கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

புதுச்சேரி (பாண்டிச்சேரி)

Thursday, June 22, 2023

 

புதுச்சேரி என்றழைக்கப்படும் பாண்டிச்சேரிக்கு போவது என்பது நீண்டநாள் கனவாக இருந்திருக்கிறது. கி.ராஜநாராயணன், பிரபஞ்சன், ரமேஷ்-பிரேம், ராஜ் கெளதமன் ( லண்டனில் சிலுவைராஜ்) போன்றோரின் படைப்புக்களை வாசிக்க அந்த ஆர்வம் இன்னும் கூடியிருந்தது. ஒருவகையில் இவர்கள் காட்டிய ஊர்களும், தெருக்களும், மனிதர்களும் வழியாக நான் மானசீகமாய் அங்கே நான் நடமாடிக் கொண்டிருந்திருக்கின்றேன்.

சென்னையில் இருந்து நான்கு மணித்தியாலப் பஸ் பயணம். நான் எப்போதும் சத்தங்களிலால் பதற்றமடைபவன். அதுவும் பஸ் போன்றவற்றில் ஹெட்செட் போடாமல் அலைபேசிகளில் பாட்டுக் கேட்கின்றவர்களைக் கண்டால் இன்னும் கூடப் பதற்றம் வந்துவிடும். அவர்களிடம் சத்தங்களைக் குறையுங்கள் என்று சொல்லும்வரை அமைதியடையமாட்டேன். ஆனால் இம்முறை எனது நிலையை மாற்ற வேண்டுமென்பதற்காய் வழக்கமேயில்லாத அலைபேசியில் எழுதிப் பார்க்கத் தொடங்கினேன். அப்படி எழுதிக் கொண்டிருக்கும்போது புறவுலகு கரைந்து நான் வேறொரு உலகிற்குள் நுழைந்தபடி இருந்தேன். எந்த எரிச்சலோ பதற்றமோ இந்தப் பயணத்தில் எனக்குள் வராததைக் கண்டறிந்தும் கொண்டேன்.

புதுவையில் எழுத்தாளர்களைப் போல, எனக்கு அண்மைக்காலத்தில் அருமையான ஓவியர்களான இயல், சின்மயா, மரியோ பிரிட்டோ போன்றவர்கள் நணபர்களாகினர். எனவே அவர்களையும் சந்தித்து உரையாடலாம் என்பது மகிழ்ச்சியைக் கொடுத்தது. இன்று நேரு வீதி என அழைக்கப்பட்டும் வீதி எனக்கு ரமேஷ்-பிரேமினால் துப்ளே வீதி என அறிமுகப்படுத்தப்படுகின்றது. புதுவையில் வெள்ளை நகர் (white town) என அழைக்கப்படும் கடற்கரை நகர் புராதனத்தின் அழகில் மிளிர்ந்து கொண்டிருக்கிறது.

புதுவை போன அடுத்த நாள் விடிகாலைச் சூரிய உதயம் பார்க்க மகாத்மா காந்தி சிலை இருக்கும் கடற்கரைப் பக்கமாய்ப் போயிருந்தேன்.  காலையில் அணிவகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. அந்தச் சப்தங்கள் தாண்டி கருங்கல்லில் அமர்ந்து காலைச் சூரியனைப் பார்த்துக் கொண்டிருந்தபோது சிலர் தியானத்தில் உட்கார்ந்திருப்பதைக் கண்டேன். அதில் மிகவும் கவர்ந்தவர் மஞ்சள் நிற சால்வையைப் போர்த்தியிருந்த ஒரு சாமியார். புதுவைக் கடற்கரையில் இருந்த சில மணித்தியாலங்களுக்கு மேலாக அந்தச் சாமியார் அப்படியே அசையாது தாமரை நிலையில் தியானத்தில் இருந்தார். பொலிஸ்காரர்கள் கூட அவரைச் சுற்றிச் சுற்றி 'விசிந்திர ஐந்து' போலப் பார்த்தும் அவரில் எந்தச் சலனமும் இல்லை. 


சில மணித்தியாலங்களில் அவர் நிஷ்டை கலைந்தபோது, என் உள்மனது என்னையறியாமலே அவரை நோக்கி இழுத்துச் சென்றது. தியானத்தில் கனிந்த முகம் அவரது. என் நெற்றியிலும், தலையிலும் சில நிமிடங்கள் கைவைத்து ஆசிர்வதித்தார். நான் அப்படி உள்ளம் நிறைந்து நின்றேன். அவர் ஏற்பாரா இல்லையா என்று தெரியாதபோதும் என் நன்றியைத் தெரிவிப்பதற்காய், வரும் வழியில் காலையில் சாப்பிடுவதற்காய் வாங்கி வந்திருந்த வாழைப்பழ சீப்பைக் கொடுத்தேன். அவர் சட்டென்று திகைத்து பின்வாங்கினார். நான் அவரை வணங்கி விடைபெற்றேன். அவர் யாரெனத் தெரியாது, அவருக்கு என்ன பெயர், எங்கே இருப்பார் என்றறியும் ஆர்வம் இப்போது கூட இல்லை. ஆனால் அந்தக் காலை அவ்வளவு அழகாக இருந்தது. அதுவே எனக்குப் போதுமாயிருந்தது.

அப்படி நிரம்பிய மனதுடன், அரவிந்தரின் ஆச்சிரமம் தேடிப் பயணம் நீண்டது. அமைதியாகவே சமாதியைப் பார்க்கச் சொல்கின்றார்கள். எல்லோரும் தாள் பணிந்து, சமாதியில் தலைதொட்டு வணங்கியதுபோல என்னை என் மனம் விடவில்லை. தியானச் சாமியாரிடம் என்னையறியாமல் பணிந்ததுபோல, சர்வதேசத்திலும் பரந்துவிட்ட இந்தச் சமாதியில் என்னைப் பணியவைக்காதது எதுவென்று யோசிக்கவும் ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அந்தச் சமாதியில் சூழ்ந்திருந்த அமைதி என்னைப் பிறரோடு கொஞ்ச நேரம் தியானத்தில் இருக்க உந்தித் தள்ளியது. ஆகவே அமைதியாகக் கண்ணை மூடி உட்கார்ந்திருந்தேன்.

சில இடங்களில் இருக்கும் நுண்ணதிகாரம் எம்மை அந்த இடங்களில் ஒன்றவிடாததைக் கண்டிருக்கிறேன். திருவண்ணாமலையில் நின்றபோது ரமணாச்சிரமத்திலும், என் ஆன்மீக வழிகாட்டிகளில் ஒருவராக் கொள்கின்ற விசிறி சாமியாரின் ஆச்சிரமத்திலும் இதை உணர்ந்திருக்கின்றேன். அதுபோல இந்த ஆச்சிரமத்திலும் உணர்ந்தேன். ஆனால் ரமணர் தியானஞ் செய்த இடத்துக்கு மலையேறிப் போனபோது அந்த சிறுகுகைக்குள் நான் உணர்ந்த அமைதி வேறு விதமானது.

இடையில் ஒரு கஃபேயிற்குள் நுழைந்து பார்த்தேன். அவ்வளவு அருமையான மரங்களின் பின்னணியில் அது இருந்தது. பாண்டிச்சேரி வெள்ளை நகர் எங்கும் கடதாசிப் பூக்கள் (போஹன்வில்லா) பல்வேறு வர்ணங்களில் பூத்திருக்கின்றன. ஆனால் நான் மஞ்சள் நிற பொன்னொச்சிக்கார ஊர்க்காரன். எனக்காகவும் பொன்னொச்சிகள் மலர்ந்திருந்தன.

அடுத்தநாள் ரமேஷ் பிரேதனைப் பார்க்கப் போயிருந்தேன். ரமேஷைச் சந்திக்கும்வரை அவரது புனைவு காட்டிய வழியே உலாத்திக் கொண்டிருந்தேன். மணக்குள விநாயகர் கோயில், அங்காளம்மாள் கோயில், கிட்டத்தட்ட வெள்ளை நகரின் அனைத்துத் தெருக்களும் எனக்கு நான் புனைவிற்குள்ளா அல்லது நிஜத்திலா உலாவிக் கொண்டிருக்கிறேன் என்ற தோற்ற மயக்கத்தைத் தந்திருந்தது..

என் பிரிய ரமேஷ் பிரேதனை
, என் எழுத்துக்களில் பாதிப்புச் செய்யும் ஓர் ஆளுமையை இறுக்கி அணைத்துக் கொண்டேன். எப்படி எனக்கு அந்தத் தியானச் சாமியார் ஆசிர்வதித்தாரோ அவ்வளவும் ரமேஷிற்குள் கடத்தப்பட வேண்டும் போன்று நெகிழ்ந்திருந்தேன். அவரோடு பேசிய சில மணித்தியாலங்கள் என்றும் என் நினைவில் நிற்கும். ரமேஷ் இன்று இருக்கும் நிலைமை நம் யாராலும் கற்பனை செய்து பார்க்க முடியாதவை. ஆனால் எழுதுவதே தன் வாழ்வின் அர்த்தங் தரக்கூடியதென்று இருப்பவர்க்கு, தமிழ் எழுத்தாளர்க்கு கிடைக்கக் கூடிய அனைத்து அங்கீகாரங்களும், விருதுகளும் எப்போதோ சென்றடைந்திருக்க வேண்டும். ஆனால் இலக்கியத்திற்குள்ளும் ஜிகினாத்தனங்களும், விளம்பரப்படுத்தல்களும் உள்நுழைந்து நீண்டகாலம் ஆயிற்றல்லவா? எனவே ரமேஷ் ஒவ்வொரு உயரிய விருதுகளின்போதும் புறக்கணிக்கப்பட்டே வந்து கொண்டிருக்கிறார்.

அண்மையில் கூட
, ஒரு இலக்கிய விருதுக்கு பரிந்துரைத்து, உனக்குக் கிடைத்தால் ஏற்றுக்கொள்ள முடியுமா என்று என்னிடம் கேட்கப்பட்டபோது, ஒரு நொடி கூடத் தயங்காது, 'என் முன்னோடிகள் இருக்கும்போது நான் இதை ஏற்றுக்கொள்ளமாட்டேன்' எனச் சொல்லி நிராகரித்திருந்தேன். அந்த என முன்னோடிகளில் விலத்தப்பட்ட ஒருவராக ரமேஷ் பிரேதனும் இருக்கிறார்.

ரமேஷிடம் என் "தாய்லாந்தை'க் கையளித்தேன். அவர் எனக்கு ஈழத்தின் பின்னணியில் வந்திருக்கும் ' அவன் பெயர் சொல்' பனுவலைத் தந்தார். மீண்டும் இறுக்கி அணைத்து அவரிடம் இருந்து விடைபெற்று அங்காளம்மான் வீதியிற்குள் இறங்கினேன். நம் காலத்தைய  ஓரு பெரும் ஆளுமையைச் சந்தித்த மகிழ்ச்சியில் அந்தநாள் முழுதும் நிறைந்திருந்தேன்.


***********

(Feb, 2023)


0 comments: