தமது மரணத்தின் பின் தமது படைப்புக்கள் அழிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டவர்கள் காஃப்காவும் சிவரமணியும். ஆனால் அவர்களின் இறுதி விருப்புக்கு மாறாக அவை வெளியிடப்பட்டதால் நாம் காஃப்காவையும் சிவரமணியையும் இன்றுவரை பேசிக் கொண்டிருக்கின்றோம். ரொபர்தோ பொலானோ போன்ற சில படைப்பாளிகள் அவர்கள் மரணத்தின் பின் பிரபல்யம் அடைந்தவர்கள். அந்த புகழின் வெளிச்சத்தினால் பிற்காலத்தில் ரொபர்த்தோ பொலானோவின் முடிக்கப்படாத நாவல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றது. அவ்வாறே இப்போது மார்க்வெஸ் 'அழிக்கப்பட வேண்டிய நாவல்' என்று குறிப்பிட்ட அவரின் நாவலான 'ஆகஸ்ட் வரைக்கும்' வெளிவந்திருக்கின்றது.
மார்க்வெஸ் 2014 இல் காலமாகியவர். அவருக்கு கிட்டத்தட்ட அதற்குப் பத்து வருடங்களுக்கு முன்னரே நினைவு மறதி தொடங்கியிருந்தது. அவருடைய சுயசரிதையான ‘கதைசொல்வதற்காக வாழ்கின்றேன்’ (Living to tell a tale) இல் 'வாழ்க்கையில் என்ன நடந்தது என்பது முக்கியமல்ல, எதை நினைவில் வைத்திருக்கின்றோம் அதை எப்படி நினைவு கூர்கின்றோம் என்பதே முக்கியமானது' என்ற பிரபல்யம் வாய்ந்த வரிகள் இருக்கின்றன.
இந்த நாவலை ஐந்து முறை திருத்தங்கள் செய்தபின் இதைப் பிரசுரிக்கலாம் என்கின்ற ஓர் குறிப்பும், இன்னொரு இடத்தில் இது பிரசுரிக்காமல் அழிக்கப்படவேண்டும் என்கின்ற மார்க்வெஸின் விருப்பும் இருந்திருக்கின்றன. இப்போது மார்க்வெஸின் பிள்ளைகளால் 'வாசகர்களின் மகிழ்வின் பொருட்டு' வெளியிடப்பட்டிருக்கின்றது. ஒருவகையில் வாசகர்களாகிய நாம் காபோவின் வாழ்வைக் கொண்டாடும் இறுதி அடையாளமாக இந்தப் புதினத்தை எடுத்துக் கொள்ளலாம்.
அனா என்கின்ற 40களின் மத்தியில் இருக்கின்ற பெண், ஒவ்வொரு வருடமும் பெயர் குறிக்கப்படாத ஒரு கரீபியன் தீவொன்றுக்கு ஆவணியில் சென்று கொண்டிருக்கின்றார். அங்கே அவரின் தாயார் புதைக்கப்பட்டிருக்கின்றார். ஆசிரியரான அனாவின் அம்மா நெடுங்காலம் வாழ்ந்த இடமாக வேறு எதுவோ இருக்க, ஏன் இந்தத் தொலைதூரத்து தீவை தன்னைப் புதைப்பதற்கு தேர்ந்தெடுத்தார் என்பது அனாவிற்கும் வியப்பாக இருக்கின்றது.
அனா, இரண்டு பிள்ளைகளின் தாய். கன்னித்தன்மையோடே திருமணம் செய்யவேண்டும் என்று விரும்பி அவரின் காதலைத் திருமணஞ் செய்து 25 வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. இவ்வாறு ஒரு ஆவணியில் தீவுக்குச் செல்லும் அனாவுக்கு அங்கே சந்தித்த ஒர் அந்நியனுடன் ஈர்ப்பு ஏற்படுகின்றது. அந்த விருப்புக்குப் பெரிதாக ஏதும் காரணம் இருக்கவில்லை. அவனோடு பேசிக் கொண்டிருந்த சில நிமிடங்களிலேயே, அவனைத் தன் அறைக்கு வாவென்று அழைத்துவிட்டு செல்கின்றார். அந்த உடல்சார்ந்த உறவை எப்படி விபரிப்பது என்று தெரியாவிட்டாலும், அனா 'என்னளவில் இந்த வேட்கை மகிழ்ச்சியாக இருந்தது' என்கின்றார். ஆனால் காலையில் அந்த அந்நியன் அனா வாசித்துக் கொண்டிருந்த ஒரு புத்தகத்துக்குள் 20 டொலர் பில்லை வைத்துவிட்டுச் சென்றுவிடுகின்றான். இது அனாவுக்கு அந்த உடல் சார்ந்த மகிழ்வைத் தாண்டி அவமானமாக இருக்கின்றது. எல்லா நினைவுகளையும் அதே தீவில் புதைத்துவிட்டு அனா தனது குடும்பத்துக்கும், நாளாந்த வாழ்க்கையும் திரும்பி விடுகின்றார்.
அவ்வாறு அடுத்தடுத்த வருடங்களில் வெவ்வேறான ஆண்களுடன் அனா -இந்த அம்மாவின் நினைவிடத்துக்கு வரும்- ஒரு நாள் பகல்/இரவுப் பயணத்தில் உறவு கொள்கின்றார். இரண்டாவது முறை உறவு கொள்ளும் அனாவை அந்தளவு 'மயக்கி' தனது வாகனத்தில் ஒரு திறந்த வெளிக்கு அழைத்துச் செல்கின்றார். அந்த உறவு முடிந்த சில காலத்தில் அந்த ஆண் பெண்களோடு உறவு வைத்துவிட்டு அவர்களைக் கொலை செய்யும் ஓர் கொலைகாரன் என்பதைக் கண்டறிகின்றார். இவ்வாறு அனா சந்திக்கும் ஒவ்வொரு ஆணும் விசித்திரமானவர்களாக இருக்கின்றார்கள்.
அதற்கு அடுத்த முறை அனா தனது விடுதியறையில் வைத்து உறவுகொள்ளும் ஆண், தன்னையொரு மதகுரு என்கின்றான். பிறகு இல்லை, தான் காப்புறுதி சேகரிக்க இந்த தீவுக்கு அடிக்கடி வரும் ஒரு காப்புறுதி முகவர் என்கின்றான். அவன் அடுத்த நாள் காலையில் அனா வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தில் எதையோ வைத்துவிட்டுச் செல்வதை அனா குளித்தபடி கவனிக்கின்றார். இவனும் அந்த 20 டொலர் தாளை வைத்து அவமானப்படுத்தியவனைப் போன்ற இன்னொருவனா என பதகளிக்கும்போது, நல்லவேளையாக அவன் தனது விஸிட்டிங் அட்டையை வைத்துவிட்டுச் செல்கின்றான்.
இறுதியில் அவரின் அம்மாவின் நினைவிடத்துக்கு அனா மட்டும் ஒவ்வொரு வருடமும் வருவதில்லை. அம்மாவின் ஓர் இரகசியக் காதலனும் அங்கே அடிக்கடி வந்து தன் தாயை நினைவுகூர்வதை அந்தக் கல்லறையில் நிரப்பப்பட்டிருக்கும் மலர்களால் கண்டு கொள்கின்றார். முன்பு வருடத்துக்கு மூன்றோ நான்கோ முறை இந்தத் தீவுக்கு வரும் தனது தாயாருக்கு ஏதோ ஒரு இரகசிய உறவு இருந்திருக்கின்றது. அதனால்தான் தன்னை அங்கே புதைக்கவேண்டும் என்று இறுதியாசையாக அதை முன்வைத்தார் என்பது அனாவிற்கு விளங்குகின்றது.
அனா வழமையாக நிற்கும் ஒருபகல் மட்டும் நிற்காது அடுத்த நாள் மதியமும் அங்கே தங்கு நின்று, அந்தக் கல்லறையைத் தோண்டச் செய்து, அம்மாவின் மிச்சமுள்ள எலும்புகளை எடுத்துக் கொண்டு படகெடுத்து தான் வாழும் பெரும் நகர் மீள்வதுடன் நாவல் நிறைவுறுகின்றது.
மார்க்வெஸ்ஸை ஆராதிப்பவர்க்கு - நெடுங்காலமாக இனிய கனிகளைக் கொடுத்துக் கொண்டிருந்த ஒரு பெருமரம், தனது மூப்பில் கடைசிக் கனியைக் கொடுப்பதில்லையா? அவ்வாறே மார்க்வெஸ் நமக்காய் இந்தப் பூமியில் கடைசியாக வாசிக்க விட்டு வைத்த பிரதியென இதை நாம் விமர்சனங்களைச் சற்றுத் தள்ளிவைத்து கொண்டாடலாம்.
ஒருவனை சிலகாலமாக டேட்டிங் செய்துகொண்டிருந்த ஒரு தோழி, முதன்முறையாக அவனோடு உடலுறவு கொண்டு அது நிறைவுற்றபின் அவன் எனக்கு முத்தம் எதுவும் தரவில்லை, அப்போது அவன் ஒரு அந்நியனாகத் தெரிந்தான், அத்தோடு அவனோடு நான் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ள விரும்பவில்லை, விலகி வந்துவிட்டேன் என்றார். ஓர் உறவின் நிறைவின் பின் ஒரு முத்தம் கொடுக்காததால் ஓர் உறவு முறிந்து போகுமா என்பது எனக்கு அப்போது வியப்பாயிருந்தது. அதுபோலத்தான் இந்த நாவலில் வரும் அனா, தனது தாயின் எலும்புகளை எடுத்துக்கொண்டு அதுவரை கிளர்ச்சி கொடுத்துக்கொண்டிருந்த அந்தத் தீவிலிருந்து முற்றுமுழுதாக விலகி வருவது. எல்லாவற்றையும் நாம் எங்கேயே முடித்து வைக்க வேண்டியிருக்கின்றது என்பதை நமக்கு மறைமுகமாக உணர்த்தத்தான். அதற்குச் சிலவேளைகளில் நம் மனம் விசித்திரமான காரணங்களைக் கண்டுபிடித்து இவ்வாறு ஆறுதல்படுத்திக் கொள்கின்றது போலும்.
****************
படம் 03 - மார்க்வெஸ் அவரின் கையெழுத்தில் திருத்திய பக்கம்
( Apr 01, 2024)
0 comments:
Post a Comment