ஒருமுறை தமிழக எழுத்தாளர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, தனது படைப்பொன்றின் பெயரைக் குறிப்பிட்டு, இதையே என் வாசகர்கள் தன் படைப்புக்களில் Magnum Opus என்று குறிப்பிடுகின்றனர் எனச் சொன்னார். எனக்கு அவரது படைப்புக்களில் சிறுகதைகள் பிடித்தவளவுக்கு நாவல்கள் கவர்ந்ததில்லை. ஒரு குறிப்பிட்ட சூழலுக்குள்ளேயே கிட்டத்தட்ட ஒரேமாதிரியான பாத்திரங்களைப் படைக்கின்றார் என்று ஒரு வாசகராக எனக்கு விமர்சனம் இருந்தாலும், சில எழுத்தாளர்கள் தாம் எழுதும் அனைத்துப் படைப்புக்களும் சிறந்ததே என்கின்ற அதீதமான obsessed உடன் இருக்கும்போது, இதுதான் தன் சிறந்த படைப்பு என்று அவர் தரம் பிரித்துச் சொன்ன விதம் பிடித்திருந்தது.
அவ்வாறே ஒரு படைப்பாளி/கள் பிடித்துவிட்டால் ஒவ்வொரு வகைமையிலுமே பிடித்த படைப்புக்கள் ஒரு வாசகருக்கு இருக்கும். உதாரணத்துக்கு நான் ரமேஷ்-பிரேம் இரட்டையர்களாக இருந்து எழுதிக் கொண்டிருந்த காலத்திலே அவர்களின் தீவிர வாசகன். நாவலுக்கு அவர்களின் 'சொல் என்றொரு சொல்', கவிதைக்கு 'சக்கரவாளக்கோட்டம்', சிறுகதைகளுக்கு 'மகாமுனி' என்றொரு பட்டியல் என்னளவில் வைத்திருக்கின்றேன்.
நமது சூழலில் Magnum Opus என்ற சொல்லைவிட, classic என்ற வார்த்தைதான் அதிகம் சித்திரவதை அடைந்திருக்க வேண்டும். ஒரு படைப்பு, செவ்வியல் என்ற வடிவத்தை, அதற்கான காலத்தையும், அந்த வகைமையில் அடையும் முக்கியத்தையும் கொண்டு செவ்வியலாவது இயல்பானதாகும். சமகாலத்தில் ஒரு படைப்பு வெளிவரும்போதோ 'செவ்வியல்' என்ற அடைமொழி கொடுத்து வெளியிடும் அபத்தம் நம் தமிழ்ச்சூழலில் மட்டுமே நடைபெறக்கூடியதென நினைக்கின்றேன். கடந்தகாலத்தை எழுதுவதால் மட்டுமே 'செவ்வியல்' தன்மை அடைந்துவிடுமென்றால், சாண்டியல்யன், கல்கி போன்றோர் தமது கல்லறைகளிலிருந்து எழுந்து வந்து 'எம் படைப்புக்கள் செவ்வியல் இல்லையா' என்று நியாயம் கேட்கமாட்டார்களா என்ன?
கடந்த பத்தாண்டுகளில் வந்த நாவல்களை அட்டவணைப்படுத்திய குணா கந்தசாமி, அவற்றை முன்வைத்து சமகால நாவல்களைப் பற்றிய குறிப்புகளை பெங்களூருவில் நடந்த இலக்கிய நிகழ்வில் வாசித்திருக்கின்றார். அதில் கடந்த 10/20 வருடங்களில் ஏன் தமிழில் Magnum Opus எனச் சொல்லக்கூடிய நாவலொன்றும் வரவில்லையென்பதற்கு சில காரணங்களை முன்வைக்கின்றார். அவர் சொல்வதில் இந்தப் பகுதி முக்கியமானதாக எனக்குப்பட்டது;
"தமிழில் விமர்சனத்துறையையும் இணைத்துப் பார்க்கவேண்டியிருக்கிறது இன்றைய தமிழ் இலக்கிய விமர்சனத்தில் கறார்த்தன்மை குறைவாகவும் மதிப்பீடுகள் இளக்கமானவையாகவும் மாறிவிட்டன. பெரும்பாலும் நாம் படைப்புகளை நிராகரிப்பதில்லை, இன்னும் கொஞ்சம் சிறப்பாக செய்திருக்கலாம் என்று சொல்லப்பழகிவிட்டோம்.சிற்றிதழ் இயக்கத்துக்கு நேர்ந்துவிட்ட தளர்வின் விளைவு இது. சென்ற தலைமுறையின் வலுவான நாவல்கள் பலவற்றுக்கு தமிழ்ச் சிற்றிதழ் மரபும் சமரசமற்ற விமர்சன இயக்கமும் பங்களித்தன என்பது ஒரு மறுக்கமுடியாத உண்மை" என்கிறார்.
அதாவது விமர்சனத்துறையும், சிற்றிதழ் மரபும் முன்வைத்த கறார்த்தன்மை கிட்டத்தட்ட இப்போது தமிழில் மறைந்துவிட்டது என்று சொல்வதை நாம் கவனித்தாகவேண்டும். கடந்தகாலத்துக்கு மட்டுமில்லை கடந்தகால நினைவேக்கத்துக்கும் போவதில் எனக்கு அவ்வளவு பிரியமில்லைத்தான். அன்றைய சிற்றிதழ் இலக்கியத்தின் தீவிரத்தன்மையை, இன்றைய சமூக ஊடகப் பரம்பல்/உலகமயமாக்கலுக்கு எதிராக மீண்டும் கட்டியெழுப்புவது என்பதும் கடினமானது.
ஆனால் விமர்சனத்துறையைக் கறாராகத் தமிழில் மீண்டும் கொண்டுவரமுடியும். மனிதர்கள் பகுத்தறியும் தன்மை உடையவர்கள் என்பதால் இயல்பிலே நாமெல்லோரும் விமர்சகர்கள்தான். பல்வேறு துறைசார்ந்து இன்னும் Critical Studies பல்கலைக்கழங்கள் உள்ளிட்ட கல்விப்புலங்களில் இருக்கின்றது.
தமிழில் மேலே சொன்ன சமகால 'செவ்வியல்' போன்ற அபத்தங்கள் இருப்பதுபோல, ஒருபக்கம் புகழ்ச்சியை மட்டும் அல்லது மறுபக்கம் காழ்ப்புணர்வை மட்டுமே கொண்டதாக பல விமர்சனங்கள்/விமர்சகர்கள் இருக்கின்றனர். நமக்கு சிலரின் அரசியல் இன்ன்பிற விடயங்கள் பிடிக்காது இருக்கலாம். அதற்காக அவர்களின் படைப்புக்களை முற்றாக நிராகரிக்க முடியாது. அவ்வாறு செய்பவர்கள் கலையின் நிச்சலமான அடியாழத்திற்கு ஒருபோதும் சென்றடைய முடியாது.
ஈழப்போராட்டத்தை முன்வைத்து தமிழில் அல்லாது எழுதப்பட்ட புதினங்களைப் பற்றிய என் வாசிப்பை 'எழுநா' விரைவில் வெளியிட இருக்கின்றது. அந்த நூலுக்கான திருத்தங்களைச் செய்ய 'எழுநா' ஒருவரை அணுகியிருந்தது. அவர் எனக்கும் நண்பரென்பதால், 'உனது நூலை ஓருநாளிலே இரண்டு முறை திருத்தங்களைச் செய்து கொடுத்தேன்; அவ்வளவு சுவாரசியமாக இருந்தது' என்றார். மற்றப் புத்தகங்களுக்கு நிறைய நாள் திருத்தங்கள் செய்ய எடுக்கும் நண்பர் இதை ஒரு நாளிலே செய்துகொண்டிருந்ததால் 'எழுநா' நண்பர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்திருக்கின்றது. அதுவல்ல விடயம்.
அதில் அனுக் அருட்பிரகாசத்தின் படைப்புக்களை பற்றி எழுதியதை வாசித்த அவருக்கு அனுக்கைச் சந்திக்க வேண்டும் போலத் தோன்றியிருக்கின்றது. அனுக்கின் 'வடக்கிற்கான பயணம்' நாவலில் வரும் கதாபாத்திரம் கொழும்பிலிருந்து கிளிநொச்சிக்குப் போவது போன்று தனக்கு அனுக்கோடு உரையாடியபடி ஓர் ரெயின் பயணம் செய்யவேண்டும் போல இருக்கின்றது என்றார். ஆக இவ்வாறு வாசிக்கும் ஒருவரை நமக்குப் பிடிக்கும் படைப்பாளியை நோக்கி ஈர்க்கக்கூடியதாக எழுதுகின்றோம் என அறியும்போது வருவது ஒருவகைப் பரவசமே.
நான் இந்த மகிழ்வை பெரும்பாலும் புனைவுகளிலே அடைகின்றவன் என்றாலும், அவ்வாறில்லாது அல்புனைவுகளில் அசோகமித்திரன், சாருநிவேதிதா (இப்போதில்லை, தொடக்ககால கோணல் பக்கங்கள்), உமா வரதராஜன் உள்ளிட்ட பலரின் பத்தி எழுத்துக்களில் உணர்ந்திருக்கின்றேன். அதிலும் முக்கியமாக முருகேச பாண்டியனின் 'இலக்கிய நண்பர்கள்' என்ற நூல் என் வாசிப்பின் தொடக்க காலத்தில் தந்த பரவசம் இப்போது நினைவில் நீங்காத இருக்கின்றது. அதுபோல சிலவருடங்களுக்கு முன் வாசித்த வ.அ.இராசரத்தினத்தின் 'இலக்கிய நினைவுகள்' என்கின்ற ஈழ எழுத்தாளுமைகளை இராசரத்தினம் சந்தித்த அனுபவங்களைப் பற்றிய நூலும் எனக்குப் பிடித்தமானது. இவை என்னைப் பொறுத்தவரை அவர்களின் magnum opus.
ஆக, ஒவ்வொரு படைப்பாளியும் இந்த classic, magnum opus போன்ற வெறும் அடைமொழிகளுக்குள் தமது படைப்புக்கள் நுழைவதைப் பற்றி அதிகம் யோசிக்காது, எழுதுவதை நேர்மையாகவும், விருப்பத்துடனும், மொழியின் வசீகரத்தில் மட்டுமில்லாது அதை வாசகரின் மனதில் விரித்துச் செல்லும் ஆழத்துக்குச் செல்வதற்குமாக தமது எழுத்தை குவிப்பது நல்லதாக இருக்கும். மேலும் இன்னொன்று ஒருவர் ஒரு படைப்பை எழுதி வெளியிட்டுவிட்டால் அதில் obsessed ஆகி, அதையே தொங்கிப்பிடித்துக் கொண்டிருக்கக் கூடாது. ஏன் இது classic ஆகவில்லை, ஏன் இதை எவரும் என் படைப்புக்களில் magnum opus என்று சொல்லவில்லை என பதற்றப்படக் கூடாது. அது இறுதியில் அவர்களுக்கு மட்டுமில்லை, அவர்களின் படைப்புக்களை வாசிக்கும் நமக்கும் சித்திரவதை தரகூடிய ஒரு துயரச் செயலாக மாறிவிடும் அபாயமிருக்கின்றது.
*****


0 comments:
Post a Comment