கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

யாரோடு நோவோம் யார்க்கெடுத்து உரைப்போம்?

Sunday, December 26, 2004

இயற்கை எங்களையும் பழிவாங்கியது. உயர்ந்துகொண்டிருக்கும் உயிரிழப்புக்களில் சிறுவர்களும், பெண்களும் அதிகம் என்ற செய்தி நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது. இந்த நிகழ்வு இரவில் நிகழ்ந்திருந்தால் இன்னும் அதிகமாய் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும் என்று அங்கிருந்து கதைப்பவர்கள் சொல்கிறார்கள். இலங்கை அரசாங்கமும், புலிகளும் அவசரகாலத்தை பிரகடனப்படுத்தி மீட்புப்பணிகளைச் செய்துகொண்டிருக்கின்றனர். அதிகமான உயிரிழப்புத் தவிர்க்கப்பட்டிருக்கலாம் சொல்லிக்கொண்டிருப்பதைவிட அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிப்பதே முக்கியமானது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக அத்தியாவசிய தேவைகளும், ஆறுதல் வார்த்தைகளுமே இந்தக்கணத்தில் தேவையானது.
..........
பல இடங்களில் சிறுவர்கள் பலியாகிப்போனது நெஞ்சை உருக்கவைப்பவை. மட்டக்களப்பு மாகாணத்தில் பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நாற்பது பிள்ளைகளைக் காணவில்லையாம். அதைவிடக் கொடுமை, முல்லைத்தீவில் பெற்றோரில்லாத பிள்ளைகளைப் பராமரிக்கும் செந்தளிர் இல்லத்தில் நூற்றியெழுபதிற்கும் மேற்பட்ட பிள்ளைகள் அதைப் பராமரித்த ·பாதருடன் காணாமற்போய்விட்டனர். பத்து இருபது சிறுவர்கள் தப்பியிருக்கலாம் என்று கடைசியாக ஒருவருடன் கதைத்தபோது சொன்னார். மட்டக்களப்பு மாகாணம்தான் மிகக்கோரமாய் சிதைந்து போயிருக்கிறது என்று நினைக்கிறேன். ஏற்கனவே வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களை இந்தப்பெரும் அனர்த்தம் எதுவுமே இல்லாதவர்களாக்கிவிட்டது. அங்கிருந்து பேசிய ஒருவர் கூட, கனடாவிலிருந்து ஏற்கனவே வெள்ளப்பெருக்கிற்காய் வந்து நிதியில் லொறியில் ஏற்றிய நிவாரணப்பொதியை இந்த அழிவில் சிக்கிக்கொண்டவர்களுக்காய் பாவிக்கப்போவதாய் சொன்னார். ஒருநாள் முழுதும் உண்ண எந்த உணவுமின்றி மக்கள் தவிர்த்துக்கொண்டிருக்கிறார் என்றும் அவர் வானொலியொன்றில் கூறினார்.தொலைபேசிகளில், வானொலிகளில் அங்கிருந்து வந்து விழும் கதைகள் நினைத்தே பார்த்து முடியாதன.
..........
எனது அக்கா கொழும்பில் வசித்து வருகிறார். அவரது வீடு கடற்கரையோரமாய் தானிருக்கிறது. வீடு, பிறகு ஒரு தண்டவாளம் அதற்கடுத்து பெருங்கடல். அக்காவின் வீட்டிலிருந்த ஒரு பெண், இந்த பெரும் கொடும் அலையை (30 அடிக்கு மேலேயென்கின்றனர்) கண்டிருக்கிறார். திடீரென தண்ணீர் வற்றி (கடலின் ஆழத்திலுள்ள கற்கள் எல்லாம் தெரிந்ததாம்) பெரும் அலைகள் பனையளவு உயரத்திற்கு எழும்பியது என்றார். இன்னும் எமது உறவினர் ஒருவரின் வான் (அவர் டிரைவர் வைத்து யாழ்-கொழும்பு சேவை செய்பவர்) யாழ்ப்பாணத்தின் (அல்லது முல்லைத்தீவின்) கடற்கரையோரமாய் நின்றபோது அதில் இருந்த அனைவரும் வானோடு கடலிற்கு அடித்துச்செல்லப்பட்டு காணாமற்போய்விட்டனர். டிரைவர் தற்செயலாய் வெளியில் நின்றதால் கடலோடு இழுத்துப்பட்டாலும் நீந்தித் தப்பி வந்து இதைச் சொல்லியிருக்கிறார். இப்படி இன்னும் எத்தனையோ கதைகள்? புலிகளின் கட்டுப்பாட்டில் அதிகம் சேதத்திற்குள்ளானது முல்லைத்தீவுக் கடற்கரையோரம். இதுவரையே உயிரிழப்புக்கள் ஆயிரத்தைத் தாண்டிவிட்டிருக்கின்றது. இன்னும் வெளிநாடுகள் கொடுக்கும் எந்த உதவியையும் புலிகளின் கட்டுப்பாடுகளுக்கு வரவில்லை/வராது என்று அங்கிருந்து வரும் குரல்கள் மேலும் கவலையை அதிகரிக்கின்றது.
........
இங்கேயிருந்து கொண்டு என்ன இழவைச் செய்வது? விடிகாலையில் எழும்பி செய்தி கேட்டபின் பிறரைப் போல எனது அண்ணாக்களுடன் இணைந்து ஒரு குறிப்பிட்ட பணத்தை வானொலிக்கு கொடுத்தோம். (வானொலிக்காரர்கள் உடனடியாக நிதியைச் சேகரித்து அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுக்
கொண்டிருக்கிறார்கள்). பிறகு, பல்கலைக்கழக/உயர்கல்லூரி மாணவர்கள் அவசரமாய் ஒரு கூட்டத்திற்கு வரச்சொல்ல சென்றிருந்தேன். ஒவ்வொரு குழுவாகப் பிரித்து, சில வேலைத்திட்டங்களைச் செய்வதாய் முடிவெடுத்தோம். முதலில் media குழுவில் நான் இருந்தபோதும், உடனடியாக வேறெதாவது செய்வது நல்லது என்று நிதிசேகரிக்கச் சென்ற குழுவோடு இணைந்து கொண்டேன். அவசரமாக எந்த வசதிகளும் இல்லாமல், எல்லா இனத்தவரின் வீடுகளைத் தட்டி இயன்றளவு நிதியைத் திரட்டிக்கொள்வதே எங்களின் இலக்காக இருந்தது. பயங்கரமாய் ஸ்நோ கொட்டிக்கொண்டிருக்க, வீதியில் கார் circus விளையாட்டுக்காட்டியது. இதை எல்லாவற்றையும் விட அங்கிருந்த மக்களின் துயரும், எல்லாவற்றையும் உதறிப்போட்டுவிட்டு உதவுவதற்கு வந்த தோழர் தோழிகளின் விரிந்த மனதும் எதையாவது செய்யவேண்டும் என்ற உத்வேகத்தைத் தந்தது.. எம்மைப்பார்த்துப் பூட்டிய கதவுகள் எத்தனை? நீங்கள் யார் என்ன அடையாளம் உங்களிடம் உள்ளது என்று கேட்டு எங்களின் பொறுமையைச் சோதித்த மனங்கள் எத்தனை? அனுமதியில்லாமல் வீட்டைத்தட்டியதால் பொலிசிற்கு அடிப்போம் என்று பயமுறுத்தியோர் எத்தனை பேர்? இதையெல்லாம் மீறி ஏதோ இராமர் பாலம் கட்ட உதவிய அணிலைப்போல நாங்களும் ஏதோ செய்தோம் என்பது சற்று ஆறுதலாக இருக்கிறது. இப்போதுதான் வீடு வந்து சேர்ந்தேன். நாளைக்கும் வருவதாகவும் இன்னும் அதிகமாய் நிதி சேகரிக்கவேண்டும் என்ற கனவும் எங்களில் பலருக்கு உண்டு.

1 comments:

ROSAVASANTH said...

டீஜே, உங்கள் முயற்சி தொடரட்டும். துரும்பை கூட எடுத்து போட வழியில்லாத இடத்தில் நான் இருக்கிறேன்.

தமிழகத்தை விட ஈழமே மோசமான நிலையில் உள்ளது. இங்கே உண்மையிலேயே 'அக்கரையுள்ள' அரசங்கம் ஒன்று ஒன்றுமட்டுமே உண்டு. ஈழத்தில் புலிகளுகும் அரசாங்கமும் புரிதல் இல்லாமல் எதுவும் செய்ய இயலாது என்று தோன்றுகிறது. அது குறித்து பிரச்சனை எதுவும் இருக்ககூடாது என்று நம்புகிரேன்.

12/27/2004 12:01:00 AM