கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 115

Wednesday, October 29, 2025


கலைகளுக்குப் பங்களிப்பவர்கள்


பசுமை விகடன் போன்றவற்றில் இயற்கை விவசாயம் செய்பவர்களை மிகைப்படுத்தி எழுதுவார்கள். அதுவும் ஐடி போன்ற தொழில்நுட்பத் துறைசார்ந்தவர்கள் இயற்கை விவசாயத்துக்குப் போகும்போது இன்னும் அதிகம் மிதந்தேத்துவார்கள்.. ஒரு இலட்சம், இரண்டு லட்சம்  சம்பளத்தைக் கைவிட்டு விவசாயத்துக்கு வந்தவர்கள் இவர்கள் என்று எழுதி வாசிக்கும் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவார்கள்.

 

அவ்வாறான ஓர் 'அதிர்ச்சி'யை ஏற்படுத்தும் காலம் இலக்கியத்திலும் இப்போது வந்துவிட்டதோ என்று சஞ்சலம் எழுகின்றது. எழுத்து/இலக்கியம் என்பவற்றுக்காக பலர் தமது துறைசார்ந்த வேலையை விட்டு வந்திருக்கின்றார்கள். ஆனால் அதற்காக எவரும் நாம் இலக்கியத்துக்காக இவற்றையெல்லாம் இழந்து 'தியாகி'களாக வந்திருக்கின்றோம் என்று பிரகடனப்படுத்தியதில்லை. அது ஊர் ஊராய் அலைந்து சஞ்சிகை விற்ற சி.சு.செல்லப்பாவா இருந்தாலென்ன,  ஒருவகை விட்டேந்தி வாழ்க்கை வாழ்ந்த க.நா.சுப்ரமணியனாலென்ன, அப்படி எவரும் தமக்கு ஓர் இலக்கிய தியாகிப்பட்டம் தரவேண்டும் என்று வாசகரிகளிடம் கோரியதில்லை.

 

அசோகமித்திரன் கூட, ஜெமினி ஸ்டூடியோவில் இருந்து வேலையைத் துறந்தபின், ஒரு முறையான ஊதியம் கிடைக்கும் தொழிலில் போய் அமர்ந்தவரில்லை. அவர் நினைத்திருந்தால் அவருக்குரிய அனுபவம்/திரைப்படத் துறை சார்ந்த நெருக்கத்தின் நிமித்தம் ஆகக்குறைந்தது ஒழுங்காய் மாதம் மாதம் சம்பளம் கிடைக்கும் வேலையில் போய் இருந்திருக்க முடியும். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. இத்தனைக்கும் அவர் பிரமிள் போன்று தனித்து வாழும் வாழ்க்கையை இலக்கியத்தின் பொருட்டுத் தேர்ந்தெடுத்துவருமில்லை. அசோகமித்திரனுக்கு மனைவி, பிள்ளைகள் என்று பார்த்துக்கொள்ளவேண்டிய குடும்பச்சுமை இருந்தது.

 

ஆக மேற்குறிப்பிட்ட இவர்கள் உள்ளிட்ட இன்னும் பலரும்,  எழுத்தை ஏன் தமது வாழ்நாளின் ஆதாரசுருதியாகக் கொண்டார்கள் என்றால் அவர்களுக்கு இலக்கியம் அவ்வளவு பிடித்திருந்தது. வேறு துறைசார்ந்து அவர்களுக்கு புலமைத்துவம் இருந்தும் அவர்களை எழுத்து  ஆழமான வேர்களால் பின்னிப்பிணைத்திருந்தது. அவ்வாறு எழுத்து அவர்களுக்கு 'அருளப்பட்டபோது' அவர்கள் ஏனைய லெளதீகப் பிரச்சினைகளோடும் மரியாதையுடன்  இலக்கியத்தை வாரி அணைத்துக் கொண்டார்கள்.

 

அதிலும் பிரமிள் இவர்கள் அனைவரையும் விட இன்னும் அதி தீவிர நிலைக்குச் சென்றவர். அசோகமித்திரன், க.நா.சு போன்றவர்களுக்கு பூர்வீகச் சொத்து கொஞ்சமாவது இருந்திருக்கும் (ஆகக்குறைந்தது வாழ்வதற்கு ஓர் வீடாவது). பிரமிளுக்கு அதுவும் இல்லை. இலங்கையில் திருகோணமலையில் தனது தாயின் வீட்டை விற்றுவிட்டு தமிழ்நாட்டுக்கு வந்து, எந்தத் தொழிலும் செய்யாது எழுத்தை மட்டும் நம்பி வாழ்ந்த பிரமிளை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அதுமட்டுமில்லை இலக்கியத்தின் முன் எந்தச் சமரசமும் இல்லை என்று அவருக்கு நெருக்கமாக இருந்தவர்கள்/உதவியவர்கள் என்று எல்லோரையும் விமர்சனங்களால் அடித்து நொறுக்கியவர் .

 

அதன் நிமித்தம் வசதி குறைந்த இடத்தில், ஒழுங்கான உணவில்லாது கூட வாழ்ந்தவர் பிரமிள். ஆனாலும் ஒருபோதும் நான் இப்படியிருந்து எழுதுகின்றேன், ஆகவே தமிழன்னை என்னை ஓர் தியாகியாக நினைக்க வேண்டும் என்று தமிழின் முன்னோ அவரின் வாசகர்கள் முன்னோ இறைஞ்சியவரில்லை. ஒருவகையில் அதுவே இன்றும் பிரமிளை கம்பீரமான எழுத்தாளராகத் துலங்க வைக்கின்றது.

 

இவ்வாறானவர்கள்தான் நமக்கு எழுத்தில் முன்னோடியாக இருக்கின்றார்கள்.  இலங்கையில் கூட மு.தளையசிங்கம், மு.பொன்னம்பலம் போன்றவர்கள் அப்படியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கின்றார்கள் என்று தெரிகின்றது. அண்மையில் மு.தளையசிங்கத்தின் சகோதரர் மு.பொன்னம்பலம் காலமானபோது, அவருக்காக எழுதப்பட்ட ஒரு குறிப்பில், மு.பொன்னம்பலம் கூட பெரும்பாலும் நண்பர்களின் உதவியுடந்தான் நெடுங்காலம் தனது வாழ்க்கையை வாழ்ந்ததாக அறிந்தபோது வியப்பாக இருந்தது. ஏனெனில் அவரின் கடைசி மகனும், நானும் கொழும்பில் ஓர் பாடசாலையில் ஒன்றாகக் கொஞ்சக் காலம் கல்விகற்றிருக்கின்றோம்.

 

இன்று பல ஆளுமைகளின் பிள்ளைகள் தமது தந்தையர் மீது விமர்சனம் வைக்கும்போது (காந்தியின் மகனில் இருந்து அண்மைக்கால பேராசிரியர் வசந்திதேவியின் மகன்வரை), அசோகமித்திரனின் பிள்ளைகளோ அல்லது மு.பொன்னம்பலத்தின் பிள்ளைகளோ பொதுவெளியில் வந்து தம் பெற்றோரை திட்டவில்லை. ஒருவகையில் இப்படி எழுத்தின் விருப்பம் சார்ந்து முழுநேர எழுத்தாளர்களாக இருந்தபோதும், இவர்களில் பெரும்பாலானோர் பிள்ளைகளை நன்றாக வளர்த்திருக்கின்றார்கள் என்பது நமக்குத் தெளிவாகின்றது.

 

இப்படியெல்லாம் நமக்கு நிறைய எழுத்தாளர்கள் உதாரணங்களாக வாழ்ந்து காட்டிப் போனபோது சில எழுத்தாளர்கள் இந்த 'பசுமை விகடன் ஐடி இயற்கை விவசாயிகள்' போல தேவையில்லாது எழுத்தாளர்கள்/எழுத்தை glorify செய்வதைப் பார்க்கச் சலிப்பாக இருக்கின்றது. இத்தனைக்கும் ஓர் எழுத்தாளர் மாதமொருமுறை தனது (வளர்ப்பு) மகனைத் திட்டி எழுதுகின்றார். இன்னொரு எழுத்தாளரோ, என் மகன் உழைக்கவே தேவையில்லை, அவனுக்காக வாழ்நாளுக்கான பணத்தை நான் சம்பாதித்துக் கொடுத்திருக்கின்றேன்' என்று அறைகூவல் விடுகின்றார். இவர்களைப் போன்றவர்கள்தான் எழுத்தை அதியற்புதமாகவும், எழுதிக்கொண்டிருப்பவர்கள் உன்னதமானவர்கள் போலவும் நம்மை நம்ப வைக்கக் கஷ்டப்படுகின்றார்கள்.

 

மேலும் நாகார்ஜூனன், தமிழவன், எம்.டி.எம் போன்றவர்கள் தமது எழுத்தின் 'பேரெழுச்சி'களால் காணாமற் போய் இப்போது திரும்பி வந்து கொண்டிருக்கின்றார்கள் என்று இன்னொருபக்கம் சிணுங்கவும் செய்கின்றார்கள். இவர்கள் தொடர்ந்து எழுதி இவர்களின் வளர்ச்சி இந்த 30 வருடங்களில் விஸ்வரூபம் எடுத்துவிட்டதென்றால், ஏன் மீளத் திரும்பும் உதிரிகளைக் கண்டு இவர்கள் அச்சமுற வேண்டும்?

 

ப்படியெனில் 60களின் பிற்பகுதியில்  'அக்கா' என்கின்ற ஒரு சிறுகதைத் தொகுப்போடு உறங்குநிலைக்குப் போய், பின்னர் ஓய்வூதியம் எடுத்துகொண்டு 30 ஆண்டுகளின் பின் எழுத வந்த அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்களை இவர்கள் எப்படி மதிப்பார்கள். அ.முத்துலிங்கத்தோடு முரண்பட என்னைப் போன்றவர்களுக்கு ஒரு நூறு காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அவர் மீள வந்தபோது அருமையாகத்தானே எழுதத் தொடங்கினார். முப்பது வருடங்களாக ஒருவர் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பதோ, அல்லது முப்பது வருட உறங்குநிலைக்குப் பிறகு ஒருவர் வந்து எழுதுவதையோ குறித்து ஒரு வாசகர் அக்கறைப்படப்போவதில்லை. என்ன ஒருவர்  எழுதுகிறார்/எழுதிக்கொண்டிருக்கின்றார் என்பதே வாசகர்க்கு மட்டுமில்லை, தமிழின் எதிர்காலத்துக்கும் முக்கியமானது.

 

மேலும் இன்று தமிழில் தாமேதான் மூன்று முக்கியமானவர்கள் என்று தங்களை முன்வைப்பவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டிய ஒரு விடயம் இருக்கின்றது. இந்த மூன்று பேரும், தமிழில் புதுத்திணையாக வந்த இணையத்தைச் சரியாகப் பயன்படுத்தியவர்கள் ஆவார். அதனால்தான் இவர்களின் எழுத்து இந்தளவுக்கு பரவலாகப் போய்ச் சேர்ந்திருக்கின்றதே தவிர, இவர்களுக்கு நிகராக எழுதும் பலர் -இலைமறை காயாக- சமகாலத்தில் இருக்கின்றார்கள் என்பதுதான் நிஜம். கடந்த பத்து/இருபது ஆண்டுகளில் இவர்கள் தமிழ்ச்சூழலில் என்னவிதமான புதுப்பாய்ச்சல்களை நிகழ்த்திக்காட்டினார்கள் என்று நாம் அவதானித்தாலே நமக்கு இவர்களின் எழுத்தின் பலவீனமான பக்கங்களும் விளங்கும்.

 

இதற்குள் நாகார்ஜூனன், தமிழவனைப் போன்றவர்களை நிராகரிக்கும் இவர்களுக்கு இருக்கும் 'துணிச்சல்' என்னவென்பதையும் நாம் அறிவோம். இவர்கள் எவரும் அருகில் ஈழப்போர் உக்கிரமாக நடக்கும்போது நாகார்ஜூனன் தமிழவன் போல இவர்கள் உரத்தகுரலில் எழுதியவர்களோ/பேசியவர்களோ இல்லை. அதிலும் ஒருவர் ஈழப்போராட்டத்தின் இறுதிக்காலத்தில் ஆஸ்திரேலியாவுக்குப் போனபோது இந்த யுத்தம் குறித்து உங்களுக்குக் கருத்துச் சொல்ல எதுவுமில்லையா? என்று வினாவ, 'நான் அரசூழியன் எந்தக் கருத்தையும் சொன்னாலும் என் பணிக்கு ஆபத்து' என்று தனது 'வீரத்தை'க் காட்டியவர். இன்னொருவரோ இலத்தீன் அமெரிக்கப்போராட்டங்கள் குறித்து மாய்ந்து மாய்ந்து எழுதுவார். ஆனால் ஈழப்போராட்டம் குறித்து மெளனத்தைக் காப்பார். ஆனால் ஈழத்தில் போர் முடிந்து மக்கள் இன்னும் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பமுடியாது பொருளாதார நெருக்கடிக்குள் இருக்கும்போது, இலங்கையில் நாய்களால் பிரச்சினையென உலகின் அதிமுக்கிய பிரச்சினையை எழுதி தன் இருப்பை 'அறிவுஜீவி'த்தனமாகத் தன்னை நிரூபிப்பார். முப்பது ஆண்டுகளாக யுத்தம் தின்ற மண்ணில் இவர்களுக்கு நாய்களைத் தவிர பேசுவதற்கு வேறு விடயங்களே இல்லை என்றளவுக்கு அந்தளவுக்கு 'மனிதாபிமானி'கள்.

 

நாகார்ஜூனன், எம்டிஎம் போன்றவர்களின் மீள்வரவால் இப்படிப் பதற்றப்படும்போது, நாகார்ஜூனன் தான் எழுதிய அனைத்தையும் அழித்துவிட்டு (மறைத்துவிட்டு) மீளவும் உறங்குநிலைக்குப் போனவர் என்பதை ஏன் இவர்கள் சொல்வதில்லை. ஆகக்குறைந்தது நாகார்ஜூனன் ஒருபோதும் தன் எழுத்தையோ/பெயரையோ வாசகருக்கும் விற்கும் எந்த எத்தனமும் செய்ய விரும்பவில்லை என்பதைத்தானே, அவர் இணையத்தளத்தில் எழுதிய எல்லாவற்றையும் மறைத்துவிட்டுச் செல்வதன் மூலம் கூறாமல் நமக்குக் கூறியிருக்கின்றார். இத்தனைக்கும் என்னைப் போன்றவர்கள் நாகார்ஜூனன், தமிழவன் போன்றவர்களிடம் இருந்து கோட்பாடு/தத்துவம்/பிறமொழிப் படைப்புகள் குறித்து எத்தனையோ நிறையக் கற்றிருக்கின்றோம்.மேலும் இன்றைக்கு தமிழில் விமர்சனம் என்பது செத்துவிட்டது போன்ற தோற்றத்தைத் தரும்போது நமக்கு நாகார்ஜூனன், தமிழவன், எஸ்வி.ராஜதுரை, ராஜ் கெளதமன், அ.மார்க்ஸ், எம்.டி.எம், ரமேஷ்-பிரேம் உள்ளிட்டவர்களின் எழுத்துக்களும் இன்றில்லாவிட்டால், எங்கிருந்து திறனாய்வின் அடிப்படைகளையோ/அல்புனைவு எழுத்துவகைமையை தமிழில் அறிந்து கொண்டிருக்கமுடியும். மேற்குறிப்பிட்டவர்கள் மீது நமக்கு விமர்சனங்களும் ஏற்பும் என எல்லா விடயங்களும் இருக்கின்றது. அதையும் எழுத்தின் ஒரு சாராம்சமாக எடுத்துக்கொண்டு முரண்பாடுகளோடு உவத்தல்/காய்த்தலின்றி உரையாடலாம் என்றுதானே இவர்கள் நமக்குச் சொல்லித் தருகின்றார்கள்.

 

சில வருடங்களுக்கு முன் அ.மார்க்ஸ் இலங்கை வந்தபோது, நிகழ்வுக்கு வந்த  இந்த நாய்ச்சிக்கல்காரர் அ.மார்க்ஸை தூற்றோ தூற்றென வன்மத்துடன் கரித்து எழுதிக் கொண்டிருந்தார். நான் அ.மார்க்ஸை நேரடியாகச் சந்தித்தபோது உங்களுக்கும் இந்த நாய்ச்சிக்கல்காரருக்கும் அப்படி என்னதான்  பிரச்சினையென நேராகவே கேட்டேன். அ.மார்க்ஸ் சிரித்தபடி நீங்கள் இதை அவரிடந்தான் கேட்கவேண்டும் என்று அந்த விடயத்தை நாசூக்காய் முடித்துவிட்டார். இதைத்தானே இலக்கியம் கற்றுத்தரவேண்டும்?

 

வர்களைப் போல பாவனை காட்டாது, தமிழில் எழுத்தும் வாழ்க்கையும் வேறு வேறு இல்லையென அசலாக வாழ்ந்தவர்கள் நிறையப் பேர்கள் இருக்கின்றார்கள். தமிழில் தலித்திய முன்னோடி எனச் சொல்லப்படுகின்ற கே.டானியலுக்கு எழுத்தைப் போல, போராட்டமும் முக்கியமானதே. அதற்காக அவர் களங்களில் நின்றிருக்கின்றார், அதிகாரத்திடம் அடிவாங்கியிருக்கின்றார், சிறை  சென்றிருக்கின்றார்.

 

இன்னொருவர் மு.தளையசிங்கம். மெய்யுள், பிரபஞ்ச யதார்த்தம் என்று புதிய தடங்களில் சிந்தித்ததோடு மட்டுமின்றி, சர்வோதயம் என்று காந்தியச் சிந்தனைகளின் நீட்சியில் இயக்கம் தொடங்கி சமூகக் களங்களில் போராடியவர். இன்றைக்கு அவர் எழுதியவை ஆயிரம் பக்கங்களைத் தாண்டி நம்முன்னே மறுவாசிப்புக்காய்க் காத்திருக்கின்றது. இத்தனைக்கும் தம் ஊர் கிணற்றில், தலித்துக்களை தண்ணீர் அள்ள அனுமதியளிக்கவில்லை என்பதற்காக சாதிவெறியர்களோடு போராடி சிறைக்குச் சென்று அங்கு பொலிஸ்காரர்களால் மோசமாகத் தாக்கப்பட்டவர். மிக இளவயதில் (38) இறந்த தளையசிங்கத்தின் இறப்பில் அவர் மீது பொலிஸ் நடத்திய தாக்குதலும் முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்திருக்கின்றது.

 

ஆக இப்படி எழுத்தும் வாழ்வும் வெவ்வேறானதல்ல என்று நமக்கு முன்னோடியாகப் பலர் வாழ்ந்து காட்டிவிட்டுப் போனதன்பிறகும், தமிழ்ச் சமூகத்தில் எழுத்துப் போராளிகளாகவும், இலக்கியத்துக்காக வாழ்வை அர்ப்பணித்துவிட்டோம் என்றும் நம் சமகாலத்தில் சில எழுத்தாளர்கள் எழுதும்போது நமக்கு சிரிப்பு வருவது ஒருபுறமிருக்கட்டும், அவர்களுக்கு இப்படியெல்லாம் எழுதுகின்றோமே எனக் கொஞ்சமாவது வெட்கம் வராதா என்ன?

 

*******

(நன்றி: ஓவியம்- பிருந்தாஜினி)

கார்காலக் குறிப்புகள் - 114

Saturday, October 25, 2025

 

 1.

நண்பர் என் புத்தக சேகரத்திலிருந்து எம்.டி.முத்துக்குமாரசாமியின் 'மைத்ரேயி மற்றும் பிற கதைகள்' தொகுப்பை எடுத்து வாசித்துக் கொண்டிருந்தார். சில கதைகளை வாசித்தபின், 'என்ன, உனது ஆள் நன்றாக எழுதுகின்றார்' என்று சொன்னார். அதன்பிறகு இருவரும் நேரடியான யதார்த்தவாதக் கதைகள் நமக்கு எவ்வளவு அலுப்பூட்டுகின்றது என்பது பற்றிப் பேசிக் கொள்ளத் தொடங்கினோம். அதை விட்டு விலகி எம்டிஎம் எழுதியதால்தான் நம்மிருவரையும் இத்தொகுப்பு வசீகரித்திருந்தது.

'மைத்ரேயி' தொகுப்பு எம்டிஎம் 30 வருடங்களுக்கு முன் எழுதிய கதைகளிலிருந்து சமகாலத்தில் எழுதியவற்றின் ஒரு தொகுப்பு. இது எனக்குப் பிடித்த தொகுப்பாயினும், என் கண்களுக்கு எப்போதும் எட்டக்கூடிய மிகச்சிறந்த நூல்களில் ஒன்றென வைத்திருக்கும் எம்டிஎம்மின் 'நிலவெளி என்னும் ரகசிய துணை'யைச் சொல்வதுண்டு. அது ஓர் அற்புதமான அல்புனைவுத் தொகுப்பு.



எம்டிஎம் தமிழாக்கிய 'ரோஜாவின் பெயரை' நான் இன்னும் வாசிக்கவில்லை. ஆனால் எம்டிஎம்மின் எழுத்துக்களை தொடர்ந்து வாசிப்பவன் என்றவகையில் அவர் தனது அதியுச்ச உழைப்பை உம்பர்த்தோ எக்கோவின் நூலுக்குக் கொடுத்திருப்பார் என்றே நம்புகின்றேன். படைப்பாளியாகவும், விமர்சகராகவும் இருக்கும் எம்டிஎம்மைப் போன்ற ஒருவர் அவ்வளவு எளிதில் ஒரு நூலைக் கீழிறக்கும் வேலையை செய்யப் போவதுமில்லை.


எம்டிஎம் ஓர் உறங்குநிலையிலிருந்து மீண்டும் வருகை தந்தபின் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாய் தமிழ்ச்சூழலில் உற்சாகமாகத்தான் இயங்கிக்கொண்டிருக்கின்றார். ஏதோ இப்போது சர்ச்சையில் சிக்கிய 'ரோஜாவின் பெயர்' மொழிபெயர்ப்பு நூலோடுதான் தமிழில் மீள்வருகையை  எம்டிஎம் நிகழ்த்தியதாக எழுதப்படும் பதிவுகள் அலுப்பூட்டக்கூடியவை. இன்னொருவகையில் இவ்வாறு எழுதுபவர்கள் எவ்வாறு சமகாலச்சூழலின் வாசிப்பிலிருந்து பின் தங்கி நிற்கின்றார்கள் என்பதை அறிவதற்கு நமக்கொரு சந்தர்ப்பம் வாய்த்திருக்கின்றது என்பதாக நாம் ஆறுதற்பட்டுக் கொள்ளலாம்.

2.

நான் எப்போது உம்பர்த்தோ எக்கோவை முதன்முதலில் அறிந்துகொண்டேன் என்று ஞாபகத்தில் இல்லை. ஆனால் நண்பர் ஒருவரோடு பழகத் தொடங்கியபோதுதான் எக்கோ எங்களின் உரையாடல்களுக்குள் வந்தார். நண்பர், ரமேஷ்-பிரேமின் 'கதையும் கட்டுக்கதையும்'' நூலின் மூலமாகவே எக்கோவை அறிந்துகொண்டார். அத்தோடு நம்புவதற்குச் சற்றுக் கடினம் என்றாலும் அவரது பதின்மம் முடிவதற்குள்ளேயே எக்கோவின் 'The Name of the Rose', 'Baudolino' போன்ற நூல்களை வாசித்து முடித்திருந்தார். பிறகு நானும் அவருமாகச் சேர்ந்து 'Foucault's Pendulum', 'The Mysterious Flame of Queen Loana', 'The Prague Cemetery' போன்றவற்றை வாங்கி வாசித்திருக்கின்றோம். ஒருவர் ஒரு நாவலை வாசித்துவிட்டால், அவரிடமிருந்து அது குறித்து கற்கலாம்/அறியலாம் என்பதால் நான் அநேகமாக அவர் வாசிக்கத் தொடங்காத எக்கோவின் நாவல்களை வாசிப்பேன்.

பின்னர் எல்லா உறவுகளையும் போல எமது உறவு தேய்ந்து இல்லாதபோனபோதும் நான் தனித்து எக்கோவின் நூல்களை வாங்கி வாசித்திருக்கின்றேன். அதன் நீட்சியில்தான் எக்கோவின் இறுதி நாவலான ' Numero Zero' வாசித்ததோடல்லாது ஒரு விரிவான வாசிப்பையும் அன்றைய பொழுதில் (2015?) எழுதியிருந்தேன்.

இவ்வாறாக எக்கோ புனைவுகளால் தமிழ்ச்சூழலில் பிரபல்யமாக இருந்தாலும், எக்கோ எழுதிய அல்புனைவுகள்தான் அவரின் புனைவுகளை விட மிக அதிகம்.  எக்கோ எழுதிய நாவல்கள் ஏழுதான்; ஆனால் அவரின் அல்புனைவு நூல்கள் எப்படியும் 20களைத் தாண்டும் என நினைக்கின்றேன். அப்படி வாசித்தவற்றில் சில 'How to Travel with a Salmon & Other Essays', ' On Ugliness', 'On Literature'. வாழ்க்கையில் ஒரு பெரும் துயரத்தைக் கடந்துகொண்டிருக்கையில் ஒருபொழுது தனித்துப் பயணித்தபோது கையில் கொண்டு சென்றது எக்கோவின் 'Confessions of a Young Novelist'. அதுபோலவே இப்போது தமிழில் எக்கோவை முன்னிட்டு சர்ச்சைகள் போகும்போது அதில் நுழையாமல் மனதைத் திரும்ப 'Six Walks in the Fictional Woods ' என்ற எக்கோ ஒரு பல்கலைக்கழகத்தில் கொடுத்த உரைகளின் தொடரை வாசித்துக் கொண்டிருக்கின்றேன்.

இந்நூல் நிச்சயம் தமிழாக்க வேண்டியது. அந்தளவுக்கு புனைவுகளின் வகைமைகளை மட்டுமில்லை எப்படி வாசகர்கள் ஒரு நூலை வாசிக்கின்றனர்,  எழுத்தின்/வாசிப்பின் போதாமை என்று பல்வேறு கோணங்களை ஆராயும் எக்கோ, ஒருவகையில் எழுத்தாளருக்கும் படைப்பாளிக்குமான இடைவெளியை எப்படி குறைப்பது என்பது பற்றியும் நமக்குச் சொல்லித் தருகின்றார்.

அதில் ஓரிடத்தில் தாமஸ் மான், காஃப்காவின் 'Metamorphosis' ஐ, அல்பேர்ட் ஜன்ஸ்டீனிடம் வாசிக்கக் கொடுக்கும்போது, ஐன்ஸ்டீன் 'இந்த நூலின் சொல்லுமளவுக்கு மனிதமூளை அவ்வளவு சிக்கலானது' என்று சொல்லி நூலை திரும்பிக் கொடுத்துவிடுவார் என்பதைப் பற்றி எக்கோ குறிப்பிடுகின்றார். ஆக உலகில் அதிசிறந்த IQ கொண்ட அறிவுகொண்டவர்களால் கூட ஒரு படைப்பாளியின் உலகினுள்(மூளைக்குள்) சிலவேளைகளில் நுழையக் கடினமாக இருக்கலாம் என்பதை இதன்மூலம் அறிந்துகொள்ளலாம். அதுபோலவே எக்கோவினது நூலோ அல்லது தமிழ் மொழிபெயர்ப்போ கூட எல்லோர்க்கும் உரியதல்ல என்பதையும் நாம் ஒப்புக்கொள்ள ஏன் தயங்குகின்றோம் என்பதுதான் புரியவில்லை.

ஏன், மேலே நான் வாசித்ததாக குறிப்பிட்ட நூல்களை முழுமையாகவோ அல்லது எக்கோ கூற விரும்பிய அர்த்தங்களில் சரியாக விளங்கிக் கொண்டேன் என்றோ நான் சொல்லப் போவதில்லை. ஆனால் எக்கோவின் எந்த நூலை வாசித்தாலும் நான் அறிந்துகொள்ள புதுவிடயங்களும், நான் இதுவரை யோசிக்காத வழிகளில் அவர் ஒரு திறப்பைச் செய்கின்றவராகவும் இருப்பதால் எக்கோவை நான் தொடர்ந்து வாசிக்க ஆர்வமுடையவனாக இருக்கின்றேன்.

உதாரணத்துக்கு எக்கோவின் 'On Ugliness' வாசிக்கும்போது, இந்த 'அசிங்கம்' என்பவை எப்படி எங்களுக்குள் மத்தியகால ஐரோப்பிய காலத்திலிருந்து திணிக்கப்பட்டு உருவாக்கப்படுகின்றது என்பது பற்றிய ஆரம்பப்புள்ளிகளையாவது சிந்திக்கத் தொடங்குவோம். அதுபோலவே எக்கோவின் 'The Mysterious Flame of Queen Loana' என்னை வசீகரிக்கும் அவரது ஒரு நாவல். அதில் ஒரு புத்தகக்கடைக்காரர் சட்டென்று அவரின் நினைவை முழுதாக இழந்துவிட்டு, பின்னர் நினைவைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பெறுவார். அந்த மீள் நினைவை எக்கோ அந்த நபரின் சிறுவயது காட்டூன் புத்தகங்கள் இன்னபிற சிறுவர் நூல்களினூடாகக் கட்டியெழுப்புவார். அதில் நகைச்சுவைக்கும் குறையிருக்காது. அவரின் புத்தகக் கடையில் ஒரு இளம்பெண் உதவியாளராக இருப்பார். திருமணமாகிய இந்தப் புத்தகக்கடைக்காரருக்கு நினைவுகள் இழந்து மீண்டதில், இந்தப் பெண்ணோடு உடல்சார்ந்த உறவு இருந்ததா இல்லையா என்றெல்லாம் அவருக்கு வரும் குழப்பங்களும், நடத்தைகளும் சிரிப்பை வரவழைப்பவை.

3.

என் (கடந்தகால) நண்பருக்கு ஐரோப்பிய மத்தியகாலத்தின் மீதும், கத்தோலிக்க மதம்/திருச்சபை குறித்தும் பரந்த வாசிப்பும், அறிந்துகொள்ளும் ஆர்வமும் மிகுந்து இருந்தது. அவருக்கு எக்கோ ஒரு முக்கிய நூலாசிரியராக நான் அவரையறிந்த காலங்களில் இருந்தார்.  என்னுடைய ஆர்வம் இவற்றில் குறைவு. எனக்கு மிலான் குந்தேரா போன்றவர்கள் வசீகரித்த அளவுக்கு உம்பர்த்தோ எக்கோ போன்றவர்கள் நெருக்கமானவர்களில்லை. அதற்கு என் வாசிப்பின் போதாமைதான் ஒரு காரணமாக இருக்கும்.

இன்றைக்கு எக்கோவின் மொழிபெயர்ப்பை வைத்து, எக்கோவையே மிதிக்க ஒரு கோஷ்டி வருவதைப் பார்க்க வியப்பாக இருக்கின்றது. இவர்கள் எக்கோ எழுதிய நூல்களில் அரைவாசியாவது வாசித்திருப்பார்களா? ஒரு நூலை முன்வைத்து ஒரு எழுத்தாளரை நிராகரிக்கும் அதிகாரத்தை யார் இவர்களுக்கு வழங்கியது. அதிலும் ஏதோ கல்லூரிக்காலத்தில் வாசித்துவிட்டு இது கிறிஸ்தவ இறைஞானத்தை நோக்கியே போகவில்லை, பொலபொலவென்று உதிர்ந்து விழும் நாவல், ego trip இற்கு அழைத்துச் செல்லும் புனைவு என்றெல்லாம் 'எல்லாம் தெரிந்த ஞானி'யாக அறுதியிட்ட உண்மையாக ஒருவர்  எழுத தமிழில் வாசகர்கள் எதைச் சொன்னாலும் கேட்பார்கள் என்கின்ற ஆணவத்தைத் தவிர வேறென்னவாக இருக்கும்.

அதுவும் இன்னொரு பதிவில் துப்பறியும் நாவல்கள் என்று 'ரோஜாவின் பெயரோடு (மறைமுகமாக), ரொபர்தோ பொலானோவின் 2666, Savage Detectives போனவற்றை ஒப்பீடு செய்வது என்னவொரு கொடுமை. மத்தியகாலத்தில் நடக்கும் ஒரு நாவலைக் கொண்டுவந்து, எப்படி சமகாலத்தைப் பின்னணியாக வைத்து  எழுதிய 2666, Savage Detectives  ஒப்பிட முடியும் என்கின்ற எளிய விடயம் கூடத் தெரியாமலா ஒருவர் இருப்பார்? பொலானோவின் இந்த நாவல்களை எக்கோ எழுதிய இறுதி நாவலான 'Numero Zero' உடன் ஒப்பிட்டிருந்தால் கூட ஒரளவுக்குப் பரவாயில்லை. 'Numero Zero'  இரண்டாம் உலகப் பின்னணியில் எழுதப்பட்ட ஒரு துப்பறியும் நாவலாகும்.

இப்படியான அபத்தங்களைப் பார்க்கும்போது எனக்குப் பிடித்த ரொபர்தோ பொலானோ கூடப் பிடிக்காமல் இனிப் போய்விடுவாரோ  என்று அச்சமாக இருக்கிறது. நல்லவேளையாக பொலானோவின் படைப்புக்கள் பற்றி ஒரு  வாசிப்பை எழுதி 'எழுத்தென்னும் மாயக்கம்பளத்தில்' சேர்த்திருப்பதால் பொலானோவை நானும் 'நாளை நீங்களெல்லாம் ஓர் எழுத்தாளரா உங்களை நான் நிராகரிக்கின்றேன்' என்று நம் தமிழ் 'அறிவுஜீவி'களோடு சேர்ந்து நின்று திட்டினாலும், ஒரு  கடந்தகாலச் சாட்சியாக அந்த நூல் நின்று என் மனச்சாட்சியை உறுத்துமென நினைக்கின்றேன்

உண்மை எது புனைவு எது என்ற கோடுகளை அழிக்கும் நாவல்கள் இவையென பட்டியலிட்டு எக்கோவை நிராகரிக்கும் 'எல்லாம் அறிந்த வல்லவரே' தயவுசெய்து எக்கோவினது 'Baudolino' வை நிதானமாக வாசித்துப் பாருங்கள்.  அது என்னைப் போன்ற எளிய வாசகனுக்குக் கூட மத்தியகால ஐரோப்பாவின் வரலாறு என நம்பிக்கொண்டிருந்தவற்றை/கற்பித்தவற்றை கட்டவிழ்த்துப் பார்ப்பதைத் தானே வாசிப்பவர்க்குச் சொல்லித் தருகின்றது. இதைவிட வரலாற்றை எப்படிக் கட்டுடைக்க வேண்டுமென நினைக்கின்றீர்கள்.

எனக்கு வரும்  திகைப்பென்னவென்றால் வாசித்த கொஞ்சத்தை வைத்து எப்படி இவர்கள் தந்தகோபுரத்தில் ஏறி நின்று,  நமக்கு மட்டுமில்லை, எக்கோவிற்கே துணிச்சலாகப் பிரசங்கம் செய்கின்றார்கள் என்பதுதான்!

**********

பனிக்காலத் தனிமை - 11

Saturday, October 18, 2025

 

மெரிக்காவில் ஸென்னைப் பரவலாக்கிய ஒருவராகிய சூஸிகி ரோஸி சான் பிரான்ஸிற்கோவிற்கு வரும்போது அவருக்கு 55 வயதாகியிருந்தது. சூஸிகி ரோஸியின் குழந்தைப் பருவம் வறுமைக்குள் கழிந்தது. தனது சிறுவயதில் வளர்ந்த தலைமயிரைக் கூட சலூனுக்குச் சென்று வெட்ட முடியாத காரணத்தால், தனது தந்தையார் தனது தலையை நன்றாக மழித்துவிடுவார் என்றும் அதனால் பாடசாலையில் தனது மொட்டைத்தலையை எள்ளல் செய்தபடி சக மாணவர்கள் இருப்பார்கள் எனவும், இதனால் தனது பாடசாலைப் பருவம் மகிழ்ச்சியாக இருந்ததில்லை எனவும் ரோஸி சொல்லியிருக்கின்றார்.

சூஸிகி ரோஸியின் தந்தையார் ஒரு புத்த மடலாயத்திற்குப் பொறுப்பானவராக இருந்தவர் . ஆனால் அன்றைய மெஜி பேரரசர் (Emperor Meiji) பெளத்த மடாலயங்கள் அனைத்தையும் ஷின்டோ (Shinto) மடலாயங்களாக மாற்றி அரசின் கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வந்திருந்தார். ஒருவகையில் வேறிடத்தில் இருந்த பெளத்தம் வேண்டாம், ஜப்பானிய பூர்வீக மதங்களுக்குத் திரும்பவேண்டும் என்ற நோக்கில் இப்படி அனைத்தும் ஷின்டோவாக மாற்றப்பட்டுக் கொண்டிருந்தன.

சூஸிகி ரோஸி தனது 13 வயதில் தந்தையிடம் அனுமதி கேட்டு இன்னொரு பெளத்த மடலாயத்தில் சென்று சேர்கின்றார். ரோஸி ஆசிரியராக ஸென்னைக் கற்பிக்கும் நிலைக்கு வந்தபோது அவர் அமெரிக்காவுக்குச் செல்ல விரும்புகின்றார். அவருக்கு ஜப்பானில் பெளத்தம் அதன் அசலான நிலைமையிலிருந்து மாறிவிட்டதாகத் தோன்றுகின்றது. புதிய நிலப்பரப்பில், பெளத்தம் குறித்து எவ்வித முன்முடிவுகளும் இல்லாத இடத்தில் ஸென்னை கற்பிப்பது சிறந்ததென முடிவு செய்கின்றார்.
ஆனால் ரோஸியின் ஆசிரியர் அவரது இந்த முடிவுக்கு சம்மதிக்கவில்லை.

பின்னர் அவர் தனது ஐம்பதுகளில் (1959இல்) அமெரிக்காவுக்கு ஒரு ஜப்பானிய மடலாயத்துக்கு குருவாக வருகின்றார். அங்கும் அது ஒரு மதகுருவாக இருந்தாலும் அவரது கனவான ஸென்னை அதன் மூலத்தில் சொல்லிக் கொடுப்பது என்பதற்காக காலையிலும் மாலையிலும் 'சடங்குகளுக்கு' வெளியே சொல்லித் தர, பின்னர் சூஸிகி ரோஸி ஒரு முக்கிய ஸென் ஆசிரியராக மாறியது வரலாறு.

சூஸிகி ரோஸி 'ஏன் அமெரிக்காவுக்கு வந்தேன்?' என்று உரையாடியிருக்கின்றார். இத்தனைக்கும் ரோஸி அமெரிக்காவுக்கு வந்து உயிரோடு இருந்த ஆண்டுகள் 12 ஆண்டுகள் மட்டுமே. ஸென் வரலாறுகள் இது ஒரு சொற்பகாலம். ஆனால் ரோஸி தனக்குப் பின் குறிப்பிட்ட மாணவர்களை உருவாக்கியதோடல்லாது, அநேக ஸென் மடலாயங்கள் போல, மாஸ்டர்கள் இறந்துபோக காலத்தில் கரைந்துபோகாது இன்றும் சூஸிகி ரோஸியை நினைவுபடுத்தியபடி பல நூறு மாணவர்களின் அவர்களின் தலைமுறைகளும் வந்தபடி இருக்கின்றன.

ஒன்றுமே இல்லாது வந்த சூஸிகி ரோஸி அவர் இறந்துபோனபோது மூன்று வெவ்வேறு மடாலயங்களைத் தொடங்குமளவுக்கு அவரது மாணவர்களை வளர்த்துவிட்டிருந்தார். சூஸிகி ரோஸி அமெரிக்கா வந்த இரண்டு வருடங்களில் அவரது மனைவி அமெரிக்காவுக்கு வருகின்றார். சூஸிகி ரோஸி காலையில் மாணவர்களோடு இருந்து தியானம் செய்வது முடிந்தவுடன் உடனேயே மடலாயத்தில் செய்யவேண்டிய வேலைகளுக்காக உடையை மாற்றிவிட்டு அந்நிலத்தில் ஏதாவது செய்யத் தொடங்கிவிடுவார் என்று மனைவி குறிப்பிடுகின்றார்.

அதுபோலவே இரவுணவைச் சாப்பிட்டுவிட்டு தன்னோடு கொஞ்ச நேரப் பொழுதைக் கழியுங்கள் என்றாலும் எனக்கு இந்த அமெரிக்காவில் ஸென்னை பரப்பும் விருப்பம் இருக்கின்றதெனச் சொல்லி வாரம் ஒரு முறை நடக்கும் ஆங்கில தம்ம உரைக்குத் தயாராக தனது அறைக்குச் சென்று விடுவார் எனச் சொல்கின்றார்.

ன்றைய அநேக ஜப்பானிய ஸென் ஆசிரியர்களைப் போல சூஸிகி ரோஸிக்கு ஆங்கிலம் அவ்வளவு தெரியாது. ஆனால் ஆங்கிலத்தில் உரையாற்ற கடும் உழைப்பைக் கொடுத்திருக்கின்றார். சிலவேளைகளில் இப்படி வாரம் முழுதும் தயாரித்த உரையைக் கேட்க, ஆரம்ப காலகட்டத்தில் மூன்று/நான்கு மாணவர்கள்தான் வந்தபடி இருந்திருக்கின்றார்கள். இப்படி கடுமையாக உரையைத் தயார் செய்ததற்கு ஒரு பத்துப்பேர் வந்தால் கூட பரவாயில்லை என்று தான் ரோஸியிடம் கேட்டதாக ரோஸியின் மனைவி குறிப்பிட்டிருக்கின்றார். அதற்கு ரோஸி, ஒருவரா இல்லை ஆயிரம் பேரா , அது எனக்கு பொருட்டில்லை; நான் இதைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பேன் எனச் சொல்லியிருக்கின்றார்.

இவ்வாறு தொடர்ச்சியான கடும் உழைப்பில்தான் சூஸிகி ரோஸி தனது மாணவர்களை உருவாக்கியிருந்தார். அதேபோல அவர் நம்பிக்கையீனங்களையும் தனக்குள் உருவாக்காது, அவரின் வாழ்க்கையில் அறிந்த ஸென்னைத் தீவிரமாக நம்பியிருக்கின்றார். அவரது கடைசிக்கால உரையில் கூட ரோஸி, நான் இன்னும் கூட பெளத்தத்தை ஆழ அறிவுப்புலத்தில் வைத்து வாசித்திருக்கலாம், இன்னும் கூட நேரம் தியானத்தில் அமர்ந்திருக்கலாம்; ஆனால் நாளாந்த வேலைகளில் நேரத்தைச் செலவிட்டுவிட்டேன். ஆனால் எனது மாணவர்கள் மீது நம்பிக்கை இருக்கின்றது. அவர்கள் என்னை அறிவுப்புலத்திலும் தியானத்திலும் விஞ்சிப்போவார்கள். என் வயதொத்தவர்கள் (60களில் இருப்பவர்கள்) என் மாணவர்களைத்தான் அதிகம் நம்புவோம். நீங்கள் ஏதோ ஒருவகையில் சாதித்துக் காட்டுவீர்கள்' என்றிருக்கின்றார்.

அந்த நம்பிக்கையை வீணடிக்காது அவரின் சிறந்த மாணவர்கள் சிறந்த ஆசிரியர்களாக வெளிவந்திருக்கின்றார்கள். அவர்கள் வெவ்வேறு திசைகளுக்குச் சென்று ஸென்னை அறிமுகப்படுத்தி இருக்கின்றார்கள். அதைவிட நிறையப் புத்தகங்களை ஸென் பற்றியும், அவர்களின் ஆசிரியரான சூஸிகி ரோஸி பற்றியும் எழுதிக்கொண்டிருக்கின்றார்கள். சூஸிகி ரோஸியின் நேரடி மாணவர்களுக்கே இப்போது 80 வயதுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனால் இந்த 80 வயது ஆசிரியர்களின் அடுத்த தலைமுறை மாணவர்கள் கூட தமது ஆசிரியர்களினூடாக சூஸிகி ரோஸியை நினைவுபடுத்தியபடி இருக்கின்றார்கள். ஒரு நீண்ட தலைமுறை இப்போது சூஸிகி ரோஸிக்கு உருவாகிவிட்டிருக்கின்றது.

சூஸிகி ரோஸியை வாழ்வைப் பார்க்கும் நாங்கள் நம்பும் ஓரு விடயத்தை எவ்வளவு உழைப்பைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம் என யோசித்துப் பார்க்கின்றேன். அதுவும் ஈழத்தமிழர்களாகிய நாம் இதை இன்னும் ஆழமாக சிந்தித்துப் பார்க்கலாம். ஈழத்தில் ஆயுதப்போராட்டம் முடிந்து கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஆனபின்னும் ஒரு grassroots இயக்கத்தையும் எந்த நம்பிக்கை/அரசியல் சார்ந்தும் நம்மால் வளர்த்தெடுக்க முடியவில்லை.

இத்தனைக்கும் பல்வேறு அரசியல்/ஆன்மீக நம்பிக்கையாளர்கள் புலம்பெயர்ந்த தேசம் உள்ளிட்ட பல இடங்களில் இருக்கின்றார்கள். நாம் எல்லோரையும் ஏன் இப்படி தீவிரமாகவும் தொடர்ச்சியாகவும் உழைக்கவில்லை என்று கேட்க முடியாது. ஆனால் இவ்வாறு சமூகத்தில் செயற்பாட்டாளர்களாக இருப்பவர்கள் அல்லது சொல்லிக் கொள்பவர்கள் ஏன் ஒரு சிறு காலடியைக் கூட உருப்படியாக வைக்க முடியவில்லை என்று அவரவர்கள் சுயவிமர்சனம் செய்யவேண்டும்.

சூஸிகி ரோஸி 1950களில் அமெரிக்காவுக்கு வரும்போது அவருக்கு எந்தப் பின்புலமும் இல்லை. ஆங்கிலம் கூட ஒழுங்காய்த் தெரியாது. முற்றிலும் புதிய நிலப்பரப்பு மட்டுமில்லை, மனிதர்களும் கூட புதியவர்கள். என்கின்றபோது 12 ஆண்டுகளிலேயே மிகச் சிறந்த மாணவர்களையும், ஸென் மடாலயங்களையும் உருவாக்க முடிந்தது. அதுமட்டுமின்றி அவருக்குப் பின்னும் அது உயிர்வாழும் விதைகளையும் ஊன்ற முடிந்திருக்கின்றது. இத்தனைக்கும் ரோஸி தனது ஸென் உரைகளையும், தியானத்தையும் கற்பித்தபோது வந்த மாணவர்கள் நான்கைந்து பேரே.  

ஸென் என்றோ ஒருநாள் அமெரிக்காவில் பரவும் என்கின்ற அந்த மாபெரும் நம்பிக்கை, தொடக்ககால மாணவர்கள் ஒருசில  என்றாலும் அவர்களை அரவணைத்த விதம் இன்றைக்கு சூஸிகி ரோஸியின் மூலம் ஸென் மாபெரும் ஆலமரமாக வேரை மட்டுமில்லை விழுதுகளையும் விட்டு பரவியிருக்கின்றது.

மே
லும் சூஸிகி ரோஸி  ஒருவருக்கு வயது கூட ஒரு பொருட்டேயல்ல என்று நிரூபித்துமிருக்கின்றார். இன்றைக்கு 80களில் ஆயுதப்போராட்டத்தில் பங்காற்றியவர்கள் உள்ளிட்ட முள்ளிவாய்க்கால் முடிந்தபோது பங்கேற்றவர்கள் உள்ளிட்ட அனைவரின்முன் நீங்கள் உண்மையிலே தமிழ்ச் சமூகத்திடம்  கொடுக்க உங்களிடம் எதை வைத்திருக்கின்றீர்கள் என்பதையும், உங்களை அதற்காக எவ்வளவு தயார்ப்படுத்தி நிகழ்காலத்தோடு நிற்க முடிகின்றதா என ஒவ்வொருவரும் தம்மைத்தாமே கேட்க வேண்டும். அவ்வாறில்லாதுவிட்டால் அவை வெறும் வெற்று வார்த்தைகளாக/ வீணான நம்பிக்கைகளாக, தரிசு நிலத்து விதைகளாகவே நீங்கள் விதைக்கும்/பேசும் எதுவும் இருக்கும் என்பதாக அமையும் அவலச்சூழலுக்குள் நீங்கள் இருக்கின்றீர்கள் என்பதை உணரவேண்டும்.

சூஸிகி ரோஸி, அமெரிக்காவிற்கு வந்த புதிதில் அருகிலிருக்கும் கடையில் ரெட்டிஷ்களை சூப்புக்காக வாங்குவாராம். இவர் எப்போதும் பழைய/ வாடிய ரெட்டிஷ்களை வாங்குவதைப் பார்க்கும் கடைக்காரர், புதிதை தேர்ந்தெடுக்கலாமே என்று கேட்பாராம். அதற்கு, புதியதை வாங்க எவரும் வருவார்கள், வாடியதை ஒருவரும் வாங்கமாட்டார்கள் என வாங்கிச் செல்வராம் ரோஸி. அதுபோலவே சூஸிகி ரோஸி தனது கடைசிக்காலத்தில் ஒரு அறுவைச் சிகிச்சையைச் செய்தபின்னும், ஓய்வெடுக்காமல் அவரது தோட்டத்தில் எதையாவது வெட்டிக் கொட்டிக் கொண்டிருப்பாராம். இதைப் பார்த்த அவரது மனைவி, இப்படியே வேலை செய்தால், உங்கள் ஆயுள் சுருங்கிவிடும் என்று கத்துவராம். அதற்கு சூஸிகி, நான் என் ஆயுளைச் சுருக்காமல் விட்டால்,  எனது மாணவர்கள் வளரமாட்டார்கள் (If i dont cut my life short, my students will not grow) என்று பதிலளிப்பாராம்.

சூஸிகி ரோஸியை தொடக்க காலத்தில் நினைவுபடுத்தும் அவரது பலர் மாணவர்கள் அவர் நன்றாகப் புகைப்பவராகவும், வாரவிறுதிகளில் பார்க்கும் ஜப்பானிய Rom-Com திரைப்படங்களுக்கே கண்ணீர் விடுபவராகவும் இருந்தவர் எனக் குறிப்பிடுகின்றனர். ஒரு ஸென் ஆசிரியரை, அதுவும் அமெரிக்காவில் ஸென்னை பரவலாக்கிய ஒரு ஆசிரியரை இப்படி நம்மால் கற்பனை செய்யமுடிகின்றதா? ஆனால் இப்படியெல்லாம் இருந்தபோதும், அவரின் முதன்மை நோக்கான ஸென்னை அமெரிக்க மண்ணில் விதைப்பது என்ற விடயத்தில் ஒருபோதும் சமரசம் செய்யாது அவரின் இறுதிக்காலம் வரை முயன்றிருக்கின்றார். அதுவே அவரது ஸென், அதுவே அவரது தம்மம்.

*******

இளங்கோவின் 'நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்'

Friday, October 17, 2025

நூல் அறிமுகக் குறிப்பு. -அரசி விக்னேஸ்வரன்


பிந்திய இரண்டாயிரங்களில்   இணையப் பாவனை வளர்ந்து Blog மூலம் தமது எழுத்து, வாசிப்பு உலகை இளம் தலைமுறையினர் வளர்த்துக்கொண்ட ஆரம்ப காலங்களில் இருந்து இன்றுவரை தொடர்ந்து எழுதிக்கொண்டும் வாசித்துக்கொண்டும் இருப்பவர் இளங்கோ. கவிதை, சிறுகதை, நாவல் என புனைவு இலக்கியத்திலும் திரைப்பட விமர்சனம், பயணக்கட்டுரைகள் என்றவகையில் அபுனைவு எழுத்திலும் கால்பதித்திருப்பவர். தனக்கேயுரிய மொழிநடையுடன் அவர் எழுதும் முகப்புத்தகப் பதிவுகள் கூட சுவாரசியமான வாசிப்புக்குகந்தவை.  அவரது எட்டாவது புத்தகமும் இரண்டாவது சிறுகதைத் தொகுதியுமான "நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக்கொண்டிருந்தார்" என்ற நூல் கடந்த ஜூலை பத்தொன்பதாம் திகதி மாலை ரோறொன்றோவில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

 

இந்தப்புத்தகம் 2011 முதல் 2024 வரையான 13 வருட காலப்பகுதிக்குள் இளங்கோ எழுதிய பத்து சிறுகதைகளின் தொகுப்பாக சென்னை டிஸ்கவரி பப்ளிகேஷன் வெளியீட்டில் வெளிவந்துள்ளது. புத்தக வெளியீட்டு நிகழ்வில் இளங்கோ தனது புதிய வலைத்தளத்தையும் அறிமுகப்படுத்தி வைத்தார். அவருக்கு முதலில் எனது வாழ்த்துக்கள்.  புத்தகத்தின் உள்ளடக்கத்தினுள் புகமுன்னர் எனக்கு இருந்த விமர்சனம் என்னவெனில் இந்தப் புத்தகத்துக்கு ஏன் எந்த முன்னுரையும் எழுத்திச் சேர்க்கப்படவில்லை என்பதுதான். புத்தகத்தின் பின் அட்டையில் பா.அ. ஐயகரன் அவர்களின் ஒரு சின்னக் குறிப்பு மட்டும் இடம்பெற்றிருக்கிறது. 


இந்தப் புத்தகத்தில் பத்து வருடங்களுக்கு மேலாக இளங்கோ பல இதழ்களில் எழுதி வெளியிட்ட கதைகள் இருக்கின்றன. ஆனால் அவை காலக் கிரமத்தில் புத்தகத்தில் இடம்பெறவில்லை. எந்த அடிப்படையில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன என்பதும் தெளிவற்று இருந்தது. உள்ளடக்கப் பக்கத்தில் கதைகள் எழுதப்பட்ட ஆண்டுகளையும் சேர்த்திருக்கலாம். இவற்றில் மிகப்பழைய கதை எது என்பதை உறுதிப்படுத்துவதற்கு எல்லாக் கதைகளையும் நான் இருமுறை புரட்டிப் பார்க்கவேண்டியிருந்தது.


முதல் வாசிப்பில் இளங்கோவின் புத்தகம் எனக்கு ஒரு சுவாரசியமான  இலகுவான வாசிப்புக்கு உகந்த ஒன்றாகவே பட்டது. ஆனால் வாசித்து முடித்தபின்னர் யோசிக்க யோசிக்க அர்த்தங்கள் புலப்படும் தன்மை கொண்ட கதைகளைக் கொண்டிருந்தது. புத்தக வெளியீடன்று உரையாற்றிய மைதிலி தயாநிதி அவர்கள் பின் நவீனத்துவப் பார்வையுடன் இக்கதைகளை ஆராய்ந்திருந்தார். வாசிக்கும் ஒவ்வொருவரிடமும் தனித்துவமான வாசிப்பனுவத்தையும் அர்த்தப்படுத்தல்களையும் இக்கதைகள் கோரி நிற்பதைப்  புரிந்து கொள்ள முடிந்தது. 


புத்தகத்தின் தலைப்பே ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைகின்றது. இலங்கை அரசியல் பின்புலத்தில் இருந்து யோசிக்கும் பலருக்கு புத்தர் என்பவர் அதிகாரத்தினதும்  ஆக்கிரமிப்பினதும் குறியீடாகத் தெரியலாம்.   மனைவியையும் குழந்தையை யும் விட்டு சந்நியாசியாகிய அவருக்கும் முத்தத்திற்கும்  என்ன சம்பந்தம் என்றும் சிலர் நினைக்கலாம். கதைசொல்லி தேடும் அமைதி, திருப்தி அல்லது பூரணம் என்பதற்கு கதைசொல்லி அவரைக் குறியீடாக்குகிறான். தலைப்புக் கதை அதற்கு நல்ல உதாரணம். புத்தர் கதைசொல்லியை ஒரு அவதானியாக பார்த்துக்கொண்டிருக்கிறார். அல்லது அவர் தன்னைப் பார்ததுக்கொண்டிருக்க வேண்டும் என்று கதைசொல்லி அவாப்படுகிறான். வெளியில் தெரியாத அவன் மன ஓட்டங்களுக்கு புத்தர் சாட்சியாகிறார். அவன் வாழ் க்கையின் அர்த்தத்தைக்  காதல் , காமத்தினூடு கண்டடைகிறபோது புத்தரை அங்கே கண்டடைகிறான்.  இளங்கோவின் கதைகளில் புத்தர் மட்டுமல்ல, இடையிடையே வைரவர், இயேசுநாதர், யோகர் சுவாமி, சோக்கிரடீஸ், காஃப்கா, எனப் பலரும் கதைசொல்லியின் எண்ண ஓட்டத்தினூடு வந்து போகிறார்கள். 


முதல் வாசிப்பில் என்னைக் கவர்ந்த விடயம் இளங்கோவின் கிட்டத்தட்ட எல்லாக் கதைகளிலும் வரும் கதைசொல்லியின் தன்மை. அவன் புறஉலகில் சஞ்சரிப்பது கனவு போல இருக்கும் அளவுக்கு அக உலகில் அதிகம் சஞ்சரிப்பவனாக இருக்கிறான். மாநகரவாசியாகவும் தளைகள் அற்றவனாகவும் எல்லாவற்றிலும் இருந்து விலகியவனுமாக இருக்கிறான். இந்த "அந்நியனை"த்தான் "விளிம்பு நிலை மனிதனாக" மைதிலி தயாநிதி அவர்கள் நோக்கினார்கள். 


ஆனால் எனக்கு அவன் நினைத்த நேரம் நினைத்த முடிவை எடுக்ககூடிய, முகம் தெரியாத ஒரு பெண்ணோடு திட்டமிடாத ஒரு தாய்லாந்துப் பயணத்துக்கு ஒரே நாளில் கிளம்பிவிடக்கூடிய அல்லது வேலைக்கு லீவு போட்டுவிட்டு கால் போன போக்கில் நடந்து வழியில் உணவகத்தில் உணவருந்தி ஏற்கனவே பிரிந்த பழைய காதலியுடன் இரவு விடுதியில் தாங்கிவரக்கூடிய, ஒரு எதிர்பார்ப்புகளுக்கும் வரைமுறைகளுக்கும் அப்பாற்பட்ட  வாழ்வை வாழ்பவனாகத்  தெரிந்தான். அந்தக் கதைசொல்லியின் மனவோட்டத்தினூடு பயணிப்பதும் அவனது பார்வைக்குள்ளால் நகரங்களையும் இயற்கையையும் தரிசிப்பதும் நல்ல வாசிப்பனுபவமாக இருந்தது.


இந்தப் புத்தகத்தில் ஒரு சில கதைகள் மொழி பெயர்ப்புக் கதைகளாக இருந்திருக்கலாம் என்று தோன்றுமளவுக்கு இலங்கை அல்லது புலம்பெயந்த தமிழ்க்  கதாபாத்திரங்களை அல்லது பழக்கமான இடங்களை குறிப்பிடாமலேயே அமைந்திருந்தன. ஆனால் ஒரு சில கதைகள் போர், இலங்கை அரசியல் என்பவற்றை நேரடியாகவே தொட்டிருக்கின்றன. 



தொகுப்பின் முதலாவது கதை "அரசன் அன்று கொன்றால் லியனகே நின்று கொல்வார்". இக்கதையில் கதாநாயகன் ஒரு  சிங்கள இளைஞனாக இருக்கிறான். அரசியல் போராட்டம், ஆயுதப்போராட்டம் எல்லாம் தோற்ற நிலையில் பேனாவால் போர்தொடுத்த ஊடகவியலாளர்கள் எல்லாரும் காணாமல் போய்க்கொண்டிருந்த வேளையில் எல்லாருக்கும் இருந்த ஆற்றாமையை இந்தக்கதை தொடுகிறது. குற்றவாளிக்கு இருக்கும் குற்றவுணர்சசியை வைத்தே ஒருவகை பழிவாங்கலை நடாத்திகாட்டுகிறது எதிர்பாராத திருப்பத்தினைக் கொண்ட இந்தக் கதை. 


"வெள்ளவாய்க்கால் வைரவர்" என்னும் இன்னொரு கதை இந்திய இராணுவக் காலத்தில் அமைந்து, ஒரு சிறுவனைக் கதைசொல்லியாகக் கொண்டிருக்கிறது. இந்தக் கதை ஒரு சிறுவனால் சொல்லப்படுவது போல் அநேகமான இடகங்களில் இருந்தாலும் சில இடங்களில் அவன் வளர்ந்தபின் சொல்வதுபோல, இளங்கோவின் வழமையான கதைசொல்லி எட்டிப்பார்க்கும் இடங்களில் அமைகிறது. இந்தக் கதையும் காவல் தெய்வமான வைரவரைக் கூடக் காக்க முடியாத, அநியாயங்கள் நடப்பதை பார்த்தும் மௌனியாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தின் ஆற்றாமையையம் அது ஏற்படுத்தக்கூடிய ஆழமான மனவடுவினையும் துலக்குகிறது. 


இந்தத் தொகுப்பில் எல்லாக் கதைகளிலும் இழையோடும் இன்னொரு கருப்பொருள் காதல். ஆனால் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அது நிறைவேறாத அல்லது நிலைக்காத காதலாகவே அமைகிறது. "முள்ளிவாய்க்கால்" என்னும் கதையில்  பதின்ம வயதில்  மலர்ந்து பின் யுத்த காலத்தையும் இறுதிப்போரையும் தாண்டி  கடைசிவரை ஒருவருக்கொருவர் சொல்லப்படாமலேயே போய்விட்டாலும் வாசகர்களின் மனதில் பதிந்து விடக்கூடிய ஒரு காதலுக்கு இளங்கோவின் கதைசொல்லி சாட்சியாகிறான். 


தமிழ் இலக்கியத்தில் அதிகம் பேசப்பட வேண்டியதென நான் நம்பும் அதிகம் புரிந்துகொள்ளப்படாத  உளவியல் நோய்க்கூறுகளையும்  சில கதைகள் தொட்டுச்செல்கின்றன. "ஏகாந்தம் என்பதும் உனது பெயர்" கதையில் "Bipolar disorder " இனால் பாதிக்கப்பட்ட கதைசொல்லி அது தன்னை எப்படிப்  பாதிக்கிறது என்பதை அவனே மனதுக்குள் கவனித்துக்கொண்டு இருப்பதும் அதற்கு ஒரு உதாரணம். பராமரிக்கப்படாத உளவியல் சிக்கல்கள் எவ்வளவு துரத்துக்கு ஒருவரை இட்டுச்செல்லக்கூடும் என்பதை "உறைந்த நதி" கதை எமக்கு உறைக்க வைக்கிறது. 


தொகுப்பிலுள்ள எல்லாக் கதைகளைப் பற்றியும் எழுதுவதற்கு நிறைய இருப்பினும் இக்கதைகள்  வாசகர்களின் தனிப்பட்ட வாசிப்பு அனுபவத்தையும் கோருபவை  என்பதால் வாசிப்பு ஆர்வமுள்ளவர்கள் வாசிக்க வேண்டும், இளங்கோ தொடர்ந்தும் எழுதி தமிழ் இலக்கிய உலகிற்கு அவர் கொண்டுவந்திருக்கும் ஒரு தனித்துவமான இடத்தை இன்னும் விஸ்தரிக்க வேண்டும் என்ற அவாவுடன் இந்தக் குறிப்பை முடித்துக்கொள்கிறேன்.

 

*******


('அம்ருதா' ஐப்பசி இதழில் வெளிவந்தது; கனடாவில் நடைபெற்ற 'நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக்கொண்டிருந்தார்' நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றியதன் சுருக்கிய எழுத்து வடிவம்)