கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 31

Saturday, April 27, 2024

 -காதலர் தினம்-

 ஓவியங்கள்: சின்மயா



ன்று காலையிலேயே ஒரு டசின் ரோஜாப்பூக்கள் வாங்கப் போனபோது, கடையில் வேலை செய்த பெண் you are a good man என்றார். எப்போதாவது அரிதாகத்தான் வாழ்வில்  நான் நல்ல மனிதன் என்று சொல்லக் கேட்பதால் அந்த வார்த்தையை அப்படியே எடுத்திருக்கலாம். இது என் காதலிக்கு இல்லை என் கம்பனிக்கு என்றேன். ரோஜா மலர்கள் போல மலர்ந்த அந்த முகம் கனடாப் பனிக்குளிர் போலச் சுருங்கிவிட்டது.


இப்போதெல்லாம் இளையவர்கள் எப்படி காதல்களைக் கொண்டாடுகின்றார்களோ தெரியாது. ஆனால் என் இளமைக்காலங்களில் நான் மகிழ்வாகக் கொண்டாடியிருக்கின்றேன். ஒவ்வொரு காதலும் துயரமாகப் பின்னாட்களில் (அது இயல்பன்றோ) மாறினாலும் காதல்களின் நிமித்தம் ஒருபோதும் சலித்ததில்லை. பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது எனக்கொரு காதல் வந்திருந்தது. ஆனால் நாமிருவரும் வெவ்வேறு பல்கலைக்கழகங்கள். காதலியைக் காண்பதென்றால் 400 கிலோமீற்றர்கள் பயணித்துச் சென்று பார்க்க வேண்டும். எப்போதும் என் காதல்கள் தொலைதூரக் காதல்கள்தான். நகரம்  தாண்டி மட்டுமல்ல‌ கடல்கள் தாண்டி கண்டங்கள் தாண்டியவை. ஏழு கடல், ஏழு மலை தாண்டி ஒரு கிளியிடம் என் உயிர் இருக்குமென்று அரக்கர்கள்  நம் கதைகளில் சொல்வதெல்லாம் பொய். அவ்வளவு தொலைவில் இருப்பது அரக்கர்களின் உயிரல்ல, காதலிகளின் ஆழங்காண முடியா இதயங்கள் என்பேன் நான் உறுதியாய்.

என் பல்கலைக்கழகக் காதலியை காதலிக்கத் தொடங்கிவிட்டேன் என்றாலும், நான் அப்போது அவரை நேரில் சந்திக்கவில்லை. எனவே சில மாதங்களின்  பின் வந்த 'காதலர் தினத்தில்' நேரடியாகச் சந்திப்பதென நாம் முடிவு செய்தோம். கனடாவில் பல்கலைக்கழகங்களில் பெப்ரவரியில் ஒரு கிழமை பரிட்சைக்குப் படிப்பதற்கென‌ விடுமுறை விடுவார்கள். ரொறொண்டோ நகருக்கு வந்து அண்ணாவின் வீட்டில் நின்றுதான் காதலியைச் சந்திக்க முடியும். ஒரு மாதிரியாக அன்றையகாலத்தில் 'டிரெண்டாக' இருந்த பெரிய சிவப்பு டெடியையும், ஒரு டசின் ரோஜாக்களையும் முதல் நாளிலேயே வாங்கிவிட்டேன். ஆனால் வீட்டுக்குத் தெரியாமல் மறைக்க வேண்டும். (எத்தனை கழுதை வயதானாலும் ஆண்களுக்கு இதே பிரச்சினை. கல்யாணமான சில ஆண்கள்,   தம் மனைவிக்குத் தெரியாமல் காதலிக்கு ரோஜாக்கள் கொடுக்க இப்படித்தான் இப்போதும் அவதிப்படுகின்றார்கள் என்றும் கேள்விப்படுகின்றேன்).

இங்கே நம்மவர்கள் பூஜையறையாகப் பாவிக்கும் ஒரு அலுமாரிக்குக் கீழே என் புனிதமான காதல் வெகுமதிகளை ஒளித்து வைத்துவிட்டேன். திரிஷ்யம் படத்தில் இறந்த உடலை, கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் பொலிஸ் ஸ்டேனிலேயே புதைக்கும் மோகன்லாலின் கிரிமினல் மூளையெல்லாம் என் காதலின் முன் பிச்சையெடுக்க வேண்டும். 



டுத்த நாள் காதலர் தினத்தன்று காதலியை அவரின் பல்கலைக்கழகத்தில் சந்திக்கின்றேன். ஒரு அமைதியான புராதனமான கட்டிடம். இப்போதும் அது நன்கு நினைவிருக்கின்றது. அவருக்கு என்னை முதல் சந்திப்பதில் இருக்கும் பதற்றத்தில் நான் கொடுத்த ரோஜாக்கள் பத்தா பன்னிரண்டா என்று எண்ண நேரமிருக்கவில்லை.. 'இப்படியா கொத்தாக கொண்டு வந்து ரோஜாக்களைத் தருவது' என்று எனக்குப் பேச்சு விழுந்தது. பத்துத்தலை இராவணன் போல, நீங்கள் ஒருவரே பன்னிரண்டு காதலிகளுக்குச் சமமென்று குறியீடாகத்தான் இப்படித் தருகின்றேன் என்று சொல்ல ஆசை இருந்தது. ஆனால் வார்த்தைகள் வரவில்லை.

இறுதியாய்ச் சந்திப்பு முடிந்தபோது டெடியை எப்படியோ அவர் தனது புத்தகப் பையினுள் அமுக்கி அடக்கிவிட்டார். ரோஜாப்பூக்களை வீட்டுக்குக் கொண்டுபோனால் அதை தன் இறுதியஞ்சலி மலர்வளையமாகத்தான் வைக்கவேண்டி வருமென்று சொல்லி, அவ்வளவு ரோஜாக்களையும் குப்பைத் தொட்டிக்குள் எறிந்துவிட்டார். மானமுள்ள ஆல்பா ஆணாக இருந்தால் அப்போதே நீ அந்தக் காதலை முறித்திருக்கவேண்டுமென நீங்கள் சொல்வது கேட்கின்றது. ஆனால் எப்படியோ இரண்டு வருடங்களுக்கு அந்த காதல் நீண்டது ஒரு வரலாற்றுச் சோகந்தான். எனக்கு மட்டுமில்லை, அவருக்குந்தான்!


இந்த ரோஜாக்கொத்து நிகழ்வுக்கு முன் சற்றுப் பின்னோக்கிப்ப் போனால், என் உயர்கல்லூரிக் காலம் தட்டுப்படும். அப்போதுதான் கனடாவுக்கு வந்தே ஒன்றிரண்டு வருடங்கள் இருக்கும். அப்போதும்... (நீங்கள் நினைப்பது சரிதான்) ஒரு குறுங்காதல் வந்திருந்தது. அது காதலே இல்லையென்று என் பள்ளிக்கால நண்பர்கள் இப்போதும் அடித்துச் சொல்வார்கள். ஆனால் அது எனக்குக் காதலேதான். இல்லாவிட்டால் அது உடைந்தபோது (அல்லது நிராகரிக்கப்பட்டபோது) தற்கொலைவரை போயிருக்கமாட்டேன். அந்தப் பதின்மக் காதலிக்கு இப்படி ஒரு காதலர் தினத்தில் நம் கையில் கிடைத்த‌ காசுக்கேற்ப ஒரு ரோஜாவும், ஒரு வாழ்த்தட்டையும் வாங்கி கொடுப்பதற்காய் வைத்திருந்தேன். வீட்டில் இருந்து என் காதல் உள்ளத்தை அழகாக வாழ்த்தட்டையில் வரைய முடியாதென்பதால், பள்ளிக்கு விடிகாலையிலே போய் ரோஜாவும் அட்டையுமாக எதையோ எழுதிக் கொண்டிருந்தேன். எனது வகுப்பு ஆசிரியர் அதைக் கண்டுவிட்டார். 'நடக்கட்டும் நடக்கட்டும்' எனச் சொல்லியபடி ஒரு புன்னகையால் கடந்துபோனார். இலங்கையில் என்றால் இதற்காக என்னைப் பாடசாலையில் இருந்தே துரத்தியிருப்பார்கள். மேலும் எங்கள் பாடசாலையில் அப்போது 'அநாமதேயமாக' காதலர் தினமன்று எதையாவது அனுப்பிக் காதலை வளர்க்கவெல்லாம் அனுமதிப்பார்கள். அதாவது வகுப்பு நடக்கும்போது காதல் விருப்புக்கள் வெகுமதியுடன் எல்லாம் வந்து சேரும்.

நான் ஒற்றை ரோஜாவும், வாழ்த்தட்டையும் எழுதிக் கொடுத்த அந்த பதின்மக் காதல் இரண்டு வருடங்கள் கூட‌ அல்ல, இரண்டு மாதங்களிலேயே பள்ளியிலேயே விடைபெற்றுப் போனது பற்றியெல்லாம் உங்களுக்கு நீட்டி முழங்கத் தேவையில்லை. நீங்கள் அதை நன்கே அறிவீர்கள்!

இன்று எங்கள் நிறுவனத்தில் காதலர் தினத்தின் பொருட்டு கிளைண்ட்களுக்கு ஏதோ சமூகவலைத்தளத்தில் போட்டிவைத்து பரிசொன்று கொடுக்கின்றார்கள். புத்துணர்வான ரோஜாக்களை நீதான் காலையில் சென்றுவாங்கி வரவேண்டுமென என்னை அனுப்பிவிட்டார்கள். வேலையில் செய்வது எல்லாமே ஆணிபிடுங்குகின்ற எதற்கும் உதவாத வேலைதான். இப்படி ரோஜாப்பூக்களை வாங்கி யாரோ ஒரு முகம் புன்னகைப்பதைப் பார்ப்பது எல்லாவற்றையும் விடப் பெறுமதியானதுதானே. எனவே பூச்சியத்துக்குக் கீழே 15 ஆக கடும்குளிர் இருந்தபோதும் மன்மதனின் ரதிக்குக் கைப்பிள்ளையாகப் போனேன்.

ஆமாம், அது சரி இதையெல்லாம் ஏன் இப்போது எழுதிக் கொண்டிருக்கின்றேன். ஒரு ஆல்பா ஆணை சும்மா போகின்றபோக்கில் ஒருவர் சொன்ன you are a good man அருட்டிவிட்டது போல.  

ஆனாலும் காதலிப்பதை மறந்துவிடாதீர்கள். அதற்காய் கர்த்தர் அயல்வீட்டுக்காரனையும் நேசிக்கச் சொன்னார் என்பதற்காக பக்கத்துவீட்டு கல்யாணமான பெண்ணையெல்லாம் நேசிப்பதாக அடம்பிடிக்கக் கூடாது. அப்படி நினைப்பு வந்தால் தலையில் தேசிக்காயை நன்கு தேய்த்துக்கொள்ளவும் அல்லது பனிக்குள் தனியே உருண்டு புரண்டு கொள்ளவும்.


******

(Feb 14, 2024)

0 comments: