மைக்கல் ஜாக்சன்
மைக்கல்
ஜாக்சனைப் பற்றி ஒரு கட்டுரை 'அம்ருதா' இதழில் வெளிவந்திருக்கின்றது.
மைக்கல் ஜாக்சனின் பாடல்களையும், ஆடல்களையும் பிடிக்காதவர்கள் எவரும்
இருக்கமுடியுமா என்ன? நாம் அனைவருமே அவரின் பாடல்களைத் தாண்டாமல்
வந்திருக்கவே மாட்டோம். மேலும் அவரின் நிறம், குடும்பச்சூழல், அன்றையகால
அமெரிக்கா போன்ற பின்னணியில் இருந்து ஒருவர் இந்தளவு உயரத்துக்கு எழுந்து
வருவது என்பது நாம் கற்பனையே செய்து பார்க்க முடியாதது. ஆனால் அதற்காய்
அவர் மீதான குழந்தைகள் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுக்களையும் எழுந்தமானமாகத்
தாண்டிப் போய்விடமுடியாது.
'அம்ருதா'வில்
வெளிவந்த கட்டுரை மைக்கலின் மீதான பேரன்பினால் அதை முற்றாக நிராகரிக்க
முயல்கின்றது. அந்தக் குற்றச்சாட்டுகள் 'சதிக்கோட்பாடு'களால்
கட்டமைக்கப்பட்டது என்று சொல்லுவது, ஒரு கறுப்பு-வெள்ளைப் பார்வையில்
பார்ப்பது என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.
மைக்கல்
ஒரு கறுப்பினத்தவராகவும், அவர் மீது குழந்தைத் துஷ்பிரயோக குற்றச்சாட்டை
முன்வைத்தவர்களில் பெரும்பான்மையினர் வெள்ளையினத்தவர்களாக இருப்பினும்,
நாம் அதை எளிதாக இனவெறிப் பார்வையில் வைக்கவும் முடியாது. மேலும்
மைக்கலுக்கு ஆதரவாக 90களில் (அப்போதுதான் முதன்முதலில் குழந்தைப் பாலியல்
துஷ்பிரயோக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது) சாட்சி சொன்ன சிலர்
பின்னாட்களில் பொய்ச்சாட்சியம் சொன்னோம் என்று உண்மையைப் பின்னர் சொல்லவும்
செய்திருக்கின்றார்கள். இது குறித்த உள்வீட்டு விபரங்களை நாம் அவ்வளவு
அறியாவிட்டாலும் இந்தக் குற்றச்சாட்டுக்களில் கொஞ்சமேனும்
உண்மையில்லாவிட்டால் இந்தளவுக்கு இந்த விடயம் தீவிரமாகச் சென்றிருக்காது
என்பது எளிதான உண்மையாகும்.
மைக்கல் ஏன்
இப்படி குழந்தைகள் மீது பித்தானார் என்பதற்கும், எப்படி குழந்தைகளை
(அக்குழந்தைகளின் பெற்றோர்) மைக்கலோடு படுக்கையைப் பகிர அனுமதித்தனர்
என்பதெல்லாம் நிறைய கேள்விகளுக்குரியது. இன்னொருபுறம் மைக்கல்
வித்தியாசமான குழந்தையாக/பதின்மனாக வளர்ந்தார் என்பதெல்லாம் அவரின் உளவியலை
வைத்து அலசிப் பார்க்க வேண்டியதே. ஆனால் அதேவேளை குழந்தைகளாக இருந்தபோது
மைக்கலால பாதிப்புற்றவர்களின் குரல்களில், பல ஆவணப்படங்கள்
வந்திருப்பதையும் நாம் கவனித்தாக வேண்டும். அவற்றையெல்லாம் நாம் எளிதாகப்
புறக்கணித்து மைக்கலைப் புனிதராக ஆக்கவும் முடியாது.
அண்மையில்
வெளிவந்த மைக்கலைப் பற்றிய படம் (Michael) வசூலிலும் பெரும் சாதனை
படைத்திருக்கின்றது. இறந்தாலும் யானை ஆயிரம் பொன் என்பதற்கிணங்க மைக்கல்
தனது அதிசயத்தக்க திறமைகளால் நெடுங்காலத்துக்கு வாழ்ந்து கொண்டிருப்பார்
என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் மைக்கலை இந்தக் குழந்தை துஷ்பிரயோக குற்றச்சாட்டிலிருந்து வெள்ளையடித்துத்தான் நாம் அவரைக் கொண்டாட வேண்டும் என்கின்ற எந்த அவசியமும் இல்லை. இப்போது வந்திருக்கும் மைக்கலின் திரைப்படம் கூட மைக்கலில் வெற்றியின் முதல்படிக்கட்டுடன் முடிந்தாலும், மைக்கல் பற்றிய குற்றச்சாட்டுக்களை காட்சிப்படுத்தாது மைக்கலைத் திருவுருவாக்கும் முயற்சியென கடும் விமர்சனமும் இன்னொருபக்கம் வைக்கப்பட்டிருக்கின்றன.
ஆனால் மைக்கலை இந்தக் குழந்தை துஷ்பிரயோக குற்றச்சாட்டிலிருந்து வெள்ளையடித்துத்தான் நாம் அவரைக் கொண்டாட வேண்டும் என்கின்ற எந்த அவசியமும் இல்லை. இப்போது வந்திருக்கும் மைக்கலின் திரைப்படம் கூட மைக்கலில் வெற்றியின் முதல்படிக்கட்டுடன் முடிந்தாலும், மைக்கல் பற்றிய குற்றச்சாட்டுக்களை காட்சிப்படுத்தாது மைக்கலைத் திருவுருவாக்கும் முயற்சியென கடும் விமர்சனமும் இன்னொருபக்கம் வைக்கப்பட்டிருக்கின்றன.
நான் இத்திரைப்படத்தைப்
பார்த்துக்கொண்டிருந்தபோது அந்தக் குற்றச்சாட்டுக்களும் உறுத்தத்தான்
பார்த்தேன். எமக்கு ஒருவரின் கலைத்திறமைகள் பிடிக்கின்றன என்பதற்காக
அவர்களைப் புனிதர்களாக்கித்தான் அந்தத் திறமைகளை இரசிக்கவேண்டும் என்கின்ற
எந்தக் கட்டாயமும் இல்லை. இப்படியான விமர்சனங்களோடுதான் மைக்கலை
மட்டுமில்லை, பாப்லோ நெரூடா, வூடி அலன் போன்ற எண்ணற்ற படைப்பாளிகளையும்
நான் பார்க்க விரும்புகின்றேன்.
இவர்களைப்
பற்றி ஒருவர் வியந்து ஒரு ஆக்கம் எழுதுகின்றார் எனின், அதில் இந்தக்
குற்றச்சாட்டுகளையும் தொட்டுச் செல்லவேண்டும் என எதிர்பார்ப்பேன். இந்தப்
புனிதங்களால் நாம் எமக்குப் பிடித்தவர்களை ஒருபோதும் காப்பாற்ற முடியாது
என்பது ஒருபுறமிருக்க, இன்னொருபுறம் இவர்களால் பாதிப்புற்றவர்களின்
குரல்களை அமைதியாக்கி அநீதி இழைப்பவர்களாகவும் நாம் ஆகிவிடுகின்றோம்.
என்னைப்
போன்றவர்களுக்கு ஆங்கிலப்பாடல்களே மைக்கல் ஜாக்சனால்தான்
அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது. என் பதின்மத்தின் முகிழ்ந்த முதல்
காதலின் காதலி ஒரு காஸெட் முழுதும் மைக்கல் ஜாக்சனின் பாடல்களைப் பதிவு
செய்து எனக்காகத் தந்திருந்தார். அந்தப் பாடல்களைத் திரும்பத் திரும்பக்
கேட்டு அப்பாவிடம் இதிலென்ன இருக்கின்றது என திட்டுவாங்கியதும், நான் என்
வாழ்வில் (அப்பாவுக்கு எதிராக) முதன்முதலாக அச்சம் களைந்து எதிர்த்துப்
பேசியதும் (எல்லாம் காதலும் மைக்கலும் தந்த 'தில்'தான்) இப்போதும் நன்றாக
ஞாபகம் இருக்கின்றது.
இவ்வாறு என் முதல்
காதலிலும், குடும்பத்துக்கு எதிரான முதல் குரலிலும் முக்கிய பங்காற்றிய
மைக்கலை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது. ஆனால் அந்த மைக்கலையும் அவர்
மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களோடுதான் ஏற்றுக்கொள்வேன்.
கடவுளரை வேண்டுவோர்க்குத்தான் புனிதர்கள் தேவைப்படுவார்கள்; கலைஞரை நேசிப்போர்க்கு, கலைஞர்கள் அவர்களின் பலவீனங்களோடோ போதும்.
மேலும்
எந்த ஒரு கலைஞரையும் அவரின் இருண்டபக்கத்தை மட்டும் வைத்து, படைப்புத்
திறமைகளைப் புறக்கணித்த சந்தர்ப்பங்கள் வரலாற்றில் மிக அரிதே என்பேன்.


0 comments:
Post a Comment