கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

சில புத்தகங்கள், சில அவதானங்கள்

Saturday, May 09, 2020

ந்த வருடம் வாசிப்பின் உற்சாகமான ஆண்டாகத் தொடங்கியிருக்கின்றது. முக்கியமாய் ஈழத்தவர்  பலரின் நூல்களை  வாசித்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. விமர்சனங்கள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு உற்சாகப்படுத்தல்களும் அவசியமானது. இவை இந்த படைப்பாளிகள் தொடர்ந்து எழுத்து மனோநிலையுடன் இருந்து எழுத  அவர்களை உந்தித்தள்ளும்.  சிறுகதைத் தொகுப்பாயின், மூன்று நான்கு கதைகள் நன்றாக இருந்தாலே அது என் வாசிப்பைப் பொருத்தவரை, கவனிக்கத்ததொரு தொகுப்பாக மாறிவிடும்.

அண்மையில் அப்படி வடகோவை வரதராஜனின் 'நிலவு குளிர்ச்சியாக இல்லை' தொகுப்பில் இருந்த 12 கதைகளையும் உற்சாகமாக வாசித்திருந்தேன். ஒரு முழுத்தொகுப்பாக எனக்கு முழுமை தந்த தொகுப்புக்கள் மிகக்குறைவு. இன்றைக்கு 30 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு என்றாலும், ஒரு நிறைவான வாசிப்பாக இருந்தது சற்று ஆச்சரியமானதுதான். இத்தொகுப்பில் கதைகளுக்கு முன் வரதராஜனின் 'ஒரு வார்த்தை', பிறரின் அணிந்துரைகள் இன்றையகாலத்தில் அவசியமற்றவை என்பதையும், வாசகரோடு தொகுப்பு நேரடியாக உரையாடும் சுதந்திரத்துக்கு இடையூறு செய்பவை என்பதையும் அவர் இப்போது அறிந்திருக்கக்கூடும். ஓரிடத்தில் 'நீக்ரோக்கள்' என்று பாவிப்பது ஒரு இனத்தின் மீதான மிகமோசமான வசை என்பதையும் தவிர்த்துவிட்டால் இது மிக முக்கியமான தொகுப்பு என்பேன்.

எஸ்.பொ எழுதியவற்றில் 'நனவிடை தோய்தலை' முதல் வாசித்தபோது என்னைக் கவரவில்லை. ஏனென்றால் அது எனக்குரிய காலத்துக்குரியதாக இல்லாததால், ஒரு விலகல் இருந்தது. எனினும் பின்னர் வாசித்தபோது அது என்னை ஈர்த்துக்கொண்டது. அவ்வாறு 'நனவிடை தோய்தலுக்கு'ப் பிறகு, அ.இரவியின் 'காலமாகி வந்த கதைகளை'ச் சொல்வேன். அது நான் அலைந்து திரிந்த இடங்களையும், யாரெல்லாம் தெரியாது தற்செயலாகக் கடந்துபோன மனிதர்களையும் பற்றி விபரித்தாலும், அது எனக்கு சற்று முந்தைய தலைமுறையினர்க்கு இன்னும் பிடித்திருக்கக்கூடியது. பிறகு, புலம்பெயர் தேசத்தில், மொழியே தெரியாது சிக்கித்திணறி வாழ்வை அமைத்துக்கொண்ட முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்களின் கதைகளை செல்வம் அருளானந்தத்தின் 'எழுதித் தீராப் பக்கங்கள்' சொல்லிப் போந்தது.

இவ்வாறான எழுத்துக்களை கட்டுரைகள் வகைக்குள் அடக்கமுடியாது. அவை போல சிறுகதைகள் எனச் சொல்லவுமுடியாது. மேற்கூறிய படைப்பாளிகள் ஏற்றுக்கொள்வார்களோ இல்லையோ, அவ்வாறு நான் எழுதிய எழுத்துக்களை 'அனுபவப்புனைவு' என்ற வகைக்குள்ளே வைத்துக் கொள்கின்றவன். இவை நமது அனுபவங்களின் நீட்சியில் கிளர்ந்து எழுதுபவை, ஆனால் அந்த அனுபவங்களை எழுதும்போது பிறகு புனைவாகி விடுவது உண்டு என்பது எண்ணம். ஆகவேதான் செழியன் இவ்வாறு அனுபவப் புனைவுகளை அரசியல் சார்ந்து 'வானத்தைப் பிளந்த கதை'யாக எழுதியபோது, பலர் அதில் உண்மைகளைத் தேடி அலைந்து நிராகரிக்கவும் முற்பட்டனர். இவ்வாறான அனுபவங்களை எழுதிய அனைவரும், அந்த அனுபவங்களைத்தாண்டி தாம் சேர்த்து எழுதிய புனைவுகளை நன்கு அறிந்திருப்பார்கள். ஆகவேதான் நான் இவற்றை அனுபவப்புனைவுகள் என்று வரையறுக்க விரும்புகின்றேன்.

நான் விரும்பி வாசித்தவையாக 'நனவிடைதோய்தல்', 'காலமாகி வந்த கதைகள்', 'எழுதித் தீராப் பக்கங்கள்' இருந்தாலும், நான் மிக நெருக்கமாய் வாசித்த இன்னொரு அனுபவப்புனைவு இருக்கிறது. அது உமாஜி எழுதிய 'காக்கா கொத்திய காயம்'. இது ஏன் எனக்கு பிடித்தது என்றால் இது என் காலத்தைய கதைகளைப் பேசுகிறது. சயந்தனின் 'ஆறாவடு' வந்தபோது என் காலத்தைய ஒரு கதைசொல்லி எழுதவந்திருக்கின்றார் என மகிழ்ந்தது போல, உமாவினது 'காக்கா கொத்திய காயத்தை' வாசித்தபோது எமக்கான ஒரு 'நனவிடைதோய்தல்' வந்துவிட்டது என்ற ஒரு நிறைவு ஏற்பட்டது. அநேகமான எல்லாப் பதிவுகளும் யாரோ ஒரு மனிதரைச் சுற்றி அது அன்றைய காலத்துக்கு நிகழ்வுகளுக்குள் ஊடறுத்துச் செல்கின்றது. இதில் உமா இந்த மனிதர்களை வியந்து பாராட்டுவதையும், அதேசமயம் அவருக்கு இயல்பாக இருக்கும் ஒரு விலகல்தன்மையினால், இந்த மனிதர்களை இன்னும் அதிகம் அறிந்திருக்கலாமோ/பழகியிருக்கலாமோ என்ற எண்ணத்தையும் வாசிக்கும் நமக்கிடையில் விட்டுச்செல்கின்றார். இதிலிருக்கும் 'நிராகரிப்பின் வலி'யிலிருந்து, 'ஆதலினால் காதல்' செய்வதிலிருந்து, 'பங்கர்' வெட்டுவதிலிருந்து, 'கடவுளைத் தேடி; அலைவத்லிருந்து, 'அப்பா'வரை நான் எனது சாயல்களை அதில் காட்டப்படும் மனிதர்களில் காண முடிந்திருந்தது.

அனுபவப் புனைவில் சுவாரசியம் இருக்கின்றன என்றாலும், அதற்கு ஒரு பலவீனமும் இருக்கின்றது. இவ்வாறான  பதிவுகளால் கற்பனையின் ஒரு எல்லைக்கு அப்பால் போகமுடியாது என்பதாகும். இல்லாவிட்டால் அவை முழுப்புனைவாக மாறிவிடும். ஓர் உதாரணத்துக்கு ஒரு மனிதரைப் பற்றி உமாவின் பதிவைப் போல விரியும் ஜேகேயின் 'சமாதானத்தின் கதை'யும் சமாதானம் என்கின்ற ஒரு மனிதரைப் பற்றியே சொல்கின்றது. ஆனால் அது புனைவாக இருப்பதால் தன் சிறகுகளை யதார்த்த்திலிருந்து மேலும் விரித்துப் பார்க்கும் சுதந்திரத்தைக் கொடுக்கின்றது. இதை அனுபவப்புனைவுகளில் முயற்சிக்க முடியாது. அப்படி ஓர் எல்லையைக் கடந்துவிட்டால் அது வேறு வடிவத்தை எடுத்துவிடும்.

இப்படி அனுபவப்புனைவாக இல்லாது, அனுபவங்களை மட்டுமே சொல்கின்றேன் என்று எழுதப்பட்ட இன்னொரு தொகுப்பு 'குப்பி. வெற்றிச்செல்வியே இந்தச் சம்பவங்களின் நம்பகத்தன்மையை மீண்டும் அந்தச் சம்பவங்களோடு சம்பந்தப்பட்டவர்களோடு கதைத்து உறுதிப்படுத்தியதாக நூலின் தொடக்கத்தில் சொல்கின்றார். ஆகவே இதற்கு, அனுபவப்புனைவுகளுக்கு இருக்கும் மெல்லிய புனைவின் சாயல் கூட இல்லாது இருக்கின்றது. 'குப்பி'யில் போராட்டப்போன விடுதலைப்புலி போராளிகளின் கதைகள் பல்வேறு காலகட்டங்களில் வைத்துச் சொல்லப்படுகின்றது. இவ்வாறான போராளிகளின் சாகசங்களையும், தியாகங்களையும் அன்றையகால 'வெளிச்சம்', 'எரிமலை', 'உலகத்தமிழர்' போன்ற பத்திரிகைகள்/சஞ்சிகைகள் வாசித்தவர் நன்கு அறிந்திருப்பர். களத்தில் மரணமடையும் ஒவ்வொரு முக்கிய போராளிபற்றியும் பதிவுகள் இவற்றில் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கும். சற்றுப் பிரச்சார வகையாக இருந்தாலும், அதில் அநேகமானவை உண்மைச் சம்பவங்களை  அடிப்படையாக வைத்து எழுதப்பட்டிருக்கும். குப்பியில் இருப்பவை சிறுசிறு சம்பவங்கள். ஆனால் நடந்தவை என்பதால் வாசிக்க அலுப்புத் தராது இருக்கின்றது.

ஓரு 'கதை'யில் புலிகள் படகில் போய் மன்னாரில் ஒரு தாக்குதலை நடத்துகின்றனர். தாக்குதலை நடத்திவிட்டு குறிப்பிட்ட நேரத்தில் திரும்பவேண்டும். ஏனெனில் அது இலங்கை இராணுவத்தின் முற்றுகைக்கு உட்பட்ட இடம். அதில் ஒரு பெண் போராளி காயப்பட அவரால் வள்ளத்தினால் ஏறமுடியாது போக,  படகு அவரை விட்டுவிட்டுப் புறப்பட்டுவிடுகிறது. காயப்பட்ட போராளியை ஒரு முஸ்லிம் தாய் காப்பாற்றுகிறார். காயத்தின் நிமித்தம், வெளியே வந்த குடலை கழுவி உள்ளே பத்திரமாய் விட்டு, தைக்கமுடியாத அவதியால் எதையோ வைத்து கட்டிவிட்டு, இராணுவத்துக்குத் தெரியாது, தனது மகனின் உதவியோடு ஒரு படகில் வைத்து புலிகளின் கட்டுபாட்டுப் பகுதியை நோக்கித் தள்ளிவிடுகின்றார். இது இரண்டாயிரம் ஆண்டுக்குப் பிறகு, தமிழ் முஸ்லிம் உறவு மிகவும் மோசமான காலத்தில் நடக்கின்றது. இதுதான் மனிதாபிமானம். இவ்வாறான சம்பவங்களை நாம் மீண்டும் நினைவுபடுத்துவதன் மூலமே சமூகங்களிடையிலான நல்லிணக்கங்களைப் பேசமுடியும். இதை நேரடியான அரசியல் செய்யாது. ஆனால் இலக்கியம் காயப்பட்ட மனங்களையும், குரோதமான மனிதர்களையும் மெல்லச் சலனமடையச் செய்யும்.

இவற்றோடு என்னைக் கவர்ந்த இன்னொரு தொகுப்பு ஜே.கேயின் 'சமாதானத் கதை'. ஜேகேயின் அனுபவங்கள் சார்ந்து எழுதப்படும் பதிவுகள் பிடிக்குமென்றாலும், அவரது சிறுகதைகளின் என்னை அவ்வளவு கவர்வதில்லை என ஜேகேயின் 'சமாதானத்தின் கதை' காலச்சுவடில் பிரசுரமானபோது எழுதியதாய் ஞாபகம். ஆனால் தொகுப்பாய் பார்க்கும்போது எனக்கு இந்தச் சிறுகதைத் தொகுப்பு பிடித்திருக்கின்றது. முக்கியமாய் 'வெம்பிளி ஒவ் ஜெப்னா', 'விளமீன்', 'உஷ் இது கடவுள்கள் துயிலும் தேசம்'  போன்ற கதைகள் கவனிக்கக் கூடியவை. இப்போது 'சமாதானத்தின் கதை'யை தொகுப்பில் இன்னொருமுறை வாசிக்கும்போது அந்தக் கதையும் முன்னரை விடப் பிடித்திருந்தது. ஜேகே கதைகள் நம்மவர் அநேகர் எழுதும் அதிர்ச்சி முடிவுகளை நோக்கி ஒருபோதும் நகர்வதில்லை. ஒருவகையில் அசோகமித்திரனின் தடத்தில் வருகின்ற ஒரு கதைசொல்லியாகக் கொள்ளலாம். அதிர்ச்சியான சம்பவங்கள் இருந்தால் கூட அதைக் கதையின் முதலிலே கூறிவிட்டே கதையை எழுதுகிறார்.

இதைத் தெளிவாக 'வெம்பிளி ஒவ் ஜெப்னா, விளமீன் போன்ற கதைகளில் காணலாம். ஆனால் இப்படியாக அதிர்ச்சியாக முடிக்காதபோதும், நேர்த்தியான கதைசொல்லலில் அவை நமக்குப் பிடிக்கின்றது. ஒரு குறையாக நிறைய ஆங்கில வார்த்தைகளை அப்படியே தமிழில் சொல்வதைச் சொல்லலாம். ஒருகாலத்தில் ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், தேவிபாலா (சுஜாதாவிலும் கொஞ்சம் இருக்கிறது) போன்றோரை வாசித்தபோது தமிழகத்து ஆங்கில உச்சரிப்போடு எழுதப்படுவதை வாசித்து, அர்த்தங்களை விளங்கிக்கொள்வதற்குள் மூளை விறைத்துப் போய்விடுவதுண்டு. ஒவ்வொரு நாடுகளிலும் உச்சரிப்பு என்பது வேறுவகையாக இருக்கும்போது, எதை ஜேகே சொல்லவருகின்றார் என்பது, நமது உச்சரிப்பு பழக்கமில்லாதவர்க்குக் குழப்பம் வரலாம். அவசியமாய் ஆங்கிலத்தில் சொல்லவேண்டுமென்றால் ஆங்கிலத்திலேயே நேரடியாக எழுதிவிடலாம் என நினைக்கிறேன்.

இவ்வாறாக 'நிலவு குளிர்ச்சியாக இல்லை', 'காக்கா கொத்திய காயம்' (தலைப்பை வேறுவிதமாக வைத்திருக்கலாம்), 'குப்பி', 'சமாதானத்தின் கதை' போன்றவை ஈழத்தவர்களால் நல்ல படைப்புக்களைத் தரமுடியும் என்பதை எளிதாக நிரூபிக்கின்றன. இந்தப் படைப்பாளிகள் அனைவரும் தொடர்ந்து உற்சாக எழுதவேண்டும். ஏனெனில் நல்ல படைப்பாளிகள் விரைவில் உறங்குநிலைக்குப் போய்விடும் ஒரு சாபம் எங்கள் ஈழச்சூழலில் இருக்கின்றது. அதை இவர்கள் கடந்துபோவார்கள் என்பதில் நம்பிக்கை வைக்கின்றேன்.
..................................................

(நன்றி: ' அம்ருதா', 2020)

3 comments:

கரிகாலன் said...

இளங்கோ
இந்த கதைகள் அமேசன் பிரைமில் கிடைக்கின்றதா ?அல்லது மின் நூலக
கிடைக்குமா ? நீங்கள் புத்தகங்களாக படிக்கின்றீர்களா?எங்கு கிடைக்கும் ..

5/09/2020 10:30:00 PM
இளங்கோ-டிசே said...
This comment has been removed by the author.
இளங்கோ-டிசே said...

அன்பின் கரிகாலன்,
நான் இவற்றை புத்தகங்களாகத்தான் வாங்கிப் படித்தேன். சிலவேளைகளில் இவை மின்நூல்களாகவும் விற்பனைக்கும் இருக்கலாம். நான் அவற்றைத் தேடிப் பார்க்கவில்லை. நான் அண்மையில் இந்தியா/இலங்கை போனபோது புத்தகங்களாக இவற்றை வாங்கினேன்.

5/12/2020 09:08:00 PM