கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

அல‌மெண்டாக் குறிப்புக‌ள்

Friday, May 06, 2011

~'கான‌ல் வ‌ரி', 'க‌ன‌டாத் தேர்த‌ல்',  'Gomorrah', 'Eat Pray Love'~

1.
த‌மிழ்ந‌தியின் 'கான‌ல் வ‌ரி'யை அண்மையில்தான் வாசிக்க‌ச் ச‌ந்த‌ர்ப்ப‌ம் கிடைத்த‌து. ஒரு (குறு)நாவ‌ல் என்றாலும் ப‌ல‌த்தையும் ப‌ல‌வீன‌ங்க‌ளையும் கொண்ட‌ ஒரு பிர‌தியாக‌வே தெரிந்த‌து. த‌மிழ்ச்சூழ‌லில் எது எத‌ற்கோ எல்லாம் விரிவான‌ வாசிப்புக்க‌ள் வ‌ரும்போது இந்நூல் அமைதியாக‌ உற‌ங்கிக்கொண்டிருப்ப‌து ச‌ற்று விய‌ப்பாய்த்தானிருக்கின்ற‌து. திரும‌ண‌மான‌ ஒரு பெண்ணுக்கும், திருமண‌மான‌ ஒரு ஆணுக்க்கும், அவ‌ர்க‌ளின் திரும‌ண‌த்தின் பின் முகிழ்கின்ற‌ உற‌வைப்ப‌ற்றி இந்நாவ‌ல் சிலாகிக்கின்ற‌து. வ‌ழ‌மையான‌ பொதுச‌ன‌ வாசிப்பைக் க‌வ‌ன‌த்திற்கொண்டு த‌ணிக்கை செய்யாது ஆண்-பெண் உட‌ல்சார்ந்த‌ உற‌வுக‌ள் விரிவாக‌ இதிலே பேச‌ப்ப‌டுவ‌து என‌க்கு முக்கிய‌மாக‌ப்ப‌ட்ட‌து. இன்னொரு நாட்டில்(?) வாழும் க‌ண‌வ‌னுக்காய் த‌ன் உட‌லைத் திற‌க்காத‌ பெண் பாத்திர‌ம், தான் விரும்புகின்ற‌வ‌னுக்க்காய் உட‌லை விரித்து வைக்கின்ற‌ இட‌த்தில், பெண்க‌ள் தேவ‌தைக‌ள்Xதெய்வ‌ங்கள் என்கின்ற‌ துவித‌நிலைப் பார்வையை அழித்து இய‌ல்பான‌ பாத்திர‌மாக ஆக்க‌ப்ப‌டுவ‌து முக்கிய‌மான‌து.

இவ்வாறான‌ முக்கிய‌புள்ளிக‌ள் சில‌ இப்பிர‌தியில் இருந்தாலும், இது த‌ன்னை மீறி ஆண்மொழியில் எழுத‌ப்ப‌ட்டதாக‌ அமைந்துவிடுவ‌துதான் இத‌ன் முக்கிய‌ ப‌ல‌வீன‌ம் போல‌ என‌க்குத் தோன்றிய‌து. இப்பிர‌திக்கான‌ ஒரு முக்கிய‌ உந்துச‌க்தியாக‌வும், பிர‌திக்குள்ளும் வ‌ரும் யூமாவாசுகியின் 'ம‌ஞ்ச‌ள் வெயில்' ஆண்மொழியில் எழுத‌ப்ப‌ட்ட‌தைப் போன்றே இதுவும் இருப்பதைக் க‌வ‌னிக்க‌வேண்டும். இத‌ன் அர்த்த‌ம் ம‌ஞ்ச‌ள் வெயிலைப் போன்ற‌துதான் கான‌ல்வ‌ரி என்ப‌த‌ல்ல‌.

திரும‌ண‌மான‌ த‌ன‌க்கும் ஏற்க‌ன‌வே திரும‌ண‌மான‌ இன்னொரு ஆணுக்குமிடையிலான‌ நீடிக்கும் உற‌வு, என்றேனும் ஒருநாள் திரும‌ண‌மான‌ அந்த‌ ஆணின் ம‌னைவிக்குத் தெரிய வருமாயின், த‌ங்களின் உற‌வைத் துண்டிக்க‌த் த‌யாரென‌ச் சொல்கின்ற‌து பெண் க‌தாபாத்திர‌ம். ஆனால் அதே பாத்திர‌ம், பின்னாளில் அந்த‌ ஆண் த‌ன் குழ‌ந்தைக‌ளின் ந‌ல‌னின்பொருட்டு இப்பெண்ணோடான‌ உற‌வைத்துண்டித்து வில‌கிப்போகும்போது காழ்ப்பைக் காட்டுகின்றது; ஆணுடனான‌ தன் உற‌வைக் காறித்துப்புகின்ற‌து; மேலும் அள‌வுக்கு மீறி வ‌ன்ம‌மும் கொள்கின்ற‌து. உண்மையில் இறுதியில் இந்நாவ‌ல் விட்டுச்செல்வ‌து ஒரு ஆணின் வ‌ருகைக்கான‌ காத்திருப்பை. இதுதானே சங்க மருவிய காலத்திலிருந்து க‌ண்ணகிக்கும் பிற பெண்களுக்கும் நிக‌ழ்ந்திருக்கின்ற‌து. அக்காத்திருப்பு நிக‌ழாத‌போது த‌ன் க‌டந்த‌கால‌ உற‌வை மீள‌ நினைத்து 'என்னை அவ‌ன் பாவித்திருக்கின்றான்' என‌க் கடுங்கோபத்துடன் இப்பிரதியின் பெண் பாத்திரம் மீள‌மீள‌ப் பேசுகிற‌து.

பிடிக்காத‌ க‌ண‌வ‌னுக்காய் உட‌லை நீண்ட‌கால‌மாய் திற‌க்காது, ஆனால் த‌ன‌க்குப் பிடித்த‌வ‌னுக்காய் எல்லாமுமாய் விரிந்திருந்ததாய் சொல்கின்ற‌ இப்பெண் பாத்திர‌ம், அவ‌னின் உற‌வு துண்டிக்க‌ப்ப‌ட்ட‌பின் 'தாங்க‌ள் ச‌ந்திக்கும் எல்லாப் பொழுதுக‌ளிலும் அவ‌ன் த‌ன் உட‌லைப் ப‌ற்றிய‌ சிந்த‌னையோடு இருந்து த‌ன் உட‌லை எடுத்துக்கொள்கின்ற‌வ‌ன்' என‌க் குற்றஞ் சாட்டுகின்றது. மேலும் த‌ன‌க்கு அப்ப‌டியில்லை,அவனைக் காணும் ஒவ்வொருபொழுதிலும், இவ்வ‌ளவுகால‌மும் பிரிந்திருந்த‌ நாட்க‌ளில் ந‌ட‌ந்த‌வ‌ற்றை அவனுடன் ஆறுத‌லாக‌ முத‌லில் பேசுவ‌தே த‌ன‌க்குப் பிடித்த‌து என்கின்ற‌து. அதைவிட‌ இன்னும் மோசமாக‌, 'தான் வேண்டாம் வேண்டாம் என்கின்ற‌போதும், த‌ன் உட‌லை எடுத்துக்கொள்கின்ற‌வ‌னாக‌ அவ‌ன் இருந்திருக்கின்றான்' என‌ப் பிற்பகுதியில் குற்ற‌ஞ்சாட்டுகின்ற‌து.

அவ்வாறு ஒரு பெண் த‌ன‌க்குப் பிடிக்க‌வில்லை என்கின்ற‌போது உட‌லை எடுத்துக்கொள்வ‌து என்ப‌து 'பாலிய‌ல் ப‌லாத்கார‌ம்' அல்ல‌வா? 'ச‌ட்ட‌முறை'ப்ப‌டியில் திரும‌ண‌ம் செய்திருந்தால் கூட‌, க‌ண‌வ‌னோ/கூட‌ வாழ்பவ‌னோ யாராய் இருந்தால் கூட‌ ஒரு பெண் விரும்பாத‌போது பாலிய‌ல் உற‌வில் ஈடுப‌ட்டால் அதைக் குற்ற‌மாக‌த்தான் ச‌ட்ட‌ம் பார்க்கும். என்கின்ற‌போது த‌ன‌க்குப் பிடித்த‌வ‌னிட‌ம்/தான் விரும்பியதைப் ப‌கிர‌க்கூடிய‌ ஒருவ‌னிட‌ம் ஏன் அது த‌ன‌க்குப் பிடிக்க‌வில்லையென‌ச் சொல்லாது இப்பெண் பாத்திர‌ம் ஒரு submissive நிலையை அடைந்தது என்ப‌து ஒரு முக்கிய கேள்வி. இக்கேள்வியும், இப்பெண்பாத்திர‌ம் கூறும் பிற குற்ற‌ச்சாட்டுக‌ளுமே இந்நாவ‌லின் பிற்ப‌குதியைப் ப‌ல‌வீன‌ங்க‌ள் ஆக்குகின்ற‌து.

இய‌ல்பாய் இருவ‌ருக்கிடையே வ‌ந்திருக்க‌க்கூடிய‌ உட‌ல் ம‌ற்றும் ம‌ன‌ம் சார்ந்த‌ உற‌வை அது பின்னாலில் நீடிக்க‌வில்லை என்ப‌த‌ற்காய் திட்டித்தீர்க்க‌த் தேவையில்லை. இதை ஒரு ப‌தின்ம‌ர் த‌ன் காத‌ல் நீடிக்க‌வில்லை என்று ம‌ன‌மெரிந்து எழுதியிருந்தால் ந‌ம‌க்குக் க‌வ‌லையில்லை. ஆனால் திரும‌ண‌மாகி அது ச‌லித்து, 'இது க‌ள்ள‌ உறவே இல்லை' என‌த் தெளிவாக‌ ந‌ம்பும் ஒரு பெண் பாத்திர‌ம் பின்னாளில் இப்ப‌டிப் பேசுவ‌துதான் ஆச்ச‌ரிய‌ம் த‌ர‌க்கூடிய‌து.
திரும‌ண‌மான‌ ஆணோடு ஏற்படும் உற‌வு எங்கோ ஒருபுள்ளியில் முடியும் என்ப‌து ஏற்க‌ன‌வே தெரிந்துதானே உற‌வே தொட‌ங்கியிருக்கும் என்கிற‌போது அந்த‌ ஆண் வில‌கிப்போவ‌தை பெரும் 'துரோக‌மாய்'ச் சித்த‌ரிப்ப‌து நாவ‌லின் இய‌ல்பை மீறி இருக்கின்ற‌து.  உண்மையில் தொட‌க்க‌த்தில் ப‌ல‌வ‌ற்றை வெளிப்ப‌டையாக‌ எழுத‌ப்ப‌ட்டிருக்கும் பிர‌தியில், ஒரு ஆணின் வில‌கிய‌ 'துரோக‌ம்' அதிக‌ம் பேச‌ப்ப‌டாம‌ல், காத‌லிக்கும் கால‌ங்க‌ளில் எத்த‌னையோ உற‌வுக‌ள் முகிழ்வ‌தும் அழிவ‌துமாய் இருப்ப‌தைப் போன்று திரும‌ண‌த்தின்பின்னும் ஏன் உற‌வுக‌ள் முகிழ‌க்கூடாது? முகிழ்ந்தால் அது த‌வ‌றில்லை என்கின்ற‌ புள்ளிக‌ளில் இக்குறுநாவல் தன் க‌வ‌ன‌த்தைக் குவித்திருந்தால் சிற‌ந்த‌தொரு பிர‌தியாக‌ வ‌ந்திருக்கும்.

ஆனால் ஒரு ஆணுக்கான‌ காத்திருப்பும், அது நிக‌ழாத‌விட‌த்து கட‌ந்த‌கால‌த்தின் ஒவ்வொரு இய‌ல்பான‌ த‌ருண‌ங்க‌ளையும் பூத‌க்க‌ண்ணாடி கொண்டு பிழைபிடிப்ப‌துமாய் இருப்ப‌துவும் அலுப்பூட்ட‌க்கூடிய‌து,. த‌ன்னை வாச‌க‌ர்க‌ளின் முன் இப்பெண் பாத்திரம் நியாய‌ப்ப‌டுத்திக்கொள்வ‌து போன்றே ஆகிவிடும். ஆனால் இங்கேயும் என்ன‌ பிர‌ச்சினை என்ன‌வென்றால், த‌மிழில் இருக்கும் அதிக‌மான‌ வாச‌க‌ர்க‌ள், திரும‌ண‌த்திற்குப் பின்பான‌ உற‌வு என்ப‌தையே ஏற்றுக்கொள்ளாத‌வ‌ர்க‌ளாய் இருப்பார்க‌ள். அவ‌ர்க‌ள் என்ன‌ கூறுவார்க‌ள் என்றால், 'இப்ப‌டித்தான் திரும‌ண‌த்தின் பின் வேறு ஒரு உற‌வில் ஈடுப‌ட்டால் இதுதான் நிக‌ழும்; இப்ப‌டித்தான் ம‌ன‌ஞ்சித‌றி வ‌ருந்த‌வேண்டியிருக்கும்' என்று எளிதாகக் கூறிவிட்டு நகர்ந்து விடுவார்க‌ள். அதன் பின்னணியில் இருக்கும் காரணங்களைத் தேடவோ ஆழ‌மாக‌ அலசவோ போவதில்லை.

த‌னக்குப் பிடித்த‌வ‌ன் எப்ப‌டி த‌ன்னோடு சேர்ந்துகொண்டானோ அவ்வாறே அவ‌ன் வில‌கிச்செல்வ‌த‌ற்கான‌ சுத‌ந்திர‌ம் இருக்கின்ற‌து என்ப‌துதானே உண்மையான‌ நிப‌ந்த‌னைய‌ற்ற‌ அன்பாக‌ இருக்க‌முடியும்? அதைவிடுத்து இய‌ல்பாய் இருந்திருக்கக்கூடிய‌ க‌ட‌ந்த‌கால‌ங்க‌ள் அனைத்தையும் ஆண் பிரிந்துபோன‌பின் ச‌ந்தேக‌க்க‌ண்ணோடு பார்ப்ப‌தென்ப‌து க‌ட‌ந்த‌கால‌த்து உற‌வு முழுதையும் நிராக‌ரிப்ப‌து போன்று ஆகிவிடும‌ல்ல‌வா? இத‌னால்தான் கூறுகின்றேன் 'கான‌ல்வ‌ரி' ப‌ல‌த்தையும் ப‌ல‌வீன‌ங்க‌ளையும் கொண்ட‌ ஒரு பிர‌தி என்று. இதை வாசித்த‌பின் ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் கூறிய‌தும் இவ்விட‌த்தில் நினைவுக்கு வ‌ருகின்ற‌து. 80/90க‌ளில் ஈழ‌த்துப்பெண்க‌ள் முன்ன‌க‌ர்த்திய‌ ப‌ல‌ விட‌ய‌ங்க‌ளை பின்னே இழுத்துக்கொண்டு போவ‌தான‌ தொனி இந்நாவ‌லில் தெரிகின்ற‌து என்றார்.  ஆழியாள், 'எல்லாவ‌ற்றையும் திரும்பித் த‌ருகின்றாய் நான் உன‌க்குக் கொடுத்த‌ முத்த‌ங்க‌ளையும், என‌க்குள் செலுத்திய‌ ஆயிர‌க்க‌ண‌க்கான‌ விந்துக‌ளையும் எப்ப‌டித் திரும்பித் த‌ருவாய்?' என்று கேட்பது ஒரு வ‌லுவான பெண்ண‌ர‌சிய‌ல் அறைகூவ‌ல் (இதுவும் ந‌ண்ப‌ரே கூறிய‌து). இந்நாவ‌லில் இத‌ற்கு எதிர்த்திசையில் 'ஆணுக்கான‌ காத்திருப்பும், அது நிக‌ழாத‌போது காறித்துப்ப‌லும்'தான் நிக‌ழ்கிற‌து.

ஆண்மொழியில் எழுத‌ப்ப‌ட்ட‌ பிர‌தி என‌க்குறிப்பிட்டுச் சொல்ல‌ ப‌ல‌ புள்ளிக‌ள் இக்குறுநாவ‌லில் இருந்தாலும் சில‌வ‌ற்றையாவ‌து குறிப்பிட்டாக‌ வேண்டும். ப‌ல‌ விட‌ய‌ங்க‌ளில் தெளிவாக‌ இருக்கும் இப்பெண் பாத்திர‌ம், 'ஆண்க‌ள் நீங்க‌ள் எல்லாம் யோக்கிய‌ர்க‌ளா? க‌ட‌ந்து போகும் பெண்க‌ளின் பின்புற‌ங்க‌ளைப் பார்த்து இர‌சிப்ப‌வ‌ர்கள் அல்லவா? நீங்க‌ள் இராம‌ர்க‌ளே அல்ல‌' என்கின்ற‌மாதிரி ஓரிட‌த்தில் குறிப்பிட்டிருக்கும். பெண்ணுட‌லை வெறித்துப் பார்க்கும் ஆண்க‌ளை விம‌ர்சிக்க‌லாம்; த‌வ‌றேயில்லை. ஆனால் 'நீங்க‌ள் இராம‌ர்க‌ளே அல்ல‌' என்ப‌துதான் இடிக்கிற‌து. இராம‌ரே ஒரு அயோக்கிய‌ப்பாத்திர‌ம்.'க‌ற்பை'க் கார‌ண‌ங்காட்டி சீதையைத் தீக்குளிக்க‌ச் சொன்ன‌ 'உத்த‌ம‌ர்'. இறுதியில் இந்த‌க் க‌னவான் தான் இங்கேயும் ஒரு உதார‌ண‌ புருஷ‌ராக‌க் காட்ட‌ப்ப‌டுகின்றார். இன்னும் ஒரு நெருடிய‌ இட‌ம். த‌ன் ஆணைப் ப‌ற்றிய‌ சித்த‌ரிப்புக்க‌ள். நூல் த‌ற்ச‌ம‌ய‌ம் என்வ‌ச‌ம் இல்லாத‌தால், திர‌ண்ட தோள்க‌ள், புலியின் வ‌யிறு போன்ற‌ வ‌யிறு என‌ கிட்ட‌த்த‌ட்ட‌ ர‌ம‌ணிச்ச‌ந்திர‌ன் போன்ற‌ வ‌ர்ண‌ணைக‌ள் சில‌ இட‌ங்க‌ளில் வ‌ருகின்ற‌ன‌. நான‌றிந்த‌வ‌ரை/கேட்ட‌வ‌ரை பெண்க‌ள் ஆணுட‌லை -ஆண்க‌ள் பெண்ணுட‌லைப் பார்ப்ப‌து போன்று- பார்ப்ப‌தில்லை என்ப‌து வேறுவிட‌ய‌ம். ச‌ரி, ஆண்க‌ள்தான் பெண்க‌ளைப் ப‌ற்றி 'ம‌த‌ர்த்த‌ முலைக‌ள்,குறுகிய‌ இடை, வாழைத்த‌ண்டு தொடைக‌ள், ... அல்குல்' என‌ போதும் போதுமென்ற‌ள‌வுக்கு ச‌லிக்கும்வ‌ரை எழுதும்போது ஒரு பெண் ஆணைப் பார்த்து விய‌க்கக்கூடாதா என்று ஒருவ‌ர் கேட்க‌லாம். அந்த‌க் கேள்வியில் பிழையில்லைத்தான். ஆனால் ஆணுட‌ல் ப‌ற்றி எத்த‌கைய‌ சித்த‌ரிப்புக்க‌ள் இருந்தாலும், பிர‌தி முழுதும் தேடிப்பார்த்த‌போதும் ஆண்குறி ப‌ற்றிய‌ எந்த‌க் குறிப்புக்க‌ளையும் கான‌ல்வ‌ரியில் காண‌வில்லை. இந்த‌ இட‌த்தில்தான் அம்பையின் க‌தைக‌ளின் வ‌ரும் ஆணுட‌ல் ப‌ற்றிய‌ சித்த‌ரிப்புக்க‌ள் நினைவுக்கு வ‌ருகின்ற‌ன‌. அம்பையின் அள‌வுக்கு ஆண்குறிக‌ளை ப‌ற்றிய‌ வித‌வித‌மான‌ சித்த‌ரிப்புக்க‌ளை (அநேக‌மான‌வை ந‌க்க‌ல‌டிப்ப‌வை) த‌மிழ்ச்சூழ‌லில் வேறெங்கும் காண‌வில்லை, ஏன் மைதிலி கூட‌ ஒருக‌விதையில் 'கோப‌ம்/ உன் குறியைச் /சூம்ப‌வைத்துவிடுகின்ற‌து' என்று எழுதியிருக்கின்றார் என‌ நினைவு. இவ‌ற்றையெல்லாம் ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால், கான‌ல் வ‌ரியில் பிரிந்துபோகும் ஆணை வைத்து எழுதிய‌ இட‌ங்க‌ளில் பொதுவாக‌ ஒரு க‌ழிவிர‌க்க‌மும் காத்திருப்புமே தெரிகின்ற‌தே த‌விர‌, அம்பையோ, ஆழியாளோ, மைதிலியோ பிரிந்துபோன‌ உற‌வின் இழ‌ப்பைப் ப‌ற்றிப் பேசும்போதுகூட‌ அவ‌ர்க‌ள் அதை ஒரு வ‌லுவான‌ பெண்மொழியில் எழுதிய‌துபோன்று இல்லாது இருக்கின்ற‌து என‌ச் சுட்ட‌வே. இதுவே கான‌ல்வ‌ரியின் முக்கிய‌ ப‌ல‌வீன‌ம். இவ்வாறான‌ ப‌ல‌வீன‌ங்க‌ள் இருப்ப‌தால் 'கான‌ல்வ‌ரி' ஒதுக்க‌ப்ப‌ட‌வேண்டிய‌ ஒரு குறுநாவ‌ல‌ல்ல‌. இன்னுமின்னும் ஆழ‌மாய் விவாதிக்க‌வேண்டிய‌  ஒரு குறுநாவ‌லே என்ப‌தில் என‌க்கு எவ்வித‌ மாற்றுக்க‌ருத்துமில்லை.

2.
க‌ட‌ந்த‌ சில‌ கால‌ங்க‌ளாக‌ சுவார‌சிய‌ம‌ற்று முடியும் க‌ன‌டாப் பாராளும‌ன்ற‌த் தேர்த‌ல் இம்முறை ப‌ல‌ அதிர்ச்சிக‌ளையும், ஆச்ச‌ரிய‌ங்க‌ளையும் கொடுத்திருக்கின்ற‌து. வ‌ல‌துசாரிகளை உள்ள‌ட‌க்கிய‌ ப‌ழமைவாத‌க் க‌ட்சி இம்முறை 167 இருக்கைக‌ளைப் பெற்று பெரும்பான்மை அர‌சை அமைக்கின்ற‌து. மாகாண‌ங்க‌ளுக்கான‌ அதிக‌ உரிமைக‌ளை வ‌லியுறுத்தும் ப்ளொக் குயூபெக்குவா படுதோல்வியை அடைந்திருக்கின்ற‌து. லிப‌ர‌ல் க‌ட்சியின‌ர் அவ‌ர்க‌ளின் வ‌ர‌லாற்றில் என்றுமே காணாத‌ மிக‌ப்பெரும் வீழ்ச்சியைச் ச‌ந்தித்திருக்கின்ற‌ன‌ர். கிறீன் க‌ட்சி முத‌ன்முறையாக‌ ஒரு இருக்கையை இத்தேர்த‌லில் பெற்றிருக்கின்ற‌து; இதையெல்லாவ‌ற்றையும் விட‌ என்டிபி என‌ப்ப‌டும் புதிய‌ ஜன‌நாய‌க் க‌ட்சியின‌ர் முத‌ன்முத‌லாக‌ எதிர்க்க‌ட்சியாக‌ ஆகியிருக்கின்ற‌ன‌ர். மேலும் இத்தேர்த‌ல் த‌மிழ‌ர்க‌ளுக்கும் முக்கிய‌மான‌தாய் ஆகியிருக்கின்ற‌து. முத‌ன்முத‌லாக‌ த‌மிழ‌ப் பின்புல‌த்தைச் சேர்ந்த‌ ராதிகா சிற்ச‌பேச‌ன் என்டிபி க‌ட்சி சார்பில் பாராளும‌ன்ற‌த்திற்கு தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்டிருக்கின்றார். இதுவ‌ரை கால‌மும் த‌மிழ‌ர்க‌ள் பாராளும‌ன்ற‌, மாகாண‌, உள்ளூராட்சி தேர்த‌ல்க‌ளில் போட்டியிட்டிருந்தாலும், உள்ளூராட்சித் தேர்த‌லில் ம‌ட்டுமே ஒரு க‌வுன்சில‌ரையும், சில‌ Trusteeக‌ளையும் தேர்ந்தெடுக்க‌ முடிந்திருந்த‌து. அந்த‌வ‌கையில் பார்க்கும்போது, ராதிகா சிற்ச‌பேச‌னின் வெற்றி என்ப‌து த‌மிழ‌ர்க‌ளைப் பொறுத்த‌வ‌ரை மிக‌ப்பெரும் பாய்ச்ச‌ல் என‌வே கொள்ள‌வேண்டியிருக்கின்ற‌து.

தேர்த‌ல் முடிவுக‌ள் 2011
ப‌ழ‌மைவாத‌க்க‌ட்சி (CON) - 167  *(143)   
புதிய‌ ஜ‌ன‌நாய‌க‌க் க‌ட்சி(NDP) - 102  (37)
லிப‌ர‌ல் க‌ட்சி(LIB) - 34  (77)
ப்ளொக் குயூபெக்குவா (BQ) - 04  (49)
கிறீண் க‌ட்சி(GRE) - 01  (00)
*(..)  அடைப்புக்குள் இருப்ப‌வை 2008ல் க‌ட்சிக‌ள் பெற்ற‌ இருக்கைக‌ள்

இத்தேர்த‌ல், லிப‌ர‌ல், ப்ளொக் குயூபெக்குவா க‌ட்சிக‌ளுக்கு ப‌டுதோல்வியைக் கொடுத்த‌தோடு அல்லாம‌ல், இவ்விரு க‌ட்சிக‌ளின் த‌லைவ‌ர்க‌ளும் அவ‌ர்க‌ள் போட்டியிட்ட‌ தொகுதிக‌ளிலும் தோற்க‌டிக்க‌ப்ப‌ட்டிருக்கின்றார்க‌ள் என்ப‌து இவ்விரு க‌ட்சிக‌ளின் ஆத‌ர‌வாள‌ர்க‌ளுக்கு க‌வ‌லையை அளிக்க‌க்கூடிய‌து. அடுத்த‌டுத்து இவ்விரு க‌ட்சிக‌ளின் த‌லைவ‌ர்க‌ளும் த‌ம் ப‌த‌விக‌ளில் இருந்து ராஜினாமாச் செய்து வில‌க‌ இவ்விரு க‌ட்சிக‌ளும் த‌லைவ‌ர்க‌ளில்லாது இப்போது திகைத்து நிற்கின்ற‌ன‌. க‌ட‌ந்த‌ இரு தேர்த‌ல்க‌ளிலும் சிறுபான்மை அர‌சை அமைத்த‌ ப‌ழ‌மைவாத‌க் க‌ட்சிக்கு இம்முறை ம‌க்க‌ள் பெரும்பான்மை அர‌சைக் கொடுத்திருக்கின்றார்க‌ள். ஏல‌வே குறிப்பிட்ட‌மாதிரி மூன்றிலொரு ப‌ங்கு இருக்கைக‌ளுள்ள‌ ஒன்ராறியோ மாகாண‌த்தில் பெரும்பான்மை இருக்கைக‌ளைக் கைப்ப‌ற்றினாலே, பெரும்பான்மை அர‌சை எந்த‌க் க‌ட்சியும் அமைக்க‌ முடியும் என்ப‌த‌ற்கிண‌ங்க‌, இம்முறை 106 இருக்கைக‌ளுள்ள‌ ஒன்ராறியோ மாகாண‌த்தில் ப‌ழ‌மைவாத‌க் க‌ட்சி 73 இருக்கைக‌ளைக் கைப்ப‌ற்றியிருக்கின்ற‌து. குடிவ‌ர‌வாள‌ர்க‌ள் நிர‌ம்பிய‌ ரொர‌ண்டோ ந‌க‌ராட்சியில் இதுவ‌ரை எந்த‌ இருக்கைக‌ளையும் கைப்ப‌ற்றாத‌ ப‌ழ‌மைவாத‌க்க‌ட்சி 9 இருக்கைக‌ளைக் கைப்ப‌ற்றியிருக்கின்ற‌து. குடிவ‌ர‌வாள‌ர்க‌ள் மீது அதிக‌ அழுத்த‌ங்க‌ளைப் பிர‌யோகிக்கும் ப‌ழ‌மைவாத‌க்க‌ட்சியை குடிவ‌ர‌வாள‌ர்க‌ள் நிர‌ம்பிய‌ ரொர‌ண்டோ ந‌க‌ர் ஏன் தேர்ந்தெடுக்கின்ற‌து என்ப‌து சுவார‌சிய‌மூட்ட‌க்கூடிய‌ கேள்வி ம‌ட்டுமின்றி, எப்போதும் லிப‌ர‌ல்க‌ளைத் தேர்ந்தெடுத்த‌ ம‌க்க‌ள் ஒர‌ள‌வு இட‌துசாரியுள்ள‌ என்டிபியின‌ரை அதிக‌ம் தேர்ந்தெடுக்காது, வ‌ல‌துசாரிக‌ளை தேர்ந்தெடுத்தார்க‌ள் என்ப‌தும் ஆச்ச‌ரிய‌ம் த‌ர‌க்கூடிய‌தே.

குயூபெக்கில் மாற்ற‌த்திற்கான‌ மிக‌ப்பெரும் அலை அடித்திருக்கின்ற‌து என்றுதான் கூற‌வேண்டும். சென்ற‌ தேர்த‌லில் ஒரேயொரு இருக்கையைப் பெற்ற‌, என்டிபி இம்முறை 75 இருக்கைக‌ளில் 58 இருக்கைக‌ளைப் பெற்றிருக்கின்ற‌து. இப்பெரும் அலை தேர்த‌ல் ந‌ட‌ப்ப‌த‌ற்கு ஒரேயொரு வார‌த்திற்கு முன் தான் தொட‌ங்கிய‌து என்றால் ந‌ம்புவ‌து க‌டின‌ம்; ஆனால் அதுதான் உண்மை. மாகாண‌த்திற்கான‌ சுயாட்சியையும், விரும்பினால் த‌னிநாடாக‌ப்பிரிந்துபோகும் உரிமையையும் வ‌லியுறுத்திய‌ க‌ட்சியை த‌ம‌க்குரிய‌ முக்கிய‌ தேர்வாக‌ வைத்திருந்த‌ குயூபெக் ம‌க்க‌ள் இம்முறை ஏன் அத‌ற்குப் ப‌டுதோல்வியைக் கைய‌ளித்தார்க‌ள் என்ப‌து ஆழ‌மாக‌ யோசிப்ப‌து ப்ளொக் குயூபெக்குவா த‌ன் ச‌ரிவிலிருந்து மீளெழ‌ உத‌வும். ஆனால் மாற்ற‌த்தை விரும்பிய‌ குயூபெக் ம‌க்க‌ள், ஒன்ராறியோ மாகாண‌த்த‌வ‌ர்க‌ளைப் போல‌வ‌ன்றி, வல‌துசாரிக‌ளைத் தேர்ந்தெடுக்காது ஒர‌ள‌வு இட‌துசாரியுள்ள‌ என்டிபியின‌ரைத் தேர்ந்தெடுக்கின்றார்க‌ள் என்ப‌தும் முக்கிய‌மான‌து.

3.
'Gomorrah' இத்தாலி நேபிளிலில் இருக்கும் மாஃபியா குழுக்க‌ளைப் ப‌ற்றிய‌ க‌தை. ப‌ல்வேறு ம‌னித‌ர்க‌ளைப் ப‌ற்றிச் சிறுகுறிப்புக‌ளாய் காட்சிக‌ள் நீண்டாலும் அனைவ‌ரும் ஏதோ ஒருவ‌கையில் மாஃபியாக் கும்ப‌லோடு ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்டிருக்கின்றார்க‌ள். ஒரு குழு, பிற‌கு அத‌ற்குள் உட்குழு, சிறைக்குப்போன‌ குழுவின‌ரின் குடும்ப‌த்துக்குப் ப‌ண‌த்தைப் ப‌கிர்ந்த‌ளிப்ப‌வ‌ர், பெருங்குழுவுக்குத் த‌லையிடிகொடுக்கும் இரு ப‌தின்ம‌ர், சிற‌ந்த‌ உடை வ‌டிவமைப்பாள‌ர், இர‌சாய‌ன‌க்க‌ழிவுக‌ளை இர‌க‌சிய‌மாக‌ நேபிளில் கொட்டி அதிக‌ ப‌ண‌ம் ச‌ம்பாதிப்ப‌வ‌ர் என‌ ப‌ல்வேறுப‌ட்ட‌வ‌ர்க‌ளின் குறுக்குவெட்டான‌ வாழ்வு காட்சியாக்க‌ப்ப‌டுகின்ற‌து. இத்தாலி ப‌ற்றிய‌ விம்ப‌ங்க‌ளை இவ்வ‌கைப்ப‌ட்ட‌ திரைப்ப‌டங்க‌ள் பல‌வேளைக‌ளில் வெறும் குமிழியாக்கி விட்டுப் போகின்ற‌ன‌.

ஒருமுறை நாங்க‌ள் பிற‌ந்த‌ வ‌ள‌ர்ந்த‌ ம‌ண்ணுக்கு மீண்டும் திரும்பும் க‌ன‌வுக‌ள் ப‌ற்றிப் பேசிக்கொண்டிருந்த‌போது, இத்தாலியைச் சேர்ந்த‌ பெண், தான் ஒருபோதும் பிற‌ந்த‌நாட்டுக்கு திரும்ப‌ப்போவ‌தில்லை; அங்கே (முக்கிய‌மாய் தெற்கு இத்தாலியில்) அநேக‌பெண்க‌ள் ஆண்க‌ளுக்கு சேவ‌க‌ம் செய்ப‌வ‌ர்க‌ளாக‌ ம‌ட்டுமே வாழ்கின்ற‌ன‌ர் என‌க் கூறிய‌போது என‌க்கு முத‌லில் அதிர்ச்சியாக‌ இருந்த‌து. எனெனில் ப‌ழ‌ம் பேர‌ர‌சுக‌ள் செழித்து வ‌ள‌ர்ந்த‌ பிர‌தேச‌த்தைப் ப‌ற்றிய‌ என் க‌ன‌வுக‌ள் வேறுவித‌மாக‌ இருந்த‌ன‌. இப்போதும், இத்தாலிய‌ப் பிர‌த‌ம‌ரின் பெண் லீலைக‌ளுக்கு எதிராக‌ மிக‌ப்பெரும் போராட்ட‌ங்க‌ள் பெண்க‌ளால் இத்தாலியில் ந‌ட‌த்த‌ப்ப‌டுவ‌தை அறிவீர்க‌ள். இது ப‌ற்றிய‌ நியூஸ்வீக‌ க‌ட்டுரையொன்றில் இத்தாலிய‌ ந‌டிகை மொனிக்கா பெத்த‌லூசி க‌ருத்துக்கூறும்போது, 'ஆண்க‌ள் ம‌ட்டுமே அறிவான‌வ‌ர்க‌ள் என்ற‌ க‌ருத்தாக்க‌ம் முசோலினியின் கால‌த்தில் ஆழ‌மாக‌ விதைக்க‌ப்ப‌ட்ட‌து. இன்றும் அது தொட‌ர்கிற‌து, இப்போது கூட‌ இத்தாலியில் 90% ஆண்க‌ள் வோஷிங்மெஷினைப் பாவிக்க‌த் தெரியாத‌வ‌ர்க‌ளாய் இருக்கின்றார்க‌ள்' என்றிருக்கின்றார். இப்ப‌ட‌த்திலும் உட்குழுக்க‌ளின் பிர‌ச்சினையில் ம‌க‌ன் வேறு குழுவில் இருக்கின்றார் என்ப‌த‌ற்காய் முத‌லில் ப‌ழிவாங்க‌ப்ப‌டுப‌வ‌ராக‌ ஒரு அப்பாவித்தாயே இருக்கின்றார். ப‌ட‌த்தின் முடிவில் ஓடுகின்ற‌ வ‌ரிக‌ளில், 'இவ்வாறான‌ மாஃபியாக்க‌ள் தம‌து ச‌ட்ட‌முறைய‌ற்ற‌ ந‌ட‌வ‌டிக்கைக்ளின் மூல‌ம் ச‌ம்பாதிக்கும் ப‌ண‌த்தை ச‌ட்ட‌முறையில் இய‌ங்கும் வியாபார‌ங்க‌ளில் முத‌லிடுகின்றார்க‌ள். அவ்வாறே இந்த‌க் குழுவும் இப்போது 9/11பின் மீள‌க்க‌ட்ட‌ப்ப‌டும் இர‌ட்டைக்கோபுர‌ நினைவிட‌த்திலும் ப‌ண‌த்தை முத‌லிட்டிருக்கின்ற‌து' என‌ச் சொல்ல‌ப்ப‌டுகின்ற‌து. சுவார‌சிய‌மான‌ செய்திதான் இல்லையா?

'Eat,Pray,Love' என்கின்ற‌ ஜூலியா ரொப‌ர்ட்ஸ் ந‌டித்த‌ ப‌ட‌த்தின் விம‌ர்ச‌ன‌ங்க‌ளை வாசித்த‌போது 'அலுப்புத்த‌ர‌க்கூடிய‌து' என்கின்ற‌ எண்ண‌மே இருந்த‌து. என‌வே அவ்வ‌ள‌வு எதிர்பார்ப்பில்லாது பார்க்க‌த்தொட‌ங்கிய‌போதும், அது ஒரு சுவார‌சிய‌மான‌ ப‌ட‌மாக‌வே என‌க்குத் தோன்றிய‌து. சில‌வேளைக‌ளில் 'காசே தான் க‌ட‌வுள‌டா' என்கின்ற‌ மேலைத்தேய‌ ம‌ன‌துக்கு இப்ப‌ட‌ம் சொல்ல‌வ‌ரும் செய்தி உவ‌ப்பில்லாது இருக்க‌க்கூடுந்தான். வேலை, க‌ண‌வ‌ன், ந‌ட்பு என‌ ஒரே ஒழுங்குகிற்குள் இருக்கின்ற‌ த‌ன் வாழ்க்கை இய‌ந்திர‌த்த‌ன‌மான‌து என்ப‌தை எலிச‌பெத்(ஜூலியா ரொபேர்ட்ஸ்) உணர்கின்றார். இத‌னால் எல்லாவ‌ற்றையும் உத‌றித்த‌ள்ளிவிட்டு த‌ன‌க்கு எப்போதும் விருப்ப‌மாயிருக்கும் நீண்ட‌தொரு ப‌ய‌ண‌த்தை மேற்கொள்கின்றார். முத‌லில் இத்தாலியாவுக்குப் போகும் அவ‌ருக்கு வித‌ம்வித‌மான‌ உண‌வுக‌ளைச் சாப்பிடும் ஆசை வ‌ருகின்ற‌து;வாழ்வின் மீதான‌ பிடிப்பு மீள‌ எழுகிற‌து. பிற‌கு இந்தியாவிற்குப் போய், த‌ன்னை உண‌ர்வுக‌ளின் கொந்த‌ளிப்பை நிதான‌மாக்கும் தியான‌த்தையும், பிரார்த்த‌னைக‌ளையும் க‌ற்கின்றார். இறுதியில் பாலிக்குப் போய் த‌ன் காத‌லைக் க‌ண்டுபிடிக்கின்றார். ஒவ்வொருநாடுக‌ளின் அற்புத‌மான‌ க‌லாசார‌மும், ம‌க்க‌ளும் ஒளிப்ப‌திவினூடாக‌ பார்ப்ப‌வ‌ருக்குக் க‌ட‌த்த‌ப்ப‌டுகின்ற‌து. 'எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாத‌' வெறுமை ப‌ர‌வுகின்ற‌ ம‌ன‌தை உடைய‌வ‌ர்க‌ளுக்கு இந்த‌ப் ப‌ட‌ம் ப‌ர‌வ‌ச‌த்தைத் த‌ர‌க்கூடும்.உங்க‌ளை மாற்ற‌வும், உங்க‌ளுக்குப் பிடித்த‌தை வாழ‌வும் ஒருபோதும் கால‌ம் க‌ட‌ந்துவிட‌வில்லை என்ப‌தை நுட்ப‌மாக‌ உண‌ர்த்தும் ஒருப‌ட‌ம்.

க‌ட‌ந்த‌ ஒரு வார‌மாய் நிறைய‌ப் ப‌ட‌ங்க‌ளைப் பார்த்துக்கொண்டிக்கின்றேன். சில‌வேளைக‌ளில் ஓரிர‌வுக்கு 2 திரைப்ப‌ட‌ங்க‌ள் என்கின்ற‌ அள‌வுக்கு. கிளிண்ட் ஈஸ்ட்வூட்(Clint Eastwood), வூடி அல‌ன் (Woody Allen) போன்றவ‌ர்க‌ளை அவ‌ர்க‌ள் ந‌டித்த‌ ப‌ட‌ங்க‌ளுக்காக‌ அன்றி, அவ‌ர்க‌ள் இன்றைய‌கால‌ங்க‌ளில் இய‌க்கிக்கொண்டிருக்கும் ப‌ட‌ங்க‌ளுக்காய் அவ‌ர்க‌ளை மிக‌வும் பிடிக்கும். அத‌னால் மிகுந்த‌ ஆர்வ‌த்தோடு கிளின்ட் ஈஸ்ட்வூட்டின் 'Gran Torino' ம‌ற்றும் 'Here After' பார்த்த‌போது அவை எதிர்பார்த்த‌ அள‌வுக்கு இருக்க‌வில்லை என்ப‌து என்ன‌ள‌வில் ஏமாற்ற‌மே. 'Here After' இன்னும் எத்த‌னையோ திசைக‌ளில் ஊட‌றுத்துச் செல்ல‌க்கூடிய‌ க‌தை, ஆனால் 'ச‌ப்'பென்று முடித்த‌மாதிரியான‌ உண‌ர்வே இறுதியில் மிஞ்சியிருந்த‌து.

3 comments:

Unknown said...

உள்ளேன் அய்யா

5/06/2011 07:35:00 PM
மீராபாரதி meerabharathy said...

இப்பொழுதெல்லாம் நாவல்கள் வாசிப்பதே குறைவு...அதிலும் ஆங்கில நாவல்கள்....ம்ம்...
ஆனால் ஒருவருக்கு பரிசளிப்பதற்கு வாங்கிய "'Eat Pray Love' " முழு மூச்சுடன் வாசித்து முடித்தேன்...
காரணம் என்ன வென்பதெல்லாம் நான் அறியேன்...
ஆனால் வாழக்கையில் உணவு காமம் காதல் தியானம் என்பவை ஒரு பகுதி மட்டுமல்ல முக்கியமானவை என்பதையும் உணர்த்துகின்ற முத்தகம் இது.
நீங்கள் குறிப்பிட்டதைப்:போல இப்படத்தைப்பற்றிய விமர்சனங்கள்...நேர்மறையாக இருக்கவில்லை....ஆகவே வாசிப்பினால் ஏற்பட்ட ரசனையை இழக்க விரும்பாது படத்தைப பார்பதைத் தவிர்த்தேன்....
உங்களுடைய குறிப்பின் பின்பு பார்க்கவேண்டும் என விரும்புகின்றேன்....

5/07/2011 02:56:00 PM
DJ said...

மீரா, நாவ‌ல்க‌ளாய் எழுத‌ப்ப‌ட்ட‌வைக‌ளைத் திரைப்ப‌ட‌மாக்கும்போது பெரும்பாலும் நாம் நினைப்ப‌துபோல‌ இருப்ப‌தில்லைத்தான். முக்கிய‌மாய் வாசிப்பில் ப‌ல‌வித‌ திசைக‌ளில் எண்ண‌ங்க‌ள் போவ‌த‌ற்கான‌ சுத‌ந்திர‌ம் இருக்கிற‌து; ஆனால் காட்சிப்ப‌டுத்தும்போது இய‌க்குந‌ன‌ரின் சிந்த‌னையில் எதுதோன்றுகிற‌தோ அதுவே காட்சியாக்க‌ப்படும்; அதாவ‌து அவ‌ர‌து பார்வையினூடாக‌ ம‌ட்டுமே திரைப்ப‌ட‌த்தைப் பார்க்கும் வித‌மாக‌ அமைந்துவிடும். இழ‌ப்புத்தான், ஆனால் த‌விர்க்க‌முடியாத‌தும் கூட‌.

5/09/2011 11:17:00 AM