கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

பெங்களூருவில் இருந்து கொச்சிக்கு..

Friday, June 30, 2023

 

ரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்துக்கு வந்து சேர்ந்திருந்தேன். விடிகாலை 6 மணிக்கு பேருந்தில் புதிய நகர் வந்துவிட்டேன். தங்கவேண்டிய அறைக்கோ 11மணிக்குப் பிறகுதான் அனுமதி. நீண்ட நெடும் பயணம் தந்த கசகசப்பில் அலுப்புடன் காலையில் தேநீர்க்கடை தேடிப் புறப்பட்டேன். சில தெருவோரக் கடைகள் இருந்தாலும், கழிப்பறை இருக்கும் கஃபே என் தெரிவாக இருந்தது. நான் அந்தக் கஃபேயிற்குப் போன நேரமே அவர்கள் திறக்கத் தொடங்கினார்கள். என்னைப் போலவே இன்னொருவரும் தேநீருக்காய் வந்து காத்திருந்தார்.

தேநீருக்கான மெனுவைக் கையில் வைத்தபடி இருவரும் பேசத் தொடங்கினோம். பெங்களூர்க்காரர், படித்தது டெல்கியில். இப்போது பேராசிரியராகப் பணி புரிவது சென்னையில் IITயில் என்றார். அவரின் ஆய்வுகள் பெரும்பாலும் urban studies and planning குறித்தது.

85இல் டெல்கியில் கற்றுக்கொண்டிருந்தபோது இலங்கைக்கு வீடமைப்புத் திட்டத்துக்காய் அனுப்பப்பட்டபோது பெற்ற அனுவங்களை அவர் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது பிரேமதாசா வீடமைப்பு அமைச்சராக இருந்திருக்கிறார். இடமும் தெரியாது, மொழியும் தெரியாது, தங்கள் திட்டமிடல் எவ்வளவு மோசமாக இருந்தது என்பது பற்றிச் சிலாகித்துக் கூறினார். சில மாதங்கள் இருந்து செய்த திட்டத்தில், எளிய மக்கள் சொன்னவற்றைக் கதைகளாக தான் ஸ்கெட்சுக்களாய் வரைந்து கொண்டேன் என்றார். அப்போதுதான் 83 கலவரம் முடிந்து மக்கள் மனவடுக்களோடு இருந்தனர் என்பதை நினைவில் வைத்துச் சொன்னார்.

இந்தக் கதையின் நீட்சியில் இப்போது
அருமையான கிராபிக் நாவல்கள் வருகின்றதென அவர் சொல்ல, ஈழப்போர் குறித்து பல்வேறு உள்ளடுக்குகளில் கதை சொன்ன "வன்னி" கிராபிக் நாவலைப் பற்றி நான் குறிப்பிட்டேன். அவர் அதை வாசித்திருந்தார் என்பது மட்டுமின்றி, அதில் 2 பிரதிகள் வாங்கி தன் நண்பர்களுக்குக் கொடுத்தேன் எனச் சொல்லச் சற்று ஆச்சரியமாக இருந்தது. இன்றைக்கு தமிழ்நாட்டில் இருந்துகொண்டு ஈழம் பற்றிப் பேசும் எந்த அரசியல்வாதியோ, புலம்பெயர் இலக்கியமா, அகதி இலக்கியமா என்று பேசுபவர்களோ இதைப் பற்றி அறியத் துளியும் முயற்சி எடுத்திருக்கமாட்டார்கள் என்பது என் துணிபு.

ந்தப் பேராசிரியர் இறுக்கமற்று இயல்பாகப் பேசிக் கொண்டிருந்தார். பின்னர் தெய்யம் பற்றிப் பேச்சு வந்தது. கேரளாவிலா
, கர்னாடாகவிலா இதன் தோற்றம் முகிழ்ந்தது என்பது பற்றிப் பேச்சுப் போனது. பிராமணியத்துக்கு எதிரான கதையாடல்களினால் உருவான தெய்யம், அந்தந்தப் பகுதிகளுக்குரிய கதைகளைப் படிமமாக்கி வந்தது என்று அவர் விரிவாக விளங்கப்படுத்தினார். தெய்யம் இலங்கையின் கண்டியன் ஆட்டத்தோடு தொடர்புபடும் இடங்கள் பற்றியும் நாங்கள் பேசிக் கொண்டோம். 

அவர் ஒரு நல்லதொரு பேராசிரியர் போல. இதன் ஆரம்ப ஆவணங்கள் எங்கே சேகரத்திலிருக்கின்றன போன்ற விபரங்களையும், தனது நண்பர் தெய்யம் குறித்த ஆவணப்படத்தின் இணைய இணைப்பையும் பின்னர் அனுப்பி வைத்தார். அதேவேளை கந்தாரா திரைப்படம் எப்படி மோசமாக இந்த ஆட்டத்தை வியாபாரப்படுத்தியது என்று கவலை தெரிவித்திருந்தார். நானும், எங்கள் ஈழப்போராட்டத்தின் சிக்கலான கதையாடல்களை விளங்கிக் கொள்ளாது எழுதப்படும்/திரைப்படமாக்கப்படும் படைப்புக்கள் எப்படி எங்களுக்கு எரிச்சலைத் தருகின்றன என்பது பற்றி அவருக்குச் சொல்லிக் கொண்டிருந்தேன்.


இறுதியில் பேராசிரியர் சந்திக்க வேண்டிய அவரின் நண்பரின் அழைப்பு வந்தது. நல்லதொரு உரையாடலாக இருந்தற்கு நன்றி சொல்லி, அவரின் தேநீர் என் செலவெனச் சொன்னேன். பேராசியர் போகும்போது தான் 3 வருடங்கள் ரொறொண்டோ பல்கலைக் கழகத்தில் கற்பித்தேன் எனச் சொல்லி ஆச்சரியப்படுத்தினார். ஏன் ரொறொண்டோவை விட்டு இந்தியா மீண்டீர்களெனக் கேட்டேன். என் வரைகலைஞர் மனைவிக்கு அந்தக் குளிர் பிடிக்கவில்லை அதுதான் வந்துவிட்டோம் என்றார். எனக்குந்தான் பனி பிடிப்பதில்லை, ஆனால் என்னிடம் ஓடி வந்துவிடுங்கள் உங்கள் வாழ்வைக் கதகதப்பாகிவிடுகிறேன் எனச் சொல்லத்தான் எவரும் எனக்கு இந்தியாவில் இல்லையென நினைத்துச் சலித்தபோதும், இன்னும் கொஞ்சம் தேநீராவது அருந்த எனக்காய் மீதம் இருக்கின்றதேயென நிம்மதியடைந்தேன்.

***********


(Feb 02, 2023)

வரலாற்றில் வாழ்தல்


ஸ்.பொ(ன்னுத்துரை) ஒரு சுவாரசியமான மனிதர். தானொரு காட்டான்என்று வாழ்நாளுக்கான இயல்விருது கனடாவில் கொடுக்கப்பட்டபோது பொதுவெளியில் தயங்காமல் பிரகடனப்படுத்தியவர். அவரின் வரலாற்றின் வாழ்தல்உண்மைகளை இயன்றளவு அப்படியே முன்வைக்கின்ற ஒரு சுயசரிதை நூல். வரலாற்றில் வாழ்தல் ஆயிரம் பக்கங்களுக்கு மேலா? அதுவும் இரண்டு பகுதிகளா? 3000 இற்கு மேற்பட்ட பக்கங்களை வாசிப்பதா என்று பயந்து கொண்டிருந்தேன். ஆனால் மனுஷன் அலுப்பே வராதவளவுக்கு அவ்வளவு சுவாரசியமாக எழுதியிருக்கின்றார்.


வரலாற்றின் வாழ்தலின் இரண்டாம் பாகத்தில் இப்போது நிற்கின்றேன். முதல் பாகம் எஸ்.பொ, முற்போக்கு இலக்கிய முகாமிலிருந்து வெளியேறுவதோடு நிறைவுபெறும். முதல் பாகத்தில் நடுவில், பெண்களைக் கண்டாலே தூரவிலகும் ஒரு உள்ளொடுங்கியாக இருக்கின்றாரே, எப்படி இந்த மனுஷனால் தீஎல்லாம் எழுத முடிந்ததென்று நானே சலித்தபோது, மனுசன் ஒரு காதல் கசந்து (அதற்காய் மூன்று வருடம் எதையும் எழுதாமல் இலக்கியத் துறவறம் எல்லாம் செய்திருக்கின்றார்) மீண்டெழுந்தபோது செய்ததெல்லாம் மன்மதலீலைகள்தான்.

முற்போக்கு அணியினரோடு முரண்டு பிடித்தது, ஒடுக்கப்பட்ட சாதி அடையாளத்தோடு பிறந்ததால் எப்படி ஒடுக்கப்பட்டேன் என்று அதை வைத்து பரிதாபந் தேடாமல், ஓர்மத்துடன் அதற்குள் இருந்து எழுந்து வந்ததைப் பற்றி எழுதியது மட்டுமில்லாமல், இந்த மன்மதனாட்டங்களையும் எழுத்தில் நேர்மையாக முன்வைக்க முடிந்ததால்தான் அவர் எனக்கு இன்றும் ஆசான்.

இரண்டாம் பாகத்தில்..

யாழ்ப்பாணத்தில் முட்டையடிப்பும், கொழும்பில் கதிரையடியும் முற்போக்கு அணியினரிடம் வாங்கிக் கட்டியபின், எஸ்.பொ அவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பு வீயை வெளியிடுகின்றார். எதிரியை நேரடியாகச் சந்திப்பது என்ற ஓர்மத்துடன் தன் புத்தக வெளியீட்டு விழாவில் வந்து விமர்சனம் வைக்கவேண்டுமென்று கைலாசபதியையும், சிவத்தம்பியையும் நேரில் சென்று எஸ்.பொ அழைக்கின்றார். கைலாசபதி நாசூக்காய் மறுத்தாலும், சிவத்தம்பி வெளியீட்டு நிகழ்வில் வந்து பேசி, எஸ்.பொவின் வீதொகுப்பை நிராகரிக்கின்றார். நீங்கள் நிராகரிப்பது சரி, உங்கள் முற்போக்கு எழுத்தாளர் அணியினர் எழுதிய கதையை உங்கள் விமர்சன அளவீட்டிற்கு முன்வையுங்கள் என்று எஸ்.பொ தனது ஏற்புரையில் எகிறுகிறார். 

சிவத்தம்பியரோ, உனது அந்தத் 'தீ'யுமல்ல இந்த 'வீ'யுமல்ல என்றுவிட்டு மேடையில் அமைதியாகி விடுகின்றார். இப்படியாக அந்தக்காலத்தில் எதிர்ப்பும், எகிறலும், புரிந்துகொள்ளலும் நடந்திருக்கின்றதென்பது சுவாரசியமானதுதான். இன்றைக்கு வெவ்வேறு அணியினர் எஸ்.பொவையும், கைலாசபதியையும், சிவத்தம்பியையும் சுவீகரித்துக் கொண்டிருந்தாலும், இந்த சண்டை/சர்ச்சரவுகளைத்தாண்டி அவரவர்க்கான இடம் அவரவர்க்கு தமிழ்ச்சூழலில் இருக்கத்தான் செய்கிறது.

யாழ்ப்பாணத்தில் பிறந்த எஸ்.பொ அளவுக்கு இன்னொருவர் இந்தளவுக்கு கிழக்கு தமிழர்களோடும், முஸ்லிம்களோடும் நெருங்கிப் பழகி, அந்த அனுபவங்களை எழுத்தில் முன்வைத்திருப்பார்களோ தெரியாது. அந்தளவுக்கு கிழக்கு மாகாணத்து மக்களைப் பற்றி விபரித்து எழுதியிருக்கின்றார். யாழ்ப்பாணத்து நனவிடைதோய்தல்போல மட்டக்களப்பு நினைவுகளை எழுத எஸ்.பொ விரும்பியிருந்தபோதும் அது நிகழாதது சோகமான விடயந்தான். யாழில் பிறந்து வளர்ந்ததால் அதில் காலூன்றியபடி, அதேசமயம் அது குறித்து எவ்விதப் போலி பெருமிதமும் கொள்ளாது, பிற இடங்களை/மக்களை நேசிக்கத் தெரிந்தவராக எஸ்.பொ எப்போதும் இருந்திருக்கின்றார்.

ஸ்.பொ 60/70களின் காலங்களை விபரிக்கின்றபோது இவர்கள் எல்லாம் இலங்கையில் வாழ்ந்தார்களா என்ற வியப்பு வருகின்றது. சாத்தான்குளத்து அப்துல் ஜாப்பார் என்கின்ற கிரிக்கெட் வர்ணனைகளை அழகு தமிழில் செய்த அறிவிப்பாளர் எல்லாம் இலங்கையில் வாழ்ந்ததோடல்லாது, எஸ்.பொ எழுதிய நாடகங்களில் நடித்துமிருக்கின்றார்கள். அப்படி எஸ்.பொவின் நாடகங்களில் நடித்த வேறு சிலர் அப்துல் ஹமீது மற்றும் பின்னாளில் அமைச்சரான அஸ்வர் எனப்பட்டியல் நீளும்.. இதனூடாக வரலாற்றின் ஒரு காலகட்டத்தையும் அறிந்து கொள்கின்றோம். எம்.ரஹ்மானின் இளம்பிறைசஞ்சிகை உள்ளிட்ட வேறு சில பத்திரிகைகளில் எஸ்.பொ பத்திகள் எழுதியிருக்கின்றார். அவற்றையும் தொகுப்பாக்கினால் இன்னும் சுவாரசியமான அந்தக்காலத்தைய விடயங்கள் வெளிக்கொணரப்பட்டிருக்கும் என எழுதுகின்ற எஸ்.பொ அதைக் கொண்டு வராமலே காலமாகி விட்டார்.

எஸ்.பொவின் சடங்கு’, ‘நனவிடைதோய்தல்', 'வீபோன்று, அதிகம் பேசப்படாத “?” முக்கியமான படைப்பென்பது என் துணிபு. அந்தக் காலத்தில் இப்படி ஒரு அங்கதமான பிரதி எழுதப்பட்டிருக்கின்றதென்று வியந்திருக்கின்றேன். அது எழுதப்பட்ட கதை சுவாரசியமானது. ஒரு முஸ்லிம் அரசியல்வாதிக்கு அவரின் ஊழல்பற்றி அங்கதச் சுவையுடன் முஸ்லிம் சமூகம் ஒரு துண்டுப்பிரசுரத்தை வெளியிடுகின்றது. அதை அவர்கள் பந்தநூல் என்று குறிப்பிடுகின்றனர். இதையே முதன்மையாக வைத்து எஸ்.பொ அன்றைய சூழ்நிலையைப் பின்னணியாக்கி “?” எழுதுகின்றார். அந்த வடிவம் எப்படி அமைய வேண்டுமென்பதற்காய் உ.வே.சா பதிப்பித்த பழந்தமிழ் நூல்கள்வரை தேடிப் போயிருக்கின்றார்.

இந்த புத்தகத்திற்காய் உழைத்த நேரத்துக்கு தன்னால் 2 புதிய புத்தகங்கள் எழுதியிருக்கலாம் என்றும் குறிப்பிடுகின்றார். "?" எழுதியபின் இன்னொரு சோகம் நிகழ்கின்றது. நூல் தயாரான பின் ஒரு பயணத்தின்பின் அந்தக் கையெழுத்துப் பிரதியை எஸ்.பொ தொலைத்துவிடுகின்றார். இப்போது நமக்கு கிடைக்கும் “?”, அவர் முதல் பிரதியை எழுதுவதற்கு எடுத்து வைத்த குறிப்புக்களை வைத்து எழுதியது. அதை இரண்டாம் முறை எழுதுவதென்பது எவ்வளவு சித்திரவதையானது என்பதை எஸ்.பொ மனம் நொந்து 'வரலாற்றில் வாழ்தலில்'' எழுதியிருக்கின்றார்.

இதை எழுதுவதற்கான காரணமாக என்னைப் பற்றிய மதிப்பீடு ஒன்று தேவை. பிறருடைய மதிப்பீட்டுகளிலும் பார்க்கச் சுய விமர்சனங்கள் என் வளர்ச்சிக்கும் தனித்துவப் பார்வைக்கும் உதவியிருக்கின்றன. சுய விமர்சனத்தின் நன்மைகளை கம்யூனிஸ முகாமில் அறிந்து கொண்டேன். இதனால் நான் வெற்றிகளைக் கண்டு மருண்டதில்லை. தோல்விகளைக் கண்டு துவண்டதில்லை. வெற்றிகளின் நிழல்களிலே நான் சயனிக்க விரும்பியதும் இல்லைஎன்று எஸ்.பொ எழுதுகின்றார்.

எஸ்.பொ சுதந்திரனில் சடங்குஎழுதிய அதே காலகட்டத்தில் தேடல்என்றொரு தொடர்கதையையும் வீரகேசரியில் எழுதியிருக்கின்றார். ஆனால் அது முற்றிலும் தரப்படும் காசுக்காக எழுதப்பட்டது. நீங்கள் சடங்கையும் தேடலையும் அருகருகில் வைத்துப் பார்த்தால் இரண்டின் தரமும் தெரியும் என்று வெளிப்படையாக வரலாற்றில் வாழ்தலில்எழுதிச் செல்வதால்தான் எஸ்.பொ தனித்துவமானவர் எனச் சொல்கின்றேன். ஆகவேதான் அவர் என் ஆசான்.

*********************************


(Feb 21, 2023)

குமரகம்

Thursday, June 29, 2023

 


மா
லையில் அந்த ஒழுங்கைகளில் நடந்து கொண்டிருந்தேன். ஒரு பக்கம் படகுகள் மிதக்கும் ஆறு. இன்னொரு பக்கம் சிறு சிறு ஓடைகள். இரண்டையும் டார்த்தீனியம் மூட முயற்சித்தாலும் நீர் அதைத் தாண்டி முன்னே சென்று கொண்டிருந்தது. சூரியன் மறைந்த பொழுதுகளில் வீடுகளில் எல்லாம் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. ஒழுங்கையில் இருந்தே இவற்றைப் பார்க்க ஊர் கார்த்திகைத் தீபநாட்கள் ஞாபகம் வருகின்றன.


மென்னிருளில் பெரும் குத்துவிளக்குகளில் திரி சுண்டிய அகல்கள் அவ்வளவு அழகாக இருக்கின்றன. அநேகமாய் எல்லா வீட்டு முன்றல்களிலும் நாராயண குருவின் புகைப்படங்கள் சட்டமிட்டு மாட்டப்பட்டிருக்கின்றன. ஒரு நூற்றாண்டுக்குள் ஒருவர் வழிபடக்கூடிய தெயவத் தன்மையை அடைந்திருப்பது வியப்புத்தான்.

நகர்ந்துகொண்டிருக்கும் நாட்களில் பயணத்தில் எந்தக் காலத்தில் நிற்கின்றேனென எனக்குக் குழப்பம் வருவதுண்டு. காலநிலை, பண்பாடு, உணவு என்று முற்றிலும் வேறான சுழ்நிலைக்குள் இருக்கையில் எது அசலான வாழ்வெனத் திகைப்பதுண்டு. எல்லாவிதமான வாழ்வும் சமாந்திரமாக இருக்கையில் நமது மொழியும், பண்பாடும், அறிவும்,வீரமுந்தான் சிறந்ததென்கின்ற அறைகூவல்கள்தான் எவ்வளவு அபத்தமானது.

இந்தப் பயணத்தில் வாசிக்க நகுலனையும், ஜே.பி.சாணக்கியாவையும் எடுத்து வந்திருந்தேன். நமக்குத்தான் பயணத்தில் காலமும் வெளியும் குழப்பமடைகின்றது என்றால், நகுலன் பயணிக்காமலே இந்த இடத்தையும் இருப்பையும் மேலும் குழப்பிவிடுவார். நான் நகுலனை வாசித்துக்கொ ண்டு, நண்பருக்கு இன்னும் கொஞ்சக்காலத்தில் ஒன்றையே திருப்பத் திருப்பப் பேசிக்கொண்டிருக்கும் நகுலனைப் போல நானும் எழுத்தின் தனிமைக்குள் போய்விடுவேன் எனச் சொன்னேன். 'அப்படி உன்னை மாறவிடமாட்டேன், நீ உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உன்னைத் தேடி வருவேன்' என்றார். நான் பேசியது மனிதர்கள் இல்லாத தனிமையைப் பற்றியல்ல, மனிதர்கள் சூழ இருந்தாலும் நான் உருவாகிக்கொள்ளும் தனிமைத் தீவு பற்றியது.

நான் மேலும் நீள நடந்துகொண்டிருந்தேன். ஒரு வீட்டிலிருந்தவர்களிடையே என் தயக்கம் நீக்கிப் பேச்சுக்கொடுத்தேன்.தினமும் காலையும் மாலையும் இப்படி வெளி விறாந்தையில் குத்துவிளக்கேற்றி குடும்பம்,பிள்ளைகளாய் வழிபாடு செய்வது வழக்கம் என்றனர். நான் அவர்களுடன் பேசி விடைபெற்று, மீண்டும் அதே பாதையில் திரும்பியபோது அங்கே பிரார்த்தனைப் பாடல்களுடன் வழிபாடு நடப்பதைப் பார்த்தபடி நகர்ந்தேன். இவ்வாறு ஒரு கலாசாரம் சுவீடனில் மாலைவேளைகளில் பார்த்திருக்கிறேன். வீடுகள், உணவகங்கள் எங்கும் மாலையில் அது எவ்வளவு பனிக்காலமாக இருந்தாலும் விளக்குக் கொளுத்துவார்கள். அது அவர்களின் கடல் நாடோடிக் கலாசாரத்தோடு வந்ததாகச் சொன்னதாய் ஞாபகம்.

ஒரு நாள் எவ்வளவு மோசமாக இருந்தாலும் ஒரு விளக்கின் முன் மனதைக் குவித்து இருப்பதென்பது அருமையானது. சும்மா இந்த விளக்குகளைக் கடந்து சென்ற எனக்கே உள்ளே அமைதி பரவி உள்ளம் கனிந்திருந்தது.

அடுத்த நாள் படகுத் துறையை அண்டி நடக்கையில் ஒரு கோயில் கவர்ந்திழுத்தது. சிறு கோயில் எனினும் கேரளாபாணிக்குரிய கலைத்துவம் அதில் மிளிர்ந்தது. முருகன் கோயில்
, ஆனால் அதற்குள் இருந்த சாஸ்தாவும், துர்க்கையும் வேறொரு அழகில் கருங்கற்களில் மிளிர்ந்து கொண்டிருந்தனர். நாராயண குருவுக்கும் ஒரு இடமிருந்தது. அவருக்கு சிறு பூஜை நடந்த பின்னரே மூலவருக்கும் பிறருக்கும் பூசைகள் நடக்கத் தொடங்கின.

சில மாலைகள் சூடி, ஏழு தீபங்கள் ஏற்றப்பட்டு, ஒளியிலே மிளிர்ந்த அம்மனின் முகம் மனதுக்கு மிக நெருக்கமாயிற்று. பூசைகள் தொடங்க முன்னர் இருந்த அமைதியில் கருமையில் துலங்கிய அம்மனின் விழிகளில், இப்படி அலைந்து அலைந்து எதைத் தேடுகின்றேன் என்று அலையடிக்கும் கணங்கள் சட்டென்று உறைந்து போயிருந்தன.

*********

(Feb 08, 2023)

கார்காலக் குறிப்புகள் - 07

Wednesday, June 28, 2023

 

ண்பரொருவர் சில நாள்களின் முன் சந்திப்பதற்காக அழைத்திருந்தார். நாங்கள் தேநீர் அருந்தியபடி எங்கேனும் கஃபேயில் இருந்து உரையாடுவோம் என்றபோதும், அவரது குடும்பத்தினருக்கும் அறிமுகப்படுத்த வேண்டுமென்று என்னை அவர்களின் வீட்டுக்கு அழைத்து சென்றார். அவரது துணைவியாரும் சுவாரசியமானவர். எங்கள் உரையாடல் பெரும்பாலும் திரைப்படங்களைப் பற்றியதாக இருந்தது.

நண்பர் இப்போது ஒரு முழுநீள சிங்களப் படத்தை எடுத்து முடித்திருந்தார். அதை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றார். எனக்கு விருப்பமெனில் தனது ஸ்டூடியோவில் ஒரு பிரத்தியேகக் காட்சியைத் திரையிடுகினறேன் என்றார். இன்னமும் பொதுவெளியில் திரையிடாத ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதென்பது ஓர் அரியவிடயமல்லவா?

இத்திரைப்படத்தின் கதை கயிற்று முனை மேல் நடப்பது போன்றது. கொஞ்சம் சறுக்கினாலே பார்வையாளர்களை கதைக்கு வெளியே தள்ளிவிடும். ஆனால் அதை நாம் உணராவண்ணம் திரைக்கதை ஆக்கப்பட்டிருந்தது. ஒன்றரை மணித்தியாலத்துக்கு மேலாக இருக்குமென்று நினைக்கின்றேன். நான் அந்தத் திரைப்படத்துக்குள்ளேயே வரும் வெவ்வேறு பாத்திரங்களில் ஒருவனாக இருந்தேன்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையாகத் திரைப்படங்களைப் பார்ப்பார்கள். காட்சிகளாக, கதைகளாக, இசையாக எனப் பார்க்கும் வகை ஒவ்வொருவருக்கும் வேறுபட்டது. எனக்கு ஒரு திரைப்படம் எத்தகைய அதிநுட்பமான கருவிகளால் படமாக்கப்பட்டாலும், முதலில் திரைக்கதையின் பின்னே மனம் நகர்ந்தபடியிருக்கும். பின்னர் அத்திரைப்படத்தை இன்னொருமுறை பார்க்கும்போது திரைப்படத்தின் மிகுதி விடயங்கள் தெளிவுறத் தொடங்கும்.

நண்பரோடு இத்திரைப்படத்தைப் பற்றிப் பேசும்போது சதா பிரணவனின் இன்னும் பொதுவில் திரையிடப்படாத Friday & Friday பற்றியும் குறிப்பிட்டேன். தனிப்பட்டு அத்திரைப்படத்தைப் பார்க்க எனக்கு சதா பிரணவன் இணையத்தினூடு ஒழுங்கு செய்திருந்தார். அத்திரைப்படம் வெளிவரும்போது புலம்பெயர் சூழலில் கவனிக்கத்ததொரு படமாக இருக்கும். லெனின் எம். சிவம், சதா பிரணவன், பிரதீபன் போன்றவர்கள் புலம்பெயர் தேசத்திலும், சோமீதரன், ஹசீன் போன்றவர்கள் தமிழகத்தில் இருந்தும் திரைப்படம் முயற்சிகளை பல்வேறு வாழ்வியல்/பொருளாதார நெருக்கடிகளிலிருந்து செய்து கொண்டிருக்கின்றார்கள். நாம் தென்னிந்தியத் திரைப்பட மோகங்களின் பின் மட்டும் அலையாமல், இவர்களின் முயற்சியையும் ஊக்குவிக்கவேண்டும். முக்கியமாக புலம்பெயர்ந்த தேசத்தில் இருந்து பெருமளவில் பணத்தை முதலீடு செய்யும் தயாரிப்பாளர்கள், நம்மிடையும் திரைப்படங்களை எடுக்க வல்லவர்கள் இருக்கின்றார்கள் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். இதுவே நாம் இன்னமும் சொல்லாத கதைகளை திரையில் சொல்கின்ற களங்களை விரிக்கச் செய்யும்.

இந்தச் சிங்களத் திரைப்படத்தை எடுத்த நண்பருக்கு தென்னிந்தியாவில் புதிய வெளிகள் திறக்க இருக்கின்றன. விரைவில் அது குறித்த அறிவித்தல்களைப் பொதுவெளியில் அறிவிப்பாரென நினைக்கின்றேன். எனக்குப் பிடித்த சிங்கள நெறியாளர் பிரசன்ன விதானகே காடிக்குப் பிறகு இந்தியாவிலேயே மலையாள நடிகர்களை வைத்து ஒரு திரைப்படம் எடுத்துக் கொண்டிருக்கின்றார்.

000000000

எனக்கும், இந்நண்பருக்கும் பொதுவான நண்பராக இருந்த ஒருவரைப் பற்றிய பேச்சும் இடைநடுவில் போனது. என்னை சமூக வலைத்தளங்களில் அந்தப் பொது நண்பர்’ block செய்ததைப் போல, இந்த நண்பரோடும் நட்பிலிருந்து விலகிவிட்டார். இன்று அந்தப் பொது நண்பர் பொதுவெளியில் கவனத்தை ஈர்க்கும் கவனிக்கத்தொரு ஆளுமையாகிவிட்டார். ஆனால் எனக்கும் இந்த நண்பருக்கும் அவரோடு வந்துவிட்ட விலகல், படைப்பாளியாக இருக்கையில் அவரின் அறம் சார்ந்த விடயங்கள் குறிந்ததாகும். ஒருவர் நல்லதொரு படைப்பாளியாக ஆகும்போது, மற்றமை (Other) குறித்த புரிதல் தெளிவாக இருக்கவேண்டும். ஆனால் இந்த பொதுநண்பரோ ஆர்ப்பாட்டங்களுக்கு நண்பர்களுடன் போய் அவர்களின் அனுமதியின்றி படம்பிடித்து தன் படங்களில் பாவிப்பது, மிகவும் ஆபத்தான பின்னணியில் இருந்து அரசியல் விடயங்களைப் பேசுபவர்களைப் பேசவிட்டு, அவர்களுக்கு அறிவிக்காது படமாக்குவது, உதவிக்கு வருபவர்களின் வாகன அடையாளங்களை மறைக்காது திரையில் வெளியிடுவதென்று அவர் செய்யும் அறம்பிறழ்ந்த விடயங்கள் சொல்லிமாளாதவை. இவ்வாறான விடயங்கள் நடந்ததை அவருக்குச் சுட்டிக்காட்டும்போது, ஒரு சாதாரண மன்னிப்பைச் சொல்லிவிட்டு, இதேபோன்றவற்றை அவர் தொடர்ந்து செய்துகொண்டிருப்பதுதான் எமக்கு ஏமாற்றமளிப்பது.

ஒருவர் தன் படைப்பின் உள்ளடக்கத்தால் வாசகர்/பார்வையாளர்களை கவர்ந்து, அந்த விடயம் குறித்த உரையாடல்களைச் செய்வதே ஒரு நல்லதொரு படைப்பாளிக்குரிய அடையாளம், ஆனால் இந்தப் பொது நண்பரோ தேவையில்லாத சர்ச்சைகளை முன்னோட்டங்களில் உருவாக்குவதே தன் கடன் பணிசெய்து கிடப்பதென்பது போல இருப்பார். என்ன செய்ய, இவை குறித்து மேலும் நிறைய எழுதலாம். ஆனால் இந்தப் பொது நண்பரும் நானும் இப்போது அவ்வவ்போது சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் வாழ்வதால் அவையடங்கிப் பேசுவதுதான் எனக்கும் நல்லது.

இந்த சிங்களப் படத்தை இயக்கிய நண்பரின் வாழ்க்கையே ஒரு திரைப்படமாக்கக்கூடிய அவதிகளும், அலைச்சல்களும் நிறைந்தவை என்பதை அவர் சொன்னபோது அறிந்தேன். இலங்கையில் பிறந்த நம்மிடம் எவ்வளவு கதைகள் எழுதுவதற்கும்/காட்சிப்படுத்துவதற்கும் இருக்கின்றன. இந்த நண்பர் திரைப்படத் துறைக்கு எவ்விதப் பின்னணியும் இல்லாது வந்தவர். மிகவும் கஷ்டப்பட்டு வந்து ஓரிடத்தை நிலைநிறுத்தியும் விட்டார். இப்போது திரைப்படத் துறைக்குள் முழுதாகப் போவதால், அவரின் professional quit செய்து ஒரு வருடமாகிவிட்டது. இவ்வாறான ஒரு அலைச்சலில்தான் நானும் சிக்கியிருக்கின்றேன் என்பதால் எனக்கு அவருடன் நெருக்கம் இன்னும் கூடியது.

எங்களுக்குப் பிடிக்கும் ஒன்றைச் செய்யும்போது ஏதோ பலவற்றை இழக்கத்தான் வேண்டியிருக்கின்றது. அந்த இழப்புக்கள், அடையும் விடயங்களின் மேல் இருக்கும் காதலால் சமன் செய்யப்படுகின்றது. ஆனால் நம் எல்லோருக்கும் தத்தளிப்புக்களும், நெருக்கடிகளும் இருக்கின்றன; அவை அந்தரங்கமானவை. எப்போதாவது இப்படி ஒத்த அலைவரிசையுள்ளவர்களுடன் உரையாடும்போது மட்டும் மேலெழக்கூடியவை.

நண்பரின் ஸ்டூடியோ இப்போது பலரும் வந்து தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ளும் இடமாக இருக்கின்றது. தான் தனித்துக் கஷ்டப்பட்டது போலவன்றி அடுத்த தலைமுறை இன்னும் முன்னேறிச் செல்லவேண்டும் என்பதாய் அவரின் ஸ்டூடியோ பலருக்காய்த் திறந்திருக்கின்றது. அவரிடமிருந்து ஒளிப்பதிவாளர்கள், எடிட்டர்கள் பண்பட்டு இப்போது பிற திரைப்படங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர் என்பது உவகை கொள்கின்ற விடயம்.

000000000

ஜெயமோகனின் தன் மீட்சிநூலில் இவ்வாறு தம் விருப்பம் சார்ந்து, தம் கனவுகள் சார்ந்து இயங்குபவர்கள் பற்றி நிறையப் பேசப்பட்டிருக்கும். ஜெமோ முன்வைக்கும் சராசரிகள்மீது எனக்கு முரண் உரையாடல்கள் இருக்கின்றன. அவர் கீதை முன்வைக்கும் ‘’ஆகவே செயல் ஆற்றுகஎன்பதிலிருந்தும், நித்ய சைதன்ய யதியின் விதி சமைப்பவர்கள்என்பதிலிருந்தும் இந்த கருத்தாக்கத்தை முன்வைக்கின்றார். எனக்கு யதி முன் வைக்கும் விதி சமைப்பவர்களோடு நெருங்கி வரக்கூடியதாக இருக்கிறது. இந்த உலகில் எல்லோரும் செயலாற்ற வேண்டியவர்கள் அல்ல. நாம் எமக்கான சாதாரண வாழ்வோடும் இவ்வாழ்வை வாழ்ந்துவிட்டுப் போகலாம். அப்படித்தான் பல பேர் இருக்கின்றார்கள். ஆனால் ஒருவருக்குள் அந்தச் சராசரித்தன்மையைத் தாண்டி ஏதேனும் செய்யும் உந்துதல் இருந்தால் அவர் அதை நோக்கிப் போகத்தான் வேண்டும்.

எல்லோருக்கும் இது ஓரு கட்டாயமில்லை. செயலாற்றாமல் கூட இருக்கலாம். அப்படித்தான் எத்தனையோ பேர் இருக்கின்றனர். மேலும் இப்படி உங்களுக்கு லெளதீக விடயங்களை மீறி ஒன்று பிடித்து அதை நோக்கி நீங்கள் நகர்வதாயின் நிறைய இழக்கத்தான் வேண்டும். ஆனால் அது தரும் மனநிறைவை நீங்கள் வேறு எங்கும் உணரமுடியாது. அதேவேளை இதை வைத்து நீங்கள் அதிகாரத்தை நோக்கி நகர்வீர்களாயின் உங்கள் கலை உங்களைக் கைவிட்டும் போய்விடும். நீங்கள் இவ்வாறு செயலாற்றும்போது நூற்றாண்டுகளாய்த் தொடர்ந்து வரும் கண்ணியின் ஒரு சிறு தொடர்ச்சியென உணரவேண்டுமென அந்நூலில் யதியை முன்வைத்தும் உரையாடப்பட்டிருக்கும்.

வெளியில் சாதாரணமாவராகவும், இவற்றில் ஏற்படும் நிறைவை உள்ளே அனுபவித்தபடியும் நாங்கள் இருக்க முடியும். இது ஒருவகையில் ஸென் சொல்வதும் கூட; முதலில் மலைகள் மலைகளாகவே இருந்தன. ஞானமடைகின்ற முதல் துளியில் மலைகள் மறைந்துவிடுகின்றன. ஞானம் நமக்குள் தெளிவுறும்போது மறைந்த மலைகள் மீண்டும் தோன்றிவிடுகின்றன. ஞானமடைய முன்னர் பார்த்த அதே மலைகள்தான் வெளியில் இப்போது தெரிகின்றன. ஆனால் ஞானமடைந்தவர் பார்த்துக்கொண்டிருப்பது அதே மலைகள்தானா?  என்பதுதான் அந்தத் தத்துவச் சரடு.

ஆகவே, விரும்பியவர்கள் விரும்பியதைச் செய்யத் துணியுங்கள். காலம் ஒருபோதும் நமக்காகக் காத்திருப்பதில்லை. வெற்றி என்பதும் தோல்வி என்பதும் வெளிச் சூழலுக்கான ஓர் பாவனை மட்டுமே என்ற புரிதல் வந்தால் சலிப்புக்களை மீறிச் செல்ல முடியும். நம் பயணங்களிடையே நாம் எதை அடைந்தோம் என்பதே நம் அகமனதுக்கு முக்கியமானது.

**********************


(May 20, 2023)

கொச்சின்

Tuesday, June 27, 2023

 

காலையில் பெஞ்சில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் அவரைப் பார்த்தேன். மனிதர்கள் கடந்துபோகையில் அவர்களின் விழிகளைப் பார்ப்பதைப் பொதுவாகத் தவிர்ப்பேன். ஏனோ இவரின் விழிகளைப் பார்த்து ஒரு சின்ன தலையசைப்பை இருவரும் செய்தோம். மூக்குத்தி அணிந்த பெண்கள் எப்போதும் வசீகரிப்பதைப் போல, இவரின் கடுக்கனும், நீண்ட தாடியும் என்னைக் கவர்ந்திருக்கலாம்.

இவ்வாறு பல்வேறு மனிதர்களை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கையில் நமக்குள் பல கதைகள் பீறிட்டெழச் செய்யும். அவை எல்லாம் கதைகளாக விட்டாலும் அந்த நேரத்தில் மனதுக்கு மிகுந்த பரவசத்தை அளிக்கும்.

எதிரே ஒருவர் சோளப் பொத்திகளை அவித்து விற்கத் தயாராகிக் கொண்டிருந்தார். நடக்கும்போது காலைக் கெந்திக் கெந்தி நடந்து கொண்டிருந்தார். ஆனால் அமர்ந்து இருக்கும்போது அதன் சுவடில்லாது அவ்வளவு கம்பீரமாக இருந்தார். அவரிடம் முதல் வாடிக்கையாளராக ஒரு சோளப்பொத்தியை வாங்கிக் கொண்டு மீண்டும் கடந்து போகின்றவர்களை அவதானிக்கத் தொடங்கினேன்.

இப்படி பெங்களூரு ஒரியன் மாலின் வெளிப்புறத்தில் சும்மா நெடும்பொழுது இருந்திருக்கின்றேன். உண்மையில் பெங்களூரு ஒரு பல்கலாசார நகர் மட்டுமில்லை, gender neutral நகருங்கூட. எவரும் எவரையும் வித்தியாசமாக உற்றுப்பார்க்காது, அவரவர் அவரவர்க்கு விரும்பிய ஆடைகளுடன் இயல்பாக நடமாடிக் கொண்டிருந்தனர். காலநிலையும் இதமாக இருந்தது. நான் நின்றது யஷ்வந்தபுரத்தில் சந்தை இருந்த இடத்தில். அங்கே கூட ஒரு நிதானமும்,இரைச்சல் அவ்வளவு இல்லாதும் இருந்தது. வாகன நெருக்கடி மட்டும் சென்னையைத் மீறித் தெரிந்திருந்தது.

டுத்த நாள் மாலையும் அதே இடத்தில் இந்த கடுக்கன் மனிதரைச் சந்தித்தேன். இம்முறை சும்மா தலையசைப்போடு கடந்து போகாமல் பேசத் தொடங்கினோம். நான் பெஞ்சில் இருக்க, அவர் அருகில் அமராமல் சட்டென்று தரையில் அமர்ந்தார். தானொரு ஹிப்பியெனவும், தனக்கு அன்னைப் பூமியில் இருக்க விருப்பம் என்று சொல்லி அப்படியே அமர்ந்துவிட்டார். முதுகில் ஒரு வலி இருப்பதால் அமர்வதில், பொதிகள் சுமப்பதில் மிகுந்த கவனமாக நான் இப்போது இருக்கிறேன். ஆனால் எனக்கு அப்படி ஒருவர் தரையில் அமர்ந்தவுடன் என்ன செய்வதென்றும் தெரியவில்லை. ஒருவர் பெஞ்சில் இருக்காமல் தரையில் இருக்கையில் எப்படி உரையாடுவது. அது இன்னொருவரை அவமதிப்பதாகிப் போய்விடும். சரி வாருங்களென இன்னொரு பக்கமாய் தரையில் இருப்போமென அழைத்துச் சென்று அவருக்கருகில் அமர்ந்தேன்.

அவர் ஹிப்பி வாழ்வைச் சொல்லத் தொடங்கினார். இப்போது ஒரு தெருக்கலைஞராக பாடவும் ஆடவும் செய்கின்றார் எனவும் சொன்னார். இந்தியாவிலும்,ஐரோப்பாவிலும் நிறைய இடங்களில் அலைந்து திரிந்திருக்கின்றார். சில வருடங்களுக்கு முன் ஒரு குரோஷியா ஓவியை ஒருத்தியைக் காதலித்து திருமணம் செய்து அண்மையில் பிரிந்துவிட்டேன் என்றார்.

அந்தப் பெண்ணின் முகநூல் பக்கத்தை, அவரிடம் தொலைபேசி இல்லாததால் என் அலைபேசியில் வைத்துக் காட்டினார். பின்னர் தமிழ்ப்படங்கள், இசை எனப் பேசிக் கொண்டிருந்தோம். அவரோடு இன்னொரு இளைஞனும் இருந்தார். அவரிடம் கொஞ்சக் காசு கொடுத்து ஒரு தண்ணீர்ப்போத்தலும், பிஸ்கெட் பைக்கற்றும் வாங்கி அவர்களோடு திரிந்த ஒரு நாயிற்கு ஊட்டிக் கொண்டிருந்தார்.

பிறகு ஊதுவதற்கு சிலும்பி வேண்டுமா எனக் கேட்டார். அது குறித்து எவ்விதமான தப்பபிப்பிராயம் இல்லையென்றபோதும், இப்போது வேண்டாமென மறுத்தேன். ஒரு சம்பிரதாயத்துக்காய் அவர் பற்றி வைத்த பீடியை மட்டும் வாங்கி சிலமுறை இழுத்துக் கொண்டேன்.

ஒரு பாடகன் என்று சொல்லி தனது கதையைச் சொல்லும் பாடலைப் பாடட்டா எனக் கேட்டார். நிச்சயம் பாடுங்கள் என்றபோது பல்வேறு மொழிகள் கலந்து அந்தப் பாடலைப் பாடிக்காட்டினார்.

நம் உரையாடல்கள் இன்னும் ஆழமாகப் போனபோது ஒரு பெருங்குடிகாரர் வந்து இடையில் குழப்பினார். 'இவரும் நல்ல மனிதர்தான், கொஞ்சம் கூடக் குடிப்பார் அவ்வளவுதான்' என்றார். அது பிரச்சினையில்லை என்று குடிகாரரைப் பேசவிட்டு நாம் அமைதியாக இருந்தோம்.

சட்டென்று இந்தக் காதல் என்பது அவ்வளவு கஷ்டமானது என்றார் கடுக்கன்காரர். அவரின் கதையில் இருந்து இந்தக் காதலில் இருந்து அவரால் அவ்வளவு விடுபட முடியவில்லை என்பது புரிந்தது. குரோஷியா காதலியை இறுதியில் குரோஷியாவில் இருந்து பிரிந்து வந்தபோது
, இந்தியா போய் யாரையாவது திருமணம் செய்து சந்தோசமாக இரு என்று சொன்னார், நான் என்ன பதில் அவருக்குச் சொன்னேன் தெரியுமா என்று கேட்டார். என்ன சொன்னீர்கள் என்றேன்.ஒரு வருடத்தில் 365 நாட்கள் இருந்தால் அந்த 365 நாளும் ஒவ்வொருவராக தினமும் திருமணம் செய்ய என்னால் முடியும். ஆனால் நீ ஒருத்திதான் என் என்றென்றைக்குமான காதலி. உனக்காய்க் கடைசிவரை காத்திருப்பேன் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன் என்றார்.

அதன் பிறகு நான் அமைதியாகிவிட்டேன். எதைச் சொன்னாலும் புரியாத ஆழத்துக்குள் அவர் சென்றுவிட்டார் என்பது புரிந்தது. "காலம் என்றொரு அருமருந்து" எனச் சொல்வது கூட இப்போது தேய்வழக்காகிவிட்டது அல்லவா. மெளனம் அதைவிட எவ்வளவோ சிறந்தது.

அந்தப் பெண்ணின் நினைவுகள் அவருக்குள் பெருக்கெடுத்துப் பாய்ந்திருக்கவேண்டும். சட்டென்று நான் போய் வருகிறேன் என அமைதியை இடைமறித்து, எப்படித் தற்செயலாகச் சந்தித்தோமா அப்படியே பிரிந்துபோனார்.

ஒரு நாடோடியாக அலைபவரைக் கூட இப்படி காதல் பெருஞ் சூழலுக்குள் அலையவைத்து தன்னிலை மறக்கச் செய்துவிட்டதே என நினைத்துக் கொண்டேன். நாம் யாராக இருந்தாலும் உள்ளே நேசத்துக்காய் ஏங்கும், எதன் பொருட்டோ சட்டென்று உடைந்துவிடக் கூடிய சாதாரண மனிதர்கள்தானில்லையா?

*********

(Feb 04, 2023)

கார்காலக் குறிப்புகள் - 06

Friday, June 23, 2023

 

பொன்னியின் செல்வன் (02) முதல்நாளே பார்க்கப் போனதற்குக் காரணம் அக்காவும், மருமகளும். அக்கா பொன்னியின் செல்வன் திரைப்படமாக வந்ததையிட்டு அண்மையிலும் இன்னொருமுறை முழுதாக  ஐந்து பாகங்களையும் வாசித்தார். பொன்னியின் செல்வனை ஆய்வு செய்யக்கூடிய அளவுக்கு அவருக்கு நிறைய அறிவுண்டு. அதுமட்டுமின்றி ஜெயமோகனின் வெண்முரசையும் அது வெளிவந்தகாலத்தில் தினம் தினம் வாசித்து முடித்தவர். அவள் (மருமகள்) ஆங்கிலத்தில் வாசிக்கின்ற அளவுக்கு தமிழில் வாசிப்பதில்லை, 'அறம்' போன்ற தொகுதிகளை வாங்கிக் கொடு என்ற அக்காவின் அறிவுரைகளை- இந்தப் புத்தக விடயங்களில் மட்டும் செவிமடுத்து- நிறைவேற்றியவன் நான்.


அப்படிப்பட்ட என் மருமகளே, பொன்னியின் செல்வன் நான்கு பாகங்கள் வரை வாசித்து முடித்தவர். இவர்களுக்கிடையில் மாட்டுப்பட்ட நான் பொ.செவின் சுருக்கம் மட்டும் வாசித்து கதையை அறிந்தவன். இவர்கள் இருவரும் இது குறித்து அவ்வப்போது விவாதிக்கையில், கொஞ்சம் வெட்கம் மேலிட ஐந்தாம் பாகத்தின் தொடக்க அத்தியாயங்கள் (நாகபட்டின விகாரை) மட்டும் வாசித்து நிறைவடைந்தவன்.

மருமகளுக்கு இப்போது இந்த பொ.செ (02) திரைப்படம் நன்கு பிடித்திருந்தது. அக்காவுக்கு அதன் அசல் கதையில் இருந்து இந்த இரண்டாம் பாகம் பொ.செ விலகியதால் ஏமாற்றமாக இருந்தது. எனக்கு கடந்த சில மாதங்களில் வாரிசு, ‘வசந்தமுல்லை, ‘வாத்தி போன்ற படங்களைத் தியேட்டரில் பார்த்து நல்ல நிதானம் வந்துவிட்டதால், இதன் சில பலவீனங்களைத் தாண்டி, படம் தரமானதாகவே தெரிந்தது. மேலும் அக்காவும், மருமகளுக்கும் இடையில் விவாதம் வந்தால் எவ்விதக் கேள்வியுமில்லாது, மருமகளின் பக்கம் நிற்பவன் நான்.

இதை எல்லாவற்றையும் விட, இலங்கையிலிருந்து புலம்பெயர முன்னர் அக்கா, அம்மாவோடு "ரோஜா" படம் பார்த்தபின், இப்போது மீண்டும் அக்காவோடு இத்தனை வருடங்களின் பின் தியேட்டரில் இருந்து படம் பார்க்கின்றேன் என்கின்ற அனுபவம் முக்கியமானது. அதே மணி ரத்னம், அதே ஏ.ஆர்.ரஹ்மான். காலந்தான் விசையுறு பந்தினைப் போலப் பாய்ந்துவிட்டது. 

பொ.செல்வனை பற்றி இங்கே ஆய்வு செய்யப் போவதில்லை. அ.கா.பெருமாளின் "பெண்கள் துகிலுரிந்தால் பேரண்டம் அழியாதோ" தொகுப்பில் ' தன்னை அழிப்பதும் அரசியல்" என்ற கட்டுரையில் தலைவனுக்காகத் தன்னைப் பலி கொடுப்பது என்ற நிலை தமிழரின் மரபுவழி வரும் எச்சப் பண்பு என்கின்றார். அதில் சோழர்கால வேளக்காரப் படை, பாண்டியர் ஆபத்துதவிகள் படை பற்றிப் பேசப்படுகின்றது. பொ.செவில் பாண்டிய ஆபத்துதவிகள் சோழர் கையில் அகப்படும்போது தம் கழுத்து அறுத்துத் தற்கொலை செய்கின்றனர். சோழரின் வலங்கைப் பிரிவில் உள்ள வேளக்காரப்படை வீரர்கள் தங்கள் தலைவன் இறந்தால் உயிர் தரிக்கமாட்டார்கள் எனச் சொல்லப்படுகின்றது. திருத்தணிப் பக்கமாய் இப்படி தலைவனுக்காக உயிர்விட்ட வேளக்காரப் படைவீரனின் நடுகல் கண்டுபிடிக்கப் பட்டுமிருக்கின்றது.

இன்னொரு கட்டுரையான "நெருப்பில் தள்ளப்பட்டவர்கள்" இல் ஒரு சுவாரசியமான கதை இருக்கின்றது. சதியான பெண்கள் (உடன்கட்டை ஏறுதல்) தெய்வங்களாக்கப்பட்டதைப் பற்றிப் பேசும் கட்டுரையில்
, தஞ்சாவூர்ப் பகுதியில் இருக்கும் சிங்கநாச்சியார் என்ற சிறுதெய்வம் பற்றிப் பேசப்படுகின்றது. பிற்காலச் சோழர்களில் ஒரு சோழன், சிங்கள மன்னனுடன் போர் புரிந்து சிங்கள அரசனையும், அரசியையும் தஞ்சைக்குக் கூட்டிவருகின்றான். சிங்கள அரசனைத் தந்திரமாகக் கொன்றுவிட்டு அரசியை மணக்கின்றான். அவனோடு வாழ விருப்பமின்றி அந்தப்புரத்தில் இருந்த அரசி, ஒருநாள் குளத்தில் விழுந்து சாகின்றாள். அவளது உடலைத் தேடியபோது உடல் கிடைக்கவில்லை. சிலநாட்கள் கழித்து செம்பு ஒன்றை அக்குளத்தில் சிற்பியொருவர் கண்டெடுத்து வீட்டுக்குக் கொண்டுசெல்கின்றார். அன்று அவரது வீடு தீப்பற்றி எரிகின்றது.

வீடு எரிந்ததற்கு அந்த சிங்கள அரசியும், அவள் அந்தச் செம்பில் படிமமாய் உறைந்து வந்ததுமென சனம் நம்பி, அவளுக்குக் கோயில் எடுத்தனர். 15ம் நூற்றாண்டில் இந்த அம்மன் செங்கமமாயி என அழைக்கப்பட்டாள். பின்னர் சிங்கள நாச்சியாக வழிபாடு செய்யப்பட்டாள். இப்போது இந்த அம்மன் சமஸ்கிருதமயமாக்கலில் காளியாக மாற்றப்பட்டுவிட்டாள் என்று அக்கட்டுரை நீளும்.

ஒரு பெண் அரசர்களின் போர் ஆசைகளினால் அக்கிரமாய் பலியானது வரலாற்றில் இருந்து மறைக்கப்படாமல் இருக்க நமக்கு அவள் சிறுதெய்வமாக்கப்பட்டு நினைவூட்டப்படுகின்றாள்.

இன்றைக்கு இலங்கையின் வரலாறென்பது மகாவம்சத்தில் இருந்து தொடங்குகின்றதாக கட்டமைக்கப்பட்டுள்ளது. அது அதிகாரத்தில் இருப்பவர்களால் எழுதப்படவும், மாற்றியமைக்கப்படவும் செய்யப்பட்டிருக்கின்றது என்பதை நாமறிவோம். நம் கண்முன்னாலேயே இன்று எத்தனையோ வரலாற்று/மரபுச்சின்னங்கள் மாற்றப்படுவதைக் காண்கின்றோம். மகாவம்சத்தில் சோழர் படையெடுப்புக்கள் தெளிவாகப் பதியப்பட்டிருக்கின்றன. ஆனால் அது சிங்களவர்களின் பார்வையில் எழுதப்பட்டவை. அதேசமயம் நமக்கு இப்படி சிங்கள நாச்சியார் போன்ற தொன்மக் கதைகள் கிடைக்கும்போது நாம் வரலாற்றை இணைத்துப் பார்க்கும் நிறையக் கண்ணிகள் புலப்படும். அது வரலாற்றை இன்னும் விரிவான பார்வையில் வைத்து ஆய்வு செய்ய உதவி செய்யவும் கூடும்.

மேலும் மகாவம்ச சிங்களவர்கள் சொல்லும் கதையாடலுக்கும், சோழர்களின் வரலாற்றுக் கதையாடலுக்கும் அப்பாலான மூன்றாந்தரப்பின் கதையாடல் இன்னும் சுவாரசியம் தரக்கூடியதாக இருக்கும். ஏனென்றால் அது அதிகாரமற்றவர்களின்/ குரலற்றவர்களின் வரலாறு!

***********


(Apr 29, 2023)


புதுச்சேரி (பாண்டிச்சேரி)

Thursday, June 22, 2023

 

புதுச்சேரி என்றழைக்கப்படும் பாண்டிச்சேரிக்கு போவது என்பது நீண்டநாள் கனவாக இருந்திருக்கிறது. கி.ராஜநாராயணன், பிரபஞ்சன், ரமேஷ்-பிரேம், ராஜ் கெளதமன் ( லண்டனில் சிலுவைராஜ்) போன்றோரின் படைப்புக்களை வாசிக்க அந்த ஆர்வம் இன்னும் கூடியிருந்தது. ஒருவகையில் இவர்கள் காட்டிய ஊர்களும், தெருக்களும், மனிதர்களும் வழியாக நான் மானசீகமாய் அங்கே நான் நடமாடிக் கொண்டிருந்திருக்கின்றேன்.

சென்னையில் இருந்து நான்கு மணித்தியாலப் பஸ் பயணம். நான் எப்போதும் சத்தங்களிலால் பதற்றமடைபவன். அதுவும் பஸ் போன்றவற்றில் ஹெட்செட் போடாமல் அலைபேசிகளில் பாட்டுக் கேட்கின்றவர்களைக் கண்டால் இன்னும் கூடப் பதற்றம் வந்துவிடும். அவர்களிடம் சத்தங்களைக் குறையுங்கள் என்று சொல்லும்வரை அமைதியடையமாட்டேன். ஆனால் இம்முறை எனது நிலையை மாற்ற வேண்டுமென்பதற்காய் வழக்கமேயில்லாத அலைபேசியில் எழுதிப் பார்க்கத் தொடங்கினேன். அப்படி எழுதிக் கொண்டிருக்கும்போது புறவுலகு கரைந்து நான் வேறொரு உலகிற்குள் நுழைந்தபடி இருந்தேன். எந்த எரிச்சலோ பதற்றமோ இந்தப் பயணத்தில் எனக்குள் வராததைக் கண்டறிந்தும் கொண்டேன்.

புதுவையில் எழுத்தாளர்களைப் போல, எனக்கு அண்மைக்காலத்தில் அருமையான ஓவியர்களான இயல், சின்மயா, மரியோ பிரிட்டோ போன்றவர்கள் நணபர்களாகினர். எனவே அவர்களையும் சந்தித்து உரையாடலாம் என்பது மகிழ்ச்சியைக் கொடுத்தது. இன்று நேரு வீதி என அழைக்கப்பட்டும் வீதி எனக்கு ரமேஷ்-பிரேமினால் துப்ளே வீதி என அறிமுகப்படுத்தப்படுகின்றது. புதுவையில் வெள்ளை நகர் (white town) என அழைக்கப்படும் கடற்கரை நகர் புராதனத்தின் அழகில் மிளிர்ந்து கொண்டிருக்கிறது.

புதுவை போன அடுத்த நாள் விடிகாலைச் சூரிய உதயம் பார்க்க மகாத்மா காந்தி சிலை இருக்கும் கடற்கரைப் பக்கமாய்ப் போயிருந்தேன்.  காலையில் அணிவகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. அந்தச் சப்தங்கள் தாண்டி கருங்கல்லில் அமர்ந்து காலைச் சூரியனைப் பார்த்துக் கொண்டிருந்தபோது சிலர் தியானத்தில் உட்கார்ந்திருப்பதைக் கண்டேன். அதில் மிகவும் கவர்ந்தவர் மஞ்சள் நிற சால்வையைப் போர்த்தியிருந்த ஒரு சாமியார். புதுவைக் கடற்கரையில் இருந்த சில மணித்தியாலங்களுக்கு மேலாக அந்தச் சாமியார் அப்படியே அசையாது தாமரை நிலையில் தியானத்தில் இருந்தார். பொலிஸ்காரர்கள் கூட அவரைச் சுற்றிச் சுற்றி 'விசிந்திர ஐந்து' போலப் பார்த்தும் அவரில் எந்தச் சலனமும் இல்லை. 


சில மணித்தியாலங்களில் அவர் நிஷ்டை கலைந்தபோது, என் உள்மனது என்னையறியாமலே அவரை நோக்கி இழுத்துச் சென்றது. தியானத்தில் கனிந்த முகம் அவரது. என் நெற்றியிலும், தலையிலும் சில நிமிடங்கள் கைவைத்து ஆசிர்வதித்தார். நான் அப்படி உள்ளம் நிறைந்து நின்றேன். அவர் ஏற்பாரா இல்லையா என்று தெரியாதபோதும் என் நன்றியைத் தெரிவிப்பதற்காய், வரும் வழியில் காலையில் சாப்பிடுவதற்காய் வாங்கி வந்திருந்த வாழைப்பழ சீப்பைக் கொடுத்தேன். அவர் சட்டென்று திகைத்து பின்வாங்கினார். நான் அவரை வணங்கி விடைபெற்றேன். அவர் யாரெனத் தெரியாது, அவருக்கு என்ன பெயர், எங்கே இருப்பார் என்றறியும் ஆர்வம் இப்போது கூட இல்லை. ஆனால் அந்தக் காலை அவ்வளவு அழகாக இருந்தது. அதுவே எனக்குப் போதுமாயிருந்தது.

அப்படி நிரம்பிய மனதுடன், அரவிந்தரின் ஆச்சிரமம் தேடிப் பயணம் நீண்டது. அமைதியாகவே சமாதியைப் பார்க்கச் சொல்கின்றார்கள். எல்லோரும் தாள் பணிந்து, சமாதியில் தலைதொட்டு வணங்கியதுபோல என்னை என் மனம் விடவில்லை. தியானச் சாமியாரிடம் என்னையறியாமல் பணிந்ததுபோல, சர்வதேசத்திலும் பரந்துவிட்ட இந்தச் சமாதியில் என்னைப் பணியவைக்காதது எதுவென்று யோசிக்கவும் ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அந்தச் சமாதியில் சூழ்ந்திருந்த அமைதி என்னைப் பிறரோடு கொஞ்ச நேரம் தியானத்தில் இருக்க உந்தித் தள்ளியது. ஆகவே அமைதியாகக் கண்ணை மூடி உட்கார்ந்திருந்தேன்.

சில இடங்களில் இருக்கும் நுண்ணதிகாரம் எம்மை அந்த இடங்களில் ஒன்றவிடாததைக் கண்டிருக்கிறேன். திருவண்ணாமலையில் நின்றபோது ரமணாச்சிரமத்திலும், என் ஆன்மீக வழிகாட்டிகளில் ஒருவராக் கொள்கின்ற விசிறி சாமியாரின் ஆச்சிரமத்திலும் இதை உணர்ந்திருக்கின்றேன். அதுபோல இந்த ஆச்சிரமத்திலும் உணர்ந்தேன். ஆனால் ரமணர் தியானஞ் செய்த இடத்துக்கு மலையேறிப் போனபோது அந்த சிறுகுகைக்குள் நான் உணர்ந்த அமைதி வேறு விதமானது.

இடையில் ஒரு கஃபேயிற்குள் நுழைந்து பார்த்தேன். அவ்வளவு அருமையான மரங்களின் பின்னணியில் அது இருந்தது. பாண்டிச்சேரி வெள்ளை நகர் எங்கும் கடதாசிப் பூக்கள் (போஹன்வில்லா) பல்வேறு வர்ணங்களில் பூத்திருக்கின்றன. ஆனால் நான் மஞ்சள் நிற பொன்னொச்சிக்கார ஊர்க்காரன். எனக்காகவும் பொன்னொச்சிகள் மலர்ந்திருந்தன.

அடுத்தநாள் ரமேஷ் பிரேதனைப் பார்க்கப் போயிருந்தேன். ரமேஷைச் சந்திக்கும்வரை அவரது புனைவு காட்டிய வழியே உலாத்திக் கொண்டிருந்தேன். மணக்குள விநாயகர் கோயில், அங்காளம்மாள் கோயில், கிட்டத்தட்ட வெள்ளை நகரின் அனைத்துத் தெருக்களும் எனக்கு நான் புனைவிற்குள்ளா அல்லது நிஜத்திலா உலாவிக் கொண்டிருக்கிறேன் என்ற தோற்ற மயக்கத்தைத் தந்திருந்தது..

என் பிரிய ரமேஷ் பிரேதனை
, என் எழுத்துக்களில் பாதிப்புச் செய்யும் ஓர் ஆளுமையை இறுக்கி அணைத்துக் கொண்டேன். எப்படி எனக்கு அந்தத் தியானச் சாமியார் ஆசிர்வதித்தாரோ அவ்வளவும் ரமேஷிற்குள் கடத்தப்பட வேண்டும் போன்று நெகிழ்ந்திருந்தேன். அவரோடு பேசிய சில மணித்தியாலங்கள் என்றும் என் நினைவில் நிற்கும். ரமேஷ் இன்று இருக்கும் நிலைமை நம் யாராலும் கற்பனை செய்து பார்க்க முடியாதவை. ஆனால் எழுதுவதே தன் வாழ்வின் அர்த்தங் தரக்கூடியதென்று இருப்பவர்க்கு, தமிழ் எழுத்தாளர்க்கு கிடைக்கக் கூடிய அனைத்து அங்கீகாரங்களும், விருதுகளும் எப்போதோ சென்றடைந்திருக்க வேண்டும். ஆனால் இலக்கியத்திற்குள்ளும் ஜிகினாத்தனங்களும், விளம்பரப்படுத்தல்களும் உள்நுழைந்து நீண்டகாலம் ஆயிற்றல்லவா? எனவே ரமேஷ் ஒவ்வொரு உயரிய விருதுகளின்போதும் புறக்கணிக்கப்பட்டே வந்து கொண்டிருக்கிறார்.

அண்மையில் கூட
, ஒரு இலக்கிய விருதுக்கு பரிந்துரைத்து, உனக்குக் கிடைத்தால் ஏற்றுக்கொள்ள முடியுமா என்று என்னிடம் கேட்கப்பட்டபோது, ஒரு நொடி கூடத் தயங்காது, 'என் முன்னோடிகள் இருக்கும்போது நான் இதை ஏற்றுக்கொள்ளமாட்டேன்' எனச் சொல்லி நிராகரித்திருந்தேன். அந்த என முன்னோடிகளில் விலத்தப்பட்ட ஒருவராக ரமேஷ் பிரேதனும் இருக்கிறார்.

ரமேஷிடம் என் "தாய்லாந்தை'க் கையளித்தேன். அவர் எனக்கு ஈழத்தின் பின்னணியில் வந்திருக்கும் ' அவன் பெயர் சொல்' பனுவலைத் தந்தார். மீண்டும் இறுக்கி அணைத்து அவரிடம் இருந்து விடைபெற்று அங்காளம்மான் வீதியிற்குள் இறங்கினேன். நம் காலத்தைய  ஓரு பெரும் ஆளுமையைச் சந்தித்த மகிழ்ச்சியில் அந்தநாள் முழுதும் நிறைந்திருந்தேன்.


***********

(Feb, 2023)


கார்காலக் குறிப்புகள் - 05

Tuesday, June 20, 2023


2000களின் தொடக்கத்தில் இருந்த forum களில் எழுதி விவாதித்து வந்த தலைமுறைகளில் ஒருவன். அப்போது திண்ணை, பதிவுகள் இந்தப் பொதுமன்றங்களைவைத்திருந்தன. நான் பங்கேற்காத யாழ்போன்ற வேறு பல பொதுமன்றங்களும் அன்றைய காலங்களில் தீவிரமாக இயங்கிக்கொண்டு இருந்தன. பின்னர் வலைப்பதிவுகள் நமக்கு அறிமுகமாக, நமக்கென்றோர் சொந்தக் குடிலை அமைத்து எந்தத் தணிக்கையுமின்றி எழுதத் தொடங்கினோம். ஆனால் ஒவ்வொருநாளும் யாருடையதோ வலைப்பதிவில் தீவிரமான அரசியல்/இலக்கிய உரையாடல்கள் நடக்கும். அங்கே நிகழ்பவற்றைக் கவனித்தும், அதில் அவ்வப்போது பங்கேற்றியும் எனக்கான வாசிப்புக்களை விரிவாக்கிக் கொண்டிருக்கின்றேன்.


அன்றைய காலங்களில் சிறுபத்திரிகைகள்/நடுத்தர இதழ்களில் வெளிவரும் ஆக்கங்களும் கவனம் பெறும். நிறைய அவை குறித்து விவாதிப்போம். எப்படி அதற்கு முன்னரான காலத்தில் ரமேஷ்-பிரேமின் ‘முன்னொருகாலத்தில் நூற்றெட்டுக் கிளிகள் இருந்தன’, ஜெயமோகனின் பத்மவியூகம்பற்றி உரையாடப்பட்டதோ, நான் குறிப்பிடும் காலத்தில் ஜே.பி.சாணக்யாவின் கதைகள் விவாதிக்கப்பட்டன. சாணக்யாவின் ஆண்களின் படித்துறை’, ‘அமராவதியின் பூனைஅவற்றில் உள்ளுறைந்து கிடந்த காமத்துக்காகவும், அதை எப்படி எழுத்தில் முன்வைப்பது என்பதற்காகவும் நாம் உரையாடியது இப்போது நினைவில் இருக்கிறது.

அதன்பின் சாணக்யா எனக்கு பிடித்த ஓர் எழுத்தாளராக மாறிப் போயிருந்தார். அவரின் என் வீட்டின் வரைபடம்’, ‘கனவுப் புத்தகம்போன்ற தொகுப்புக்களைத் தேடித்தேடி வாங்கி வாசித்திருக்கின்றேன். உள்ளுறைந்திருக்கும் காமத்தை உக்கிரமாக எழுதி அதிகம் பேசப்படுகையில் சாணக்யா வேறு சிலரைப் போல அதை மட்டுமே எழுதிப் புகழடைந்திருக்க முடியும். ஆனால் அவரொரு நல்லதொரு படைப்பாளி என்பதால் ஆண்களின் படித்துறையையும், ‘அமராவதியின் பூனையையும் தாண்டிப்போய் வேறு நல்ல கதைகளையும் எழுதியிருக்கின்றார்.

2005இற்குள் முதலிரு தொகுப்புக்கள் வந்தாலும், அவரது மூன்றாவது தொகுப்பு முதல் தனிமைவெளிவர 8 ஆண்டுகள் எடுத்தன. எனக்கு அந்த மூன்றாவது தொகுப்பு எனக்கு அவ்வளவு பிடிக்கவில்லை. அது ஏற்கனவே எழுதப்பட்ட கதைகளின் பாதிப்புக்களில் வந்தவை போலத் தோன்றியது. இவ்வாறான சரிவுகளைச் சந்திக்காது எந்த நல்ல படைப்பாளிதான் இருந்ந்திருப்பார்? இதுவும் இயல்பே.

அத்தோடு அப்போது சாணக்யாவும் எழுத்து சார்ந்து சலித்திருந்த காலம் என்று நினைக்கின்றேன். இனி என் படைப்புக்களுக்கு பணம் தருபவர்க்கு மட்டுமே எழுதுவேன் என்று அவர் சொன்னதாகக் கேள்விப்பட்டிருக்கின்றேன். அவரையும் லெளதீக உலகம்நாளந்த வாழ்வின் தத்தளிப்புக்களால் கழுத்தைச் சுற்றி நெருக்கியுமிருக்கலாம்.

ப்போது அவரது நான்காவது தொகுப்பு
பெருமைக்குரிய கடிகாரம்எட்டாண்டுகளுக்குப் பின் வந்திருக்கின்றது. இந்த 8 ஆண்டுகளில் 8 கதைகளைத்தான் எழுதியிருக்கின்றார் போலும். ஆனால் 2000களின் தொடக்கத்தில் பார்த்த ஒரு சாணக்யாவை இதில் மீண்டும் பார்ப்பது நிறைவளிப்பது. இஸ்மாயிலின் தேவதை’, ‘விருந்தினர் இல்லம்;, ‘பெருமைக்குரிய கடிகாரம்’, ‘விலங்குகளின் அணிவகுப்புஎன்று அற்புதமான கதைகள் இருக்கின்றன. உள்ளுறைந்த காமத்தை எழுதுவதால் தொடக்க காலத்தில் அதிக கவனம் பெற்றவர், அதன் துளிச் சுவடும் இன்றி தன்னை வேறுவகையில் நிலைநிறுத்துவதாலும் அவர் ஒரு முக்கிய படைப்பாளிதான் இல்லையா?

இன்றைய காலத்தைய எளிமையான கதைகளை வாசித்து சலித்திருக்கின்றபோது, நான் ஏன் சாணக்யாவின் இந்தக் கதைகளை அற்புதமெனச் சொல்கின்றேன் என்பதை இவற்றை நீங்கள் வாசிக்கும்போது அறிவீர்கள்.

ஒரு உதாரணத்துக்கு வண்ணநிலவன் அருமையெனச் சொன்ன எஸ்.ராமகிருஷ்ணனின் அண்மையில் வெளிவந்தமுகமது அலியின் கையெழுத்துகதையை நேற்று வாசித்துப் பார்த்தேன். எவ்வளவு நுட்பமாக மாற்றக்கூடிய கதை. அதை வணிக இதழுக்கான வாசகர்களுக்குச் சொன்ன உத்தியில் எழுதி எஸ்.ரா நீர்த்துப் போகச் செய்திருப்பார். இதற்காக எஸ்.ரா மீது அல்ல, சிறந்தகதையெனச் சொல்லிய வண்ணநிலவன் மீதே எனக்கு கோபம் வந்தது. கடல்புரத்தில்’, ‘எஸ்தர்போன்ற அவரின் எழுத்துக்களில் திளைத்து அன்றைய காலங்களில் பதிவுகள் போன்ற பொதுமன்றங்களில்’, ஜெயமோகனின் முன் வண்ணநிலவனை விட்டுக்கொடுக்காத ஒரு வாசகனுக்கு, அவனுக்குப் பிடித்த படைப்பாளி பின்னரான காலத்தில் இப்படித்தான் வழிகாட்டுவார் என்றால் அது எவ்வளவு ஏமாற்றந் தருவது?

நிறைய எழுதுபவர்கள் எழுதட்டும். அது அவரவர் விருப்பம். ஆனால் நீர்த்துப் போகாது எழுதி அவரவர்க்கு ஏற்கனவே இருக்கும் தகுதிகளை வாசகர்கள் முன், கீழ் இறக்காதேனும் இருக்கட்டும். அதை புனைவாக எழுதினால் என்ன, விமரசனமாக எழுதினால்தான் என்ன, அவர்கள் கவனத்தில் கொள்ளட்டுமாக.

ஆக,  ஆண்டுக்கொரு கதை என்ற கணக்குப்படி அரிதாக எழுதினாலும், நன்றாக எழுதும் சாணக்யா போன்றோரையும், அவர்களின் வற்றிப்போகாத படைப்பாளுமைக்காய் நாம் வாசிப்போம்.  அவர்கள்  காலத்தில் உதிர்ந்துபோகாது அவர்களைக் கட்டியணைத்து நம்மோடு கூடவே அழைத்துச் செல்வோம்.

**********************************

(Apr 27, 2023)

கண்டிய அரச வரலாறும், பிரசன்ன விதானகேயின் Gaadi திரைப்படமும்

Monday, June 19, 2023

 

ண்டியில் தலதா மாளிகைக்குள் போனபோது அங்கே கண்டிய மன்னர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருப்பதைப் பார்த்தேன். அத்தோடு சிங்களவர்கள் புத்தரின் பல்லென நம்பும்புனிதப்பல்பற்றிய தகவல்களும், தலதா மாளிகையின் கடந்தகால வரலாறும் ஓவியங்களாக வரையப்பட்டிருந்தன. கண்டியே இலங்கையில் இறுதிவரை ஆங்கிலேயருக்கு எதிராக நிமிர்ந்து நின்ற இராச்சியம் என்கின்றபோதும், கண்டிய அரச வரலாறு என்பது மிகவும் சிக்கலானது. கண்டிய மன்னர்கள் காலத்துக்குக் காலம் மதுரை நாயக்கர் இளவரசிகளைத் திருமணம் செய்திருக்கின்றனர்.

அப்படி கண்டி இராச்சியத்தில் மட்டுமில்லை, இலங்கையில் சிங்களவரின் வரலாற்றைச் சொல்கின்றமகாவம்சத்திலேயே, முதல் சிங்கள மன்னனான விஜயனே பாண்டிய இளவரசியையே பட்டத்து இராணியாகத் திருமணம் செய்தான் எனப் பதியப்பட்டிருக்கிறது. அதனால்தான் சிங்களவர்கள் தம்மை ஆரியர்களைப் போல கலப்பின்றிய தூய இனமாகத் தம்மை முன்வைக்கும்போது, ‘உங்களின் வரலாறே தமிழினக் கலப்போடுதான் தொடங்குகின்றது, சிங்களவர்களே இந்த நாட்டின் முதல் குடியேறிகள் என்றால், அதேகாலகட்டத்தில் தமிழ் இரத்தமும் உங்களோடு கலந்துவிட்டதுஎன நாம் சொல்ல அவர்களின்மகாவம்சவரலாறே நமக்கும் சாட்சியாக இருக்கின்றது.


ண்டி இராச்சியத்து அரசர்கள் மதுரை நாயக்க இளவரசிகளைக் காலத்துக்காலம் மணம் முடித்து வந்தாலும், கண்டி இராச்சியத்தில் கடைசி ஒரு நூற்றாண்டு (1739-1815) நான்கு நாயக்க மன்னர்களாலேயே நேரடியாக ஆட்சி செய்யப்பட்டிருக்கின்றது. இவர்கள் என்ன மொழியில் பேசி ஆட்சி புரிந்திருப்பார்கள், என்ன மதத்தைத் தங்களுக்குள் பின்பற்றியிருப்பார்கள் என்பது சுவாரசியமான ஆய்வுகளுக்குரியவை. ஏனெனில் சிறி விஜய ராஜசிங்க(ம்), கீர்த்தி சிறி ராஜசிங்க(ம்) போன்ற மன்னர்கள் நேரடியாகவே மதுரையில் இருந்து வந்தவர்கள். ஆகவேதான் கண்டியின் கடைசி மன்னனான சிறி விக்கிரம ராஜசிங்க(ம்)வின் கையெழுத்து தமிழில் வைக்கப்பட்டிருப்பது இப்போதும் ஆவணமாக நம் முன்னே இருக்கின்றது.

இந்த நான்கு நாயக்க மன்னர்கள் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டைக் கண்டியில் ஆட்சி புரிந்தாலும், இதற்கு முந்தைய நூற்றாண்டிலும் (1581-1591) ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்திருக்கின்றது. டிக்கிரி பண்டார என்பவர் சிறந்த போர் வீரனாக இருந்து, இலங்கை வரலாற்றில் மிகப் பிரசித்தி பெற்ற முல்லேரிவாயப் போரை போர்த்துக்கேயருக்கு எதிராக நடத்தி வெற்றி பெற்றிருக்கின்றார். இதன் நீட்சியில் ராஜசிங்க-1 மன்னனாக  கண்டி இராச்சியத்தில் முடிசூட்டப்பட்டிருக்கின்றார். மன்னனான முதலாம் ராஜசிங்கன் பின்னர் இந்துமதத்திற்கு மாறியிருக்கின்றார். அப்படி மதம் மாறிய மன்னன் தமிழகத்திலிருந்து பல பிராமணர்களை சிவனொளிபாதமலைக்கு அருகில் குடியேற்றியிருக்கின்றார். இந்துமதம் மாறிய மன்னன் புத்த விகாரைகளை அழித்ததாகவும், நூற்றுக்கு மேற்பட்ட புத்தபிக்குகளையும் கொன்றதாகவும் சொல்லப்படுகின்றது. இந்தச் சம்பவம் குறித்து தலதா மாளிகையின் உள்மண்டபத்திலும் எழுதப்பட்டிருக்கின்றது.. எது எப்படியென்றாலும் மிகச் சிறந்த போர்களை போர்த்துக்கேயருக்கு எதிராக நடத்திய சிங்கள மன்னன், இறுதியில் இந்து மதம் மாறி அட்டூழியங்களைச் செய்த ஒரு 'கெட்டவனாக' சிங்களவரின் புனிதக் கோயிலில் பதியப்பட்டிருப்பதென்பது வரலாற்று விந்தையான விடயந்தான்.


பிரசன்ன விதானகேயின்காடி’ (Gaadi) திரைப்படமும் இந்தக் கண்டிய அரச பின்னணியில் இருந்து சொல்லப்படுகின்றது. இது கண்டிய கடைசி (தமிழ்) மன்னனான சிறி விக்கிரம ராஜசிங்க(ம்)த்தின் காலத்தில் (1814-1815) நிகழ்கிறது. ராஜசிங்கவின் முக்கிய பிரதானியாக இருக்கும் எகலியபொல நிலமே ராஜசிங்கவுக்கு எதிராக பிரிட்ஷாருடன் சேர்ந்து, ராஜசிங்கவின் ஆட்சியைக் கவிழ்க்கச் சதி செய்கின்றார்.

எகலியபொல ஓர் அடிகார். இப்போதைய இலங்கை வழக்கில் அடிகாரைப் பற்றிச் சொல்வதென்றால் அவர் ஒரு பிரதம மந்திரிக்கு நிகர்த்தவர். மன்னனை வெல்லும் அந்தச் சதியில் தாம் வென்றால், 'நான் அரசனாகவும், நீ அடிகாராகவும் ஆகலாம்' என்று எகலியபொல, புலத்காம திஸாவேயிற்கு வாக்குறுதி கொடுக்கின்றார்.எகலியபொலவும், புலத்காமவாவும் ஆங்கிலேயரோடு இணைந்து ராஜசிங்கனுக்கு எதிராகத் தொடுத்த முதல் யுத்தமானது தோல்வியில் முடிவடைய, இவர்கள் அனைவரும் ஆங்கிலேயரோடு சேர்ந்து தலைமறைவாகின்றனர்.

மன்னனை எதிர்த்துச் சதி செய்தவர்கள் என்றவகையில் புலத்காமாவின் நிலங்கள் பறிக்கப்பட்டு, அவரின் குடும்பத்தவர்களுக்குத் தண்டனை கொடுக்கப்படுகின்றது. அந்தக் குடும்பத்துப் பெண்கள் ஆற்றுக்குள் குதித்து தற்கொலை செய்யலாம். இல்லாவிட்டால் இன்னொரு தேர்வும் உண்டு. அது சாதிநிலையில் மிக இழிவாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட காடி சாதியினருடன் சேர்ந்து அந்த அரசகுடும்பத்துப் பெண்கள் வாழலாம்.

அன்றைய காடி சாதியினரின் பெண்கள் இடுப்புக்கு மேலே எதையும் அணிவதில்லை. அதுவே அவர்களை மற்ற மேற்சாதி/அரசபெண்களிடமிருந்து விலத்திக் காட்டுகின்ற ஒரு கொடுமையான முறையாகும். அரசனால் தண்டனை கொடுக்கப்பட்ட அனைத்துப் பெண்களும் தற்கொலை செய்ய, புலத்காமாவின் இரண்டாவது மனைவியான் டிக்கிரி மட்டும் தொடர்ந்து வாழும் முடிவைத் தேர்ந்தெடுக்கின்றார்.மறுகரையில் காத்திருக்கும் காடி (கிட்டத்தட்ட அடிமைகள் மாதிரியே ஆதிக்க சாதிகளால் நடத்தப்படுகின்றனர்) சாதியில் முதலில் இக்கரைக்கு நீந்தி வரும் ஆணே அவளுக்குரிய துணையாகப் போகின்றவன். விஜயா என்கின்றவர் முதலாவதாக நீந்திக் கரையேறி டிக்கிரியை அடைகிறார். இப்போது டிக்கிரி மேலாடை கிழிக்கப்பட்டு அரைநிர்வாணமாக்கப்பட்டு காடி சாதியில் ஒருவராக ஆக்கப்படுகின்றார்.

இதன்பின் திரைப்படம் முழுதும் டிக்கிரியினதும், விஜயனின் தப்பிப் பிழைத்தல் பற்றிய காட்சிகளாய் விரிகின்றன. டிக்கிரியால் ஒடுக்கப்பட்டோர் வாழ்வு முறைக்குள் அவ்வளவு எளிதாக மாற முடியாதிருக்கின்றது. காடி சாதியினர் வேலை எதுவுமே செய்ய அனுமதிக்கப்படாது பிறரிடம் இரந்து வாழ்பவர்களாக மட்டும் ஆக்கப்பட்டவர்கள். அப்படி இரந்து வாழும் கூட்டத்தில் மேலாடையைக் கைவிடாது, இன்னமும் அதை அணிந்தபடி இருக்கும் டிக்கிரியால், காடி சமூகத்தினர் ஆதிக்கசாதியினரால் பல்வேறு தண்டனைகளை அனுபவிக்கின்றனர்.

இறுதியில் குழுவாக வாழும் காடி சமூகத்திலிருந்து, விஜயாவும், டிக்கிரியும் பிரிந்து வாழத் தலைப்படுகின்றார்கள். அதற்காய் அடர்ந்த காடுகளைத் தேடி வேறொரு நிலத்திற்குள் நுழைகின்றனர். அங்கே தமது சாதி அடையாளங்களைத் துறந்து விஜயாவும், டிக்கிரியும் மேற்சாதியினரைப் போல தம்மை ஆக்கிக் கொள்கின்றார்கள். எருதுகள் பிடித்து விற்று தம் வாழ்வைக் கொண்டு செல்கின்றனர்.

மீண்டும் எகலியபொலவும், டிக்கிரியின் கணவரும் பிரிட்டிஷ்காரருடன் சேர்ந்து ராஜசிங்கவை வீழ்த்த போர் தொடுக்கின்றனர். அந்தவேளையில் தற்செயலாக காடியாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட டிக்கிரி தனது கணவன் முன் தோன்றுகின்றார். ஆனால் கணவன் அவரை ஏற்றுக்கொள்ளாது மேலாடை அணிந்தபடி இருக்கும் காடி இவள் என்று தண்டனை கொடுக்கப் பணிக்கின்றார். இறுதியில் டிக்கிரியையும், விஜயவையும் காடி சமூகத்திலிருந்து தப்ப வைத்ததற்காய், காடி முழுச் சமூகமும் எகலியபொலவாலும், புலத்காமாவாலும் படுகொலை செய்யப்படுகின்றனர்.

இப்போது கண்டி ராச்சியம் ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டு விடுகின்றது. ராஜசிங்க(ம்) வேலூருக்கு கைதியாக கண்டியிலிருந்து பிடிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுகின்றார். தமது முழுச்சமூகத்தையும் இழந்த விஜயனுக்காய் டிக்கிரி ஒரு முக்கிய முடிவை எடுக்கின்றார். அது அந்தச் சமூகம் முற்றாக அழிந்து போகாது இருப்பதற்கான முக்கிய காலடியாகும். அத்துடன் திரைப்படம் முடிவடைகின்றது.



ன்றிருக்கும் சிங்கள நெறியாளர்களில் எனக்கு மிகப்பிடித்தவர் பிரசன்ன விதானகே. இவருக்குப் பிறகே அஷோக ஹந்தகம, விமுத்தி ஜெயசுந்தரா போன்றோரை முன்வைப்பேன். அதிக அலட்டலில்லாத காட்சிகளாலும், உலுக்க வைக்கும் சம்பவங்களில்லாதும் அவ்வளவு ஆழமாக எங்களுக்குள் உரையாடலை விதைப்பவை பிரசன்னவின் திரைப்படங்கள். இந்தத் திரைப்படம் முழுதும் காட்டுக்குள்ளே நடக்கின்ன்றன. அவ்வளவு பசிய பின்னணி. சும்மா கொஞ்சம் மலையேறிப் போய் ஷூட் வைத்தாலே அதை அதிசயம் போலப் பேசும் தமிழகத் திரைப்படக்காரர்கள் இந்தப் படத்தின் காட்டைப் பார்க்கவேண்டும். அவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்தபோதும், அதை பார்ப்பவர்களே தீர்மானிக்கட்டும் என்று அமைதியாகவே இருக்கும் பிரசன்னாவிடமிருந்து தமிழக இயக்குநர்களைக் கற்றுக் கொள்ளுங்களெனச் சொல்லப்போவதில்லை. அவர்கள் நாம் அறிவுரை கூறும் நிலைமைக்கு மேலே சென்றுவிட்டார்கள். ஆனால் ஈழத்தில் தமிழ்ப்படங்களை எடுக்கும் நெறியாளர்கள்/படங்களை எடுக்க விரும்பும் திரைப்பட ஆர்வலர்களை பிரசன்னா விதானகே, அஷோக ஹந்தம, விமுத்தி ஜெயசுந்தராவின் அனைத்துத் திரைப்படங்களையும் பார்க்க வேண்டுமெனப் பரிந்துரைப்பேன். குறைந்த முதலீட்டுடன், ஈழத்துக்குரிய கதைகளை எப்படி அற்புதமாக எடுக்கலாம் என்பதை இவர்களிடமிருந்து அறிந்து கொள்ளலாம். உண்மையான ஆர்வத்துடன் அவர்களை அணுகினால் நமக்குக் கற்றுத்தரவும் அவர்கள் ஆர்வமாக இருப்பார்கள்; அவ்வளவு எளிமையானவர்களும் கூட.

இந்தத் திரைப்படத்தில் டிக்கிரியாக நடித்திருக்கும் டினாரா புஞ்சிவாவிற்க்கு இது முதற்படம். ஆனால் எப்படியொரு அற்புதமான நடிப்பை பிரசன்னா இவரிடமிருந்து பெற்றிருக்கின்றார் என்பதைத் திரைப்படம் பார்க்கும் போது நமக்குப் புரியும்இத்திரைப்படம் பற்றி ஓரிடத்தில்  பிரசன்னா கூறும்போது, காடி சமூகத்தின் பெண்கள் அன்று மேற்சட்டை இல்லாது (topless) இருந்ததை திரையில் காட்சிப்படுத்தத்தான் கடினமாக இருந்தது என்று குறிப்பிட்டிருப்பார். அந்த அரை நிர்வாணத்தைக் கூட நமக்குப் புரியும்படியும், அதை சமயம் இலங்கை போன்ற நாடுகளில் இருக்கும் தணிக்கை விதிகளையும் பின்பற்றி எப்படி நுட்பமாக எடுத்திருக்கின்றார் என்பதில்தான் ஒரு நெறியாளரின் மேதமை விளங்கும். பிரசன்னா அப்படிப்பட்டவர். இந்தத் திரைப்படமும் அப்படிப்பட்டதே.

அன்றைய காலத்து அரச கதையை, இன்றைய காலத்துக்கு ஏற்றமாதிரியும் மாற்றி (அரச இடாம்பீக செட்டுக்களுக்கு எல்லாம் வீணாகச் செலவழிக்காது) நம்மை நெகிழவைக்கும் ஒரு கதையை இயற்கையின் அவ்வளவு வனப்பான பின்னணியில் வைத்து பிரசன்னா தந்திருக்கின்றார். பிரிட்டிஷ் ஆட்சியின் பின் வந்த சட்டங்களினால் காடி என்ற தனித்த சாதியினர் இல்லாதுபோய், அவர்கள் பின்னர் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்குள் கலந்துவிட்டனர் என்று சொல்லப்படுகின்றது. ஆனால் இன்னமும் சாதிப் படிநிலைகளும், சாதிய ஒடுக்குமுறைகளும், ஆதிக்கசாதி மனோபாவங்களுமுள்ள நம் சமூகம் கற்றுக்கொள்ளவதற்கு இத்திரைப்படத்தில் எவ்வளவோ நிறைய விடயங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

*************************

(நன்றி: 'அம்ருதா', வைகாசி - 2023)