எப்போது வெளிவரும் என நள்ளிரவில் இருந்து எதிர்பார்த்து முழுவதையும்
பார்த்து முடித்துவிட்டேன். எட்டு எபிசோட்டுகள், ஒவ்வொன்றும்
ஒரு மணித்தியாலம்.
எங்கிருந்து தொடங்குவது, எதை எழுதுவது என்ற தவிப்பு இருந்தாலும்
மனது நிறைந்து நெகிழ்ச்சியில் ததும்புகின்றது. காபோ என்ன இருந்தாலும் நீங்கள்
எழுத்தில் ஒரு 'மாஸ்டர்'தான் என அவரைத் தோளணைக்கத் தோன்றுகின்றது.
எனினும் இயன்றளவு நேர்மையாக, நாவலுக்கு 'துரோகம்' செய்யாது தந்திருக்கின்றார்கள். எனக்கு மிகப் பிடித்திருந்தது. இலத்தீன் அமெரிக்க நிலப்பரப்பில் நிகழும் எந்தப் புனைவும் உனக்கு உடனே பிடித்துவிடுமே என்கின்ற என் மனச்சாட்சியின் குரலும் கேட்கத்தான் செய்கிறது.
என்ன நேர்கோட்டுத்தன்மையில்லாத மார்க்வெஸ்ஸின் எழுத்தை இயன்றளவு சிக்கெடுத்து, நேர்கோட்டுத்தன்மையில் கதைகளைச் சொல்ல இதில் முயன்றிருக்கின்றார்கள். வேறு வழியில் கதை சொல்லலும் அவ்வளவு சாத்தியமில்லை. இதனால் சிலவேளைகளில் 'தனிமையில் நூறு ஆண்டுகளை' வாசிக்காது நேரடியாக இதைப் பார்ப்பவர்களுக்கு மார்க்வெஸ் ஓர் எளிதான நேர்கோட்டுக் கதைசொல்லல்பாணியில் எழுதியிருக்கின்றார் போலத் தோன்றும். எனினும் நாவல் களமும், அதன் பாத்திரங்களும் பரிட்சயமானவர்க்கு இதில் தோய்ந்து போய் நெகிழும் சந்தர்ப்பங்கள் நிறையவே இருக்கின்றன.
முதலாவது சீஸன் மாகோத்தாவைக் கட்டியெழுப்பிய ஹோசே அர்க்காதியோ புயேந்தியாவின் மரணத்தோடு முடிந்தாலும், இந்த நாவல் ஹோசேயின் துணைவியான உர்சுலா இன்றி ஒரு அணுவும் நகர முடியாதென்பது நமக்கு நன்கு தெரியும்.. ஆகவேதான் உர்சுலாவின் போர் பற்றிய ஒரு மேற்கோளைக் குறிப்பிட விழைகிறேன்.
"இந்தக் கொடூரமான விளையாட்டை நீங்கள் தீவிரமாக எடுத்துக் கொண்டிருக்கின்றீர்கள். அதைச் சரியாகவும் செய்திருக்கிறீர்கள். ஏனென்றால் நீங்கள் உங்கள் கடமையைச் செய்தீர்கள்" என்று நீதிமன்ற உறுப்பினர்களிடம் சொன்னாள். "ஆனால் மறந்து விடாதீர்கள். கடவுள் ஆயுளைக் கொடுத்திருக்கும்வரை நாங்கள் அம்மாக்கள்தாம். நீங்கள் எவ்வளவு பெரிய புரட்சிக்காரர்களாக இருந்தாலும் கவலையில்லை. மரியாதைக் குறைவின் முதல் அடையாளத்தைப் பார்த்தாலே உங்கள் கால்சராயை இழுத்துவிட்டு சவுக்கால் அடிக்கும் உரிமை எங்களுக்கு இருக்கிறது."
('தனிமையின் நூறு ஆண்டுகள்', ப. 165, தமிழில் சுகுமாரன்)
*************
( Dec, 2024)
0 comments:
Post a Comment