கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

சில மலையாளத் திரைப்படங்கள்

Thursday, February 02, 2017

லை என்பதைப் பல்வேறு வகையில் நாம் வரையறுத்துக்கொள்ளலாம். கலை குறித்து பல்வேறுதரப்பட்டவர்கள் கூறிய கருத்துக்களும் நம்முன்னே நிறையவே கொட்டிக்கிடக்கின்றன. ஒரு படைப்பு அது தரும் அனுபவங்களினாலே நம்மோடு தொடர்ந்து பயணிக்கச் செய்கின்றது. செவ்வியல் ஆனாலென்ன, தற்காலப் படைப்புக்கள் ஆனாலென்ன அவை நமக்குள் கிளர்த்தும் உணர்வுகளே மறக்கமுடியாத ஒன்றாக நமக்குள் தம்மை நிலை நிறுத்திக்கொள்கின்றன.
திரைப்படம் என்பது கூட்டுழைப்பால் மட்டுமில்லை, பல்வேறு நுட்பங்களின் அற்புதமாக சேர்க்கையினால் உருவாகின்ற ஒன்று. அவ்வாறே, ஒரு திரைப்படம் தன் வசம் கொண்டிருக்கும் பல்வேறு கூறுகளின் உட்கிடக்கையினால் நம்மைக் கவர்ந்திழுக்கக்கூடும் என்கின்றபோதும் எப்போதும் திரைக்கதை என்ற முக்கியமான அடித்தளத்தை மறந்த திரைப்படங்கள் அவ்வளவு எடுபட்டதில்லையென்பதும் யதார்த்தமாகும். அண்மையில் தொடர்ச்சியாகப் பார்த்த சில மலையாளப்படங்கள் தந்த அனுபவமும் இதையே இன்னுமொரு முறை உறுதியாக்கியிருந்தது.
கிஸ்மத் (Kismath), அனுராக கரிக்கின் வெள்ளம் (Anuraga Karikkin Vellam) ஜக்கோபின்ரை சுவர்கராஜ்ஜியம் (Jacobinte Swargarajyam), ஒரு வடக்கன் செல்ஃபி (Oru Vadakan Selfie) போன்ற திரைப்படங்களை அவதானித்துப் பார்த்தால், அவற்றில் பெரிதாக எந்தக் கதையுமில்லை என்பது உடனேயே விளங்கிவிடும். மிகச் சாதாரண கதைகளை நமக்குப் பழக்கமான நிலப்பரப்பில் இருந்து பிரித்தெடுக்காமல் அதன் இயல்போடு இயக்கியிருப்பதால்தான் நாம் அதனிலிருந்து விலகிவிடாமல் ஒன்றிப் போக முடிகின்றது.
கிஸ்மத்தின் கதை முழுதுமே கிட்டத்தட்ட ஒரு பொலிஸ் ஸ்டேசனில் ஒருநாள் முழுதும் நடக்கும் விடயங்களே. ஆனால் எவ்வளவு அற்புதமாகப் படமாக்கியிருப்பார்கள். ஒரு சிக்கலான காதல் இணை மற்றும் அதிகாரமும் அதைத்தாண்டி அவ்வப்போது எட்டிப்பார்க்கும் மனிதாபிமானமும் பொலிஸ் - அவ்வளவுதான் கதை. ஆனால் படம் முடியும்வரை என்னதான் நிகழப்போகின்றது என்கின்ற ஒரு சிறிய ஊரின் பொலிஸ் ஸ்டேசனில் கதையைக் கொண்டு செல்கின்றார்கள். காதல் இருக்கின்றதென்றாலும் கதையை அது நிகழும் சூழலுக்கு வெளியே கொண்டு செல்லாமல் மிகச்சாதாரணமாக இதுதான் நிகழ்ந்தது, இவ்வளவுதான் காதல் எனக் காட்டிவிட்டு கதையை பொலிஸ் ஸ்டேசனுக்குள் கொண்டு வந்தும் விடுகின்றனர்.
இந்த நான்கு கதைகளிலும் காதல் மெல்லியதாக இருக்கின்றதே தவிர காதலைப் பற்றிய படங்களில்லை என்பதுதான் இன்னுமொரு ஆச்சரியமான ஒற்றுமை. ஒரு வடக்கன் செல்பி, தற்செயலாக ரெயினில் எடுக்கும் ஒரு செல்பிதான் கதை முழுவதற்கான காரணமென்றாலும், முக்கிய பாத்திரங்களுக்குள் எந்தக் காதலும் இருப்பதில்லை. ஜக்கோபின்ரை சுவர்கராஜ்ஜியத்தில் ஆரம்பக்காட்சியில் காதலி இருக்கின்றார் எனக்காட்டிவிட்டு படம் முடிவில் அவரைக் கேரளாவில் சந்திக்கும் சிறுகாட்சிதான் காதலுக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றது. நிவின் பாலி நடித்த Action Hero Bijuவில் கூட கவனித்துப் பார்த்தோமானால் ஒரேயொரு பாடலில் மட்டுமே காதலி வருவதும் அவ்வப்போது தொலைபேசியில் பேசுவது மட்டுமே நிகழ்ந்திருக்கின்றது. அனுராக கரிக்கின் வெள்ளத்தில் காதலி இடமாறுவதாக இருந்தாலும், இளம் ஜோடிகளுக்கு வரும் காதலை மாண்டேஜ் காட்சிகளால் காட்டிவிட்டு கடந்துபோயிருப்பார்கள்.கிஸ்மத்தில் சாதி, மதம் மற்றும் வயது வித்தியாசமுள்ள காதலென்றாலும் அவர்கள் காதலித்தமாதிரியுடனான பெரிய காட்சிகளே இல்லை. ஆக இந்த நான்கு திரைப்படங்களில் காதலே இல்லாமலே காதலைப் பற்றிய கதையைச் சொல்கின்றார்கள் என்பதுதான் நாம் அவதானிக்கவேண்டியது.
நம் தமிழ்ச்சூழலில் நாயகன் அறிமுகமாவது, பிறகு காதலி அறிமுகம், துரத்தலும் ஊடலுமான காதல் பின்னர் பாடல்கள் என அநேக திரைப்படங்களில் அரைவாசி நேரம் இந்தக் காதலிற்கே போயிருக்கும். நமக்கு இருக்கும் பெரும் பிரச்சினை என்னவென்றால் காதல் இல்லாமல் வேறு எதையும் சிந்திக்கமுடியாது என்பதுதான். காதல் இல்லாவிட்டால் ஒரு கதையை உருவாக்கமுடியாதென நாம் கற்பிதங்களால் கோட்டைகளை உருவாக்கி வைத்துக்கொண்டு அதை உடைக்கவோ, மேலும் புதிதாய் அதிலிருந்து உருவாக்கவோ முடியாது திணறிக்கொண்டிருக்கின்றோம்.

ன்றைய வினீத் சிறினிவாசன், நவின் பாலி, துல்கர் மற்றும் ஃபகத் ஃபாசில் போன்றவர்களின் திரைப்படங்களைப் பார்க்கும்போது அவர்கள் எப்படி நண்பர்களுக்குள் மாறி மாறி நடிக்கின்றார்கள் என்பதோடு, தமது திரைப்படங்களைத் தங்களுக்குள் பேசிச் செழுமைப்படுத்துகின்றார்கள் என்பது குறித்தும் வியக்காமல் இருக்கமுடியாது. வினீத்தின் கதைதான் ஒரு வடக்கன் செல்பி. ஆனால் அதில் நடிக்கின்றாரே தவிர இயக்குநரில்லை. அதுபோலவே வினீத் தனது நண்பர் ஒருவரின் சொந்தவாழ்க்கையில் நிகழ்ந்த கதையை ஜக்கோபின்ரை சுவர்கராஜ்ஜியமாக மாற்றியிருக்கின்றார். பிரேமம் போன்ற வசூலில் மிகப்பெரும் வெற்றி பெற்ற ஒரு திரைப்படத்தைத் தந்த நவின் பாலி, அவரது தகப்பன் மற்றும் தாயின் பாத்திரங்களுக்கு முக்கியமிருக்கும் இத் திரைப்படத்தில் நடிக்கின்றார். தமிழ்ச்சூழலில் இப்படி பிரேம் போன்ற மிகப்பெரும் வெற்றிபெறும் திரைப்படங்களில் நடிக்கும் நாயகர்கள் அடுத்து அடைக்கலமாகும் திரைப்படங்கள் எவையாக இருக்குமென ஒருகணம் சூர்யா, விக்ரம், கார்த்தி போன்றவர்களின் இன்றைய நிலையைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்கலாம்.
கிஸ்மத்தில் பெரிதாக நமக்கு அறிமுகமான பெரிய நடிகர்களுமில்லை. ஆனால் அத்தனைபேரும் நம்மால் மறக்கமுடியாதவர்களாய் மாறிப்போகின்றார்கள். ஒரு தலித் பெண் எல்லா வழிகளிலும் ஒடுக்கப்படுவதையும், எதையும் மீறி செயற்படமுடியா அவதிகளோடும் அவரின் ஒரு நாள் நகர்வதன் பதற்றத்தை எவ்வளவு எளிதாக எங்கள் மீது பற்றவைக்கின்றார்கள். ஒரு உபகதையாக அந்தப்பொலிஸ் ஸ்டேசனின் வந்து சேரும் அசாம் இளைஞனின் இயலமையில் தம் சொந்த நிலங்களை விட்டு அலைகின்ற அகதிகளின் துயரமும் அல்லவா சேர்ந்திருக்கின்றது. இப்படி ஒரு பொலிஸ் ஸ்டேசனில் ஒருநாள் பதற்றத்தோடு நகர்கையில் அதையிட்டு எந்த துலங்கமிலாது தெருவில் நடந்துபோகின்ற மக்களாகவும் நாம் பலவகையில் இருந்திருக்கின்றோம் அல்லவா?
பொலிஸ் தனது திருட்டு/இலஞ்சங்களை மறைப்பதற்காய் பலியாகின்ற ஓர் அப்பாவி இளைஞன், அம்மா என்னால் இன்று மீன் வாங்கிக்கொடுக்க முடியாது என்றும், பின்னர் பொலிஸ் ஸ்டேசனில் சித்திரவதைக்கு ஆளாகும்போது அம்மா நானின்று வீட்டுக்குச் சாப்பிடமுடியாதெனச் சொல்கின்றபோதும் நம்மையறியாமல் நமக்குள் ஏதோ செய்கின்றதல்லவா? ஒரு காதல் கதையைச் சொல்லப்போகின்ற தொடங்கின்ற கதையில் நாம் மறந்தோ கடந்தோ போகமுடியாத எத்தனை பேர் வருகின்றனர். இறுதியில் அந்த தலித் பெண் தேர்ந்தெடுக்கின்ற வாழ்வு எத்தகை நம்பிக்கையை வரச்செய்கின்றது. நமக்குப் பிடித்த தகழியால் கூட `தோட்டியின் மகனில்` தரமுடியாத நம்பிக்கையை இந்தப் பெண் தருகின்றபோது அவரை அப்படியே அரவணைத்துவிடவல்லவா தோன்றுகின்றது.

மிழ்ச்சூழல் கதைகளின் வறட்சியில் அண்மைக்காலமாய்ச் சிக்கிக்கொண்டுள்ளது. நம் அன்றாட வாழ்வில் மட்டுமில்லை, எழுத்துக்களாகவும் நிறையக் கதைகள் நம் முன்னே விரிந்து கிடக்கின்றன. அவற்றில் இருந்து திரைக்கதையைப் பொறுமையாகப் பின்னும் திறன் இன்னும் கைவரப்பெறாமையே இன்னுமின்னும் ஒன்றையே திருப்பச் திருப்பச் சொல்லவேண்டிய நிலை ஏற்படுகின்றது. மேலும் கதை, வசனம், திரைக்கதை, இயக்கம் என இருக்குமெல்லாப் பெயர்களும் தங்களுக்கு வரவேண்டுமென பலரின் பேராசைகளும் ஒரு காரணம். மேலும் கதையெழுதுபவர்கள் சிறந்த திரைக்கதை எழுதுவார்கள் என்பதில்லை. ‘நள்ளிரவின் குழந்தைகள்’ எழுதிய சல்மான் ருஷ்டி எப்படி திரைக்கதை எழுதும்போது காணாமற்போனார் என்பதை தீபா மேத்தாவின் ‘நள்ளிரவின் குழந்தைகள்’ திரைப்படத்தைப் பார்த்தவர்க்கு நன்கு புரியும்.
ஆனால் மலையாளச் சினிமா இதை அழகாக பல்வேறு சந்தர்ப்பங்களில் சுவிகரீத்திருக்கின்றது. எம்.டி.வாசுதேவநாயரிலிருந்து தற்காலத்தைய உண்ணி (ஆர்) வரை அவர்களை சரியாகப் பாவித்திருக்கின்றது. ஒரு கதையிலிருந்து திரைக்கதையை உருவாக்கவும்,, அதிலிருந்து நெறியாள்கையும் செய்வதற்கும் நிறையப் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கின்றது. அண்மைய நேர்காணலில் கெளதம் வாசுதேவனிடம், 'ஏன் ஒரேமாதிரியான பின்புலத்தில் மீண்டும் மீண்டும் திரைப்படம் எடுக்கின்றீர்களெனக் கேட்கும்போது ‘ஒருவன் தியேட்டருக்கு நிறைபோதையில் வந்தால்கூட தன் படத்தை உடனேயே கண்டுபிடித்துவிடும் அடையாளங்கள் இருப்பதே தனக்குப் பெருமை’ என்கின்றார். இதிலென்ன பெருமை இருக்கின்றது?
ஒருவன் நிறைபோதையில் வந்தாலும், ஆகா இவ்வளவு அருமையாக ஒரு திரைப்படத்தை எடுத்திருக்கின்றாரே, யாரிந்த இயக்குநர் எனத்தேடும்போது அல்லவா கிடைப்பது மிகப்பெரும் மரியாதை? இத்தனைக்கும் கெளதம் வாசுதேவனின் மீது மதிப்பு வைத்திருக்கும் வினீத் ‘தட்டத்தின் மறையது’விலிருந்து ‘ஜக்கோவின்ரை சுவர்கராஜ்ஜியம்’ வரை இயக்கிய/எழுதிய/நடித்த படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றிலிருந்தும் வித்தியாசமானவை. அந்த வித்தியாசங்களிலிருந்துதான் வினீத் தனித்து மிளிர்கின்றாரே தவிர, ஒன்றை மீண்டும் மீண்டுமாய் ஒரேமாதிரியாக நகலெடுத்துக்கொண்டிருப்பதால் அல்லவென கெளதமிற்கு ஏன் புரியவில்லை?

லையாளச் சூழல், அவ்வப்போது கீழிறங்கியும் மேல்நோக்கியும் போய்க்கொண்டிருந்தையும் கடந்தகாலத்தை வைத்து அவதானிக்கமுடியும். ஒருகாலகட்டத்தில் கோலோச்சிக்கொண்டிருந்த மம்முட்டியும், மோகன்லாலும் சரிவின் விளிம்பில் போய்க்கொண்டிருந்தபோது, புதிய இளைஞர்களான வினீத், ஃபாகத், துல்கர், நிவின் போன்றவர்கள் வந்து வேறொரு தளத்திற்கு மலையாளச் சினிமாவை நகர்த்துகின்றார்கள். இந்த மாற்றம் புதிய அலைகளைக் கொண்டு வரும்போது, சரிவில் இருந்த மம்முட்டி, மோகன்லால் போன்றவர்களையும் மீட்டு விடுகின்றது. இன்று அங்கே முன்னணியில் நிற்கும் நாயகர்கள் பிற புதிய அலைவரிசைப் படங்களை தயாரிக்கச் செய்கின்றனர். அனுராக கரிக்கின் வெள்ளத்தை பிருத்விராஜ், ஆர்யா, சந்தோஷ் சிவன் போன்றோர் தயாரிக்கின்றனர். கிஸ்மத்தை வினீத் வாங்கி வெளியிடுகின்றார்.
இன்று கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி, தமக்கென நாயக விம்பங்களில் சிக்கிக்கொண்ட நாயகர்கள் தாங்கள் வித்தியாசமான படங்களில் நடிக்கவிட்டாலும் அவ்வாறு இயக்கப்படும் படங்களை ஆதரவளிக்கலாம். திரைக்கு வெளிவர முடியாது சிக்கித்திணறும் படங்களை வாங்கி வெளியிடலாம். கதாநாயக விம்பங்களுள்ள படங்களும் வரட்டும். ஆனால் அதேசமயம் நமது நிலப்பரப்பை, கலாசாரத்தை, அசல் மனிதர்களை, நமது முக்கிய பிரச்சினைகளைப் பேசும் திரைப்படங்களும் வருவதாலும் நாம் எதையும் இழக்கப்போவதுமில்லை.

(நன்றி: 'அம்ருதா' - தை/2017)

0 comments: