நான் பல்கலைக்கழகம் முடித்து, முதன்முதலாக
முழுநேர வேலையின் களத்துக்குள் குதித்தபோது, அந்த
நிறுவனத்தில் ஒரு தமிழ்ப்பெண்ணும் வேலை செய்து கொண்டிருந்தார். ஒருநாள் எனக்குள்
இருக்கும் ஆன்மீகத் தேடலை அறிந்து, பைபிளில் இருந்து தினம் ஒரு கதையை
அனுப்பிவைப்பார். காலையில் வந்து கணனியைத் திறந்தால் அந்த நற்செய்திதான் முதலில்
மெயில்பெட்டியில் பிரகாசிக்கும். அப்படித்தான் நான் காலையில் இப்போது முகநூலைத்
திறந்தால் யாரேனும் ஒருவர் தாஸ்தயேவ்ஸ்கியினதோ, டால்ஸ்டாயினதோ
மேற்கோள்களைப் பதிவிட்டுக் கொண்டிருப்பதைக் காணமுடிகின்றது. கிட்டத்தட்ட இவர்கள்
இருவரும் தமிழ் எழுத்தாளர்களாகி விட்டனர். 'அளவுக்கு
மீறினால் அமுதமும் நஞ்சு' என்பதற்கிணங்க சிலவேளை இவற்றைப் பார்க்க அலுப்பு வருவதுண்டு. அதற்காய்
ஜீசஸையோ, தாஸ்தயேவ்ஸ்கியோ வெறுப்பதாக அர்த்தப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை.
அவ்வப்போது இப்படி அளவுக்கதிகமாக இவர்களைக் காணும்போது, நபக்கோவ்
தால்ஸ்தவோஸ்கி குறித்து எழுதியவற்றை இங்கே பகிர்வோமா எனக் கூட நினைப்பதுண்டு.
இப்போது யுவான் ரூல்ஃபோ எழுதிய 'பெத்ரோ பராமோ' பற்றி, அது திரைப்படமாக வெளிவந்ததால் நாமெல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் பெத்ரோ பராமோ என்கின்ற நாவல் எந்தளவுக்கு முக்கிய இலத்தீன் அமெரிக்கப் படைப்பாளிகளைப் பாதித்திருக்கின்றதென்பதற்கு கார்ஸியா மார்க்வெஸ், கார்லோஸ் ப்யூண்டஸ், மரியா லோஸா வரை பல உதாரணங்களுண்டு. இன்னும் ஒருபடி மேலே போய் நிக்கனோர் பார்ரா 'பெத்ரோ பராமோ' பற்றி நிறையக் கவிதைகள் கூட எழுதியிருக்கின்றார். அதில் ஒரு கவிதை பெத்ரோ பராமோ என்கின்ற பாத்திரத்தைப் பற்றிப் பேசுகின்றது. நாவலை எழுதிய யுவான் ரூல்ஃபாவையே கேள்வி கேட்டு கட்டுடைக்கின்ற கவிதையது. பெத்ரோ பராமோ, எழுத்தாளர் யுவான் சொல்கின்ற பெத்ரோ பராமோ தான் அல்ல என்கின்றான். நீங்கள் செய்த ஒரேயொரு தவறு, என்னை எனது கல்லறையிலிருந்து மீண்டும் வெளியே இழுத்து வந்ததுதான். ஆகவே இனி நான் பேசுவதையும் கேட்கவேண்டும் என நம்மிடம் கோருகிறான். எவ்வளவு அழகான கற்பனை!
என் பெயர் பெத்ரோ பரோமோ
********
- நிக்கனோர் பார்ரா
(தமிழில் : கண்ணன். எம்)
யுவான் ரூல்ஃபோ எழுதியதை நான் படிக்கவில்லை
நாட்டுப்புறத்தைச் சேர்ந்தவன் நான்
எதையும் படிப்பதற்கு எனக்கு நேரமில்லை
உறுதியாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்
அந்த புதினத்தில் நான் மிக மோசமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறேன் என்று
அதற்கான காரணங்கள் ரூல்ஃபோவுக்கு இருந்திருக்கலாம்
இந்த உலகத்தில் எதுவும் தானாக நடப்பதில்லை
அவன் ஒரு குடிகாரன் என்பது நினைவில் இருக்கட்டும்
கவனமாக இருங்கள்
சயுல்லாவில் பிறந்தவன் அவன்
மப்புச்சே மொழியில் ஈக்களின் பிறப்பிடம்
குறைசொல்லி ஒன்றும் ஆகப்போவதில்லை
உங்களை முட்டாள்களாக்கியிருக்கலாம்
ஆனால் எங்கள் கண்களைக் கட்ட ரூல்ஃபோவால் முடியாது
நான்
பிடிவாதம் நிறைந்தவன், படிப்பறிவற்றவன்
பெரேஸ் எழுதியதைப் படிப்பதில் எனக்கு கொஞ்சம்கூட ஆர்வம் கிடையாது
(அதுதான் அவனுடைய உண்மையான பெயர்
ஒவ்வொரு நாளும் தன் பெயரை மாற்றிக்கொள்பவன் அவன்)
நான் எழுதிய பாக்களை மட்டுமே நான் வாசிக்கிறேன்
நீங்கள் விரும்பினால் ஒன்றைப் படிக்கிறேன்
சுஸானா சான் யுவானிற்காக நான் எழுதியது
அல்லது ஒருவேளை நான் வெறுமையினால் பலமடங்குப் பெருகினாலும் நல்லதுதான்
நீங்கள் செய்த தவறு
என் கல்லறையிலிருந்து என்னை வெளியே இழுத்து வந்ததுதான்.
***********
மீண்டும் தொடக்கத்தில் கூறிய ரஷ்ய எழுத்தாளர்களின் மேற்கோள்களில் இருந்து தப்புவதற்காக நானும் இனி இயன்றபொழுதெல்லாம் எனக்குப் பிடித்த மார்க்வெஸ், காஃப்கா, மிலான் குந்தேரா, ரொபர்தோ பொலானோ போன்றவர்களின் மேற்கோள்களை முகநூலில் நிரப்பி அவர்களையும் தமிழ் எழுத்தாளர்களாக்கும் கடமையைச் செய்வதை வரும் புதுவருடத்துக்கான உறுதிமொழியாக எடுத்துக்கொள்ள விரும்புகின்றேன்.
"திருமண நாள் இரவு ஒரு தேள் ரெபேக்காவின் காலணிக்குள் புகுந்து அவளைக் கொட்டியது. அவளுடைய நாக்கு மரத்துப் போனது; ஆனால் அது முறையற்ற தேன்நிலவைக் கொண்டாவதிலிருந்து அவர்களைத் தடுக்கவில்லை. ஒரே இரவில் எட்டு முறையும் மத்தியானத் தூக்கத்தில் மூன்று முறையும் அந்த மாவட்டம் முழுவதற்கும் கேட்கும்படி எழுந்த அலறலால் அண்டையிலிருப்பவர்கள் திகைத்தார்கள். அது போன்ற காட்டுத்தனமான வேட்கை, மரித்தோரின் அமைதியைக் குலைத்துவிடக்கூடாது என்று அயலவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்."
('தனிமையின் நூறு ஆண்டுகள்', காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்,
ப. 102. - தமிழில்: சுகுமாரன், ஞாலன் சுப்பிரமணியன்)
*********************
(Dec, 2024)
0 comments:
Post a Comment