கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

Road Trip - 01 (Canada)

Saturday, February 04, 2017

பயணக்குறிப்புகள் - 14

னடா பத்து மாகாணங்களையும் 3 territoriesகளையும் உள்ளடக்கிய ஒரு நாடு. இங்கு நீண்டகாலமாய் வசித்தாலும் இதுவரை இரண்டு மாகாணங்களை மட்டுமே பார்த்திருக்கின்றேன் என்பது சற்று அவமானமான விடயந்தான். பத்து மாகாணங்கள் என்றாலும் உலகின் இரண்டாவது பெரிய நாடாக இருப்பதால் ஒவ்வொரு மாகாணங்களும் மிகப்பெரிய நிலப்பரப்பில் இருக்கின்றன. கனடாவில் ஒரு மாகாணத்திலிருந்து இன்னொரு மாகாணத்திற்குப்போவதற்குள், ஐரோப்பா என்றால் நாம் இன்னொரு நாட்டைப் பார்த்துவிடமுடியுமென எங்களுக்குள் கதைப்பதும் உண்டு.

Sea Caves, New Brunswick
(நானிருக்கும்) ஒன்ராறியோ மாகாணமும், அருகிலிருக்கும் -பிரெஞ்சு பெரும்பான்மையாகப் பேசும்- கூபெக் மாகாணமும் சனத்தொகையில் கூடியது. ஆகவே பெரும்நகரங்களின் எல்லா அடையாளங்களையும் நெருக்கடிகளையும் இவற்றில் எளிதில் பார்க்கலாம். பெருநகர்களில் உலாவித்திரியப் பிடிக்குமே தவிர, ஒருபோதும் அங்கே வசிக்கவேண்டும் என்று விருப்பம் அவ்வளவு இருந்ததில்லை. ஆகவேதான் ரொறொண்டோ போன்ற பெருநகரம் போலவிருக்கும் நியூ யோர்க்கையோ, சிக்காக்கோவையோ இங்கிருக்கும் அநேகர் தேடித்தேடிப் போகும்போது அமெரிக்கா என்னை அவ்வளவு வசீகரித்ததில்லை. அமெரிக்காவிற்குள் காலடி வைப்பதற்கு அங்கிருக்கும் நண்பர்களும், நிலப்பரப்புக்களும் மட்டுமே காரணமாயிருந்திருக்கின்றது.

கனடாவில் கிழக்குக் கரையோரமும், மேற்குக்கரையோரமும் (வன்கூவர்) என்னை எப்போதும் அழைத்துக்கொண்டிருப்பவை. அதற்கு முக்கிய காரணம் கிழக்குப் பகுதியில் அத்திலாந்திக் சமுத்திரமும், மறுபுறத்தில் பசுபிக் சமுத்திரமும் இருப்பதே. இந்து சமுத்திரத்தோடு பிறந்த ஒருவனை பிற கடல்கள் ஈர்க்காமல் இருந்தால்தான் யோசிக்கவேண்டியிருக்கும். ரொறொண்டோ போன்ற நகரில் வசிப்பவர்க்கு ஐம்பெரும் வாவிகள் அருகில் இருந்தாலும், பெரும் சமுத்திரத்திரங்களைக் காண்பதிலும், கால் நனைப்பதிலும் வேறுவகையான சந்தோசம் இருக்கிறது அல்லவா?

Quebec City
ளாகப் படிப்பு முடிந்தவுடன் ஒவ்வொருவருடமும் கனடாவின் கிழக்கு மாகாணங்களுக்கு Road Trip செய்வது கனவாக இருந்தது. ஒருமுறை அவ்வாறு நண்பருடன் புறப்பட்டுமிருந்தேன். அப்போது நானொருவன் மட்டுமே தனியொருவராக வாகனத்தை ஓட்டக்கூடியவராக இருந்தபடியால் கூபெக்கின் தலைநகரம் மட்டுமே போகமுடிந்தது. இடையில் நித்திரையின் நிமித்தம் சிறு விபத்தும் நடந்துமிருந்தது. இம்முறை என்னைவிட அதிதூரம் காரோட்டக்கூடிய நண்பர் இருந்ததால் முழுமனதுடன் Road Trip செல்லத் தயாரானேன். மேலும் இரண்டு நண்பர்கள் எங்களுடன் இணைந்துகொள்ள உற்சாகம் கூடியது.

ஒரு நீண்ட வாரவிறுதிநாள் வந்தபோது நானும் நண்பரொருவரும் எங்கே போவதென வரைபடத்தில் ஓரிடத்தைக் குத்திவிட்டு 2013ல் பயணித்திருந்தோம். இரண்டு இரவுகள் மூன்று நாட்கள் கிட்டத்தட்ட 5000 கிலோமீற்றர்கள் காரில் பயணித்து South Dakota 'Badlands'ற்குப் போயிருந்தோம். அது ஒரு வெறிப்பிடித்த காரோட்டம். ஐந்தாறு மணித்தியாலங்கள் நித்திரை கொள்வதற்காய் ஓய்வெடுத்தததே தவிர எப்போதும் காரை ஓட்டிக்கொண்டிருந்தோம். ஆனால் அவ்வாறு வெறித்தனமான ஒரு பயணத்தைச் செய்ததால் எங்கேயெனினும் எப்படியெனினும் Road Trip அமெரிக்காவிற்குள்ளோ கனடாவிற்குள்ளோ செய்யலாமென்ற நம்பிக்கை வந்திருந்தது.

New Brunswick
கனடாவின் கிழக்குத்திசை நோக்கிய பயணத்தில் கிட்டத்தட்ட 5 மாகாணங்களைப் பார்த்திருந்தோம். இதுவரை நான் பார்த்தேயிராத 3 புதிய மாகாணங்கள். எட்டு நாட்கள், ஒவ்வொரு இரவும் ஒவ்வொரு இடத்திலென (நன்றி Airbnb) தங்கியிருந்தாலும் மிக நிதானமாகவே இந்தப் பயணம் அமைந்திருந்தது. நீண்ட நிலப்பரப்புக்களையும், கடலுணவுகளையும், 'அந்நியர்களின்' பயணிகள் மீதான அக்கறையையும் பற்றி விரிவாக வேறொரு பொழுதில் எழுதவேண்டும்.

எப்போதும் பேசிக்கொண்டிருக்க விரும்பாதவன் மட்டும் அல்லாது. எனது மெளனங்களைக் குழப்புகின்றவர்கள் மீதும் அவ்வப்போது கோபங்கொள்கின்ற -ஒருவகையில் கூறுவதென்றால் உள்ளொடுங்கிய பேர்வழி நான். மேலும் விடிகாலையில் எழும்புவதைப் போன்ற சித்திரவதை வேறொன்றும் இல்லையென நம்புகின்றவனும் கூட. எனக்குள் சட்டென்று விழுகின்ற மெளனங்களைச் சகித்துக்கொண்ட, அதிகாலையில் புறப்படும் பயணங்களில் எனக்காய் பொறுமையாய்க் காத்திருக்கவும் முடிந்த நண்பர்கள் இந்தப் பயணத்தில் கிடைத்தது பெரும்பேறு.

Montmorency Falls, Quebec
எந்தக் கூட்டுமுயற்சியென்றாலும் அது படைப்புச் சார்ந்து இருந்தாலென்ன, பயணம் சார்ந்து இருந்தாலென்ன, அவை முடிவடையும்போது நிம்மதியாக நிறைவுறுவதில்தான் மகிழ்ச்சி இருக்கின்றது. அவ்வப்போது வந்த தடங்கல்களையும், பயணத்திட்டங்களின் மாறுதலையும் பொறுத்துக்கொண்டு பயணித்த நண்பர்கள் என்றும் அன்புக்குரியவர்கள்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை விடிகாலை 5 மணிக்கு road trip தொடங்கியபோது நண்பரொருவர் முதல்நாள் மட்டுமே 1500km போகவேண்டியிருக்கிறதென GPSல் போட்டு படமெடுத்து, அனுப்பியபோது, அவருக்கு 'A long journey starts with a single step' என லா-சூ சொன்னதை பதிலாக அனுப்பியிருந்தேன்.

ஆம், எதுவென்றாலும் முதலடியில் இருந்துதானே எல்லாமே ஆரம்பிக்கின்றது.