1.
நண்பர் என் புத்தக சேகரத்திலிருந்து எம்.டி.முத்துக்குமாரசாமியின் 'மைத்ரேயி மற்றும் பிற கதைகள்' தொகுப்பை எடுத்து வாசித்துக் கொண்டிருந்தார். சில கதைகளை வாசித்தபின், 'என்ன, உனது ஆள் நன்றாக எழுதுகின்றார்' என்று சொன்னார். அதன்பிறகு இருவரும் நேரடியான யதார்த்தவாதக் கதைகள் நமக்கு எவ்வளவு அலுப்பூட்டுகின்றது என்பது பற்றிப் பேசிக் கொள்ளத் தொடங்கினோம். அதை விட்டு விலகி எம்டிஎம் எழுதியதால்தான் நம்மிருவரையும் இத்தொகுப்பு வசீகரித்திருந்தது.
'மைத்ரேயி' தொகுப்பு எம்டிஎம் 30 வருடங்களுக்கு முன் எழுதிய கதைகளிலிருந்து சமகாலத்தில் எழுதியவற்றின் ஒரு தொகுப்பு. இது எனக்குப் பிடித்த தொகுப்பாயினும், என் கண்களுக்கு எப்போதும் எட்டக்கூடிய மிகச்சிறந்த நூல்களில் ஒன்றென வைத்திருக்கும் எம்டிஎம்மின் 'நிலவெளி என்னும் ரகசிய துணை'யைச் சொல்வதுண்டு. அது ஓர் அற்புதமான அல்புனைவுத் தொகுப்பு.
எம்டிஎம் ஓர் உறங்குநிலையிலிருந்து மீண்டும் வருகை தந்தபின் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாய் தமிழ்ச்சூழலில் உற்சாகமாகத்தான் இயங்கிக்கொண்டிருக்கின்றார். ஏதோ இப்போது சர்ச்சையில் சிக்கிய 'ரோஜாவின் பெயர்' மொழிபெயர்ப்பு நூலோடுதான் தமிழில் மீள்வருகையை எம்டிஎம் நிகழ்த்தியதாக எழுதப்படும் பதிவுகள் அலுப்பூட்டக்கூடியவை. இன்னொருவகையில் இவ்வாறு எழுதுபவர்கள் எவ்வாறு சமகாலச்சூழலின் வாசிப்பிலிருந்து பின் தங்கி நிற்கின்றார்கள் என்பதை அறிவதற்கு நமக்கொரு சந்தர்ப்பம் வாய்த்திருக்கின்றது என்பதாக நாம் ஆறுதற்பட்டுக் கொள்ளலாம்.
2.
நான் எப்போது உம்பர்த்தோ எக்கோவை முதன்முதலில் அறிந்துகொண்டேன் என்று ஞாபகத்தில் இல்லை. ஆனால் நண்பர் ஒருவரோடு பழகத் தொடங்கியபோதுதான் எக்கோ எங்களின் உரையாடல்களுக்குள் வந்தார். நண்பர், ரமேஷ்-பிரேமின் 'கதையும் கட்டுக்கதையும்'' நூலின் மூலமாகவே எக்கோவை அறிந்துகொண்டார். அத்தோடு நம்புவதற்குச் சற்றுக் கடினம் என்றாலும் அவரது பதின்மம் முடிவதற்குள்ளேயே எக்கோவின் 'The Name of the Rose', 'Baudolino' போன்ற நூல்களை வாசித்து முடித்திருந்தார். பிறகு நானும் அவருமாகச் சேர்ந்து 'Foucault's Pendulum', 'The Mysterious Flame of Queen Loana', 'The Prague Cemetery' போன்றவற்றை வாங்கி வாசித்திருக்கின்றோம். ஒருவர் ஒரு நாவலை வாசித்துவிட்டால், அவரிடமிருந்து அது குறித்து கற்கலாம்/அறியலாம் என்பதால் நான் அநேகமாக அவர் வாசிக்கத் தொடங்காத எக்கோவின் நாவல்களை வாசிப்பேன்.
பின்னர் எல்லா உறவுகளையும் போல எமது உறவு தேய்ந்து இல்லாதபோனபோதும் நான் தனித்து எக்கோவின் நூல்களை வாங்கி வாசித்திருக்கின்றேன். அதன் நீட்சியில்தான் எக்கோவின் இறுதி நாவலான ' Numero Zero' வாசித்ததோடல்லாது ஒரு விரிவான வாசிப்பையும் அன்றைய பொழுதில் (2015?) எழுதியிருந்தேன்.
இந்நூல் நிச்சயம் தமிழாக்க வேண்டியது. அந்தளவுக்கு புனைவுகளின் வகைமைகளை மட்டுமில்லை எப்படி வாசகர்கள் ஒரு நூலை வாசிக்கின்றனர், எழுத்தின்/வாசிப்பின் போதாமை என்று பல்வேறு கோணங்களை ஆராயும் எக்கோ, ஒருவகையில் எழுத்தாளருக்கும் படைப்பாளிக்குமான இடைவெளியை எப்படி குறைப்பது என்பது பற்றியும் நமக்குச் சொல்லித் தருகின்றார்.
அதில் ஓரிடத்தில் தாமஸ் மான், காஃப்காவின் 'Metamorphosis' ஐ, அல்பேர்ட் ஜன்ஸ்டீனிடம் வாசிக்கக் கொடுக்கும்போது, ஐன்ஸ்டீன் 'இந்த நூலின் சொல்லுமளவுக்கு மனிதமூளை அவ்வளவு சிக்கலானது' என்று சொல்லி நூலை திரும்பிக் கொடுத்துவிடுவார் என்பதைப் பற்றி எக்கோ குறிப்பிடுகின்றார். ஆக உலகில் அதிசிறந்த IQ கொண்ட அறிவுகொண்டவர்களால் கூட ஒரு படைப்பாளியின் உலகினுள்(மூளைக்குள்) சிலவேளைகளில் நுழையக் கடினமாக இருக்கலாம் என்பதை இதன்மூலம் அறிந்துகொள்ளலாம். அதுபோலவே எக்கோவினது நூலோ அல்லது தமிழ் மொழிபெயர்ப்போ கூட எல்லோர்க்கும் உரியதல்ல என்பதையும் நாம் ஒப்புக்கொள்ள ஏன் தயங்குகின்றோம் என்பதுதான் புரியவில்லை.
ஏன், மேலே நான் வாசித்ததாக குறிப்பிட்ட நூல்களை முழுமையாகவோ அல்லது எக்கோ கூற விரும்பிய அர்த்தங்களில் சரியாக விளங்கிக் கொண்டேன் என்றோ நான் சொல்லப் போவதில்லை. ஆனால் எக்கோவின் எந்த நூலை வாசித்தாலும் நான் அறிந்துகொள்ள புதுவிடயங்களும், நான் இதுவரை யோசிக்காத வழிகளில் அவர் ஒரு திறப்பைச் செய்கின்றவராகவும் இருப்பதால் எக்கோவை நான் தொடர்ந்து வாசிக்க ஆர்வமுடையவனாக இருக்கின்றேன்.
உதாரணத்துக்கு எக்கோவின் 'On Ugliness' வாசிக்கும்போது, இந்த 'அசிங்கம்' என்பவை எப்படி எங்களுக்குள் மத்தியகால ஐரோப்பிய காலத்திலிருந்து திணிக்கப்பட்டு உருவாக்கப்படுகின்றது என்பது பற்றிய ஆரம்பப்புள்ளிகளையாவது சிந்திக்கத் தொடங்குவோம். அதுபோலவே எக்கோவின் 'The Mysterious Flame of Queen Loana' என்னை வசீகரிக்கும் அவரது ஒரு நாவல். அதில் ஒரு புத்தகக்கடைக்காரர் சட்டென்று அவரின் நினைவை முழுதாக இழந்துவிட்டு, பின்னர் நினைவைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பெறுவார். அந்த மீள் நினைவை எக்கோ அந்த நபரின் சிறுவயது காட்டூன் புத்தகங்கள் இன்னபிற சிறுவர் நூல்களினூடாகக் கட்டியெழுப்புவார். அதில் நகைச்சுவைக்கும் குறையிருக்காது. அவரின் புத்தகக் கடையில் ஒரு இளம்பெண் உதவியாளராக இருப்பார். திருமணமாகிய இந்தப் புத்தகக்கடைக்காரருக்கு நினைவுகள் இழந்து மீண்டதில், இந்தப் பெண்ணோடு உடல்சார்ந்த உறவு இருந்ததா இல்லையா என்றெல்லாம் அவருக்கு வரும் குழப்பங்களும், நடத்தைகளும் சிரிப்பை வரவழைப்பவை.
3.
என் (கடந்தகால) நண்பருக்கு ஐரோப்பிய மத்தியகாலத்தின் மீதும், கத்தோலிக்க மதம்/திருச்சபை குறித்தும் பரந்த வாசிப்பும், அறிந்துகொள்ளும் ஆர்வமும் மிகுந்து இருந்தது. அவருக்கு எக்கோ ஒரு முக்கிய நூலாசிரியராக நான் அவரையறிந்த காலங்களில் இருந்தார். என்னுடைய ஆர்வம் இவற்றில் குறைவு. எனக்கு மிலான் குந்தேரா போன்றவர்கள் வசீகரித்த அளவுக்கு உம்பர்த்தோ எக்கோ போன்றவர்கள் நெருக்கமானவர்களில்லை. அதற்கு என் வாசிப்பின் போதாமைதான் ஒரு காரணமாக இருக்கும்.
இன்றைக்கு எக்கோவின் மொழிபெயர்ப்பை வைத்து, எக்கோவையே மிதிக்க ஒரு கோஷ்டி வருவதைப் பார்க்க வியப்பாக இருக்கின்றது. இவர்கள் எக்கோ எழுதிய நூல்களில் அரைவாசியாவது வாசித்திருப்பார்களா? ஒரு நூலை முன்வைத்து ஒரு எழுத்தாளரை நிராகரிக்கும் அதிகாரத்தை யார் இவர்களுக்கு வழங்கியது. அதிலும் ஏதோ கல்லூரிக்காலத்தில் வாசித்துவிட்டு இது கிறிஸ்தவ இறைஞானத்தை நோக்கியே போகவில்லை, பொலபொலவென்று உதிர்ந்து விழும் நாவல், ego trip இற்கு அழைத்துச் செல்லும் புனைவு என்றெல்லாம் 'எல்லாம் தெரிந்த ஞானி'யாக அறுதியிட்ட உண்மையாக ஒருவர் எழுத தமிழில் வாசகர்கள் எதைச் சொன்னாலும் கேட்பார்கள் என்கின்ற ஆணவத்தைத் தவிர வேறென்னவாக இருக்கும்.
அதுவும் இன்னொரு பதிவில் துப்பறியும் நாவல்கள் என்று 'ரோஜாவின் பெயரோடு (மறைமுகமாக), ரொபர்தோ பொலானோவின் 2666, Savage Detectives போனவற்றை ஒப்பீடு செய்வது என்னவொரு கொடுமை. மத்தியகாலத்தில் நடக்கும் ஒரு நாவலைக் கொண்டுவந்து, எப்படி சமகாலத்தைப் பின்னணியாக வைத்து எழுதிய 2666, Savage Detectives ஒப்பிட முடியும் என்கின்ற எளிய விடயம் கூடத் தெரியாமலா ஒருவர் இருப்பார்? பொலானோவின் இந்த நாவல்களை எக்கோ எழுதிய இறுதி நாவலான 'Numero Zero' உடன் ஒப்பிட்டிருந்தால் கூட ஒரளவுக்குப் பரவாயில்லை. 'Numero Zero' இரண்டாம் உலகப் பின்னணியில் எழுதப்பட்ட ஒரு துப்பறியும் நாவலாகும்.
இப்படியான அபத்தங்களைப் பார்க்கும்போது எனக்குப் பிடித்த ரொபர்தோ பொலானோ கூடப் பிடிக்காமல் இனிப் போய்விடுவாரோ என்று அச்சமாக இருக்கிறது. நல்லவேளையாக பொலானோவின் படைப்புக்கள் பற்றி ஒரு வாசிப்பை எழுதி 'எழுத்தென்னும் மாயக்கம்பளத்தில்' சேர்த்திருப்பதால் பொலானோவை நானும் 'நாளை நீங்களெல்லாம் ஓர் எழுத்தாளரா உங்களை நான் நிராகரிக்கின்றேன்' என்று நம் தமிழ் 'அறிவுஜீவி'களோடு சேர்ந்து நின்று திட்டினாலும், ஒரு கடந்தகாலச் சாட்சியாக அந்த நூல் நின்று என் மனச்சாட்சியை உறுத்துமென நினைக்கின்றேன்
உண்மை எது புனைவு எது என்ற கோடுகளை அழிக்கும் நாவல்கள் இவையென பட்டியலிட்டு எக்கோவை நிராகரிக்கும் 'எல்லாம் அறிந்த வல்லவரே' தயவுசெய்து எக்கோவினது 'Baudolino' வை நிதானமாக வாசித்துப் பாருங்கள். அது என்னைப் போன்ற எளிய வாசகனுக்குக் கூட மத்தியகால ஐரோப்பாவின் வரலாறு என நம்பிக்கொண்டிருந்தவற்றை/கற்பித்தவற்றை கட்டவிழ்த்துப் பார்ப்பதைத் தானே வாசிப்பவர்க்குச் சொல்லித் தருகின்றது. இதைவிட வரலாற்றை எப்படிக் கட்டுடைக்க வேண்டுமென நினைக்கின்றீர்கள்.
எனக்கு வரும் திகைப்பென்னவென்றால் வாசித்த கொஞ்சத்தை வைத்து எப்படி இவர்கள் தந்தகோபுரத்தில் ஏறி நின்று, நமக்கு மட்டுமில்லை, எக்கோவிற்கே துணிச்சலாகப் பிரசங்கம் செய்கின்றார்கள் என்பதுதான்!
**********






0 comments:
Post a Comment