அம்பையின், உயிர்மையில் வெளிவந்த, கூடத்தில் துள்ளிய கன்றுக்குட்டி சிறுகதையை வாசித்தபோது நான் நீண்டகாலமாய் தேடிக்கொண்டிருந்த வினாவிற்கு சற்று விடை கிடைத்தாற்போலத் தெரிந்தது. எப்போதும் தேடல்,இருத்தல், இருத்தலின்மை/போதாமை என்ற சொற்களை ஆண்களாகிய நாங்கள் மட்டும் பாவித்து எழுதிக்கொண்டிருக்கும்போது இவைபற்றிய பெண்களின் அவதானங்கள் எப்படியிருக்கும் என்று நான் அவ்வப்போது யோசிப்பதுண்டு.
.............
சிறுகதையிலிருந்து சில பகுதிகள்...
இருத்தல் இருத்தலின்மை பற்றிய கேள்விகள் பெண்களைப் பாதிக்கவில்லையா என்று கேட்டார்கள் உதயனும் கதிரும்.
பெண்ணும் காமுவைப் படிக்கிறாள். சார்த்தரைப் படிக்கிறாள். திருமந்திரத்தையும் அக்க மகாதேவியையும் ஸ¤·பி கவிஞர்களையும் அவளும் படிக்கிறாள். ஆனால் ஒட்டுமொத்தக் குடும்பமும் வீட்டின் நாயகனான ஆணை உருவாக்குவதில் முனைந்திருக்கும்போது, அதன் இண்டு இடுக்குகளில் புகுந்து தன் இருத்தலையே ஆதாரமாக்கி அவள் தன்னை உருவாக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. இருத்தல் பற்றிய வேதாந்தபூர்வமான கேள்விகளை அவள் எழுப்பிக்கொண்டிருப்பதால்தான் அன்றாட வாழ்க்கைப் புதைகுழியிலிருந்து அவள் மீண்டு மீண்டு வரமுடிகிறது. குறியீடுகள் சூழ்ந்த உலகில் அவள் வாழ்கிறாள். "சன்னல் பக்கம் என்ன வேளை?" என்ற கேள்விதான் அவள் வாழ்க்கையின் அடித்தளம். சன்னல், புற உலகின் குறியீடு. சன்னலுக்கு வெளியேதான் அவள் சுதந்திரம். ஓடும் ஆறும், தேங்கிய கிணறும் கூட அவளுக்கு குறியீடுகள்தான். சாவின் குறியீடுகள். "ஆற்றிலோ கிணத்திலோ விழுந்து சாவேன்" போன்ற சொற்கள் அவள் மொழி உலகின் ஒலிகள். "தேவிடியா முண்டை" தான் அவளுக்கான முடிவான கண்டணம்.
"சரிதான். இதெல்லாம் மாரடிப்பு. பெண் பலியாடுங்கறியா? 'பெண்ணாகப் பிறந்தாலே உலகின் எந்நாளும் துயர்தானே' மாதிரி பாட்டுக்கள் பின்னணியில் கேக்குது எனக்கு" என்றான் உதயன்.
அவள் மறுத்தாள். இருத்தலின் கனம், கனமின்மை இரண்டையும் உணர்ந்தவள் பெண் என்றாள். இருத்தலின்மையே சிலசமயம் அவள் இருத்தலாகிப்போகிறது என்றாள். இல்லாமலே சிலசமயம் அவள் இருக்கிறாள். இருந்து கொண்டே சில சமயம் இல்லாமல் போகிறாள்.
...............................
அம்பையின் சிறுகதைகளை அவ்வப்போது கிடைக்கும்போது வாசித்தாலும், அவருடைய சிலதொகுப்புக்களை நாலைந்து மாதங்களுக்குமுன் வாசிக்க சந்தர்ப்பம் வாய்த்தது. ஆரம்பத்தில் எழுதிய அம்பையில் துடிப்பும், வெகுளித்தனமும், சினமும் கரைபுரண்டு ஓடுகிறது (வயதும் ஒரு காரணமாயிக்கக்கூடும்). எதையும், எவரையும் தயவு தாட்சண்யமின்றி தனது நிலையில் நின்று விளாசுகிறார். காலச்சுவடில் வந்த அம்பையின் பேட்டியிலும் இந்த அனுபவங்களை அம்பை தெளிவாக முன்வைத்திருந்தார் என்று நினைவு.
இன்றைய பொழுதில் அந்தக்கதைகளை வாசிக்கும்போதும், அம்பையின் பல கதைகள் காலத்தை மிஞ்சி நிற்கும் என்று தெளிவாய் சொல்லமுடியும். பல தசாப்தங்களுக்கு முன்பே அம்பை இப்படி சுதந்திரமாய் தனது கருத்துக்களை பொதுப்பார்வைக்கு வைத்திருக்கிறார் என்றெண்ணும்போது வியப்பேற்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் ஒருவிதமான சமரசமும் எல்லாவற்றையும் அனுசரித்துப்போகும் பார்வை அவரது கதைகளில் தெரிகின்றது. பெண்மொழி என்பதற்கு என்ன வரைவிலக்கணம் என்று தெளிவாகத்தெரியவிட்டாலும் (பெண்ணின் அனுபவத்தைக் கொண்டு எழுதப்படுபவை/பேசப்படுபவை என்று நான் அர்த்தம் கொள்கிறேன்) அம்பையின் சிறுகதைகளே தமிழில் பெண்மொழியில் எழுதப்பட்ட முதற்கதைகள் என நினைக்கிறேன். அம்பை உட்பட பலபெண்கள் இப்படிப்பிரிப்பதை விரும்பாமாட்டார்களெனினும், ஒருவித அடையாள வாசிப்பிற்காய் இப்படிச்சொல்லாம் என்று நினைக்கிறேன். அம்பையிலிருந்து இன்றைய உமா மகேஸ்வரிவரை பெண்மொழியை மிகச்சிறப்பாகத் தமது கதைகளில் கையாள்கின்றனர் என்பதை அவர்களின் கதைகளை வாசிக்கும்போது புரியும். தமிழ்ச்சிறுகதைகள் வரலாற்றில் புதுமைப்பித்தன் எவ்வாறு தவிர்க்கபடமுடியாதவரோ அவ்வாறே அம்பையும் விலத்தப்பட முடியாதவர் என்றே நம்புகிறேன்.
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
நல்ல பதிவு, தமிழன்.
12/11/2004 01:52:00 AMஅம்பையின் கதைகள் என் குறுகிய வெளிநோக்கங்களின் தளைகளை உடைத்து, என் எண்ணங்களை விசாலப்படுத்தி, என்னைப் பண்படவும் வைத்திருக்கிறது என்று நினைக்கிறேன்.
பெண்ணியத்தை, பெண்கள் சம்பந்தப்பட்டதான ஒன்றாக மட்டுமின்றி, எல்லா விதமான ஒடுக்குமுறைகளுக்கும், பேதங்களுக்கும் எதிரானவொரு சுதந்திர வேட்கையாக என்னைப் பார்க்கவைத்தது அம்பையின் எழுத்து.
நல்ல இலக்கியம் மனிதத்தை மேம்படுத்தி, பண்பட வைப்பது என்ற என் நம்பிக்கைக்கு அம்பையின் எழுத்து ஒரு தூண்.
Post a Comment