எழுத்து எனக்கு அந்தரங்கமானது என்பது போல, படைப்பாளிகளையும் தனித்தோ, ஓரிருவர்களோடு சேர்ந்து சந்திப்பதே எனக்குப் பிடித்தமானது. அப்போதுதான் அவர்களோடு நெருக்கமாகவும், வெளிப்படையாகவும் உரையாட முடியும்.
எனக்குப் பிடித்த படைப்பாளிகளை மேடையில் பார்க்கும்போது எனக்குள்ளும் ஒரு பதற்றம் வந்துவிடும். இவர்களால் அரங்கில் இருப்பவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியுமா என்று எண்ணற்ற கேள்விகள் எனக்குள்ளும் குவியத் தொடங்கிவிடும். இது இப்போதல்ல எனக்குச் சிறுவயதுகளில் இருந்தே வந்துகொண்டேயிருக்கின்றது. சிறுவயதுகளிலே பாடசாலையில் படிக்கும் யாரேனும் பெண்ணை எங்களுக்குச் சோடியாக வைத்து 'பட்டந்தெளிப்பார்கள்'. அப்படி எனக்குச் சோடியாக வைக்கப்பட்ட பெண்களில் யாரேனும் மேடையில் நாடகம் நடிக்கும்போதோ, பரதம் ஆடும்போது ஏதோ நானே நடிப்பது போலவும், ஆடுவது போலவும் எனக்குள் பதற்றம் வந்துவிடும்.
இது பிறகு வளர்ந்து இளைஞனானபோதும் என் காதலிகளில் யாரேனும் மேடையில் இருந்து உரையாற்றும்போதோ/பாடும்போதோ/விவாதங்களில் பங்குபற்றும்போதோ இவர்கள் யார் முன்னும் அவமானப்பட்டுவிடக்கூடாது என்ற பயம் வந்துவிடும். அதனால் நான் அரங்கில் இருந்தால் கூட அவர்களின் முகத்தை நேரடியாகப் பார்ப்பதைத் தவிர்த்துவிடுவேன். இந்தச் சிக்கலுக்கு ஏதேனும் உளவியல் பெயர் கூட இருக்கக்கூடும். இதற்குள் இன்னும் போய் நான் மேலும் சிதைவடைய விருப்பமில்லை.
இங்கு நடக்கும் இயல்விருது குறித்து நிறைய விமர்சனங்கள் இருக்கின்றன. தொடக்க காலங்களில் அது குறித்து நிறைய விமர்சித்து எழுதியுமிருக்கின்றேன் (விருப்பமுடையவர்கள் தேடி வாசிக்கவும்). ஒரு கட்டத்தில் அவர்களும் மாறப்போவதில்லை; என்னைப் போன்றவர்களும் திருந்தப்போவதில்லை என்று ஒரு 'சமாதான உடன்படிக்கை' நிலைக்கு மனதைக் கொண்டு வந்தாயிற்று. மேலும் இயல்விருதுக்கு மாற்றாக எதையும் நாங்கள் உருப்படியாக உருவாக்கவில்லை என்பது எங்களைப் போன்றவர்களின் வீழ்ச்சியே தவிர இயல்விருதுக்காரர்களுக்கு இதனால் இழப்பேதுமில்லை. நாங்கள் பேசுவதில் வல்லவர்கள்; ஆனால் செயற்பாட்டுக்கு வரத் தயங்குபவர்கள். வெவ்வேறு மாற்றுப்பார்வைகள் இருந்தாலும், சில புள்ளிகளில் உடன்பட்டு ஒன்றாய் ஊர்கூடித் தேர் இழுப்போம் என்பதற்கும் எமக்கும் எட்டாப் பொருத்தம்.
ஒரு கட்டத்தில் இதுதான் என்னால் சாத்தியமாகும் என்று பலரிடம்/குழுக்களிடம் இருந்து விலகி வந்தாயிற்று. ஆகக்குறைந்தது சிலரைப் போல ஆக்கபூர்வமான அமைப்புக்களை தனிப்பட்ட நலன்களுக்காக உடைக்கவில்லை/ பிரிக்கவில்லை என்கின்ற குற்றச்சாட்டு ஏதுமின்றிய அமைதியாவது என்னளவில் இருக்கின்றது. இன்றையகாலத்தில் ஒரளவு நமக்கு உடன்பாடான அமைப்புக்களோடு, அமைப்புக்கு வெளியே இருந்து ஏதாவது செய்வது என்பது எனக்குப் போதுமாக இருக்கின்றது.
25 ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கும் இயல்விருதுக்கு மாற்றாக ஒன்றை நாம் இத்தனை வருடங்களில் கட்டியெழுப்பியிருக்க முடிந்திருக்க வேண்டும். ஆகக்குறைந்தது எங்களால் அப்படிச் செய்யமுடியவில்லை என்கின்ற சுயவிமர்சனத்தைச் செய்து நாம் நம் பலவீனத்தையாவது ஒப்புக் கொள்ளவேண்டும்.
ஆக இப்போது இயல் விருதை, அவர்கள் 'நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்' என்கின்ற அளவில் எனக்குப் பிடித்த படைப்பாளிகள் புல்லாய் இருந்தாலும் அவர்களுக்கும் விருது கிடைக்கின்றதே என்று அகமகிழ்வதுடன் நின்றுவிடுவதுண்டு. ஒருகாலத்தில் அழைப்பிதழ் வராது எனக்குப் பிடித்த எஸ்.பொ, அம்பை போன்றவர்களின் விழாவுக்கு எது நடந்தாலும் பார்ப்போம் என 'கலகக்காரனாக' இயல் விருதுக்குள் நுழைந்திருக்கின்றேன். இப்போது வயதாகிவிட்டது என்று அறிந்தோ என்னவோ அவ்வப்போது அழைப்பிதழ் மின்னஞ்சலில் வரும்/ சிலவேளைகளில் வராது. நான் நெருக்கமாக உணரும் படைப்பாளிகளுக்கு இயல் விருது அண்மைக்காலமாக கிடைக்காததால், அழைப்பிதழ் வருதோ இல்லையோ இப்போது இயல்விருது நான் போக விரும்பாத 'திருமண விழாக்கள்' போல ஆகி ஆண்டுகள் பலவாயிற்று.
கடைசியாக ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் எனக்குப் பிடித்த இமையத்துக்கு இயல்விருது (2018?) கிடைத்தபோது போனதாக ஞாபகம். ஆனால் விருது நிகழ்வல்ல, இமையத்தோடு அவர் தங்கியிருந்த ஹொட்டலில் நாங்கள் ஓரிரு நண்பர்கள் அவரோடு உரையாடியதுதான் எனக்கு இன்னும் நினைவில் நிற்கின்றது. அவ்வாறே அதற்கு முன் சுகுமாரனுக்கு விருது கிடைத்தபோதும், அந்தக் காலப்பகுதியில் என் நூல் வெளியீடு ஒன்றும் நடந்ததால், சுகுமாரன் அங்கு வந்து பேசியதும், அவர் தங்கி நின்ற ஹொட்டலில் நாங்கள் சில பேர் அவரோடு உரையாடியதும் நினைவில் மறக்காமல் இருக்கின்றது.
நேற்று 'காலம்' செல்வம், இம்முறை விருது பெற்றவர்களுடன் ஓர் சந்திப்பை ஒருங்கிணைத்திருந்தார். விருது பெற்ற ஐந்து பேர்களையும் ஓரிடத்தில் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. இவர்கள் ஒவ்வொரிடமிருந்தும் படைப்பினூடாக பெற்றுக்கொள்ளவும், விமர்சிக்கவும் நிறைய இருக்கின்றது.
முக்கியமாக கடந்த வருடம் யுவனைச் (சந்திரசேகர்) சந்தித்தபோதும், அவர் தனிப்பட்ட உரையாடலுக்கு சுவாரசியமான ஒருவராகத் தெரிந்தார். கடந்தமுறை 'என் படைப்புக்களை எத்தனை பேர் வாசித்திருப்பீர்களோ தெரியாது, ஆகவே நான் எதைப் பேசுவது' என்று தனது உரையைச் சுருக்கமாக முடித்து, உரையாடலுக்கு அன்று வந்திருந்த அனைவரையும் அழைத்திருந்தார். அப்போது யுவன் 'விஷ்ணுபுரம்' விருதைப் பெற்றிருந்து, அவரைப் பற்றிய ஆவணப்படமும் வெளிவந்திருந்தது. நான் யுவனிடம், 'நீங்கள் உங்கள் ஒரு நாவல் கணனியில் இருந்து அழிந்துவிட்டது என்றதும் பதற்றமடைந்ததும், அழவும் செய்தது என்னை மிகவும் பாதித்தது' என்று சொன்னதாகவும் நினைவு.
அதேபோன்று யுவனின் கதைகளை 'மாற்றுமெய்மை' என்று பெயரில் விதந்தோத்தும் விஷ்ணுபுரவாசிகளின் கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை என்பதையும் எழுதியிருக்கின்றேன் (அவரிடம் அதைச் சொன்னேனா என்று ஞாபகத்தில் இல்லை). அவரின் சில நாவல்கள் அதன் இயல்பிலே கவனத்துக்குரியவையேயன்றி, இந்த 'மாற்றுமெய்மை'யினால் அல்ல என்பது என்னுடைய தனிப்பட்ட வாசிப்பு. யுவனின் இயல்பின்படி இதை நேரடியாகச் சொன்னால் கூட, ஏற்றுக்கொள்கின்றாரோ இல்லையோ, 'அப்படியா' என நிதானமாகக் கேட்டுக்கொள்ளவாவது செய்வார் என்கின்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது.
அவ்வாறான யுவன், சுகிர்தராஜா உள்ளிட்டோர் இருந்த அரங்கில் எந்தவகையான பொது உரையாடலும் நிகழாமல் அவர்கள் அங்கே தனித்துவிடப்பட்டதுதான் எவ்வளவு கவலையானது. நிகழ்வை ஒருங்கிணைத்த ஜயகரன் கூறியதுமாதிரி, இப்படி முக்கியமான படைப்பாளிகள் அனைவரிடம் ஓரிடத்தில் இருப்பது ஓர் அரிய சந்தர்ப்பம், ஆனால் அவர்களிடம் இருந்து பெறுவதற்குரிய சபை அமையவில்லை' என்பதை ஒருவகையில் இதுதான் கனடிய இலக்கிய உலகின் யதார்த்தம் என்பதாகவும் புரிந்துகொள்ளவேண்டும். ஏனெனில் வாசிப்பவர்களே அரிதாகிவிட்டார்கள் என்பது மட்டுமில்லை, அறிவுபூர்வமாக உரையாடுபவர்களும் குறைந்துவிட்டோம் என்பதே கசப்பான உண்மை.
ஒரு நல்ல புத்தகத்தையோ, திரைப்படத்தையோ, கலையின் இன்னபிற நல்லவிடயங்களை ஆழமாகப் பேசவோ விவாதிக்கவோ நம்மில் பலர் தயாரில்லை. அதுவேதான் இவ்வாறு எழுத்தாளர்கள் இருக்கும் அரங்குகள் வீணாகிப் போய்வருவதற்கும் காரணமாகிவிட்டது.
இம்முறை எனது தமிழாசிரியரான இரவி அருணாச்சலத்துக்கும் விருது கிடைத்திருந்தது. அவருக்கு மாணவனான நான் இந்த விருது கிடைத்தற்கு வாழ்த்துக்கூறி ஒரு பதிவும் செய்யவில்லை என்று மனவருத்தம் இருந்ததாக (நண்பரொருவர் மூலம்) அறிந்துகொண்டேன். அவருக்கு என்றில்லை இயல்விருது கிடைத்ததற்காக எவருக்கும் நான் வாழ்த்துப் பதிவுகளை இதுவரைகாலமும் தனித்துப் போட்டதில்லை. ஆனால் எப்போதும் போல அவருக்கும் விருது கிடைத்தபோது அது பகிரப்பட்டவர்களின் முகநூலுக்குச் சென்று மகிழ்ச்சியைத் தெரிவித்திருந்தேன் (என் வகுப்புத் தோழியின் பதிவுட்பட).
மேலும் ஒரு வாசிப்பாளானாக அண்மைக்காலமாக இரவியின் நாவல்கள் ஓரிடத்துக்குள் தேங்கிவிட்டதாக எனக்கு எண்ணமிருக்கின்றது. அவரது 'பம்பாய் சைக்கிள்' இன்னும் வாசிக்கவில்லை. எனவே அது குறித்துக் கருத்துச் சொல்லமுடியாது. அவரின் 'காலமாகி வந்த கதை', 'பாலைகள் நூறு' அவருடைய சிறந்த படைப்புக்கள். ஆகவே 'பம்பாய் சைக்கிள்' எப்படியென்றாலும், அவரின் இத்தனை கால எழுத்துக்காகவும் அவர் விருதுக்குத் தகுதியானவர் மட்டுமின்றி, காலம் பிந்தி விருது கொடுக்கப்பட்டவர் என்று கூடச் சொல்லலாம். அதேசமயம் அவரின் தளும்பும் அரசியலுக்கும், அந்த அரசியலை முன்வைத்து இலக்கியத்தில் அவர் செய்யும் இருட்டடிப்புகளுக்கும் நான் வேறுதிசையில் இருப்பவன் என்பதையும் இத்தருணத்தில் சொல்லிவிடுகின்றேன்.
நேற்றைய நிகழ்வில் யுவன் மொழியாக்கம் செய்து அண்மையில் வந்த கதையைப் பற்றி ஜயகரன் கேள்வியொன்றைக் கேட்டபோது, யுவன் அதைப் பற்றிப் பேசிவிட்டு இந்தக் கதையை எவரும் வாசித்திருக்கமாட்டார்கள் என்று அரங்கைப் பார்த்துச் சொன்னபோது, நானும் வாசித்தேன் எனச் சொன்னேன். 'இளங்கோ என்னை உளவாளி மாதிரி பின் தொடர்கின்றார்' என நகைச்சுவையாகச் சொன்ன யுவனிடம் கூட ஆறுதலாகப் பேச முடியவில்லை என்பது துயர்.
அதுபோலவே ரவி சுப்பிரமணியனைப் பார்த்து நான் இளங்கோ என்று அறிமுகம் செய்தபோது, எனக்கு உங்களை நன்கு தெரியுமே, 'அம்ருதா'வில் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கின்றேனே' என்று சொன்னார். அவர் முகநூலில் இல்லை என்பதால் எனது தொலைபேசி எண்ணை வாங்கிச் சேகரம் செய்தபோது, நீங்கள் 'சக்தித் திருமகனில்' நன்றாக நடித்திருக்கின்றீர்கள் என்று பாராட்டிவிட்டு வீட்டை வந்து பார்த்தால், ரவி சுப்பிரமணியன் ஒரு அறிக்கையில் கையெழுத்திட்டதால் பலரால் வறுத்தெடுக்கப்பட்டுக் கொண்டிருந்தார். புரட்டாசிச் சனி நமக்கு மட்டுமில்லை நம்மைச் சந்திக்கின்றவர்களுக்கும் தொடங்கிவிட்டதுக்கு இதைவிட வேறென்ன சாட்சி வேண்டும்.
எப்போதும் நிகழ்வுக்கு நேரம் பிந்திப் போகின்றவன் இம்முறை பொஸ்டனில் இருந்து வந்திருந்த 'பாஸ்டன்' பாலாஜி எனது நூல்கள் வேண்டுமென்று கேட்டதாலும் ஒரு மணித்தியாலத்துக்குள் விமானநிலையத்துக்குச் செல்லவேண்டும் என்று அவர் சொன்னதாலும் நான் நேரத்துக்குப் போயிருந்தேன். பாலாஜியைச் சந்தித்துவிட்டு, நேற்றைய நிகழ்வின் அரைவாசி நேரம் வெளியே இருந்து ஒரு நண்பரோடு பேசிக் கொண்டிருந்தேன். அதுபோல நிகழ்வு முடிந்து கார் தரிப்பிடத்தில் வேறு மூன்று நண்பர்கள் 30-40 நிமிடங்களாவது பேசிக் கொண்டிருந்திருப்போம்.
அந்த 30 நிமிடங்களில் நாம் பகிர்ந்து கொண்டதும், சிநேகிதபூர்வமாக இலக்கியச் சர்ச்சைகளை விவாதித்ததும் (முக்கியமாக ரமேஷ் பிரேதனின் மரணத்துக்குப் பிறகு நடைபெறுபவை), அரங்குக்குள் நடந்தவற்றை விட பெறுமதியாக இருந்தது என்பதுதான் உண்மை. இனி இலக்கியம் என்பது கனடாவில் கார்த்தரிப்பிடங்களில்/ கோப்பிக் கடைகளில் நான்கைந்து பேரோடு பகிர்ந்து கொள்வதாக மட்டுமே மாறிவிடும் போலத்தான் தோன்றுகின்றது.
****

0 comments:
Post a Comment