கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ஊர்சுற்றிப் புராணம்

Sunday, June 18, 2023


ராகுல் சாங்கிருத்யாயனின் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்னுடைய பன்னிரெண்டு வயதளவில் வாசித்திருப்பேன். அதன் பல பகுதிகள் இப்போது தெளிவில்லாது போய்விட்டாலும், அங்கே விபரிக்கப்பட்ட மனிதர்கள் வேட்டையாடித் திரிந்த காலமும், பெண்கள் தலைமை தாங்கிய சமூகங்களும் இன்றைக்கும் நினைவில் நிற்கின்றன ஒருவகையில், பூமியில் மானிடர்கள் வரலாற்றை எனக்கு அறிமுகப்படுத்திய முதல் நூல் ‘வால்காவிலிருந்து கங்கைவரை’ என்பேன். பின்னர் ராகுலின் இன்னொரு முக்கிய புத்தகமான ‘ஊர் சுற்றிப் புராணத்தை’ , பயணிப்பதில் இருக்கும் என் ஆர்வத்தைப் பார்த்து,பல நண்பர்கள் பரிந்துரைந்திருக்கின்றனர். நான் அந்தப் புத்தகத்தைப் பல இடங்களில் தேடியபோதும் கையில் கிடைக்கவில்லை. அண்மையில் ஒருநாள் ‘டிஸ்கவரி புக் பாலஸில்’ சில புத்தகங்களை வாங்கப் போனபோது, தற்செயலாக ‘ஊர்சுற்றிப் புராணத்தை’க் கண்டடைந்தேன்.


ராகுல் அவரின் 70 வருட வாழ்க்கையில் கிட்டத்தட்ட 45 வருடங்களுக்கு மேலான காலங்களை அலைந்து திரிவதிலேயே கழித்தவர். அந்த அலைதல்களுக்கிடையிலும் 150 இற்கு மேற்பட்ட நூல்களை எழுதியவர். பத்துக்கும் மேற்பட்ட மொழிகளை எழுதப் பேசக்கூடியவராகவும் இருந்திருக்கின்றார். அவரின் பயணங்களைப் போல அவரின் வாழ்வு குறித்த தேடல்களும் நீண்டவை. தொடக்கத்தில் இந்தமத வேதாந்தத்தைக் கற்று, பின்னர் பெளத்தத்தில் ஊன்றித் திளைத்தவர். இதன் நிமித்தம் இலங்கைக்குச் சென்று புத்தமதத் துறவியாக மாறி கேதாரநாத் பாண்டே என்கின்ற தன் பெயரை ராகுல் சாங்கிருத்தியாயனாக மாற்றிக் கொண்டவர். அதன் பிறகும் அவரின் தேடல் தொடர்ந்து இறுதிக்காலத்தில் தன்னையொரு மார்க்சியவாதியாக அறிவித்துக் கொண்டவர்.

ஊர்சுற்றிப் புராணம் எழுதப்பட்ட காலங்களில் அவர் வேதாந்தத்திலிருந்து புத்தமதத்திற்கு மாறிக் கொண்டிருப்பது தெள்ளிடையாகத் தெரிகின்றது. ராகுல் புத்தரை மிகச் சிறந்த ஊர்சுற்றியாக முன்வைத்திருக்கின்றார். அதுமட்டுமில்லாது உலகில் தோன்றிய பல மதங்கள் ஊர்சுற்றியவர்களால் உருவாக்கப்பட்டதென்றும் சான்றுகளுடன் கூறுகின்றார்.

இந்த நூல் எழுதப்பட்டு அரை நூற்றாண்டுகளுக்கு மேலே ஆகிவிட்டது. ஆகவே இதில் எழுதப்பட்ட பல விடயங்கள் காலாவதியாகியும் விட்டன. எனினும் அடிநாதமாய் ஒலிக்கும் ‘விரும்பியவர்கள் தொடர்ந்து பயணிக்குக’ என்ற செய்தி இப்போதும் காலாவதியாகாமல் இருக்கின்றது. அனைவராலும் பயணிக்க முடியாது என்பதை ஒப்புக்கொள்கின்ற ராகுல், பயணிப்பதன் குரல் ஒருவருக்குள் ஒலித்தால், தயக்கமின்றி ஊர்சுற்றியாக வேண்டும் எனச் சொல்கிறார். தாய், தந்தை, (மணமாகியிருந்தால்) மனைவி/கணவன் எப்படி ஒருவரின் பயணிக்கும் விருப்பை இல்லாமற்செய்வார்கள் என்கின்ற காரணங்களை ஆய்வு செய்கின்றார். அதுமட்டுமின்றி எப்படி இந்தத் தடைகளைத் தாண்டி பயணிப்பது என்பதைப் பற்றியும் இந்நூலில் கூறுகின்றார்.

‘ஊர் சுற்றும் அவா’, ‘தடைகளைத் தகர்த்தெறி’, ‘கல்வியும் வயதும்’ போன்ற பகுதிகள் பயணத்துக்கான முதலடிகளை எப்படி வைப்பதென்பதற்கு ஆலோசனைகள் கூறுகின்றன. அதேபோல ‘காதல்’, ‘நாட்டறிவு’, ‘மரண தத்துவம்’ போன்ற அத்தியாயங்கள் தொடர்ந்து பயணங்களைச் செய்பவர்க்கு பிரயோசனமானவை.


ரா
குல் ஊர்சுற்றிகளை மூன்று வகையினராகப் பிரிக்கின்றார். முதலாம்தர ஊர் சுற்றிகள் மிக அரிதென்கின்றார். அவர்களைப் போல ஆவது கடினம் என்கின்றார். 40 ஆண்டுகளாக அலைந்த ராகுலே தன்னையொரு 2ந் தர ஊர்சுற்றியாகவே பல்வேறு சந்தர்ப்பங்களில் முன்வைக்கின்றார். ஊர் சுற்றிகளுக்கு காதல் அவ்வளவு அவசியமில்லை என்கின்ற ராகுல், அதேசமயம் காதல் உணர்வுகளை ஒடுக்கத்தேவையில்லை எனவும் கூறுகின்றார். இந்நூலில் அவரினதும், அவரின் சில நண்பர்களின் வாழ்க்கை அனுபவங்களையும் பல்வேறு சந்தர்ப்பங்களில் எடுத்துக் கூறுகின்றார். நிறையப் பயணித்துக்கொண்டிருந்த ஒரு அறிஞரான நண்பர் ஊர்சுற்றல்களிடையே தன்னைப் போல ஒரு பெண் பயணியைச் சந்தித்து, திருமணம் செய்து குழந்தைகளும் பெற்றுக்கொள்கின்றார். ஆனால் அந்த நண்பரின் இயல்பான ஆசையான ஊர்சுற்றல்களைப் பின்னர் செய்யமுடியாததால் அவர் புத்தி சுவாதீனமுற்று அப்படியே இறந்து போனதை ராகுல் குறிப்பிடுகின்றார்.

ஊர்சுற்றிகளுக்கு இளமையில் கிடைக்கும் ஒரு நாளென்பது முதுமையில் பத்துநாட்களுக்குச் சமானமானது. எனவே அவற்றை பொருத்தமாகப் பாவித்துக்கொண்டால், பிற்காலத்தில் அந்த அனுபவங்களைப் பிறருக்குப் பகிர்ந்து கொடுத்து மரணத்திற்கான தயார்ப்படுத்தல்களைச் செய்துவிடலாம் என்கின்றார். ஆகவேதான் இந்நூலில் மரணம் பற்றியே ஒரு அத்தியாயத்தை ராகுல் தனியே எழுதியிருக்கின்றார். ஒரு சிறந்த ஊர்சுற்றி தனது நாட்களை இனிதாகக் கழித்துவிட்டால் மரண பயத்தைக் கடந்துவிடலாம் என்கின்றார். ஒரு மனிதருக்கு மரணம் அல்ல, மரணம் பற்றிய பயமே அதிகம், ஆனால் ஊர்சுற்றி மரணத்தை எக்கணத்திலும் எதிர்பார்ப்பவனா/ளாக இருப்பதால் அவன்/ள் அதை கடந்து செல்லலைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்கின்றார்.

அத்துடன் ‘பெண் ஊர்சுற்றிகள்’, ‘இளம் பெண்கள் ஊர்சுற்றுவது எப்படி?’ என்று இரண்டு வெவ்வேறு அத்தியாயங்களை பெண்கள் பயணங்கள் செய்வதில் ஆண்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல என்பதைப் புரிந்து எழுதியிருக்கின்றார். இன்றைக்கு ராகுல் உயிருடன் இருந்திருந்தால் அவரின் அந்தக்காலத்தைய நம்பிக்கையை இந்திய/கீழைத்தேய பெண்கள் இன்று பெருமளவில் சாதித்துக் கொண்டிருப்பதைக் கண்டு மகிழ்ந்திருப்பார்.

எனக்கு இந்த நூலில் முக்கியமான பகுதியாக ‘எழுதுகோலும் தூரிகையும்’ அத்தியாயம் இருந்தது. பயணிக்கும் நிகழ்வுகளை எழுத்தாக்குவது எப்படி அவசியமானது என்பது பற்றியும், அவ்வாறு எழுதுவதால் மொழி பழக்கமாகிவிட, அனுபவங்களும் நிறையக் கிடைத்து எப்படி அபுனைவைகளைப் போல நாவல் உள்ளிட்ட புனைவுகளையும் எழுதமுடியும் என்று நமக்கு ராகுல் நம்பிக்கையூட்டுகின்றார். வாசிப்பதில் எனக்கு நிறைய விருப்பம் இருந்தாலும், புனைவாக எழுதுவதற்கு – முக்கியமாக நாவல் பக்கம் போனதற்கு- நான் செய்த பயணங்களே எனக்கு மிகவும் உதவியிருக்கின்றது என்பேன்.

ராகுலின் இந்த நூலானது, பயணங்களை ஏற்கனவே தொடங்கிவிட்டவர்க்கு அவ்வளவு உதவி புரியாது. ஆனால் பயணங்களை ஆரம்பிக்க விரும்புபவர்க்கு இன்றும் நல்லதொரு கையேடாக இருக்கக் கூடியது. இறுதிப் பகுதியான ‘நினைவுகளில்’ ராகுல், “ஊர் சுற்றி பற்றற்றவனாக இருப்பான்; ஆனால், அதே சமயத்தில் அவன் உள்ளத்தில் மானிட சமுதாயத்தின்பால் அபாரமான அன்பு நிறைந்திருக்கும். அந்த அபாரமான அன்பு அவனுடைய உள்ளத்தில் கணக்கற்ற நினைவுகளைச் சேர்த்துவிடும். அவன் எவரையும் பகைத்துக் கொள்வதற்காக எங்கேயும் புறப்படுவதில்லை. அவனைச் சாதாரணமாக யாரும் விரோதியாகக் கருதுவது கூட இல்லை. அதனால் அவன் இனிய நினைவுகளையே சேர்த்துக் கொள்கிறான்” எனக் கூறுவதையே அனைத்து ஊர்சுற்றிகளும் ஞாபகம் வைத்திருக்க வேண்டியது என்பேன்.


'ஊர்சுற்றிப் புராணம்' (தமிழில்: ஏ.ஜி.எத்திராஜூலு)

************************

(Mar 22, 2023)

0 comments: