கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

அத்திப்பூ குறிப்புகள்

Sunday, December 01, 2024

 

1. அமெரிக்கத் தேர்தல்


அமெரிக்கத் தேர்தல் முடிந்துவிட்டது. யார் வென்றுவிட்டார் எனது அனைவர்க்கும் தெரியும். அடுத்த வருடம் கனடாவிலும் தேர்தல் இருக்கின்றது. அதிலும் வலதுசாரிச் சார்புள்ள மிதவாதக் கட்சி (Conservative) வெல்லவே அதிகம் சாத்தியமிருக்கின்றது.

இப்போது அமெரிக்கத் தேர்தல் குறித்து எழுத வரவில்லை. அமெரிக்காவில் டிரம்ப் வென்றவுடன், ஒருவர் அது கறுப்பின மக்களின் ஆதரவால் நிகழ்ந்ததென்று கூறி ஒரு பதிவு எழுதியிருந்தார். சரியான புள்ளிவிபரம் கிடைக்காமல் எழுந்தமானமாக எழுதினார் என்றால் கூட அதை மன்னித்து விட்டிருக்கலாம். ஆனால் கறுப்பினத்தவர்கள் அடிமைகளாக ஒடுக்கப்பட்டதை மறந்து, தமது புதிய அடிமை நிலையை மீண்டும் நிரூபிக்க டிரம்பிற்கு வாக்களித்தார்கள் என்று எதையெதையோ எழுதியதுதான் எரிச்சலாகக் கிடந்தது.

மேலும் அத்தோடு கறுப்பினத்தவர்கள் (கூட) ஒரு பெண் ஜனாதிபதியாக வருவதை விரும்பாத ஆணாதிக்கவாதிகள் என்று எழுதியிருந்தார்.

உண்மையில் இவருக்கோ/இவரின் பதிவுக்கோ (இவ்வாறு பல பதிவுகள் எழுந்தமானமாக முன்னரும் இவரால் எழுதபட்டிருக்கும்) மறுத்துச் சொல்ல அவ்வளவு விருப்பமில்லை. ஆனால் நான் மதிக்கும் பல நண்பர்கள் - முக்கியமாய் நான் முன்னோடிகள் என்று நினைப்பவர்கள் - அவரின் பதிவை வாசித்து அவ்வப்போது உரையாடுவதால் இதை எழுத விரும்புகின்றேன்.

அமெரிக்கர்கள் மட்டுமில்லை, ஆசியர்களும் முக்கியமாக -பெருமளவு இந்தியர்கள் தொடர்ந்து வலதுசாரிகளுக்கே ஆதரவளிப்பவர்கள். அது அமெரிக்காவில் மட்டுமில்லை, கனடாவிலும் வெளிப்படையாகத் தெரியும். என்ன இம்முறை கமலா ஹாரிஸ் என்கின்ற இந்தியப் பின்புலமுள்ள பெண்மணி ஜனாதிபதி தேர்தலில் நின்றதால் மெல்லவும் முடியாமல் உண்ணவும் முடியாமல் கொஞ்சம் கமலாவுக்கு வாக்களித்திருக்கக் கூடும். மற்றும்படி ரிபளிக்கனுக்கு வாக்குகளை இவர்களின் பெரும்பாலானோர் அள்ளி வழங்கக்கூடியவர்கள். அதனால்தான் அண்மையில் தமிழிலும் தெலுங்கிலும் (இந்தியா மாதிரி) டிரம்புக்கு வாக்களிக்கக் கேட்டு பெரிய Banner வைத்திருந்தது சமூகவலைத்தளங்களில் 'வைரல்' ஆனது.

இப்போது கறுப்பினத்தவர்கள் டிரம்புக்கு வாக்களித்துவிட்டார்கள் என்ற விடயத்துக்கு வருவோம். அது மிகத் தவறான தகவல்.

இம்முறை வழமையை விட கறுப்பின ஆண்கள் அதிகம் கமலா ஹரிஸுக்கு வாக்களித்திருக்கின்றனர். அதனால்தான் தேர்தல் முடிந்தபின் டிரம்ப் ஆதரவு FOX News கூட எப்படி 76% கறுப்பின் ஆண்கள் நமது டிரம்பை விட்டுவிட்டு கமலாவுக்கு வாக்களித்தார்கள் என்று இங்கு காலையிலிருந்து புலம்புகின்றார்கள்.

அதற்கு 'நீங்கள் டிரம்பிற்கு வாக்களித்தால் கறுப்பினப்பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள்' என்று மிஷேல் ஒபாமா பேசியதுதான் காரணம் என்று மிஷேலையும் கூடவே இந்த வலதுசாரிகள் திட்டித் தீர்த்தபடி இருக்கின்றார்கள்.

இனி இம்முறை அமெரிக்கத் தேர்தல் வாக்களிப்பு புள்ளிவிபரத்தை இனம்/பால் என்பவற்றை வைத்துப் பார்த்தோம் என்றால், அமெரிக்கக் கறுப்பினத்தவர்கள்தான் மிகப் பெரும்பான்மையாக கமலாவுக்கு வேறெந்த (வெள்ளை/ஹிஸ்பானிய/ஆசிய ) இனத்தவர்களை விட வாக்களித்திருக்கின்றார்கள் என்பது புரியும் (பார்க்க இணைப்பு 01).

இவ்வாறு கறுப்பினத்தவர்கள் மிகத் தெளிவாக டிரம்புக்கு எதிராக வாக்களிக்கும்போது இந்தியாவிலிருந்து கொண்டு, அடிமைகளாக்கப்பட்ட கறுப்பர்கள் கூட இப்போது டிரம்புக்கு வாக்களித்து நவீன அடிமைகளாகின்றனர் என்று எழுதுவது எவ்வளவு அயோக்கியத்தனமானது. இப்படித்தான் இந்தியாவிலிருந்து வந்துபோகும் சில எழுத்தாளர்களும் அவ்வப்போது கறுப்பினத்தவர்களைப் பற்றி பொன்மொழி உதிர்ப்பதைக் கடந்த காலங்களில் கண்டுமிருக்கின்றோம்.

இம்முறை டிரம்ப் வென்றதற்கு ஹிஸ்பானிய ஆண்கள் அதிகம் டிரம்ப் பக்கம் சாய்ந்தது முக்கிய ஒரு காரணம் என்று சொல்கின்றார்களே தவிர கறுப்பினத்தவர்கள்தான் இந்த வெற்றிக்குக் காரணம் என்று எங்கும் சொல்லவில்லை.

ஆகவே அன்பரே, எல்லாவற்றையும் உங்களுக்குத் தெரியும் என்கின்ற பாவனையில் எழுதாதீர்கள். மேலும் உங்கள் தரவுகள்/தகவல்கள்/கோட்பாட்டு விளக்கங்கள் தவறென்று அவ்வப்போது சொல்ல வரும் நான் மதிக்கும் முன்னோடிகளை உங்கள் அரைகுறை ஞான அகம்பாவத்தால் விரட்டியடிக்காதீர்கள். அதனால் அவர்களுக்கல்ல, உங்களுக்குத்தான் ஒரு புதிய உலகைப் பார்க்கும் சாளரம் அடைத்துக் கொள்கின்றது என்பதையாவது சற்றுப் புரிந்து கொள்ளுங்கள்.


 

2. றஷ்மி

 

றஷ்மி என் பிரியத்துக்குரிய படைப்பாளி. அவரின் கவிதைகளை என் பதின்மங்களில் 'சரிநிகரில்' உதிரிகளாக வாசித்திருந்தாலும், அவரின் முதல் தொகுப்பான 'காவு கொள்ளப்பட்ட வாழ்வு: முதலான கவிதைகள்' தொகுப்பே அவரை இன்னும் நெருக்கமாக்கியது. அந்த நெருக்கம் எவ்வாறானதெனில் என் பல்கலைக்கழக காதல் பிரிவின் போது ஆற்றுப்படுத்தும் 'நிவாரணிகளில்' ஒன்றென அந்தத் தொகுப்பு இருந்தது. பின்னர் றஷ்மியோடு தொடர்ந்து பல்வேறுவகைகளில் சேர்ந்து பயணித்தாயிற்று. 

 

எனது தொகுப்புக்களில் ஒன்றான 'பேயாய் உழலும் சிறுமனமே' அவரின் முகப்போவியத்தோடு வெளிவந்தது. எனது கதைகள் 'காலச்சுவடில்' வெளிவருகின்ற ஒவ்வொரு பொழுதும் றஷ்மியின் ஓவியங்களோடே வெளிவந்திருக்கின்றன. இதற்கிடையில் ஷர்மிளா ஸையத் கொழும்பில் கலைகளினூடு இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் என ஒருங்கமைத்த முதல் நிகழ்வில் எனதும் றஷ்மியினதும், நூல்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது, இலக்கியத்தில் ஒரு சகபயணியாக றஷ்மியுடன் நானும் மாறியிருந்தேன்.

சிலவருடங்களுக்கு முன் றஷ்மியை சென்னைப் புத்தகக் கண்காட்சியில் நேரில் சந்தித்திருக்கின்றேன். எப்போதும் தொடர்புகளைப் பேணுவதில் சோம்பலும், தொலைபேசி அழைப்புக்களை விட்டுவிலகுபவனாக இருந்தாலும், றஷ்மியோடு தொலைபேசும்போது -அது அரிதாக இருந்தாலும்- அந்த பேச்சுக்கள் நீண்டதாகவே இருக்கும். றஷ்மியின் ஆளுமை பன்முகப்பட்டது. கவிஞர், ஓவியர், புத்தக வடிவமைப்பாளர், புனைவெழுத்தாளர் என்று அவரின் திறமை பல்வேறு திசைகளை நோக்கிப் பாய்வது. இன்று அவர் ஒரு நல்ல பாடகர் என்பதும், பாடல் வரிகளை எல்லாம் மிக நேர்த்தியாக நினைவில் வைத்திருப்பவர் என்பதையும் அறிந்தேன்.

கவிதைகளுக்காக எப்போதோ அவருக்குக் கிடைத்திருக்கவேண்டிய 'இயல்விருது' இப்போதாவது அவரின் சிறுகதைகளுக்காக கிடைத்திருக்கின்றது என்று ஆறுதற்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். வாழ்த்துகள்!

றஷ்மி இன்னும் நிறைய எழுதுங்கள்; இதே நேசத்தோடு எங்களோடு எப்போதும் இருங்கள்!

 

3.  Martha (ஆவணப்படம்)

எனது பாடசாலை/பல்கலைக்கழக காலங்களில் மார்த்தா (Martha Stewart) மிகப் பிரபல்யமாக இருந்தவர். எந்தப் பத்திரிகையை வாசித்தாலும், எந்தத் தொலைக்காட்சியைப் பார்த்தாலும் மார்த்தா அங்கே இருப்பார். அவ்வாறு புகழின் உச்சிக்குப் போன மார்த்தாவின் செல்வாக்கும், அவரின் நிறுவனமும் சட்டென்று சரிந்து போனது. அவர் stock market இல் insider trading செய்தார் என்று கூறப்பட்டு, அது நிரூபிக்கப்படாததால் அவர் எப்ஃபிஐக்கு பொய் சொன்னார் என்ற குற்றச்சாட்டில் ஐந்து மாத சிறைத்தண்டணையும், மிகுதி ஐந்துமாத வீட்டுச் சிறையிலும் இருந்தவர். இதன் நிமித்தம் அவர் கிட்டத்தட்ட அனைத்தையும் இழந்தார்.

ஆனால் மார்த்தா, மிக எளிமையான 5 சகோதரர்கள் உள்ள குடும்பத்தில் வறுமையோடு போராடி அன்று அவரது உழைப்பாலேயே தனது சொந்தப்பெயரை மார்க்கட் செய்து, ஒரு நிறுவனத்தை நடத்திய முதல் பில்லியரான பெண்ணாக அன்று மாறியது ஒரு பெரும் நிகழ்வே. இன்று 'இன்புளூவென்சர்' எனப்படும் தேய்வழக்கிற்கு 80/90களில் மிகச்சிறந்த முன்னுதாரணமாக இருந்தவர் அவர். மார்த்தா தனது பெயரிலேயே பல்வேறு சஞ்சிகைகளை நடத்தியவர். அதன்பின்னர்தான் பெண் ஆளுமைகளான ஒபரா வின்பரே போன்றவர்கள் தமக்கான சஞ்சிகைகளை நடத்தியவர்கள் என நினைக்கின்றேன்.

உண்மையில் அன்று மார்த்தா பெரிய குற்றம் எதையும் செய்யவில்லை. அவர் விற்ற பங்குகள் கூட 50,000 டொலர்களுக்குக் கீழானவை. அவரின் வளர்ச்சியை விரும்பாத யாரோ அவரை வீழ்த்த விரும்பியிருக்கக் கூடும். மேலும் வெகுசன விருப்பம் என்பதும் உச்சிக்குப் போகும் ஒருவரை தனக்குத்தானே சரிநிகராக கீழே வீழ்த்திப் பார்ப்பதிலும் ஆசைப்படுவதும் இயல்புதானல்லவா. மார்த்தா ஜெயிலுக்குப் போனதன் பிறகு அவரின் பெயரில் இருந்த நிறுவனத்தின் அனைத்து உரிமைகளையும் இழக்கின்றார். அதுபோலவே அவரின் முகத்தை ஒரு பிராண்டாக வைத்திருந்த நிறுவனத்தின் பங்குகளும் மிக மோசமான சரிவைச் சந்தித்து, அந்த நிறுவனத்தையே 'அடிமாட்டு விலை'க்கு விற்க வேண்டி வருகின்றது.

மார்த்தாவின் மீட்சி பின்னர் நிகழ்ந்தாலும் ஆனாலும் மார்த்தாவினால் பெரிதாக முன்னர் போலச் சாதிக்க முடியவில்லை. அவரின் நிறுவனம் வீழாமல் இருந்திருந்தால் இன்று மிகப்பெரும் வளர்ச்சியை பல்வேறு வழிகளில் அடைந்திருக்கும் என்று சொல்கின்றார்கள். அதேபோன்று இந்த ஆவணப்படத்தில் மார்த்தாவின் மகிழ்ச்சியற்ற திருமண வாழ்வு, அவருக்கும் அவரது கணவருக்கும் திருமணத்தைத்தாண்டிய உறவுகள் என்று பலதையும் பேசுகின்றார்கள். எப்போதும் தனது விடயங்களில் முழுமையை எதிர்பார்த்த மார்த்தா எப்படிப் பலவேளைகளில் தனது ஊழியர்களை அவமானப்படுத்தினார்கள் என்பதையும் சொல்கின்றார்கள்.

இத்தனைக்கும் அப்பால், எளிய குடும்பத்தில் பிறந்த ஒருவர் சமையலாலும், வீட்டு அலங்கரிப்பாலும், தோட்டக் கலையாலும் பத்திரிகை/தொலைக்காட்சியின் மூலம் (இன்றைய ரியல் எஸ்டேட், ஸ்டாக் மார்க்கட், மென்பொருட்கள் போன்றவற்றால் அல்லாது) பில்லியனாராக ஒரு பெண்ணாக அன்றைய காலத்தில் மிக குறுகிய காலத்தில் தனித்து நின்று மாறிக்காட்டினார் என்பதுதான் மிக முக்கியமானது.

 

 

4. The Bike riders (திரைப்படம்)

இத் திரைப்படம் எப்படி அமெரிக்காவில் மோட்டார் சைக்கிள் குழுக்கள் தோன்றியது என்பதன் ஆதிமூலத்தைத் தொட்டுச் செல்கின்றது. மோட்டார் சைக்கிள்களை ஓடுவதிலும் அவை பற்றிப் பேசுவதிலும் ஆர்வமுள்ளவர்கள் ஓரு குழுவைத் தொடங்க அது எப்படி பின்னர் வன்முறை/போதைமருந்து/பாலியல் தொழில் போன்றவற்றின் திசைகளை நோக்கிச் சென்றது என்பது பற்றிக் கூறுகின்றது. இதுவே இப்போது பிரபல்யமாக இருக்கும் outlaws என்கின்ற வன்முறையான மோட்டார் சைக்கிள் குழுவிற்கான அடித்தளமானது.

சிகாகோவில் இருந்த இக்குழுவில் (அப்போது அது வன்முறையின் திசைக்குச் செல்லவில்லை) 1960களில் சிலவருடங்கள் இணைந்திருந்த டானி (Danny Lyon) அந்தக் காலத்தில் இக்குழுவை புகைப்படங்களாலும் குறிப்புக்களாலும் ஆவணப்படுத்த அது நூலாகப் பின்னர் வெளிவந்தது. அவரின் இந்த நூலை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கின்றது. 

 

*******************

0 comments: