கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

திருக்கோணமலை

Monday, July 03, 2023

 

நண்பகல் நேரத்து மயக்கம்

********************

திருக்கோணமலையில் நின்றபோது 'விடுதலை' படத்தை முதல் காட்சியிலே பார்க்க விருப்பம் ஏற்பட்டது. பத்துதலை, விடுதலை என்று நிறையத் தலைகள் ஒரே நேரத்தில் வெளிவந்ததால் எந்தக் காட்சி எப்போது ஓடுகின்றது என இந்தத் தறுதலைக்கும் குழப்பம் வந்தது. 5 நிமிட நடையில் அருகில் நெல்சன் தியேட்டர் இருக்க, நேரேயே போய் கேட்கலாமென காலை 10.30 மணிக்காட்சிக்குப் புறப்பட்டேன்.

இதற்குள் காளிகோயில் திருவிழாவிற்கு வரும் அடியார்க்கு எங்கள் சித்தி குடும்பம் தினம் மோர் ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தது. மோரைக் கரைத்தல், வெங்காயம், மிளகாய் வெட்டிக் கலத்தெனும் கடின வேலைகளையெல்லாம் மற்றவர்கள் செய்தார்கள். நான் மோரை அள்ளி ஊற்றும் திருபணியை மட்டும் செய்து பிறருக்கு கடும் தன்னார்வலர் போலப் படங்காட்டினேன். கூடவே உதவிக்கு இரண்டு பெண்கள் இருந்ததால், வெயில் சுட்டெரித்தாலும் மனது மோரைப் போல் குளிர்மையாக இருந்தது. அம்மாளாச்சி, தன் அணுக்கத் தொண்டனுக்குக் கொடுக்கும் அருள் என்பது இதுதானோ?

அன்று காலை தொடங்கிய மோர் அள்ளியூற்றும் அருட்பணியை முடிக்கவே பத்தரைக்கு மேலே ஆகிவிட்டது.

இதற்கிடையில் ஒருத்தன் வெளிவீதியில் அடியடித்த மணல் உடலோடு வந்து அடிக்கடி மோர் வாங்கிக் குடித்தான். நான் என்ன ஓர் பக்தி, உடலைக் கூடக் கழுவாமல் மண்ணோடு வந்து தாகத்தோடு மோர் வாங்கிக் குடிக்கின்றானே என வியக்க, அருகில் இருந்த பெண்களோ, 'அண்ணா, இவன் மோருக்காகவே உடம்பில் சும்மா மணலை அள்ளிப்பூசிக்கொண்டு வந்திருக்கின்றான்' என்று இப்படிப்பட்ட ஆண் இனத்தில் நான் பிறந்தற்காகப் பெருமிதப்பட்டதையே உடைத்து நொறுக்கினார்கள்.

உண்மையாக உழைப்பவர்கள் அதன் பெருமிதத்தைக் காட்ட, வியர்வைத்துளிகளைக் காட்டியபடி எங்கும் செல்லாம், என்னைப் போன்ற மோர் ஊற்றியே முதுகுவலி கண்டவர்கள் அப்படி வியர்வையுடன் வெளியே செல்வது உழைப்பவர்க்கே அவமானம். ஆகவே ஓடிப்போய் குளித்துவிட்டு நெல்சன் தியேட்டருக்குப் போக 10.45 ஆகிவிட்டது. இவ்வளவு பெரிய தியேட்டரைக் கட்டிவிட்டு உள்ளே போகவும், ரிக்கெட் எடுக்கவும் ஒரு சுரங்கப்பாதை போல ஒற்றை இருட்டுப் பாதை வைத்திருந்தது தெரியாமல், 'எங்கையடா என்ரன்ஸு' என்று நான் குழப்பிப் போனேன்.

அப்படி தியேட்டர் தெருவுக்குள் திரும்பும்போது ஒரு இளைஞனைக் கண்டேன். சுட்டெரிக்கும் வெயிலுக்குள் மேலாடை இல்லாது குறுக்கும் மறுக்குமாகப் பெருந் தெருவில் திரிந்து கொண்டிருந்தார். ஆள் திடகாத்திரமாகவும்
, நல்ல உயரமாகவும் இருந்தார். ஏதும் வம்புக்குப் போனால் நம்ம பத்துதலசிம்பு போன்ற பத்துப்பேரையே அடித்துத் துவைக்கக் கூடிய 'ஆஜானுபாவராக'த் தெரிந்தார். நான் ஒருமாதிரி இருண்ட பாதையைக் கண்டுபிடித்து நெல்சன் தியேட்டக்காரர்களிடம் விடுதலைக்கு ரிக்கெட் கேட்க, இப்போது 'பத்துதல' தான் இரண்டரைக்குத்தான் 'விடுதலை' என்றனர். உடனே காளி கோயிலடிக்குத் திரும்பிப்போகவும் வெட்கமாயிருந்தது. விடுதலைக்கு விடுவிடுவென்று மோர் ஊற்றிப் போனவர், விரைவிலே விடுதலையாகி அந்த 'அடியடித்த மணல்மேனியன்' போல வந்துவிட்டாரென்று இந்தப் பெண்களே என்னை நக்கலடிப்பார்கள். எனவே தியேட்டருக்கு வெளியே வந்து ஒரு பெருமரத்தடியில் இருந்து தெருவை வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன்.

இப்போதும் அந்த இளைஞர் அவ்வளவு உக்கிர வெயிலுக்குள் எதையோ தன்பாட்டில் பேசியபடி, குறுக்கும் மறுக்குமாகத் திரிந்து கொண்டிருந்தார். அவரோடு வந்தவர் என அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர் என்னோடு பேசத் தொடங்கினார். தானும், அந்த திடகாத்திர இளைஞரும் படம் பார்க்க வந்தோம். ஆனால் தியேட்டருக்குள் போனவுடன் படம் பார்க்கப் பிடிக்கவில்லை என்று அவர் வெளியே வந்துவிட்டார். அது கூட பரவாயில்லை. இப்போது மேற்சட்டையைக் கழற்றிவிட்டு இப்படி ரோட்டில் திரிகிறார், என்ன செய்வது என்றும் தெரியவில்லை என்று கவலையுடன் சொன்னார்.

அந்த திடகாத்திர இளைஞரின் பெற்றோர் இவரோடு படம் பார்க்க அந்த இளைஞனை ஓட்டோவில் அனுப்பத்தான் இப்படி அவர் மேற்சட்டையைக் கழற்றிவிட்டு அங்கும் இங்குமாக அலையத் தொடங்கியிருக்கிறார். எனக்கு என்ன சொல்வதென்றும் தெரியவில்லை. எப்படியெனினும் இவரை அவரின் பெற்றோரிடம் கொண்டுபோய் ஒப்படைத்தால்தான் தனக்கு நிம்மதி என்றும்
, அவர்களுக்குத்தான் இப்போது தொலைபேசியிருக்கின்றேன் என்றார் இவர்.

அவர் வீட்டிலிருந்து வரும்போதும் ஏதேனும் இப்படி வித்தியாசமான சமிக்ஞைகள் காட்டினாரா எனக் கேட்டேன். எனக்கு அவரைப் பற்றி அவ்வளவு தெரியாது, அந்த இளைஞன் கனடாவிலிருந்து வந்திருக்கின்றார் எனச் சொன்னார். கனடாவிலிருந்து வருகின்றவர்கள் எல்லோருமே என்னை மாதிரி ஒரு மார்க்கமாகவே இருக்கின்றார்கள் என்பதால் நானும் கனடாதான் என்று இவரிடம் சொல்லாமல் தவிர்த்தேன்.

ஆனால் ஓட்டோவில் வரும்போது அல்லாவைப் பற்றி எதிர்மறையாகக் கதைத்துக் கொண்டிருந்தார். நீங்களே சொல்லுங்கள் அல்லாஹ்தானே இந்த உலகத்தைப் படைத்தார், ஆனால் இவர் அதை மறுத்து அப்படியில்லை என்று சொல்லிக் கொண்டுவந்தார் என்றார். நான் இந்த விவாதத்திற்குள் போக விரும்பாது அவரவர்க்கு அவரவர் நம்பிக்கை. அதன் வழி ஒவ்வொருவரையும் விட்டுவிட்டால் நமக்கும் நிம்மதி என்று சொல்லி விட்டு, அந்த இளைஞரை வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு செல்லும் வழியைப் பார்ப்போம் என்றேன்.

சிலவேளை இப்படி அந்த இளைஞர் தன்போக்கில் தெருவில் திரிய, பொலிஸ் ஏதாவது வந்து கேட்டால் என்ன சொல்வது என்பது பற்றித்தான் நாங்கள் இரண்டுபேரும் பயந்தோம். கொஞ்சம் பதற்றமாகவும் இருக்கத்தான் செய்தது. நல்லவேளையாக கொஞ்ச நேரத்தில் அந்த இளைஞரின் வாப்பா யாரோ ஒருவரை ஆட்டோவில் அனுப்ப, இளைஞர் மிக நிதானமாக தியேட்டருக்குப் பக்கத்தில் இருந்த மரத்தில் கழற்றியெறிந்த ஷேர்ட்டை எடுத்து அணிந்துகொண்டு, எதுவுமே நடக்காததுபோல ஓட்டோவிற்குள் ஏறி எனக்குக் கையசைத்தார். நானும் அவர்களிடம் இருந்து விடைபெற்று காளி கோயிலடியை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

எல்லாமே நடந்தன, ஆனால் எதுவுமே நிகழவில்லை போல அந்தப் பொழுதை, காலமென்ற கருந்துளை கடந்தகாலமாய் உட்செரித்துப் போயிற்று. வாழ்வில் சில சந்தர்ப்பங்களில் நாமேன் நமக்குத் துளியும் சம்பந்தமில்லாத விடயங்களுக்குச் சாட்சியமாக இருக்கின்றோமென்பதும் புரிவதில்லை.

*********************


(Apr 21, 2023)


0 comments: