கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

குழப்பம்

Monday, September 19, 2005

இரண்டு பெண்களும், சகிக்கமுடியாத ஒருத்தனின் அலம்பலும்

ஒரு நகரத்துக்குச் செல்கையில் அது தன் வாசல்களை அகலத்திறந்து உங்களை உச்சிமோரவும், அணைத்துக்கொள்ளவும் செய்கின்றது. அதே சமயம் சிலவேளைகளில் வலிகளையும், பிரிவுகளையும் வாரித்தந்து தன் கதவுகளை இறுக்கிமூடி உங்களை வெளியே எறிந்துவிடுகின்றது என்பதையும் இலகுவில் மறக்கமுடியாது. ஒரு மத்தியானவேளையில் அவன் மலையேறிக் கொண்டிருக்கின்றான். கோயில்களுக்குப் போவது அவ்வளவு பிரியமுடைய விடயமில்லையெனினும் கோயில் அமைந்திருக்கும் மலை சார்ந்த பிரதேசம் அவனுக்குள் ஒருவித நெகிழ்வையும், அமைதியும் கொண்டுவந்து சேர்க்கின்றது. மரங்கள் சூழ்ந்த ஒரு காட்டுப்பகுதியில் சனங்கள் பொங்கிக்கொண்டிருப்பது அவனுக்கு ஊரில் நடக்கும் சித்திராப்பெளணர்மிகளை நினைவுபடுத்துகின்றது. ஊரோடு கூடிக் குதூகலித்து, கும்மாளமிட்ட நாள்கள் அவை. ஊரின் ஞாபகங்கள் எப்போதாவது கிளறப்படுகையில், இலைகளில் தரப்படும் படையல் சோற்றின் மணம் இன்னும் உள்ளங்கையில் மணப்பதாய்தான் அவன் அதிக வேளைகளில் நினைப்பதுண்டு.

மிதமான வெயிலும் காற்றும் அந்தச் சூழலுக்கு இன்னும் இரம்மியத்தைத் தருகின்றது. வழமைபோல கோயிலுக்குள் நுழையாமல் சுற்றுப்புறங்களை நோக்கி தன் கால்களை நகர்த்தியபடி இருக்கின்றான். பாம்புப் புற்றுக்களும், சரிந்து விழுந்த மரங்களும் ஒரு அடர்ந்த காட்டுக்குள் வந்துவிட்டேன் என்ற பிரமையை அவனுக்குள் உண்டு பண்ணுகின்றது. இதையெல்லாம் இரசித்து ஒருவித குளிர்ச்சியான மனத்துடன் திரும்பி வருகையில் அவளை முதன்முதலில் அவன் காண்கின்றான். எல்லோரும் கோயிலுக்குள் போவதும் வருவதுமாய் இருக்கையில் அவள் மட்டும் கல்லொன்றின் மேல் தனித்து இருப்பது இவனுக்கு வித்தியாசமாய் தெரிகின்றது. கோயிலுக்குள் போவதற்கு பிரியப்படாத தன்னைப்போல ஒருவராக அவளும் இருக்கலாம் அல்லது 'இந்த நாள்களில் கோயிலுக்குள் செல்லுதல் ஆகாதெனும் சமூகம் விதித்த கட்டுப்பாடாகவும் இருக்கலாம் என்று அவன் தனக்குள் எண்ணிக்கொள்கின்றான். மலைக்கு இன்னொரு புறத்தில் இருக்கும் தியானம் செய்யும் ஆச்சிரமங்களை அவனுக்குப் பார்க்கப் பிரியமுண்டெனினும், அவளது சிவப்புத் துப்பட்டாவும் கேசமும் காற்றில் அலைவதையும், இரண்டாம், மூன்றாம் சூரியன்களாய் காலில் கொலுசுகள் தெறித்துக்கொண்டிருப்பதையும் பார்த்து, அந்தச்சூழலை விட்டுப்பிரிய மனதில்லாதவனாய் அங்கேயே நின்றுவிடுகின்றான்.

எதுவெனினும் அவனது மனம் வாசனைத் பதார்த்தங்களுடன் பொங்கிக்கொண்டிருக்கும் பொங்கலைப் போல இப்போது தித்திக்கத் தொடங்கிவிடுகின்றது. எதிர்முனைக் கற்களில் அமர்ந்துகொண்டு அவன் பார்க்கும்போது அவள் அவள் காற்றைப் பார்ப்பதுபோல இருப்பதுவும், அவன் எஙகையாவது பிராக்குப் பார்க்கும்போது அவள் நேர்ப்பார்வை பார்ப்பதுவும் ....இப்படியாக நிமிடங்கள் கழிகின்றன. அந்த சமயத்தில் அவளது தங்கை வந்து அவளுடன் அளவளாளவும்போதுதான், அவள் அவளது தங்கையுடனும், அம்மாவோடும் கோயிலுக்கு வந்திருக்கின்றாள் என்றும், அவர்களும் ஏதோ ஒரு நேர்த்திக்காய் பொங்கிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதுவும் அவனுக்குத் தெரியவருகின்றது. ஒரு வார்த்தையாவது அவள் விழிபார்த்து கதைத்துவிட வேண்டும் என்ற ஆசை அவனுக்குள் துளிர்க்க ஆரம்பிக்கின்றது ஒரு அரும்பைப்போல. அவளுக்குள்ளும் அப்படியொரு விருப்பு இருந்திருக்கலாம். நண்பன் ஒருவன் இவனுடன் இடைநடுவில் இணைந்துகொள்ள, இவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் நகைச்சுவைகளை அவளும் புன்முறுவலுடன் கேட்டு கொள்கின்றாள். எனினும் தானும் கேட்டுக்கொண்டிருப்பதை அவன்கள் கவனிக்கின்றார்களா என்று நோட்டம்விட, கேசத்தை காதுக்குள் ஒதுக்குவதை நுட்பமாய் செய்து இவன்களை கண்காணித்தபடி இருக்கின்றாள். இதைக் கவனித்துவிட்டு, தன் தலைமயிரையும் அவன் கோதிவிட்டு, 'எப்படி இருக்கிறது எனது ஸ்ரைல்?' என்று நண்பனிடம் கேட்க, 'மொட்டையாய் வெட்டிய இந்தத்தலையில் இப்படிக் கோதினால் ஸ்ரைல் வராது பேன் தான் வருமடா' என்று வழமைபோல நண்பன் தன் அறிவுஜீவித்தனத்தைக் காட்டுகின்றான். இப்போது அவள் இவன்களுடன் சேர்ந்து சிரிக்கத்தொடங்கிவிடுகின்றாள். நண்பன் விலகியபின்னும், சூழல் நன்கு இதமாய் கனிந்திருந்தபொழுதும், அவளுடன் இயல்பாய் பேசுவதற்கான வார்த்தையைத் தேடிதேடி அவன் களைத்துப்போகின்றான்.

அவனுக்குள், ஒரு பெண்ணை அவள் மனதை நோகடிக்காமல் எப்படி அணுகவது என்ற புதிர் இன்னும் அவிழ்ந்ததில்லை. அவன் எப்போதும் விரும்பும் தனிமை அவனை மனிதர்களிடம் இருந்து ஒதுக்கி வைத்தபடி இருக்கின்றது. ஒரு பெண்ணிடம், அவள் பிரியப்படாதபோது பேசி அவள் மனதைக் காயப்படுத்துவது, வன்முறை என்று புரிந்துவைத்திருக்கும் அவனுக்கு, அதுபோல் பேசப்பிரியப்படும் பெண்ணிடம் எதையாவது கதைக்காமல் உதாசீனப்படுத்திப் போவதுகூட இன்னொருவகையான வன்முறை என்பது புரியாமற்போகின்றது. தனக்கு ஒரு தங்கச்சி இருந்திருந்தால், பெண்களை இன்னும் புரிந்துகொண்டிருக்கலாம் என்ற எண்ணம், நொண்டிச்சாட்டாய் அவனுள் வந்து மறைந்துபோகின்றது.

பொங்கி, எல்லோரும் சுவாமிகளுக்குப் படைத்துவிட்டு, உணவுகளை கோயிலுக்கு வந்தவர்களுடன் பகிரத் தொடங்குகின்றனர். பசி வந்தால் பத்தும் பறக்கும் என்பார்கள். பசி வயிறைக் கிள்ள, ஓடிப்போய அவனும் வரிசையில் நிற்கின்றான். அவளுக்கும் உணவு எடுத்துத் தரவா என்று கேட்க விருப்பம் இருந்தாலும் வழமைபோல அவளுடன் பேச விரும்புகையில் எழும்பும் சுவர் குறுக்கே வந்து தடுக்கின்றது. நல்ல அருமையான படையல் சோறு. பிறகு பொங்கல், வடை, பாயசம் என்றும் வரிசையாக உணவுகள் காத்திருக்கின்றன. அவளுக்கும் அவளது தங்கச்சி உணவு எடுத்துக்கொண்டு வந்து கொடுக்கின்றாள். எஙகையோ பிராக்குப் பார்த்து அவள் சாப்பிடுகையில் கோப்பையில் இருந்து குழம்பு வழிந்து அவளது சுடிதாரில் ஊற்றப்பட்டு விடுகின்றது. அதைக் கவனிக்காது அவள் எதோ கனவுகளில் மூழ்கி இருந்திருக்கவேண்டும். அவன் சுட்டிக்காட்டிய பிறகு புரிந்து சிரித்துக்கொண்டு அதைத் துடைத்துக்கொள்கின்றாள். அதற்காய் அவள் விழிகளும், மெல்லியதாய் உதடுகளும் நன்றி சொன்னதா என்பது அவனுக்கும் அவளுக்கும் மட்டுமே தெரிந்த விடயம்.

அவள், தான் அவனுடன் பேசப்பிரியப்படுவதற்கான கடைசி சமிக்ஞையை சங்கேதமாய் அவனுக்கு மட்டும் புரிகின்றவிதமாய் அனுப்புகின்றாள். தாயையும், தங்கச்சியையும் மலையின் உச்சியில் விட்டுவிட்டு, பொங்கிய பானையைத் தூக்கிகொண்டு மலையில் இருந்து இறங்கத்தொடங்குகின்றாள். தன்னிடம் பேசுவதற்காய் கட்டாயம் அவனும் இறங்கிவருவான் என்று நினைத்து பின்னால் பார்த்துப் பார்த்து நடந்தபடி இருக்கின்றாள். தான் விரைவாக நடந்தால் அந்த வேகத்துக்கு ஈடுகட்டி அவன் வராது விட்டிருவானோ என்ற காரணத்தினாலோ என்னவோ ஓய்வெடுப்பது போல இடையில் தங்கி நிற்கின்றாள். அவள் அப்படி இடைநடுவில் சடுதியாய் நின்றது இவனுக்கு திகைப்பாயிருக்கிறது. அவளைக் காணாதது மாதிரி இரண்டு அடிகள் ஒரேயடியாய் எடுத்துவைத்து எதுவுமே பேசாது தாண்டிப்போய்விடுகின்றான். மலையின் அடிவாரத்தில் தனது காரில் பானையை வைத்துவிட்டு உடனேயே திரும்பி மலையில் ஏறாது, இவன் ஒரு வார்த்தையாவது தன்னோடு நேரடியாகப்பேசிவிடுவான் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றாள். அவனோ வழமைபோல, படம்காட்டுவதற்கு இந்தச்சூழல் நன்றாகவிருக்கின்றது என்று கனவில் மிதக்கத்தொடங்கி, வாழ்வின் அழகிய தருணம் காரடியில் காத்திருக்கின்றது என்ற யதார்த்தத்தை மறந்துவிடுகின்றான் அல்லது மறுதலித்துவிடுகின்றான். அறிமுகமில்லாத ஒரு பெண்ணிடம் பேசினால் காதலுக்காய்த்தான் பேசுகின்றார்கள் என்று அவள்கள் நினைப்பார்கள் என்று யார் அவனுக்குக் கற்றுக்கொடுத்தது? பிடித்ததை பிடித்தமான இடத்தில் வெளிப்படுத்த எது அவனைக் கட்டுபடுத்திக்கொண்டிருக்கின்றது? சமூகத்தின் அழுக்குகளை கேலி செய்தபடி தானும் ஒரு அழுக்காவே இருக்கின்றான் என்பது மட்டும் பிறகு அவனுக்குப் புரிகின்றது. பெண்களை நன்கு புரிந்துவைத்திருக்கின்றேன் என்ற அவனது நம்பிக்கைகளை ஒரு பெண் சாதாரணமாய் உடைத்துப்போட்டுவிட்டுப் போயிருக்கின்றாள் என்பது ஒருபக்கம் வியப்பாகவும் மறுபக்கம் திகைப்பாகவும் அவனுக்கு இருக்கின்றது. பேசாது தனிமையில் இருப்பதால் மட்டும் எவரும் காயப்படுத்தப்படமாட்டார்கள் என்பது எல்லாச்சமயஙகளிலும் சரியாக இருக்கும் என்பதுவும் இல்லை - ஏன் பேசவேண்டிய தருணத்தில் பேசாமல் மெளனித்து இருப்பது கூட ஒருவகையான மனதை நோகடித்தல்தான் என்பதை யார் அவனுக்குப் புரியவைக்கப்போகின்றார்கள்?

நகரம் இப்போது அவனை பிரிவுடனும், பாகற்காய் கசப்புடனும் வெளியே தூக்கி எறிந்துவிட்டு தன் கதவுகளை இறுக்கி மூடிக்கொள்கின்றது.

(2)
அப்போதுதான் அவன் அந்தச் செய்தியை அறிந்திருந்தான். ஒரு மேம்பாலத்தில் இருந்து நெடுஞ்சாலையில் குதித்து ஒருபெண் தற்கொலை செய்திருக்கின்றாள் என்று. நன்றாக படித்துக்கொண்டிருந்த பெண், ஏதோ ஒரு சின்ன மனக்குழப்பதில் உடனே இந்த முடிவை எடுத்துவிட்டாள். தற்கொலைகள் செய்ய முயற்சிக்காதவர்கள் உலகத்தில் எவரேனும் உண்டா என்ன? அல்லது ஆகக்குறைந்தது தற்கொலைகள் செய்வது பற்றி நினைக்காமலாவது நாம் இருந்திருப்போமா? மூளையில் எல்லா நரம்புகளும் விறைத்து எதுவும் சிந்திக்க முடியாத நிலையில் இருந்த பெண்ணுக்கு, ஏன் ஒருத்தரால் கூட அவளைப்புரிந்துகொள்ள முடியாமற்போயிற்று? சாகும் பொழுதில் கூட, தெருவில் சந்தித்த யாரவது ஒருவர் தன்னை மறித்து தன் துக்கம் கேட்கமாட்டார்களோ என்று அந்தப்பெண பரிதவித்திருக்கக்கூடும் அல்லவா? தற்கொலைகள் செய்வது குறித்து அனேகமாய் இரண்டு முடிந்த முடிவுகளைதான் நாம் வைத்திருக்கின்றோம். 'கோழைகள்' அல்லது 'சமூகத்துக்கு எதிராகக் கலகம் செய்தவர்கள் என்று. மேலும் தற்கொலைகளை எதிர்த்தவர்களில் பலர், தமது முடிவுகளை தற்கொலையாய்த்தான் இறுதியில் தேர்ந்தெடுத்து இருக்கின்றார்கள் என்பது ஒரு எதிர்ம்றையான முரணும்கூட.

அவனுக்கு இந்தச் செய்தியை வாசிக்கும்போது, தான் கோயிலில் பேசமறுத்த பெண்ணின் முகம் நினைவுக்கு வருகின்றது. தான் செய்ததுபோலத்தானே, யாரோ ஒருத்தர் பேச மறுதலித்ததால்தான் ஒரு இளம்பெண்ணின் வாழ்வு வீணாய்போயிருக்கின்றதென்ற எண்ணம் அவன் நினைவுகளில் துயர் மேகங்களாய்ச் சூழ்கின்றது.

நாம் அநேகபொழுதுகளில் பேச விரும்புகின்ற பெண்ககளின் குரல்வளைகளை நெரித்துப் பேசவிடாமல்தானே செய்தபடி இருக்கின்றோம். சிரித்துப் பேசும் பெண்களை ஆட்டக்காரிகள் என்று நக்கலடிக்கும் நாங்கள், அவர்கள் சிரிப்பதால்தான் நம் வாழ்வு அலுப்பில்லாது நகர்கின்றது என்பதை இலகுவில் மறந்துவிடுவது எவ்வளவு விந்தையானது.

கோயிலின் வெளிப்புறத்தில் கண்ட, அந்தப் பெண்ணின் நீண்ட புருவங்களுடைய கண்கள் இப்போதும் அவனுக்கு நினைவில் இருக்கின்றதென்கின்றான். தற்கொலை செய்துகொண்ட அந்த மற்றப்பெண்ணின் விழிகளும் இறந்தபின் அப்படித்தான் அனைவரையும் வெறித்துப் பார்ததபடி இருந்திருக்குமோ?

(.......இரண்டு பெண்களுக்கும்)

16 comments:

இளங்கோ-டிசே said...

பதிவை எழுதி publish செய்தபோது, தவறுதலாக 'no & hide existing comments' ஜ அழுத்திவிட்டதால் பின்னூட்டப்பகுதி இவ்வளவு நேரமும் வேலை செய்யவில்லை. திட்ட/கடிக்க விரும்பிய நண்பர்கள் சந்தர்ப்பம் வாய்க்காததால், உள்ளுக்குள் குமுறியிருந்தால் மன்னிக்கவும் :-).

9/19/2005 06:12:00 PM
Anonymous said...

பிரிந்தால்... கருமமே... புரிந்தால், சரி.

மர்மதேசத்து மனிதன்

9/19/2005 06:34:00 PM
Anonymous said...

பதிந்தது:ஈழநாதன்

அண்ணை உம்மை வெல்லுறது கஷ்டம் நான் சரணடைந்துவிட்டேன்


20.9.2005

9/19/2005 08:21:00 PM
Anonymous said...

Nandraga vanthirukkirathu DJ! Nice!

9/19/2005 10:01:00 PM
`மழை` ஷ்ரேயா(Shreya) said...
This comment has been removed by a blog administrator.
`மழை` ஷ்ரேயா(Shreya) said...
This comment has been removed by a blog administrator.
`மழை` ஷ்ரேயா(Shreya) said...

நன்றாக இருக்கு டிசே. கதைக்க நினைத்து தயக்கங்களில் தவற விட்ட சந்தர்ப்பங்கள் இன்றைக்கு ஞாபகம் வரும்!

//சிரித்துப் பேசும் பெண்களை ஆட்டக்காரிகள் என்று நக்கலடிக்கும் நாங்கள், அவர்கள் சிரிப்பதால்தான் நம் வாழ்வு அலுப்பில்லாது நகர்கின்றது என்பதை இலகுவில் மறந்துவிடுவது எவ்வளவு விந்தையானது.//

விளங்கினாற் சரி! :O)

பி.கு: எழுத்துப் பிழை; திருத்துகிறேனென ஆரம்பித்து ஒன்றைத் திருத்தி மற்றதை விட்டதால் இந்த 3ம் பின்னூட்டம். :O|

9/20/2005 12:51:00 AM
இளங்கோ-டிசே said...

மர்மதேசத்து மனிதன், ஈழநாதன், தங்கமணி மற்றும் ஷ்ரேயா பின்னூட்டங்களுக்கு நன்றி.
......
//அண்ணை உம்மை வெல்லுறது கஷ்டம் நான் சரணடைந்துவிட்டேன்//
நான் படங்காட்டுவதில், மதியின் வேகத்தைப் பார்த்துவிட்டு, சரணடைந்துவிட்டது போல, ஈழநாதன் நீங்கள் என்னிடம் சரணடைந்துவிட்டீர்களா? (உதுக்குத்தான் சொல்வது, சும்மா 'டிசேக்கு திருமணம்', 'எங்களுக்கும் காலம் வரும்' என்று பாடல் எல்லாம் போட்டு பதிவு போடக்கூடாது என்பது) குழந்தாய் நினக்கு எனது ஆசி எப்போதும் உண்டு :)))
......
எனக்கு ஒருமுறை சொன்னால் விளங்காது என்பதற்காய் சிட்னி வலைப்பதிவாளர் சங்கத்தலைவர் மூன்றுமுறை பின்னூடங்கள் இட்டிருக்கின்றார். வளர்க சிட்னி; வாழ்க தலைவர்!

9/20/2005 08:54:00 AM
SnackDragon said...

இது நிறைய பேரை தொடும் விதமாக உள்ளதாக பட்டது. நன்றாக உள்ளது. எங்குமே அலுப்பைக் காண முடியவில்லை.

9/20/2005 09:29:00 AM
மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லாருக்கு டிஜே!

-மதி

9/20/2005 11:37:00 AM
மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

அண்ணை,

நீர் இப்பிடி எழுதக்கூடியவர் எண்டபடியாத்தான் சும்மா படங்காட்ட வெளிக்கிட்டோடன விசர் வந்தது. பிறகு படுகோவம் வந்தது.

இன்னும் ரெண்டு பேர் இருக்கீனம்! அவையையும் ஏதாவது செய்யோணும். ;)

-மதி

பி.கு.: இந்தப் பதிவு நிறையநாள் மனதில் நிக்கும் டிஜே.

9/20/2005 11:39:00 AM
இளங்கோ-டிசே said...

கார்த்திக், மதி பின்னூட்டங்களுக்கு நன்றி. உங்கள் இருவருக்கும் இப்படி மேலே சொன்ன 'அவனை'ப் போல flash-back, lightening-back கதையிருந்தால் எங்களோடு பகிர்ந்துகொள்ளலாமே :-).
.....
//இன்னும் ரெண்டு பேர் இருக்கீனம்! அவையையும் ஏதாவது செய்யோணும். ;)//
ஆகா! அதை விரைவில் செய்யுங்கள். நான் பெற்ற 'இன்பம்' அவர்களும் பெறவேண்டும் அல்லவா? இரண்டு அடி உங்களோடு சேர்த்துக் கொடுக்க, நானும் கூட வருகின்றேன் :-).

9/20/2005 02:52:00 PM
Kannan said...

டிசே,

அருமை!

எம்.ஏ.நுஃமானின் சிறுகதை ஒன்றை நினைவுபடுத்தியது.

9/21/2005 01:21:00 AM
இளங்கோ-டிசே said...

கண்ணன்!
பின்னூட்டத்துக்கும் மற்றும் உங்கள் யாகூ360ல் எனது வலைப்பதிவை இணைத்தமைக்கும் நன்றி :-).

9/26/2005 09:13:00 AM
நளாயினி said...

நன்றாக இருக்கு டிசே. கதைக்க நினைத்து தயக்கங்களில் தவற விட்ட சந்தர்ப்பங்கள் இன்றைக்கு ஞாபகம் வரும்!

//சிரித்துப் பேசும் பெண்களை ஆட்டக்காரிகள் என்று நக்கலடிக்கும் நாங்கள், அவர்கள் சிரிப்பதால்தான் நம் வாழ்வு அலுப்பில்லாது நகர்கின்றது என்பதை இலகுவில் மறந்துவிடுவது எவ்வளவு விந்தையானது.//

விளங்கினாற் சரி! :O)

mm.. unmai thaan

9/19/2007 02:49:00 PM
இளங்கோ-டிசே said...

நன்றி நளாயினி. தூக்கத்திலிருந்து எழுந்து வந்ததுபோல உங்களின் பின்னூட்டத்தைப் பார்த்து- இதில் என்ன எழுதினேன் என- இன்னொருமுறை வாசித்துப் பார்க்க முடிந்திருந்தது :-).

12/01/2007 07:38:00 PM