எனது ஸென் ஆசிரியரான தாயிடம், யாரோ ஒருவர் 'நீங்கள் அமைதியையா அல்லது பெளத்தத்தையா, எதை முதலில் தேர்ந்தெடுப்பீர்கள்' எனக் கேட்கும்போது, தாய் எவ்வித சலனமுமின்றி அமைதியைத் தான் தெரிவு செய்வேன் என உறுதியாகக் கூறியிருக்கின்றார். கேள்வி கேட்டவரோ, தாய் சிறுவயதில் புத்த மடலாயத்தில் இருந்து வந்தவர் என்பதோடு, புத்தரை நெடுங்காலமாகத் தீவிரமாகப் பின்பற்றி, பெளத்தத்தோடு இரண்டறக் கலந்தவர் என்பதை அறிந்தவர். ஆகவே தாய் இப்படி பெளத்தத்தைத் தவிர்த்து அமைதியைத் தெரிவுசெய்வேன் என்று கூறியது அவருக்கு வியப்பாக இருந்தது.
நான் சென்று கொண்டிருக்கும் மடலாயத்தில் தியானம் நடந்து கொண்டிருக்கும்போது வந்திருப்பவர்கள் அடிக்கடி எழுந்து செல்வார்கள். வெளியே யாரேனும் கதவைத் திறக்கும் பூட்டும் சத்தங்கள் கேட்கும். சிலவேளை காலை கறுவாத் தேநீரோ, மதியத்து சுவையான உணவோ சுவையின் நரம்புகளை அருட்டி மனதோடு விளையாடும். இவ்வாறு கவனக்கலைப்பான்கள் பல நிகழ்ந்து கொண்டிருக்கும். இதைவிட நம் மனம் பல நூற்றுக்கணக்கான எண்ணங்களில் சிக்கித் திணறி நம்மை மேலும் அலைக்கழிக்கும்.
இந்தளவுக்குப் பிறகும் தியானத்தின் மூலம் அமைதி வருகையில், இடைவெளியில் யாரோ ஒருவர் இன்னொருவரைப் பற்றி 'கோள்' சொல்லிக் கொண்டிருப்பார்; வேறொருவர் இன்றைக்கு தந்த மதியவுணவு அவ்வளவு உருசியில்லையென மற்றவருக்கு முறைப்பாடு செய்து கொண்டிருப்பார். இது போதாதென்று, ஒரு முழுநாள் தியானம் என்றால், நான்கைந்து புத்தபிக்குகள் வந்து தம்ம உரைகளையோ, பாளியில் எழுதப்பட்டவற்றுக்கு ஆங்கிலத்தில் விளக்கம் கொடுக்கும்போதோ சிலவேளைகளில் நமது மனதுக்கு உவப்பில்லாதவற்றைச் சொல்வார்கள். அப்போது எழும் எரிச்சலும், கோபமும் இருக்கின்றதே, அதை அடக்காமலோ, கடந்துபோகாமலோ, இது ஏன் இப்படி எழுகின்றது என்று மனதோடு 'அறுவைச் சிகிச்சை' செய்யவும் வேண்டியிருக்கும்.
ஒருமுறை ஒரு மாணவர், ஸென் ஆசிரியர் பாங்கியிடம், 'ஆசிரியரே என்னிடம் அடக்கமுடியாத கோபம் இருக்கின்றது, அதை எப்படி நான் குணப்படுத்துவது?' என்று கேட்பார். அதற்கு பாங்கி, 'உன்னிடம் ஏதோ ஒன்று விசித்திரமாக இருக்கின்றது. சரி, அதைக் காட்டு' என்று கேட்பார். 'என்னால் இப்போது காட்டமுடியாது' என்று மாணவர் சொல்ல, பாங்கி 'எப்போது உன்னால் அதைக் காட்ட முடியும்' என்று வினாவுகிறார். 'அது (கோபம்) எதிர்பார்க்காதபோது எழுகின்றபோது மட்டுமே காட்டமுடியும்' என்று மாணவர் சொல்வார்.
அதற்கு பாங்கி, 'அப்படியெனில் அது உன்னுடைய உண்மையான குணாதிசயம் அல்ல. அப்படி அசலான உன் குணமாக இருந்தால், நீ எப்போது வேண்டுமானாலும் எனக்குக் காட்டியிருக்க முடியும். நீ பிறக்கும்போது அதனோடு பிறந்தவன் அல்ல. உனது பெற்றோரும் இதை உனக்குத் தந்தவர்களும் அல்ல. ஆகவே இதைப் பற்றி யோசி' என்கின்றார் பாங்கி.
இதன் நீட்சியில் வருவது, புத்த குணாதிசயம் (Buddha-Nature). நாமெல்லோரும் இப்படியான புத்த குணாதிசயத்தோடு வருபவர்கள். அப்படியெனில் ஒரு முக்கியமான கேள்வி பலரிடமிருந்து வரும். நாம் இயல்பிலே புத்த குணாதிசயத்தோடு இருப்பவர்கள் என்றால் ஏன் நாம் கஷ்டப்பட்டு தியானம் அது இதுவென்று செய்யவேண்டும் என்று. நம்மிடம் இது இருக்கின்றது என்று அறியாமல் இருப்பவர்கள் நாம் என்று ஸென் சொல்கின்றது. அதை எளிதாக தூசு படிந்த கண்ணாடியிற்கு அவ்வப்போது ஸென் ஒப்பிடும். தூசி படிந்த கண்ணாடி நம்மைப் பிரதிபலிக்கும். நமது அசலைப் பார்க்க தூசி படிந்த கண்ணாடியைத் துடைக்க வேண்டியிருக்கின்றது. அவ்வாறு துடைத்தல்தான் தியானம். அப்போது நமது சிறிய மனது அமைதியடைகின்றது. சிறிய மனது அமைதியாக புத்த குணாதிசயம் என்கின்ற பெரிய மனது செயற்படத்தொடங்குகின்றது. நம் சிறிய மனதும், புத்த குணாதிசயமும் ஒன்றிணையும்போது நமக்கு விழிப்படைவதன் சுவை தெரியத் தொடங்குகின்றது. ஆனால் அதுவே 'பரிநிர்வாணமடைதல்' என்று நம்பவும் இந்தச் சிறிய மனது நம்மை முயற்சிக்கத் செய்யும்.
அதுவல்ல பரிநிர்வாணமடைதல். ஒரு பாலைவனத்தில் பாதை தொலைந்து போய் அலையும்போது சிலவேளைகளில் சிறு தண்ணீர் ஊற்றைக் காணும்போது மனது மகிழ்ச்சியில் திளைக்கும். ஆனால் நீங்கள் அந்தத் நீரூற்றில் தங்கிவிடமுடியாது. நீங்கள் அடைய வேண்டிய பாதை வேறெங்கோ இருக்கின்றது. எனவே தொடர்ந்து நடக்கவேண்டும். அவ்வாறே தியானத்தின்போது அவ்வப்போது நீரூற்றுக்களைப் போல இதமான விழிப்புகள் ஏற்பட்டாலும், நீங்கள் போகவேண்டிய பரிநிர்வாணம் என்கின்ற பாதை நெடியது. தொடர்ந்து தியானம் செய்துகொண்டிருங்கள் என்கின்றது ஸென்.
கோபம் எங்களுடைய புத்த குணாதிசயம் அல்ல என்றாலும் நாம் கோபம் என்கின்ற உணர்ச்சி நிலைக்கு எளிதில் ஆளாகக் கூடியவர்கள். பலர் 'பரிநிர்வாணமடைதல்' என்பதை நாங்களாகக் கற்பனை செய்துகொண்ட சொர்க்கமாக எமக்குள்ளே வைத்திருக்கின்றோம். உண்மையில் அது அப்படி அல்ல. பரிநிர்வாணமடைந்தவர்கள் கோபம் அடையமாட்டார்கள் என்றெல்லாம் நம்பத்தேவையில்லை. அவர்களுக்கும் கோபம் என்கின்ற உணர்ச்சி வரும். ஆனால் விழிப்படைந்தபின் வரும் கோபம் என்பதை ஒருவர் கையாள்வது என்பது மட்டுமே வேறுவிதமாக இருக்கும். அதாவது கோபம் என்பது ஓர் உணர்வே என்கின்ற தெளிவு வந்து, அந்த உணர்ச்சியிலிருந்து சட்டென்று தன்னைத் துண்டித்துக்கொள்ளும் மனநிலை அவருக்கு வாய்த்திருக்கும்.
ஆசிரியர் பாங்கி சொன்னதுபோல, கோபம் என்பது ஒருவரின் புத்த குணாதிசயம் அல்ல, அதை எளிதில் பிரித்துப் பார்க்க முடியும். அதனோடு ஒன்றிணைந்து அதற்கு மேலும் எண்ணெய் ஊற்றி எரிக்கவேண்டும் என்கின்ற உணர்வு வராதபோது, நாம் அந்த உணர்விலிருந்து எளிதில் விடுபட்டு, வெளியில் நின்று அந்த உணர்ச்சியைப் பார்க்கின்றவர்களாக ஆகிவிடுகின்றோம்.
எனக்குத் தெரிந்த நண்பரொருவர் உறவுச்சிக்கலின் ஆழத்தில் இப்போது இருக்கின்றார். அவரைப் போன்ற நிலையில் நான் 10 வருடங்களுக்கு முன் இருந்தவன். எனவே அந்த துயரமும், கையாலாகத்தனமும், தவறிழைப்புக்களும், மன்றாடல்களும், குறைகூறல்களும் எனக்குப் புதியவை அல்ல. இன்று அந்நிலையிலிருந்து மீண்டு, வேறொருவராக நான் அந்தக் காலங்களைப் பார்க்கும்போது ஒரு புன்னகை வந்தாலும், அன்றைய காலங்களில் மிகக் கஷ்டப்பட்டிருக்கின்றேன்; ஒருபோதுமே கடக்கமுடியாத காலத்தில் சிக்கி மூச்சுத்திணறுவதாய் என் மனம் கற்பனை செய்திருக்கின்றது. ஆனால் கோபத்தைப் போலத்தான், அந்த உணர்வுகளும் என் அசலான உணர்ச்சிகள் அல்ல என்று பின்னர் புரிந்தது.
இல்லாவிட்டால் இப்போது நினைத்தாலும், அதே கோபம், வெறுமை, இழப்பெல்லாம் ஒருசேர வந்திருக்கவேண்டுமே; அப்படியில்லாது அந்த உறவின் இனிய நினைவுகள் மட்டுமே இன்று எஞ்சியிருக்கின்றன. எப்போதாவது அந்த கடிய காலம் அருட்டும்போது, சேற்றில் மலர்வதுதான் தாமரை, சேறில்லாமல் எப்படி தாமரையில்லையோ, அப்படியே துயரத்தின் படிப்பினைகள் இல்லாது காதலின் அருமை புரிவதில்லை என்று என் புதிய காதலை அரவணைத்துக் கொள்வேன்.
நண்பரே, உங்கள் மனதிலும் புதிய தாமரை மலரட்டும். நாம் உறவின் நிமித்தம் ஒருபோதும் மன்னிக்கமாட்டோம் என்று சபதமிட்டுச் சொல்கின்ற நம் காதலிகளின் மனங்களிலும் இதே அழகிய தாமரைகள் விரியட்டும். அவர்களின் வாழ்வும் செழிக்கட்டும்!
*****
(Aug, 2025)


0 comments:
Post a Comment