கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

திரைப்படங்கள் குறித்த சில குறிப்புகள்..

Sunday, April 28, 2024

  (ஓவியங்கள்: ஊக்ரா) 

 

னது அண்மைக்கால பதிவுகளை ஒரு தமிழ்நாட்டு இயக்குநர் வாசித்திருக்கின்றார் போலும். முக்கியமாக ப்யூகோவ்ஸ்கி பற்றியும், திரைப்படங்கள் குறித்தும் நான் எழுதியது அவருக்குப் பிடித்திருந்தது. எனக்கு அவரின் தொடர்பு எண்ணை அனுப்பியதோடல்லாது, voice message ம் விட்டிருந்தார். எனக்கு அவர் பிடித்த நெறியாளர் மட்டுமில்லாது, அவரின் சினிமா/இலக்கியம் சம்பந்தப்பட்ட விடயங்களையும் நான் பின் தொடர்ந்து கொண்டிருப்பவன் என்பதால் அவரது அழைப்பு ஒரு இனிய அதிர்ச்சியாக இருந்தது. நேரமிருக்கும்போது பேசுவோம், உங்களின் திரைக்கதையோடு சேர்ந்து வேலை செய்வோம் என்று அழைத்திருந்தார். அவரோடு சேர்ந்து வேலை செய்வதற்குக் காலம் கனியுமா இல்லையா என்பதை எதிர்காலத்துக்கு விட்டாலும், இதை ஏன் சொல்கின்றேன் என்றால், எழுத்து அழைத்துச் செல்லும் வியப்பான திசைகளைப் பற்றிக் குறிப்பிடத்தான்.

நேற்று வேலையால் வந்த களைப்பு இருந்தாலும் (இந்த வேலை என் நேரத்தையும், மனதையும் அடிவரை உறிஞ்சி எடுத்து சோர்வுறச் செய்தாலும்) ஒரு நண்பரின் தொலைபேசி அழைப்புக்குப் பதில் அழைப்பு எடுத்திருந்தேன். ஏதேதோ சொல்லமுடியாத காரணங்களால் தனித்திருப்பவர்கள் மீது எனக்கு அதீத ஈர்ப்புண்டு. நண்பர் தனது இளமைக்காலத்தில் பார்த்த சிங்களப் படங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். அவை பெரும்பாலும் கறுப்பு-வெள்ளையானவை. ஆனால் அந்தக் காட்சிகள் அவரிடம் இவ்வளவு தசாப்தங்கள் ஆனபிறகும் மறக்காமல் இருக்க, அவற்றையெல்லாம் விரிவாக நினைவுபடுத்த அவரால் முடிந்தது. இத்தனைக்கும் அவருக்குச் சிங்களம் தெரியாது. திரைப்படத்தின் மொழி தெரியாமலே அத்திரைப்படங்கள் கவர்ந்திருக்கின்றன மட்டுமில்லை, இத்திரைப்படங்களே தன்னை எழுத்து, இன்னபிற கலைகளுக்கும் கைகோர்த்து அழைத்துச் சென்றன என்றார். இப்போது தானெழுதும் எதற்கும், இந்த 'மொழி' தெரியாத திரைப்படங்களே அடிப்படைக் காரணமென நெகிழ்ந்தார். அப்படியெனில் திரை என்னும் காட்சிமொழி எவ்வளவு வீரியமானது என்பதை நாம் புரிந்து கொள்ளமுடியும்.

இலங்கையில் நின்றபோது நண்பர் இளங்கோ ராம் தனது திரைப்படமான 'Tentigo' ஐ எனக்கான தனிப்பட்ட காட்சியாகத் திரையிட்டுக் காட்டியிருந்தார். இத்திரைப்படத்தின் கதை என்பது கொஞ்சம் 'ரிஸ்கி'யானது. பார்வையாளர் அதன் முக்கிய கதையிழையைத் தொடக்கத்திலேயே நிராகரித்துவிட்டால், முழுத்திரைப்படமே அபத்தமாகிப் போய்விடும். கத்தியில் கால் வைத்து நடக்கும் கதையில் திரைக்கதை வலுவாகக் கட்டியமைக்கப்பட்டதால் என்னால் முழுத்திரைப்படத்தோடும் தொடர்ந்து பயணிக்க முடிந்தது. இப்போது அது Tallinn, Glasgow போன்ற இடங்களில் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சில இடங்களில் அதற்கு விருதுகளும் கிடைத்திருக்கின்றன. முற்றுமுழுதாக சிங்களக் கலைஞர்கள் நடித்த அந்த சிங்களத் திரைப்படத்தை நான் அவர்களின் வாழ்வியல் தெரிந்த ஒருவனைப் போல இருந்து இரசித்தேன். விரைவில் இளங்கோ ராம் இந்தியாவிலும் சென்று திரைப்படத்தை இயக்கவிருக்கின்றார் என நினைக்கின்றேன். பிரசன்னா விதானகேயும் இப்போது மலையாள நடிகர்களை வைத்து இந்தியாவில் ஒரு படத்தை இயக்கியிருக்கின்றார். எனவே திரைப்படங்கள் மொழியைத் தாண்டிய பார்வையாளர்களை மட்டுமில்லை, நல்ல நெறியாளர்களை அவர்கள் படங்களை இயக்க நாடுகள் தாண்டியும் அழைத்துச் செல்லும் எனச் சொல்லிக் கொள்ளலாம்.

 

ன்று இலங்கையில் எடுத்த ஒரு திரைப்படத்தை இங்குள்ள திரையரங்குச் சென்று பார்த்தேன். என் நண்பனின் பங்கும் திரைக்குப் பின்னால் இருக்கின்றது என்பதாலும் அதைத் தவறவிடக்கூடாது என்று நினைத்தேன். அரங்கு நிறையப் பார்வையாளர்கள் வந்திருந்தார்கள். திரைப்படத்தின் ஒளிப்பதிவு, இசை, நடிகர்கள் தேர்வு கூட நன்றாக இருந்தது. ஆனால் திரைக்கதையின்போது குழுவினர் அனைவரும் நன்றாகத் தூங்கிவிட்டனர் என நினைக்கின்றேன்.

இன்றைய காலங்களில் மனதுக்கு உவப்பில்லாத புத்தகங்கள்/திரைப்படங்களைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்துக் கொள்ளும் காலத்துக்கு வந்துவிட்டேன். ஆனால் இத்திரைப்படம் உண்மையிலேயே தலையிடியைத் தந்திருந்தது. அது என்னை எவ்வளவு புறமொதுக்கியதென்றால், படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே ஓரிரு கட்டுரைகளை அலைபேசியில் வாசித்து முடிக்கும் அளவுக்குச் செய்திருந்தது.

இவர்கள் புதியவர்கள் என்பதால் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் 30 நிமிடங்களுக்குள் ஒரு குறுந்திரைப்படமாக எடுக்க வேண்டியதை 2 மணித்தியாலம் நீளமாக எடுத்து பார்வையாளர்களைக் கொல்லக்கூடாது. திரைப்படம் முழுதும் அபத்தம் நீக்கமற இருப்பது ஒருபுறம் இருந்தால், கதையே இல்லாமல் சும்மா 'காட்சிகளை' இனி அலுப்பே ஆக முடியாது என்றளவுக்கு நீட்டித்துக் கொண்டிருந்தனர்.

தம்பிமாரே, இதைத்தான் நான் 10 வருடங்களுக்கு முன்னர் இங்கு தமிழ்த்திரைப்பட விழாக்களின்போது ஜூரிகளில் ஒருவராக இருந்தபோது வருடம் வருடம் பார்த்தேன். அந்தச் சோகத்தையே இப்போது நீங்களும் வைத்துச் செய்து கொண்டிருந்தால் நியாயமா? திரைப்படம் என்பது எத்தனைபேரின் கடினமான உழைப்பால் முழுவடிவம் எடுத்திருக்கும்? நீங்கள் திரைக்கதையை நன்கு செதுக்கி, வலுவாக்கி இருந்தால் அனைவரின் உழைப்பும் மதிக்கப்பட்டிருக்கும் அல்லவா? இப்படி உங்களோடு உழைத்தவர்களை மட்டுமில்லை, உங்களை நம்பி படம் பார்க்க வந்தவர்களையும் கைகழுவிட்டுவிட்டு, திரைப்படம் முடிந்தபின் திரையில் 'இந்திய சினிமாவிட்டு ஈழச்சினிமாவை ஆதரவளிக்கவேண்டும்' என்று விரிவுரை கொடுப்பது நியாயமா சொல்லுங்கள். உங்களின் படைப்பை நம்பித்தானே -பிற தமிழ்/ஆங்கில படங்களுக்குக் கொடுக்கும் ரிக்கெட் விலையை விடக் கூட கொடுத்து- பார்வையாளர்கள் நாங்கள் வந்து அரங்கை நிறைத்து இருந்தோம். ஆனால் நீங்கள் நமக்குத் தந்ததுதான் என்ன? இதைவிட கடந்தவருடத்தில், "சாம் சூஸைட் பண்ணப் போறானில்" சின்ன அதிர்ச்சியைக் கதையின் முடிவில் வைத்து, கடற்கரை, தேவாலயப் பின்னணியில் நல்லதொரு குறுந்திரைப்படம் தந்தவர்களும் இதே யாழ்ப்பாணத்தவர்கள்தானே?

ஆக, ஈழத்து/புலம்பெயர் படங்களுக்கு மக்கள் ஆதரவு தரவில்லை என்றெல்லாம் குறைகூறாது, நல்லதொரு திரைப்படத்தை முதலில் தாருங்கள். ஒரு திரைப்படம் ஓடுமா, ஓடாதா என்பதைவிட நாங்கள் எங்களால் இயன்றவரை சிறந்த படைப்பைக் கொடுத்திருக்கின்றோம் என்று மனநிறைவை நீங்கள் அடைதலே முக்கியம். மேலும் தயவுசெய்து தமிழகத்துப் படங்களைப் போல போலி செய்யாதீர்கள். அது உங்களை எங்குமே அழைத்துச் செல்லாது. அது உங்களின் தன்னிருப்பையே இறுதியில் அழித்துவிடும். தமிழகத்துத் திரைப்படம் போல பாவனை செய்துகொண்டு, இந்தியத்திரைப்படங்களை விடுத்து ஈழச்சினிமாவுக்கு ஆதரவு தாருங்களென நீங்கள் கேட்பது எவ்வளவு போலித்தனமானது இல்லையா? நகைச்சுவையே வராத விடயங்களை எல்லாம் நகைச்சுவை என்ற பெயரில் திரையில் இறக்குவதைப் போல ஓர் ஆபாசம் இல்லையென்பதை நீங்கள் ஒருநாள் அறிந்து வெட்கிக்கவும் கூடும்.

அறிவுரையாக இல்லாது உங்கள் தோளணைத்து நிறைய மலையாள, சிங்களத் திரைப்படங்களை பாருங்கள் எனச் சொல்லப் பிரியப்படுகின்றேன். இயன்றால் தமிழில் எழுதப்பட்டிருக்கும் நல்ல கதைகளை வாசியுங்கள். அதிலிருந்தும் திரைக்கதைகளை உருவாக்க முயலுங்கள். நல்ல கதையோடு வந்தால் நீங்கள் கேட்காமலே ஈழத்தவர் அல்ல, உலகத்தவர்களே கூட உங்களை அரவணைத்துக் கொள்வார்கள். 

 

லக்கியத்துக்குக் கூட மொழி என்கின்ற ஓர் எல்லை இருக்கின்றது. ஆனால் திரைப்படங்கள் அழைத்துச் செல்லும் திசைகளோ விசாலமானது. எனது நண்பர் மொழியே தெரியாத சிங்களத் திரைப்படங்களைப் பார்த்து இன்றும் சிலாகித்துக் கொண்டிருப்பதைப் போல, மிகப்பெரும் தணிக்கையிருந்தும் ஈரானிலிருந்து வரும் திரைப்படங்களைப் பார்த்து நான் நெகிழ்வுற்றதைப் போல உங்களுக்கான சிறகுகளை விரிப்பதற்கும் இந்த வானம் பரந்திருக்கின்றது. உங்கள் கூட்டுழைப்பை இத்திரைப்படத்தைப் போல வீணாக்கிவிடாதீர்கள். கற்றுக்கொள்ளும் ஆவல் இருப்பின் நீங்கள் நம்மண்ணின் தனித்துவங்களோடு ஒரு மகேஷின்டே பிரதிக்காரத்தையோ, Children of Heaven யோ, Oba Nathuwa Oba Ekka எடுக்க முடியும். ஆனால் நீங்கள் உங்கள் திரைக்கதைகளுக்கு நேர்மையாகவும், அசலாகவும் இருக்கவேண்டும். நாளை அப்படியான நெறியாளர்களாக மாற என் வாழ்த்துகள், ஆனால் இப்படியான தலையிடிகளைத் தொடர்ந்து தருவதைத் தவிர்க்கவேண்டும். முன்னோடிகளிடமிருந்து நல்லதை மட்டுமில்லை, நல்லதல்லாதவற்றை செய்யாததையும் கற்றுக் கொள்ளலாம், தவறே இல்லை. அதைக் கொஞ்சம் பொறுமையாகக் கூடக் கற்றுக்கொள்ளலாம். எம் கனவுகள் எங்கும் பறந்துபோய் விடவும் மாட்டாது.

ஒரு வீடற்றவராக (homeless) இருந்த ப்யூகோவ்ஸ்கி தனது எழுத்துக்களால் பிரபல்யமடைய, ஹாலிவூட் அவரைத் திரைக்கதை எழுத அழைக்கின்றது. அப்படி அவர் எழுதிய கதையைக் கொண்டு இயக்கப்பட்டதே Barfly என்கின்ற திரைப்படம். இத்திரைப்பட உருவாக்கத்தை அருகில் இருந்து பார்த்த ப்யூகோவ்ஸ்கி பின்னர் எழுதியதே 'ஹாலிவூட்' என்கின்ற நாவல். இந்நாவலை வாசித்திருந்தால் அதில் எப்படி ஹாலிவூட் உலகை எள்ளல் செய்திருப்பார் என்பது நமக்குப் புரியும். அதுதான் ப்யூகோவ்ஸ்கி. தன்னை அழைத்து மரியாதை கொடுத்த ஹாலிவூட்டையே நக்கலடிக்க முடிந்த அசல் படைப்பாளி அவர். அதனால்தான் அவரை இன்றும் மறக்காமல் பேசிக் கொண்டிருக்கின்றோம்.

தொடக்கத்தில் குறிப்பிட்ட என்னோடு பேச விரும்பிய இயக்குநரை, எனக்கு ஏன் முக்கியமானவர் என்றால் அவர் நல்ல திரைப்படத்தையும், எழுத்தையும் நமக்குத் தந்திருக்கின்றார் என்பதால் ஆகும். அவர் என்னோடு பேசவில்லையென்றாலும் அவரின் படைப்பினூடாக அவர் என்றென்றைக்கும் எனக்கு நெருக்கமாகவே இருந்திருப்பார். அதுதான் கலை நம்மை அழைத்துச் செல்கின்ற பாதையாகும்.

******************

 

(Mar 10, 2024) 

0 comments: