புத்தரும் நானும்

புத்தரும் நானும்
அனுபவப்புனைவு

சிறுகதைத்தொகுப்பு

சிறுகதைத்தொகுப்பு
திறனாய்வு

கள்ளி

கள்ளி
கதை

கவிதை

கவிதை
ஆங்கிலம்

அனுக் அருட்பிரகாசத்தோடான நேர்காணல்

Sunday, February 12, 2017


 டிசே: உங்களைப் பற்றி சிறு அறிமுகம் மற்றும் நீங்கள் எழுத வந்த சூழல் பற்றிச் சொல்ல முடியுமா?

அனுக்: நான் கொழும்பில் 1988 ஆம் ஆண்டில் ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தேன். எனது பெற்றோர் யாழ்ப்பாணத்திலுள்ள புலோலியை சேர்ந்தவர்கள். சிறு வயதாக இருக்கும் போது, நான் இரண்டு வருடங்கள் தாயாரோடும் தங்கையோடும் ஆஸ்திரேலியாவில் இருந்து ஆங்கிலத்தில் படித்தபடியால் நான் இலங்கைக்கு திரும்பி வந்த பிறகு எனது படிப்பு ஆங்கிலத்தில்தான் தொடர்ந்தது. 18 வயதில் எனக்கு அமெரிக்காவிலுள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலைத்தேய தத்துவத்தில் பட்டம் வாங்கிய பிறகு, ஒரு வருடமாக தமிழ் நாட்டில் ஒரு பத்திரிகையில் பணிபுரிந்தேன். அங்கேதான் நான் ஊக்கத்தோடு எழுதத் தொடங்கினேன். ஒரு வருடத்திற்குப் பிறகு நான் திரும்ப அமெரிக்காவிற்குப் போய் தத்துவத்தில் கலாநிதி பட்டத்திற்குப் (PhD) படிக்க ஆரம்பித்தேன். எனது ஆய்வேட்டை எழுத வேண்டியிருந்த நேரத்தில் தான் நான் இந்த நாவல் எழுதினேன்.


டிசே: The Story of a Brief Marriage என்ற நாவலை எழுத உங்களுக்கு எழுத எது உந்துதலாக இருந்தது

அனுக்: 2009 இல் போர் முடிந்த நேரத்தில் நான் அமெரிக்காவில் இலங்கையர் யாரோடும் பழக்கம் இல்லாமல் தனியாகப் படித்துக்கொண்டிருந்தேன். அந்த அந்நிய சூழலில் ஒவ்வொரு நாளும் இலங்கையிலிருந்து வெளி வந்த செய்திகளை வாசிப்பேன், ஆனால் உண்மையைச் சொன்னால் 2011 இல் வெளி வந்த Sri Lanka's Killing Fields என்ற ஆவணப்படத்தைப் பார்த்துத்தான் போரின் இறுதிக் காலத்தில் வன்னியில் நடந்த கொடுமைகளைப் பற்றி தெளிவாக அறிந்துக்கொண்டேன். அது என்னை கடுமையாகப் பாதித்தது. இதெல்லாம் நடக்கும் போது, நான் எல்லா வசதிகளோடும் தத்துவம் படித்துக்கொண்டிருந்தேனே என்று வருந்தினேன். அந்தக் குற்ற உணர்ச்சியோடுதான்  இந்த நாவலை எழுதத் தொடங்கினேன். வரலாறு எனக்கும் எனது குடும்பத்திற்கும் கொடுத்த அதிர்ஷ்டத்தால் வன்னியில் இருக்கின்ற மக்களின் நிலை எனக்கு நேரவில்லை. நான் அனுபவிக்காத -- ஆனால் வன்னி மக்கள் அனுபவித்த -- அவலங்களைப் புரிந்து கொள்வதற்காகத்தான் இந்தப் புத்தகத்தை எழுத முயற்சித்தேன்


டிசே: இந்த நாவல் குறித்த அளவில், நீங்கள் ஒரு அபுனைவாக (non fiction)  எழுதச் சேகரித்த விடயங்களை புனைவாக (fiction) மாற்றி பிறகு எழுதியதாக குறிப்பிட்டிருக்கின்றீர்கள். அப்படி மாற்றும்போது நீங்கள் என்னவகையான சிக்கல்களை எதிர்கொண்டீர்கள்?

அனுக்: ஒரு எழுத்தாளராக எனது பாத்திரங்களின் மனநிலை பற்றி எழுதுவதுதான் எனது பிரதானமான நோக்கம். ஆனால் வன்னி வாழ்க்கையோ, போர் சூழலலோ நான் ஒரு நாளும் அனுபவிக்காதவை. அப்படி இருக்க போரின் இறுதிக் காலத்தில் சிக்கியிருந்த மக்களின் மனநிலை பற்றி தன்னம்பிக்கையோடு எழுத எனக்கு ஒரு தகுதியும் இல்லை. எத்தனை ஆவணப்படங்கள் பார்த்தாலும், எத்தனை பேரோடு கதைத்தாலும், எத்தனை மனத்தத்துவ கட்டுரைகள் வாசித்தாலும், பாதிக்கப்படாதவனுக்கு பாதிக்கப்பட்டவரின் நிலை விளங்காது. உறுதியில்லாமல் கற்பனை செய்துதான் விளங்கிக் கொள்ள  முயற்சிக்கலாம். ஆன படியாற் தான் நான் இந்த விடயங்கள் பற்றி புனைவாக எழுதினேன். இது பற்றி என்னால் புனைவாக மாத்திரமே எழுத முடிந்தது.


டிசே: தமிழில் போர் பற்றி வந்த நூல்களை வாசிக்கும் சந்தர்ப்பம் உங்களுக்குக் கிடைத்திருந்ததா?

அனுக்: எனது சிறுவயதில் நான் ஒரு வருடம் மட்டும் தமிழில் படித்தபடியால் தமிழில் வாசிப்பது எனக்கு சவாலாக இருக்கின்றது. போர் பற்றி தமிழில் வெளி வந்த படைப்புகளில் நான் வாசித்தவை மிகக் குறைவு என்றே சொல்ல வேண்டும்: ஷோபாஷக்தியின் கொரில்லாவும் சேரனுடைய சில கவிதைகளையும் படித்திருக்கின்றேன்.  


டிசே: ஒரு நேர்காணலில், ஆங்கிலத்தில் எழுதினாலும் ஆங்கிலம் ஒரு காலனித்துவ மொழி அது குறித்து நன்கு அறிந்து வைத்திருக்கின்றேன் எனக்கூறியிருக்கின்றீர்கள்.  Chinua Achebe போன்றவர்கள் ஒருகாலத்தில் ஆங்கிலத்தில் எழுதி பின்னர் தம் தாய் மொழிகளுக்குத் திரும்பியிருக்கின்றார்கள். உங்களுக்கும் அப்படி தமிழில் நாவல்களை எழுதும் விருப்பம் இருக்கின்றதா?

அனுக்: தமிழில் நாவல்கள் அல்லது கட்டுரைகள் எழுத வேண்டும் என்றொரு ஆசை நிச்சயம் இருக்கின்றது. என்னைப் பொறுத்தளவில் ஆங்கிலம் ஒரு அந்நிய மொழி. ஆங்கில எகாதிபத்தியத்தின் காரணமாக இன்றைக்கு உலகத்தில் எங்கும் ஆங்கில மொழிக்குத்தான் கூடுதல் அதிகாரம் இருக்கின்றது. ஆங்கிலத்தில் எழுதும் எழுத்தாளருக்குத்தான் கூடுதலான பரிசும் புகழும் சேர்கின்றது. தென்னாசியாவில் ஆங்கில மொழி கதைக்கக்கூடியவர்கள் மிகக் குறைவாக இருந்தும் வெளியுலகத்திற்கு தென்னாசியா பற்றிச் சொல்ல ஆங்கிலத்தில் எழுதும் தென்னாசிய எழுத்தாளருக்குத்தான் செல்வாக்கு அதிகம். இப்படியொரு நிலையில் ஒரு தமிழனாக இருந்தும் நான் தமிழ் மொழியிலன்றி ஆங்கிலத்தில் மட்டும் எழுதுகின்றேன் என்பது வெட்கப்படக் கூடிய விடயம். தமிழ் மக்களும், தமிழ் மொழியும் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு காலத்தில் நான் தமிழில் எழுத வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. அதே நேரத்தில் நான் திடீரென தமிழில் எழுத ஆரம்பிக்க முடியாது. தமிழுக்குத் தக்க மரியாதையைக்  கொடுக்க வேண்டும். தமிழில் எழுத வேண்டும் என்றால் முதல் தமிழ் இலக்கிய மரபில் பரீட்சயமாக வேண்டும். எழுதத் தொடங்க முன்னர், அந்த மரபுக்குள் ஓரளவுக்காவது மூழ்க வேண்டும், இல்லாவிட்டால் நான் தமிழில் எழுதுவது ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட எழுத்து மாதிரித்தான் இருக்கும. நான் தமிழில் படிக்க வாய்ப்பு கிடைக்காததால் தமிழ் இலக்கிய மரபில் அவ்வாறு மூழ்கப் பல வருடம் செல்லும் என்று நினைக்கின்றேன்.

டிசே: இலங்கையில் நடந்த யுத்தம் பற்றியும், அதன் பிறகான காலம் பற்றியும்  Still Counting the Dead (Frances Harrison),  The Cage (Gordon Weiss), The Seasons of Trouble (Rohini Mohan) போன்ற பல புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால் அவை எப்போதும் வெளியாட்களின் பார்வை போன்ற உணர்வையே தந்திருந்தன. உங்களது நம்மிடமிருந்து எழும் ஒரு குரல் போலத் தோன்றியது. முக்கியமாய் நீங்கள் 'புலிகள்' என்று எந்த இடத்திலும் பாவிக்காது, 'இயக்கம்' என்றே பாவிக்கின்றீர்கள். அது போலவே  போர்ச்சூழலின் சிறுசிறு விபரிப்புக்கள் கூட மிக நுட்பமாக எழுதப்பட்டிருக்கின்றது. அதற்கு முதலில் நன்றி.

இனி இலங்கையில் அரசியல் எப்படி இருக்கும்? போருக்குப் பின்பாக தமிழர்களின் எதிர்காலம் எப்படியிருக்குமென நினைக்கின்றீர்கள்?

அனுக்: உங்களது நல்ல வார்த்தைகளுக்கு நன்றி. இலங்கையில் அரசியல் அல்லது தமிழ் மக்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று சொல்ல எனக்கு தகுதி ஒன்றும் இல்லை. நாளில் அரைவாசி நேரம் நான் எனது அறையில் இருந்து எனது உள்ளத்தில் இருப்பதை எழுத்தால் வெளிப்படுத்த முயற்சிப்பேன். எனது உள்ளத்தைப் பற்றித்தான் எனக்குத் தெரியும். வேறு விடயங்கள் பற்றி சொல்லப் போனால் நான் கற்பனை செய்துதான் சொல்ல வேண்டும்தெரிந்தவர்கள் அந்த விடயங்கள் பற்றி கதைக்கட்டும்.

(நன்றி: 'அம்ருதா' - மாசி/2017)


0 comments: