கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

சென்னையில் சூரிய உதயம்

Sunday, July 30, 2023

 


வ்வப்போது அதிசயங்கள் நிகழ்வதுபோல இன்று விடிகாலையில் துயில் எழும்பியதால் சூரிய உதயம் பார்க்கலாம் என்று எலியிட்ஸ் கடற்கரைக்குச் செல்ல ஆயத்தமானேன். ஓட்டோ ஓடிக்கொண்டு வந்த தமிழ்ச்செல்வி அக்கா, ‘ விடிகாலையிலே ஊபரில் என்னைய்யா கிரடிட் கார்ட்டைப் போட்டிருக்கிறாய் காசிற்கு மாற்று இல்லாவிட்டால் சவாரியை நடுரோட்டில் நிறுத்திவிடுவேன் என்று வெருட்டினார். தமிழ் ஒரு அமிழ்தமொழி (நன்றி: தமிழ்நாட்டு வீட்டு வசதி வாரியம்), ‘அக்கா நான் காசாகவே ஊபர் கேட்டதை விட 50 ரூபாய் கூட்டியே தருகிறேன், சூரிய உதயத்திற்கு மட்டும் அழைத்துச் செல்லாது விடாதீர்கள்’ என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டேன்.

எலியட்ஸ் பீச்சில் பொங்கல் நிமித்தமோ என்னவோ நிறையக் கடைகள் போட்டிருந்தார்கள். குப்பை அளவுகணக்கில்லாது இருக்க, சுத்தமான மணலில் கால் வைத்து நடக்கவே இடமில்லாது இருந்தது. துப்பரவுப் பணியாளர்களை இன்னும் வதைக்க நாமெல்லோரும் நன்கு மும்முரமாக வேலை செய்கிறோமென எண்ணிக் கொண்டேன்.  கடற்கரையோரமாக நீண்ட புற்களை காயவைத்து, அழகான யானைகளை வடிவமைத்திருந்தார்கள்.  பார்த்துக் கொண்டிருந்தால் அலுப்பே வராத தத்ரூபமான சிற்பங்கள் போல அவை காட்சியளித்தன.  சூரிய உதயம் பார்த்து முடித்து அருகில் ஒரு செவ்விளநீர் வாங்கிக் குடிக்கப் போனேன்.   அந்த இளநீர் கடையில் நல்ல வியாபாரம் போனதால், பக்கத்து இளநீர் கடைக்காரர் '..த்தா, உனக்கொரு அரைப்போத்தல் வாங்கித் தருகிறேன், வண்டியை எடுத்து தூரப் போயிடு, இங்கே நிற்காதே' என்று சத்தம் போட்டார். சென்னைக்காரர்கள் சண்டையில் கூடக் கோபத்தை மூர்க்கமாய்க் காட்டாது எவ்வளவு அழகியலாகச் செய்கின்றனரே, ‘விஷ்ணுபுரக்காரர்களின் இரசனை விமர்சனம் தெரியாது இது அவருக்குச் சாத்தியமாயிருக்காதென நினைத்துக் கொண்டேன்.


பின்னேரம் சென்னை வந்த சாட்டுக்கு என் புத்தகத்தை வெளியிட்டு வைக்க செல்வத்தாரையும், தளவாய் சுந்தரத்தையும் அழைத்திருந்தேன். செல்வத்தார் இனி நான் சர்வதேச எழுத்தாளன்,  உன்னை மாதிரி தரை லோக்கலுக்கெல்லாம் நேரம் ஒதுக்கமாட்டேன் என்று சொல்லி அடம்பிடித்துக் கொண்டிருந்தார். இனி இவரோடெல்லாம் கெஞ்ச முடியாதென, 'பின் தொடரும் நிழலின் குரல்' புகழ் சியாமளா அக்காவிற்கு ஓர் அழைப்பெடுத்தேன். அதற்குப் பிறகு மகுடிக்கு அடங்கிய பாம்பு போல சொன்ன நேரத்துக்கு வந்து சேர்ந்து செல்வத்தார் புத்தகத்தை வெளியிட்டு வைத்தார். ஆனால் சென்ற முறை "மெக்ஸிக்கோ"வை வெளியிட்டு வைத்து என்னைப் புகழ்ந்து நான்கு வார்த்தை பேசியது போல இம்முறை தாய்லாந்து’க்குப் பேசமாட்டேன் என்றார். ஏன் என்று கேட்டதற்கு முதல் நாளிரவு மிஷ்கினோடு சேர்ந்து தானும் பின்னணி பாடியதால் குரல் கட்டி விட்டதென்றார். 


எங்களைத்தான் இலக்கியத்துக்கு இழுத்துவந்து கெடுத்தது காணாதது என்று, தமிழகத்தில் ஒரளவு பார்க்கக் கூடிய திரைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்த மிஷ்கினையும் பாடகராக்கிக் கெடுத்து விட்டீர்களா எனக் கேட்டேன். 'டேய் சும்மா இருடா, மிஷ்கின் இசையமைக்கும் படத்தில் நானும் பாடுகின்றேன் என்றார். எப்படி அது ஆ..ஈ..ஊ எனறு மாயா என்றப் பாடகியை அனிருத் 'விக்ரம்' படத்தில் பாடப் பயன்படுத்தியது போலவா எனக் கேட்க விரும்பினேன். கேட்கவில்லை.

புத்தகக் கண்காட்சியில் வைப்பதற்கு 'ப்யூகோவ்ஸ்கி கவிதைகள்', 'பேயாய் உழலும் சிறுமனமே' பிரதிகளை தளவாய் சுந்தரம் கொண்டு வந்திருந்தார். அதை இலங்கைப் படைப்புக்கள் கிடைக்கும் சஃப்ரியின் " புது உலகம்' அரங்கிற்குக் கொடுத்துவிட்டிருந்தேன். மெக்ஸிக்கோவை எனது நண்பர்கள் வாசிக்கக் கேட்டபோது, ' பணமெல்லாம் இப்போது வேண்டாம், தோழர் புத்தகத்தை அனுப்பி வைக்கிறேன்' என்று கேட்டவர்களுக்கு அனுப்பி வைத்து என்னை மிக நெருக்கமாக உணர வைத்தவர் சஃப்ரி. அவரிடம் பத்தினாதனின் 'அந்தரங்கம்' நூலை வாங்கிக் கொண்டு வெளியே வர, பொது அரங்கில் பவா செல்லத்துரை "ஆடு ஜீவிதம்" பற்றி உணர்ச்சிவசப்பட்டுப் பேசிக் கொண்டிருந்தார்.

நான் காணொளி கதைசொல்லல்/புத்தக விமர்சனங்களுக்கு மறுபுறத்தில் இருப்பவன். ஆனால் பவா போன்றோர்க்கு மிகப்பெரிய காணொளி வாசகர்கள் இருப்பதை நானறிவேன். புத்தகங்களை அவ்வளவு வாசிக்கப் பிரியப்படாத பலருக்கு இவ்வாறே பல படைப்பாளிகள் அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றனர். மாற்றம் என்பதே மாறாதது. எழுத்தாளர் ஒரு படைப்பை எழுத,  அவரைத் தவிர அந்த நூலோடு தொடர்புடையவர்க்கு ஏதேனும் வெகுமதிகள் கிடைப்பது போல இதுவென நினைத்துக் கொண்டேன். இமையமும் அந்த மேடையில் அடுத்துப் பேச இருந்தார். சென்றமுறை ஏனடா உன் புத்தக வெளியீட்டுக்கு அழைக்கவில்லை என குறைபட்டுக் கொண்டார், இம்முறையும் அவரை அழைக்க மறந்துவிட்டேன் என்பதும் நினைவுக்கு வந்தது.

புத்தகக் கண்காட்சியில், ஏதோ புலம்பெயர் இலக்கியவாதிகள் தமிழகப் பரப்பில் அதிகம் ஆதிக்கம் செலுத்துவதாக ஓர் ஈழத்துப் படைப்பாளி பிறரிடம் குறைபட்டுக் கொண்டதாய் ஒரு நண்பர் சொல்லக் கேட்டேன். பின் அமைப்பியல்/ பின் நவீனத்துவம் அறிந்த ஒருவர் இந்த இருமைகளை/ துவிதங்களை நிராகரிக்கவே செய்வர். தமிழ் என்ற பெருங்கடலில் புலம்பெயர் இலக்கியம் ஒரு சிறு துளி. அதுவெல்லாம் தமிழுக்குத் தலைமை தாங்கும் என்ற எஸ்.பொவின் கனவே உதிர்ந்து நெடுங் காலமாயிற்று.

50 வருடங்களுக்கு முன் கொழும்பு ஸாகிராக் கல்லூரியில் நடந்த முற்போக்கு அணியினரின் மாநாட்டில் அவமதிக்கப்பட்டு, சூடோடு சூடாக மட்டக்களப்பில் தமிழ்விழாவெனப் பல படைப்பாளிகளை ஒருங்கிணைத்து ஆரவாரத்துடன் எஸ்.பொ, தன் எதிர்ப்பை நிகழ்த்திக் காட்டினார். பின்னர் நற்போக்கு இலக்கியத்துக்கு ஒரு கொள்கை விளக்க நூல் கூட அவர் வெளியிட்டும் இருந்தார். புலம்பெயர்ந்தவர்கள் அந்தளவுக்கு ஆளுமையுடையவர்களாகவோ, தொடர்ச்சியாகவோ இயங்காதபோது புலம்பெயர் இலக்கியம் தமிழகச் சூழலில் ஆதிக்கம் செலுத்துகிறது என்பது எவ்வளவு வலுவான வினா என்பது கேள்விக்குரியது. எனினும் எல்லா வகையான உரையாடல்களும் நடப்பது நல்லது. அதுவே அதிகாரங்கள் ஓரிடத்தில் குவிவதைக் குலைக்கச் செய்பவை.

புத்தகக் கண்காட்சியில் 'அடையாளம்' சாதிக்கை நீண்ட வருடங்களுக்குப் பிறகு சந்தித்தேன். எனது முதலாவது கவிதை நூலான ‘நாடற்றவனின் குறிப்புகள்’ அவரிடமிருந்தே வெளிவந்தது. நான் எழுத வந்த காலங்களில் 'அடையாளம்', ' விடியல்' போன்றவற்றுக்கு  பெரும் மதிப்பிருந்தது. அவர் அன்று தன் விருப்பில் அனுப்பி வைத்ததால் "ஏலாதி" இலக்கிய விருது அந்தமுறை என் தொகுப்புக்கும், தமிழச்சி தங்கபாண்டியனின் 'வனப்பேச்சி'க்கும் கிடைத்திருந்தது. ஏதேனும் புதிய நாவல் எழுதுங்கள், எங்களிடம் நல்ல எடிட்டர்கள் இருக்கின்றார்கள். நன்றாகக் கொண்டு வரலாம் என்றார். முயற்சிக்கின்றேன் எனச் சொல்லவும் பயமாக இருந்தது. நமது ப்யூகோவ்ஸ்கி "Don't try" என்று தன் கல்லறையிலேயே எழுதி வைத்துவிட்டுப் போய்விட்டான் அல்லவா?

சாதிக், ஒருநாள் மதியமோ இரவோ சாப்பிடப் போவோம் நிச்சயம் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். புத்தக வெளியீடுகளை விட விருந்துண்ணலே முக்கியம், அதைத் தவறவிடமாட்டேன் எனச்சொல்லி அவரிடமிருந்து விடைபெற்றேன். கூடவே கண்காட்சியில் என்னோடு அலைந்து கொண்டிருந்த நண்பர், நீ எல்லோராலும் அணுக முடியாது ஆமை போல ஓட்டிற்குள் சுருண்டு கொள்கின்றவன், ஆனால் பத்தினாதன், 'காலம்' செல்வம், 'அடையாளம்' சாதீக், தளவாய் சுந்தரம் போன்ற சிலரோடு பேசும்போது மட்டும் ஓர் உயிர்ப்பு உன் உரையாடல்களில் வந்துவிடுகின்றதென்றார். அப்படி இருப்பின் எனது சென்னை கிரஷ்கள் (எனக்குத்தான் அவர்கள் கிர்ஷ்கள், நான் அவர்களுக்கு இல்லை), அழைத்து அவர்களோடு மெரீனா பீச்சில் கடலை கொறித்துக் கொண்டிருப்பேனே. அதுதான் நடக்கவில்லையே, அணில் படமா, ஆமைப் படமா முதலில் கவிழ்ந்தென்ற முகநூல் வெட்டி விவாதங்களில் சிக்கியிருக்கின்றேன், பார்க்கத் தெரியவில்லையா எனச் சலித்துவிட்டு பிரியாணிக் கடையைத் தேடத் தொடங்கினேன்.

இன்றைய ஆண்டிரியா ஆனாலென்ன, அஞ்சலி பட்டீலாலென்ன, எப்போதும் இருக்கும் என் நித்திய காதலி அஸினுக்கு சேர நாட்டுப் பராம்பரியத்தில் இருந்து வந்தவென நம்புகின்ற ஒருவனின் பொங்கல் வாழ்த்து -அனைவர்க்கும்- உரியதாகட்டும்.

**************

 

(Jan 17, 2023)

கொழும்பு - Gallery Cafe

Wednesday, July 26, 2023

 

தேமாப்பூ மீது மாமழை பொழிகிறது


கடும் வெயிலில் நெரிசல் நிறைந்த தெருக்களில் நடந்தபடி இருக்கின்றேன். கொஞ்ச நேரத்திலே உடல் Steam Bath எடுத்தது போல வியர்வையில் நனைந்துவிடுகின்றது. மேலைத் தேசங்களில் உள்ளறைக்குள் சூட்டைக் கூட்டி கஷ்டப்பட்டு hot yoga பழகுபவர்கள், இங்கே சும்மா நடந்தாலே போதும். வெயில், வியர்வைச் சுரப்பிகளை ஆலிங்கனம் செய்யும். தெருக்களின் சமதரையற்ற தரை, யோகாவின் அனைத்து ஆசனங்களையும் வளைவு சுழிவுகளுடன் எளிதாய்க் கற்றுத் தரும்.

எனினும் நான் இந்த நகரை, நாட்டை முன்னெப்போதும் இல்லாதளவுக்கு நேசிக்கின்றேன். வானில் அலைந்து திரிந்த பறவையொன்று தரைக்கு வந்து ஓய்வெடுப்பதைப் போல நான் இந்த நாட்களை ஆறுதலாக அனுபவிக்கின்றேன். எனக்கும், கழிவுநீரோடும் கான்களுக்கும் எந்த ஜென்மத்து உறவோ தெரியாது. இந்நகருக்கு முதன்முதலில் பதின்மத்தில் போரின் நிமித்தம் இடம்பெயர்ந்து வந்தபோது இந்த கழிவுநீர் கான்களோடு தொடங்கிய உறவு இன்னும் அறுபடுவதாய்க் காணோம். அன்று ஒவ்வொரு முடக்கிலும் நிற்கும் இராணுவத்தைத் தாண்டிப் போகும் பயம் ஒருபுறம் என்றால், மறுபுறம் வாடகை வீட்டின் தெருவோடு சமாந்தரமாக ஓடும் கழிவாற்றிலிருந்து எந்தக்கணம் விடுபடுவேனோ என்ற பதற்றத்தோடு விடுவிடுவென நடப்பதுண்டு.

கழிவு நீராறு இருப்பின் நுளம்புகளின் தொலை இன்னும் மிகுதியாகவும் இருக்கும். இன்றும் எத்தனையோ இரவுகள் கொசுவலையைப் போட்டும், விடிகாலைவரை நித்திரை வராத நாட்கள் நிறைய இருக்கின்றன.
நாட்டின் பொருளாதாரம் பாதாளத்தில் சரிந்து கிடக்கின்றது. விலைவாசியோ விமானமேறி தினம் தினம் வானத்தில் வைகுண்டம் தேடிப் பறக்கின்றது. இந்த நாடு மனிதர்கள் வாழத் தகுதியற்ற நாடென்று காண்பவர்களில் பலர் சொல்கின்றார்கள். கொதி அரசியலை மட்டுமல்ல, மென் நகைச்சுவையைக் கூடச் சகிக்காது கலைஞர்களை சிறைக்கு அனுப்புகின்றார்கள். இவ்வாறு அரசியலிலும், பொருளாதாரத்திலும் இரும்புத் திரைகள் ஒன்றன்பின் ஒன்றாக நாட்டை மூடியபடி இருக்கின்றன.

அப்படியெனில் எதனால் இந்த நாட்டில் இன்னமும் உலாவிக் கொண்டிருக்கின்றேன். ஒரு அந்நியனாக மாறிவிட்டதால்தான் இவை எல்லாம் அந்தந்த நேரத்துப் பிரச்சினைகள் போல உதறிக்கொண்டு தாமரை இலை நீர் போல எடுத்துக் கொள்கின்றேனா? நான் இங்கே பிறந்து பதின்மம் வரை அதன் அத்தனை கசடுகளோடும், இரத்த ஆறுகளோடும் வளர்ந்திருக்கின்றேன் என்பது ஓர் உதிர்ந்து போன கனவா?


நேற்று ஒரு ஓட்டோக்காரரைச் சந்தித்தேன். அவிசாவளையைப் பூர்வீகமாகக் கொண்டவர். அவரின் தந்தையார் ஒரு கடையில் அடிநிலைப் பணியாளராகத் தொடங்கி, பின் அந்தக் கடையை சொந்தமாக வாங்கி நடத்தியிருக்கின்றார். 83 தமிழின அழிப்பில் பக்கத்துக் கடை எரிக்கப்பட, இவரின் தந்தையாரின் கடை அரைகுறையாக எரிவதில் இருந்து தப்பித்திருக்கின்றது. ஒரு குழு கடையை எரிக்க, இன்னொரு குழு கடைக்குள் இருந்த உடைமைகளைச் சூறையாடிச் சென்றது என்றார். பின்னர் கிடைத்த பணத்துக்கு கடையை அடிமாட்டுக்குவிற்கவும், தன் தந்தையார் இந்தத் துயரத்தால் நோய்வாய்ப்பாட்டு இறந்தார் என்றார். பக்கத்துக்குக் கடை அனலைதீவுக்காரருக்குரியது. அவரின் கடை எரிந்தபோது, கடையென்ன கடை உயிரல்லவா முக்கியம் தப்புவோம் என்றபோது, எனக்குத் தெரிந்த இந்தச் சுற்றமும் நட்பும் தன்னைப் பாதுகாக்கும் என்றவரை அந்த ஊர்க்காரர் யாரோதான் எரியூட்டிக் கொன்றனர் என்றார்.

இப்படி எனக்குச் சொன்னவருக்கு இன்னும் துயரம் முடியவில்லை. திறந்த விஸா இனவழிப்பால் பாதிக்கப்பட்டவர்க்கென இங்கிலாந்து கொடுக்க, இவரின் மூத்த சகோதரர் அடுத்த ஆண்டில் இங்கிலாந்து சென்றிருக்கின்றார். சென்ற சகோதரர் ஏதோ நோயின் நிமித்தம் 2 வருடங்களில் இங்கிலாந்தில் இறக்க இன்னொரு சோகம் இவரின் குடும்பத்துக்குள் நிகழ்ந்திருக்கின்றது. இவை நிகழ்ந்து கிட்டத்தட்ட 40 வருடங்களாகி விட்டன. இன்னமும் அந்தத் துயரங்களைக் கைவிடமுடியாத ஒருவரின் தடயங்களை அவரின் முகத்தில் நான் பார்த்தேன்.

ஒவ்வொரு காதல் பிரிவின்போதும் நமது வேதனைதான் உலகின் மகத்தான வேதனையென நாம் எண்ணிக்கொள்வோம். அதுபோல் இந்த வாழ்வில் நம்முடைய வாழ்க்கைக் கதைதான் சோகமானது என்று எண்ணி மறுகும்போது, இன்னொருவர் வந்து அப்படியில்லையென தன் கதையால் எட்டியுதைப்பார்.



நான் அலைந்து கொண்டிருக்கும் பறவை போல என்னை உருவகித்திருந்தேனோ? ஒரு பறவை தன் பாதங்களை பனி மலையில் கொஞ்ச நேரம் விட்டுச் செல்வது போலத்தான் இந்த வாழ்வும் மரணமும் என்று ஸென் கூறுகின்றது. ஆனாலும் அந்த சொற்ப நேரச் சுவட்டுக்குள்ளேயே நாம் வாழ்வென நினைத்ததில் பெருமளவு இருப்பது துயரத்தின் அழியாக் கோலங்களே. எம் எல்லோர்க்கும் கிடைத்த அனுபவங்களைப் பார்த்தால், சித்தார்த்தருக்கு முன்னரே புத்தனாக நாட்டையும், வீட்டையும் விட்டு வெளியேறுகின்றவர்களாக நாங்கள்தான் இருக்கவேண்டும்.

என்னால் எதையும் மாற்றமுடியாது என்பதால் மட்டுமில்லை, என்னையே என்னால் எளிதாக மாற்றமுடியாது என்று தெரிந்தும் நான் இந்த நாட்டையும், இந்த வாழ்வையும் அதன் அத்தனை பலவீனங்களோடும் நேசிக்கின்றேன்.

இப்போது இந்நகருக்குரிய மாலைநேர மழை பொழியத் தொடங்குகின்றது. மிகுந்த மனோரதியமான ஓரு கஃபேயிலிருந்து நீர்த்தாரைகள் வீழ்வதைப் பார்க்கின்றேன். நீர்வண்ணங்களில் வரையப்பட்ட ஒரு கலைஞரின் ஓவியங்கள் சுற்றிலும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. சுருட்டப்பட்ட இலைகளில் பொதியப்பட்ட கறிகளோடு, சுடுசோறும், வாயில் வைத்தால் கரைந்துபோகின்ற இங்கே இதுவரை சாப்பிட்டிராத அவ்வளவு உருசியுடைய மாட்டிறைச்சியைச் சுவைக்கின்றேன்.

ஓர் ஒரத்தில் மண்ணிற வர்ணத்தில் தியானத்தில் இருக்கும் புத்தரை சாப்பிட அழைக்கின்றேன். நான் மாமிசம் சாப்பிடுபவனல்ல என்று தெரிந்தும் என்னை அழைக்கும் உன் குறும்புத்தனம் பிடித்திருக்கின்றதென அவர் தன் அசையா விழிகளால் சொல்கின்றார்.

தேமா மரங்களின் மீது இப்போது மழை சோவெனப் பொழிகிறது. காற்றின் துணையுடன் மரத்தில் இருந்து இறங்கி வரும் ஒரு தேமாப் பூவை நிலத்தில் விழாது நான் கையில் ஏந்துகின்றேன்.

அதை புத்தருக்கு முன் வைத்து, ‘புத்தர்என மனம் முழுதும் நிறைத்து வைத்திருக்கும் என் அனைத்துக் கற்பிதங்களையும் இல்லாமற் செய்ய வேண்டுகின்றேன். இப்போது நிறைந்து நிற்கும் என் மனதில் பொழியும் மழை தேமாப்பூவையும், புத்தனையும் ஆரத்தழுவிப் போகின்றது.

இவ்வுலகில் என் இருப்பு என்பது இக்கணத்தில் கடந்து போகின்ற ஒரு வாசனை. அவ்வளவேதான்!

*********************************


(Jun 07, 2023)


எஸ்.பொவின் 'வரலாற்றில் வாழ்தல்'

Monday, July 24, 2023


 -இரண்டாம் பாகம்-


ஸ்.பொவின் வரலாற்றில் வாழ்தல்இரண்டாம் பாகத்தின் அரைவாசிப் பாகம் புலம்பெயர் இலக்கியமே இனி தமிழிலக்கியத்தை முன்னெடுக்கும்என்கின்ற அவரின் சுவிஷேசத்தைப் பற்றியே பேசுகின்றது. அந்தவகையில் அவர் 2000களின் ஓர் உலகப்பயணத்தை ஆஸ்திரேலியாவிலிருந்து ஐரோப்பா, அமெரிக்கா, மேற்கொண்டார். அவற்றை இங்கே விரிவாகப் பதிவு செய்திருக்கின்றார் என்கின்றபோதும், அந்தப் பயணத்தின் பெறுபேறுகள் அவருக்கு அவ்வளவு உற்சாகத்தைக் கொடுக்கவில்லை. பனியும் பனையும்என்கின்ற 39 புலம்பெயர் எழுத்தாளர்களின் கதைகளின் அச்சடிக்கப்பட்.ட்தே 300 பிரதிகளே என்கின்றபோதும் அவையும் முழுமையாக விற்பனை போகாது இருக்கின்றதென்ற அவலத்தை எஸ்.பொ இந்நூலில் பதிவு செய்கின்றார். ஆனால் தன்னைத் தமிழுக்கு ஊழியம் செய்கின்ற படைப்பாளியாக முன்வைக்கின்ற எஸ்.பொ சலிக்காது இறுதிவரை தமிழ் இலக்கியத்தினூடாகப் பயணித்திருக்கின்றார் என்பதும் வரலாறுதான்.

எஸ்.பொவின் இந்த ‘வரலாற்றில் வாழ்தலில்அவரின் நைஜீரியா அனுபவங்களை முதன்மையாகச் சொல்வேன். கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் ஆபிரிக்காக் கண்டத்தில் வாழ்ந்த செழிப்பான அனுபவங்களைக் கொண்டவர் எஸ்.பொ. இன்னும் இந்த அனுபவங்களை விரித்து இங்கே விரித்து எழுதியிருக்கலாம் என்று எண்ணக்கூடிய அளவுக்கு எஸ்.பொ இந்த அனுபவங்களை சுவாரசியமாக எழுதியிருக்கின்றார். 70/80களில் ஆபிரிக்காக் கண்டங்களில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் அநேகரைப் போல எஸ்.பொவும் தனது குடும்பத்தினரோடு புலம்பெயர்ந்திருப்பார் என்று இதுவரை எண்ணிய எனக்கு அவர் தனித்தே நைஜிரியாவில் இருந்திருக்கின்றார் என்பது புதுசெய்தி.

இந்த வரலாற்றில் வாழ்தலில்எஸ்.பொ அவர் கூறி வந்தவற்றையே தன் எழுத்தால் தானறியாமலேயே உடைத்திருக்கின்றார். எஸ்.பொ இப்படி புலம்பெயர்ந்தற்கு சிவத்தம்பி, கைலாசபதி போன்றவர்களின் பழிவாங்கல்களே முக்கிய காரணம் எனத்தான் சொல்லித் திரிந்திருக்கின்றார். ஆனால் எப்போதும் ஆசிரியராகவே இருந்த எஸ்.பொ ஒருகட்டத்தில் ஒரே தொழிலைச் செய்வதால் அலுப்படைகிறார். இத்தனைக்கும் அவரின் ஆசிரிய தொழிலில் பெரும்பாலான பாடசாலைகளில் அவரைப் புரிந்துகொண்ட அதிபர்கள் இவருக்கு இலகுவான நேரசூசிகையையே போட்டுக்கொடுக்கின்றனர். அதன் நிமித்தம் எழுதவோ, வாசிக்கவோ, நாடகங்கள் போடவோ இவருக்கு நிறைய நேரம் கிடைக்கவே செய்கின்றது. எனினும் எஸ்.பொவுக்கு ஒன்றேயே திரும்பத் திரும்பச் செய்வதில் அலுப்பு வருகின்றது. 


அது எம்.ஜி.ஆர் தலைமையில் மதுரையில் தமிழராய்ச்சி மாநாடு நடக்கும்போது எஸ்.பொ இது பங்குபெறும்போதே, தமிழகத்திற்குச் சென்று வேலை பார்க்கும் முயற்சிகளில் ஈடுபடுகின்றார். அவருக்கு வேலையொன்றும் தர எம்ஜிஆரின் அமைச்சரவையில் இருக்கும் ஒருவர் உறுதியும் கொடுக்கின்றார். எஸ்.பொவின் இந்தச் சலிப்பை விளங்கிக்கொண்ட ஏ.ஜே.கனகரட்ன, மு.நித்தியானந்தனின் வழிகாட்டலுடன் நைஜிரியாவுக்குப் புலம்பெயர்கின்றார். ஆக எஸ்.பொ ஊதிப்பெருப்பித்து நமக்குச் சொன்ன சிவத்தம்பி, கைலாசபதியின் பழிவாங்கலால்தான் புலம்பெயர்ந்தார் என்கின்ற வாதம் அவ்வளவு வலிமையானது இல்லையென்பதை இதை வாசிப்பதினூடாக நாம் உணர்கின்றோம்.


ந்தப் பாகத்தில் எஸ்.பொ, தனது மனைவியாரோடு பிணக்கு வந்து நீண்டகாலம் தனித்து அலைந்த பகுதி குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தொடர் குடிகாரராக இருந்த எஸ்.பொ, இந்தப் பிரிவின் பின் பெருங்குடிகாரராக ஆகின்றார். ஒருகட்டத்தில் குடிக்கு அடிமையாகி, நினைவு தெரியாது மயங்கிக்கிடந்து நண்பர்களின் முயற்சியால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றார். இனி குடித்தால் ஆபத்து என்று வைத்தியர் எச்சரித்து அனுப்பியபோதும், 2 வாரங்களுக்குள் மீண்டும் குடிக்க ஆரம்பிக்கின்றார். கிட்டத்தட்ட ப்யூகோவ்ஸ்கியை நினைவுபடுத்தும் பகுதிகள் போல எஸ்.பொவின் இந்த அனுபவங்களை நான் வாசித்தேன். ஆனால் அப்படி இருந்த எஸ்.பொ கிட்டத்தட்ட 7-8 ஆண்டுகள் குடியிலிருந்து விலகியிருக்கின்றார். அதற்குப் பெரிய காரணம் எதுவுமிருக்கவில்லை. பிள்ளைகள் உயர்தரத்தில் படிக்கின்றார்கள், வீட்டுச் செலவீனங்கள் கூடிவிட்டதென குடியைக் கைவிடுகின்றார். பின்னர் மீண்டும் ஆரம்பிப்பது அவரின் மகனான மித்ர புலிகள் இயக்கத்தில் சேர்ந்து கடலிலே மரணமாகின்ற போதாகும்.

தந்தையர் கண்முன்னே தனயர்கள் இல்லாமற் போவது பெருஞ்சோகம். எஸ்.பொ மித்ரவை இழந்ததைப் போல பின்னர் அவரின் மற்ற மகனான புத்ரவை இந்தியாவில் இழக்கின்றார். இரண்டு மகன்களின் இறுதிச் சடங்குகளின்போது கூட (மித்ர எனப்படும் அர்ஜூனாவின் உடல் கடலிற்குள் போனது) எஸ்.பொவால் அந்தந்த இடங்களுக்குப் போகமுடியாத சூழல். ஒருவகையில் இந்த இழப்புக்கள் எஸ்.பொவை சோரவைக்கின்றது. ஆகவேதான் வரலாற்றில் வாழ்தலையும் தனது மகனான புத்ரவின் மரணத்தோடு முடிக்கவும் செய்கின்றார்.

ஓரிடத்தில் எஸ்.பொ எழுதுவார், ‘வாசிக்கும் நீங்கள் நினைக்கக்கூடும், என் பெரும்பகுதி இனிய நினைவுகளாக இருக்கின்றதென்று. அவ்வாறில்லை, இதைவிட மூன்றுமடங்கான துயர நினைவுகள் இருக்கின்றன, அவற்றையெல்லாம் எழுதித்தான் என்ன நடக்கப்போகின்றதுஎனச் சொல்லிக் கடந்துபோகின்றார். இந்த வரலாற்றில் வாழ்தலில் ஒரு சிறந்த கதைசொல்லியை, தமிழ் ஊழியத்தில் ஓர்மமுள்ள படைப்பாளியை, தன் ஈகோ சீண்டுப்படுகையில் இன்னும் மேலே ஏறி பிறரைச் சீண்டிப் பார்க்கும் எஸ்.பொவை பார்த்தாலும், இன்னொருபுறத்தில் சோர்வில் அவ்வப்போது உழலும், துயரங்களை மறைத்து உள்ளே கேவியழக்கூடிய ஓர் ஆத்மாவான எஸ்.பொவையும் காண்கின்றோம். அதுவே இயல்பானதும், அழகானதும் கூட.

இன்றைய காலத்தில் சில எழுத்தாளர்கள் தாம் மகிழ்ச்சியாகவும் சோர்வில்லாதும் இருக்கின்றோம் என அடிக்கடி குறிப்பிடுவார்கள். ஆனால் அவ்வாறு பிரகடனப்படுத்துபவர்கள்தான் பிறர் மீது சீண்டல்களையும், காழ்ப்புக்களையும், அவமதிப்புக்களையும் செய்பவர்களாக இருக்கின்றபோது, இவர்களின் மகிழ்ச்சியினதும், சோர்வற்றதன்மையினதும் உண்மையான அர்த்தம் என்ன என்று எனக்குள் அடிக்கடி கேள்விகள் எழுவதுண்டு. எஸ்.பொவைப் போல எல்லாச் சறுக்கல்களும், சலிப்புக்களும் கொண்டவர்கள் மீதும், அதை அப்படியே எழுத்தில் முன்வைப்பவர்கள் மீதுமே என்னால் இன்னும் நெருக்கம் கொள்ள முடிகின்றது.

இந்த வரலாற்றில் வாழ்தலில் இறுதி அத்தியாயமாக தவம்என்ற பகுதி இருக்கின்றது. தமிழ் மொழி மீதான தன் காதலை எஸ்.பொ இதில் அறிக்கையிடுகின்றார். புலம்பெயர்ந்த நாடுகளிலே தமிழ்ப்படைப்பு தொடரும் என்கின்ற நம்பிக்கையை முன்வைக்கின்றார். அதேவேளை புலம்பெயர்ந்த தேசங்களில் இருப்பவர்கள் மொழி அடையாளத்தையும், மத அடையாளங்களையும் குழப்பி வருவதாகத் தோன்றுகின்றது என்று எஸ்.பொ எழுதுகின்றார்.மத அடையாளங்கள், இன்றைய நிலையில் தங்களுடைய ஆன்மீகப் பலத்தினை முழுவதுமாக இழந்துள்ளன. இந்துத்துவத்தின் ஓங்காரம், தமிழ் உணர்வுகள் மீது ஆதிக்கஞ் செலுத்தும் ஓர் உள அர்த்தத்தினை மறைத்து வைத்துள்ளதாக எனக்குத் தோன்றுகின்றது. இந்த ஓங்காரம் தமிழின் செழுமைக்கு உகந்ததல்லஎன்று நம்மை எச்சரிக்கின்றார். இன்றைக்கு 20 ஆண்டுகளின் பின் இது புலம்பெயர்ந்த தேசத்துக்கு மட்டுமில்லை, ஈழத்துக்கும் பொருந்தும் என்பதை நாம் கவனிக்கவேண்டும்.

2000களின் தொடக்கத்தில் கனடா வந்த சுந்தர ராமசாமி, புலம்பெயர் தேசங்களில் இனி தமிழ் வாழாது என்கின்ற நம்பிக்கையீனத்தை வெளியிட்டிருக்கின்றார். ஒருவகையில் அது தேய்ந்து போய்க்கொண்டிருப்பதும் உண்மைதான். ஆனால் எஸ்.பொ புத்தாயிரத்துக்கு (2000) அப்பாலும் தமிழ் புலம்பெயர்ந்த தேசங்களில் இருக்குமென்று புத்தாயிரத்தில் எதிர்வு கூறினார். இற்றைக்கும் ஏதோ ஒருவகையில் புலம்பெயர் தேசங்களில் தமிழ் வாழ்ந்து கொண்டுதானிருக்கின்றது. இலக்கியப் படைப்புக்களை சொற்பமானவர்கள்தான் வாசிக்கின்றார்கள்/எழுதுகின்றார்கள் என்றாலும் (அது எல்லாத் தேசங்களிலும் இயல்புதானே) புலம்பெயர் தேசத்து எழுத்தாளர்களுக்கும் தமிழில் இன்னும் இடம் இருந்து கொண்டேதானிருக்கின்றது. ஆகவேதான் அந்த புலம்பல்/அலட்டல் அண்மையில் நடந்த சென்னைப் புத்தகக் கண்காட்சியிலும் சலசலப்புக்குள்ளானது. ஒருவகையில் அது எஸ்.பொ கண்ட கனவின் நீட்சி எனக்கூடச் சொல்லலாம்.

என் எழுத்து ஊழியம் என் தவமாக இனிக்கின்றதுஎன்ற வரிகளுடன் எஸ்.பொ, ‘வரலாற்றில் வாழ்தலைமுடிக்கின்றார். நமக்கோ எஸ்.பொவின் இலக்கிய இருப்பு, அவரின் எல்லாப் பலவீனங்களை மீறியும் பெருமிதப்பட வைக்கின்றது. ஆகவேதான் அவர் என்னைப் போன்றவர்களுக்கு ஓர் ஆளுமையுள்ள முன்னோடியாகத் திகழ்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

*********************


(Mar 13, 2023)

சென்னை

Sunday, July 23, 2023


சிலவற்றை நிறைய யோசிக்காது செயற்படுத்தியாக வேண்டும். "தாய்லாந்து" புதினத்தின் கதைசொல்லி ஒரு நண்பனின் திருணத்துக்காய் சென்னைக்குப் போவதற்குத் தயார்ப்படுத்துவதுடன் கதை தொடங்கும். அதுபோல இப்போது நண்பரொருவனின் திருமணம் சென்னையில் நடக்கையில் போவதா இல்லையா என்ற குழப்பத்தில் இருந்தவனை, கூடவே புத்தகக் கண்காட்சிக்கும் சேர்த்து சென்னைக்கு இழுத்துக் கொண்டு வந்துவிட்டது.


புனைவு போல ஒரு வாழ்வு!


ஒரு ஓவியருக்கு ஓவியக் கண்காட்சிகள் போல, ஒரு இசைஞருக்கு இசை நிகழ்ச்சிகள் போல, நம்மைப் போன்று எழுதவும் வாசிக்கவும் விரும்புபவர்க்கு இப்படியான புத்தகக் கண்காட்சிகள் எனலாம். ஆனால் இங்கே நாமெல்லாம் உதிரிகள். நமக்குப் பிடித்த எழுத்தாளர்கள் எதிரே கடந்துசெல்கையில் புன்னகைக்கவோ அல்லது அருகில் நம்மோடு நடந்து வருபவர்க்கு இவரின் இன்னின்ன புத்தகங்கள் நமக்குப் பிடிக்குமென மனம் கனிந்து பேசிக்கொண்டோ போகலாம்.

இந்தக் கண்காட்சியில் நிறைய நண்பர்களைச் சந்திக்கலாமெனினும், சிலரோடு மட்டுமே ஆறுதலாகப் பேச முடியும். ஒரு காலையில் 24 மணித்தியால விமானப் பயணத்தில் வந்து சேர்ந்தவனுக்கு காலநிலை, வாகனங்களின் பேரிரைச்சல்கள், நேரமாற்றங்கள் எல்லாம் சர்ரிலிய அனுபவத்தைக் கொடுக்கும். பிறகு ஊரோடு ஒத்துப்போக எல்லாம் இயல்பாகிவிடும்

'தாய்லாந்து' வெளிவந்திருந்த "எதிர்" நண்பர்கள் உற்சாகமாய் வரவேற்றனர். "மெக்ஸிக்கோ"வை பதிப்பித்த டிஸ்கவரி புக் பாலஸ்" வேடியப்பன், உங்கள் நூல்கள் அனைத்தும் விற்றுவிட்டன. அதற்கான ரோயல்டி தருகிறேன், மெக்ஸிக்கோ இன்னொரு பதிப்பு வெளியிடுவோம் என்று "பொங்கல் போனஸாக" இன்ப அதிர்ச்சி தந்தார். எப்போதும் போல என் தமிழகப் பயணங்களை இலகுவாக்கும் இனிய நண்பர் தளவாய் சுந்தரம் எனக்கான sim card உடன் என்னைச் சந்திக்க வந்திருந்தார்.


ன்று பொங்கல் என்பதால் ஒரு சிறுபயணம் செய்து
பொங்கலை எப்படி சென்னை கொண்டாடுகிறது என்று பார்ப்போம் என வடபழனி முருகன் கோயில் வரை போயிருந்தேன். விடிகாலையிலே கோலங்கள் போடப்பட்டு, கரும்புகள், இஞ்சி, மஞ்சள், தோரணங்கள் கட்டப்பட்டு ஒவ்வொரு வீடும் களை கட்டியிருந்தது. வடபழனி முருகன் கோயிலில் ஓரிடத்தில் தமிழில் அர்ச்சனை செய்யலாமென எழுதப்பட்டிருந்தது நிறைவாயிருந்தது. எப்போதும் போல கோயில் கோபுரங்களையும், உள்ளேயிருக்கும் பழைய சிற்பங்களையும் பார்க்கவே எனக்கு விருப்பம் நிறைய இருக்கும். எனவே அவற்றை இரசித்துப் பார்த்துவிட்டு, அங்கே தரப்பட்ட சர்க்கரைப் பொங்கலையும் உருசித்துச் சாப்பிட்டு விட்டு, அருகிலிருந்த ஒரு கடையில் வத்தகைப்பழ (தர்ப்பூசணி) ஜூஸ் குடித்துவிட்டு தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஜீவா பூங்காவிற்கு அருகில் பணம் மாற்றுவதற்காய்ப் போயிருந்தேன். கடந்தமுறை சென்னை வந்தபோதும் ஆடைக் கடைகளுக்கு போய்விட்டு இங்கே வந்திருந்தேன். நடேசன் பார்க் என்றால் அங்கே இருந்து எப்போதும் எழுதிக் கொண்டிருக்கும் அசோகமித்திரனின் படிமம் தோன்றுவதில்லையா? அது போலத்தான் இதுவும். ஒரு தீவிர மார்க்ஸியரான ஜீவாவின் பெயரில் இருந்த பூங்காவின் உள்ளே பிள்ளையார் கோயில் இருந்ததை முதன்முறை இருளில் பார்த்தபோது சற்று வியப்பாயிருந்தது. இம்முறை பகலில் உள்ளே போய்ப் பார்க்கையில் ஒருபக்கம் பிள்ளையாரும், இன்னொரு பக்கம் ஜெய் மாதாவும் பொங்கலுக்கான அலங்காரத்துடன் வீற்றிருந்தனர். உள்ளே சிலர் விஷ்ணுவைப் போல கவலைகள் எதுவுமின்றி நிம்மதியாய்த் தூங்கிக்கொண்டிருந்தனர். இன்னொரு பக்கம் இளஞ்சோடியொன்று ‘instagram reels’  இற்கான காணொளியைச் சளைக்காது திரும்ப திரும்ப எடுத்துக் கொண்டிருந்தனர்.

ஜீவா பார்க்கில் இருந்தபடி பொங்கல் நாளன்று தமிழக தியேட்டர் அனுபவத்தை ஒருமுறை அனுபவித்துப் பார்க்கலாமென்று வாரிசுக்கும் துணிவுக்கும் முயன்றபோது நீயெல்லாம் ‘காணும் பொங்கலுக்கே இலாயக்கு’ என்று ஒரு ரிக்கெட்டுக்கும் கிடைக்கவில்லை. ஜீவா பார்க்கிற்கு முன்னால் இருந்த மரங்களில் கிளிகள் மட்டும் பாட்டுப் பாடி என்னைத் தேற்றி அனுப்பி வைத்தன.

மாலையில் நமது செல்வத்தாரின்
'பனிவிழும் பனைவனம்' புத்தக வெளியீட்டு நிகழ்வுக்கு, கனடா மாதிரியில்லாது நேரத்துக்குப் போகவேண்டுமென்று நந்தனம் போயிருந்தேன். செல்வத்தாரின் ரேஞ்சே இப்போது வேறுமாதிரி என்பதால் நாங்கள் போய்ச் சேர்ந்து அரைமணித்தியாலத்துக்குப் பிறகு - அவரின் அன்றைய தலை புரட்சித்திலகம் போல- கூட்டத்துக்கு தாமதமாக வந்து சேர்ந்தார். அதுகூடப் பரவாயில்லை, நாமெல்லாம் காலச்சுவடு அரங்கின் முன்றலில் நிகழ்வு நடக்கப் போகின்றதென்று காத்திருக்க, அவர் இலக்கியம் என்பது உள்வட்டத்துக்கு உரியதென்று காலச்சுவடு அரங்கின் பின்கோடியில் வைத்து பெருந்தலைகளுடன் அதை நடத்தி முடித்தார். அந்தக் கோபத்தில் நான் அவரின் 'பனிவிழும் பனைவனத்தை' வாங்காது பகிஷ்கரிப்புச் செய்தேன். செல்வத்தாரினால் நடந்த ஒரேயொரு நல்ல விடயம், காலச்சுவடு அரங்கில் பத்தினாதனைச் சந்தித்து கொஞ்ச நேரம் ஆறுதலாகப் பேச முடிந்தது என்பதே. எனக்கும் அவருக்கும் சில விடயங்களில் ஒற்றுமை இருக்கின்றதென்று இருவரும் பேசிக்கொண்டோம். ஆனால் அவரை இன்னமும் எந்த நிலப்பரப்பிலும் வேர்கொள்ள விடாத நுண்ணதிகாரத்தின் துயரம் எம்மைப் போன்ற எவராலும் துளியும் உணரமுடியாதது.

செல்வத்தார் தன் இரசிகைகளுக்கு கையெழுத்திட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தபோது, அஜிதனை அறிமுகப்படுத்தி விட்டிருந்தார். அஜிதன் நான் அவரின் 'மைத்ரி'க்கு எழுதிய விமர்சனத்தை யாரோ நண்பர் அனுப்ப வாசித்தேன் எனச் சொன்னார். எப்போதும் தொடக்கத்தில் கொஞ்சம் கறார், பிறகு போகப்போக மனம் கனிந்துவிடும் எனச் சொல்லி, அவரின் வல்லினக் கதையையும் வாசித்தேன் எனச் சொன்னேன். அகழில் அடுத்த கதை வரப்போகின்றதென்றார். என் விமர்சனம் வேறு,  ஆனால் அஜிதன் எதையும் சுதந்திரமாகப் பேசக்கூடிய, உடனே நட்பு கொள்ளக்கூடிய ஒருவராகத் தெரிந்தார்.

முதல் நாளன்று சாரு நிவேதிதா கண்காட்சி முடியும்போது காரொன்று வந்து நிற்க ஸ்டைலாக ஏறிப்போனதைக் கண்டிருக்கின்றேன். படையப்பாவில் ரம்யாகிருஷ்ணன் சொல்வதைப் போல, வயதாலும் அந்த ஸ்டைலும் திமிரும் இன்னும் போகவில்லை போல சாரு இருந்தார். இன்று ஜீரோ டிகிரி பதிப்பகத்தில் சாருவின் ஒரு நூலை வாங்கி கையெழுத்திட்டு பாரிஸ் பயணங்கள்/ஆபீதின் கதைகள் பற்றிக் கதைப்போமா என்கின்ற ஆசை வந்தது. ஆனால் எனக்கும் இந்த சர்ச்சைகள்/நிரூபித்தல்கள் போன்றவற்றில் இருந்து விலகிப்போகும் காலம் கனிந்துகொண்டிருப்பதால் சாருவை அருகில் பார்த்தும், மூன்று முறைக்கு மேலாய் அவரைப் புத்தகக் கண்காட்சியில் கண்டபோதும் ஒவ்வொரு முறையும் விலத்தி விலகி வந்திருந்தேன். செல்வத்தாரின் புத்தக நிகழ்வில் இமையம், ‘எழுத்தை மட்டும் வாசித்துவிட்டு எழுத்தாளரைச் சந்திப்பதைத் தவிர்ப்பது நல்லதென்ற தொனியில் கூறியதைப் போல சாருவையும் இப்படியே ஒரு தொலைவில் வைத்து இரசிப்பது போதும் போல.

வயசாகிக் கொண்டிருப்பதால் இப்போது புத்தகக் கண்காட்சிக்குள் நடந்து திரிவதே பெரும் கஷ்டமாக இருக்கிறது. பதின்மங்களில் நின்றபடி 8 மணித்தியாலங்கள் வேலை செய்ததால் வந்த முள்ளந்தண்டு வலி இப்போது மீண்டும் உலுக்கியெடுக்கத் தொடங்கியிருக்கின்றது. இனியான காலங்களில் தனியே புத்தகக் கண்காட்சிக்கு என இவ்வளவு தூரம் பயணித்து வருவேனா என்பதில் நம்பிக்கை குறைந்து வருகின்றதென நண்பரிடம் சொன்னேன். செல்வதாரும் இனி இலக்கியத்தால் பயனில்லையென, அவர் வெளியிடும் 'காலம்' புது இதழ் வெளிவந்ததைக் கூட மறந்துவிட்டு, இயக்குநர்கள், பாடகர்களுக்கு கதை/ பாட்டுச் சொல்லிக் கொடுக்கப் போயிருக்கின்றார் என்றொரு கதையும் கேள்விப்பட்டேன். நானும்  இனி சென்னைக்கு வந்தால் நடிகைகளை மட்டும் சந்திக்கச் செல்லாமென நினைக்கின்றேன்

ஆண்ட்ரியாவுக்கு பொங்கல் வாழ்த்துகள்.

*************************


(Jan 16, 2023)

கார்காலக் குறிப்புகள் - 14

Saturday, July 22, 2023

 "விடுதலை" - சிறு குறிப்புகள்



'விடுதலை' வன்முறை சார்ந்து எனக்கான திரைப்படம் அல்ல. தியேட்டரில் இதைப் பார்த்திருக்காவிட்டால் சிலவேளை இதைப் பார்ப்பதைப் பின்னர் தவிர்த்திருக்கக் கூடும். வெற்றிமாறனின் 'விசாரணை' யையே நான் இன்னும் பார்க்கவில்லை. அதற்குக் காரணம் நான் கேட்டு/பார்த்து வந்த அந்த "யதார்த்த" வன்முறை. "விடுதலை' யிலும் நான் கண்மூடிக் கடந்த காட்சிகள் சில உண்டு.

இத்திரைப்படம் குறித்து பின்னர் விரிவாக கருத்துச் சொல்லவேண்டும். ஜெயமோகனின் கதையான "துணைவனி"ல் இருந்து விரித்து, அது சார்ந்து, ஆனால் அதுவில்லாத ஒரு கதையாக இதை வெற்றிமாறன் எடுத்திருக்கிறார். "துணைவன்" எப்போதோ வாசித்தது; அதன் அடிச்சாரம் நினைவிலுண்டு, ஆனால் சம்பவங்கள் மறந்துவிட்டன. இப்படத்தில் காட்சிப்படுத்தும் வன்முறையையும், பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வுகளையும் ஜெயமோகனின் இந்தியத் தேசிய மனம் ஒருபோதும் எழுத்தில் முன்வைக்க ஒப்புக்கொள்ளாது. ஆகவேதான் நாமெல்லாம் உயிருள்ள சாட்சியங்களாக இன்னமும் இருக்கவும், ஜெமோவின் நெருங்கிய நண்பர்களாக ஈழத்தமிழர்கள் இருந்தும், எம்மை அது எவ்வளவு காயப்படுத்தும் என்கின்ற சிறு பிரக்ஞையுமின்றி, இந்திய இராணுவம் ஈழத்தில் பாலியல் வன்புணர்வே செய்யவில்லை என்று எழுதும் மனம் அவருக்கு வாய்த்தது. அவரல்ல, அப்படி தேசியப் பித்துப் பிடித்த பல படைப்பாளிகள் தமிழகத்தில் இருக்கின்றனர். இவர்களுக்கு பாதிக்கப்பட்டவர்களின் trauma பற்றி தனியே வகுப்பெடுக்க வேண்டும்.

"விடுதலை" பல படைப்புக்களின் பாதிப்பாக வந்திருக்கிறது. ஆனால் எனக்கு இதன் பல காட்சிகளைப் பார்த்தபோது பாலமுருகனின் " சோளகர் தொட்டி"யே நினைவுக்கு வந்தபடி இருந்தது. தமிழக சூழலில் தமிழக பொலிஸ்/இந்திய இராணுவம் செய்த வன்முறை/பாலியல் வன்புணர்வுகள் குறித்து அவ்வளவு தீவிரத்தோடும், உக்கிரத்தோடும் எழுதப்பட்ட ஒரு நூல் 'சோளகர் தொட்டி'.  அதை வாசித்துவிட்டும், யாரேனும் ஒருவர் தமிழக பொலிஸ்/இந்திய இராணுவம் குறித்து பெருமைகள் பேசினால், ஒருநாள் கர்மா உங்களை இரட்சிக்கட்டும் என்று அவர்களுக்கு சொல்வதைவிட வேறொரு வழியும் நமக்கு இல்லை.

'விடுதலை' நிறைய உரையாடல்களை உருவாக்கக்கூடிய ஒரு படம் என்பதில் சந்தேகமில்லை. வெற்றிமாறன் அதை genuine ஆகவும் எடுக்க முயற்சிக்கின்றார். என்னை உறுத்திய விடயம் என்னவெனில் இந்தக் கதையை ஒரு அப்பாவிப் பொலிஸினுடாக மட்டும் நகர்த்தியது. உண்மையில் எந்தப் பொலிஸாக இருந்தாலும் அவர்களுக்கு agency இருக்கிறது. ஒருவர் "காக்கிச்சட்டை" யைப் போட்டவுடன், அவருக்குரிய agency எப்படியோ வேலை செய்யத் தொடங்கிவிடுகின்றது. காக்கிச் சட்டையைக் கழற்றியவுடன், அவர் சாதாரண மனிதர். ஆனால் அந்தச் சட்டையுடன் ஒருவருக்கு அளிக்கப்படும் அதிகாரம் பற்றி கேள்வியில்லாது ஒரு பாத்திரத்தை நாம் படைக்கமுடியாது. ஆகவே சூரியின் மிக மிக நல்ல பொலிஸ் பாத்திரச் சித்தரிப்பு எனக்கு சற்று எரிச்சலூட்டியது.

அதேவேளை இந்தப் படத்தின் தீவிரத்துக்கு 2 முக்கிய காட்சிகள் வலுவில்லாது இருந்தது போலவும் தோன்றியது.

(1) ஒரு சாதாரண நிலையில் இருக்கும் பொலிஸ்காரரின் பேச்சைக் கேட்டு, அந்தத் தகவலை உறுதிப்படுத்தும் வேவுகூடச் செய்யாது, உடனேயே ஒரு பெரும் படையை வாத்தியாரைப் பிடிக்க இறக்குவது.

(2) வாத்தியாரின் குழுவினர், பொலிஸ் சூரிக்கு அவர்கள் இருக்கும் இடம் தெரிந்தபின்னும் (எப்போதாவது ஆபத்து வரலாம்), அதே இடத்தில் தொடர்ந்து தங்கியிருப்பது.

எனினும், தமிழ்ச்சூழலில் பொலிஸுக்குள் இருக்கும் அதிகார மிதப்பு, ஊழல், சித்திரவதைகள், அவர்கள் பெண் உடல்கள் மீது நிகழ்த்தும் வன்முறைகள் என எல்லாவற்றையும் அதே வீரியத்துடன் முன்வைப்பதால் 'விடுதலை' கவனிக்க வேண்டிய ஒரு திரைப்படமே.


************


(Apr 01, 2023)

கார்காலக் குறிப்புகள் - 13

Wednesday, July 19, 2023


பசுமை தேடிய பயணங்கள் – 03



காலை உணவை முடித்துவிட்டு குமரி
அள்ள(அருவி)வைத் தேடிப் போகத் தொடங்கினேன். நான் நின்ற இடத்திலிருந்து 10-15 நிமிட நடைக்குள் அங்கே போக முடிந்திருந்தது. போகும் வழியெங்கும் மரங்கள் பசுமையாக இருந்தது. அதிலும் தித்திக்கும் பலாப்பழங்கள் மரங்களெங்கும் காய்த்துத் தொங்கிக்கொண்டிருந்தன. காலை நேரமென்பதால் அருவியில் எவரும் இருக்கவில்லை. சலசலத்தோடும் அருவி மட்டுமே துணையாகவும், இசையாகவும் இருந்தன.

ஹெஸ்ஸேயின் ‘சித்தார்த்தாவில், சித்தார்த்தா ஞானம் பெறும் எல்லா வழிகளிலும் நம்பிக்கையிழந்து திரும்பும்வழியில் நதியின் ஒலியைக் கேட்பான். ஆயிரம் குரல்களுடைய நதியின் பாடலை, மகிழ்ச்சியோ, துக்கமோ இன்றி, அதன் அத்தனை குரல்களையும் தன் அகங்காரத்திற்குள் நுழையவிடாது, முழுதாய்/ நிறைவாய்க் கேட்டுத் திளைத்தபடியிருப்பான். இறுதியின் அந்த ஆயிரம் குரல்களும் ஒரேயொரு சொல்லுக்குள் முழுமை பெறும். அதுஓம்என்கின்ற பூரணநிலை. அப்போது நிகழும் மாற்றத்தினால் சித்தார்த்தா வேறொருவனாக மாறியிருப்பான். அது அவன் ஞானமடைகின்ற இடம்.

இப்படி ஏன் ஹெஸ்ஸேவின் சித்தார்த்தாஎனக்குள் இடைவெட்டிப் போனார் என்று தெரியவில்லை. ஆனால் அவர் அடிக்கடி இப்படி மரங்களை, நதிகளைப் பார்க்கும்போது வந்து வந்து போவார். ஹெர்மன் ஹெஸ்ஸே இறுதிக்காலத்தில் வாழ்ந்த வீட்டை சுவிஸ்-இத்தாலி எல்லையில் பார்த்தபோதும், அங்கே ஒரு பெண்ணும், அவரின் குழந்தையும் மென் நீல ஆடையில் என்னைக் கடந்து போனபோது, ஹெஸ்ஸேயின் சித்தார்த்தா அவ்வளவு பெரும் முயற்சிசெய்து பேரழகி கமலாவை அடைந்துவிட்டு, ஒருபொழுது சட்டென்று அவளை நீங்கிப் போகும் கையறுநிலைக்காட்சி நினைவுக்கு வந்தது.

இவ்வாறு தொடர்பற்று நினைவுகளை அலைவுறுவுவதைத் தவிர்க்க, குமரி அள்ளவை அள்ளியணைப்போம் என்று அருவி வீழும் ஆழமான பகுதியில் அல்ல, பாதுகாப்பான பகுதியில் நின்று நீராடத் தொடங்கினேன்.

அங்கே திளைத்து நின்ற ஒன்றரை மணித்தியாலத்துக்குள், இரண்டு இளைஞர்கள் மட்டும் வந்து கொஞ்ச நேரம் செல்ஃபிக்கள் எடுத்துப் போனதைத் தவிர எவரும் வராமல் அவ்வளவு அமைதியாக அருவி இருந்தது. இந்த இடத்துக்கு அருகிலேயே சீதாவக்க தாவரவியல் பூங்காவும் இருந்ததென்றாலும் பார்க்க முடியவில்லை. நீர்வீழ்ச்சிகளைப் பார்ப்பதே இந்தப் பயணத்தின் நோக்கம் என்பதால் அருகிலிருந்த அருவிகளைத் தேடத் தொடங்கினேன்.

வ்வாறான பயணங்களுக்கு நமக்கென்றொரு வாகனம் இருந்தால் நினைத்த இடத்தில் நின்று நின்று போகமுடியும். பொதுப் போக்குவரத்தில் போய்ப் பார்ப்பதென்றால் உள்ளே நிறைய நடக்கவேண்டி இருக்கும். குமரி அள்ளவிலிருந்து ஹொட்டலுக்கு இன்னொரு அருவியைப் பார்க்கலாம் என்று தேடியபோது அள்ள உட அள்ள என்றொரு இடம் சிக்குப்பட்டது. சிக்கல் என்னவென்றால் அது நடந்துபோக முடியாத தூரத்தில் இருந்தது.

மோட்டார் சைக்கிளும், ஓட்டோவும் மட்டும் ஒரளவுக்குக் கிட்டவாகப் போகக்கூடிய இடம். நான் நின்ற இடத்தில் ஊபரும் வருவதாய்க் காணோம். தெருவில் நின்று கையைக் காட்டி மறிப்போம் என்றால், அரிதாக வந்த ஆட்டோக்களும் 'அவுதுறு' பார்ட்டிக்குப் போகும் சனங்களோடு போய்க்கொண்டிருந்தார்கள். அதுவரை சூரியன் வெளிச்சிருந்த பகலில் மழையும் பெய்யத் தொடங்கிவிட்டது.

இறுதியில் என் நிலைகண்டு ஒரு ஓட்டோ நின்றது. அதையொரு பெண்தான் ஓடிக் கொண்டு வந்தார். உள்ளே அவரின் இரண்டு பிள்ளைகளும்
, அவர்களுக்கு வாங்கிய சின்னச் சைக்கிளும் இருந்தனர். என் நிலை கண்டு பரிதாபப்பட்டுத்தான் நிறுத்தியிருப்பார் போலும். போகவேண்டிய இடத்தைச் சொன்னேன். பின்னாலிருந்த சைக்கிள் முதுகைக் குத்தினாலும் நெருக்கி உள்ளே உட்கார்ந்தேன். ஓட்டோ முழுதும் சேகுவராவின் படங்கள். ஹெஸ்ஸே நினைவுக்கு வருவது போல சே இப்போது முன்னால் தோன்றினார். நிச்சயம் இந்தப் பெண்மணி ஒருகாலத்தில் ஜேவிபியின் தீவிர ஆதரவாளராக இருந்து புரட்சிக்கு உதவியிருப்பார் என்று கற்பனைக் குதிரை சிறகடித்து எனக்குள் பறந்தது. என் சிந்தனை அவருக்கு விளங்கியதோ தெரியாது, ஆனால் அந்த ஓட்டோவுக்கு நன்கு விளங்கிவிட்டது. ஆம், இடைநடுவில் அது சட்டென்று நின்றுவிட்டது. ஒற்றைப் பாதை என்பதால் பின்னால் வந்த வாகனம் எல்லாம் ஹோனடிக்கத் தொடங்கிவிட்டன.

இப்போது நான் புரட்சிக்காரனாகஉருவாகும் பொற்தருணம். கீழே இறங்கி ஓட்டோவைத் தள்ளினேன். அது மத்தியானச் சாப்பிட்டுவிட்டு பகல்கனவில் மூழ்கிய குதிரை போல அப்படியே நின்றது. ஒரு துளியும் அசைவதாய்க் காணோம். இந்தப் பெண்ணோ சிங்களத்தில் தள்ளு தள்ளு என்கின்றார். அது போதாதென்று பின்னாலிருக்கும் பஸ்காரர் விடாது ஹோர்ன் அடிக்கிறார். உள்ளேயிருக்கும் சின்னப்பிள்ளைகளோ சிரி சிரியென்று என் நிலைகண்டு சிரிக்கின்றனர்.

ஒரு தமிழ் மறவனுக்கு இப்படியா நடுரோட்டில் சோதனை வரவேண்டும் என்று எல்லாளனை நினைத்து தோளுக்கு வலுக்கொடுத்தேன். ஒருமாதிரி ஒரு ஓரமாய் ஆட்டோ போய்ச்சேர்ந்தது. அப்பாடா!

பிறகு ஏதோவெல்லாம் செய்து
, அதற்கு பெட்ரோல் எல்லாம் தீத்தி ஓட்டோவை அந்தப்பெண் இயக்கிவிட்டார். ஆனால் அது பிறகு இன்னொரு இடத்திலும் பிரச்சினையை ஏற்படுத்தியது. இதாவது சமதரை, அது மேடு ஒன்றில் இனியும் ஏறமாட்டேன் என்று அடம்பிடித்து நின்றுவிட்டது. இப்போது என் நிலை இன்னும் பரிதாபமாகிவிட்டது. மேடென்பதால் அதை நான் பின்னால் நின்று தடுத்தும். என்னைத்தாண்டி இறங்கி இறங்கி பள்ளத்துக்குள் பாய்கின்ற நிலைமை வந்தது. நல்லவேளையாக எதிர்ப்புரத்தில் மோட்டார்சைக்கிளில் போன ஓர் இளைஞன் துணைக்கு வந்து, பெரிய கல்லொன்றை ஓட்டோ டயருக்குள் வைத்து, ஓட்டோ பள்ளத்துக்குள் பாய்வதைத் தடுத்துவிட்டோம். துட்டகைமுனுவுக்கு நன்றி.

இத்தோடு இனி மேலே தனது வாகனம் வராதென்று அந்தப் பெண்மணி கறாராகச் சொல்லிவிட்டார். அது கூடப் பரவாயில்லை பயணம் முழுமையடையாமலே சொன்ன பணத்தை கையில் தா என்றும் அடம்பிடித்தார். ஒரு சேயின் புரட்சித் தோழி இப்படிச் செய்வதா என்று கேட்கத்தான் மனம் விரும்பியது. பிறகு ஓட்டோ பாயாமல் இருப்பதற்காக வைத்த கல்லை, என் வாய்த்துடுக்கிற்காய் எடுத்து எறிந்தார் என்றால், என் நிலை என்னவாவது என்ற பயத்தில் கேட்ட பணத்தைக் கொடுத்துவிட்டு உட அள்ளவிற்கு மேலேறினேன்.

மழை இப்போது வலுக்கத் தொடங்கிவிட்டது. ஓரு வீட்டின் ஓரத்தில் ஒதுங்கி நின்று மழை கொஞ்சம் குறைய அருவிக்குப் போனேன். மழையையும் பொருட்படுத்தாது அருவியில் குளித்துவிட்டுக் கரையேறிய சில பெண்கள் கடந்து போனார்கள். மஞ்சள் தேய்த்தா குளித்தீர்கள் எனக் கேட்கத் தேவையில்லாது அப்படி அவர்கள் மலர்ந்திருந்தார்கள். இறுதியில் இவ்வளவு கஷ்டப்பட்டு மேடேறி வந்ததன் பெரும் பேறடைந்தேன். எங்கும் குறுக்கிடும் கமலாக்களால் நமக்கு இப்போதைக்கு ஞானமடைதல் சாத்தியமில்லை என்றும் தேற்றிக்கொண்டேன்.

குமரி அள்ள போல, இதில் நீர் அவ்வளவு பெருக்கெடுத்துப் பாயவில்லை.. கொஞ்ச நேரம் அதைச் சுற்றி இரசித்துவிட்டு ஒரு ஓட்டோவை பிடித்து பெருந்தெருவுக்கு வந்து கொழும்புக்கான பேருந்துக்காய் காத்திருக்கத் தொடங்கினேன்.

*********************************


(May 10, 2023)

கார்காலக் குறிப்புகள் - 12

Monday, July 17, 2023

 பசுமையைத் தேடிய பயணங்கள் – 02


நான் தரித்து நின்ற இடம் மல்வானை இறம்புட்டான்களுக்கு இலங்கையில் பெயர் பெற்ற இடம். சில ஊர்களில் மாமரங்கள் வீட்டின் அடையாளமாய் முன்றலில் இருப்பது போல, இங்கே நான் பார்த்த அளவில் ஒவ்வொரு வீட்டு முற்றத்திலும் இறம்புட்டான் மரங்கள் நன்கு கிளை பரப்பி விரிந்து நின்றன. இந்தக் காலம் இறம்புட்டான்கள் காய்க்கின்ற காலம். எனவே மரங்களில் மென்பச்சையில் காய்கள் வரத் தொடங்கிவிட்டிருந்தன.


நீர்வீழ்ச்சிகளைப் பார்ப்பதென்றால் இன்னும் உள்ளே அவிசாவளைப் பக்கமாய் கிழக்கு நோக்கி நகரவேண்டும். விடுதி உரிமையாளர்,போகும் வழியில் பத்தினி தேவாலயத்துக்கும் போகச் சொன்னார். சாதாரண வாகனங்களில் செல்ல முடியாத ஓரு குறுக்குப் பாதையில் போனால் எளிதாகப் போய்விடமுடியும், இல்லாவிட்டால் பெருஞ்சுற்று சுற்றவேண்டும் என்றார். இப்போது நம் கவிஞர்களில் சிலர் எவ்வாறாகவோ எல்லாம் இருந்துவிட்டு, தாங்கள் தம் மனைவியை மட்டும் நேசிக்கும் பத்தினிகணவன் என்று அடிக்கடி எழுதி எமக்குக் கிச்சுமூச்சுக் காட்டுவதில்லையா? அதுபோல நானும் நல்லதொரு பத்தினிப் பக்தந்தான்,  ஏன் வீணாக கோயிலுக்குப் போய் பத்தினி தெய்யோவைக் கஷ்டப்படுத்துவான் என்று எண்ணி நேரேயே அருவிகளைப் போய்ப் பார்ப்போம் எனத் தீர்மானித்தேன்.

ஆனால் பத்தினி தெய்யோ,  நான் எந்தப் பெண்ணையும் பார்த்து சலனமடையாத இராமனின் நெருங்கிய உறவுக்காரன் என்று நினைத்துவிட்டார் போலும். தன்னைப் பார்க்காது போகக்கூடாதென்று 'ஊபர்'க்காரர்களுக்கு சித்து விளையாட்டைக் காட்டத் தொடங்கிவிட்டார். தங்கி நின்ற விடுதிப்பக்கமாய் எந்த ஊபரையும் விடமாட்டேன் என்று தெய்யோ குறுக்காய் மறித்து நின்றார். அப்படி அந்த மந்தீரிகத்திற்குள் விழாது ஒரளவு தப்பிவந்தவர்களையும் திசைதெரியாமலாக்கி தெய்யோ மடைமாற்றிக் கொண்டிருந்தார். இனியும் இயலாது என்று விடுதியில் இருந்து இறங்கி நடக்கத் தொடங்கினேன். தார் பரவாத தெருக்களில் நடந்து, வெயிலில் உக்கிரத்தால் வியர்வையும் களைப்பும் மேலோங்க ஓரிடத்தில் போய் அமர்ந்துவிட்டேன். என் பரிதாப நிலையைக் கண்ட ஒரு சிங்களக் குடும்பம், தங்களுக்குத் தெரிந்த ஓர் ஓட்டோவை அழைத்து என்னை ஏற்றிவிட்டனர்.

இனியும் பத்தினி தெய்யோவுடன் விளையாடக்கூடாதென்று
, முதலில் தெய்யோவைப் பார்த்துவிட்டு, பிறகுதான் நீர்வீழ்ச்சிகளைப் பார்ப்பதென்று தெய்வம் பிடறியில் அடித்துச் சொன்னது. தெய்யோவிடம் வெறுங்கையோடு போகக் கூடாதென்று தாகத்துக்கு இளநீர் குடித்த கடையிலே இரண்டு நெய்ச்சட்டியும்,சாம்பிராணிக் குச்சிகளையும் வாங்கிக்கொண்டு உள்ளே போனேன். புராதனம் மிளிர நம் அம்மை வீற்றிருப்பார் என்று நினைத்த எனக்கு என்னே ஏமாற்றம்! அம்மை ஒரு பொம்மையாக இருந்தார். அவர் வேறு யாருமில்லை நம் கண்ணகிதான். கையில் சிலம்புடன் வீற்றிருந்தார். ஆனாலும் இதற்கிடையிலும் அம்மையின் திருவிளையாடல் விளங்கியது. நீ இராமன் வழிவந்தவனல்ல, என்னை அழியாப் புகழ் பெறச்செய்த சிலப்பதிகாரம் எழுதியவ  இளங்கோவடிகளின் வழித்தோன்றல் நீயென எனக்கு உணர்த்தத்தான் அம்மை அங்கே அழைத்திருக்கின்றார். அம்மையே நீ வாழி!

னியும் தாமதிக்க முடியாதென சீதாவக்க தாவரவியல் பூங்காவிற்கு அருகிலிருந்த இடத்தை நோக்கிப் பயணத்தைத் தொடங்கினேன். தெய்வத்தைத் தரிசித்தால் அடுத்து சொர்க்கந்தானே என்பதால் பதிவு செய்த விடுதியின் பெயரும் Heaven De Fountain என இருந்தது. உண்மையிலே பெயருக்கேற்ற மாதிரி அவ்வளவு அழகான இடத்தில்தான் அமைந்திருந்தது. அதைச் சுற்றி அருவி மூன்று திசைகளிலும் ஓடிக் கொண்டிருந்தது. விழிகளை விரித்தால் காணுமிடங்கெங்கும் பசுமை. சலசலவென்ற நீரோடையின் சத்தம் இசை போலப் பின்னணியில் எப்போதும் ஒலித்துக் கொண்டிருந்தது. நான் தங்கியிருந்த அறையில் இருந்து பார்த்தால் குமாரி அள்ளஎன்ற அருவி, குமரியாக தளதளவென்று தூரத்தில் விழுந்து கொண்டிருந்தார்.


அங்கு நின்று இங்கு நின்று பிரச்சினைப்பட்டு
, சமாதானப்பட்டு இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வந்தற்கு, இது இயற்கையின் வெகுமதியென நினைத்துக் கொண்டேன். விரும்பியமாதிரி இயற்கையாக ஓடும் அருவியிலும் குளிக்கலாம், செயற்கையாக வடிவமைத்த நீச்சல் தடாகத்திலும் நீந்தலாம் என்று விடுதிக்காரர்கள் சொன்னார்கள். இவ்வளவு தூரம் தேடி வந்தபின் நீர்வீழ்ச்சியில் சிலிர்க்காது, யாராவது நீச்சல் குளத்தில் இறங்குவார்களா என்ன?  ஆனாலும் பயணங்களில் கிடைக்கும் எதையும் நிராகரிக்கக் கூடாதென்பது நான் கற்றுக் கொண்ட பாலபாடம். ஆகவே வாலைக்குமரிகள் நீச்சல்குளத்தில் நீச்சலடித்தால், பாக்கு நீரிணையைக் கடந்த ஆழிக்குமரன்ஆனந்தனின் வாரிசு நான் என்பதை நிரூபிக்கத் தயாரென்பதை என் தினவெடுத்ததோள்கள் சொல்லிக் கொண்டன.

இன்றைய காலத்து மனிதர்களுக்கு எல்லாமே போதாமையாக இருக்கின்றன. மேலும் பயணங்களின்போது தம் வீட்டையும் அப்படியே காவிக் கொண்டு வருகின்றவர்களாகவும் இருக்கின்றார்கள். மரங்களும் நீரோடையும் பறவைகளும் கலந்து ஒரு அருமையான சூழலில், குடித்துக் கொண்டு ஒரு கும்பல் சத்தம் போட்டுக் கொண்டிருந்தது. மது அருந்துவதோ, கொண்டாட்ட மனோநிலையில் இருப்பதோ பிரச்சினையில்லை, ஆனால் இவர்கள் Karaoke இற்கு மைக் வைத்து பாட்டுக்களைப் பாடிக் கொன்று கொண்டிருந்ந்தார்கள். அவர்களுக்கே தாங்கள் என்ன செய்கின்றோம் என்று அறியா நிலை. இதற்குள் அடிக்கடி நிமிடக் குளியலுக்காய் நீச்சல் தடாகத்தில் இறங்குவதும், ஏறுவதுமாகவும் இருந்து,  மற்றவர்கள் நிம்மதியாக நீச்சலடிக்க விடாதும் கத்திக் குழறிக் கொண்டிருந்தார்கள்.

இந்த
Karaoke சத்தம், இரண்டாம் அடுக்கின் அறைக்குள், நான் பலகணிக் கதவுகளை மூடிய பின்னும் உள்ளே அதிர்ந்து கொண்டிருந்தது. மற்றவர்களின் வெளியைப் பற்றி அக்கறை கொள்ளாது, கொஞ்ச நேரம் இப்படிச் சத்தமாய் களியாட்டம் செய்கின்றார்கள் என்றால் கூட பரவாயில்லை. நான் அந்த விடுதிக்குப் போன பிற்பகலில் இருந்து இரவுவரை அதே அலறல் சத்தத்துடன் இருந்தார்கள். ஏற்கனவே அம்பலகமவின் அடிபட்டு நொந்துவிட்டதால், இங்கே பொறுமை காப்பதென்று எண்ணி மூடிய அறைக்குள் இருந்து இயற்கையை இரசிக்கத் தொடங்கினேன். மேலும் ஸென், சந்தைக் கூச்சல்களுக்குள் தியான மனோநிலையுடன் இருப்பதுதான் முக்கியமெனவும் போதிக்கிறது.

இரைச்சல்களில் இருந்து தப்புவதற்கு குமாரி அருவிக்குப் போவதென்றாலும் கொஞ்சம் உட்பாதைக்குள்ளால் நடக்கவேண்டி இருந்தது. வெயிலும் சாய்ந்து கொண்டிருந்ததால், நீர்வீழ்ச்சி குளிரவும் தொடங்கியிருக்கும். எனவே குமாரியை அடுத்தநாள் காலையில் போய் ஆரத்தழுவது என்று பகலிலே கனவு காணத் தொடங்கினேன்.



**************

(Apr 27, 2023)

கார்காலக் குறிப்புகள் - 11

Saturday, July 15, 2023

 

பசுமை தேடிய பயணங்கள் - 01



கடற்கரைகளைத் தேடிப் போன ஒவ்வொரு பயணங்களிலும் காடுகளும், மலைகளும் கூடவே நினைவில் வந்து கொண்டிருந்தன. கடல் பிடிக்குமென்றாலும் அது தத்தளிப்பான உணர்வெழுச்சிகளைத் தந்து கொண்டிருக்கும். காடும் மலைகளும் என்னை அமைதியாக்குபவை. நீலம் எனக்குப் பிடித்த வர்ணமென்று நினைத்துகொண்டதை, மரங்களின் பசுமை பச்சைக்கு அதிக ஈர்ப்புண்டுஎன மாற்றியும் இருக்கிறது. கடல்களைக் கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டு, காடுகளையும், நீர்வீழ்ச்சிகளையும் தேடிப் போகும் ஆசை ஏற்பட்டது.

தெற்குக் கடற்கரைகளுக்குப் போக புகையிரதங்களும், பேருந்துகள் செல்ல புதிய நெடுஞ்சாலையும், கொழும்பிலிருந்து அம்பாந்தோட்டை வரை கரையோரமாக இருக்கின்றது. காடுகளையும், மலைகளையும் தேட மத்திய மாகாணங்களுக்குச் செல்வதென்றால் நல்ல வசதியுடைய வாகன வசதி வேண்டும். இயற்கையின் வனப்பு போகும் திசைதோறும் விரிந்து கிடக்கும். ஆனால் நிறுத்தி நிறுத்தி இரசித்துப் போக புகையிரதமோ/பேருந்தோ அவ்வளவு தோதுப்படாது. மேலும் இப்போதிருக்கும் இலங்கையின் பொருளாதார நிலைமைக்கும், என் கையிருப்புக்கும் தனிப்பட்ட வாகன வசதி செய்வதெல்லாம் கற்பனையில் கூட சாத்தியமில்லை.


அநேகமாக புகையிரதங்கள்/பேருந்துக்கள்தான் என் பயணத்திற்கு கைகொடுப்பவை. ஆனால் தனியார் பேருந்துகளில் நெருக்கி ஆட்களை ஏற்றுவார்கள் என்பதோடு, இருக்கைகளின் இடமும் குறுகியதாக இருக்கும். இது போதாதென்று ஏதோ பட்டத்து இளவரசியின் பல்லக்கு போகின்ற மாதிரியான பாவனையில் திரைச்சேலைகளை உள்ளே போட்டு, கொஞ்சம் இருக்கும் கண்ணாடிகளையும் மறைத்திருப்பார்கள். மூச்சுவிடவே சிலவேளைகளில் கஷ்டமாயிருக்கும். இத்தோடு எல்லாம் உங்களை சும்மா விடமாட்டோம் என்று, கோத்தபாய ஐயா பதுங்கியிருக்கும் இடம் வரை கேட்கவேண்டும் என்பது போல, காலாவதியான சிங்களப் பாட்டுக்களை அலறல் ஒலியில் போடுவார்கள் (இலங்கையில் ஹோர்னே அடிக்கமாட்டார்கள் என்று முன்னொருபொழுது எழுதிய சாரு நிவேதிதா இன்றைக்கு அல்லவா இலங்கைக்கு வருகின்றார். அவரை ஒருமுறை இந்தத் தனியார் பேருந்தில் போகச் சொல்லவேண்டும்). ஆனாலும் ஊரோடு ஒத்துவாழ வேண்டும் என்பதால் வேறு வழிகளில் இல்லாதபோது இந்தப் பேருந்துக்களில் ஏறுவதுண்டு.

பசுமையையும், நீர்வீழ்ச்சியையும் தேடிப்போக ஒரே நீண்ட பயணத்தைச் செய்யாது, நின்று நிதானித்துப் போவதாகத் தீர்மானித்து ஓரிடத்தை இணையத்தினூடு பதிவு செய்து போனேன். 'அம்பலகமஎன்ற விடுதிக்குப் போனபோது புத்தாண்டுக் கொண்டாடங்களில் அது அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. சில இடங்களில் வசதி நாம் நினைத்தற்கேற்ப இல்லாதுவிட்டாலும் வரவேற்பவர்களின் உடல் மொழியும் பேச்சும் நமக்கு உற்சாகமளிக்கும். இங்கே அந்த அதிர்வுகள் எதனையும் நான் உணரவில்லை. ஏனோதானோ என்று வரவேற்றவர்கள் ‘booking.com’ இல் பதிவு செய்ததை இரத்துச் செய்கின்றீர்களா எனக் கேட்டார்கள். வழமையாக நான் இப்படி இரத்துச் செய்வதில்லை. பரவாயில்லை, நேரே பதிவு செய்தால் அவர்களுக்கு கொமிஷன் இல்லாது முழுப்பணமுங் கிடைக்குமே என்று அதைச் செய்தேன்.

என் பெயருக்குரிய ஆவணத்திற்காக பாஸ்போர்ட்டைக் கொடுத்தேன். அறை தயாராகிவிட்டதெனச் சொன்னபோதுதான், பாஸ்போர்ட்டை அவர்கள் மீண்டும் தராதது நினைவுக்கு வந்தது. எங்கே என் பாஸ்போர்ட் என்றபோது, நீங்கள் அறையைக் காலி செய்யும்போது தருகின்றோம் என்றார்கள். எனக்கு வந்ததே கோபம், ஆனால் அதை அடக்கிக்கொண்டு அதை நகலாகவோ அல்லது போட்டோவாக எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் அசலை என்னிடம் தாருங்கள், அது தொலைந்துவிட்டால் எனக்குச் சிக்கலாகிவிடும் என்றேன். இல்லை இது இங்கு ஓர் சட்டமென்றனர். அப்படியா? நானும் இலங்கைக்குள் பல இடங்களில் பயணித்திருக்கின்றேன். அப்படியெவரும் என் பாஸ்போர்ட்டை வாங்கி வைத்ததில்லையேஎன்றேன்.

அவர்கள் திரும்பத் திரும்ப பாஸ்போர்ட்டைத் தரமாட்டோம் என்று அடம்பிடித்தார்கள். இறுதியில் இது இலங்கை முழுவதற்கான சட்டமில்லை. இங்குள்ள பொலிஸ் நிலையத்தின் கட்டளை என்றார்கள். அப்படியா, பொலிஸ் ஸ்டேசனுக்குப் போன் போடுங்கள். நான் கதைக்கின்றேன் என்றேன். இப்படியே இழுபட்டு அவர்களின் மானேஜர் எல்லாம் வந்தபின்னும் அப்படியேதான் அடம்பிடித்தார்கள். ஆனால் எனக்கு முன்பாக ஒரு குடும்பத்தினர் வந்தபோது இப்படி எந்த அடையாள அட்டை எதுவும் வாங்கி வைக்கவில்லையே, ஏனெனக் கேட்டேன்.

இனி இவர்களோடு பேசிப் பிரயோசனம் இல்லை என்ற முடிவுக்கு வந்தபோது, நீங்கள் இனவாதிகள் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டேன். நாங்கள் அனைவரும் இலங்கையர்கள், ஒரே இனத்தவர் என்றார் மானேஜர். நீங்களும், நாங்களும் ஒன்றல்ல என்றுதானே போராட்டங்கள் நடந்தன. இப்போது இதையும் செய்துவிட்டு ஒரே இனத்தவர், நாம் இலங்கையர் என்றால் முட்டாள்தனமாகத் தெரியவில்லையா என்று கூறிவிட்டு அம்பலகமத்தை விட்டு வெளியே வந்திருந்தேன்.

0000000

யணங்களில் இப்படி எதிர்பாராதாவையெல்லாம் நடக்கக் கூடியதுதான். ஆனால் அந்தத் துயர/கோப நினைவுகளுக்குள் மூழ்காமல் அடுத்து என்ன செய்வதென்பதையும் பயணங்களே நமக்குக் கற்றுத் தரும். வெளியில் வந்து அலைபேசியிலே இன்னொரு இடத்தைப் பதிவு செய்தேன். நேரமும் மதியத்தைத் தாண்டியதால், காதலிக்குக் கட்டாயம் தினம் கொடுக்க வேண்டிய முத்தத்தைப் போல பசியும் வயிற்றைப் பிறாண்டியது. இந்த இடம் எந்தத் திசையில் இருக்கின்றது என்பது பற்றி அக்கறைப்படாமல் பசுமை சுற்றியிருந்தால் மட்டுமே போதுமாக எனக்கு இருந்தது. அங்கே பேருந்து வசதிகள் இல்லை. எனவே ஊபர் மட்டுமே போகும். ஊபர் ஓட்டோவும் போகிறது போகிறது, இறுதியில் ஒரு எல்லையில் கொண்டு போய், இனி போவதற்குத் தெரு இல்லையென்ற இடத்தில் நின்றது.

இப்படித்தான் கேரளாவின் குமரகத்தில் நின்று
, இடுக்கிக்கு ஒரு இடத்தைப் பதிவு செய்துவிட்டு ஊபர் டாக்ஸியில் போகும்போதும் நடந்தது. அது மலையுச்சி. என் வாழ்வையே இங்கே கொண்டுவந்து முடிக்கத்தான் வந்தாயா என்று கெஞ்சுமளவுக்கு ஊபர் டிரைவரை அந்த இடம் வைச்சுச் செய்திருந்தது. ஆனால் அவ்வளவு அழகான இயற்கைக் காட்சி விரிகின்ற இடம். ஒருநாள் தங்க முடிவெடுத்ததை மூன்று நாட்களாக நீடித்து வேறெந்த இடத்தையும் அலைபாய்ந்து பார்க்காது, இயற்கையோடு அந்த இடம் ஒன்றிக்க வைத்தது. பல் வலி வந்ததால், ஒருநாள் மட்டும் மலையிறங்கிப் போய் அங்கே பல் வைத்தியரைப் பார்க்கவேண்டியிருந்தது. அந்தப் பெண் வைத்தியரின் பெயர் ஸக்காரியா என்று முடிந்ததால், நீங்கள் எழுத்தாளர் பால் ஸக்காரியாவின் உறவுக்காரரா என்று வலிக்கிடையிலும் அவரோடு கொஞ்சம் கடலை போடவும்முடிந்தது.

இலங்கையில் இந்த இடமும் உச்சிதான், பாதை முடிவடையும் இடத்தில்தான் என்றாலும் அந்தளவு உயரத்தில் இருக்கவில்லை. விடுதியின் அறைகளும் முழுக்கண்ணாடிகளால் சுவராக்கப்பட்டிருந்தன என்பதால் அறையே ஒரு காட்டின் நடுவில் இருப்பது போன்ற உணர்வைத் தந்தது. அருகில் எந்த உணவுக்கடையும் இல்லை என்பதால் அவர்களே உணவகமும் வைத்திருந்தார்கள்.  குளத்தில் பிடித்த மீனோடு நல்ல சாப்பாடும் சுடச் சுடக் கிடைத்தது.  அதை நடத்துபவரோடு அந்தச் சாப்பாடுடன் உரையாடச் சந்தர்ப்பம் வாய்த்தது.

அவர் ஒரு பொறியியலாளராக இலங்கை தொலைபேசி நிறுவனத்தில் வேலை செய்து
 இளைப்பாறிவிட்டு, தனது ஓய்வுக்காலத்தை வீணாக்காமல் அவரே வரைகலை செய்து இதை நிர்மாணித்திருக்கின்றார். சின்னதாய் இருந்த காணியில் தொடங்கி, பக்கத்து சிறு நிலங்களையும் வாங்கி இணைத்து இப்போது ஆறேழு அறைகள் இருக்கின்றன. குசினி முற்றிலும் ஊர்ச் சமையலறை போல் மண்ணாலும், மட்டையாலும் அமைக்கப்பட்டிருந்தது. அந்த இடத்துக்கு கொஞ்சம் விலை கூடத்தான், ஆனால் இடத்தின் அமைவும், உபசரிப்பும் விலைமதிப்பற்றவை. எனக்கும் இப்படி காட்டின் நடுவில், மரங்கள் சூழ ஒரு வீட்டில் வாழ ஆசை என்றேன். 'யாருடைய தயவுக்காகவும் காத்திராதே, நீயே அதை வடிவமைத்துக் கொள்வதுதான் நல்லது' என்றார். பக்கத்தில் ஒரு பத்தினி தெய்யோ இருக்கின்றார். அங்கே போய் அவரைப் பிரார்த்தித்தால் நினைத்தவை நடந்தேறும் என வழியும் காட்டினார் அந்தக் கிறிஸ்தவ நண்பர்.

ஆகவே வீடமைக்கின்றேனோ இல்லையோ, ஒரு பர்ணசாலையாவது அமைத்து இப்படியான ஓரிடத்தில் ஒருநாள் 
கொஞ்சக் காலமாவது வாழத்தான் போகின்றேன். தீபுவின் கவிதையைப் போல  அன்று நான் யோகியாகவோ அல்லது போகியாகவோ எப்படி வாழ்வது என்பது அந்த நேரத்துக்குரிய நியாயமாக இருக்கட்டும்.

"இன்னும் எத்தனை காலம்?"
என்கிற
ஒரே ஒரு வாக்கியம்
என்னைப் பாதி யோகியாகவும்
பாதி போகியாகவும்
மாற்றியது.
பிறகு
எனது உடலில்
ஒரு பாதி சொர்க்கத்துக்கும்,
மறுபாதி நரகத்துக்கும்,
நடந்து நடந்து களைத்தன.
~தீபு


*******************


(Mar, 2023)

கார்காலக் குறிப்புகள் - 10

Saturday, July 08, 2023

 

ரு காலத்தில் புலம்பெயர்ந்தவர்கள் எழுதிய அகதிக் கோரிக்கையெல்லாம் யாழ் மேயராக இருந்த "அல்பிரட் துரையப்பாவின் கொலை"யைச் சுற்றியிருந்தன. அகதி விண்ணப்பங்களில் ஒரே மாதிரியான கதையைப் பார்த்த அதிகாரிகள் எத்தனை துரையப்பாக்கள் இலங்கையில் கொல்லப்பட்டார்கள் என்று திகைத்ததாய் பல்வேறு புனைவுகள் இருக்கின்றன. 'எல்லாக் கதைகளும் ஏற்கனவே சொல்லப்பட்டு விட்டனஎன்ற பின்னமைப்பியலை நடைமுறை வாழ்க்கையில் பரீட்சித்துப் பார்த்தவர்கள் நம் புகலிடத் தமிழர்!

"அல்பிரட் துரையப்பா முதல் காமினி (திஸநாயக்கா) வரை" என்று "தினமுரசு" பத்திரிகையில் வாராந்தம் வந்த தொடரைஅன்று கொழும்பில் இருந்த காலங்களில் அடிபட்டு வாசித்துநானொரு புலம்பெயர் தமிழனாக பிற்காலத்தில் ஆவதற்கான தகுதிகளை என் சிறுவயதிகளிலேயே நானும் வளர்த்திருக்கின்றேன் என்பதும் ஆச்சரியமானதுதான். அந்தத் தொடரை எழுதியவரும்அதன் பொறுப்பாசிரியருமான ரமேஷ் அதே "தோழர்"களின் இயக்கத்தாலே பின்னர் கொல்லப்பட்டதும் அவலமானது.

அவ்வாறுகடந்த ஒரு தசாப்தகாலமாய் "அண்ணைக்குப் பக்கத்தில் நின்றவர்கள்" என்றொரு புதிய கதையாடல் பிரபல்யமாகி இருக்கின்றது. உண்மையில் அவரோடு கடைசிக்காலத்தில் பக்கத்தில் இருந்தவர்கள் மே பதினேழோடு களச்சாவைக் கண்டவர்களாகவோ அல்லது இன்னும் இலங்கையில் இருக்கும் அடக்குமுறையின் நிமித்தம் மெளனமாகவோ இருக்கவேறு பலர் இந்தப் புனைவுகளை கட்டவிழ்க்கத் தொடங்கினார்கள் ( இது தெரிதா சொல்லும் "கட்டவிழ்ப்பு" அல்ல).

அவ்வாறே சிங்கள வம்சம் சிங்கபாகு என்ற சிங்கத்திற்குப் பிறந்த விஜயனின் வருகையுடன் தொடங்குகின்றது என்ற மகாவம்ச புனைவைப் போல, "தம்பி இன்னமும் இருக்கின்றார்" என்று காலத்துக் காலம் தமிழ்நாட்டவர் சிலர் கட்டமைக்கும் கதைகளும் இருக்கின்றன.

இதுவரை சிங்களவர்கள் தமக்கான அனைத்துப் புனைவுகளும் மகாவம்சத்திலே இருக்கின்றதுஇனி புதுப்புனைவுகள் வேண்டாம் என்றுதான் அமைதியாக இருந்தார்கள். புலம்பெயர்ந்தவர்களின் மீள்வருகையாலோஇல்லை இந்தியர்களின் 'அணையுடைத்துப் பாயும்' இலங்கைச் சுற்றுலாப் பயணங்களாலோ அவர்களும் இந்தப் புனைவுக் கடலுக்குள் இப்போது குதிக்கத் தொடங்கிவிட்டார்கள். "இராவணன் ஒரு சிங்கள அரசன்" என்றும்இதுவரை இராவணனின் தொன்மத்து நீட்சியாக தமிழர் பிரதேசத்தில் இருந்த கன்னியா வெந்நீரூற்றுக்கள், "அனுராதபுரத்து பெளத்தத்தின் அடையாளங்கள்" எனவும் அவர்களும் புனவுகளை அவிழ்த்து விடத் தொடங்கிவிட்டார்கள்.

இவை கூடப் பரவாயில்லை. கடந்த மூன்று இலங்கைப் பயணங்களில் நானேறும் ஓட்டோக்காரர்கள்/டாக்ஸிக்காரர்களில் அரைவாசிப் பேர்கள் தாங்கள் இராணுவத்தில் இருந்தனர் என்கின்றார்கள். அதிலும் பலரிடம் இன்னும் தோண்டிக் கேட்டால், "நாங்கள் அதுபற்றி அதிகம் சொல்லமுடியாதுநாங்கள் இண்டலிஜென்சில் இருந்தோம்" என்கின்றார்கள். நாடு 'திவாலாகி'ப் போனாலும் இராணுவ பட்ஜெட்டையோஇலட்சக்கணக்கிலிருக்கும் இராணுவத்தையோ குறைக்கமாட்டோம் என்று அடம்பிடிக்கும் இலங்கையரசுஇந்த இராணுவக்காரர்களை மட்டும் ஏன் வெயில் உருக்கி எறிக்கும் நேரங்களில் ஓட்டோ ஓட விட்டிருக்கின்றார்களென என் நெஞ்சம் பதைபதைப்பதுண்டு. முப்பது வருடங்களாக நீடித்த யுத்தத்தை 'மனித உரிமைகள் மீறாமல்' சுமுகமாய் முடித்துக் கொடுத்த இலங்கை இராணுவத்துக்கு, 'செய்ந்நன்றி' கொன்ற அரசு இது.

நேற்றுக்கூட மாத்தறையில் ஏறிய டாக்சிக்காரர் நானும் உளவுத்துறைதான்இப்போது பூஸாவில் வேலை செய்து கொண்டிருக்கின்றேன் என்றார். அதிலும் முல்லைத்தீவு தமிழை விட யாழ் தமிழ் அருமையானது என்று எனக்கு வகுப்பு எடுத்தார். "டேய் நீ யாழ்ப்பாணத்துக்குப் போய் இப்ப பாரடாஅங்கே பெரும்பாலும் பேசுவது சென்னைத் தமிழடா" என்று சொல்ல வாயரித்தாலும்ஏற்கனவே எயார்போர்ட்டில் புகைத்த வாயை சூடாய்த் திறந்து பட்டபாடு போதும் என்பதால்அப்படியா ஜீஓம் சேர் என்று சலாம் போட்டபடி வந்துகொழும்புக்கான பஸ்செடுத்தேன்.

உலகத்திலேயே ஒருத்தன் உளவுத்துறையில் வேலை செய்தால்நான் உளவுத்துறையில் இருக்கின்றேன் என்று பொதுவெளியில் பெருமையாகச் சொல்கின்ற ஒரேயொரு நாடாக இலங்கை மட்டுந்தான் இருக்கும் போலும். இது கூடப் பரவாயில்லை. இன்னும் நான்கைந்து வருடங்களில் இவர்கள் நாங்கள்தான் கொடுங்கோலர் மகிந்தாவையும்கோத்தாவையும் பாராளுமன்றத்தில் இருந்து வெளியே அனுப்பி வைத்த உளவுத்துறை/ஆர்மிக்காரங்கள் என்று என்னென்ன கதைசொல்லப் போகின்றார்களோஅதையெல்லாம் நான் எப்படியெல்லாம் தாங்கப் போகின்றேனோ தெரியவில்லை.


இந்த எல்லாப் புனைவுகளையும் கேட்பதிலிருந்து தப்ப எனக்கிருக்கும் சில தேர்வுகள்:


-மீண்டும் இலங்கைக் குடிமகனாக மாறி என்னையொரு தேசப்பக்தன் என நிரூபிப்பது (One Nation One People, ஹொந்தாய் ஹொந்தாய் போம ஹொந்தாய்)

-இலங்கைக்குள் எங்கு பயணித்தாலும் இனி ஓட்டோ எடுக்காமல் இருப்பது 

-நானும்ஏதேனுமொரு தமிழ் இயக்கத்தின் புலம்பெயர் உளவுத்துறைக்காரன் என ஓர் எதிர்க்கதையாடலை உருவாக்கல்


*************


(Mar 27, 2023)