கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

தமிழர், முஸ்லிம்கள்: சில குறிப்புகள்

Friday, June 20, 2014

-சிறு எதிர்வினை-

1.
இலங்கையில் முஸ்லிம்கள் மீது வன்முறைகள் நடைபெறுகின்ற இவ்வேளையில் தமிழ் X முஸ்லிம் விவாதங்கள் நடைபெறுவதையும் அதனால் மனம் நொந்து சில முஸ்லிம் நண்பர்கள் எழுதியிருக்கின்ற சில பதிவுகளை வாசிக்க நேர்ந்தது. இந்த விவாதம்(கள்) தொடங்கிய அடி நுனி எதுவும் தெரியாதபோதும் (அவற்றைத் தேடிப் போக விருப்பமுமில்லை) சிலவற்றை எழுதிவிட விரும்புகிறேன்.

நம் தமிழ்ச்சூழலில் கருத்துக்களை உதிர்ப்பதென்பது -அதுவும் முக்கியமாய் அரசியல் சார்ந்து- மிகவும் எளிதானது. அவ்வாறு அரைகுறையுமாய் எழுதுபவர்களே பின்னாட்களில் அரசியல் ஆய்வாளர்களாகவோ அல்லது ஊடகங்களில் எளிதில் நுழைந்துவிடக்கூடியவர்களாகவோ அல்லது ஊடகங்களால் தூக்கிப் பிடிக்கப்படுபவர்களாகவோ ஆகிவிடுவது இன்னொரு துரதிஷ்டம்.

இவ்வாறான அரசியல் கட்டுரைகள் எழுதுபவர்களில் அநேகர் இரண்டு வகையான அரசியல் எழுத்து இருப்பதைக் கூட அவ்வளவு எளிதில் உள்வாங்குவதில்லை. ஒன்று, ஒரு பிரச்சினையிற்கான உடனடி எதிர்வினை. மற்றது நிதானமான ஆய்வு வகையிலான வரலாற்று, கலாசாரப் பின்னணியை உள்ளடக்கிய எழுத்துவகை. ஆனால் நம் தமிழ்ச்சூழலை உற்றுப்பார்க்கும் ஒருவர் அரசியல் கட்டுரைகள் என்றெழுதப்படும் அநேகம் உடனடி எதிர்வினை வகையைச் சேர்ந்தவை எனக் கண்டுபிடிக்க முடியும். அவ்வாறான உடனடி எதிர்வினைகளையே அரசியல் ஆய்வுக் கட்டுரைகளாகத்தான் அநேக தமிழ் ஊடகங்கள் பிரசுரித்தபடியுமிருக்கின்றன.

இப்போது இலங்கையில் முஸ்லிம்கள் மீது திட்டமிட்ட வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகின்றபோது நாம் அனைவருமே உடனடி எதிர்வினைகளையே செய்யவேண்டியவராகின்றோம். நாம் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் அங்கே நிலைமை கட்டுக்கடங்காமலும், உயிர்ச்சேதம் இன்னும் ஏற்படப்போகின்றதோ என்ற பதற்றத்துடன் நாம் தோழமை உணர்வோடு ஒன்று சேர வேண்டியவர்களாகின்றோம்.

2.

முஸ்லிம் மக்களுக்கு தமிழர்களாகிய நாம் செய்த கொடுமைகள் வரலாற்றுப் பக்கங்கள் எங்கும் நிறைந்து கிடக்கின்றன. முஸ்லிம்களை நாம் 'அந்நியராக' அவர்களின் சொந்த நிலங்களிலிருந்து வெளியேற்றிவிட்டு, அவர்களைப் பார்த்து நீங்கள் தமிழர் என அடையாளப்படுத்த விரும்பாதவர்கள் என்ற குரலை இப்போதும் கேட்க வேண்டியது என்பது எவ்வளவு அவலம். 'தமிழர்கள்' என்ற அடையாளத்திற்குள் இருந்தவர்களை விலத்தி/விலக்கிவிட்டு இப்போது தமிழர்கள் என்ற அடையாளத்திற்குள் வாருங்கள் என அழைப்பது, சிங்களவர்கள், நீங்கள் ஏன் தமிழர்களென பிரிந்து நிற்கின்றீர்கள், வாருங்கள் அனைவரும் இலங்கையர் என ஒற்றுமைப்படுவோம் எனச் சொல்வதற்கு நிகர்த்தது. இலங்கை முஸ்லிம்களை தமிழர் என்ற அடையாளத்திற்குள் மீண்டும் வர அழைப்பவர்கள், சிங்களப் பேரினவாதம் செய்த அனைத்தையும் மறந்துவிட்டு இலங்கையர் என்ற ஒற்றையடையாளத்திற்குள் தமிழர்களாகிய நாம் நுழைய முடியுமா என யோசித்தால் இந்தக் கேள்வியை அவ்வளவு எளிதில் எழுப்பவே முடியாது.

நாம் அளுத்கம, பேருவளைப் பகுதிகளில் நடைபெற்ற சம்பவங்களுக்கு தமிழராய் நின்று அங்கு நடக்கும் கொடூரங்களுக்கு எதிர்த்துக் குரல்களை எழுப்பலாம் அல்லது வேண்டுமானால் மவுனத்தைத் தேர்ந்தெடுத்துக் கூட கொள்ளலாம். அதை விடுத்து முள்ளிவாய்க்கால் காலத்தில் நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள் என கேள்வி எழுப்புவது, உயிர்களும் உடைமைகளும் ஊசலாடிக்கொண்டிருக்கும் பதற்றமான கணத்தில் மனிதாபிமானம் அற்றது. முள்ளிவாய்க்கால் காலத்தில் போர் நடைபெற்ற வன்னி தவிர்ந்து தமிழர்கள் கணிசமாய் வாழ்ந்த யாழ் மாவட்டத்திலோ அல்லது வேறு பிரதேசங்களில் இருந்து கூட எதிர்ப்புக்குரல் எழுப்ப முடியாது அல்லவா இருந்தது? அவ்வாறு மெளனம் காத்ததற்கு அங்கிருந்தவர்க்கு பல்வேறு நெருக்கடிகள் இருந்ததுபோல, தமிழர்களுக்காய் குரல் கொடுக்க விரும்பியபோதும் இலங்கை முஸ்லிம்களுக்கும் நெருக்கடிகள் இருந்திருக்கலாம் என்பதைக்கூட ஏன் நம்மால் புரிந்துகொள்ள முடியாதிருக்கின்றது?

மேலும், முஸ்லிம்களுக்கு தமிழர்களாகிய நாம் பல அநீதிகளைச் செய்துவிட்டு எமக்கான அநீதியிற்கு நீங்கள் குரல்கொடுக்கவில்லை என்பது எவ்வளவு சுயநலமாக இருக்கும்? நாம் இதுவரை கடந்த காலங்களில் செய்த விடயங்களுக்காய், மீளிணக்கம் செய்ய என்ன செய்திருக்கின்றோம் என்று ஆறுதலாக யோசித்திருக்கின்றோமா? அந்நியராகவும் துரோகிகளாவும் துரத்தியடிக்கப்பட்ட அவர்களுடனான மீளிணக்கம் என்பது கூட எவ்வளவு நெடிய பாதையென்பதை அறிந்து, தொடர்ந்து நாம் நல்லிணக்கச் சமிக்ஞைகளை அனுப்ப வேண்டியவராய் அல்லவா இருக்க வேண்டும். அந்த சமிக்ஞைகளை ஏற்றுக்கொள்வதற்கும் விலத்துவதற்கும் நம்மால் ஒடுக்கப்பட்ட அவர்களுக்கே தெரிவு இருக்கிறதே தவிர நமக்கில்லை என்பதையும் அறிந்தாகவும் வேண்டும்.

உதாரணமாக, எதிர்காலத்தில் சிங்களச் சமூகம், நடந்தவற்றை மறந்து ஒற்றுமையாக வாழ்வோமென தமிழர்களை நோக்கி நல்லிணக்கச் சமிக்ஞைகளை அனுப்பினாலும், அவர்கள் மீது நம்பிக்கை வந்து எதிர் நல்லிணக்க சமிக்ஞை அனுப்பும் தெரிவு தமிழர்களுக்கு இருக்கிறதே தவிர சிங்களவர்க்கு இல்லை என்பதை சொல்லித்தான் தெரியவேண்டுமென்றில்லை.

அவ்வாறான ஒருநிலையேதான் முஸ்லிம்கள் தொடர்பாய் தமிழர் தரப்பிற்கு இருக்கின்றது என்பதை அறிந்தாக வேண்டும். நடந்தவற்றை மறந்துவிட்டு பழையபடியிருப்போம் என புலிகளோ,சம்பந்தரோ அறிக்கைகளால் மட்டும் சொல்லிவிட்டு இருந்துவிட முடியாது. அதற்கப்பால் என்னவிதமான சூழ்நிலைகள் நம்மால் உருவாக்கப்பட்டிருக்கிறதென்று கவனித்தாகவேண்டும். இப்போது முஸ்லிம்கள் சிங்களப்பேரினவாதத்தால் ஒடுக்கப்படும்போது எவ்வித நிபந்தனையுமின்றி முஸ்லிம்களின் பக்கம் நின்று நாம் அவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் வன்முறையிற்கு எதிராகக் குரல் கொடுப்பது, அவ்வாறான நல்லிணக்க சமிக்ஞைகளில் ஒன்றுதான்.

முஸ்லிம்களுக்கு இதில் தெரிவிருக்கிறது. தமிழர் தரப்பிலிருந்து நீட்டப்படும் கரத்தைப் பற்றிக்கொள்வதா அல்லது இன்னும் காலம் வரவில்லையென மறுப்பதா என்பது குறித்து. ஆனால் தமிழர்களாகிய நாம் தொடர்ந்து அவர்களுக்காய் தோழமைக் குரல் கொடுப்பதை மட்டுமே செய்யமுடியும். காலம் ஒருநாள் கனியும்போது நாம் எமது வித்தியாசங்களை விளங்கிக்கொண்டு, அருகருகில் இணைந்து சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிராக ஒன்றாகப் போராடலாம் என்ற நம்பிக்கையை மட்டும் கைவிடாது.

3.
இந்த விடயத்தோடு இன்னொரு தகவலையும் அடிக்கடி பார்க்கின்றேன். தமிழர்களின் தரப்பிலிருந்து தொடர்ந்து அரசோடு இணைந்து நிற்கும் முஸ்லிம் காங்கிரசை விமர்சிப்பது பற்றியது. தமிழர்களாகிய எமக்கு முஸ்லிம்களோடு தோழமை உணர்வை வளர்ப்பதே முக்கியமே தவிர, முஸ்லிம் காங்கிரசிற்கு அறிவுரை கூறுவது முக்கியமற்றது. இவ்வாறான அறிவுரைகளால், திருப்பவும் நாங்கள் அவர்களை ஆதிக்கம் செய்ய விரும்புகின்றோமா என எங்களை நாங்களே கேள்வி கேட்க வேண்டியவர்களாகின்றோம். முஸ்லிம் மக்கள் தமக்கு எந்தத் தலைமை தேவையெனத் தேர்ந்தெடுக்கட்டும். முஸ்லிம் காங்கிரஸ் மீது நிறைய முஸ்லிம்களுக்கு விமர்சனம் இருக்கிறதென்பதை அவர்கள் பலரின் எழுத்தைப் பார்த்தாலே தெரிகிறது என்பது வேறுவிடயம்.

இதையேன் சொல்கிறேன் என்றால், இந்த எரியும் பிரச்சினையில் நாம் விமர்சனமும் கண்டனமும் செய்யவேண்டியது சிங்களப் பேரினவாதமே தவிர, முஸ்லிம் காங்கிரஸ் அல்ல என்பதை தெளிவுபடுத்தியாக வேண்டும். இந் நிகழ்விற்கு எதிர்ப்பாய் எழுதிய சிங்களவர்களின் கட்டுரைகளை வாசித்தபோது அவர்கள் எவரும் முஸ்லிம் காங்கிரசிற்கு அறிவுரை கூறவில்லை. முக்கிய எதிரியான அரசையும், பொதுபல சேனாவையும்தான் குறிவைத்து எழுதுகின்றார்களே தவிர முஸ்லிம் தலைமை குறித்து எதுவும் எழுதி வாசித்தாக நினைவினில்லை.

தொடர்ந்து சிறுபான்மையினரை ஒடுக்கும் அரசோடு இணைந்திருப்பதா இல்லையா என்பதை முஸ்லிம் காங்கிரஸ் முடிவுசெய்யும் நேரம் வரும். முஸ்லிம் மக்களும் காலமும் அதைத் தீர்மானிக்கட்டும். அதைத் தமிழர்களாகிய நாம் எதைச் செய்யவேண்டுமென அவர்களுக்குச் சொல்லிக் காட்டத் தேவையில்லை. தொடர்ந்து இவ்வாறு இணக்க அரசியல் செய்யும்போது சிலவேளைகளில் பேரினவாத அரசோடு இயங்கும் தமிழ்க்கட்சிகளுக்கு மக்கள் கொடுத்த தீர்ப்புத்தான் தங்களுக்கும் எதிர்காலத்தில் நிகழுமென்பதை முஸ்லிம் காங்கிரஸ் உணராமலா இருக்கப் போகின்றது

4.
இந்த விடயம் குறித்து மீண்டும் வலியுறுத்துவது என்னவென்றால், இப்போது தமிழர்களாகிய நாம் முஸ்லிம்களுக்கு தோழமைக் குரல் கொடுப்பதும், நிகழும் கொடூரங்களுக்கு எதிராக நம் முழு ஆதரவை முஸ்லிம் மக்களுக்கு நிபந்தனையின்றி வழங்கவேண்டும் என்பதே. இங்கும் நான் அதைச் செய்தேன், நீங்கள் இதைச் செய்தீர்கள் என்றோ அல்லது உங்களுக்கு இது வேண்டும் என்கின்ற சிறுபிள்ளைத்தனமாய் அரசியல் செய்வதைத் தயவுசெய்து விட்டுவிடுங்கள். இது தமிழர் தரப்பு தன் நல்லிணக்க சமிக்ஞையைக் காட்டுவதற்கு மிக முக்கியமான தருணமாகும். காலம் அவ்வளவு எளிதில் எல்லாப் பொழுதுகளிலும் சந்தர்ப்பங்களை வழங்கிவிடுவதில்லை.

சிங்களவர் சிலருக்கு இருக்கும் மனிதாபிமானம் கூட நமக்கில்லையென்றால் எவ்வளவு வெட்கப்படவேண்டும்.


(ஜூன் 17, 2014, முகநூலில் எழுதியது)

செவ்வந்திப்பூ குறிப்புகள்

Wednesday, June 04, 2014

In Our Translated World

சில மாதங்களுக்கு முன்னர் ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. தமிழ்க் கவிதைகளை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கும் ஒரு திட்டத்தில் எனது கவிதையொன்றையும் தேர்ந்தெடுத்திருப்பதாகவும், அதற்கு அனுமதி தரமுடியுமா எனவும் கேட்கப்பட்டிருந்தது. ஏற்கனவே இவ்வாறான தொகுப்பாக்கும் வேறு சில முயற்சிகளுக்காய் ஆக்கங்களை அனுப்பக் கேட்ட -முக்கியமாய் தமிழ்நாட்டிலிருந்து வந்த- மின்னஞ்சல்களுக்கு, என் தனிப்பட்ட விருப்பத்தின்பேரில் அவற்றைத் தவிர்த்திருக்கின்றேன்.

அவ்வப்போது மாற்றமும் தேவையாய்த்தானிருக்கிறது அல்லவா? இந்த முயற்சிக்கு சம்மதம் தெரிவித்தாலும், அவர்கள் 'வதை' கவிதையைத் தேர்ந்தெடுக்கிறோம் என்றபோது, இதை நான் எப்போது எழுதியது என்ற குழப்பமும் ஏற்பட்டது. அநேகமான கவிதைகளுக்கு  நான் பெயரிடுவதேயில்லை, இல்லாவிட்டால் பிரசுரிக்கும்போது மட்டுமே தலைப்பிடுவதுண்டு. மேலும் எனது பெயர் பொதுவான் பெயராக இருப்பதாலும் நிறையப்பேர் அதேபெயரில் கவிதைகள் எழுதிக்கொண்டிருப்பதாலும், வேறு எவரினதும் கவிதையை என் பெயரில் பிரசுரிக்கக் கூடாது என்ற கவனத்துடனும் 'தயவு செய்து நீங்கள் தேர்வு செய்த கவிதையை ஒருமுறை எனக்கு அனுப்பிவிட முடியுமா?' எனக் கேட்டிருந்தேன். எழுதியவனுக்கே தான் எதை எழுதினேன் எனத் தெரியாதா என்று தேர்வுக்குழுவினர் தலையிலடித்திருக்கக்கூடுமென்றாலும், பொறுமையாய் எனக்கு என் கவிதையையே திருப்பி அனுப்பியிருந்தனர். அவர்களுக்கு நன்றி.

அண்மையில் இங்கு நடந்த வெளியீட்டு விழாவிற்கும் தவிர்க்க முடியாத காரணத்தினால் செல்ல முடியவில்லை. ஆகவே இக்கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பை இங்கே பதிவு செய்யமுடியாதிருக்கின்றது. அ.முத்துலிங்கம் தான் இத்தொகுப்பு வேலையிற்கு உந்துசக்தியாக இருந்திருக்கின்றார் என நினைக்கின்றேன்.

நான் வளாகத்தில் படித்துக்கொண்டிருந்த காலத்தில்- என்னை யாரெனத் தெரியாதே- 'திண்ணை' போன்றவற்றில் கவிதைகள் வெளிவந்தபோது உற்சாகப்படுத்தி மின்னஞ்சல்கள் அவர் அனுப்பியது இப்போதும் நினைவிலிருக்கிறது. அவ்வாறு உற்சாகப்படுத்தியவரை, என் நூற்களின் வெளியீட்டு விழாக்களிற்கு வந்தவரை, என் வாசிப்பு மற்றும் தெரிவுகள் காரணமாக அவரின் படைப்புக்கள் உட்பட அவர் சார்ந்து இயங்கும் 'இயல்விருது' வரை தொடர்ந்து விமர்சித்தே வந்திருக்கின்றேன் என்பது வேறுவிடயம். இரண்டு வார்த்தைகள் மறுதலிப்பாய் எழுதினாலே, முகப்புத்தகத்தில் நம்மைத் தடை செய்து, பின் படைப்புச் சுதந்திரத்திற்குக் 'குரல்'கொடுக்கச் சொல்லி முழங்கும் நிறையப் பேரைப் பார்க்கும்போது, கடுமையாய் விமர்சித்தாலும், படைப்பைப் படைப்பாய் மட்டும் பார்க்கத் தெரிந்த அ.மு என்னளவில் சற்று உயர்ந்துதான் நிற்கிறார்.

நூல் வெளியீட்டிற்குப் போய் தொகுப்பைப் பெற முடியவில்லை என்பதைவிட, அத்தொகுப்பில் கவிதைகள சேர்க்கப்பட்டவர்களுக்கு, கொடுக்கப்பட்ட ஒற்றை ரோஜாப் பூவைத் தவறவிட்டேன் என்பதை நினைக்கத்தான் சற்றுக் கவலையாக இருக்கிறது.

வதை
--------

நா பிடுங்கப்பட்டு
வார்த்தைகள் சிதைக்கப்பட்ட நாளில்
மூன்று சிறகுகளுடைய பறவையொன்று
மொழியைக் காவியபடி பறக்கக்கண்டேன்
என்னைப் பிரகடனப்படுத்துவதென்பது
உனதிருத்தலை மறுப்பதல்லவெனும் கதகதப்பான சொற்களை
காற்றின் நாவுகள் ஈவிரக்கமில்லாது விழுங்கிச்செல்கின்றன
எப்போதுமித்தனிமையும் அலட்சியமும்
யாரையோ காயப்படுத்திக்கொண்டிருக்க
மொழியைச் சாம்பர்வானத்தில் தூவிச்செல்லும் பறவைமீது
கல்லெறிந்து தம் வன்மத்தைக் கரைத்துக்கொள்கின்றனர்
மூன்றிலொரு சிறகை இலையுதிர்காலவிலையாய்
நீளுமிரவுகளின் மீது உதிர்க்குமென் பிரியபறவையின் செஞ்சொண்டறியும்:
சொற்களோடு இடையறாது போரிட்டுத்தோற்பதை
தனிமையெனப் பெயரிட்டென்னைத் தேற்று'வதை'.

(Oct 23, 2007)

நீல மல்லிகை (Blue Jasmine)

வூடி அலனின் அண்மைக்கால ரொமாண்டிச படங்களிலிருந்து சற்று விலகிய ஓர் படமிது. உயர்தர வாழ்க்கை வாழும் பெண் எப்படி அடித்தளம்வரை செல்கிறார் என்பதையும், அப்போதும் கூட தன் 'அந்தஸ்தை' விட்டுக்கொடுக்காது இறுதிவரை வீறாப்புடன் இருக்கிறார் என்பதையும் ஜாஸ்மின் என்கின்ற பாத்திரத்தினூடாக கொண்டுவருகிறார். வூடி அலனின் படங்கள் அநேகமாய் உரையாடல்களாலேயே செதுக்கப்பட்டாலும், கதாபாத்திரங்கள் மீது எமக்கு எப்படியோ வாஞ்சையையும் நெருக்கத்தையும் உருவாக்கியிருப்பார். இப்படத்தில் வூடி அலன், ஜாஸ்மின் பாத்திரத்திற்கு கருணையே வழங்குவதில்லைப் போன்று மிக இறுக்கமாய் வார்த்திருக்கிறார். ஒவ்வொரு வீழ்ச்சியின்போதும் ஜாஸ்மின் பாத்திரத்தின்மீது நமது நெருக்கம் வருகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் அடுத்தடுத்து வரும் காட்சிகளின் மூலம் நம்மை ஜாஸ்மின் பாத்திரத்தின் மீது வாஞ்சை கொள்வதையே தடுத்தும் விடுகிறார்.

கணவரின் -திருமணத்திற்கான அப்பாலான- சில உறவுகளால் அவரோடு முரண்பட்டுப் பிரிகிறார். கணவரின் 'துரோகத்தை'யும் ஏதோ ஒருவகையில் பழிவாங்குவதற்காயத் தன் செல்வாக்கையும்/ செல்வத்தையும் இழக்கிறார். மகன் இவரின் செயற்பாடுகளால் - தாய் என்ற உறவே வேண்டாம்- என்ற நிலைப்பாடோடு ஜாஸ்மினை விட்டு முற்றுமுழுதாகப் பிரிகிறார். வீடற்ற ஜாஸ்மினுக்கு ஏழ்மையாக இருந்தாலும் தங்குமிடம் கொடுக்கும் தங்கையையும் கீழ்த்தரமாகவே நடத்துகிறார். எப்படியேனும் எல்லாவற்றையும் மறைத்து பொய் சொல்லியேனும் ஒரு பணக்காரரை காதலிக்கவும் வைக்கிறார். இறுதியில் எல்லாமே தலைகீழாக நடந்துபோகின்றபோதும், தன் போலிக் கெளரவத்தை விட்டுவிடாது அப்படியே இருக்கவும் செய்கிறார்.

கணவரை அப்படியே எளிதாக நம்புகின்ற ஜாஸ்மின், பல் வைத்தியரின் பாலியல் சுரண்டலைச் சகிக்கின்ற ஜாஸ்மின், தொலைந்துபோகின்ற மகனைத் தேடிச்செல்லும்போது மகனால் நிராகரிக்கப்படுகின்ற ஜாஸ்மின், காதலுக்காய் (மற்றும் அந்தஸ்தைத் திரும்பப் பெறுவதற்காய்) பொய்களைச் சொன்னாலும், அங்கே உண்மையாகவே மெல்ல முகிழும் காதலில் நேசம் ததும்புகின்ற ஜாஸ்மின், இறுதியில் எல்லாவற்றாலும்/எல்லோராலும் நிராகரிக்கப்பட்டாலும் தான் இப்படித்தான் இருப்பேனென நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கின்ற ஜாஸ்மினென உணர்ச்சிகளை மாறிமாறிக் குழைந்து Cate Blanchett இயல்பாக நடித்திருக்கிறார்.

ஜாஸ்மின் இத்தகைய சரிவுகளைக் கண்டபின்னும் ஏன் தன்னை மாற்றிக்கொள்ளாமல் இருக்கிறார் என்று குழம்புவதை விட, ஜாஸ்மின்களால் இப்படித்தான் இருக்கமுடியும் என நாம் அவர்களைப் புரிந்துகொள்வதே சாலவும் சிறந்ததாக இருக்கும்.


பாரிஸ் கடிதங்கள் (Paris Letters)

சில வாரங்களுக்கு முன் தான், தற்செயலாய் ஜெனீசைக் கண்டடைந்ததையும், அவரின் எழுத்தும் வாழ்வும் என்னை வசீகரித்ததையும், எழுதியிருந்தேன். அவரின் 'பாரிஸ் கடிதங்கள்' (Paris Letters) சென்ற செவ்வாயனறுதான் வெளியாகியிருக்கிறது. இன்று பார்த்தால், ஜெனீஸ் எனக்குப் பிடித்த இன்னொரு எழுத்தாளரான எலிஸபெத்தை பாரிஸில் சந்தித்திருப்பதை வாசிக்க முடிந்திருந்தது. இன்னும் இவர்களைப் போல எத்தனை பேர்களின் வாழ்வையும் எழுத்தையும் பார்த்துப் பொறாமைப்பட காலம் 'கட்டளை'யிட்டிருக்கிறதோ தெரியவில்லை.

ஜெனீஸ், 2006ல் தற்செயலாய் எலிசபெத்தின் (Eat, Pray, Love) நூலை ஒரு புத்தகசாலையின் மூலையில் இருந்து எட்டு அத்தியாயங்களை வாசித்துவிட்டு வாங்கியதையும், அது தன்வாழ்வில் எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதையும் குறிப்பிடுகிறார். ஜெனிஸாவது குறிப்பிட்ட சில அத்தியாயங்களை வாசித்துவிட்டு அந்த நூலை வாங்கியிருக்கின்றார், நான் விலை கொடுக்காது வாங்காமலே இப்படி எத்தனை புத்தகங்களை புத்தகசாலையில் வாசித்திருக்கின்றேன் என நினைக்க சற்று கூச்சமாய்த்தானிருக்கிறது, ஆனால் அவமானப்பட எதுவுமில்லை.
எலிசபெத்தோடான பாரிஸ் சந்திப்பில், யாரோ ஒருவர் 'உங்கள் வெற்றியின் உச்சத்தை எப்போது உணர்ந்தீர்கள்?' எனக் கேட்க, அவர் -நம்மால் வெற்றியென நினைக்கப்பட்ட விடயம் எதையும் குறிப்பிடாது- 'எந்தக் கணத்தில் ரோமிற்கான விமானத்தில் ஏறினேனோ, அப்போதிருந்து எல்லாமே மிக நன்றாக மாறின' என்றிருக்கிறார்.

இதே கேள்வியைத் தன்னிடம் ஒருவர் கேட்டிருந்தால் எப்படி பதில் அளித்திருப்பார் என ஜெனிஸ் தன்னைத் தானே கேட்டுக்கொள்கிறார். அது,

If I were to answer the question, What was the peak of my success, I’d have a different answer.

It wasn’t meeting Elizabeth Gilbert, even though it was an astounding moment and am so very blessed that it happened. And it wasn’t Rome, Paris or London. It wasn’t even the lovely Christophe or Paris Letters.

The peak of my success is a quiet one.
And it happens every day.

At 8:20 each morning, as I sip my coffee and write my daily pages in my journal, I hear a door open and close. It’s my upstairs neighbor leaving for work. In my old life, I left for work at 8:20, too. Sometimes seeing 8:20 on the clock made my want to cry. Now, remembering back, I smile and take another sip of coffee. In a mug. In my apartment. In my yoga pants. Knowing I have a full day ahead of me to do what I want to do.

...இவ்வாறாக இந்த நாளும் அழகாகியது.

கொன்றைப்பூ குறிப்புகள்

Thursday, May 29, 2014


மாதொருபாகனும், ஆளண்டாப் பட்சியும், சில நினைவுகளும்...

'ஆளண்டாப் பட்சி' - அண்மையில் வெளிவந்த பெருமாள் முருகனின் நாவல். இன்றைய காலத்தில் வாசிப்பின் வேகம் குறைந்துவிட்டதாலோ என்னவோ, மிக ஆறுதலாகவே ஒருவாரத்திற்கு மேலாக எடுத்து, வாசித்து முடித்திருந்தேன். ஆனால் மாதொருபாகனை இரண்டு நாட்களில் வாசித்திருந்தேன். அவ்வளவு சுவாரசியமான மொழிநடையில் எழுதப்பட்ட நாவல் மாதொருபாகன்.

ஈழத்தில் இருந்த காலங்களில் பிளாஸ்ரிக் வயர் பின்னிய கதிரையில் சுருண்டு கிடந்தபடி, மாலைச்சூரியன் எப்போது மங்கியதென அறியாது மெல்லிய இருள் படிவது கூடத் தெரியாது வாசித்துக்கொண்டிருப்பேன். 'மாதொருபாகனை' வாசித்து முடிக்கும்வேளையில் அவ்வாறுதான் இருள் சூழச்சூழ, எந்தநிலையிலும் மின்குமிழை இயக்காது வாசித்து முடித்துவிடவேண்டுமென்ற விருப்புடன் இயற்கை ஒளியிலேயே முடித்திருந்தேன்.

'மாதொருபாகனாய்' இருந்தாலென்ன, 'ஆளண்டாப் பட்சி'யாய் இருந்தாலென்ன, ஏன் 'கூளமாதாரி'யாய் இருந்தாலென்ன, நாவலின் உள்கிடக்கை சிலவேளைகளில் அவ்வளவு கவராவிட்டால் கூட, பெருமாள் முருகனின் சித்தரிப்புக்கள் நம்மை அப்படியே அந்தச் சூழலில் கொண்டு சென்று சேர்த்துவிடும்.

மாதொருபாகனின் விபரிப்புக்கள் எனக்குள் இழந்துவந்த கிராமத்தின் நினைவுகளை பெருக்கெடுக்கச் செய்தன. காடுகளில் (தோட்டங்களில்) செய்யும் விவசாயமும், வளர்க்கும் ஆடு மாடு, கோழிகளும் அவற்றை அளவிறந்து நேசிக்கும் காளியென, நானும் ஒரு பாத்திரமாய் இருப்பது போல மாதொருபாகன் ஆக்கியிருந்தது. எனக்குப் பழக்கமான பூவரசுகளையும்,வேம்புகளையும், பனைகளையும் மட்டுமில்லை வாதநாராயணி, கிளுவைகளென -நினைவிலிருந்து இல்லாமற்போய்க்கொண்டிருந்த- இன்னும் பல மரங்களையும், பறவைகளையும் மீளக் கண்டுபிடிக்க முடிந்தது.

காளி, ஒழுங்காய் கோழிகள் முட்டை பொரித்து குஞ்சுகள் பிற பிராணிகளிடமிருந்து தப்புவதற்காய் கரிப்புக்குருவிகள் வளர்க்கும் இடமெல்லாம் நுட்பமானது. எப்போதும் எங்கள் வீட்டில் கோழிகள் உலாத்தியபடியேயிருக்கும், அந்த முட்டைகளே அவசரத்திற்கு விற்கவும், பிறபொருட்களுக்கு பண்டமாற்றம் செய்வதற்குமென உதவிக்கொண்டேயிருக்கும்.

கோழி அடைகாத்து நிறையக் குஞ்சுகள் வந்தாலும் பெரிதாக வளரும்போது அவை பருந்துகளாலும், மரநாயாலும் அரைவாசியாக எண்ணிக்கையில் மாறியிருக்கும். இரவுத்தூக்கத்திற்காய் மாமரத்தின் கிளைகளிலே எங்கள் வீட்டுக் கோழிகள் தூங்குவதும், அவ்வப்போது மரநாய்கள் வந்து அவற்றை பலியெடுத்துச் செல்வதும் அடிக்கடி நிகழ்வது.

கோழிகளால் ஒரு குறிப்பிட்ட உயரத்திற்குப் பறக்கமுடியும், அவைகள் தம்பாட்டிலே மாமரக்கொப்பிலே ஏறுபவை என்று நகரத்திலே பிறந்து வளர்ந்த நண்பருக்குச் சொல்லும்போதேல்லாம், நண்பர் சும்மா பொய் சொல்லாதே, கோழி பறக்காது என என்னை நக்கலடிப்பதுண்டு. பின்னர் தற்செயலாய் யூரீயுப்பில் கோழிகள் பறக்கும் விடீயோவைக் காட்டி நான் சொன்னது உண்மைதானென நிரூபிக்க வேண்டி வந்தது வேறு விடயம்.

பெருமாள் முருகனின் நாவல்களில் அநேகம் வருபவர்கள் கவுண்டர்களும் சாணர்களுமாய்த்தானிருக்கின்றார்கள். முக்கியபாத்திரமான கவுண்டர்கள் சாணர்களை ஒரளவு மதிக்கக்கூடியபவர்களாகவும், ஆனால் அதேசமயம் உள்ளே முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ளத் தயங்குபவர்களாகவும் இருப்பார்கள். அதை 'ஆளண்டாப் பட்சி'யில் வரும் குப்பண்ணா பாத்திரம் மூலம் நன்கறிய முடியும். ஆனால் அவர்கள் எவ்வளவுதான் ஓடாய் தேய்ந்து வேலை செய்தாலும் கவுண்டர்கள் ஓர் எல்லைக்கு மேலே விடவும் மாட்டார்கள்.

'மாதொருபாகனில்' மாட்டுவண்டியில் சாணர்கள் அருகே அமரவே தீட்டுப் பார்க்கப்படும், அவர்களுக்குத் திருவிழாக் காலத்தில் மோரோ நீரோ ஊற்றும்போதுகூட தனியே பனங்கோட்டைகளில் ஏந்தி பவ்வியமாய்த்தான் குடிக்கவேண்டியிருக்கிறது. அன்பாய் காசுகொடுக்கும்போதுகூட சாணர் பெண், தன் துணிவிரித்துத்தான் நாலணாவையோ எட்டணாவையோ பெற்றுக்கொள்ள முடிகிறது.

ஆனால் இந்தச் சூட்சுமம் எல்லாம், சாணர் வீட்டில் கள்ளோ சாரயமோ வாங்கிக்கொடுக்கும்போது எப்படி காணாமற் போய்விடுகிறது என்பதுதான் 'அதிசயம்'. சாணர் பெண் சமைத்துக்கொடுக்கும் கறியிலும், சாறிலும், சோத்திலும் எந்தத் 'தீட்டை'யும் பார்க்காமால் எப்படி அள்ளியள்ளிச் சுவைத்துச் சாப்பிட முடிகிறது. பிள்ளை பிறக்கதாதால் 'வறடி' எனப் பெயரெடுக்கின்ற, அதன் நிமித்தம் ஒதுக்கப்படுகின்ற கவுண்டப் பெண் கூட, அழகாய் இருக்கும் சாணர் குழந்தைகளைத் தூக்கிக் கொஞ்ச விரும்பினால் கூட 'தீட்டு வந்துவிடும்' என அஞ்சுபவராக, அந்த அனுபவத்தை மறுதலிப்பவராக இருக்கின்றார் என்பதில் எல்லாம் இருப்பது சாதியின் அரசியலன்றி வேறென்ன?

ஓரிடத்தில், 'வறடி'யாக இருப்பதால் ஒரு சடங்கில் ஒதுக்கப்படுகின்றார் கவுண்டர்பெண். அப்போது அந்தப் பெண் இப்படி எங்களைத் தீண்டாச் சாதியாக வைத்துவிடுகின்றார்களே என கவுண்டர்களைத் திட்டுகிறார். நான் இதைத்தாண்டி யோசித்துப் பார்க்கும்போது, கவுண்டர் பெண்ணுக்காகவது அவரால் குழந்தை பெறமுடியவில்லை என்ற உடலியல் காரணத்திற்காய் (அது கூட எவ்வளவு முட்டாள்தனமானது என்று சொல்லத் தேவையில்லை) தான் ஒதுக்கப்படுகிறார். ஆனால் இந்த 'தீண்டப்படாத' சாதி என ஒதுக்கி வைக்கப்பட்டவர்களெல்லாம் என்ன காரணத்திற்காய் ஒதுக்கப்படுகின்றார்கள் என்று சற்று யோசித்துப் பார்க்கலாமே எனத் தோன்றியது. அவர்கள் செய்த ஒரேயொரு 'தவறு' இந்த 'தீண்டப்படாத சாதி' என அழைக்கப்படும் பிரிவிற்குள் வந்து பிறந்ததைத் தவிர வேறென்ன...?

'கூளமாதாரி'க்கு பிறகு மிகுந்த சுவாரசியத்துடன் வாசித்த பெருமாள் முருகனின் நாவல் 'மாதொரு பாகன்' . இந்நாவலை 'கூளமாதாரி' மாதிரி எங்கே முடிப்பதென மிக நுட்பமாகத் தெரிந்து முடிக்கப்பட்டிருப்பதால் இன்னும் பிடித்தமாயிருந்தது. 'ஆளண்டாப் பட்சி' நிலம்பெயர்வின் சிறுவரலாற்றைக் கோட்டிட்டு காட்ட முனைகிறதென்றாலும், நாவலாக அது வளரவில்லை எனத்தான் கூறவேண்டியிருக்கிறது.


த்ரிஷம்

குழல் பிட்டோடு தொடங்கும் காட்சியோடு அமிழ்ந்து இறுதிக்காட்சியில் மோகன்லால் பொலிஸ் ஸ்ரேசனிலிருந்து வெளிவரும்வரை உள்ளிழுத்துக்கொண்ட ஓர் திரைப்படம். இன்றைய சூழலில் எந்தக் கணத்திலும் நம் முன்னே சாதாரணமாய் நிகழ்வதற்குச் சாத்தியமுள்ள ஒரு கதை. அதை எவ்வாறு திரைப்படமாக்கியிருக்கின்றார்கள் என்பதோடு 'அறம்' என்பது எதுவாக இருக்கும் என்பது குறித்தும் நம் மனதில் கேள்விகளையும் உருவாக்கிறது இத்திரைப்படம்.

மலையாளச் சூழலில் தொடர்ந்து எவ்வாறு நம்மைச் சலனமடையுச் செய்யும் இத்தகைய திரைப்படங்களை எடுக்க முடிகிறதெனவே யோசித்துப் பார்க்கிறேன். மலையாளத் திரைப்படங்களுக்கும் - எல்லா மொழிப்படங்களுக்கு நிகழ்வதைப் போல- ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் எப்படி அவர்களால் வீழ்ச்சியிலிருந்து எளிதாக மீள உயிர்க்க முடிகின்றது? தமிழில் நல்ல படங்கள் வருவதற்கான சூழ்நிலை உருவாகின்றது என நாம் சற்று மகிழும்போதே அவ்வாறான நம்பிக்கைகள் தூர்ந்து மீண்டும் பழைய 'வழமை'யான நிலைக்குத் திரும்புவிடும் குறித்து யோசிக்கவேண்டியிருக்கிறது.

சென்ற வருடம் இங்கே நிகழ்ந்த திரைப்படம் சம்பந்தமான ஒரு கலந்துரையாடலிலும், தமிழில் நம்பிக்கையளிக்கும் சமிக்ஞைகள் புதியவர்கள் (முக்கியமாய் 'நாளைய இயக்குநர் யார்? போன்ற நிகழ்வுகளின்) ஊடாக வந்தாலும் அதை ஒரு மாற்றத்திற்குரிய புள்ளியெனக் கொள்ளமுடியாதெனவும், ஒரளவு கவனிக்கத்தக்க இந்த இயக்குநர்கள் அடுத்தடுத்து இயக்கும் திரைப்படங்களை வைத்தே நாம் தமிழ்ச் சூழல் மாறுமா/மாறாதா என அவதானிக்க முடியுமெனச் சொன்னதும் ஞாபகத்திலுண்டு.

ஏன் மலையாளத்தில் இவ்வாறான நல்ல திரைப்படங்கள் -அவர்களுக்கும் பல்வேறு நெருக்கடிகள் இருந்தாலும்- வெளிவருகின்றது எனப் பார்க்கும்போது, அங்கேயிருக்கும் 'நட்சத்திர நடிகர்கள்' கூட கதைக்கேற்ப மாறக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பது முக்கிய காரணங்களில் ஒன்று. திரிஷம் படத்தில் மோகன்ல்லால் சப்பாத்துக்காலால் அடிவாங்குகின்ற காட்சிகளையெல்லாம் தமிழ்ச்சூழலில் ஒரு படம் நடித்து (அதுவே ஹிட்டாயிற்று என்றால் சொல்லவே தேவையில்லை) தந்த நாயகர்கள் கூட இப்படி 'பாத்திரத்திற்கேற்ப' நடிப்பார்களென எதிர்பார்க்கவே முடியாது.

தமிழ்ச் சூழலில் சில இயக்குநர்கள் தன் சுயத்தில் ஒரு நல்ல படத்தைத் தந்தால் கூட, அவர் அடுத்தடுத்து 'நட்சத்திர நடிகர்களை' வைத்து படமாக்கும்போது அந்த நடிகர்களுக்கேற்ற ' நாயக விம்பக் கதைகளை' உருவாக்கின்றார்களே தவிர அநேகமாய் தம் சுயத்தைக் கைவிட்டு விடுபவர்களாக இருக்கின்றார்கள். இதில் பாலா போன்ற ஒன்றிரண்டு பேரே விதிவிலக்கு. 'வெண்ணிலா கபடிக்குழு', 'அழகர்சாமியின் குதிரை' போன்ற கதைகளைத் தந்த சுசீந்திரன் போன்றவர்கள் மறுதிசைக்கு உதாரணங்கள்.

ஆகவேதான், ஒரளவு நம்பிக்கை தந்து தமிழ்சூழலின் ஏதேனும் சலனத்தை உருவாக்குவார்கள் என நம்பிக்கை தந்த (நாளைய இயக்குநர் புகழ்) புதியவர்களால் கூட, அவர்களின் 2ம் 3ம் படங்களில் தமிழ்சூழல் ஏற்கனவே பயணித்துக்கொண்டிருக்கின்ற 'நாயக விம்ப வழிபாட்டு'த் திசையில் அலையும் அவலம் நிகழ்ந்திருகின்றது.

மலையாளச் சூழலில், எத்தகைய நட்சத்திரங்களாய் இருந்தாலும் அவர்களால் கதைக்கேற்ப இறங்கி வரமுடிகிறது. தங்களை அத்தகைய பாத்திரங்களிற்கேற்ப மாற்றிக்கொள்ள முடிகிறது. எனவேதான் மலையாளத் திரைப்படங்கள் காலத்துக்காலம் நெருக்கடிகளைச் சந்தித்தாலும் தொடர்ந்தும் தன்னைப் புதுப்புத்துக்கொள்ள முடிகிறது. தமிழ்ச்சூழலோடு ஒப்பிடும்போது மிகச்சிறிய பார்வையாளர்களைக் கொண்டிருந்தாலும் வணிக நெருக்கடியென போலிக் காரண்ங்கள் கூறிச் சிக்கிக்கொள்ளாது மீண்டும் மீண்டும் தன்னை உயிர்ப்பித்தபடி இருக்கிறது.

பாலாவினால் 'நடிகர்'களாக்கப்பட்டு, மாற்றத்தை ஏதேனும் ஒருவகையில் தமிழ்ச்சூழலிற்குக் கொணர்வார்களென நம்பப்பட்ட விக்ரமோ, சூர்யாவோ இன்று நிற்கும் திசையைப் பார்க்கும்போது நமது அவலம் புரியும். மலையாளச் சூழலில் ஃபகத் பாசில் போன்ற ஒருவருக்கு நிகராகக் காட்டக்கூடிய ஒருவர் கூட நம்மிடையே இல்லை என்பதையிட்டு வெட்கப்பட வேண்டியவர்களாக இருக்கிறோம்.


Gods in Print: Masterpieces of India's Mythological Art (by Richardh Davis)

கொஞ்சக் காலம் முன்பு ரொறொண்டோவில் புத்தக சாலையிற்குச் சென்றபோது இந்நூலைக் கண்டு வாங்கியிருந்தேன். அழகான வர்ணப்படங்களுடன் வரலாற்றுப் பின்னணியுடன் இந்நூல் தொகுக்கப்பட்டிருக்கின்றது. எப்படி கடவுள் படங்கள் முதன்முதலாக அச்சு ஊடகங்களிற்கு வருகின்றது, எந்த ஓவியர்கள் நாம் இன்று வணங்கும் கடவுளரிற்கு உருவங்களைக் கொடுத்தார்கள் என்பதை காலனித்துவக் காலத்திலிருந்து இதில் காட்சிப்படுத்துகின்றார்கள். அசல் ஓவியங்களின் கையெழுத்துப் பிரதிகளுடன் அவற்றைப் பக்கம் பக்கமாய்ப் பார்க்கும்போது சிலிர்ப்பாயிருந்தது.

மேலும் நாமின்று பார்க்கும் கடவுளரின் ஓவியங்கள் , எவ்வாறாக காலவோட்டத்தில் மாற்றமடைகிறது என்பதை அறிய/பார்க்கக் கிடைத்தது வித்தியாசமான அனுபவம் (சரஸ்வதி ஆரம்பகாலத்தில் வைத்திருக்கும் வீணை/இன்று நாம் பார்க்கும் வீணை. தாமரைப் பூவில் இல்லாத சரஸ்வதி/லக்சுமி ஓவியங்கள்). அதுவும் அச்சு ஊடகங்கள் மேற்கிலிருந்த காலத்தில், எப்படி ஜேர்மனியில் வைத்து அச்சிட்டப்போது அங்கிருந்த ஓவியர்கள் அவர்களுக்குத் தெரிந்த பின்னணியில் கடவுளரை வரைந்தார்கள் என்பது இன்னும் சுவாரசியமானது.

கிருஸ்ணனும் ராதாவும் மேற்கின் கோட்டைகளுக்கு முன்னும், கிருஸ்ணன் கோபியர்கள் குளிக்கும்போது ஆடைகளைக் களவாடிச்சென்று விளையாடுவதையும் மேற்கத்தைய மனம் எப்படிக் கற்பனை செய்திருக்கிறது என்பதை அறிவது.... தஞ்சாவூர் ஓவியக்கலையை கற்றுச் சென்ற ரவி/ராஜா வர்மா சகோதரர்கள் எப்படி தம் ஓவியங்களின் மூலம் அச்சுப்பொறியை தமக்குச் சொந்தமாய் வாங்கும்வரை புகழின் உச்சத்துக்குச் சென்றார்கள் என்பதையும், பிறகு எப்படி அதை தாம் வேலைக்கு அமர்த்தியிருந்த ஜேர்மனியருக்கு விற்றதையும், அந்த ஜேர்மன்காரர் தொடர்ந்து ரவி வர்மாவின் ஓவியங்களின் உரிமையை வாங்கி தன் அச்சுக்கூடம் 1970(1980?) தீயில் எரியும்வரை அச்சிட்டாரென பல விடயங்களின் வரலாற்றை வர்ணப்படங்களினூடாக அறியக்கூடியதாய் இருந்தது.

இத்தொகுப்பிற்கு முன்னுரை எழுதியவர் 1960 களிலிருந்தே இந்தியாவிற்கு -முக்கியமாய் தமிழகத்திற்கு- அடிக்கடி பயணித்துக்கொண்டிருப்பவர். அவர் எப்படி தான் மதுரை மீனாட்சி கோயிலுக்குப் போனார் என்பதையும் அங்கே உள்மாடத்திலிருந்த சிறுகடையொன்றில் கடவுளரின் படம் வாங்கத்தொடங்கி அந்தக் கடைக்காரரினூடாக கடவுளரின் கதைகளை அறிந்ததையும், தமிழகத்துக் கடைகள் எங்கினும் (ஓட்டோக்களில் கூட) கடவுள் படங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என விரிவாக எழுதியிருப்பதை வாசிப்பது சுவாரசியமானது.

இந்த ஓவியங்களில் தெறிக்கும் அழகை விட, ஒவ்வொரு படங்களும் வரையப்பட்ட மாந்தீரிகத்தன்மைதான் இன்னுமின்னும் ஈர்த்துக்கொண்டேயிக்கிறது.

கோணங்கியை பின்னிரவில் வாசித்தல்

Monday, April 28, 2014

சில படைப்பாளிகளை விரிவாக வாசிக்காது, சும்மா சந்தித்துப் பேசும்போது சொல்லப்படும் சில வரிகளை மட்டும் கொண்டு அந்தப்படைப்பாளிகள் பலரால் மதிப்பிடப்படுகிறார்கள். ஆழமான வாசிப்பில்லாது இவ்வாறு 'கதை'களைக் காவிக்கொண்டு திரிவது தமிழ்ச்சூழலின் அவலம் என யாரோ எழுதியது நினைவிலுண்டு. கோணங்கியின் 'சலூன் நாற்காலியில் சுழன்றபடி'யை ஏற்கனவே வாசித்தபோதும், தவறவிட்ட சில கதைகளுக்காய் மீண்டும் வாசிக்கத் தொடங்கியபோது கோணங்கியும் அவ்வாறு அரைகுறையான 'பேச்சுக்காவி'களால் தவறாக மதிப்பிடப்படுகின்றார் எனவே தோன்றுகின்றது. இந்த தொகுப்பிலிருக்கும் 70 கதைகளில் ஆகக்குறைந்தது 45 கதைகளை மிக எளிதாக வாசித்துவிடமுடியும். மிகுதிக்கதைகளுக்கு வேண்டுமென்றால் 'புரியாத மொழியில் எழுதுகிறார்' என்ற விமர்சனத்தை ஒரு பொருட்டாகக் கொள்ளலாம். ஆனால் கோணங்கியின் கதைகளின் மொழி எவ்வாறு மாற்றமடைந்து போகிறது என்பதற்கு இந்நூலை முன்வைத்து நல்லதொரு விமர்சனத்தை ஒருவர் வைக்கலாம் (நான் அவரின் நாவல்களை இங்கே சேர்க்கவில்லை).

கதைகளிலும் கவிதைகளிலும் என்னை ஒருகாலத்தில் அதிகம் வசீகரித்த படைப்பாளிகள் ரமேஷ்-பிரேம். ஆனால் இன்றும் என்னால் அவர்களின் தொடக்ககால படைப்பான 'அதீதனின் இதிகாசத்தை' முழுமையாக வாசிக்க முடியாமற்றானிருக்கிறது.  அதில் ஐந்தாறு பக்கங்களை வாசித்தவுடனேயே எங்கையோ தொலைந்துவிடுபவனாக ஆகிவிடுகின்றேன். ஆக, ரமேஷ்-பிரேமின் ஆரம்பகால எழுத்துக்களே எனக்கு விளங்கவில்லை என நினைத்து விலத்தியிருந்தால் பிறகு அவர்களை எனக்கு நெருக்கமானவர்களாக  என்றுமே அடையாளங் கண்டிருக்க முடியாது. அது போல 'காவப்படும் கதைகளை' மட்டும் கவனத்தில் எடுத்திருந்தால் நான் கோணங்கியையும் தவறவிட்டிருப்பேன். 'மதினிமார்களின் கதை'யையும், 'கொல்லனின் ஆறு பெண்மக்களையும்', 'பொம்மைகள் உடைபடும் நகரத்தையும்' தேடிக்கொண்டிருந்தபோது எனக்கு கிடைத்தவை அவையல்ல, 'பாழி'யும் 'பிதிரா'வும்தான்.  இந்நாவல்களின் பெயர்கள் வசீகரித்த அளவுக்கு, அவற்றின் உள்ளடக்கம் இப்போதைக்கு தொடக்கூடாதென்றளவுக்கு மிகவும் பயமுறுத்தியிருக்கின்றன. அதேவேளை அவை எழுதப்பட்டிருக்கும் மொழியினோடு எனக்கு இன்னும் பரிட்சயம் வரவில்லை என்று நினைத்திருக்கின்றேனோ தவிர எழுதிய ஆசிரியரை 'இப்படி எழுதியிருக்கின்றாரே, நாசமாகப்போக' எனச் சாபம் கொடுக்கவில்லை.

'சொல் என்றொரு சொல்'லும் முதல் சிலமுறை வாசித்தபோது உள்ளிழுக்காதபோதும், சட்டென்று ஒருமுறை இழை இழையாகப் பிரிந்து விளங்க முழு மூச்சாக அதை வாசித்து முடித்திருந்தேன். மேலும் எல்லாமே எப்போதும் விளங்கவேண்டும் என்ற அவசியமிருக்கா என்ன?  நகுலனின் எழுத்துக்களை சுய அலட்டல்கள், உள்ளோளி தரிசனங்கள் இல்லையென்பவர்கள் ரொபர்த்தோ போலானோவின் எழுத்துக்களை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என யோசித்துப் பார்க்கின்றேன். உள்மனத் தரிசனங்களுக்கு இலக்கியத்தில் ஒரிடமிருப்பதுபோல சுய அலட்டல்களுக்கும் ஓர் இடம் கொடுத்தால் என்னதான் குறைந்துவிடப்போகின்றது?

ஒற்றைத்தன்மையான, இறுக்கமான தமக்கான பார்வையினூடாகப் பார்ப்பது மட்டுமே நல்ல இலக்கியங்கள் என்று உரத்துக் கூறுபவர்களை, 'நீங்கள் கூறுவதற்கும் ஓரிடம் உண்டு, ஆனால் அந்த இடம் மற்ற வகைமைகளை உதாசீனப்படுத்துவதால் வருவதால் அல்ல' என்பதையும் அவர்களுக்கு நினைவூட்டிக் கொள்வோம்.  கதைகளில் ஒரு தெளிவான 'கதை' இருக்கவேண்டும், முடியும்போது நெற்றிப்பொட்டில் அடித்தால்போல ஒரு முடிவு அமையவேண்டும் என்றெல்லாம் உறுதியாக இருப்பவர்களோடு நாம் நிதானித்து நின்று பதில் சொல்லவேண்டியதுமில்லை (புதுமைப்பித்தனின் கதைகளில் வரும் tragedy  பற்றி மெளனி எழுதியதை இங்கே நினைவுபடுத்தியும் பார்க்கலாம்).

ஆக என்னுடைய வாசிப்பை வைத்துச் சொல்வதென்றால், கோணங்கியைப் பதற்றமின்றி வாசிக்க அவருடைய சிறுகதைகளிலிருந்து தொடங்கலாம். 'சலூன் நாற்காலியில் சுழன்றபடி' இன்னுஞ் சிறப்பான தேர்வாக இருக்கும், எப்படி அவர் இன்று அதிகம் விமர்சிக்கபப்டுகின்ற 'புரியாத மொழியில்' எழுதுகிறார் என்ற புள்ளிக்கு கோணங்கி வந்தடைகின்றார் என்பதையும் கூட அலசி ஆராய்ந்து பார்க்க இத்தொகுப்பு உதவக்கூடும்.

'மஞ்சட்பூத் தெரு' வில ஜி.நாகராஜனும், 'ஆறில்' புதுமைப்பித்தனும், இறந்துவிட்ட பின்னும் ஒலிநாடா ஓடிக்கொண்டிருக்கிறதில்' நகுலனும் வருகிறார்கள். ஆனால் அவர்கள் அண்மையில்  'அறம்' பாடி உன்னதமாக்கப்பட்ட சில எழுத்தாள ஆளுமைகள் (ஆவிகள் எனச்சொல்வதும் சிலவேளைகளில் பொருந்தும்) போல மீள் உருவாக்கம் கொள்ளவில்லை. அவர்களின் பலங்களோடும் பலவீனங்களோடும் கோணங்கியிடமிருந்து வெளிப்படுகின்றார்கள். அதுதான் முக்கியமானது, இது படைப்புக்கான வெளியே தவிர,  சோகம் மேல் சோகமாய், தியாகம் மேல் தியாகமாய், அறம் மேல் அறமாய்.... போதும் போதும் என்றளவிற்கு ஒரு திரைக்கதைக்குரிய கதைகளாக இருக்கமுடியாது. எனெனில் வாழ்க்கை இப்படியென்றுமே அதீதமாய் இருப்பதில்லை என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.

இறுதியில் விமர்சனமாய் கோணங்கியின் படைப்பில் தெரியும் ஒரு விடயத்தையும் கூறியாக வேண்டியிருக்கிறது. நான் வாசித்தவரையில் அசோகமித்ரனின் படைப்புக்களில் கூட அவ்வளவு துருத்திக்கொள்ளாத சுயசாதி அபிமானம் கோணங்கியின் படைப்புக்களில் பிறீட்டு வெளிப்படுகிறது. ஒருவர் தன் சுயசாதி அடையாளத்தை மறைக்கவேண்டிய அவசியமில்லைத்தான். ஆனால் தன் சுயசாதி ஓர் ஒடுக்குகின்ற சாதியாக இருக்கின்றபோது அங்கே பெருமிதம் பேசுவதை விட, தன் சாதியின் பெயரால் பிறரை ஒடுக்குவதை பதிவுசெய்வதை, தன் சுயசாதியைக் கிண்டல் செய்வதையும் முக்கியமாய்க் கொள்ளவேண்டும்.  அந்த விடயம் கோணங்கியின் கதைகளில் காணாமல் போயிருப்பது என்னளவில் ஏமாற்றமே. சுந்தரராமசாமி நாசூக்காய் மறைத்ததும், அசோகமித்ரன் கண்டும் காணாததுமாய் விட்டதும், ஆனால் ஆதவன் நக்கல் செய்ததும், கிருத்திகா 'வானேஸ்வரத்திலும்', கரிச்சான் குஞ்சு 'பசித்த மானுடத்திலும்' தாம் வந்த சாதிகளைக் கிழிகிழியென்று கிழித்துமிருக்கின்றார்கள் என்பது ஒரு நினைவூட்டலுக்கு.

'அடே...அப்பிச்சி....உன் தாத்தனுக்காக இருக்கவேண்டாமய்யா... நீ போய்யா, நல்லா இருப்ப, இன்னாரு பேரன். சுப்பையாத் தேவன் பேரன்னு பேரெடுத்துப்பாப் போதுமுடா. நாங்க மண்ணுக்குள்ள போறாமுடா' என 'அப்பாவின் குகையில் இருக்கிறேனில்' சொல்வதை ஓர் உணர்ச்சித்தளத்தில் வைத்துப் பார்க்காலாந்தான். ஆனால் அதற்கப்பால் தலைமுறைக்குள்ளால் தன் சுயசாதிப் பெருமிதங்களைக் கடத்தும் சாமர்த்தியங்கள் இதில் இருக்கிறதெனவும் வாசிக்கலாம். 'தேவர்கள் நிறையக்கதைகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் வருகிறார்கள். ஆகவே தான் கோணங்கி 'உங்கள் உப்புக்கத்தியில் மறையும் சிறுத்தை'யும் தேவர் சாதிச் சிறுத்தைதானோ என சந்தேகிக்கவும் வேண்டியிருக்கிறது என அவருக்குச் சொல்லவும் வேண்டியிருக்கிறது. இதற்கப்பாலும் 'சிறுத்தையின் உடல் புள்ளிகள் பிரபஞ்சத்தின் ஆயிரம் கண்களாகத் திறந்து வைலட் கற்களை உமிழ்ந்து கொண்டிருக்கும் தீரவே தீராமல் ' (உப்புக்கத்தியில் மறையும் சிறுத்தை) போர்ஹேயின் புலி போலும் எனச் சமாதானம் செய்துகொள்ள முயல்கிறேன்.

(ஒக்ரோபர் 01, 2011, 1.36 a.m.)

இரண்டு நண்பர்கள்

Friday, April 18, 2014

ன்னும் கொஞ்ச நாட்களில் இலையுதிர்காலம் தொடங்கிவிடும். பொழியத்தொடங்கும் மழையுடன்  மெல்ல மெல்லமாய் குளிர் பரவுவதும் நம்மையறியாமலே நிகழ்ந்துவிடும். இங்குள்ள காலங்களில் எனக்குப் பிடித்த பருவம் என்றால் இலையுதிர்காலந்தான் என்று அடிக்கடி எழுதிவிட்டேன். மரங்கள் மஞ்சளாறு (கடல்புறாவில் வரும் மஞ்சளகியல்ல) போல நகர்வதையும், சட்டென்று தீப்பிடித்து எரியும் காடுகள் ஆவதையும், பின்னர் அனைத்தும் உதிர்ந்து சாம்பல் வர்ணமாவதையும் பார்த்த எவருக்கும் இந்தப் பருவம் பிடித்துவிடும். ஆனால் அதேசமயம் இலைகள் எல்லாம் உதிர்ந்து போகுமொருகால், மனதில் பரவும் வெறுமையும் சொல்லிமாளாது. எல்லாமுமே வாழ்க்கையில் இயல்பு என இயற்கையைவிட நமக்கு வேறு யார்தான் கற்றுத்தரமுடியும்?

என்னால் ஒரளவுக்கு நினைவுகொள்ளக்கூடிய இருபத்தாறு காதல் சம்பவங்களில் (இதை அறியாதவர்கள், வாசிக்க 'கம்பராமாயணம் படித்த கதை') அநேகமாய் நான் காதல்வயப்பட்டதும் இவ்வாறான இலையுதிர்காலங்களில் அல்லது குளிர்காலங்களில் என்பது தற்செயலானதுமல்ல. வெளியே சூரியனை அவ்வளவு எளிதாய்க் காணமுடியாக் காலம், மனதுக்கு ஒரு வெதுவெதுப்பைத் தந்துவிடுகின்றது. ஆகவே மனிதர்களை இன்னுமின்னும் நேசிக்க மனம் அவாவத் தொடங்குகின்றது. இந்த இருபத்தாறு சம்பவங்களில் வரக்கூடிய - நீங்கள் கேலியாய்ச் சிரிக்கக்கூடுவீர்களென்றாலும்- அஸினோடு காதல் வயப்பட்டதும் இப்படியான ஒரு தருணமாய்த்தான் இருக்கவேண்டும். கைக்கிளைக் காதலாய் இருந்தாலும், மடலேறும்படி அஸின் வற்புறுத்தமாட்டார் என்பது எவ்வளவு நிம்மதியைத் தருகின்றது. ஆக காதலில் வீழ்வது மட்டும் முக்கியமில்லை, நம்மை காதலின் பொருட்டு அவர்கள் காவு கொடுக்கமாட்டார்கள் என்று அறிந்துகொள்வதும் நம் ஆயுளை நீட்டிக்கும் ஒரு வழி என்க.

இலையுதிர்க்காலம் கதகதப்பானது என்றாலும் நான் இப்போது அதன் அழகைப்பற்றியல்ல பேசப்போகின்றேன். இலைகள் உதிர்வதைப் போல இந்த இலையுதிர்க்காலத்தில் - முக்கியமாய் செப்ரெம்பரில்- என்றென்றைக்குமாய் இழந்துபோன நண்பர்களைப் பற்றிச் சொல்லப்போகின்றேன். ஆகவே துயரங்களை கேட்கப் பிடிக்காதவர்கள் இந்த இடத்திலிருந்து நகர்ந்துவிடலாம். ஓர் இரவு இப்படி வீணாயிற்றேயென நீங்கள் பிறகு யோசிக்கக்கூடாது.

எத்தனை விதம் விதமான கனவுகள் மட்டுமில்லை நினைவுகள் கூட நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்றன. அதுவும் சிறுவயது நினைவுகள் என்பது அவ்வளவு எளிதில் மறந்து போய்விடமாட்டாது. அவ்வாறு என் சிறுவயதுகளில் ஒன்றாய்ப் படித்த நண்பனை இந்த மாதமொன்றில்தான் ஒரு விபத்தில் இழந்திருக்கின்றேன். நாம் ஒரே ஊரில் ஓரே பாடசாலையில் படித்தவர்கள் என்பதால் நிறைய நினைவுகள் அவனைப் பற்றி எனக்கிருக்கிறது. கனடாவிற்கு நாமிருவரும் வெவ்வேறு காலங்களில் வந்திருந்ததால் -முன்னர் ஈழத்தில் இருந்த அதே நட்புத்தொடர்பாடல் இல்லாவிட்டாலும் அவனது இழப்பு என்னைப் பாதித்த ஒன்று. இங்கே கனடா வந்ததன்பிறகு முதன்முதலில் அவனைச் சந்தித்தபோது நான் ரஹ்மானை விரும்பிக்கேட்கிறேன் என்பதற்காய் அவன் தான் வாங்கி வைத்திருந்த 'லவ் பேர்ட்ஸ்' பாடல்கள் அடங்கிய கஸற்றைத் தந்திருக்கின்றான். நிறையக் காலம் அதை பத்திரப்படுத்தி கனடா வந்ததன் நினைவாய் வைத்திருந்திருக்கின்றேன்.

அப்படி நினைவுகொள்ளக்கூடிய இன்னொரு டேப் என்றால், 'ஆசை' படப்பாடல்கள். கொழும்பில் இருந்த தோழிகள் நீ நிச்சயம் கேட்கவேண்டுமென உசுப்பேற்ற ஏதோ ஒருகடையில் காவல் நின்று அந்தப்பாடல்களைப் பதிவுசெய்துகொண்டு வந்து வெள்ளவத்தை ஸ்ரேசன் ரோட்டில் தங்கியிருந்த வீட்டில் கேட்டிருக்கின்றேன். அதுவும் குறிப்பாய் 'கொஞ்சநாள் பொறு தலைவா' வை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்பதும் நினைவில் இல்லை. அந்தப் பாடலை திரும்பத் திரும்பச் சுழல வைத்து, ஏதோ கூரையைப் பிய்த்துக்கொண்டு காதலி வந்துவிடுவார் என நான் ஏகாந்தமாய்க் கூரையைப் பார்த்துக் கொடுத்த போஸை பதிவுசெய்திருந்தால் ஒரு  நல்ல குறும்படம் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு கிடைத்திருக்கும். கனடாவிற்கு விமானம் ஏறியபோது கூட என்னுடைய இலட்சியங்களில் ஒன்றாய், வந்து இறங்கியவுடன் 'ஆசை' படம் பார்ப்பதும் இருந்திருக்கிறது. ஆனால் ராகுவிற்கும் கேதுவிற்கும் உள்ள உறவைப் போல பாடல்களுக்கும் அஜித்தின் ஆடலிற்கும் இருக்கும் தொடர்பைப் பற்றி நாமெல்லோரும் அறிவோம் என்பதால் மேலே எதும் கூறத்தேவையில்லை.

நண்பன் விபத்தில் மோசமாய்ச் சிக்கி கோமாவிற்குள் இருந்தாலும் எப்படியும் தப்பிவிடுவான் என நம்பிக்கொண்டிருந்தேன். தமிழ்த்திரைப்பட விழாவில்  critic award  கொடுப்பதற்காய் நடுவர்களில் ஒருவராய்ப் படங்களை அரங்கில் பார்த்துக்கொண்டிருந்தபோது நண்பன் என்றென்றைக்குமாய் எங்களை விட்டுப்போய்விட்டான் என்ற செய்தி வந்தது. என் வயதொத்த அவனின் இழப்பென்பது, எனக்கு முன்னும் மரணம் அருகில் நின்றுகொண்டிருக்கின்றது என்பதை நினைவுபடுத்த வந்த அச்சம் சொல்லிமாளாது. எப்போதும் நிகழலாம் மரணம், அதற்குள் உனக்குப் பிரியமானவர்களுடன் நேசத்துடன் இரு என நண்பன் சொல்லாமற் சொல்லிச் சென்றிருந்தான்.

அவனை நினைத்துத்தான்.... 'அகாலம்' என்ற கவிதையை எழுதினேன்.

நாள்குறிக்கப்பட்ட மரணத்தை
எப்படியெதிர்கொள்வதென
மழையுமிருளும் மூர்க்கமாய்ப்போரிடுகையில்
பூங்கா இருக்கையிலமர்ந்து யோசிக்குமொருவன்
நடக்கத்தொடங்குகின்றான் நூலகவாசலைநோக்கி
எல்லாப் புத்தகங்களும்
மரணம் நிகழ்வதற்கான சாத்தியங்களை எதிர்வுகூறுகின்றதே தவிர
இழப்பை ஆற்றுவதற்கான கதவுகளை
இறுக்கச்சாத்தியிருக்கும் சலிப்பில் புரட்டத்தொடங்குகின்றான்
தற்கொலைகளால் நிரப்பப்பட்ட தொகுப்பை.
சில்வியா பிளாத்தின் கவிதையோடு
விரியுமொரு தாளில்
உலர்ந்துபோய்க்கிடந்த பெயர்தெரியாப்பூச்சியொன்றை
இவன் உற்றுநோக்கியபொழுதில்தான்
நண்பனின் வாசனை உதிர்ந்திருக்கவேண்டும்
தனிமை இருகரங்கொண்டு தோளிலழுத்த
துயரினில் மூழ்கி விறைத்துக்கொண்டிருக்கும் இரவை
சிறுவனாயிருப்பின்
அம்மாவின் முதுகின்பின் முடங்கிப்படுத்தாவதுகடந்துபோயிருக்கலாம்
'என்னைவிட்டுபோயிட்டானடா' எனஆஸ்பத்திரி ப்ளோரில்
பதறியோடிவந்து விரல்நடுங்கும் காதலிக்கு
ஆறுதல்கூற வார்த்தையில்லா மொழியின் வெறுமை
மூளை சிதைந்து
வடிந்துகொண்டிருந்த நண்பனின் குருதியாய்
இவனில் பரவ
கள்ளிச்செடிகளில் தேன்குடித்து
பூவிலமர்ந்த தும்பிகளை
துரத்தியோடிய சிறுவயதுநினைவுகள்
சட்டமிட்ட ஓவியமாய் உறைந்துபோகின்றது.

ஊருமில்லை; பால்யம் விரிந்த ஒழுங்கைகளுமில்லை;
இனி நீயுமில்லை.

-------------

ப்படி ஒரு செப்ரெம்பரில் இன்னொரு நண்பனின் இழப்பும் நிகழ்ந்தது. நண்பரொருவரின் உறவினரை வைத்தியசாலைக்குப் பார்க்கப் போனபோதுதான் ஈழநாதனின் அகால மரணத்தை அறிய நேர்ந்தது. நம்பவே முடியாத ஒரு மரணமது. அதை உறுதிப்படுத்தும் ஒவ்வொருகணமும் அது ஈழநாதனாய் இருக்கக்கூடாதென மனம் சொல்லிக்கொண்டிருந்தது. ஆம், நண்பர்களே இறுதியில் முப்பது வயதுகளிலே நம் அருமையான நண்பனை நாமிழந்தோம்.2005/2006 காலப்பகுதியை என் வலைப்பதிவுகளில் உற்சாகமானதும் மறக்கமுடியாததுமான காலம் என நினைத்துக்கொள்வதுண்டு. தீவிர வாசிப்பில் அக்கறையும் அதேசமயம் நகைச்சுவையாகவும் உரையாடக்கூடிய அற்புதமான பல நண்பர்களைக் கண்டெடுத்திருக்கின்றேன். ரொறொண்டாவில் வலைப்பதிவு சந்திப்பு, அதன் நீட்சியில் அமெரிக்காவில் பெயரிலி என்கின்ற இரமணியைச் சந்தித்து அங்கு கார்த்திக், சுந்தரவடிவேல் போன்றவர்கள் வந்ததென உண்மையிலேயே அழகிய வலைப்பதிவுக்காலமேதான். இந்த நண்பர்களின் உற்சாகமே எனது முதற்கவிதைத் தொகுப்பான 'நாடற்றவனின் குறிப்புகள்' அச்சிடுவதற்கு உந்துசக்தியாகவும் இருந்துமிருக்கின்றது.

ஈழநாதனின் வலைப்பதிவை ஏற்கனவே வாசித்திருந்தாலும், ஈழநாதனை மதிதான் முறையாக எனக்கு அறிமுகப்படுத்தியிருக்கவேண்டும். அவரையும் என்னைப் போலவே வீட்டில் 'இளங்கோ' என்றழைப்பார்கள் என்பது இன்னும்  நெருக்கத்தைத் தந்திருந்தது. அவர் சேகரித்த/சேகரிக்க விரும்புகின்ற புத்தகங்கள்/திரைப்படங்களின் பட்டியலை பகிர்ந்துகொள்வதுவரை நட்பு நீண்டிருக்கின்றது.கடந்தகாலத்து என் பதிவுகளில் ஈழநாதன் எழுதியிருக்கும் பின்னூட்டங்களை வாசிக்கும் ஒவ்வொரு பொழுதும் அவரின் நினைவுகள் எனக்குள் வழிந்து பதற்றத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன. மைக்கல் ஒண்டாச்சியில் எனக்கு பெருவிருப்பு இருப்பதை அறிந்த ஈழநாதன் ஓரிடத்தில் இப்படி எழுதியிருப்பார் 'மைக்கல் ஒண்டாச்சி புத்தகம் எழுதினால் அதுக்கு டிசே விமர்சனம் எழுதுவார் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது.' அவ்வளவுக்கு என்னைக் கூர்ந்து கவனித்த ஒரு நண்பர்.

நூலகம் என்ற மாபெரும் கனவுத்திட்டத்தின் முதற்பங்களிப்பார்களில் ஒருவர் மட்டுமில்லை பல விடயங்களைச் செய்ய கனவுகள் கொண்டிருந்தவர் என்பதை அவரின் மறைவின்போது நண்பர்கள் எழுதிய பதிவுகள் சாட்சி சொல்கின்றன.இன்று ஈழநாதன் இல்லாது ஒரு வருடம் கழிகின்றபோதும் அவர் இன்றில்லையென்பதை நம்பவே மனம் மறுக்கிறது. எத்தனை மனிதர்களை நம் வாழ்வில் சந்திக்கின்றோம், ஆனால் சிலர் மட்டும் நம்மில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றார்கள்  ஏன் என்பதை நம்மால் அவ்வளவு எளிதில் அறிந்துகொள்ளமுடிவதில்லை. இத்தனைக்கும் ஈழநாதனை நான் நேரில் ஒருமுறை சந்தித்ததோ அல்லது தொலைபேசியில் கூட உரையாடியதோதில்லை. ஆனால் ஏன் அவரின் இழப்பு எனக்குள் பெரும் வெற்றிடத்தை உருவாக்கிறதெனத் தெரியவில்லை.

சிலவேளைகளில் என்னைப் போல விருப்புக்களும், கனவுகளும் கொண்ட ஒருவர்தான் ஈழநாதன் என்பதால்தானோ தெரியவில்லை. அவரின் இழப்பு, என் கனவுகளும் கூட சட்டென்று ஓரிடத்தில் அரைகுறையாக முடிந்துவிடக்கூடுமென்பதைத்தான் நினைவுபடுத்துகிறதோ நானறியேன்.

இலையுதிர்க்காலம் மரங்கள் உதிர்கின்றபோது பெரும் வெறுமை மனதில் தோன்றினாலும், அவை இன்னொருபொழுதில் துளிர்க்கும் என நம்பிக்கை கொள்ள முடிகிறது. ஆனால் மனிதர்கள் உதிர்ந்துபோகின்றபோது அவர்களின் நினைவுகள் மட்டுமே நம்மில் எஞ்சுகின்றன. அதைவிட என் சிறுவயது நண்பனுக்கோ அல்லது ஈழநாதனுக்கோ நான் உங்கள் மீது இவ்வளவு நேசத்துடன் இருந்திருக்கின்றேன் என்று அவர்கள் உயிருடன் இருந்த காலங்களில் சொல்லமுடியாமற்போய்விட்டதே என்ற குறுகுறுப்பு நெஞ்செங்கும் பரவவுதைத் தவிர்க்கவும் முடியவில்லை. இந்த வாழ்க்கையின் அர்த்தம் என்னவென்றுதானே நாமெல்லோரும் தேடிக்கொண்டிருக்கின்றோம். என்றைக்கோ ஒருநாள் நாமெல்லோரும் இந்த இலைகளைப் போல சலனமற்று உதிர்ந்து போகப்போகின்றோம் என்பது தெரிந்தாலும், ஏன் இழப்புக்கள் இவ்வளவு துயருடையதாக இருக்கின்றது. அவற்றை அவ்வளவு எளிதாய்க் கடந்துபோக முடியாதிருக்கின்றது? நாம் என்றுமே பிறர் மீது பிரியம் வைக்க ஆசைப்படும் எளிய மனிதர்கள் போலும். அதுவே நம்மைக் கதகதப்பாக்கி வாழ்வை சலிப்பின்றி வாழ வைக்கும்  என்று நினைப்பவர்கள் போலும். ஆகவேதான் நாம் பிரியம் வைக்கும் மனிதர்கள் இல்லாமற்போகும்போது நம்மில் ஒருபகுதியை இழப்பதாய் உணர்கிறோம் போலும்.

ஆளுமைகள் மறையும் போதுமட்டுமல்ல 'காற்றில் கலந்த பேரோசை' . நமக்குப் பிடித்தமான பிரியமான மனிதர்கள் கரைந்துபோகும்போது அது கூட நமக்குக் 'காற்றில் கலந்த பேரோசை'தான் அல்லவா?

(Sep,17, ,2013)

தமிழ்ப் பெண்புலி (Tamil Tigress)

Saturday, April 12, 2014


ருவர் ஈழத்தில் இயக்கமொன்றில் இணைந்து போராடியதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்திருக்கலாம். முக்கியமாய் போர் உக்கிரமாய் நடைபெறும் பிரதேசங்களில் -போராடத்தில் இணைந்துகொள்ள- புறக்காரணிகள் இன்னும் அதிக நெருக்கடிகளைக் கொடுக்குமென்பதை நாமனைவரும் அறிவோம். எமது இயக்கங்களில் பலர் பெருந்தொகையாய்ச் சேர 1974 உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுச் சம்பவமும், 81 யாழ் நூலக எரிப்பும், 83 ஜூலைக் கலவரமும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவையாகும். ஆனால் யாழ் சமூகத்தில் அவ்வளவு ஒட்டமுடியாத மற்றும் உயரதரவர்க்கத்தைச் சேர்ந்த ஒருவர் ஏன் இயக்கத்தில் இணைந்து கொள்கிறார் என்பது நம் போராட்ட வரலாற்றைக் கற்றுக் கொள்வோருக்குச் சற்று வியப்பாக இருக்கலாம் தமிழ் பெண் புலி(Tamil Tigress) என்கின்ற நினைவுகளின் தொகுப்பை எழுதிய நிரோமி தன்னை மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவராய்க் கூறிக்கொண்டாலும், அவர் விபரிக்கும் யாழ்ப்பாண வாழ்க்கையை வைத்து, அவர் யாழின் உயரதர வர்க்கத்தைச் சேர்ந்தவரென எவரும் எளிதாக அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

போரின் நிமித்தம் மூடுண்ட பிரதேசங்களில் பிறந்து வளர்ந்த தலைமுறையில் அநேகர் போரன்றி வேறு வாழ்வில்லையெனவே நம்பிக் கொண்டிருந்திருப்பார்கள்.  அவர்கள் ஒவ்வொரு நாளும் போருக்குள்ளிலிருந்து எப்பிடித் தப்புவதென்பதைப் பற்றியே நிறைய யோசித்தபடி நாட்களைக் கழித்துமிருக்கவும் கூடும்.. ஆனால் நிரோமி மலையகத்தில் -நோர்ட்டன் பிரிஜ்டில்- வாழ்ந்தபோது அவர் நெருங்கிப் பழகியது சிங்கள மற்றும் பறங்கிய சமூகங்களுடனாகும். மேலும் அவர் சிங்கள் இராணுவ முற்றுகையோ ஆதிக்கமோ அவ்வளவு இல்லாத பகுதியில் வாழ்ந்தும் இருக்கின்றார். அதாவது அவரது சிறுபராயம் அவ்வளவு பதற்றமில்லாத சூழலிலேயே கழிந்திருக்கின்றது என்பதை நாமறிய முடியும் என்பதோடு -பலருக்கு வாய்க்காத- பல்லினச் சமூகங்களோடு வாழும் சூழ்நிலையும் அவருக்கு வாய்த்திருக்கின்றது. அப்படியெனில் ஏன் நிரோமி பிற்காலத்தில் இயக்கத்தில் சேருகின்றார்?

உண்மையில் நமது இயக்கங்களின் வரலாற்றை இன்று அலசுவோர் இலங்கையில் இனங்களுக்கிடையிலான ஓடுக்குமுறை என்பது வடக்கு கிழக்கு தமிழ் மக்களினது பிரச்சினை மட்டுமே என்பதோடு அநேகம் சுருக்கிவிடுவர். அதிலும் முக்கியமாய் இன்றையகாலத்தில் இலங்கை அரசு சார்பாய் இயங்க விழைவோர் இன்னும் குறுக்கி யாழ்ப்பாணியத்தின் பிரச்சினையென எளிய சூத்திரமாக்கி விடுவர். உண்மையில் இது வடக்கு மற்றும் கிழக்கு மக்களினது பிரச்சினை மட்டுந்தானா?  தமிழ் பேசும் அனைத்துச் சமூகங்களினதும் பிரச்சினை இல்லையா? யாழ்ப்பாணிகள் இந்தப் போராட்டத்தின் திசையை சிதறடித்தார்கள்/வீழ்ச்சியடையச் செய்தார்கள் என்கிற விமர்சனத்தை வேண்டுமானால் நாம் முன்வைக்கலாம். ஆனால் இனப்பிரச்சினையை யாழ்ப்பாணிகளின் பிரச்சினையாக மட்டும் சுருக்கிவிடும்போது பிறரின் போராட்டத்திற்கான வகிபாகத்தை நாம் மறுத்துவிடுபவர்களாய் மாறிவிடும் அபாயமுண்டு. மேலும் யாழ்ப்பாணத்தவர்கள் எதிர்கொண்ட/சந்தித்த பிரச்சினைகளுக்கு ஒரு தனிப்பட்ட வரலாறு இருப்பதுபோல, பிற மாவட்டங்களிலுள்ள மக்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கும் தனித்துவமான வடிவங்கள் இருப்பதையும், அவர்கள் அவற்றைத் தமது சூழலுக்கு ஏற்ப எதிர்கொண்டதையும் நாம் கவனித்தாக வேண்டும்.

மலையகத் தமிழர்கள் பெரும்பான்மை சமூகத்தால் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதைப் பார்க்கையில் நிரோமிக்கு தன் தமிழ் சார்ந்த அடையாளம் நினைவுக்கு வருகின்றது. அதுவரை தன்னையொரு சிறிலங்கரெனவே உணரும் அவர் தன்னையொரு தமிழராகப் பார்க்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்படுகின்றார். மேலும் 1977 கலவரம், தமிழர் என்ற அடையாளத்தை இன்னும் தீவிர அரசியல் சொல்லாடலாக மாற்ற, இலங்கையில் அரசியல் சூழ்நிலைகள் மாற்றமடைகின்றன. 1979ல் நிரோமி மலையகத்திலிருந்து பாதுகாப்பு நிமித்தம் யாழ் நகரை வந்தடைகின்றார்.

.நிரோமியின்  இந்த நினைவுகளின் நூலை (Memoir) வாசிக்கும் ஒருவர்,  நிரோமி என்னும் ஒருவரின் வாழ்வை முன்வைத்து, நமது போராட்டத்தை விளங்கிக்கொள்வது என்பதே எவ்வளவு சிக்கலும் ஆழமும் நிறைந்ததென்பதைப் புரிந்து கொள்ள முடியும். நிரோமியின் வாழ்வை நாம் ஒரு Case Study ஆகச் செய்தால் கூட அது இன்னும் வித்தியாசமான பார்வைகளை நம் போராட்டம் குறித்து தரவும் கூடும். எனெனில் நிரோமி...

(1) தன் சிறுவயதில் பல்லினச்சமூகங்களோடு நெருங்கிப் பழகியவர்
(2) மத்திய(உயர்தர) வர்க்கத்தைச் சேரந்தவர்
(3) சமூகத்தில் இரண்டாம் பாலினத்தவராக -பெண்ணாக- இருப்பவர்
(4) புலிகளில் சேரும்போது புலிகள் தம்மோடு போராடப்போன இயக்கங்களை அழித்தவர்கள் என்பதை ஏலவே அறிகின்றவர்
(5) அதையும் தாண்டி சிங்களப் பேரினவாதத்தோடு போராடி தனித்தமிழீழம் பெறுவதே சுதந்திரத்திற்கான வழியென நினைத்தவர்
(6) எந்த எதிரியோடு போராடவேண்டுமெனப் போனாரோ அதனோடு போராட முடியாது இன்னொரு இராணுவமான இந்தியா இராணுவத்தோடு போராடியவர்
(7) புலிகள் தம் சகோதர இயக்கங்களை அழித்ததை அறிந்தவர் மட்டுமில்லை, புலிகள் இயக்கத்தின் உள்ளே நிகழ்ந்த கொலைகளையும் அறிகின்றவர்
(8) தன்னோடு இயக்கத்தில் சேர்ந்த தன் நெருங்கிய தோழியை தன் கண்முன்னே இந்திய இராணுவத்துடனான மோதலில் பலிகொடுத்ததும் புலிகள் தான் நினைத்துச் சென்ற இயக்கமல்ல என்வும் உணருகின்ற காலகட்டத்தில் இயக்கத்தை விட்டு வெளியேறுகின்றவர்.
(8) புலிகளை விட்டு வெளியேறப்போகின்றார் எனத் துண்டு கொடுத்ததும், புலிகள் நிரோமியை அவரின் பெற்றோரோடு இணையும்வரை அவரைப் பத்திரமாக வைத்துக் கையளிப்பது.

ஆக, நிரோமி என்கின்ற ஒருவர் -அதுவும் புலிகளில் ஒன்றரை வருடத்திற்கும் குறைவாக இருப்பவரின் வாழ்விலிருந்தே நம் போராட்டம் குறித்து எண்ணற்ற கேள்விகள் எழும்போது, அவற்றிற்கான விடைகளைத் தேடுவதென்பதே சிக்கலாக இருக்கும்போது நமது முப்பதாண்டு கால் ஆயுதப் போராட்ட வாழ்க்கையைப் புரிந்துகொள்ள நமது நிறையக் காலம் தேவைப்படும் என்பதை நம்மில் பலர் மறந்துவிடுகின்றோம். ஆகவேதான் எழுந்தமானமாக, நம் தனிப்பட்ட விருப்பு சார்ந்து எழுத விழைகிறோம். அவற்றையே நம் போராட்டத்தின்/இயக்கங்களின் வரலாறு எனவும் தீர்க்கமாய்ச் சொல்லியும் கொள்கிறோம். சிலவேளைகளில் அவ்வாறு சொல்லிக்கொள்வதால் நமது ஆற்றாமையை, காயத்தை, வெறுப்பை நாம் கரைத்து ஆறுதலடையக்கூடும். ஆனால் பலவேளைகளில் அது முடிந்துபோன ஆயுதப் போராட்டம் குறித்த பன்முகப்பார்வைகளைத் தவறவிட்டு, தட்டையாக நகர்ந்துவிடக் கூடிய அபாயமே காணப்படுகிறது.

நிரோமி புலிகளில் சேரப்போகின்ற காலத்திலேயே, இலங்கை இராணுவத்தின் யாழைக் கைப்பற்ற முயல்கின்ற ஓபரேஷ்ன் லிபரேஷன் தொடங்குகின்றது. இலங்கை இராணுவம் நம் ஊர்களுக்குள் புகுந்தால் நம்மைக் கொலை செய்துவிடுவார்கள் என்கிற பயம் மட்டுமில்லை, ஒரு பதின்ம வயதுப் பெண்ணாகவும் நிரோமி இருப்பதால் இராணுவம் பெண்ணுடல் மீது நிக்ழ்த்தப்போகும் வன்முறையும் அவரைப் பயமுறுத்துகின்றது. அத்தோடு இலங்கையில் தமிழர்கள் இரண்டாம் பிரஜைகளாய் தமிழர்கள் நடத்தப்படுவதும், நம் சமூகத்தில் பெண்கள் இரண்டாம்பாலினராக ஒடுக்கப்படுவதும், இயக்கத்தில் சேர நிரோமியை நிர்ப்பந்திக்கின்றன. நிரோமி விபரிக்கின்ற பல சம்பவங்களோடு நாம் நம்மைப் பொருத்திப் பார்க்கவும் முடியும். உதாரணமாக எந்நேரமும் யுத்தத்தால் கொலைகளும், அங்க இழப்புக்களும், இடம்பெயர்வுகளும் நிகழ்ந்துகொண்டிருந்தபோது, எப்படியும் ஒருநாள் இராணுவத்தின் கரங்களினால் சாகத்தான் போகின்றோம், ஆகவே இப்படி வீணாய்ச் சாவதைவிட இயக்கத்தில் சேர்ந்து கொஞ்ச இராணுவத்தைக் கொன்றுவிட்டு செத்தால்தான் என்ன என நம்மில் பலர் ஒருகாலத்தில் யோசித்திருப்போம். நிரோமியும் இப்படி யோசிப்பதை பல இடங்களில் எழுதிச் செல்கின்றார். வேறெந்த வெளியுலத் தொடர்புமில்லாது, போருக்குள் வாழ்ந்தவர்களுக்கு இப்படியான உளவியல்நிலைதான் இயல்பென்பதை நாமறியாததுமல்ல.

இவ்வாறாகத்தான் ஒரு தலைமுறை புலிகளை - பேரினவாதத்திற்கெதிராகப் போராடும்-  ஒரேயொரு இயக்கமாக நினைத்துக்கொண்டது.  தன்னை அந்த இயக்கத்திற்காய் -எவ்வித விமர்சனமுமின்றி- முழுமையாக அர்ப்பணித்தும் கொண்டது. ஆகவேதான் புலிகள் எவ்வளவு மூர்க்கமான இயக்கமாயிருந்தாலும் - தாம் நம்பிய கொள்கைகளுக்காய் அர்ப்பணித்துக்கொண்ட பல்லாயிரக்கணக்கான போராளிகளால்தான் - புலிகளால் இவ்வளவு காலத்திற்கு நீண்டகாலத்திற்கு  நின்று தாக்குப் பிடித்திருக்கவும் முடிந்திருக்கின்றது. அதை நிரோமி புலிகளின் யாழ் மாவட்ட அரசியல் பொறுப்பாளராயிருந்த திலீபன், அன்றையகால புலிகளின் மாணவர் அமைப்பின்  தலைவராய் இருந்த முரளி போன்றவர்களுடான தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும்போது நம்மால் விளங்கிக்கொள்ள முடிகின்றது. 

மென்மையானவர்களாகவும், எல்லோர் மீதும் அக்கறையுள்ளவர்களாகவும், தாம் சொல்வதைச் செவிமடுப்பவர்களாகவும் இவர்களைப்பற்றி  (இன்னுஞ் சிலர் செங்கமலன்)  நிரோமி கூறும்போது புலிகளின் ஆன்மா என்பது இவர்களைப் போன்ற போராளிகளின் உண்மையான அர்ப்பணிப்புக்களால்தான் கட்டியெழுப்பட்டது என்கின்ற புரிதலுக்கு வந்திருப்போம்.

நிரோமியும் அவரின் நீண்டகால பள்ளித்தோழியான அஜந்தியும் இயக்கத்தில் இணைய முரளியின் காரியாலத்திற்குப் போகும்போது முரளி அவர்களை இணைத்துக்கொள்ள மறுக்கின்றார். இவர்களின் பிடிவாதத்தைக் கண்டு, திலீபனை வோக்கியில் அழைத்து அவருடன் நேரடியாகப் பேச வைக்கின்றார். திலீபன் இவர்களிடம், 'வெளியே நீங்கள் பார்க்கும் இயக்கமல்ல புலிகள், உள்ளே வேறுவிதமானது' என எச்சரிக்கின்றார். அந்த எச்சரிக்கையைப் பல்வேறு விதமாய் நிரோமி புலிகளுக்குள் இருந்த காலங்களில் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துவதை இந்நூலை வாசிக்கும்போது நாம் அறிந்துகொள்ளலாம்.

நிரோமியின் இந்த நினைவுகளின் பிரதியை முக்கியமாகக் கொள்வதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. இதில் இதுவரை அவ்வளவாய்ப் பதியப்படாத, இயக்கங்களில் பெண்கள் முதன் முதலாய்ச் சேருகின்ற காலகட்டம் விபரமாய்ப் பதிவு செய்யப்படுகின்றது. என்னைப் போன்றவர்கள் பதினமங்களில் இருந்தபோது, ஆண்களைப் போல பெண்களும் இயக்கத்தில் சேருவது ஒரு இயல்பான விடயமாய் இருந்திருக்கின்றது. இதில் பெண்கள் இயக்கத்தில் தொடக்ககா லங்களில் சேரும்போது அவர்கள் பெண்களாய் இருப்பதால் அவர்களுக்கு தம் உடல் சார்ந்தும் புறவெளி சார்ந்தும்  இருக்கின்ற சிக்கல்களை அறிந்து கொள்ள முடிகிறது. நிரோமி போன்ற பெண்கள் மீது சக ஆண்களுக்கு வருகின்ற காதலிலிருந்து, சகோதர வாஞ்சையோடு அவர்களைப் போராட்டக் களங்களிலிருந்து காப்பாற்றுகின்ற நிலைமை வரை  பல விடயங்கள் இதில் வாசிக்கக் கிடைக்கின்றது.

நிரோமி புலிகள் இயக்கத்தில் இருந்த அனுபவங்களைச் சொல்லும்போது சற்று மிகையானதோ என்று தோன்றக்கூடிய சில இடங்களும் இருக்கத்தான் செய்கின்றது. சிலவேளை இன்னொருவிதமாய் அது புலிகளின் -முக்கியமாய் பெண்புலிகளின் - தொடக்ககால கட்டமாய் இருப்பதால் அப்படியிருந்திருக்கவும் கூடும். நிரோமியின் பதிவுகளை வாசிக்கும்போது அநேகமாய் ஈழத்தில் வைத்து முதன்முதலாய் ஆயுதப்பயிற்சி  கொடுக்கப்பட்ட பெண்களின் அணியில் அவர் இருந்திருக்கூடுமென ஊகிக்கின்றேன். அதற்கு முதல் வரை இந்தியாவிலேயே பெண்கள் ஆயுதப்பயிற்சி பெறச் சென்றிருக்கின்றார்கள் என்பதை நாமறிவோம். ஆகவேதான் தென்மராட்சியில் இவர்களின் பயிற்சி முகாமிற்கு பிரபாகரன் வருவதை விபரிப்பதை, நிரோமியை அடையாளம் வைத்து அவர்  சாதாரணமாய் உரையாடுவதை எல்லாம் பார்க்கும்போது சற்று அதிகப்படியானதாக நமக்குத் தோன்றுகின்றது. பெண் புலிகளுக்கான சீரூடைகளிற்கான செலவுக்கு, தானே நேரில் எவ்வளவு வேண்டுமெனக் கேட்டு பணம் கொடுக்கும், மேலும் தேவையெனில் தயக்கமின்றிக் கேட்கலாம் எனச்  சொல்கின்ற பிரபாகரனை நாம் இங்கே அவதானிக்க முடியும். ஆனால் இந்திய இராணுவத்தோடு போர் தொடங்குவதோடு பிரபாகரன் இந்த நூலிலிருந்து காணாமற் போகின்றார். மாத்தையா அந்த இடத்தை 'முதலை' என்ற பட்டப்பெயரோடு எடுத்துக் கொள்ளுகின்றார்.

நிரோமியின் குழுவினருக்கு ஆயுதப்பயிற்சி கொடுக்கப்பட்டபின்,  விரும்பியவர்கள் வீட்டுக்குப் போகலாம் எனப் புலிகள் அனுப்புகின்றனர். நிரோமி வீட்டுக்குத் திரும்புகின்றார்,ஆனால் அதேவேளை அவரது நெருங்கிய தோழியான அஜந்தி மீண்டும் வீட்டுக்குப் போவதைத் தவிர்க்கிறார். இந்த இடத்தில் நிரோமி ஏன் தன் நெருங்கிய தோழியை விட்டுவிட்டு தனியே வீடு திரும்புகிறார் என  வாசிக்கும் ஒருவருக்கு எழும் சந்தேகத்திற்கு நிரோமியால் இந்த நூலில் எந்தப் பகுதியிலும் சரியான காரணத்தைச் சொல்ல  முடியவில்லை. இந்தப் புள்ளியிலிருந்தே, நிரோமியின் இயக்கத்தோடு இணைந்து போராடும் தடுமாற்றம் தொடங்குகிறது.

சிலவேளைகளில் நிரோமியை விட அஜந்திதான் போராடுவதற்கான உண்மையான அர்ப்பணிப்போடு இருந்திருக்கின்றார் என வாசிக்கும் ஒருவர் நினைத்தாலும், தவறாகவும் இருக்காது. மேலும் இன்று அஜந்தி உயிரோடிருந்தால், அவர் சொல்லும்/எழுதும் 'நினைவுகள்' நிச்சயம் நிரோமியைப் போன்றிருக்காதென உறுதிபடக் கூறமுடியும். நிரோமி இங்கே தன்னைப் பற்றி கட்டமைக்கும் விம்பங்கள் பலதை உடைக்கக் கூடியதாய்க் கூட அந்தப் பிரதி இருந்திருக்கவும் கூடும்.

யக்கப் பயிற்சி பெற்று வீட்டுக்குப் போகும் நிரோமி மீண்டும் பாடசாலைக்குப் போக விரும்புகிறார். மிகுந்த கட்டுப்பாடுகளையுடைய பாடசாலை நிர்வாகம் நிரோமியை மீண்டும் பாடசாலையில் சேர்த்துக் கொள்ள மறுக்கிறது. எனினும் புலிகளின் மாணவர் அமைப்புக்குப் பொறுப்பாயிருக்கும் முரளியின் செல்வாக்கால் நிரோமி மீண்டும் பாடசாலையில் சேர்க்கப்படுகிறார்.. பாடசாலைக்குப் போய்க்கொண்டிருந்தாலும், புலிகளின் வாத்திய அணியில் ஒருவராகவும், மாணவர்கள்/புலிகள் இணைந்து யாழில் செய்யும் ஊர்வலங்களில் முன்னணியில் கலந்துகொள்ளும் ஒருவராகவும் அவர் இருக்கின்றார்.

இதே காலத்தில் இந்திய இராணுவம் 'அமைதிப்படை' என்ற பெயருடன் வந்திறங்குகின்றது. புலிகளுக்கு இந்திய இராணுவத்துடன் முறுகல் நிலை வர  நிறைய ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன.. மாணவர்கள் பங்குகொள்ளும் போராட்டமொன்றில் இந்திய இராணுவ அதிகாரிகளுக்கு மனுக்கொடுக்கப்படும்போது முரளி ஆங்கிலம் பேசக்கூடியவர் என்பதால் நிரோமியை முன்னுக்குப் போகச் சொல்கிறார். அந்நிகழ்வு யாழ்ப் பத்திரிகைகளில் படத்துடன் வெளிவர நிரோமிக்கு புலிகள் அமைப்போடு இருக்கும் தொடர்பு பலருக்குத் தெரிய வருகின்றது.

இப்படிச் சம்பவங்களை வரிசைக்கிரமமாய்க் கூறிக்கொண்டிருக்கும்போது, மலையக(இந்திய வம்சாவளி) பின்புலத்திலிருந்து வந்த தாயாரையும் தம்மையும் தகப்பன் வழி உயர்சாதியினர் எப்படி யாழ்ப்பாணத்தில் கீழ்மைப்படுத்துகின்றனர் என்பதையும் நிரோமி விரிவாக எழுதுகின்றார். மேலும் பயிற்சியின் நிமித்தம் யாழ் கோட்டைப் பகுதியில் சென்றிக்கு விடப்படும்போது அங்கே நிற்கும் ஆண்கள் சிலருக்கு அவரோடு முகிழும் காதல் பற்றியும் (அதிலொருவர் நிரோமி இயக்கத்தை விட்டு விலகியபின் கூட அவரைப் பின் தொடர்ந்து வந்தது பற்றியும்) சிறு சிறு சம்பவங்கள் மூலம் கூறுகிறார். அதேவேளை இயக்கத்தில் காதல் தடைசெய்யப்பட்டிருக்கின்றது என்ற எச்சரிக்கையை மீறி இதெல்லாம் நடக்கிறதென்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். நிரோமி சென்றிக்காய் நிற்கும்போது தன் கரங்களில் இருக்கும் துப்பாக்கியும், கழுத்தில் தொங்கும் சயனைட்டும் தனக்கு அதிக பலத்தையும்,  எதற்கு அஞ்சாத மனோநிலையையும் தந்திருக்கிறதெனவும் குறிப்பிடுகிறார்.

திலீபனின் அகிம்சைப் போராட்டமும் ஈற்றில் அவரின் மரணமும், ஈழப்போராட்டத்தில் ஒரு முக்கிய நிகழ்வு.  திலீபனின் இழப்போடே பெண்கள் பெருந்தொகையாக புலிகளின் இயக்கத்தில்  போராளிகளாக இணைந்தும் இருக்கின்றனர். அதுவரை 'சுதந்திரப் போராளி'களிலும் இன்னபிற அமைப்புக்களிலும் தலைமறைவாய் இயங்கிய பெண்களை திலீபனின் மரணம் முழுநேரப் போராளிகளாக மாற உந்தித் தள்ளியிருக்கின்றது. திலீபனின் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட  வானதி, கஸ்தூரி போன்றவர்கள் பின்னாளில் சிறந்த படைப்பாளிகளாகவும் மாறிய நிகழ்வுகள் நாமெல்லொரும் ஏற்கனவே அறிந்ததே.

இந்திய இராணுவத்தோடு யுத்தம் எழ, நிரோமி மீண்டும் புலிகளோடு இணைகின்றார். யாழ் பல்கலைக் கழகத்தில் நிலையெடுத்து நிற்கின்ற போராளிகளோடு சண்டைக்கு ஆயத்தமாகின்றார். அஜந்தியைப் போல, அகிலா என்கின்ற போராளியோடும் நிரோமி அதிக நெருக்கமாகின்றார். நிரோமி இயக்கத்தைவிட்டு வெளியேறும்வரை அகிலா அவரது நெருங்கிய தோழியாக இருக்கின்றார் (இவரே ராஜீவ்காந்தியின் கொலையில்  3வது முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டவர், பின்னர் 95 யாழ் முற்றுகை எதிர்த்தாக்குதலில் பலியானவர்). யாழ் வளாகம் கைப்பற்றப்பட புலிகள் சிறு சிறு கெரில்லா அணிகள்காகப் பிரிக்கப்பட்டு தலைமறைவு இயக்கமாகின்றனர்.

பெரிய அணிகளாகத் திரிவதைத் தவிர்ப்பதன் நோக்கில் பல போராளிகள் மீண்டும் வீடுகளுக்கு அனுப்பப்படுகின்றனர். நிரோமி, அஜந்தி போன்றவர்களை -அவர்கள் இயக்கத்திலிருப்பவர்கள் என்று அறிந்து இந்திய இராணுவம் அவர்களைத் தேடுவதால்- வீட்டுக்கு அனுப்பப்பட முடியாமல் முரளியின் அணியில் இருக்கின்றார்கள். இந்திய இராணுவம் யாழ்ப்பாணத்தில் எல்லாப்பிரதேசங்களிலும் முற்றுகையை இறுக்க, முரளியின் அணியினர் ஒவ்வொரு இடமாய் தப்பியோடுகின்றனர். நீர்வேலியில் இவர்களுக்கும் இந்திய இராணுவத்திற்கும் நேரடி மோதல் நடக்கின்றது. முரளி, அஜந்தி உட்பட இன்னும் பலர் அத்தாக்குதலில் கொல்லப்படுகின்றனர். மீண்டும் கடல்நீரேரி கடந்து காடுகளுக்குள் வாழும் குறுகியகால வாழ்வோடும், அங்கிருந்து இயக்கத்தை விட்டு வெளியேறுவதோடும் நிரோமியின் நினைவுகளின் தொகுப்பு நூல் முடிவடைகின்றது. நிரோமி நேரடியாக இயக்கத்தோடு களத்தில் நின்றது எனப்பார்த்தால் ஆறு மாதங்களுக்கும் குறைவானது என்று வாசிக்கும் நாமனைவரும் எளிதாக அறிவோம்.

ந்த நூலில் முக்கிய பகுதிகளில் ஒன்றாய் நான் மதிப்பிடுவது, இந்திய இராணுவ காலத்தில் புலிகள் கெரில்லா அணியாக இயங்கிய காலங்களைப் பதிவு செய்திருப்பது என்பது.  இந்திய இராணுவ காலத்தில் சிறுவனாய் இருந்த என்னைப் போன்றவர்களும் அல்லது இயக்கத்தோடு நேரடியாகச் சம்பந்தப்படாதவர்களும், ஒழுங்கைகளில் அவ்வப்போது வந்துபோகும் போராளிகளை மட்டும் அநேகம் அறிந்திருப்போம். ஆனால் அவர்களின் 'ஒருநாள் உயிர் தப்பியிருக்கும் வாழ்வு' என்பதே எவ்வளவு நெடிய போராட்டம் என்பதை இந்நூலை வாசிக்கும்போது விரிவாக அறியமுடிகிறது. மேலும் உதிரப்பெருக்கின்போது ஒழுங்கான மாற்றுடைகளில்லாது தவிர்க்கும் பெண்போராளிகளின்  கடினவாழ்வையெல்லாம் நாம் வாசிக்கும்போது நாமறியாத் அல்லது நாமறிய விரும்பாத தடைகளையெல்லாம் பெண் போராளிகள் தாண்டவேண்டியிருக்கின்றது என்றறிகிறபோது நெகிழ்வே ஏற்படுகின்றது. அதுபோலவே வன்னிக்காட்டுக்குள் முகாம் அமைத்து காட்டு விலங்குகளுக்கும், உடல் நோய்களுக்கும், அவ்வப்போது முகாங்களைத் தாக்கும் இந்திய இராணுவத்திற்கும் எதிராகத் தப்பிப் பிழைப்பது பற்றியும் இந்நூலில் விபரிக்கப்பட்டிருக்கின்றது.

நிரோமி போராட்டத்தை விட்டு விலகியது பற்றி தெளிவாய் ஒரு காரணமே வைக்கப்படுகின்றது. புலிகளில் இரு போராளிகள் காதலிப்பதை அறிந்து மாத்தையா ஆண் போராளியை பலரின்  முன்னிலையில் 'மண்டையில்' போடுகிறார். அதுவே இயக்கத்தைவிட்டு விலத்த வைத்ததென நிரோமி எழுதுகிறார். ஆனால் வாசிக்கும் நமக்கு இந்த இடத்தில் குழப்பம் வருகின்றது.

நிரோமி புலிகள் ஏனைய இயக்கங்களை அழித்தது தெரிந்தே புலிகளில் சேருகின்றார். இயக்கத்தில் இருக்கும்போதே புலிகளின் மனிதவுரிமை மீற்ல்கள் பற்றியும் அறிகிறார். அப்போதெல்லாம் இயக்கத்தை விட்டு விலக நினைக்காதவர் - தமிழீழம் பெறுவதே இலககென நினைத்தவர் - ஒரு கொலையோடு மட்டும் ஏன் விலகுகின்றார் என்பது சற்று யோசிக்கவேண்டிய விடயம். சிலவேளைகளில் பல்வேறு காரணங்கள் இருந்து, இந்தக் கொலையோடு திரண்டு வந்து விலத்த வைத்திருக்கலாம். ஒரு பக்கம் புலிகள் தம் எதிரிகளையும் துரோகிகளையும் கண்மூடித்திறப்பதற்குள் போட்டுத்தள்ளுபவர்களாக இருப்பினும் நிரோமி இயக்கத்தை விட்டு விலகப்போகின்றேன் என்றதும் உடனே அவரைப் போக அனுமதிக்கின்றனர். காட்டுக்கு வெளியே இன்னொரு இரகசிய இடத்தில் அவரது தாயார் வந்து பொறுப்பெடுக்கும்வரை அவரைப் பாதுகாப்பாக வைத்திருக்கின்றனர் என்பதையும் கவனித்தாக வேண்டும்.

நிரோமியின் இந்த நினைவுகளின் தொகுப்பில் வரும் அனுபவங்கள் போலியானது என்கின்ற சில குரல்களைக் கேட்டுக்கொண்டே இதை வாசித்திருக்கின்றேன். இந்நூலை நிதானமாக வாசிக்கும் ஒருவர் -தகவல்கள் சில இடங்களில் பிழையாக இருப்பினும்- அந்தக் காலத்தில் புலிகளுக்குள் இருக்காத ஒருவர் இதை எழுதியிருக்கவே முடியாது என்ற முடிவுக்கு எளிதாக வந்துவிடவே செய்வார். சில சம்பவங்களில் உயர்வுநவிற்சியும், வேறு சில இடங்களில் தகவல் பிழைகளும் இருப்பது உண்மையே.

மேலும் இது 20 வருடங்களுக்கு முன் நிகழ்ந்தவற்றை எழுதும்போது பல தவறுகள் ஏற்படுவதும் இயல்பானதே.  A Long Way Gone என்கின்ற மிகவும் கவனிப்புப்பெற்ற குழந்தை இராணுவ்த்தினனின் நூலே இன்று போலியென கடுமையான விமர்சனம் வைக்கப்படும்போது இப்படியான விமர்சனங்கள் வருவது விதிவிலக்குமல்ல.  உண்மை என்பது ஒன்றா? என்பதே கேள்விக்குள்ளாக்கப்படும்போது ஒருவர் நூற்றுக்கு நூறு சரியாக எழுதிவிடத்தான் முடியுமா என்ன? . மேலும் இது 'நினைவுகளின் தொகுப்பு', எனவே விடுபடல்களும் மறதியும், தவிர்ப்புக்களும் சாதாரணமாக நிகழக்கூடியதே.

இந்நூலின் கடைசி அத்தியாயத்தில் புலிகளைப் பற்றி மட்டுமின்றி இன்றைய இலங்கையின நிலைமையும் பற்றியும் நிரோமி கொடுக்கும் தகவல்களும், ஆதாரங்களும் ஒரு முக்கியமான அரசியல் அறிக்கையே. அந்தக் கடைசி அத்தியாயம் எப்படி தீவிர புலி ஆதரவாளர்களை கோபப்படுத்த வைக்குமோ அவ்வாறே புலியெதிர்ப்பாளர்களையும் எரிச்சலுறச் செய்யும். ஆனால் போராட்டத்தின் பெயரால் எல்லாச் சுமைகளும் சுமந்த மக்கள் என்கின்ற மூன்றாவது தரப்பும் இருக்கின்றது.. அதைப் பற்றியே நாமின்று நிறையக் கவலை கொள்ளவேண்டியிருக்கின்றது. அந்த அக்கறை இந்நூலை எழுதிய நிரோமியிடம் ஏதோ ஒருவகையில் இருப்பதை இந்நூலை வாசிக்கும்போது நாமும் அறிவோம்.

(Jun 19, 2013)
(நன்றி: 'காலம்' - இதழ் 43, Mar 2014)

The Grand Budapest Hotel

Monday, March 31, 2014

சில திரைப்படங்கள் அவற்றின் திரைக்கதையினால் எம்மைக் கவரும். வேறு சில திரைப்படங்கள் -அழுத்தமான கதைகள் இல்லாவிட்டாலும்- அவற்றைக் காட்சிப்படுத்திய விதத்தில் நம்மை வசீகரிக்கும். The Grand Budapest Hotel படம் இரண்டாவது வகையைச் சேர்ந்தது. வழமையான ஹொலிவூட் படங்களின் பாணியை விட்டு விலகி, பகுதி பகுதியாக வெவ்வேறு மூன்று காலகட்டங்களை இப்படம் காட்சிப்படுத்துகிறது.

ஒருகாலத்தில் செழிப்பாயிருந்த ஹொட்டல் தன் வீழ்ச்சியை அடைகின்ற காலத்தில் ஒரு எழுத்தாளர் அங்கே செல்கின்றார். தற்செயலாய் இந்த எழுத்தாளர் அந்த ஹொட்டலின் சொந்தக்காரரான முஸ்தபாவை அங்கே சந்திக்கின்றார். அவரிடம் தன் இளமைக்காலத்தில் கேட்ட கதையை, இந்த எழுத்தாளர் தன் முதுமையில் எமக்குச் சொல்லத் தொடங்குகின்றார். சிலவேளை இந்தக் கதை நடந்ததா எனச் சந்தேகம் கேட்பவர்க்கு வந்தாலும், இவ்வாறே நிகழ்ந்ததெனவே சொல்லப்பட்டதாக எமக்குச் சிறு எச்சரிக்கை தரப்படுகிறது.

 இந்த ஹொட்டல் பிரபல்யமாயிருந்த காலத்தில் குஸ்தவேயே ஹொட்டலை நிர்வகிப்பவராக இருக்கின்றார். அவரின் கவனிப்பாலேயே ஈர்க்கப்பட்டே நிறையப் பேர் -முக்கியமாய் வயது முதிர்ந்த பெண்கள்- அவருக்காகவே வருகின்றனர். எல்லோரையும் மகிழ்ச்சிப்படுத்தியபடி இருக்கும் குஸ்தவேயிடம், பதின்மூன்று வயதுச் சிறுவனான முஸ்தபா 'லொபி பையனாக' வந்து சேருகின்றார். பிறகு இவர்கள் இருவருக்குமிடையில் உருவாகும் நட்பும், அவர்கள் செய்யும் வீரதீரச் செயல்களுமே இந்தப் படம்.

குஸ்தவேயின் கவனிப்பில் களிப்புற்ற மூதாட்டியொருவர் அவரின் வீட்டில் வைத்துக் கொலை செய்யப்படுகின்றார். குஸ்தவேயின் மீது நேசத்திலிருக்கும் அந்த மூதாட்டி ஒரு விலையுயர்ந்த ஓவியத்தை உயிலாக குஸ்தவாவிற்கு எழுதி வைத்திருப்பதைக் கண்டு அந்த மூதாட்டியின் முழுக் குடும்பமே கோபப்படுகிறது. இதனால் குஸதவாவே இந்தக் கொலையைச் செய்தவரென சாட்சிகளை உருவாக்கி, அவரைச் சிறையில் தள்ளிவிடவும் செய்கின்றனர்.

அந்த ஜெயிலில் இருந்து குஸ்தவே எப்படித் தப்பிக்கின்றார் என்பதையும், ஹொட்டல்களை நிர்வகிப்பவர்களிடையே இரகசியமாக இயங்கும் குழுவின் உதவியினூடு எப்படித் தன்னை நிரபராதியென நிரூபிக்கின்றார் என்பதுவும் விறுவிறுப்பானது, இறுதியில் குஸ்தவேயுற்கு என்ன நிகழ்ந்தது என்பதையும், எவ்வாறு லொபி பையனாக இருந்த முஸ்தபா அந்த ஹொட்டலை நிர்வாகிக்கும் ஒருவராக மாறுகின்றார் என்பதையும் சற்று நகைச்சுவையும் கலந்து இத்திரைப்படத்தில் அன்டர்சன் காட்டுகின்றார்.

யுத்தங்களுக்கிடையில் (1ம்/2ம் உலகமகாயுத்தம்) வெவ்வேறு இராணுவங்களால் எல்லைகள் கைப்பற்றப்படுவதை, அவ்வப்போது இரெயினில் பயணிக்கும் குஸ்தவேயும் முஸ்தபாவும் -எந்த நாட்டு இராணுவம் எல்லையைக் கைப்பற்றியிருக்கிறதென அறியாது -அவ்வப்போது மாட்டுப்பட்டு முழிப்பதும் அடிவாங்குவது எள்ளலாகக் காட்டப்பட்டாலும், இன்னமும் 'எல்லை கடத்தல்களில்' இருக்கும் வேதனைகளின் துயரங்கள் அவ்வளவாய் மாறிவிடவில்லை என்பதே யதார்த்தமாகும்.

அதேபோன்று லொபி பையனாக இருக்கும் முஸ்தபா, தன் பெற்றோரைப் போருக்குப் பலிகொடுத்து எவருமில்லாது எவ்வித ஆவணங்களில்லாது இந்த ஹொட்டலில் அடைக்கலமாகும் கதை கூறப்படும்போது நகைச்சுவையாக நீளும் காட்சிகளில் சடுதியாய் மெளனம் கவிழ்ந்து மெல்லிய சோகம் இழையோடத் தொடங்குகின்றது. அத்துடன் பான் கேக் செய்யும் பெண்ணோடு, முஸ்தபாவிற்கு முகிழும் காதல் ஒருவகை அழகென்றால், ஜெயிலில் இருந்து தப்பிவரும்போது குஸ்தவேயும், முஸ்தபாவும் -அந்தப் பதற்றம் உணராது- நீண்டநேரம் தங்களை மறந்து உரையாடி இறுதியில் கவிதை சொல்வது மெல்லிய புன்முறுவலைத் தூண்டச் செய்கிறது.

ஒவ்வொரு சிறுசிறு காட்சிகளிலும் அன்டர்சன் என்கின்ற இயக்குநரைத் தாண்டி அவருக்குள்ளிருக்கும் எழுத்தாளர் மிளிர்ந்துகொண்டேயிருக்கிறார். ஹொட்டலை பிங் நிற திருமணக்கேக் போல வடிவமைத்ததிலிருந்து, ஹொட்டல் செய்யும் கேக் வடிவத்திலேயே ஜெயிலிருந்து தப்புவதற்கான உபகரணங்களை காவலர்க்குத் தெரியாமல் அனுப்புவதெனத் தொடர்ந்து, இரகசியமாக undergroundயாய் இயங்கும் ஹொட்டலை நிர்வகிப்பவர்களின் குழு, தமது உறுப்பினர் ஒருவருக்காய் சட்டென்று உயிர்பெற்று அவர்களுக்கிடையில் தகவல்கள் பரிமாறப்படுவதை ஒரு சிறுகவிதைக்கு நிகராய்க் காட்சிப்படுத்துவரை அன்டர்சன் வித்தியாசப்படுத்திக் காட்டுகிறார்.

கதையொன்றால் குறிப்பிட பெரிதாக ஒன்றுமில்லை. வேண்டுமெனில் ஏற்கனவே நமக்குத் தெரிந்த கதைகளையே பகுதிகளாகப் பிரிதது தனக்குரிய முறையில், வித்தியாசமான சட்டகங்களுடான (Robert Yeoman )ஒளிப்பதிவோடு அன்டர்சன் திரைப்படமாக்கியிருக்கின்றார் எனச் சொல்லலாம்.. ஏற்கனவே எல்லாக் கதைகளும் சொல்லப்பட்டுவிட்டன. சொல்லப்பட்ட கதைகளை இன்னொருமுறை எப்படி புதிய முறையில் சொல்வது என்பது இன்றைய காலத்தின் முன்னாலுள்ள சவால் எனக் கூறுவோரும் உண்டு. அந்த வகைக்கேற்ப இந்தப்படம் இருக்கிறது.

எதையும் நிறைய எதிர்பார்க்காது, திரைப்படம் செல்லும் திசையெங்கும் நாமும் அலைந்தால், இத்திரைப்படம் நம்மை வசீகரிக்கக் கூடும்.

'நிழல்முற்றத்து நினைவுகள்'

Thursday, March 27, 2014

(நன்றி: காட்சிப்பிழை - மார்ச், 2014)

'நிழல் முற்றம்' என்ற தியேட்டரைப் பின்புலமாகக் கொண்டு பெருமாள் முருகன் எழுதிய நாவலை நம்மில் பலர் வாசித்திருப்போம். அந்த நாவலின் பின்னணியைப் பற்றி அல்லது அதிலே சொல்லப்படாது விடப்பட்ட பகுதிகள் குறித்து பெருமாள் முருகன் இதில் விரிவாக நனவிடை தோய்தல் வடிவில் பதிவு செய்கின்றார். திருச்செங்கோட்டில் எப்படியொரு புதிய தியேட்டர் தொடங்கபடுகிறது என்பதிலிருந்து அதன் வீழ்ச்சி வரை அதனோடு சம்பந்தப்பட்ட சம்பவங்கள்/மனிதர்களோடு அழகாய் பெருமாள் முருகன் எழுதிச் செல்கிறார்.

இத்தியேட்டரின் உள்ளே தகப்பன்/தமையனோடு சோடா தயாரித்து விற்றவராக பெருமாள் முருகன் ஒருகாலத்தில் வேலை செய்திருந்திருக்கின்றார். அந்த அனுபவங்களை மட்டும் கூறாது தனக்கு இந்தத் தியேட்டர் என்ன கற்பித்தது, தான் எதையெல்லாம் கற்றுக்கொண்டேன் என நீட்சித்து எழுதியிருப்பது இதைக் கவனிக்கத்தக்கதொரு நினைவுக்குறிப்பாய் ஆக்கியிருக்கின்றது.

'டாக்கீஸி'ல் இருந்து 'தியேட்டராக' மாறும்போது நவீன வசதிகளை கிராமத்து மக்கள் எவ்வாறு பழகிக்கொள்ளக் கஷ்டப்படுகின்றார்கள் என்பதிலிருந்து, அருகிலிருக்கும் தியேட்டர்களுடன் ஏற்படும் முரண்களிலிருந்து, எந்தந்தப் படங்கள் அன்றைய காலத்து மக்களை வசீகரித்து நிறைய நாட்கள் ஓடியது என நாம் மறந்துபோன ஒரு காலத்தை நம் கண்முன்னே பெருமாள் முருகன் கொண்டுவந்து நிறுத்துகிறார். தியேட்டரினுள்ளே பார்வையாளர்கள்/முதலாளிகள் மட்டுமின்றி அதற்குள்ளே சிறுகடைகள் வைத்து வியாபாரம் செய்பவர்களையும், அங்கே வேலை செய்யும் மனிதர்களையும் (முக்கியமாய் சிறுவயது பையன்கள்) பற்றியதொரு இன்னொரு உலகமும் இதற்குள் விரிகின்றது.

கெட்ட வார்த்தைகள் சாதாரணமாய்ப் புழங்கும், பிறர்க்குப் பட்டம் வைத்துக் கேலி செய்யும் பையன்களிடையே எப்படி 'எச்சி இலை பொறுக்கிறவன்' எனத் திட்டும்போது மட்டும் எவ்வளவு 'கெட்ட வார்த்தை'யாகவும், மிக மூர்க்கமாய் அவர்களைக் கோபம் செய்கின்றதாகவும அது அமைந்தது என்பதற்கான காரணங்களை அவ்வளவு எளிதில் கடந்து போகமுடியாது. அனேகமாய் இவ்வாறான சிறுகடைகளில் வேலைக்குச் சேரும் பையன்கள், ஒன்று பெற்றோரை இழந்தவர்களாகவோ அல்லது வீட்டை விட்டு ஓடி வந்தவர்களாகவே இருக்கின்றார்கள். ஆகவே அப்படி வரும்போது, அவர்கள் தொடக்க காலங்களில் குப்பைத் தொட்டிகளில் போடப்படும் எச்சில் இலைகளிலிருக்கும் உணவையே உண்டு உயிர் பிழைத்திருப்பவர்களாக இருந்திருக்கின்றார்கள். இவ்வாறான பையன்களுக்கு வேலை செய்யும்போது 'நீ எச்சியிலை பொறுக்கியவநதானே' என்கின்றபோது கடந்தகாலம் நினைவூட்டப்பட்டு அதை அவர்களால் தாங்கமுடியாது இருந்ததென குறிப்பிடப்படுகின்றது. இந்த ஒரு வாத்தையால் திட்டப்பட்டதாலேயே வேலையௌ உதறித்தள்ளிவிட்டுப் போன பையன்களும் இதில் பதிவு செய்யப்படுகின்றார்கள்.

இதே தியேட்டரில் ஓரிரவு எவருமே இல்லாத அநாதையென வரும் பெண்ணை, அங்கே ஆபரேட்டராய் வேலை செய்யும் ஒருவர் அந்தக்கணத்திலே தீர்மானித்து திருமணஞ்செய்வதையும், சாதி தீவிரமாய்ப் பார்க்கும் அதே ஊரில் என்ன சாதியென அறியாமலே அவர்கள் -அவ்வாறு திருமணம் செய்து- மிக நன்றாக வாழ்ந்தார்களென வருகின்ற குறிப்புகள் நெகிழ்ச்சி தரக்கூடியவை.

புதுப்படங்களுக்கு விளம்பரம் பகலில் ஒட்டப் போகும்போது ஏற்படும் சுவாரசியம் ஒருபுறமென்றால், தியேட்டரின் -எந்தப் படத்தையும் பார்க்காத- முதலாளிக்குத் தெரியாமல் காலைக்காட்சிகளில் 'சாமிப்படம்' போடுவதுவரை பல விடயங்களை தியேட்டர் சூழல் சார்ந்து பெருமாள் முருகன் பதிவுசெய்கின்றார். காலவோட்டத்தில் எப்படி ஒருகாலத்தில் நவீன வசதிகளுடன் பிற தியேட்டர்களுக்கு சவால் விட்ட இநதத் தியேட்டர் எல்லாக் காட்சிகளுக்கும் 'பிட்டு'ப்படம் போட்டு ஓடவேண்டியிருந்த நிர்ப்பந்தத்தையும், பிறிதொருகாலத்தில் தியேட்டரினுள் இயங்கிய கடைகளெல்லாம் முற்றுமுழுதாக இல்லாமற்போகும் சோகத்தையும் இந்நினைவுக்குறிப்புக்களில் காணலாம்.

எட்டாண்டுகள் இந்தத் தியேட்டரோடு பின்னிப்பிணைந்திருந்த பெருமாள் முருகன், அவரின் தந்தையார் மற்றும் தியேட்டர் முதலாளியின் மரணங்களோடு அதன் அனுபவங்களில் இருந்து விலகிவிட்டவரெனினும், தியேட்ட்ரிற்குள் இயங்கிய உலகினுள் இருந்த மனிதர்களை தன் பயணங்கள் ஒவ்வொன்றின்போது -அவர்களை மீண்டும் சந்திக்க முடியாதா- என்கின்ற ஆசையோடு தேடிக்கொண்டிருக்கின்றார். வாழ்வு சிதறிப்போன ஒரு சிலரைப் பின்னர் சந்திக்கவும் செய்கின்றார். அந்த நினைவுகளையும் பதற்றங்களுடன் பதிவும் செய்கின்றார்.

தங்கள் தலைமுறையில் எவருமே படிக்காதபோது, படிக்க விரும்பிய தன்னை தன் தந்தை -அங்கே பகுதி நேரமாய் வேலைக்கு வந்த ஒரு ஆசிரியருக்கு இருந்த மதிப்பின் காரணமாக- தொடர்ந்து படிக்க வைத்தாரென பெருமாள் முருகன் எழுதுகின்றபோது தியேட்டர் எதையோ சிலருக்குக் கற்றுக்கொடுத்திருக்கின்றது என்பது விளங்குகின்றது. தொடர் குடிகாரனாய்த் தன் தந்தை இருந்தாலும், தியேட்டரினுள் இருந்த கடையாலும், அங்கே சந்திக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களாலும் தன்னை ஏதோ ஒன்றுக்கு ஒப்புக்கொடுத்த தந்தையால், தியேட்டர் மூடப்பட்டதை தாங்கமுடியாது ஒருவருடத்திற்குள்ளேயே ஏதேதோ நினைவுகளாலும், குடியாலும் அலைக்கழிக்கப்பட்டு மரணமடைகின்றார் என்பதையும் துயரத்துடன் பதிவு செய்கின்றார்.

சாதி இறுக்கமாய் எல்லா விடயங்களில் இருக்கின்ற கிராமத்தில் பிறந்த தன்னால், அதை மீறி வரச்செய்வதற்கு இந்தத் தியேட்டரும், அங்கே பல்வேறு பையன்களோடு பழகிய அனுபவங்களும் மட்டுமே காரணமென பெருமாள் முருகன் குறிப்பிடுகின்றார். இத்தோடு என்னை இன்னும் வசீகரித்த ஒரு விடயம் என்னவெனில், படிப்பறிவேயற்ற ஒரு தலைமுறையிலிருந்து முதன்முதலாக வெளியே வருகின்ற பெருமாள் முருகன் தனக்கான கல்வியைக் கற்று, எழுத்தில் தனக்கொரு இடத்தையும் இன்றையகாலத்தில் அடைந்திருக்கின்றார் என்பதல்லவா பெரும் பாய்ச்சல். இதைத்தான் இதை வாசித்தபின்னும் தொடர்ந்தும் யோசித்துக் கொண்டிருக்கின்றேன். முன்னே மூர்க்கமாய் வளர்ந்து நின்ற தடைகளையெல்லாம் உடைத்து எடுத்து வைக்கின்ற முதலடி என்பதே பெரும் நிகழ்வுதானன்றோ.

'நிழல் முற்றத்தை' பல வருடங்களுக்கு முன்னர் வாசித்திருத்தேன். அந்நாவல் பிடித்திருந்ததால், பின்னர் வ.கீதா அதை ஆங்கிலத்தில் 'Current Show' என மொழிபெயர்த்திருந்ததையும் வாங்கியிருந்தேன். எனவே 'நிழல் முற்றத்து நினைவுகளை' வாசித்தபோது அந்தப் புதினத்தை மீறி இதிலென்ன கூறப்பட்டிருக்குமென அசுவாராசியத்துடனேயே வாசிக்கத் தொடங்கினேன். ஆனால் பக்கங்கள் விரிய விரிய எனக்குத் தெரியாத காலத்திற்குள் சென்று அங்கே அந்தப் பொழுதில் வாழ்ந்த மனிதர்களோடு பழகியது போன்ற வாசிப்பனுபவம் வாய்த்திருந்தது. 'நிழல் முற்றம்' நாவலை வாசிக்காதவர்கள், வாசித்தவர்களென எவரும் தயக்கமின்றி இதை வாசித்துப் பார்க்கலாம்; புதிய விடயங்களுள்ள சுவாரசியமான நினைவுக்குறிப்பு.