கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 94

Friday, May 30, 2025

 

ராப் பாடகர் வேடன் குறித்து நானொரு பதிவை எழுதியபின் நண்பரொருவர் மாயா, வேடன், வாகீசன் இராசையா போன்றவர்களின் பாடல்களில், எப்படி  ஈழப்போராட்டம்/ தமிழ் அடையாளம் வெளிப்படுகின்றது என்பதைப் பற்றி விரிவாக எழுத வேண்டுமெனக் கேட்டிருந்தார். சொன்னது மட்டுமில்லாது வாகீசன் இராசையா, இரத்தி அதித்தன் போன்றவர்களின் படைப்புக்களையும் என் பார்வைக்காய் அனுப்பியிருந்தார். அப்படியொரு கட்டுரை எழுதினால் அது பெனடிக் அன்டர்சனின் 'Imagined Communities: Reflections on the Origin and Spread of Nationalism'  இல் விவாதிக்கப்பட்ட, (நாடு கடந்த) தேசியத்தை நோக்கி நகரும் ஒன்றாக அமையவும் கூடும்.

ஆனால் நான் இப்போது இசையுலகை அவ்வளவாகப் பின் தொடர்பவன் இல்லை. இன்று ஈழம்/தமிழகம்/புலம்பெயர்ந்த தேசமென தன்னை ஸ்தாபித்துக் கொண்டிருக்கும் வாகீசனின் ஒன்றிரண்டு 'ரீல்'களை மட்டும் கேட்டவனே தவிர அவரின் பாடல்களில் ஒன்றைக் கூட முழுமையாகக் கேட்டவனில்லை. ஆகவே நான் இதை எழுதுவற்கு பொருத்தமானவனல்ல. இத்துறையில் ஈடுபாடுள்ள எவரேனும் மாயா-வேடன் - வாகீசன் போன்றவர்கள் தமிழ் அடையாளத்தில் இணையும்/விலகும் புள்ளிகளைக் கவனத்தைக் குவித்து ஒரு கட்டுரையை எழுதுவார்கள் என்றால் சுவாரசியமாக இருக்கும்.


என் விருப்பும், ஆர்வமும் எப்போதும் இலக்கியம் சார்ந்ததே. அண்மைக்காலமாக மனதைக் குவித்து வாசிப்பதில்லையென்ற குறையும் எனக்கிருக்கின்றது. அறை முழுதும் அரையும் குறையுமாக வாசித்து புத்தகங்கள் சிதறிக் கிடக்கின்றன. மேலும் தினமும் ஜெயமோகனின் 'காவியம்' நாவலை வாசித்துக் கொண்டிருக்கின்றேன். இப்போது ஒருநாள் விடாது 30 அத்தியாயங்களை அவரின் எழுதும் வேகத்தோடு வாசித்தபடி இருக்கின்றேன். நிழல்களோடு பேசும் இந்தக் காவிய நாவல் காலத்தில் தானும் அமானுஷ்ய உருவங்களோடு இருண்ட மூலைகளுக்குச் செல்வதாக ஒரு பதிவையும் ஜெயமோகன் எழுதியிருக்கின்றார்.  இந்த நாவலின் சில அத்தியாயங்களை  வாசித்தபோது ஒருவர் நாளாந்த வாழ்வுக்குள் இருந்தபடி எழுத முடியாது என்றே எண்ணியிருந்தேன். கிட்டத்தட்ட தொடர்ந்து மூன்று நாட்களாகத் தூங்கமுடியாத அவதியைப் பற்றி  ஜெமோ எழுதியிருந்தார். அது எழுத்து நம்மிடம் கோருகின்ற காணிக்கை. அதைச் செய்யாமல் நாம் விரும்பிய எழுத்தென்பது தோன்றாதென்பதும் உண்மையே. ஜெமோ இதை எழுதும் காலங்களின் இருண்மையிலிருந்து  விரைவில் வெளியே வரட்டுமாக.

நேற்று இங்குள்ள நூலகத்திற்குச் சென்றிருந்தேன். அது தமிழ்ப் புத்தகங்கள் நிறையக் கிடைக்கின்ற நூலகங்களில் ஒன்று. ஆனால் முன்னரில்லாது இப்போது தமிழ்ப் புத்தகங்களுக்கான இடம் குறைந்து கொண்டு இங்கே போவதைப் பார்க்கக் கவலையாக இருந்தது. ஆனால் வாசிப்பவர்களி எண்ணிக்கை குறைந்துபோகின்றதென்ற யதார்த்ததையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மொழிக்கும் அதை வாசிப்பவர்கள் (இரவல் வாங்குபவர்கள்) எண்ணிக்கையைக் கொண்டே இங்குள்ள நூலகங்கள் நூல்களை எடுக்கும். தமிழ் வாசிப்புக் குறைந்து போகையில் அதன் இடமும் குறைவது இயல்பானது. இது சற்றுத் தொலைவான ஒரு நூலகம் என்பதால் போகும் சந்தர்ப்பம் வாய்த்தால் 10-15 தமிழ்ப் புத்தகங்களை இரவல் எடுத்து வருவதுண்டு. இம்முறை அப்படித் தேர்வு செய்து எடுத்தும், என் விருப்புக்கேற்ற 10 புத்தகங்களே வரவில்லை என்பது கவலைதான்.

ஆனால் எனக்குப் பிடித்தமான எஸ்.வி.ராஜதுரையின் 'பார்வையிழத்தலும் பார்த்தலும்' கண்டு அதை எடுத்துக் கொண்டு வந்து வாசிக்கத் தொடங்கினேன். இதை ஏற்கனவே 10 வருடங்களுக்கு முன்பு வாசித்திருப்பேன். தமிழில் வந்த முக்கியமான ஒரு தொகுப்பு என்பேன். எஸ்.வி.ஆர் எழுதிய தனிக்கட்டுரைகள் அல்லாது, புத்தக வாசிப்புக்கள்/அரசியல் விமர்சனங்கள் என்று பல்வேறு நோக்குகள் கொண்ட ஒரு தொகுப்பு. ஹோஸே ஸரமாகோவின் நூல்களைப் பற்றிய அற்புதமான கட்டுரை இதில் இருக்கின்றது. அதுவே இத்தொகுப்பின் தலைப்பும் ஆகவும் உள்ளது. அண்மையில் தனித்து எஸ்.வி.ஆர் ஹோஸே ஸரமாவைப் பற்றி ஒரு தனிப்புத்தகமே வெளியிட்டிருக்கின்றார்.

இது மூன்றாண்டுகளில் (2004-2007) எழுதிய கட்டுரைகளாகும். அதில் இலங்கையில் அப்போது கொல்லப்பட்ட தராக்கி சிவராம் பற்றியும், திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டு சமாதானக் காலம் குழப்பப்படும் நிலைமை பற்றியும், இலங்கை அதிபரின் (மகிந்த ராஜபக்ச) இந்தியா வருகை குறித்தும் என இலங்கை தொடர்பான பல கட்டுரைகளும் உள்ளன. இதே காலகட்டத்தில் எஸ்.வி.ஆர் இலங்கைக்கும் பயணித்தவர் என்பதால், அங்கே அவர் பார்த்த தர்மசிறி பண்டாரநாயக்காவின் நாடகமான  'ட்ரோஜன் கந்தாவோ' என்பதைப் பற்றி 'ஆட்லறிகளுக்கிடையில் ஒரு வெண்புறா' என்ற ஒரு விரிவான கட்டுரையும் எழுதியிருக்கின்றார்.

இதில் முக்கியமானது என்னவென்றால், எஸ்.வி.ஆரின் வழமையான நடையை அவ்வளவாகக் காணமுடியாது. இவை வெவ்வேறு சஞ்சிகைகளுக்கும் பத்திரிகைகளுக்கும் எழுதியவை என்பதோடு எஸ்.வி.ஆர் தனது முன்னுரையில் அவர் இரண்டாண்டுகள் தலித் மக்கள் இருந்த கிராமத்தில் வாழ நேர்ந்த அனுபவம் தன் மொழியை எளிமையாக்கி இருக்கின்றதென்றும் சொல்கிறார். இவ்வாறாக தனக்குள் நிகழ்ந்த மாற்றங்களை எஸ்.வி.ஆர் குறிப்பிட்டுச் செல்வது முக்கியமானது.


இதேவேளை சா.கந்தசாமியின் சிறுகதைகளையும் வாசித்துக் கொண்டிருந்தேன். 'ஆறுமுகசாமியின் ஆடுகள்' என்று நற்றிணை பதிப்பகத்தினூடாக வந்த நூலையும், 'தக்கையின் மீது நான்கு கண்கள்' என்று காலச்சுவடு கிளாஸிக் வரிசையில் வெளியிட்ட நூலையும் மாறி மாறி வாசித்துக் கொண்டிருந்தேன். 'தக்கையின் மீது நான்கு கண்கள்' 70களில் வந்த சா.கந்தசாமியின் முதல் சிறுகதைத் தொகுப்பு என நினைக்கின்றேன். அவரது 25ஆவது வயதில் 'சாயாவனம்' நாவலை எழுதியவர். மு.தளையசிங்கம், எஸ்.பொ போன்றவர்கள் என அன்றைய தலைமுறையைச் சேர்ந்த பலர், அவர்களின் 25வது வயதில் முதல் நாவல்களை எழுதியவர்கள் என்கின்றபோது  வியப்பு வராமல் விடாது.

'தக்கையின் மீது நான்கு கண்கள்' தொகுப்பிலிருக்கும் கதைகளை இப்போதும் -45 வருடங்களுக்குப் பிறகு- சுவாரசியமாக வாசிக்க முடிகிறது. எனக்கு அவரின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பிலிருந்த 'சாந்தகுமாரி' கதை நன்கு பிடித்திருந்தது. அதில் 'வன்கூவர்' என்றொரு கதையும் கனடாவில் நடப்பதான கதை. அது கடந்தகாலத்தில் உழன்று அம்மாக்களைப் புரிந்து கொள்கின்ற கதை. வன்கூவரின் பயணிக்கும்போது ஒரு தந்தை தனது தாய், அவரின் பாட்டி போன்றவர்களின் கதையைச் சொல்லும்போது, அந்தத் தந்தை தனது மகன் தன் மீது பரிவுடன் நடந்துகொவான் என்று நம்புகின்றார். ஆனால் அவனோ 'அம்மா பாவம்' என்று தனது தாயை நினைத்து வருந்துவான். எல்லா மகன்களுக்கும் அப்பாக்கள் எவ்வளவு பாசத்துடன் இருந்தாலும் அவர்கள் தமது அம்மாக்களையே இறுதியில் தேர்ந்தெடுப்பார்கள் என்று அழகாக இந்தக் கதை முடிந்திருக்கும். சா. கந்தசாமியே ஒரேயொரு முறைதான் நேரில் கண்டிருக்கின்றேன். அப்போது அவரின் பிள்ளைகளில் யாரோ ஒருவர் வன்கூவரில் வசித்துக் கொண்டிருந்ததாகும் நினைவிருக்கின்றது. ஒரு பயணத்தைக் கூட கதையாக மாற்றி அதைக் காலத்தின் ஒரு துளியில் உறைந்துவைக்க முடியுமென்பதற்கு இந்தக் கதை ஒரு சான்று.

ஆக, மீண்டும் எழுத்து/வாசிப்புக்குள் போவது இதமாக இருக்கின்றது. புத்தகங்கள் வாசிப்பதைக் கைவிடாதீர்கள். எழுத முடிந்தவர்கள் எழுதாமல் இருக்காதீர்கள். அண்மையில் புஷ்பராணி காலமானபோது நண்பரொருவர் சொன்னார்; 'புஷ்பராணி வேறு சில பெண்களும் (அங்கயற்கண்ணி,இன்னுஞ் சிலர்) அரசியல் காரணங்களுக்காக கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். மற்றவர்களின் பங்களிப்பு காலத்தில் மறக்கப்பட்டுவிட்டது. ஆனால் புஷ்பராணி 'அகாலம்' எழுதியதால் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கடத்தப்பட்டுவிட்டார், அது முக்கியமான அவரின் பங்களிப்பு' என்றார். எல்லோருக்கும் சொல்வதற்கு பல கதைகள் இருக்கும். எழுதியோ, இசையாகவோ இல்லை வேறெந்த வடிவமாகப் பதிவு செய்யும்போது நமது வாழ்வும் ஏதோ ஒருவகையில் அர்த்தமுறக்கூடுமல்லவா?

****

 

(May 23, 2025)

கார்காலக் குறிப்புகள் - 93

Wednesday, May 28, 2025

 

ஒசாமா பின் லாடனை பிடிப்பதற்கு அமெரிக்கா எவ்வளவு நீண்டகாலம் முயன்றது என்பது நம்மனைவருக்குந் தெரியும். இந்த ஆவணப்படமானது இந்த முயற்சியில் ஈடுபட்ட பலரைப் பேச வைத்ததன் மூலம் எப்படி ஒசாமா கொல்லப்பட்டார் என்பது வரை ஆழமாகக் காட்டுகின்றது. வளர்ந்த கடா நெஞ்சினில் மோதியது என்பது மாதிரி அமெரிக்கா வளர்ந்துவிட்ட ஒசாமாவே அமெரிக்காவுக்கு எதிராகத் திரும்பினார். அது அமெரிக்க மண்ணிலே அமெரிக்காவே நினைத்துப் பார்க்க முடியாத 9/11 தாக்குதலாக மாறியியிருந்தது.

அன்று ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த ரஷ்யாவுக்கு(அன்றைய சோவியத் ஒன்றியம்) எதிராக போரடிய இயக்கமாகிய முஜாஜூனுக்கு மில்லியன்கணக்கில் அமெரிக்க பணத்தை அள்ளிவழங்கியது. அதிலிருந்து முளைத்தெழும்பிய ஓசாமா பின்னர் அல்-ஹைடாவை தனியொரு இயக்கமாக வளர்த்தெடுத்தது நாமனைவரும் அறிந்ததே.

வரலாற்றுச் சங்கிலியை எளிதில் உடைத்தெறிதல் எளிதல்ல. அமெரிக்காவும் கடந்தகாலங்களிலிருந்து அவ்வளவு கற்றுக் கொள்வதில்லை. இல்லாவிட்டால் இன்று சிரியாவைக் கைப்பற்றிய இயக்கத்தின் தலைவரோடு நேற்று டிரம்ப் கைகுலுக்கி மகிழ்ந்திருக்கமாட்டார். டிரம்ப் கைகுலுக்கிய அஹமட் அல்-ஷாராவின் இயக்கம் கடந்த வருடம் இறுதிவரை, ஒரு பயங்கரவாத இயக்கமென அமெரிக்கா உட்பட்ட பல நாடுகளால் தடைசெய்யப்பட்டிருந்தது. இத்தனைக்கு இந்தச் சிரியத் தலைவரின் வரலாறே அல்-ஹைடாவோடு இணைந்து போராடுவதிலிருந்துதான் தொடங்கியிருந்தது. எப்படி அமெரிக்காவில் 9/11 நடந்தபின் ஒசாமாவின் தலைக்கு 25 மில்லியன் பணம் அமெரிக்கா அறிவித்ததோ, அப்படித்தான் இந்த சிரிய இயக்கத்தலைவரின் தலைக்கும் மில்லியன் டொலர் 'bounty' அறிவிக்கப்பட்டிருந்தது.

அல்-ஹைடா அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் செய்த தாக்குதல்களை மறக்கமுடியாது. அதுபோல 9/11 உயிரிழந்த அப்பாவி மக்களையும் நாம் எளிதில் தாண்டி வரமுடியாது. ஆனால் தீவிரவாதத்தின் ஊற்றுமுகம் தனியே 'பயங்கரவாதிகள்' என நாமம் சூட்டப்பட்டவர்களிடமிருந்து மட்டும் வருவதில்லை என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. ஓர் இயக்கம் செய்வதைப் 'பயங்கரவாதம்' என்று எளிதில் பெயர் சூட்டிவிட முடியும் நம்மால் இஸ்ரேல், இலங்கை போன்ற அரசுக்கள் செய்ததை/செய்வதை நாம் என்ன பெயரிட்டு அழைக்க முடியும்?

தனி மனிதர்களையோ, தனியே இயக்கங்களையோ அழிப்பதால் உலகில் அமைதி தோன்றிவிடும் என்ற பழைய மரபான சிந்தனைகளிடமிருந்து வெளிவராதவரை ஒசாமா பின் லாடன்கள் தோன்றுவதை நாம் ஒருபோதும் நிறுத்தமுடியாது. வேண்டுமெனில் ஒவ்வொரு நாடும் தான் கட்டியமைத்திருக்கும் 'தேசியப் பெருமிதத்திற்கு' இவை எண்ணெய்யை ஊற்றி மேலும் கொஞ்ச நேரம் எரிய வைக்கக்கூடும். அவ்வளவுதான். அதற்கப்பால் 'பயங்கரவாதம்' ஏன் தோன்றுகின்றது என்று அதன் வேர்களை நோக்கி ஆழமாய விடை காணாதவரை இந்த 'அழித்தொழிப்புக்கள்' தற்காலிக முடிவுகளே. அதைத்தான் இந்த ஆவணப்படத்தின் முடிவிலும் இது ஒசாமா என்கின்ற ஒரு அத்தியாயத்தின் முடிவு மட்டுமே எனச் சுட்டிக்காட்டுகின்றார் ஒருவர்.

**********

(Netflix இல் இன்று வெளியாகிய 'American Manhunt: Osama Bin Laden' ஆவணப்படத்தை முன்வைத்து)


-May  15-



கார்காலக் குறிப்புகள் - 92

Monday, May 26, 2025

 

ர்மேனியர்களுக்கு நடந்த படுகொலைகளை உலகம் ஏற்றுக்கொள்ள அவர்கள் ஒரு நூற்றாண்டு காத்திருக்க வேண்டியிருந்தது. நம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக நீதி கேட்டு நடக்க வேண்டிய தூரமும் வெகு தொலைவாகவே இருக்கும். அதைப் பார்க்க நாம் உயிரோடு இல்லாது போனாலும், நமது ஏதோ ஒரு தலைமுறை அதை நிகழ்த்திக் காட்டும் என்கின்ற நம்பிக்கை இருக்கின்றது. ஆக, நாம் இப்போது செய்யவேண்டியது தொடர்ச்சியாக இந்தப் படுகொலைகளை நினைவுபடுத்தியபடி நமக்கு அடுத்த தலைமுறைகளுக்குக் கடத்த வேண்டியதுதான். அதேவேளை எமது இயக்கம்/இயக்கங்கள் 'விடுதலை'யின் பெயரால் நிகழ்த்திய அநீதிகளையும் நாம் மனதார ஒப்புக்கொண்டாக வேண்டும். இல்லாதுவிட்டால் நாம் முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் பொருட்டு கோரிநிற்கும் நீதியில் அர்த்தமிருக்காது.

இந்த யுத்தம் முடிந்த பின், 16 வருடங்களின் பின்னும், இந்த நாடு வளர்ச்சிப்பாதையில் போகாமலும், தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினரின் குரல்களை அசட்டை செய்தும் கொண்டிருக்கின்றதென்றால், நிச்சயம் இலங்கையில் நடந்த ஆயுதப்போராட்டங்களினால்தான் அந்த நாடு உருப்படாது போனது என்று மனச்சாட்சியுள்ள எந்த இலங்கையரும் இனியும் சொல்லிக் கொண்டிருக்கமாட்டார்கள். 

 

மாறவேண்டியதும்/மாற்றவேண்டியதும் இந்த அரசு/அரசாங்கங்கள் கொண்டிருக்கின்ற சிந்தனைகளையும், அவர்களினூடு ஏதோ ஒருவகையில் பரப்பப்பட்டுக் கொண்டிருக்கும் இனவாதத்தையுந்தான். போர் முடிந்து வந்த தேர்தல்களில் பெரும்பான்மை ஆட்சியமைக்கின்ற ஒவ்வொரு சிங்களக் கட்சிக்கும் இனப்பிரச்சினையை எளிதாகத் தீர்க்கின்ற தீர்ப்புக்கள் மக்களால் அளிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றது. ஆனால் அரசமைக்கும் அவர்கள் கோருவதோ இதையெல்லாம் மறந்து 'இலங்கையர்கள்' என்ற ஒற்றைக்குடைக்குள் வந்தால் எல்லாமே மறக்கப்பட்டு நாடு சுபீட்சம் அடைந்துவிடும் என்பதாகும்.

இன்றைய ஜேவிபி கூட்டு அரசின் ஜனாதிபதியான அநுரவே அடிக்கடி தமது கொல்லப்பட்ட தோழர்களை, தமது இயக்கம்/கட்சி எதிர்கொண்ட ஒடுக்குமுறைகளை நினைவுபடுத்தித்தான் பேசிக் கொண்டு இருக்கின்றார். கடந்தகால அரசுக்களால் தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்ட அநீதிகளுக்கு மட்டுமில்லை, உங்கள் தோழர்களுக்கு நிகழ்த்தப்பட்ட படுகொலைகளையும் பொதுமன்றில் கொண்டுவருவதற்கு இதைவிட வேறொரு அரிய தருணம் எதுவுமில்லை என்று நீங்கள் அறிவீர்கள். மேலும் நீங்கள் இன்று ஏறிநிற்கும் ஜனாதிபதி என்ற அரியாசனம் கூட, கொல்லப்பட்ட உங்கள் தோழர்களின் புதைகுழிகளின் மேல்தான் இருக்கின்றது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

எது நடக்கின்றதோ/ இல்லையோ நாம் இந்த யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களை தொடந்து நினைவுபடுத்தியபடி இருப்போமாக.

அது சுடரேந்திய தொடரோட்டம்!

***

 

(May 18, 2025)

கார்காலக் குறிப்புகள் - 91

Thursday, May 22, 2025

 

Tourist Family திரைப்படம் வந்தவுடனேயே பார்த்திருந்தேன். எந்த ஒரு படைப்பும் - அது இலக்கியமாக இருந்தாலென்ன, திரைப்படமாக இருந்தாலென்ன- அது முதலில் நம்மை உள்ளிழுக்க வேண்டுமென நினைப்பேன். அப்படி இருந்தால்தான் நாம் அந்தப் படைப்பைப் பேச எம்மை உந்தித் தள்ளும். நம்மை வெளியில் தள்ளும் திரைப்படங்களை (அண்மைய உதாரணம் Retro) எளிதாக நாம் கடந்து போய்விடுவோம்.


அந்தவகையில் Tourist Family நம்மை உள்ளிழுத்து உரையாடல்களை உருவாக்கக் கூடிய திரைப்படம். கலை என்பது எப்போதும் அரசியலை நேரடியாக முன்வைக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அத்தோடு நாம் ஈழத்து அரசியலைப் பேசுகின்றோம் என்று தமிழகத்திலிருந்து புறப்பட்ட பலர் அதை அபத்தமாகச் சொல்லி சிதைத்ததையும் பார்த்திருக்கின்றோம். அந்தவகையில் இந்தத் திரைப்படம் ஈழ அரசியலை நீக்கம் செய்து ஒரு பொதுவான கருணை/மனிதாபிமானம் என்ற புள்ளிகளில் அணுக விரும்புகின்றது.


இத்திரைப்படத்துக்காக அவர் மேலோட்டமாக இலங்கை நிலவரத்தையோ,பண்பாட்டு/கலாசார விடயங்களையோ எடுத்துக் கொள்ளவில்லை என்பது நிம்மதி தருவது. மற்றது இந்த நெறியாளர் 25 வயதில் இருப்பவர். அவருக்குரிய வயதுக்கு மேலான முதிர்ச்சியில் அணுகியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஏதோ ஒரு நேர்காணலில், இதை தெனாலி-02 மாதிரியாக நினைத்து எழுதியிருப்பேன் எனச் சொல்லியிருந்தார். ஆனால் தெனாலி ஈழத்தமிழரை நகைச்சுவையென்ற போர்வையில்  கீழிறக்கியது போல அல்லாது, நேர்மையாக ஒரு ஈழக்குடும்பத்தை அணுகியிருக்கின்றது. 


மேலும் இதில் நகைச்சுவையாக்கிய காட்சிகளுக்குப் பிறகும் யதார்த்தமாக அந்த விடயத்தை காட்ட நெறியாளர் எடுத்த உழைப்பைச் சுட்டிக்காட்ட வேண்டும். உதாரணமாக அந்த பதின்மத்தில் இருப்பவன் ஈழத்தில் விட்டுவந்த காதலி திருமணம் செய்வதை நகைச்சுவையாக்கியபோது, பிறகு அந்தக் காதலியை இழந்த இந்த இளைஞன் தந்தையோடு உரையாடுவதைச் சொல்லலாம். ஆகவே அதில் நகைச்சுவையைத் தாண்டி யதார்த்தைத் தரிசிக்கும் இடங்களும் இருக்கின்றது.


இந்தக் கதை போல நிகழ்தல் சாத்தியமா இல்லையா என்பதை நாம் இவ்வாறான திரைப்படங்களில் பார்க்க முடியாது. ஒருவகையில் யதார்த்தை மீறிய மீயதார்த்தமெனச் சொல்லலாம். ஆனால் திரைக்கதை இறுக்கமாக எழுதப்பட்டிருந்தால் அது பிற விடயங்களை யோசிக்காது நம்மை கதைக்குள் இருத்தி வைத்திருக்கும். 


இதற்கான உதாரணமாக நான் அடிக்கடி என் சிறுவயதுகளில் பார்த்து 'புது வசந்தத்தை'ச் சொல்வதுண்டு. நான்கு நண்பர்களோடு அந்நியோன்னியமாக இருக்கும் ஒரு பெண் ஒருநாள் திருமணம் செய்து கொள்கின்றாள். வருகின்ற கணவன் இந்த நட்பை சந்தேகப்படுகின்றான். அவள் இறுதியில் தன் திருமண வாழ்வை முறித்து, இந்த நான்கு நண்பர்களோடு சேர்ந்து வாழத் திரும்ப வருவதாக முடிகின்றது. இது அந்தக் காலத்து (இந்தக் காலத்திலும்) தமிழ்ச்சூழலில் சாத்தியம் இல்லை என்று தெரியும். ஆனால் திரைக்கதை நம்மை அது நடக்கமுடியும் என்று நம்பவைப்பதற்கான இழைகளுடன் அருமையாக அமைக்கப்பட்டிருக்கும். 


அவ்வாறு இந்தத் திரைப்படத்திலும் இப்படி ஒரு தெரு இந்த 'பொருளாதார அகதி' குடும்பத்தை அரவணைத்து பராமரிக்குமா? ஒரு இலங்கை குடும்பத்தை சுற்றியிருக்கும் அயலவர்கள் மட்டுமில்லை, பொலிஸ்/அரசு போன்றவையும் காப்பாற்றுமா என்றால் யதார்த்தில் சாத்தியமில்லை என்பதற்கு எண்ணற்ற உதாரணங்கள் இருக்கின்றன. ஆனால் நாங்களும்/ நீங்களும் வேறு வேறில்லை. நமக்கிடையே நிலங்களோ/பண்பாடோ வேறாக இருந்தாலும் மொழி நம்மை இணைக்கின்றது என்பதை அழகாகச் சொல்கின்றது.


ந்த படம், அதுவும் இந்த Good/Bad/Ugly, Retro போன்று நம் கழுத்தை நாமே அறுக்கவைக்கும் திரைபடங்கள் வந்துகொண்டிருக்கும்போது முக்கியமான வரவு என்பேன். இதன் கதை மட்டுமில்லை, திரைக்கதையை executive செய்த விதமும் சிறப்பானது. பலரிடம் நல்ல கதைகள் இருந்தாலும், அதை காட்சியாக்கும்போது சறுக்கிவிடுவார்கள். அந்தவகையில் ஒரு 25 வயது இளைஞன் மிகுந்த பொறுப்புணர்வுடன் எடுத்திருப்பது அவருக்கு கலை மீதான நேசிப்பில்லாது இது சாத்தியமில்லை.


இப்போது வேறோரு திசையைப் பற்றியும் யோசித்துப் பார்க்கலாம். ஈழத்தில் இருந்து யுத்தம் காரணமாகவோ (அல்லது இப்போது பொருளாதா நிலைமை காரணமாகவோ) புறப்பட்ட மக்களை தம் நாட்டில் உள்ளிழுத்த ஐரோப்பா/அமெரிக்க/ஆஸ்திரேலியா கண்டத்து நாடுகளை போலவன்றி, 'தொப்பூழ்கொடி' என்று அரவணைத்துக்கொள்கின்ற மக்கள் இருக்கின்ற நாடும், மக்களும், அங்கே 30 வருடங்களாக இருக்கும் மக்களை இன்னும் அகதிகளாகவே வைத்திருக்கின்றது. அவர்களுக்கு எந்த உரிமைகளும் வசதிகளும் மற்றவர்களைப் போல இல்லை.  அவர்கள் இன்னமும் தத்தளித்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்தத் துயரங்களோடே  வாழ்வை எதிர்கொண்டபடி இருக்கின்றார்கள். அவற்றை எளிதாக மறைத்து வேறொரு கதையை இது சொல்கின்றதெனும் விமர்சனக் குரல்களையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். ஒரு திரைப்படம் எல்லா அரசியலையும் சொல்லவேண்டும் என்றில்லை, ஆனால் அதைப் பேசுவதும் முக்கியமானது என்பதையும் இத்திரைப்படத்தின் உரையாடல்களின்போது நாம் தொடர்ந்து கவனப்படுத்துவதையும் நிச்சயம் செய்யவேண்டும்.


மற்றும்படி  இந்த வருடத்தில் வந்தவற்றில் ஒரு முக்கிய திரைப்படம். அதுவும் 25 வயது இளைஞன் மனிதாபிமானத்தை முக்கியப்படுத்தி மென்னுணர்வுகளால் நம்மோடு உரையாடுவது என்பது அவ்வளவு எளிதானதில்லை. ஏனென்றால் அவரின் வயதொத்தவர்கள் மட்டுமில்லை, அவருக்கு முன்னால் இருக்கும் எல்லா நெறியாளர்களும் வெட்டும் குத்தும், இரத்தமும், கொலையுமாக இருக்கும்போது, அவற்றிலிருந்து முற்றிலும் விலகி இப்படியான ஒரு கதையைச் சொல்ல வந்ததை நாம் மனமுவந்து பாராட்ட வேண்டும்.

****


(May 10, 2025)


பனிக்காலத் தனிமை - 08

Wednesday, May 14, 2025

 

மே மாதம் வந்துவிட்டது. உழைப்பின் முக்கியத்துவம்/தொழிலாளர் உரிமைகளை நினைவூட்ட உழைப்பாளர் தினமும் ஒவ்வொருவருடமும் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது. மூலதனம் பற்றியும், உழைப்பு/உற்பத்தியின் மூலம் மனிதர்கள் அந்நியமாதல் பற்றியும் மார்க்ஸ்/ஏங்கல்ஸ் நிறையப் பேசியிருக்கின்றனர். அந்தப் பாதையில் பின்னர் வந்த பாப் பிளாக் போன்றவர்கள் 'உழைப்பை ஒழிப்பது' (The Abolition of Work) பற்றி விவாதித்திருக்கின்றார்கள்.
 

புத்தரும், ஸென் ஆசிரியர்களும் உழைப்புப் பற்றி என்ன சொல்லியிருக்கின்றனர் என்பது வேறொரு பரிணாமத்தை நமக்குத் தரக்கூடும். ஸென் இங்கேயுள்ள உயிரிகள் எல்லாமே எப்போதும் வேலை செய்து கொண்டிருக்கின்றன என்பதை வரையறுக்கின்றது. அது உடலுழைப்பாகவோ, கற்றல்/கற்பித்தல் இருந்தாலோ எதுவாக இருந்தாலும் எப்போதும் நாம் எல்லோரும் வேலை செய்து கொண்டிருக்கின்றோம் என்கின்றது. ஒரு அலுவலகத்துக்கோ அல்லது தொழிற்சாலைக்கோ காலை போய் மாலை வருவது மட்டும் 'உழைப்பு' என்று ஸென் வரையறுப்பதில்லை.


மேலும் எந்த வேலையைச் செய்தாலும், அதனோடு முற்றுமுழுதாக இயைந்து செய்யவேண்டும், அது எப்படியெனில் ஒரு விறகுக்கட்டையானது முற்றுமுழுதாக ஒரு தடயமும் இல்லாது எரிந்து போவதுபோல, செய்யும் வேலையுடன் ஒன்றிணைந்து செய்ய வேண்டும் என்கின்றது. ஒரு வேலையைச் செய்யும்போது எமக்கு எப்போது எரிச்சலோ, கோபமோ, மற்ற சக பணியாளர் எமக்கு ஒத்துழைக்க இல்லை என்ற சலிப்போ வருகின்றது என்றால், நாம் பல விடயங்களை மனதில் எடுத்துக் கொண்டிருக்கின்றோம் என்று அர்த்தம். எனவே இந்த விடயங்களை ஒரு வேலையைச் செய்யும்போது, எம் எண்ணங்களில் இருந்து வெளியே போக (Letting Go ) செய்ய அனுமதிக்க வேண்டுமென ஸென் சொல்கிறது.

புத்தரின் வரலாற்றைப் பார்த்தால், அவர் தனது சங்காவில் இருந்த பிக்குகளும், பிக்குணிகளும் அவ்வாறு மட்டுமே இருக்க வேண்டுமென விரும்பியவர். பிற விடயங்களில் கவனஞ்செலுத்தாது இப்படி இருப்பதே ஞானமடைவதற்கு எளிதாக இருக்குமென புத்தரும் அவரின் பின்வந்த ஆசிரியர்களும் நம்பினார்கள். அதனால்தான் அன்றைய காலத்தில் உணவுக்காக பிக்குகள் மடிப்பிச்சை கேட்டு சுற்றியிருந்த ஊரவர்களிடம் சென்றார்கள். அவர்களின் ஒரேயொரு முதன்மை நோக்கம் தியானத்தில் இருப்பதேயாகும். பின்னர் பெளத்தம் சீன/ஜப்பான் போன்றவற்றுக்குப் பரவியபோதும் இந்த கலாசாரமே நெடுங்காலம் நீடித்தது. இவ்வாறு பிச்சை கேட்டு செல்வதால் இன்னொரு நல்ல விடயமும் ஸென் மரபில் நிகழ்ந்தது. அதாவது சாதாரண மக்களோடு பழக, சுற்றியிருக்கும் ஊர்களில் என்ன நடக்கின்றது என்பதை அவர்களால் எளிதாக அறிய முடிந்தது.

நான் சில வருடங்களுக்கு முன் கம்போடியாவுக்குப் போனபோதும், இவ்வாறு உணவுப் பிச்சை கேட்டு வந்த பிக்குகளைக் கண்டிருக்கின்றேன். ஒரு சிலரோடு உரையாடியும் இருக்கின்றேன். ஆக இன்றும் சில மடாயலங்களில் இந்தக் கலாசாரம் நீடித்தபடி வந்திருக்கின்றது.

ந்த 'உழைப்பு' எங்கே சலிப்பாகின்றது என்பதற்கு இன்னொரு உதாரணத்தைத் தருகின்றேன். எனது ஆசிரியரான தாயின் ப்ளம் விலேஜ் மடாலயம் பிரான்ஸில் இருக்கின்றது. தாயின் மறைவின்பின் அதை சங்காவின் உறுப்பினர்கள் பொறுப்பெடுக்க வேண்டி வந்தது. ஏனெனில் எனது ஆசிரியர் தாய், தனக்கு அடுத்தவர் இவர்தான் மடாலயத்தின் தலைமைக்குரியவர் என்று (திபெத்திய தாய்லாமா மாதிரி தேர்தெடுக்கவில்லை. அந்த மரபு ப்ளம் விலேஜில் இல்லை. இதனால் தாயோடு நீண்டகாலம் இருந்த Brother Phap Huu மடாலயத்தின் பொறுப்புக்களை எடுத்தபோது தனக்கு சலிப்பும்/எரிச்சலும் வந்ததென்கின்றார். அதனால் மடலாயத்தைவிட்டு ஒரு வருடProbation எடுத்து, வெளியே போக விரும்பியிருக்கின்றார். ஏனெனில் தான் இந்த மடலாயத்துக்கு தன்னிலை அடைவதற்கான பாதையை அறிய வந்தேனே தவிர, மடத்தின் கணக்குவழக்குகள், ஒவ்வொருவரின் தனிப்பட்ட பிரச்சினைகளை தீர்க்கவரவில்லை என்ற எண்ணமே தன்னை ஒருபொழுது ஆக்கிரமித்தது என்றார்.

அது ஒருவகையில் உண்மைதான். இன்றைய நவீனகாலத்தில் புத்த மடலாயங்கள் தன்னிருப்பை வைத்திருக்க வேண்டுமெனில் புதிய வழிகளில்தான் செல்ல வேண்டியிருக்கின்றது. பின்னர் Brother Phap Huu, இது தனது ஆசிரியர் தமக்கான விட்டுச் சென்ற பணி, அவரில் மதிப்பிருந்தால், அவரை அடுத்தடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல, இந்த மரபை/மடலாயத்தை தொடர்ந்து நடத்துவதில் செயலாற்றுவதே முக்கியமென்ற தீர்மானத்துக்கு வந்தார் என்கின்றார். ஆக, ஒரு புத்த பிக்குவிற்கு, அதுவும் 25 வருடங்களுக்கு மேலாக மடாலாயத்தில் தங்கி ஓர் ஆசிரியரோடு வாழ்ந்தவருக்கும் நம்மைப் போன்ற வேலை/பணிச் சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றது என்பதற்காகச் சொல்கின்றேன். எல்லாம் துறந்தவர்க்கே இப்படியான இருத்தலியச் சிக்கல்கள் இருக்கின்றனபோது, நாம் பரவாயில்லை என நம்மைத் தேற்றிக் கொள்ளலாம். ஆனால் அவர்கள் எவ்வாறு இதை ஸென்னினூடாக அணுகி தெளிவடைகின்றார்கள், மீண்டும் மீண்டும் இயல்புக்கு வந்து யதார்த்ததை எவ்வாறு நேரடியாக எதிர்கொள்கின்றார்கள் என்பதே நாம் கற்றுக்கொள்ள வேண்டியது.

ஒரு வேலை எப்போது அழகற்றதாக இருக்கின்றதெனில், அந்த வேலையில் கலைத்துவமோ, சிருஷ்டிப்பதோ, அந்த வேலையினால் ஒரு முக்கியமோ இல்லாதபோது வேலை கொடுமையாகின்றது. இதைத்தான் மார்க்ஸ் 'அந்நியமாதலில்' விரிவாகப் பேசுகின்றார். ஒருவகையில் ஸென்னும் அதைத்தான் கூறுகின்றது. உங்கள் வேலையில் முழுமையாக, அது ஒரு வேலை என்று அறியாது செயற்பாட்டில் முற்றாக ஒன்றிணந்து இருக்கச் சொல்கின்றது.

உதாரணத்துக்கு, ஊர்களில் தோட்டங்களில் வேலை செய்பவர்களைப் பாருங்கள். அவர்களுக்கு ஒரு நாள் விடியும்போது, அவர்களுக்கு தோட்ட வேலைகளும் தொடங்கிவிடுகின்றது. அவர்கள் இது எனது வேலை, எனது ஓய்வு என்று பிரித்துப் பார்ப்பதில்லை. தோட்ட வேலையைச் செய்யும்போதோ, அங்கே வரும் அயலவர்களுடன் கதைக்கின்றார்கள். மற்ற வேலைகளைச் செய்கின்றார்கள். அவர்கள் எது முக்கியமாக அந்தக் கணத்தில் இருக்கின்றதோ அதை மனமொன்றிச் செய்கின்றார்கள்.
மேலும், நிலத்தைப் பண்படுத்துவதில், பயிர்களை நடுவதில், அவை செழித்து வருவதிலென ஒவ்வொரு காலகட்டத்திலும் அழகைப் பார்க்கின்றார்கள். மனநிறைவை அடைகின்றார்கள்.

னது சிறுவயதுகளில் வாசித்த அநேக (ஈழத்து) நாவல்களில் கதைகள் தோட்டம் செய்யும் பாத்திரங்களோடோ தொடங்கும். அதையெல்லாம் வாசிக்கும்போது எவருக்கும் கட்டுப்படாத எவ்வளவு அழகான வாழ்க்கை என்று நினைப்பதுண்டு. என் சிறுவயதுக் கனவாக தோட்டம் செய்வதாகவே இருந்தது. இத்தனைக்கும் எங்களுக்கென தோட்டம் செய்த நிலங்களே இல்லாமலே இந்தக் கனவு எப்படி எனக்குள் உள்நுழைந்தது என்பது வியப்பானது.

இதனால் தோட்டங்களைச் செய்பவர்கள் கஷ்டங்களையோ, துயரங்களையோ அனுபவிப்பதில்லை என்பதல்ல அர்த்தம். ஆனால் அவர்கள் அந்தத் 'தொழிலை' நம்மைப் போன்ற நவீன காலத்து மனிதர்கள் போல பிரித்துப் பார்க்காது, அதனோடு ஒன்றிணைந்து பார்த்தார்கள் என்பதையே கவனப்படுத்துகின்றேன்.

நாங்கள் வேலையை ஒரு 9-5 பிரித்து வைத்திருக்கின்றோம். ஆனால் இந்த 9-5 மட்டுமா வேலை செய்கின்றோம்? இல்லையல்லவா? அதற்கு முன்னரும் பின்னரும் வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றோம். ஒரு மரம் என்பது முளைப்பதிலிருந்து அது பட்டுப்போகின்றவரை 'உழைத்து'க் கொண்டுதான் இருக்கின்றது. அது தொடர்ந்து ஏதோ பிறருக்கு வழங்கிக் கொண்டே இருக்கின்றது. ஆனால் ஒருபோதும் அது 'வேலை' செய்துகொண்டிருக்கின்றேன் என்று நினைப்பதில்லை. அது எத்தனை காலநிலை மாற்றங்களை, நோய்களை எதிர்கொண்டிருக்கும். ஆனாலும் அது வளர்ந்துகொண்டே இருக்கின்றது. இலைகளையும், பூக்களையும், கனிகளையும் வழங்குவதில் பின்னிற்பதில்லை.

மரங்களுக்கும் மனிதர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் நாங்கள் 'பகுத்தறிவை' வைத்து அதிகம் சிந்திக்கின்றோம், செய்த பல விடயங்களுக்கு பிறரிடம் இருந்து அங்கீகாரத்தை எதிர்பார்க்கின்றோம். அந்த அங்கீகாரம் நம் உழைப்புக்காகக் கிடைக்காதபோது சுருங்கிப் போகின்றோம். இன்னும் ஒரு எல்லை மேலே சென்று பிறரைக் குற்றஞ்சாட்டுகின்றோம். இதனால் எமக்கோ பிறருக்கோ எந்த நன்மையும் விளையப்போவதில்லை. ஏனெனில் நாம் பலவற்றை அழுத்திப் பிடித்து (hold) வைத்திருக்கின்றோம், அவற்றை எம்மிடையே இருந்து வெளியே போக (Let Go)அனுமதிப்பதில்லை.

மேலும் ஸென் ஒருபோதும் பணம் சம்பாதிப்பதையோ/செல்வம் சேகரிப்பதையோ அது தவறென்று சொல்வதில்லை. பணத்தைப் பற்றி மட்டுமில்லை எந்த ஒன்றையும் ஸென் நிராகரிப்பதில்லை. ஏனெனில் ஸென்னில் discriminate என்ற கேள்விக்கே இடமில்லை. ஆனால் அதை சேகரித்து சேகரித்து மட்டும் உங்கள் வாழ்க்கையை வீணாக்காதீர்கள் என்று எச்சரிக்கையைத் தருகின்றது. இதைவிட எல்லையற்ற மகிழ்வுக்கும் நிம்மதிக்கும் அழைத்துச் செல்லும் பாதை தியானத்தினூடு இருக்கின்றது என்று நம்பிக்கையைத் தருகின்றது. நீங்கள் உழைப்பதும், செல்வம் சேர்ப்பதும் ஒரு மலர் விரிவதைப் போல் இயல்பாக இருக்கவேண்டும். வேறு எவரையும் சுரண்டி உழைப்பதோ/ செல்வத்தைச் சேர்ப்பதோ கர்மாக்களுக்கு வழிவகுக்கும் என சில ஸென் மரபுகள் நமக்கு நினைவூட்டுகின்றன.

இவை எல்லாம் எளிதா என்றால், இல்லை எனத்தான் சொல்ல வேண்டும். நாம் தொடர்ச்சியாக பிற விடயங்களால் செல்வாக்கு செலுத்தப்பட்டுக் கொண்டிருப்பார்கள். இப்படி ஒரு வழி இருக்கின்றதென்றாலே, நமது மனம் இதெல்லாம் சாத்தியமா, இதெல்லாம் கற்பனாவாதம் என்று சமாந்திரமாக யோசிக்கத் தொடங்கும். மூளை மிகச்சிறந்த தந்திரசாலி. உங்களை ஒவ்வொரு கணமும் குத்துச்சண்டை மேடையில் மூர்க்கமாக அடித்து வீழ்த்திக் கெக்கலிக்கும்.

ஸென் வேலை என்பது எப்போதும் நடந்து கொண்டிருக்கின்றது என்று சொல்கின்றது. மனிதர்கள் பிறந்ததிலிருந்து காலமாகும்வரை ஏதோ ஒருவகையில் உழைத்துக் கொண்டுதான் இருக்கின்றனர். அந்த உழைப்பு/வேலை எவ்வாறாக இருந்தாற் கூட அதை mindfulness ஆகச் செய்யச் சொல்கின்றது. சாதாரண வேலையில் வரும் சலிப்பு/எரிச்சல்/கோபம் என்பவை பிறரால் அல்ல, நாம் அழுத்தமாகப் பிடித்து வைத்திருக்கும் எண்ணங்களாலே உருவாகின்றதே தவிர, நாம் பிறரை குற்றஞ்சாட்ட அவசியமில்லை எனவும் நினைவூட்டுகிறது.

ஒரு வேலையைச் செய்யும்போது விறகு போல முற்றுமுழுதாக எரிந்து, ஒரு சிறுதடயமும் இல்லாது செய்து முடியுங்கள் எனச் சொல்கின்றது. ஏனெனில் அப்போது நீங்களும், வேலையும் வேறு வேறானதல்ல. இரண்டுமே ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து நீங்கள் தொலைந்துவிடுகின்ற அருமையான தருணம்!

********


(May 02, 2025)


கார்காலக் குறிப்புகள் - 90

Monday, May 12, 2025

 

கனடாப் பாராளுமன்றத் தேர்தல் - 2025
*******

நேற்று நடந்த பாராளுமன்றத் தேர்தல் பல்வேறு ஆச்சரியங்களையும், அதிர்ச்சிகளையும் கனடாவில் உருவாக்கியிருக்கின்றது.

கனடாவில் லிபரல், பழமைவாதக் கட்சி, புதிய ஜனநாயக் கட்சி, புளொக் குயூபெக்குவா என்பவை தேர்தலில் செல்வாக்குச் செலுத்தும் கட்சிகளாக இருக்கின்றன. அரசியல் நிலைப்பாட்டில் லிபரல் - Center, பழமைவாதக் கட்சி - Right, புதிய ஜனநாயக் கட்சி - Left என்று ஒரளவுக்குப் பிரித்துப் பார்க்கலாம். புளொக் குயூபெக்குவா என்பது பிரெஞ்சை முதன்மையான மொழியாகக் கொண்ட குயூபெக் மாநிலத்தில் மட்டும் போட்டியிடும் கட்சி. அது சுயநிர்ணய உரிமைகளையும், விரும்பினால், கனடாவில் இருந்து தனித்து நாடாகப் பிரிந்து போகும் தன்னாட்சி உரிமை தமக்கு இருப்பதாக வலியுறுத்தும் பிரெஞ்சு மொழி பேசுபவர்களை பிரநித்துவப்படுத்தும் ஒரு கட்சியாகும்.

கனடாவில் கடந்த மூன்று தேர்தல்களில் லிபரல் கட்சியினர் வென்றிருந்தனர். உலகின் பலரும் கவனத்தை ஈர்ந்த ஜஸ்டின் ரூடோ இதன் தலைவராகவும், கனடாவின் பிரதமராகவும் கடந்தகாலங்களில் இருந்திருக்கின்றார். ஆனால் அண்மைய சில வருடங்களில் அவரின் செல்வாக்கு பாதாளத்தில் சரிந்து, இனியொரு தேர்தலை லிபரல் சந்தித்தால் படுதோல்வியை அடையுமென்கின்ற நிலையே ஏற்பட்டிருந்தது.

இதன் காரணமாக கடந்த டிசம்பரில் புதிய ஆண்டுக்கான நிதி வரவு செலவு அறிக்கையை ஜஸ்டின் ரூடோ பாராளுமன்றத்தில் சமர்பிக்க வேண்டிய அந்தக் காலையில், கனடாவின் நிதியமைச்சர் தனது ராஜினாமாவைச் சமர்ப்பித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். மேலும் அயல்நாடான ஐக்கிய அமெரிக்காவில் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதால், கனடா பல்வேரு விடயங்களில் நெருக்கடியைச் சந்திக்க வேண்டி வந்தது.

2025ம் ஆண்டானது கனடாவிற்கான பாராளுமன்றத் தேர்தல் நடத்த வேண்டிய காலம். லிபரல் கட்சியின் தேர்தல் தோல்வி ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டும் விட்டிருந்தது. இப்போது அன்று இராஜினாமாச் செய்த நிதியமைச்சர் சொல்வதுபோல, லிபரல் கட்சிக்கு அதன் கட்சி அந்தஸ்துக்கு வேண்டிய 12 இருக்கைகள் கூட கிடைக்குமா என்பது அன்று சந்தேகமாக இருந்தது. கனடாவில் மொத்த பாராளுமன்ற இருக்கைகள் 343. அந்தளவுக்கு மோசமான சரிவை லிபரல் கட்சியினர் கடந்த ஆண்டின் இறுதியில் எதிர்நோக்கியிருந்தனர்.

ஆக, பழமைவாதக் கட்சி பெரும்பான்மை அமைப்பது உறுதி என்றே அனைவரும் மூன்று மாதங்களுக்கு முன்னர் நம்பியிருந்தனர். பிறகுதான் ஆச்சரியங்கள் நிகழத் தொடங்கின. டிரம்ப் ஜனவரியின் ஆட்சிக்கு வந்தவுடன் கனடா மீது மோசமான வரிகளை விதிக்கவும், கனடா அமெரிக்காவின் 51வது மாநிலம் என்றும், கனடாவின் பிரதமர் தங்களின் ஒரு கவர்னர் எனவும் அவர் நாளும் பொழுதும் பிதற்றத் தொடங்கினார்.

இதனால் கனடியர்களுக்கு கொஞ்சம் 'ரோஷம்' வரத் தொடங்கியது. இந்த நேரத்திலேயே ஜஸ்டீன் ரூடோவும் ஒரு நற்காரியத்தைச் செய்தார். அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமாய்ச் செய்தார். ஓர் இடைக்காலப் பிரதமராக மார்க் கார்னி தெரிவு செய்யப்பட்டார்.

டிரம்ப் கனடாவின் இறையாண்மை மீதும், பொருளாதாரத்தின் மீதும் தொடுத்த போர் லிபரல் கட்சியினருக்குச் சாதமாக மாறத் தொடங்கியது. அதுவரை தேர்தலில் பெரும்பான்மையாக வெல்லப்போவதாக இருந்த பழமைவாதக் கட்சியினரின் செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாக சரியத் தொடங்கியது. லிபரல் கட்சி இதுதான் சரியான நேரமென நினைத்து ஒரு மாதத்திற்கு முன்னர் கனடாப் பாராளுமன்ற தேர்தலை ஏப்ரல்-28இல் நடப்பதாக அறிவித்தனர்.

343 இருக்கைகள் கொண்ட பாராளுமன்றத் தேர்தலில், ஒரு கட்சி பெரும்பான்மை ஆட்சியதிகாரம் அமைக்க வேண்டுமெனில் 172 இருக்கைகள் வெல்லவேண்டும். இம்முறை சில மாதங்களிலேயே மக்களின் ஆதரவு லிபரல் கட்சிக்கு சட்டென்று மாறி, ஒரு பெரும்பான்மை ஆட்சியமைத்து, டிரம்புக்கு 'tough fight' அவர்கள் கொடுப்பார்களென்று நம்பப்பட்டது. ஆனால் லிபரல் கட்சியினர் 4 இருக்கைகள் இல்லாது (168) மீண்டும் ஓர் சிறுபான்மை அரசை கனடாவில் அமைக்கவுள்ளனர்.

கடந்த தேர்தலில் 119 இருக்கைகள் பெற்ற பழமைவாதக் கட்சி இம்முறை அதிக இருக்கைகளை (144) பெற்றிருந்தபோதும், அதன் தலைவரான Pierre Poilievre, அவர் போட்டியிட்ட தேர்தலில் தோல்வி அடைந்திருக்கின்றார். ஒரு எதிர்கட்சித் தலைவர் தனது கட்சியை முன்னின்று நடத்தியபோதும் அவர் தன்னளவில் தோல்வியுற்றது கனடா வரலாற்றில் வியப்பானது.

அதேபோல இதுவரை காலமும் மும்முனைத் தேர்தல் போட்டிகளாக இருந்த நாடாளுமன்றத் தேர்தல் இம்முறை இருமுனைப் போட்டியாக மாறியிருந்தது. மூன்றாவது பெரும்கட்சியாக இருந்த இடதுசாரிச் சார்புள்ள புதிய ஜனநாயக் கட்சி இம்முறை படுதோல்வியை அடைந்திருக்கின்றது. கடந்த இரண்டு தேர்தல்களிலும் கிட்டத்தட்ட 25 இருக்கைகளை வைத்திருந்த என்டிபி இம்முறை 7 இருக்கைகளை மட்டுமே பெறமுடிந்தது. அதன் தலைவராக கடந்த இரு தேர்தல்களில் இருந்த ஜஸ்மீட் சிங் தனது தொகுதியிலும் தோல்வியடைந்து இப்போது கட்சித் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமாய்ச் செய்திருக்கின்றார்.

முதன்முதலாக லிபரல் கட்சியில் (முன்னாள்) இருந்து பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜஸ்டின் ரூடோ 10 வருடங்களுக்கு முன் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒரு முக்கிய விடயத்தை முன்வைத்துத்தான் தேர்தலில் வென்றிருந்தார். அதாவது இதுவரை கன்டா தேர்தலில் இல்லாத விகிதாசார வாக்குகளின் அடிப்படையில் இருக்கைகளைக் கொடுப்பதைப் பற்றி பிரச்சாரம் செய்திருந்தார். இது கிட்டத்தட்ட இலங்கை நாடாளுமன்றத்தில் இருப்பதைப் போன்றது. அதாவது ஒவ்வொரு கட்சியும் அது பெரும் மொத்த வாக்குகளின் அடிப்படையில் அவற்றுக்கு உரிய சில இருக்கைகள் பகிர்ந்தளிக்கப்படும்.

இம்முறை லிபரல் கட்சிக்கும் (43.5%) பழமை வாதக்கட்சிக்கும் (41.4%) நாடாளவியரீதியில் கிடைத்த வாக்குகளின் விகிதாசாரத்தின் வித்தியாசம் 2% மட்டுமே. இந்த விகிதாசாரவீதத்தில் இருக்கைகள் பகிர்ந்தளிக்கும் முறையை அன்றே லிபரல்காரர் சட்டத்துக்கு கொண்டு வந்திருந்தால் இம்முறை 3 இருக்கைகளால் பெரும்பான்மை ஆட்சியமைக்க முடியாது திணறும் அவர்கள் எளிதாகப் பெரும்பான்மை அமைத்திருப்பார்கள். ஆனால் இந்தப் புதிய சட்டத்தைப் பேசிய லிபரல்களே பின்னர் தொடர்ந்து பேசாது அதைப் புதைத்துவிட்டு கடந்து சென்றிருந்தனர்.

இதுவரை லிபரல் கட்சியினூடு ஒரெயொரு ஈழத்தமிழரே தொடர்ந்து கடந்த மூன்று தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார். இம்முறை இன்னொரு புதிய பாராளுமன்ற உறுப்பினராக Junaita Nathan தேர்ந்தெடுக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கக் கூடியது. அவர் தனது தொகுதியில் 37,896 வாக்குகளைப் பெற்றிருக்கின்றார்.

இத்தனைக்கும் ஜுவனிட்டா இத்தொகுதிக்குப் புதியவர். அவர் கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலாக அரசியல் களத்தில் இருந்தாலும், அவர் சேவையாற்றிய தொகுதி வேறிடத்தில் இருக்கின்றது. ஒரு புதிய தொகுதியில் வென்றது மட்டுமில்லாது, அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் 29,000 வாக்குகள் பெற்றபோது, ஜுவனிட்டா 37,000 மேற்பட்ட வாக்குகளைப் பெற்று வெற்றி வாகை சூடியிருப்பது ஒரு பெரும் பாய்ச்சல் எனச் சொல்லவேண்டும்.

**************


(Apr 29, 2025)

பனிக்காலத் தனிமை - 07

Friday, May 09, 2025

 

ஸென்னில் எதையும் செய்யாமல் அப்படியே இரு என்பது அடிக்கடி நினைவூட்டப்படுவதை அறிந்திருப்போம். . தியானத்தின்போது கூட 'சும்மா அமர்ந்திருத்தல்' மட்டுமே போதுமானது என்று சொல்வார்கள். அதேபோன்று அப்படி சும்மா இருந்து தன்னிலையை அறிதல் சாத்தியமென்றாலும், அப்படி ஒருவர் நினைத்துக்கொண்டு தியானம் செய்தால், ஞானம் அடைதல் தூரப்போய்விடுமென்றும் பயமுறுத்துவார்கள்.

எனில், சும்மா உட்கார்ந்திரு என்பதன் அர்த்தந்தான் என்ன? சும்மா உட்கார்ந்திருப்பதற்காகவே சும்மா அமர்ந்திரு என்பதுதான். ஆனால் இந்த 'சும்மா இரு' என்பது எவ்வளவு கடினம் என்பது, பல்லாயிரம் எண்ணங்கள் எந்த நேரமும் ஓடிக்கொண்டிருக்கும் நமக்கு எளிதாய்ப் புரியும்.

இதனால்தான் தியானத்தில் இருக்கும்போது, நாங்கள் மழையைப் போல இருக்க வேண்டும் என்பார்கள். மழை தன்னியல்பிலே பொழிகின்றது. மழை பெய்யும்போது, தான் இனிமையான சத்தத்தோடு பூமியில் விழுகின்றேனா என்று தன்னைத்தானே அது கேட்பதில்லை. மரங்கள் தன்னைக் காண்பதில் மகிழ்ச்சி அடைகின்றனவா என்பதைப் பற்றியும் அது கவலைப்படுவதில்லை. மழை 'சும்மா' பொழிகின்றது. ஒரு துளி, இன்னொரு துளியென மில்லியன் கணக்கான மழைத்துளிகளாகப் பொழிகின்றது. மழை எந்த ஒன்றைப் பற்றியும் அக்கறைப்படுவதில்லை. சும்மா பொழிகின்றது. அவ்வாறே ஸென்னை அறிவதற்கான இரகசியமும் திறக்கின்றது.

புத்தரோடு தாமரைப் பூ எவ்வளவு நெருக்கமானது என்பதை நாம் அறிவோம். அதுபோலவே ஸென் மரபில் பிளமும்/செர்ரியும் மிக நெருக்கமானவை. ஒருவகையில் இம்மரங்கள் வசந்தகாலத்திற்கான முகிழ்ப்பை அறிவிப்பவை என்பதால் அவற்றின் முகையவிழ்ப்புக்கள் உலகெங்கும் முக்கிய ஓர் நிகழ்வாகக் கொண்டாடப்படுகின்றது.

ஸென்னில் பிளம் மரங்கள் முக்கியமான ஓரு படிமமாகக் கொள்ளப்படுகின்றது. ஸென் ஒருபோதும் கற்றல்/சொற்பொழிவுகள் மூலம் ஞானமடைவதை முன்னிலைப்படுத்துவதில்லை. எந்த ஒரு ஸென் ஆசிரியரும், தனது மாணவருக்கு 'செய்து காட்டுவதில்' மட்டுமேவிருப்பமுடையவர்கள். ஆகவேதான் மரபான ஸென் ஆசிரியர்கள் அதட்டிக் கொண்டிருப்பதையும், கேள்வி கேட்கப்படும்போது பிரம்பால் தரையில் அடிப்பதையே பதிலாகச் சொல்வதையும் பல்வேறு ஸென் கதைகளில் கேட்டிருப்போம்.

கீழே நான் தமிழாக்கியது டோஜன் பல நூற்றாண்டுகளுக்கு முன் சொல்லிப் போந்தது.

குளிர்காலத்தின் நடுவில் தியோடாங்கின் முதல் சொற்றொடர்:
முதிய பிளம் மரம் வளைந்து கரகரத்தது
அனைத்தும் ஒன்றாய்ச் சேர ஓர் அரும்பு மலர்ந்தது
இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து மலர்கள்
எண்ணற்ற பூக்கள்!
அந்த தூய்மையில் பெருமை இல்லை
அதன் நறுமணத்திலும் பெருமை இல்லை.

அது பரவி வசந்தமாக மாறி
புற்களுக்கும் மரங்களுக்கும் மேலாக வீசி
காவியணிந்த பிக்குவின் தலையை வழுக்கையாக்குகின்றது.
அதுவே சுழன்றாடி, விரைவில் புயல் காற்றாகவும்,
பெரும் மழையாகவும் மாறி,
வீழ்கின்றது பூமியின் மீது பனியாக.

இந்த முதிய பிளம் மரம் எல்லையில்லாதது.
ஒரு கடும் குளிர் நாசியைத் துளைக்கிறது.

(By Eihei Dogen, translated by Kazuaki Tanahashi)

*

ரு முதிய பிளம் மரம் அதன் மூப்பில் வளைந்து போய், க்ரக் க்ரக் என்று சத்தம் போட்டுக் கொண்டிருக்கின்றது. அவ்வாறு அது துயரப்பட்டிருந்தாலும், சட்டென்று எல்லாச் சூழ்நிலையும் இயைந்து வர ஒரு பிளம் பூவை மலர வைக்கின்றது.

ஒரு பிளம் பூ, பிறகு இரண்டு, மூன்று, நான்கு, ஐந்தென தன் இதழ்களை விரித்து பின் எண்ணற்ற கணக்கில் மலரத் தொடங்குகின்றது. பிளம் பூக்கள் அவ்வளவு தூய்மையாக இருக்கின்றது. அதன் வாசமோ அவ்வளவு நறுமணமாக இருக்கின்றது. ஆனால் அதையிட்டு அந்த மரத்துக்கு எந்தப் பெருமையும் இல்லை.
பிளம் மரத்தை நாம் நம் வாழ்வின் படிமமாகக் கூடக் கொள்ளலாம்.


முதிய பிளம் மரம் என்றவுடன் எமக்கு இறப்பு நினைவில் வரலாம். அதாவது வாழ்வு இனி இல்லை என்கின்ற உருவகம். ஆனால் அந்த 'வாழ்வில்லாத' நிலையில்தான் வாழ்வு என்பது மலர்கின்றது என்பதற்கு, இந்த முதிய பிளம் மரம் தன் அரும்புகளை மலர வைக்கும் தருணம் நினைவூட்டப்படுகின்றது. ஒன்று, இரண்டென எண்ணற்ற பூக்களை ஒரு முதிய பிளம் மரத்தால் முகிழவைக்க முடியுமென்றால், நமக்கு 'இனி வாழ்வில்லை' என்று எண்ணுகின்ற கணத்தில் கூட 'உயிர்ப்பு' வந்துவிடக்கூடுமென்று இந்த ஸென் கவிதை சொல்கின்றது. ஒருவகையில் இவ்வாறான கட்டுப்பாடுகள்/நிபந்தனைகளோடு வாழ்வில் தத்தளித்துக் கொண்டிருந்தாலும் நாமும் பிளம் போல எந்தத் தருணத்திலும் மலர முடியுமல்லவா?

வளைந்தும், க்ரீச் க்ரீச் என்று முனகும் இந்த வயது முதிர்ந்த பிளம் மரம் எல்லாவகையான காலநிலைகளையும், கஷ்டங்களையும் கண்டிருக்கும். ஆனால் அது எங்கும் நகராது அனைத்தையும் நேரடியாக எதிர்கொள்கின்றது. காற்று, கடும் மழை, பனிப்பொழிவு என வெவ்வேறு சூழ்நிலைகளை எதிர்கொண்டாலும், இவையெல்லாம் அதன் இயல்பான வாழ்க்கையின் வெவ்வேறு பகுதிகளேயாகும். அதுபோலவே நாமும் இந்த வாழ்க்கையில் வெவ்வேறு சூழ்நிலைகளையும் அனுபவங்களையும் எதிர்நோக்க வேண்டியிருந்தாலும், அதை முழுமையாக ஏற்றுக்கொள்ளலே 'தம்மம்' என்கின்றது ஸென். அதுவே முழுமையான உண்மை. அதுவே ஞானமடைவதற்கு/தன்னிலை உணர்வதற்கான பாதையும் ஆகும். அதைத் தவிர வேறெந்த எளிய மாற்று வழிகளும் இல்லை எனவும் எச்சரிக்கின்றது ஸென்.

*

ங்கள் வாழ்க்கையும் இந்த முதிய பிளம் மரத்தைப் போன்றதே. இவ்வாறாக இந்த பிளம் மரத்தின் பின்னணியை எங்களால் அறிந்து கொள்ளமுடியுமெனில், நம் மனித வாழ்விற்கான அர்த்தத்தையும் ஒருவகையில் விளங்கிக்கொள்ளலாம் என்கின்றது இக்கவிதை. நாங்கள் ஒருபக்கத்தில் சிரிக்கின்றோம், அழுகின்றோம், வஞ்சிக்கப்படுகின்றோம், வருத்தமுறுகின்றோம், மறுபக்கத்தில் மகிழ்ச்சியையும், கெளரவத்தையும், நேசத்தையும், நம்பிக்கையும் பெறுகின்றோம்.

இவை எல்லாமே இந்த முதிய பிளம் மரம், பெருங்காற்றிலும், பெருமழையும், கடும்பனியிலும் அனுபவிப்பதைப் போன்றதற்கு நிகர்த்தது. ஒன்று நிகழ பிறிதொன்று அடுத்து நிகழ என்று ஒவ்வொரு நிலையும் மாறிக் கொண்டிருக்கின்றது. இந்த மாற்றத்துக்கு எல்லையென்ற ஒன்றே இல்லை. இதை நாங்கள் பிளம் மரம், இந்த கடும் காலநிலைகளால் வஞ்சிக்கப்படுகின்றோம் எனச் சொல்ல முடியுமா? இல்லை அல்லவா. இந்த மாறும் காலநிலைகளினூடு போராடியபடி முதிய பிளம் மரம் பூக்களை மலர வைப்பது வியப்பானதல்லவா? அவ்வாறுதான் எத்தகை நெருக்கடிகளிலும் எமது வாழ்விலும் 'பிளம் பூக்களை' மலரத்தான் செய்கின்றன என்கின்றார் டோஜன்.

இளவேனில் காலத்தில் சட்டென்று ஒரு பிளம் பூ மலர்வதில் தொடங்கி, பல்லாயிரக்கணக்கான பிளம் மலர்கள் விரிவதைப் போல, நாமும் ஏதோ ஒரு கணத்தில் மலரத் தொடங்குகின்றோம். முழுதாய் மலர்ந்துவிட்டாலும், அதையிட்டு நாம் பெருமை கொள்ளவோ, அகங்காரம் கொள்ளவோ தேவையில்லை. பிளம் மலர் தன் தூய்மையிலோ, நறுமணத்திலோ பெருமை கொள்வதில்லை. அவ்வாறிருப்பதே அதன் இயல்பு.

தன்னிலையடைந்தவர்க்கு ஒரு தூய்மையானதும், வாசமானதுமான நிலை வாய்க்ககூடும். ஆனால் அதைப் பற்றி யோசிக்கவோ, அளவிடவோ தேவையில்லை. ஏனெனில் எல்லாமே மாறிக் கொண்டிருப்பவை.

அதனால்தான் டோஜன், பிளம் பூ மலர்தலை அது எங்கும் பரவி, அழகான வசந்தமாகின்றது என்கின்றார். ஒரு பிளம் பூ மலர்தலில் ஒரு வசந்தற்கான முதல் தடம் இருக்கின்றதெனில் எவ்வளவு அதிசயமானது. ஆனால் அது எதற்காக மலர்கின்றது, எங்கு மலரவேண்டும் என்பது என்றெல்லாம் கவலைப்படுவதில்லை. அது முகிழ்வதற்கான காரணிகள் அமைந்துவிட்டன. ஆகவே மலர்தல் என்பதற்காக மலர்கின்றன. எந்தப் பூவாவது அதை யாரோ பார்த்து மகிழப்போகின்றார்கள், தான் அழகாக இருக்கின்றேன் என்பதற்காக மலர்கின்றதா என்ன? மலர்தல் அவற்றின் இயல்பு. ஆகவே இங்கே பிளம் பூ இளவேனிலாக மாறுகின்றது.

அது பின்னர் புற்களையும் மரங்களையும் அரவணைப்பதோடு அல்லாது, காவியணிந்த பிக்குகளின் தலைகளையும் மென்மையாக மழிக்கின்றது. எவ்வளவு அருமையான உவமை. இவ்வாறாக இந்த மலர்தல் எல்லா இடங்களையும் ஆரத்தழுவி, அதன் உதிர்ந்த மலரிதழ்கள் பூமியில் பனிக்குவியல் போல ஆகின்றது. இறுதியில் அதுவே நானும், நீங்களும் எல்லாமுமாக ஆகின்றது.

*
இந்த முதிய பிளம் மரத்தில் மலர்தல் இவ்வாறு எல்லையற்றதாகவும், எல்லாவற்றையும் ஆரத்தழுவிச் செல்வதாகவும் இருக்கின்றது. இறுதியில் இந்தக் கவிதை, அது கடும் குளிராக நம் நாசியைத் துளைத்தாலும், நாம் இந்த மலர்தலை உணர்கின்றோம் என்று சொல்கின்றது. இவ்வாறே எமக்குள்ளும் பிளம் மலர்கள் மலர்ந்தபடியே இருக்கின்றன. அந்த அனுபவமும் எல்லையற்றதாகவே இருக்கும். ஆனால் அதற்கு நாம் தன்னிலையடைதல் வேண்டும். அதைப் புறவயமாகத் தேடவும் முடியாது. அப்படி ஒரு கிடைதற்கரிய அனுபவமாக புறமாகத் தேடினால் அது பொருளைப் போன்று ஆகிவிடுகின்றது.

மலர்தல் என்பது உள்ளே நிகழவேண்டும். மேலும் அந்த 'மலர்தல்' மலரப்போகின்றோம் என்ற நினைப்பு எதுவுமில்லாது 'சும்மா தியானத்தில் அமரும்போது' அது ஒரு முதிய பிளம் மரம் பூப்பதைப் போல நிகழ வேண்டும். அவ்வாறு ஒரு மலர்தல் நமக்குள் அகவயமாக நிகழும்போது நாம் புத்தர்களைப் பார்ப்போம். அந்தப் புத்தர்கள் எல்லாம் இந்தப் பூமியில் காலூன்றி நடந்திருக்கின்றார்கள் என்பதையும் காண்போம்.

இதற்கெல்லாம் முன் நிபந்தனையாக எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி, சும்மா உட்காரவேண்டும். இவையெல்லாம் ஒருநாள் நிகழப்போகின்றது என்று 'நினைக்கத் தோன்றினாலே' நாம் இவை நடக்கும் எல்லாச் சாத்தியங்களுக்கும் வெளியே சென்றுவிடுவோம் என்பதையே ஸென் திரும்பத் திருப்ப நமக்கு நினைவூட்டுகின்றது.

இந்த முதிய பிளம் மரத்தைப் போல அவரவர்க்கு அவரின் இயல்புகள் முகையவிழ்த்து எண்ணற்ற மலர்தல்கள் எல்லைகளில்லாது நிகழட்டுமாக.

*********

 
(எழுதுவதற்கு உதவிய நூல்கள் Jakusho Kwong இன் 'No Beginning No End' மற்றும் 'Mind Sky')

-Apr 30, 2025-

கார்காலக் குறிப்புகள் - 89

Sunday, May 04, 2025

 

நேற்று கா.சிவத்தம்பியின் 'நவீனத்தவம் - தமிழ் - பின்நவீனத்துவம்' என்ற நூலை வாசித்து முடித்திருந்தேன். இந்நூல் தமிழில் எப்படி நவீனத்துவம்/பின்நவீனத்துவம் இருக்கின்றது என்பது மட்டுமில்லாது, காலனித்துவ காலத்தில் எப்படி இலக்கியம்/அரசியல் முகிழ்கிறது என்பது பற்றியும் பேசுகின்றது. அதில் சிவத்தம்பி கவனப்படுத்துப்படும் ஒரு விடயம், 'பிரம்மஞான சபை' (Theosophical Society). இதிலிருந்து இரண்டு வேறு கிளைகள் அன்னி பெசண்ட், ஆல்காட் என பிரிகின்றது. அன்னி பெசண்ட் தரப்பு வைதீக, சமஸ்கிருதமாக்கலை உயர் இலட்சியமாக்க, ஆல்காட் தரப்பு பிராமணியத்துக்கு எதிரான பகுத்தறிவுச் சிந்தனைச் செல்நெறியை முன்னெடுத்தது என்கின்றார் சிவத்தம்பி. அந்த பகுத்தறிவுச் சிந்தனையிலிருந்து வந்தவரே அயோத்திதாச பண்டிதர் என்கின்ற முக்கியமான முடிவை, இன்றைக்கு 25 வருடங்களுக்கு முன்னரே சிவத்தம்பி எழுதிச் செல்கின்றார்.

அத்துடன் எப்படி பிராமணியத்துக்கெதிராக அன்றைய உயர்குடி வேளாள சமூகம் எழுந்து வந்ததோ (முக்கியமாக திருநெல்வேலியிலிருந்து மறைமலையடிகள்) அந்தக் காலத்தில் சமாந்திரமாக 'பஞ்சமர்' என அன்று அழைக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் 'பஞ்சமர்' (1871), 'திராவிட பாண்டியன் (1885), 'ஆன்றோர் மித்திரன்' (1886 ), 'பறையன்' (1893 ), 'தமிழன்' (1907), 'திராவிட கோகிலம்' (1908) போன்ற சஞ்சிகைகளினூடாக தம்மை தீவிரமாக வெளிப்படுத்தியிருக்கின்றனர். ஒருவகையில் பெரியார்/திராவிடக் கட்சி பகுத்தறிவாதத்தை முன்னெடுத்துச் சென்றாலும், இதற்கான ஆரம்ப வித்து அன்றைய ஒடுக்கப்பட்ட மக்களாலேயே ஊன்றப்பட்டது என்ற புள்ளியை சிவத்தம்பி சுட்டிக்காட்டுவது முக்கியமானது.

அதேவேளை பண்டிததாசர் போன்றவர்கள் இலங்கைப் பெளத்தத்தோடு சேர்ந்து தமது சமூக மேனிலையாக்கத்துக்கு இலங்கைப் பெளத்தர்களின் ஆதரவை எதிர்பார்த்த போதும், அது நிகழமுடியாததற்குக் காரணம், சிங்களப் பெளத்தமும் சாதி அடிப்படையிலே இயங்கி வருகின்றது என்பதை அவர்கள் கவனிக்கத் தவறிவிட்டனர் என்று சிவத்தம்பியின் அவதானம் முக்கியமானது. இன்று நெடுங்காலத்துக்குப் பின் மீண்டும் தமிழகத்தில் தலித் எழுச்சியும், தமிழ் பெளத்த உரையாடல்களும் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்ற காலத்தில், தமிழகத்திலிருந்து பல தலித்துக்கள் புத்தபிக்குகளோடு ஓர் இணைப்பை (எனது மட்டுப்படுத்தப்பட்ட முகநூல் நண்பர்களிலே சிலரை அவ்வாறு பார்க்கின்றேன்) ஏற்படுத்துவதைப் பார்க்கின்றேன். அவர்கள் இதை ஒரு முக்கிய புள்ளியாக கவனித்தாக வேண்டும். அதுமட்டுமின்றி இலங்கையில் இருக்கும் தேரவாத பெளத்த பீடங்கள் எவ்வாறு அரசியலில் செல்வாக்குச் செலுத்தி, இலங்கையில் சிங்கள பெளத்த மேலாதிக்கத்தில் சிறு அசைவைக் கூட ஏற்படுத்த முடியாது நாட்டை சின்னாபின்னாக்கி வைத்திருக்கின்றார்கள் என்பதையும் அவர்கள் கவனித்தாக வேண்டும்.

சிவத்தம்பி பின்நவீனத்துவம் பற்றிப் பேசமுன்னர் நவீனத்துவம் பற்றி விரிவாகப் பேசுகின்றார். அதில் அவர் மேற்குலகில் வரையறுக்கப்பட்ட நவீனத்துவமானது, இந்தியா/இலங்கை/தென்னாசியா சமூகங்களில் அதேயளவு பொருந்துகின்றதா எனக் கேள்வி கேட்கின்றார். ஐரோப்பாவில் மறுமலர்ச்சிக்காலத்தில் தோன்றிய சனநாயக்கப்படுத்தலும், சமயசார்பின்மையும் எமக்கு நீண்டகாலத்துக்குப் பிறகே காலனித்துவ ஆட்சிக்குப் பின்னரே வந்தது என்கின்றார். ஏனெனில் நாம் காலனித்துவ காலத்தில் சில நூற்றாண்டுகள் இருந்தவர்கள்.

மேலும் நவீனத்துவ காலம் மேற்கில் தோன்றியபோது அதற்கு முந்தைய அம்சங்களை (கைத்தொழில் புரட்சி/முதலாளித்துவம் காரணமாக) அடித்துப் புரட்டிப் போனது போன்று நமக்கு நிகழ்வில்லை என்கின்றார். ஆனால் எம்மைப் பொறுத்தவரை நவீனத்துவமானது, காலனித்துவம்/ கிறிஸ்தவமயமாக்கம்/ மேனாட்டுமயமாக்கம் வழியாக மேற்கிளம்பி, பராம்பரிய மீட்புணர்வையும் ஏற்படுத்தியது என்கின்ற முக்கிய அவதானத்தை சிவத்தம்பி கவனப்படுத்துகின்றார். மேற்கூறிய மூன்றும் ஏற்படுத்திய எதிர்மறை விளைவுகளால் நாம் நமது 'முந்தைய பண்பாட்டு' பற்றிய மீளுருவாக்கத்தைச் சிந்தித்து, சிந்தனைவழி பெறப்பட்ட அதற்கு உருவம் கொடுத்தோம் என்கின்றார்.

இவ்வாறு நமது நவீனத்துவத்தில் பராம்பரிய மீள்நோக்கும் ஒரு முக்கிய அம்சமாவதால், நாம் பழமைகளுக்கு ஒரு 'புதிய' கட்டமைப்புக் கொடுத்து அவற்றை மீளுருவப்படுத்தியிருக்கின்றோம். அதற்கு மிகச்சிறந்த உதாரணமாக திராவிடக் கருத்துநிலை மீட்டெடுத்த 'தமிழர் பண்பாடு' என்பதை சிவத்தம்பி முன்வைக்கின்றார். அதுபோல மேற்குலகில் நடந்ததுபோல நம் சூழலில் நவீனத்துவம் ஒரு 'சமத்துவமான வளர்ச்சி'யைக் கொண்டிருக்கவில்லை என்றும் சிவத்தம்பி கூறுகின்றார். நம் சூழலில் நவீனத்துவம் சமனற்று நடந்ததால் புதுமை/பழைமை பிரிவினை தெளிவாக இருந்து நகரம்/கிராமம் என்கின்ற பெரும் வேறுபாடுகள் அதன்பின்னரே தோன்றின என்கின்றார். அதற்கு காலனித்துவமும், அதற்கு ஒத்தூதிக்கொண்டிருந்த உள்ளூர்க்காரர்களும் முக்கிய காரணம் என சிவத்தம்பி சொல்கின்றார்.

ஆக, சிவத்தம்பியின் முக்கிய கேள்வியாக மேற்குலகு நவீனத்துமல்ல நமது நவீனத்துவம் என்பதாக இருக்கிறது. அதுபோலவே நாம் இந்த நவீனத்துவத்தை முற்றாக கடந்து வந்துவிட்டுத்தான் பின்நவீனத்துவத்தைத் தமிழ்ச்சூழலில் பேசத் தொடங்குகின்றோமா என்பதுமாகும்.

இந்த நூலில் 'தமிழில் பின்நவீனத்துவம் பேசப்படுவதற்கு முன்', 'அண்மைக் காலத்து மேனாட்டு இலக்கிய விமர்சனம்', 'பின் நவீனத்துவம்' பற்றிய கட்டுரைகள் முக்கியமானவை மட்டுமில்லை, தனித்தனியே எடுத்து விரிவாக உரையாடுவதற்கான ஆழமும் விரிவும் கொண்ட வாசிப்புக்களாகும்.

நூலின் கட்டுரைகளைப் போன்று சிவத்தம்பியின் முன்னுரையில் குறிப்பிடும் ஒரு பகுதியும் எனக்குப் பிடித்தமானது:

"பின் நவீனத்துவத்தை நான் ஓர் 'அநாவசியமான இடையீடு' என்று கருதவில்லை. அதனைப் புரிந்துகொள்வதில் என்னளவில் நான் மிகுந்த நிதானம் காட்டினேன். அதனைத் தனியொரு 'நிகழ்வாக' நான் பார்க்கவில்லை. 1960கள் முதல் ஐரோப்பிய/மேற்குலக நாகரிக மாற்றத்தில் ஏற்பட்டுவரும் ஒரு 'வளர்நிலை'யாகவே காண்கிறேன். அமைப்பியல்வாதம்-பின் அமைப்பியல்வாதம்-பின் நவீனத்துவம் என்ற தொடர்ச்சியின் தர்க்கதைக் காண மறுப்பது மார்க்சீயத்தின் தர்க்கதை மறுதலிப்பதாகும். இந்த உண்மையை என் மார்க்சீயக் கருத்துநிலைத் தோழர்கள் புரிந்து கொள்கிறார்களில்லை. அவர்களுக்கு மார்க்சீயம் என்பது ஒரு 'வாய்பாடா'கி விட்டது. மார்க்சீயத்தை வாய்பாடாக்குவதைப் போன்று மார்க்சீய விரோதச் செயல் எதுவும் இருக்க முடியாது. நிறுவனங்களின் (காலத்துக் காலம்) மாறும் தேவைகளுக்கேற்ப மார்க்சீயப் புரிதல்களை வடிவமைப்பதில பல வரலாற்றுத் தவறுகள் நடந்துள்ளன.

ஆனால், என்னைப் பொறுத்தவரையில் ஒரு சிறு நிம்மதி உண்டு. நான் எனது கருத்துக்களுக்காகப் பின்நவீனத்துவ நண்பர்களாலும், மார்க்சீயத் தோழர்களாலும் ஒரேவேளையில் கண்டிக்கப்படுகிறேன். எனது சிந்தனைதான் சரி என்றோ எவரையும் நான் நிர்ப்பந்திக்கவில்லை. நான் தொடர்ந்து சிந்திக்கிறேன் என்பதையும் சிந்திக்காமலிருப்பதை எதிர்க்கிறேன் என்பதையும், நான் பதிவு செய்து கொள்ள விரும்புகிறேன். அந்தச் சிந்தனை மார்க்சீய நிலை நிற்பது என்பதுதான் என் நிலைப்பாடு.'

என்று சிவத்தம்பி எழுதிச் செல்வது அவரை ஒரு முக்கியமான சிந்தனையாளராக மட்டுமின்றி, நமக்கு நெருக்கமான ஒருவராகவும் ஆக்கச் செய்கின்றது.

*******


(Apr 22, 2025)