சில நாட்களுக்கு முன்னர் ஒரு தொலைதூர நண்பரோடு பேசிக் கொண்டிருந்தபோது, 'உங்களுக்குத் தெரியுமா? எனது நண்பன் ஒருவன் உங்களை அப்படிக் காதலித்தான்' என்றார். எனக்கு அது ஓர் ஆச்சரியமாக இருந்தது. காதலால் அல்ல. நானே அப்படி எத்தனை பேரை நேசித்திருக்கின்றேன். இப்படி என்னைப் போன்ற ஒருவனைக் கூட, என் எழுத்துக்களின் வழி ஒருவர் ஆழமாக காதலிக்க முடியுமா என்பதுதான் கொஞ்சம் வியப்பாக இருந்தது. 'அடடா இவ்வளவு காலமாக தெரியாமல் விட்டது. இதை அறிந்திருந்தால் நேரில் சந்தித்தபோது அவரை ஆரத்தழுவி என் காதலையும் தெரிவித்திருப்பேனே' என்று இந்த நண்பருக்குச் சொன்னேன்.
இந்த நண்பர்களை நேரில் சந்தித்து கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஆகப்போகின்றது. என்னை 'நேசித்த' நண்பர், என் எழுத்தை மற்றவர்கள் விமர்சித்தால் கூட, அதெப்படிச்செய்யலாம் என்று என் பொருட்டு எல்லாம் சண்டை பிடிப்பார் என்று, இந்த நண்பர் தொலைபேசி உரையாடலில் சொல்லிக் கொண்டிருந்தார். இப்போது என்னை 'நேசித்த' அந்த நண்பர் எனக்கு சமூகவலைத்தளத்தில் நண்பராகவும் இல்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் நம்மை வாழ்வு வேறு வேறு தளங்களுக்கும்/ அடையாளங்களுக்கும் நகர்த்தியும் விட்டது. எங்கிருந்தாலும் அவர் வாழ்க. அவரின் அந்தக் காதலால் நான் ஆசிர்வதிக்கப்பட்டேன் என்று மானசீகமாய் அவருக்குச் சொல்லவும் பிரியப்படுகின்றேன்.
புலம்பெயர்ந்தவர்களில் வாழ்க்கைப்பாடுகளை, அவர்கள் எப்படி கஷ்டப்பட்டார்கள் என்பதை மட்டுமில்லை எப்படி இந்தப் பல்கலாசார சூழலில் integral/evolve ஆனார்கள் என்பதையும் ஒரு நேர்கோட்டில் வைத்துப் பார்க்கக் கூடிய கதைகள் ஜயகரனுடையது. மேலும் பாத்திரங்களின் உணர்வுநிலைகளை மட்டுமில்லை, இந்த வாழ்வின் நுண்ணழகியலை/நிலவியலை வர்ணிக்க ஜயகரன் எழுத்தில் எடுக்கும் நிதானம் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது.
ஆகவேதான் ஜயகரனின் கதைகளை (நம் சூழலில் 'கவனம் பெற்ற' எழுத்தாளர்களின் படைப்புக்களை விட) வாசித்துப் பார்க்கச் சொல்லி எனக்கு அடுத்து வந்த தலைமுறையினர்க்குச் சந்தர்ப்பம் வரும்போதெல்லாம் நான் எடுத்துச் சொல்வதுண்டு. முக்கியமாக நல்லதொரு எழுத்தாளராக வரக்கூடிய சாதனாவின் ('தொலைந்துபோன சிறிய அளவிலான கருப்பு நிற பைபிள்') கதைகள், ஏன் வேரூன்றமுடியா தனித்தலையும் கதைகளாக அந்தரத்தில் மிதக்கின்றன என்று யோசித்தபோது, அவர் ம் நமது புலம்பெயர் தமிழ் - பல்கலாசார வாழ்வை முற்றிலுமாக அந்நியநில மக்களில் சுமத்தி எழுதிச் சென்றதால், அவை கிட்டத்தட்ட மொழிபெயர்ப்புக் கதைகள் போன்ற தோன்றத்தைத் தருவதாக நினைத்திருக்கின்றேன்.
ஆனால் ஆச்சரியமாக இந்த இடைவெட்டும் புலம்பெயர் வாழ்வையும் X தமிழ் மனதின் நெருக்கடியையும் விஜய ராவணன் அவரது தொகுப்புக்களில் கொண்டு வந்திருக்கின்றார். அதேவேளை விஜய ராவணனின் கதைகளில் இருக்கும் பலவீனத்தை சர்வோத்தமன் மிகச்சரியாக ஓரிடத்தில் குறிப்பிட்டிருக்கின்றார்: "ஆசிரியர் (விஜய ராவணன்) கதையில் பாத்திரங்களை தங்களைத் தாங்களே நிகழ்த்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.அதற்கு கதை அவரில் நிகழ வேண்டும்.அதாவது கதை மாந்தர்கள் அவர்கள் பேச விரும்புவதை பேச வேண்டும்.அதற்கு அந்தத் அகத் தொந்தரவு உண்மையில் அவரில் உதித்திருக்க வேண்டும்".
ஜயகரனின் 'அவனைக் கண்டீர்களா?'ஐ, ஒரு நெடுங்கதை எனத்தான் சொல்ல முடியும். ஈழத்தமிழர் ஒருவர் அகதியாக மொன்றியலுக்கு வந்து அங்கே கேளிக்கை விளையாட்டுக்கள் நிறைந்த ஒரு நிர்வாண விடுதியில் துப்பரவுத் தொழிலாளியாக வேலை பார்க்கின்றார். இந்தக் கதையின் தொடக்கம் அவ்வளவு விரிவாக ஆண்-பெண் கழிவறைகளையும், நிர்வாணப்படம் தனித்து பார்க்க வருபவர்கள் பூத்துக்களில் வந்து சிந்தும் விந்துக்களையும், அதிகம் குடித்து வாந்தியெடுப்பதையும் சுத்தமாக்கும் கஷ்டத்தைச் சொல்கின்றது. கிட்டத்தட்ட அருவருப்பு வரமளவுக்கு இந்நிகழ்வுகள் கதையில் சித்தரிக்கப்படுகின்றது. ஆனால் அந்தச் சூழலில் வேலை செய்பவர்களின் நிலையை யோசிக்கும்போது நாம் பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்தும்போது எவ்வளவு சுத்தமாகப் பாவிக்க வேண்டும் என்கின்ற எண்ணம் கொஞ்சமேனும் நமக்குள் எட்டிப் பார்க்கலாம்.
அங்கே வேலை செய்யும் இரவி என்பவர் எப்படி ஒரு 'வீரசாகச' நிகழ்வொன்றின் மூலம் விரனாகவும், அப்படி ஆவதால் எவ்வளவு உயிராபத்துக்கும் உள்ளாகின்றார் என்பதும் முதல் பகுதியாகின்றது. ஆனால் வீரனாகும் இரவி உடைந்து போகின்ற கணமும் அந்த நிர்வாண விடுதியில் நிகழ்கின்றது. அங்கிருந்து கதை இப்போது ஈழத்துக்கு நகர்கின்றது. இரவியினதும், அவரது நண்பனினதும் கதைகள் சொல்லப்படுகின்றது. அந்த நண்பனுக்கும் இரவிக்குமான உறவு, யாழ்ப்பாணத்து மூடுண்ட சமூகம், போர்ச் சூழல் என்பவை பேசப்பட்டு, இறுதியில் அந்த நண்பனுக்கு என்ன நடந்தது என்பதுதான் கேள்வியாக 'அவனைக் கண்டீர்களா?' என்பதை ஜயகரன் இரவியின் கேள்வியாக மட்டுமின்றி வாசிக்கும் நம் அனைவருக்குமான கேள்வியாக முன்வைக்கின்றார்.
நாம் இரவியாக இருந்தால் அல்லது இந்த இருவரின் கதையை அறிந்த ஒருவராக இருந்தால் நமது பார்வைதான் என்னவாக இருக்கும். நாம் அவர்களைப் புரிந்துகொண்டிருப்போமா? நமக்கு உள்ள வாழ்க்கை போல ஒன்றை அமைக்க, அவர்களுக்கு விரும்பியமாதிரியான சூழலை ஏன் உருவாக்க நாம் முனையவில்லை? ஆகக்குறைந்தது பொதுச்சூழலில் பேசக்கூடத் துணியவில்லை என்பதுதான் எமக்கான முக்கிய கேள்வியாக இருக்கும்.
ஒரு படைப்பு நம் அகத்தில், தயக்கத்தில் ஒளிரும் சுடராயினும் அதைச் சிறிதாவது அசைத்துப் பார்க்க வேண்டும். அப்படி 'அவனைக் கண்டீர்களா?' அசைத்துப் பார்க்கின்றது. அதேபோன்று 'நீங்கள் எந்தப் பக்கம் போகின்றீர்கள்?' என்கின்ற இன்னொரு கதை இங்குள்ள முதியவர்களின் வாழ்க்கையின் ஒரு குறுக்குவெட்டைப் பேசும் முக்கிய கதையுமாகின்றது.
'அவனைக் கண்டீர்களா?' ஜயகரனின் மூன்றாவது தொகுப்பு. ஒரு சிறந்த நாடகப் பிரதி எழுத்தாளராகவும்/நெறியாளராகவும் இருக்கும் ஜயகரன் அவரது கதைகளைத் தொகுப்பாக்கியது அண்மைக்காலத்தில்தான். அதேவேகத்தில் அவர் இப்போது புதிது புதிதாகக் கதைகளையும் உற்சாக எழுதிக் கொண்டிருப்பதும் மகிழ்ச்சி தரக்கூடியது.
முதலாவது தொகுப்பான 'பா.அ.ஜயகரன் கதைகள்' தொகுப்பு அவசரமான கதியில் வந்ததால், பின்னர் அது செம்மையாக்கப்பட்டு புதிய கதைகளோடு 'ஆலோ ஆலோ'வாக வெளிவந்தது. இப்போது 'அவனைக் கண்டீர்களா?' தொகுப்பிலும் ஏற்கனவே தொகுப்பில் வந்த சில கதைகள் சேர்க்கப்பட்டிருகின்றன. அப்படி இல்லாது அடுத்த தொகுப்பு தனித்து புதிய கதைகளுடன் மட்டும் வரவேண்டும் என்பது என் விருப்பு.
ஏனெனில் ஜயகரனின் கதைகளுக்கு இந்தப் புலம்பெயர் தேசத்தில் ஒரு முக்கிய வகிபாகமுண்டு. மேலும் கனடா போன்ற நாடுகளில் வாசிப்பவர்கள் மட்டுமின்றி, எழுதுபவர்களே அரிதாகிக் கொண்டிருக்கும்போது, ஜயகரன் இன்னும் நிறைய எழுத வேண்டும். அது என்னைப் போன்ற, கதைகள் எழுதுவதில் விருப்பிருந்தாலும், ஏதேதோ காரணங்களைச் சொல்லி உறங்குநிலைக்குப் போய்விட்டவர்களுக்கும் நிச்சயம் ஊக்கமளிப்பதாகவே இருக்கும்.
****************
(Nov, 2024)
0 comments:
Post a Comment