின் நாவல்கள் எல்லாம் ஆங்கிலம்/ஜேர்மனில் மொழியாக்கம் செய்யும்போது, அடுத்து வரும் என் தொகுப்பை அவர்களினூடு போட்டால் ஊர் உலகத்தைச் சுற்றிப்பார்க்க ஒரு வழியுண்டாகுமோ என ஒரு 'நப்பாசை'யும் எனக்குள் இப்போது வருகின்றது.

'டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழுவேட்டியும் அணிந்த மனிதர்'  தொகுப்பில் ஒரு கதை 'நான் புரிந்த நற்செயல்கள்'. இதில் ஒரு இளைஞன், இரண்டு பிள்ளைகளுடன் இருக்கும் பாலியல் தொழிலாளியை மணந்தபின் நல்ல நிலைக்கு இருவரும் வருவார்கள். அதுபோல கதைசொல்லியுடன் ஆங்கிலத்தில் பேசி உடலையும் பகிரும் பெண், பின்னர் ஒரு எம்.எல்.ஏயினது இரண்டாவது மனைவியாகப் போவார் என்றெல்லாம் ஜி.நாகராஜன் 69லிலேயே இந்த விடயங்களை அலசி ஆராயமலே எளிதாகக் கடந்து போய்  விடுவார்.

ஆனால் எனது கஷ்டகாலம் என்னவெனில் ஜி.நாகராஜனின்ன் காலத்தில் நான் வாழாதது. ஆகவேதான் ஜெயமோகன் எழுதும் 'சேர்ந்து வாழ்பவர்கள்' போன்ற கட்டுரை/கடிதங்களை வாசித்து சுவரோடு முட்டி மோத வேண்டியிருக்கின்றது.

சேர்ந்து வாழ்பவர்க்கும் ஒருவகை அறம் இருக்கின்றது என்பது மட்டுமல்ல, மேலைநாடுகளில் 'சட்டப்பூர்வமாக திருமணம் செய்ததைப் போல' பிரிந்துபோகையிலும் அவர்கள் சட்டபூர்வமாக சொத்துக்களைப் பகிர்ந்துகொள்ளலாம் என அது (living together) விரித்துப் பேசக்கூடியது.. சேர்ந்து வாழ்ந்தால் என்ன, சட்டப்படி ஊர்கூடித் திருமணம் செய்தால் என்ன, உறவொன்று பிரிகையில் யாரும் மனது நோகத்தான் செய்வார்கள். அது மனித உணர்வுகளோடு சம்பந்தப்பட்டது. சட்டம்/சட்டமில்லை என்பதற்குள் இந்த மென்னுணர்வுகள் ஒருபோதும் கட்டுப்படுவதுமில்லை.

இதையெல்லாம் விடலாம் பாருங்கள் கடைசிவரியில் என்ன சொல்கிறார்

"சரி, அந்த உடலுறவேதான் எவ்வளவுநாள் சுவாரசியமாக இருக்கும்?"

இப்படி ஒருவர், சேர்ந்து வாழ்வதை உடலுறவுக்காய் மட்டுமென கொடூரமாகச் 'தொகுத்துச் சுருக்கி'ப் பார்க்க முடியுமா என்ன? இஃதென்ன கொடுமை. சட்டப்படி திருமணம் செய்துவிட்டால் மட்டும்  ஜெயமோகனின் பார்வையில் 'அந்த உடலுறவு சாகும்வரை சுவாரசியமாக இருக்கும்' போலும்.

ஜெயமோகனை எதிர்த்துப் பேசினால் கூட இப்போது பா.ஜ.கவை எதிர்த்துப் பேசுவதைப் போலப் பயமாக இருக்கிறது. அழகிய பெரியவன் அவரின் கதை பற்றிச் சொல்லிவிட்டார் என்பதற்காய் அவரை ஒருபக்கம் போட்டுத்தாக்குகிறார். ஜெயமோகனைப் போலவே அழகிய பெரியவனுக்கும் படைப்பில் உயர்வும், வீழ்ச்சியும் இருக்கின்றன. ஒருவர் தன் படைப்பைப் பற்றி விமர்சித்து விட்டாரென்பதற்காய் அவரின் முழுப்படைப்பையும் உதறித்தள்ளுவது ஒரு படைப்பாளிக்கு  அழகும் அல்ல. ஆனால் அதையேதான் ஜெயமோகன் விடாது செய்தும் கொண்டிருப்பார்.

இப்போது 'சேர்ந்துவாழ்தல்' குறித்து அவர் எழுதியது அவ்வளவு அபத்தமாக இருக்கின்றதென என்னைப் போன்ற ஒரு வாசகர் சொன்னால் அவர் கேட்கமாட்டார் என்பது தெளிவு. ஆனால் எந்த விடயமெனினும் சாப்பாட்டு மேஜையில் தன் பிள்ளைகளோடு விவாதிப்பவர் என்கின்ற ஜெயமோகன் அவரின் மகனிடமோ அல்லது மகளிடமோ இதையும் உரையாடியிருந்தால் அவர்கள் இப்படி அவரைப் போல அபத்தமாகச் சொல்லியிருக்க மாட்டார்கள் என்பது மட்டும் திண்ணம்.


('ஞாயிறு குறிப்பு'களை எழுதச் சொல்லி உற்சாகமூட்டிய ஜெயந்தன் நடராஜனுக்கு, 
 நன்றியுடன் இந்தக் குறிப்புகள்..)

0 comments: