க.கைலாசபதி
***
எனது
தொடக்க கால வாசிப்பிலே எஸ்.பொவைக் கண்டடைந்தது, அதன் பிறகு பிரமிள்,
மு.தளையசிங்கம் என்று சென்று சேர்ந்து இருந்தேன். இலங்கையில் இருந்து
பதினாறு வயதில் கனடாவுக்குப் புறப்படமுன்னர் 'திசை'களும், 'சரிநிகரும்'
எனது அக்காவினால் அறிமுகப்படுத்தப்பட்டதால் ஒரளவு தீவிர இலக்கியத்தின்
முகம் தெரிந்திருந்தது. பின்னாட்களில் 'அலை' அறிமுகமானபோது, ஈழத்தில்
வலுவாக இருந்த முற்போக்கு அணிக்கு மாற்றாக இன்னொரு தரப்பு இருந்தது எளிதில்
புரிந்தது.
என் வாசிப்பின் திசை இவ்வாறாகப் போனதால்,
இயல்பாக முற்போக்கு அணியில் முன்னணியில் நின்ற கைலாசபதி, சிவத்தம்பி
போன்றோரை ஆழ வாசிக்கும் ஆர்வம் அவ்வளவு எனக்குள் மேலெழவில்லை. எனவே எஸ்.பொ,
மு.த, 'அலை' போன்றவை முன்வைத்த கருத்துக்களே எனக்குரியவையாகவும் எளிதில்
மாறியிருந்தன.

ஆனால், நாம் ஒரு தரப்பில் உறுதியாக நிற்பதால் மறுதரப்பை முற்றாக நிராகரிக்க வேண்டியதில்லை என்கின்ற நிலைப்பாட்டை எப்போதோ இலக்கிய வாசிப்பினூடாக நான் வந்தடைந்தபோது, சிவத்தம்பி எனக்கு வேறொரு வடிவில் தெரிந்தார். அவர் மார்க்சியம் குறித்து மட்டுமின்றி, இலக்கியம், பின்னமைப்பியல்/ பின்நவீனத்துவம் குறித்துக் கூட பல நிலைப்பாடுகளை மாற்றியமைத்துக் கொண்டார் என்பதை அவரது பிற்காலத்தைய காலங்களில் கண்டுகொள்ள முடியும். மேலும் சிவத்தம்பி மார்க்ஸியம் குறித்து எழுதியதை விட அவர் சங்கப்பாடல்கள் தொடக்கம் தமிழ்த் திரைப்படங்கள், யாழ்ப்பாண சமூகத்தைப் புரிந்துகொள்ளல் உள்ளிட்ட அவர் எழுதிய ஆய்வு நூல்கள் எனக்கு முக்கியமானவையாக இருக்கின்றன.
அவ்வாறே க.கைலாசபதியை பற்றி எத்தகைய விமர்சனங்கள் இருந்தாலும், அவரது நூலான 'ஒப்பியல் இலக்கியம்' ஒரு முக்கியமான படைப்பாகும். அதுவரைகாலமும் தறிகெட்டு எல்லாத் திசைகளிலும் திறனாய்வு/விமர்சனம் என்ற துறையை ஓர் ஒழுங்குக்குக் கொண்டு வர கைலாசபதியின் ஒப்பியல் இலக்கியம் அன்று பெரிதும் துணை புரிந்திருக்குமென நம்புகிறேன். அவர் இந்த நூலில் கல்தோன்றாப் மண்தோன்றாப் பெருமையில் நமக்கு எந்தப் பெருமிதமும் இல்லை என ஒப்பீட்டியல் ஆய்வு முறையை (comparative study) மிகுந்த கறாராக முன்வைக்கின்றார்.
அதுவே அவர் பின்னர் இங்கிலாந்தில் முதுகலை செய்யும்போது 'தமிழ் வீரயுகக் கவிதை' (Tamil Heroic Poetry) என்கின்ற மிக முக்கிய ஆய்வைச் சமர்பிக்க வைக்கின்றது. இந்த 'தமிழ் வீரயுகக் கவிதை'யில் எமது புறநானூறுக்கவிதைகளை கிரேக்க காவியங்களோடு ஒப்பிட்டு கைலாசபதி 1966இல் எழுதியிருக்கின்றார்.
கைலாசபதி
அவரது ஐம்பது வயதுக்குள்ளேயே புற்றுநோயின் நிமித்தம் மரணித்தவர். அவரும்
சிவத்தம்பி போலவோ அல்லது எப்போது முரண்பட்டு உரையாடிக் கொண்டிருந்த
க.நா.சுப்பிரமணியம், வெங்கட்சாமிநாதன் போன்றவர்கள் போலவோ எழுபது வயதுகளைத்
தாண்டி வாழ்ந்திருந்தால் கைலாசபதியின் எழுத்துக்கள் வேறுவிதமாக
முதிர்ச்சியடைந்து வேறுவிதமாக மாறியிருக்கும்.

அதுமட்டுமின்றி கைலாசபதி தனது 'நவீன இலக்கியத்தின் அடிப்படைகள்' நூலில், தமிழ் நாவல்கள் பற்றிய கட்டுரையொன்றில் ப.சிங்காரத்தின் 'கடலுக்கு அப்பால்' என்கின்ற நூலை முக்கிய ஒரு நாவலாக 1971இல் குறிப்பிட்டிருக்கின்றார். ப.சிங்காரத்தின் அருமையே தமிழகத்தில் 1980இற்குப் பிறகுதான் உணரப்பட்டபோது, ஓர் ஈழத்தவராக அதன் மதிப்பை கைலாசபதி எழுபதுகளிலே கண்டுணர்ந்தது உவகையளிக்கிறது.
கைலாசபதி 'ஒப்பியல் திறனாய்வு' நூலில் கம்பராமாயணத்துக்கு எதிராக எழுதப்பட்ட பெரும்பாலான நூல்கள் எதுவுமே ஆய்வுமுறையான வகையில் எழுதப்படவில்லை என்று நிராகரிக்கின்றார். மேலும் தமிழ் ஆய்வாளர்கள் தனியே தமிழை மட்டும் அறியாது, வடமொழியோடு பிற திராவிட மொழிகளை செம்மையுறக் கற்கும்போதே ஒப்பியல் திறனாய்வு மூலம் திராவிட மொழிகளின் பெருமையை மேற்கத்தையவர்களும் பாராட்டும்படியாக இருக்கும் என்பதைக் குறிப்பிடுகின்றார். அந்தவகையில் சிறைக்குள் இருந்து வ.வே.சு.ஐயர் எழுதிய கம்பராமாயணம், அவருக்கு உசாத்துணைக்கு நூல்கள் இருக்காவிட்டாலும், தனது அறிவையும் நினைவையையும் நம்பி அவர் எழுதிய சிறந்த ஒப்பியல் ஆய்வு நூலென கைலாசபதி சிலாகிக்கின்றார்.
*
இவ்வாறு அரியவற்றை எழுதிய கைலாசபதிக்கு இன்னொரு முகமிருக்கின்றது. க.நா.சுப்பிரமணியத்தை மறுப்பதற்கென்றே ஒரு நூலை எழுதி ('திறனாய்வுப் பிரச்சினைகள்: க.நா.சு குழு பற்றிய ஓர் ஆய்வு)வெளியிட்டிருக்கின்றார். அது க.நா.சுவுக்கு அவரது வாசகர்கள் வெளியிட்ட மணிமலர் நூலை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதாகும். அதில் கூட க.நா.சு முன்னர் போல இப்போது அவ்வளவு அடிபடுவதில்லை, அவருக்கு அடுத்ததாக வந்திறங்கிய வெங்கட்சாமிநாதந்தான் இப்போது சரியான கரைச்சல் என்கின்ற மாதிரி ஒரு நூறு பக்கங்களுக்கு மேலாக அந்த நூல் நீள்கின்றது.
உரையாடலோ சரி விவாதமோ இரு தரப்புக்களிடையே நடக்கும்போது மூன்றாந்தரப்பு அதை வாசிக்கும்போத் ஏதேனும் புதிதாக அறிய அங்கே பேசப்படவேண்டும் என்பது எனது எதிர்ப்பார்ப்பாக இருக்கும். ஆனால் இந்த கநாசு திறனாய்வு நூலிலிருந்து இருந்து எடுக்க எதுவுமே எனக்கு இருக்கவில்லை என்பது துயரமானது.
இத்துடன் 'இலக்கியத்தில் மார்க்சீய எதிர்ப்பு - ஒரு புத்திசீவியின் இரண்டக நிலை' என்று தலைப்பிட்டு மு.தளையசிங்கத்தை மறுத்து எழுதிய நீண்ட கட்டுரையையும் சேர்த்துக் கொள்ளலாம். கைலாசபதியின் முக்கிய வாதங்களில் ஒன்று மு.த மார்க்ஸிய சார்பாக இருப்பதாகச் சொன்னாலும், அவர் தனது எழுத்துக்களில் மார்க்ஸீய எதிர்ப்பையும் முன்வைக்கின்றார். அதற்கு மு.த முன்வைக்கும் எழுத்தாளர்களின் பட்டியலைச் சொல்லி, இவர்களெல்லாம் இடதுசாரி எதிர்ப்பாளர்கள் என்ற வாதத்தை கைலாசபதி வைக்கின்றார். ஆனால் மு.தவின் மார்க்ஸிய எதிர்ப்பு க.நா.சு, வெசா போன்றோரைப் போன்ற தீவிரமான ஒற்றைப்போக்கு எதிர்ப்பு இல்லையெனவும் குறிப்பிடுகின்றார்.
மு.தவின்
இரண்டகநிலை என்பது அவர் ஆன்மீகத் துறவு நிலையில் ஒரு காலையும், இன்னொரு
காலை எழுத்தாளர் என்கின்ற அடையாளத்தில் வைக்கின்றார் எனச் சொல்கின்றார்.
உண்மையில் மு.த நீண்டகாலம் உயிரோடு இருந்திருந்தால் அவர் ஒருவகை ஆன்மீக
வாதியாக, மெளனத்துள் எழுத்தை உதறித்தள்ளிவிட்டுச் சென்றிருப்பார் என்கின்ற
கருத்தைச் சொல்கின்றார். இந்தக் கட்டுரை மு.த மரணமான 1973 இல் முதவின்
நண்பர்கள் நடத்திய பூரணியில் பிரசுரக்க பூரணி சஞ்சிகையினர் கேட்டதாகவும்,
ஆனால் இந்த விமர்சனத்தொனியில் அது பிரசுரிக்காது, 1979இல் 'நவீன
இலக்கியத்தின் அடிப்படைகள்' நூலில் சேர்க்கப்பட்டதாக கைலாசபதி
குறிப்பிடுகின்றார்.

இன்னொருவகையில் ஒப்பீடு செய்வது என்பது மறுபுறத்தில் இணைப்புக்களை ஏற்படுத்திப் பார்க்கவுந்தானே, அப்படிப்பார்த்தால் மார்க்ஸியச் சிந்தனைகளை ஏன் கீழைத்தேய சிந்தனையாளர்ளோடு ஒப்பிட முடியாது என்றும் நாம் கேட்க முடியும்.
கைலாசபதியின் காலத்துக்குப் பிறகு தமிழில் அறிமுகமான பின்னமைப்பியல்/பின்நவீனத்துவம் போன்றவை எதையும் எதற்கு எதிராக நிறுத்தத்தேவையில்லை, அதையதை அதனதன் இயல்பில் fragments ஆகப் பார்க்கலாம் என்கின்ற புதிய பார்வைகளை நமக்குத் தந்திருக்கின்றது. ஒப்பீட்டு முறை தேவையானது என்றாலும், அது சிலவேளைகளில் அப்பிள்களை தோடம்பழங்களோடு ஒப்பிடும் அபத்தமான நிலைக்கு இட்டுச் செல்லலாம் என்கின்ற ஒப்பியல் ஆய்வின் பலவீனமான பக்கங்களையும் நாங்கள் பலவிடங்களில் பார்க்க முடியும்.
*
இன்றைக்கு கைலாசபதியின் எழுத்துக்களை மார்க்ஸியப் பார்வையில் மட்டும் பார்க்காது புதிய ஆய்வுக்கண்ணாடியைக் கொண்டு பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது. அதை ஒருபோதும் மரபான மார்க்ஸியர்களால் செய்ய முடியாது. ஒரு புதிய தலைமுறை அவரின் எழுத்துக்களில் இதுவரை கண்டுகொள்ளப்படாத கோணங்களை முன்வைத்து உரையாடல்களை ஆரம்பிக்கவேண்டும். அப்போதுதான் நாம் இதுவரை பார்த்த பார்வைகளிலிருந்து விலத்தி இன்னொரு கைலாசபதியைக் கண்டடைந்து, அவரை இன்றைய காலத்துக்குரிய ஓர் ஆய்வாளாராக முன்னிறுத்த முடியும்.
இறுதியாக சுந்தர ராமசாமி ஓரிடத்தில் கைலாசபதி பற்றிக் குறிப்பிடுவதை இங்கே நினைவுபடுத்தலாமென நினைக்கின்றேன்.
"கலாநிதி கைலாசபதியை வெகுவாகப் போற்றும் ஓரு ஈழத்து இதழாசிரியர், விமர்சனத்தைக் கைலாசபதி விஞ்ஞான ரீதியாக வளர்த்தார் என்றும், க.நா.சு. மனம் போனபோக்கில் முடிவுகளைச் சொன்னார் என்றும் என்னிடம் சொன்னார். அவருடைய வார்த்தைகளால சீண்டப்பட்ட நான், கைலாசபதி விஞ்ஞான ரீதியாக தவறான முடிவுக்கு வந்தார் என்றும், க.நா.சு. மனம் போனபோக்கில் சரியான முடிவுக்கு வந்தார் என்றும் சுருக்கென்று சொன்னேன். உணர்வுரீதியான பாதிப்புக்கு நான் ஆளாகியிருக்கவில்லை என்றால் இவ்வாறு பதில் சொல்லியிருப்பேன்: 'கைலாசபதி விஞ்ஞானரீதியாக விமர்சனத்தை வளர்த்தார் என்பது உண்மைதான். படைப்புக்கும் சமூகத்துக்குமான உறவு முதன்முதலாகத் தமிழ் மொழியில் அவரால்தான் அழுத்தம் பெற்றது. க.நா.சு. கணக்கில் எடுத்துக்கொள்ளத் தொடர்ந்து மறுத்துக் கொண்டிருந்த ஒரு இடைவெளியைக் கைலாசபதிதான் பூர்த்தி செய்தார். ஆனால் படைப்பாளிகளின் தரம் சார்ந்து கைலாசபதி வந்திருக்கும் அனேக முடிவுகள் அபத்தமானவை. க.நா.சு. 'மனம் போன போக்கில்' வந்த முடிவுகள் சரியானவை' ('ஆளுமை, மதிப்பீடுகள்', ப 127) என்கின்ற சுந்தர ராமசாமியின் கருத்துக்களிலிருந்தும் நாம் புதிய உரையாடல்களை வார்த்தெடுக்க முடியும்.
***

0 comments:
Post a Comment