கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கொச்சின்

Tuesday, June 27, 2023

 

காலையில் பெஞ்சில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் அவரைப் பார்த்தேன். மனிதர்கள் கடந்துபோகையில் அவர்களின் விழிகளைப் பார்ப்பதைப் பொதுவாகத் தவிர்ப்பேன். ஏனோ இவரின் விழிகளைப் பார்த்து ஒரு சின்ன தலையசைப்பை இருவரும் செய்தோம். மூக்குத்தி அணிந்த பெண்கள் எப்போதும் வசீகரிப்பதைப் போல, இவரின் கடுக்கனும், நீண்ட தாடியும் என்னைக் கவர்ந்திருக்கலாம்.

இவ்வாறு பல்வேறு மனிதர்களை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கையில் நமக்குள் பல கதைகள் பீறிட்டெழச் செய்யும். அவை எல்லாம் கதைகளாக விட்டாலும் அந்த நேரத்தில் மனதுக்கு மிகுந்த பரவசத்தை அளிக்கும்.

எதிரே ஒருவர் சோளப் பொத்திகளை அவித்து விற்கத் தயாராகிக் கொண்டிருந்தார். நடக்கும்போது காலைக் கெந்திக் கெந்தி நடந்து கொண்டிருந்தார். ஆனால் அமர்ந்து இருக்கும்போது அதன் சுவடில்லாது அவ்வளவு கம்பீரமாக இருந்தார். அவரிடம் முதல் வாடிக்கையாளராக ஒரு சோளப்பொத்தியை வாங்கிக் கொண்டு மீண்டும் கடந்து போகின்றவர்களை அவதானிக்கத் தொடங்கினேன்.

இப்படி பெங்களூரு ஒரியன் மாலின் வெளிப்புறத்தில் சும்மா நெடும்பொழுது இருந்திருக்கின்றேன். உண்மையில் பெங்களூரு ஒரு பல்கலாசார நகர் மட்டுமில்லை, gender neutral நகருங்கூட. எவரும் எவரையும் வித்தியாசமாக உற்றுப்பார்க்காது, அவரவர் அவரவர்க்கு விரும்பிய ஆடைகளுடன் இயல்பாக நடமாடிக் கொண்டிருந்தனர். காலநிலையும் இதமாக இருந்தது. நான் நின்றது யஷ்வந்தபுரத்தில் சந்தை இருந்த இடத்தில். அங்கே கூட ஒரு நிதானமும்,இரைச்சல் அவ்வளவு இல்லாதும் இருந்தது. வாகன நெருக்கடி மட்டும் சென்னையைத் மீறித் தெரிந்திருந்தது.

டுத்த நாள் மாலையும் அதே இடத்தில் இந்த கடுக்கன் மனிதரைச் சந்தித்தேன். இம்முறை சும்மா தலையசைப்போடு கடந்து போகாமல் பேசத் தொடங்கினோம். நான் பெஞ்சில் இருக்க, அவர் அருகில் அமராமல் சட்டென்று தரையில் அமர்ந்தார். தானொரு ஹிப்பியெனவும், தனக்கு அன்னைப் பூமியில் இருக்க விருப்பம் என்று சொல்லி அப்படியே அமர்ந்துவிட்டார். முதுகில் ஒரு வலி இருப்பதால் அமர்வதில், பொதிகள் சுமப்பதில் மிகுந்த கவனமாக நான் இப்போது இருக்கிறேன். ஆனால் எனக்கு அப்படி ஒருவர் தரையில் அமர்ந்தவுடன் என்ன செய்வதென்றும் தெரியவில்லை. ஒருவர் பெஞ்சில் இருக்காமல் தரையில் இருக்கையில் எப்படி உரையாடுவது. அது இன்னொருவரை அவமதிப்பதாகிப் போய்விடும். சரி வாருங்களென இன்னொரு பக்கமாய் தரையில் இருப்போமென அழைத்துச் சென்று அவருக்கருகில் அமர்ந்தேன்.

அவர் ஹிப்பி வாழ்வைச் சொல்லத் தொடங்கினார். இப்போது ஒரு தெருக்கலைஞராக பாடவும் ஆடவும் செய்கின்றார் எனவும் சொன்னார். இந்தியாவிலும்,ஐரோப்பாவிலும் நிறைய இடங்களில் அலைந்து திரிந்திருக்கின்றார். சில வருடங்களுக்கு முன் ஒரு குரோஷியா ஓவியை ஒருத்தியைக் காதலித்து திருமணம் செய்து அண்மையில் பிரிந்துவிட்டேன் என்றார்.

அந்தப் பெண்ணின் முகநூல் பக்கத்தை, அவரிடம் தொலைபேசி இல்லாததால் என் அலைபேசியில் வைத்துக் காட்டினார். பின்னர் தமிழ்ப்படங்கள், இசை எனப் பேசிக் கொண்டிருந்தோம். அவரோடு இன்னொரு இளைஞனும் இருந்தார். அவரிடம் கொஞ்சக் காசு கொடுத்து ஒரு தண்ணீர்ப்போத்தலும், பிஸ்கெட் பைக்கற்றும் வாங்கி அவர்களோடு திரிந்த ஒரு நாயிற்கு ஊட்டிக் கொண்டிருந்தார்.

பிறகு ஊதுவதற்கு சிலும்பி வேண்டுமா எனக் கேட்டார். அது குறித்து எவ்விதமான தப்பபிப்பிராயம் இல்லையென்றபோதும், இப்போது வேண்டாமென மறுத்தேன். ஒரு சம்பிரதாயத்துக்காய் அவர் பற்றி வைத்த பீடியை மட்டும் வாங்கி சிலமுறை இழுத்துக் கொண்டேன்.

ஒரு பாடகன் என்று சொல்லி தனது கதையைச் சொல்லும் பாடலைப் பாடட்டா எனக் கேட்டார். நிச்சயம் பாடுங்கள் என்றபோது பல்வேறு மொழிகள் கலந்து அந்தப் பாடலைப் பாடிக்காட்டினார்.

நம் உரையாடல்கள் இன்னும் ஆழமாகப் போனபோது ஒரு பெருங்குடிகாரர் வந்து இடையில் குழப்பினார். 'இவரும் நல்ல மனிதர்தான், கொஞ்சம் கூடக் குடிப்பார் அவ்வளவுதான்' என்றார். அது பிரச்சினையில்லை என்று குடிகாரரைப் பேசவிட்டு நாம் அமைதியாக இருந்தோம்.

சட்டென்று இந்தக் காதல் என்பது அவ்வளவு கஷ்டமானது என்றார் கடுக்கன்காரர். அவரின் கதையில் இருந்து இந்தக் காதலில் இருந்து அவரால் அவ்வளவு விடுபட முடியவில்லை என்பது புரிந்தது. குரோஷியா காதலியை இறுதியில் குரோஷியாவில் இருந்து பிரிந்து வந்தபோது
, இந்தியா போய் யாரையாவது திருமணம் செய்து சந்தோசமாக இரு என்று சொன்னார், நான் என்ன பதில் அவருக்குச் சொன்னேன் தெரியுமா என்று கேட்டார். என்ன சொன்னீர்கள் என்றேன்.ஒரு வருடத்தில் 365 நாட்கள் இருந்தால் அந்த 365 நாளும் ஒவ்வொருவராக தினமும் திருமணம் செய்ய என்னால் முடியும். ஆனால் நீ ஒருத்திதான் என் என்றென்றைக்குமான காதலி. உனக்காய்க் கடைசிவரை காத்திருப்பேன் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன் என்றார்.

அதன் பிறகு நான் அமைதியாகிவிட்டேன். எதைச் சொன்னாலும் புரியாத ஆழத்துக்குள் அவர் சென்றுவிட்டார் என்பது புரிந்தது. "காலம் என்றொரு அருமருந்து" எனச் சொல்வது கூட இப்போது தேய்வழக்காகிவிட்டது அல்லவா. மெளனம் அதைவிட எவ்வளவோ சிறந்தது.

அந்தப் பெண்ணின் நினைவுகள் அவருக்குள் பெருக்கெடுத்துப் பாய்ந்திருக்கவேண்டும். சட்டென்று நான் போய் வருகிறேன் என அமைதியை இடைமறித்து, எப்படித் தற்செயலாகச் சந்தித்தோமா அப்படியே பிரிந்துபோனார்.

ஒரு நாடோடியாக அலைபவரைக் கூட இப்படி காதல் பெருஞ் சூழலுக்குள் அலையவைத்து தன்னிலை மறக்கச் செய்துவிட்டதே என நினைத்துக் கொண்டேன். நாம் யாராக இருந்தாலும் உள்ளே நேசத்துக்காய் ஏங்கும், எதன் பொருட்டோ சட்டென்று உடைந்துவிடக் கூடிய சாதாரண மனிதர்கள்தானில்லையா?

*********

(Feb 04, 2023)

0 comments: