கலைகளுக்குப் பங்களிப்பவர்கள்
பசுமை விகடன் போன்றவற்றில் இயற்கை விவசாயம் செய்பவர்களை மிகைப்படுத்தி எழுதுவார்கள். அதுவும் ஐடி போன்ற தொழில்நுட்பத் துறைசார்ந்தவர்கள் இயற்கை விவசாயத்துக்குப் போகும்போது இன்னும் அதிகம் மிதந்தேத்துவார்கள்.. ஒரு இலட்சம், இரண்டு லட்சம் சம்பளத்தைக் கைவிட்டு விவசாயத்துக்கு வந்தவர்கள் இவர்கள் என்று எழுதி வாசிக்கும் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவார்கள்.
அவ்வாறான ஓர் 'அதிர்ச்சி'யை ஏற்படுத்தும் காலம் இலக்கியத்திலும் இப்போது வந்துவிட்டதோ என்று சஞ்சலம் எழுகின்றது. எழுத்து/இலக்கியம் என்பவற்றுக்காக பலர் தமது துறைசார்ந்த வேலையை விட்டு வந்திருக்கின்றார்கள். ஆனால் அதற்காக எவரும் நாம் இலக்கியத்துக்காக இவற்றையெல்லாம் இழந்து 'தியாகி'களாக வந்திருக்கின்றோம் என்று பிரகடனப்படுத்தியதில்லை. அது ஊர் ஊராய் அலைந்து சஞ்சிகை விற்ற சி.சு.செல்லப்பாவா இருந்தாலென்ன, ஒருவகை விட்டேந்தி வாழ்க்கை வாழ்ந்த க.நா.சுப்ரமணியனாலென்ன, அப்படி எவரும் தமக்கு ஓர் இலக்கிய தியாகிப்பட்டம் தரவேண்டும் என்று வாசகரிகளிடம் கோரியதில்லை.
அசோகமித்திரன் கூட, ஜெமினி ஸ்டூடியோவில் இருந்து வேலையைத் துறந்தபின், ஒரு முறையான ஊதியம் கிடைக்கும் தொழிலில் போய் அமர்ந்தவரில்லை. அவர் நினைத்திருந்தால் அவருக்குரிய அனுபவம்/திரைப்படத் துறை சார்ந்த நெருக்கத்தின் நிமித்தம் ஆகக்குறைந்தது ஒழுங்காய் மாதம் மாதம் சம்பளம் கிடைக்கும் வேலையில் போய் இருந்திருக்க முடியும். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. இத்தனைக்கும் அவர் பிரமிள் போன்று தனித்து வாழும் வாழ்க்கையை இலக்கியத்தின் பொருட்டுத் தேர்ந்தெடுத்துவருமில்லை. அசோகமித்திரனுக்கு மனைவி, பிள்ளைகள் என்று பார்த்துக்கொள்ளவேண்டிய குடும்பச்சுமை இருந்தது.
ஆக மேற்குறிப்பிட்ட இவர்கள் உள்ளிட்ட இன்னும் பலரும், எழுத்தை ஏன் தமது வாழ்நாளின் ஆதாரசுருதியாகக் கொண்டார்கள் என்றால் அவர்களுக்கு இலக்கியம் அவ்வளவு பிடித்திருந்தது. வேறு துறைசார்ந்து அவர்களுக்கு புலமைத்துவம் இருந்தும் அவர்களை எழுத்து ஆழமான வேர்களால் பின்னிப்பிணைத்திருந்தது. அவ்வாறு எழுத்து அவர்களுக்கு 'அருளப்பட்டபோது' அவர்கள் ஏனைய லெளதீகப் பிரச்சினைகளோடும் மரியாதையுடன் இலக்கியத்தை வாரி அணைத்துக் கொண்டார்கள்.
அதிலும் பிரமிள் இவர்கள் அனைவரையும் விட இன்னும் அதி தீவிர நிலைக்குச் சென்றவர். அசோகமித்திரன், க.நா.சு போன்றவர்களுக்கு பூர்வீகச் சொத்து கொஞ்சமாவது இருந்திருக்கும் (ஆகக்குறைந்தது வாழ்வதற்கு ஓர் வீடாவது). பிரமிளுக்கு அதுவும் இல்லை. இலங்கையில் திருகோணமலையில் தனது தாயின் வீட்டை விற்றுவிட்டு தமிழ்நாட்டுக்கு வந்து, எந்தத் தொழிலும் செய்யாது எழுத்தை மட்டும் நம்பி வாழ்ந்த பிரமிளை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அதுமட்டுமில்லை இலக்கியத்தின் முன் எந்தச் சமரசமும் இல்லை என்று அவருக்கு நெருக்கமாக இருந்தவர்கள்/உதவியவர்கள் என்று எல்லோரையும் விமர்சனங்களால் அடித்து நொறுக்கியவர் .
அதன் நிமித்தம் வசதி குறைந்த இடத்தில், ஒழுங்கான உணவில்லாது கூட வாழ்ந்தவர் பிரமிள். ஆனாலும் ஒருபோதும் நான் இப்படியிருந்து எழுதுகின்றேன், ஆகவே தமிழன்னை என்னை ஓர் தியாகியாக நினைக்க வேண்டும் என்று தமிழின் முன்னோ அவரின் வாசகர்கள் முன்னோ இறைஞ்சியவரில்லை. ஒருவகையில் அதுவே இன்றும் பிரமிளை கம்பீரமான எழுத்தாளராகத் துலங்க வைக்கின்றது.
இவ்வாறானவர்கள்தான் நமக்கு எழுத்தில் முன்னோடியாக இருக்கின்றார்கள். இலங்கையில் கூட மு.தளையசிங்கம், மு.பொன்னம்பலம் போன்றவர்கள் அப்படியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கின்றார்கள் என்று தெரிகின்றது. அண்மையில் மு.தளையசிங்கத்தின் சகோதரர் மு.பொன்னம்பலம் காலமானபோது, அவருக்காக எழுதப்பட்ட ஒரு குறிப்பில், மு.பொன்னம்பலம் கூட பெரும்பாலும் நண்பர்களின் உதவியுடந்தான் நெடுங்காலம் தனது வாழ்க்கையை வாழ்ந்ததாக அறிந்தபோது வியப்பாக இருந்தது. ஏனெனில் அவரின் கடைசி மகனும், நானும் கொழும்பில் ஓர் பாடசாலையில் ஒன்றாகக் கொஞ்சக் காலம் கல்விகற்றிருக்கின்றோம்.
இன்று பல ஆளுமைகளின் பிள்ளைகள் தமது தந்தையர் மீது விமர்சனம் வைக்கும்போது (காந்தியின் மகனில் இருந்து அண்மைக்கால பேராசிரியர் வசந்திதேவியின் மகன்வரை), அசோகமித்திரனின் பிள்ளைகளோ அல்லது மு.பொன்னம்பலத்தின் பிள்ளைகளோ பொதுவெளியில் வந்து தம் பெற்றோரை திட்டவில்லை. ஒருவகையில் இப்படி எழுத்தின் விருப்பம் சார்ந்து முழுநேர எழுத்தாளர்களாக இருந்தபோதும், இவர்களில் பெரும்பாலானோர் பிள்ளைகளை நன்றாக வளர்த்திருக்கின்றார்கள் என்பது நமக்குத் தெளிவாகின்றது.
இப்படியெல்லாம் நமக்கு நிறைய எழுத்தாளர்கள் உதாரணங்களாக வாழ்ந்து காட்டிப் போனபோது சில எழுத்தாளர்கள் இந்த 'பசுமை விகடன் ஐடி இயற்கை விவசாயிகள்' போல தேவையில்லாது எழுத்தாளர்கள்/எழுத்தை glorify செய்வதைப் பார்க்கச் சலிப்பாக இருக்கின்றது. இத்தனைக்கும் ஓர் எழுத்தாளர் மாதமொருமுறை தனது (வளர்ப்பு) மகனைத் திட்டி எழுதுகின்றார். இன்னொரு எழுத்தாளரோ, என் மகன் உழைக்கவே தேவையில்லை, அவனுக்காக வாழ்நாளுக்கான பணத்தை நான் சம்பாதித்துக் கொடுத்திருக்கின்றேன்' என்று அறைகூவல் விடுகின்றார். இவர்களைப் போன்றவர்கள்தான் எழுத்தை அதியற்புதமாகவும், எழுதிக்கொண்டிருப்பவர்கள் உன்னதமானவர்கள் போலவும் நம்மை நம்ப வைக்கக் கஷ்டப்படுகின்றார்கள்.
மேலும் நாகார்ஜூனன், தமிழவன், எம்.டி.எம் போன்றவர்கள் தமது எழுத்தின் 'பேரெழுச்சி'களால் காணாமற் போய் இப்போது திரும்பி வந்து கொண்டிருக்கின்றார்கள் என்று இன்னொருபக்கம் சிணுங்கவும் செய்கின்றார்கள். இவர்கள் தொடர்ந்து எழுதி இவர்களின் வளர்ச்சி இந்த 30 வருடங்களில் விஸ்வரூபம் எடுத்துவிட்டதென்றால், ஏன் மீளத் திரும்பும் உதிரிகளைக் கண்டு இவர்கள் அச்சமுற வேண்டும்?
அப்படியெனில் 60களின் பிற்பகுதியில் 'அக்கா' என்கின்ற ஒரு சிறுகதைத் தொகுப்போடு உறங்குநிலைக்குப் போய், பின்னர் ஓய்வூதியம் எடுத்துகொண்டு 30 ஆண்டுகளின் பின் எழுத வந்த அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்களை இவர்கள் எப்படி மதிப்பார்கள். அ.முத்துலிங்கத்தோடு முரண்பட என்னைப் போன்றவர்களுக்கு ஒரு நூறு காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அவர் மீள வந்தபோது அருமையாகத்தானே எழுதத் தொடங்கினார். முப்பது வருடங்களாக ஒருவர் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பதோ, அல்லது முப்பது வருட உறங்குநிலைக்குப் பிறகு ஒருவர் வந்து எழுதுவதையோ குறித்து ஒரு வாசகர் அக்கறைப்படப்போவதில்லை. என்ன ஒருவர் எழுதுகிறார்/எழுதிக்கொண்டிருக்கின்றார் என்பதே வாசகர்க்கு மட்டுமில்லை, தமிழின் எதிர்காலத்துக்கும் முக்கியமானது.
மேலும் இன்று தமிழில் தாமேதான் மூன்று முக்கியமானவர்கள் என்று தங்களை முன்வைப்பவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டிய ஒரு விடயம் இருக்கின்றது. இந்த மூன்று பேரும், தமிழில் புதுத்திணையாக வந்த இணையத்தைச் சரியாகப் பயன்படுத்தியவர்கள் ஆவார். அதனால்தான் இவர்களின் எழுத்து இந்தளவுக்கு பரவலாகப் போய்ச் சேர்ந்திருக்கின்றதே தவிர, இவர்களுக்கு நிகராக எழுதும் பலர் -இலைமறை காயாக- சமகாலத்தில் இருக்கின்றார்கள் என்பதுதான் நிஜம். கடந்த பத்து/இருபது ஆண்டுகளில் இவர்கள் தமிழ்ச்சூழலில் என்னவிதமான புதுப்பாய்ச்சல்களை நிகழ்த்திக்காட்டினார்கள் என்று நாம் அவதானித்தாலே நமக்கு இவர்களின் எழுத்தின் பலவீனமான பக்கங்களும் விளங்கும்.
இதற்குள் நாகார்ஜூனன், தமிழவனைப் போன்றவர்களை நிராகரிக்கும் இவர்களுக்கு இருக்கும் 'துணிச்சல்' என்னவென்பதையும் நாம் அறிவோம். இவர்கள் எவரும் அருகில் ஈழப்போர் உக்கிரமாக நடக்கும்போது நாகார்ஜூனன் தமிழவன் போல இவர்கள் உரத்தகுரலில் எழுதியவர்களோ/பேசியவர்களோ இல்லை. அதிலும் ஒருவர் ஈழப்போராட்டத்தின் இறுதிக்காலத்தில் ஆஸ்திரேலியாவுக்குப் போனபோது இந்த யுத்தம் குறித்து உங்களுக்குக் கருத்துச் சொல்ல எதுவுமில்லையா? என்று வினாவ, 'நான் அரசூழியன் எந்தக் கருத்தையும் சொன்னாலும் என் பணிக்கு ஆபத்து' என்று தனது 'வீரத்தை'க் காட்டியவர். இன்னொருவரோ இலத்தீன் அமெரிக்கப்போராட்டங்கள் குறித்து மாய்ந்து மாய்ந்து எழுதுவார். ஆனால் ஈழப்போராட்டம் குறித்து மெளனத்தைக் காப்பார். ஆனால் ஈழத்தில் போர் முடிந்து மக்கள் இன்னும் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பமுடியாது பொருளாதார நெருக்கடிக்குள் இருக்கும்போது, இலங்கையில் நாய்களால் பிரச்சினையென உலகின் அதிமுக்கிய பிரச்சினையை எழுதி தன் இருப்பை 'அறிவுஜீவி'த்தனமாகத் தன்னை நிரூபிப்பார். முப்பது ஆண்டுகளாக யுத்தம் தின்ற மண்ணில் இவர்களுக்கு நாய்களைத் தவிர பேசுவதற்கு வேறு விடயங்களே இல்லை என்றளவுக்கு அந்தளவுக்கு 'மனிதாபிமானி'கள்.
நாகார்ஜூனன், எம்டிஎம் போன்றவர்களின் மீள்வரவால் இப்படிப் பதற்றப்படும்போது, நாகார்ஜூனன் தான் எழுதிய அனைத்தையும் அழித்துவிட்டு (மறைத்துவிட்டு) மீளவும் உறங்குநிலைக்குப் போனவர் என்பதை ஏன் இவர்கள் சொல்வதில்லை. ஆகக்குறைந்தது நாகார்ஜூனன் ஒருபோதும் தன் எழுத்தையோ/பெயரையோ வாசகருக்கும் விற்கும் எந்த எத்தனமும் செய்ய விரும்பவில்லை என்பதைத்தானே, அவர் இணையத்தளத்தில் எழுதிய எல்லாவற்றையும் மறைத்துவிட்டுச் செல்வதன் மூலம் கூறாமல் நமக்குக் கூறியிருக்கின்றார். இத்தனைக்கும் என்னைப் போன்றவர்கள் நாகார்ஜூனன், தமிழவன் போன்றவர்களிடம் இருந்து கோட்பாடு/தத்துவம்/பிறமொழிப் படைப்புகள் குறித்து எத்தனையோ நிறையக் கற்றிருக்கின்றோம்.மேலும் இன்றைக்கு தமிழில் விமர்சனம் என்பது செத்துவிட்டது போன்ற தோற்றத்தைத் தரும்போது நமக்கு நாகார்ஜூனன், தமிழவன், எஸ்வி.ராஜதுரை, ராஜ் கெளதமன், அ.மார்க்ஸ், எம்.டி.எம், ரமேஷ்-பிரேம் உள்ளிட்டவர்களின் எழுத்துக்களும் இன்றில்லாவிட்டால், எங்கிருந்து திறனாய்வின் அடிப்படைகளையோ/அல்புனைவு எழுத்துவகைமையை தமிழில் அறிந்து கொண்டிருக்கமுடியும். மேற்குறிப்பிட்டவர்கள் மீது நமக்கு விமர்சனங்களும் ஏற்பும் என எல்லா விடயங்களும் இருக்கின்றது. அதையும் எழுத்தின் ஒரு சாராம்சமாக எடுத்துக்கொண்டு முரண்பாடுகளோடு உவத்தல்/காய்த்தலின்றி உரையாடலாம் என்றுதானே இவர்கள் நமக்குச் சொல்லித் தருகின்றார்கள்.
சில வருடங்களுக்கு முன் அ.மார்க்ஸ் இலங்கை வந்தபோது, நிகழ்வுக்கு வந்த இந்த நாய்ச்சிக்கல்காரர் அ.மார்க்ஸை தூற்றோ தூற்றென வன்மத்துடன் கரித்து எழுதிக் கொண்டிருந்தார். நான் அ.மார்க்ஸை நேரடியாகச் சந்தித்தபோது உங்களுக்கும் இந்த நாய்ச்சிக்கல்காரருக்கும் அப்படி என்னதான் பிரச்சினையென நேராகவே கேட்டேன். அ.மார்க்ஸ் சிரித்தபடி நீங்கள் இதை அவரிடந்தான் கேட்கவேண்டும் என்று அந்த விடயத்தை நாசூக்காய் முடித்துவிட்டார். இதைத்தானே இலக்கியம் கற்றுத்தரவேண்டும்?
இவர்களைப் போல பாவனை காட்டாது, தமிழில் எழுத்தும் வாழ்க்கையும் வேறு வேறு இல்லையென அசலாக வாழ்ந்தவர்கள் நிறையப் பேர்கள் இருக்கின்றார்கள். தமிழில் தலித்திய முன்னோடி எனச் சொல்லப்படுகின்ற கே.டானியலுக்கு எழுத்தைப் போல, போராட்டமும் முக்கியமானதே. அதற்காக அவர் களங்களில் நின்றிருக்கின்றார், அதிகாரத்திடம் அடிவாங்கியிருக்கின்றார், சிறை சென்றிருக்கின்றார்.
இன்னொருவர் மு.தளையசிங்கம். மெய்யுள், பிரபஞ்ச யதார்த்தம் என்று புதிய தடங்களில் சிந்தித்ததோடு மட்டுமின்றி, சர்வோதயம் என்று காந்தியச் சிந்தனைகளின் நீட்சியில் இயக்கம் தொடங்கி சமூகக் களங்களில் போராடியவர். இன்றைக்கு அவர் எழுதியவை ஆயிரம் பக்கங்களைத் தாண்டி நம்முன்னே மறுவாசிப்புக்காய்க் காத்திருக்கின்றது. இத்தனைக்கும் தம் ஊர் கிணற்றில், தலித்துக்களை தண்ணீர் அள்ள அனுமதியளிக்கவில்லை என்பதற்காக சாதிவெறியர்களோடு போராடி சிறைக்குச் சென்று அங்கு பொலிஸ்காரர்களால் மோசமாகத் தாக்கப்பட்டவர். மிக இளவயதில் (38) இறந்த தளையசிங்கத்தின் இறப்பில் அவர் மீது பொலிஸ் நடத்திய தாக்குதலும் முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்திருக்கின்றது.
ஆக இப்படி எழுத்தும் வாழ்வும் வெவ்வேறானதல்ல என்று நமக்கு முன்னோடியாகப் பலர் வாழ்ந்து காட்டிவிட்டுப் போனதன்பிறகும், தமிழ்ச் சமூகத்தில் எழுத்துப் போராளிகளாகவும், இலக்கியத்துக்காக வாழ்வை அர்ப்பணித்துவிட்டோம் என்றும் நம் சமகாலத்தில் சில எழுத்தாளர்கள் எழுதும்போது நமக்கு சிரிப்பு வருவது ஒருபுறமிருக்கட்டும், அவர்களுக்கு இப்படியெல்லாம் எழுதுகின்றோமே எனக் கொஞ்சமாவது வெட்கம் வராதா என்ன?
*******
(நன்றி: ஓவியம்- பிருந்தாஜினி)


0 comments:
Post a Comment