19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடந்த மெக்ஸிக்கோப் புரட்சி, 30 வருடங்களாய் ஆட்சியில் இருந்த டயாஸ் மொறியை பிரான்ஸிற்குத் தப்பியோட வைத்தது. அதன் பிறகு புரட்சிப்படையினருக்குத் தலைமை வகித்த மடேரோ ஜனநாயக முறையில் நிகழ்ந்த தேர்தலில் வெற்றி பெறுகின்றார். எனினும் வலதுசாரிகளால் இவரொரு மிகுந்த தாராளவாதியெனவும், புரட்சியை நடத்திய படையினரால் இவரொரு அதிதீவிர வலதுசாரியெனவும் விமர்சிக்கப்பட்டு ஆட்சியேறிய சில வருடங்களில் கொல்லப்படுகின்றார். 1910ல் புரட்சியை நடத்தி, ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திய மெக்ஸிக்கோ அடுத்த 10 வருடங்களில் மிகப்பெரும் உள்நாட்டுப் போரில் சிக்கித் திணறியுமிருக்கின்றது. வழமை போல அந்நிய சக்தியான அமெரிக்காவின் ஆதிக்கம் இந்த உள்நாட்டுக்குழப்பங்களில் இருந்ததும், கிட்டத்தட்ட மில்லியனுக்கும் மேலான மக்கள் கொல்லப்பட்டதும் கடந்தகால வரலாறு.
இந்த மெக்ஸிக்கோப் புரட்சி பற்றி உள்ளிலிருந்து எழுந்த ஒரு குரலாக Mariano Azuela எழுதிய 'The Underdogs' 1915ல் வெளிவந்திருக்கின்றது. அசதா 'வீழ்த்தப்பட்டவர்கள்' என்ற தலைப்பில் இந்த நாவலைத் தமிழாக்கியிருக்கின்றார். மரியானோ, நிஜ வாழ்க்கையில் ஒரு மருத்துவராக இருந்ததோடன்றி புரட்சிப்படையோடு ஒரு மருத்துவராகப் பல்வேறு பகுதிகளில் பயணித்துமிருக்கின்றார் என்பதையும் நினைவூட்டிப் பார்த்தால், இந்த நாவலில் அசலும் கற்பனையும் நாம் பிரித்துப் பார்க்காது இடைவெட்டிக்கொண்டு போவதும் இயல்பானது எனத்தான் கொள்ளவேண்டும்.
நாவலில் சாதாரண தோட்டக்காரனான டிமிட்ரியோ, நகரமொன்றுக்குப் போகும்போது அங்குள்ள நகரத்தலைவனோடு ஒரு சச்சரவில் ஈடுபடுகின்றான். நகரத்தலைவனோ அன்றைய ஆட்சியிலிருக்கும் பெடரல்களை இவன் மீது ஏவிவிடுகின்றான். இதனால் தன் குடும்பத்தைப் பிரிந்து மலையில் தலைமறைவாக வாழும் அவனோடு, இப்படி பல்வேறு நிலைகளில் பெடரல்களின் மீது கோபங்கொண்ட ஏழைக்குடியானவர்கள் ஒரு இருபது பேர்கள் வந்து சேர்கின்றார்கள். இவர்களைத் தேடி வரும் பெடரல்களின் பெரும்படையை துப்பாக்கிச் சண்டையில் அடித்துத் துரத்துகின்றார்கள். இந்தச் சண்டையில் காயப்படும் டிமிட்ரியோவைத் தூக்கிக்கொண்டு தப்பும் இந்தப்படையினர் மிகவும் வறுமையான குடியானவர்களின் குடியிருப்புக்களில் தலைமறைவாகின்றனர்.
அங்கே இவர்களோடு மருத்துவம் படித்த, பத்திரிகையிலும் எழுதும் செர்வாண்டிஸ் வந்து சேர்கின்றான். முதலில் செர்வாண்டிஸை, பெடரல்களின் அனுப்பு ஒரு உளவுக்காரனென நினைத்து பயங்கரமான தண்டனை கொடுக்கும் டிமிட்டியோவின் படையினர் இறுதியில் அவன் உண்மையிலே அன்று பல்வேறு பகுதியில் பெடரருக்கு எதிராக நடக்கும் மெக்ஸிக்கோ புரட்சியில் பங்குபெறத்தான் வந்திருக்கின்றான் என்ற உண்மையை அறிந்துகொள்கின்றனர்.
புரட்சி மீது மிகப்பெரும் விருப்பும், புரட்சிக்காரர்கள் பற்றி பல்வேறு கதைகளையும் கேள்விப்பட்டு புரட்சிப்படையில் சேர வந்த செர்வெண்டிஸுக்கு, டிமிட்ரியோவின் படையினரைப் பார்க்க மிகுந்த ஏமாற்றமாய் இருக்கின்றது. அற்புத குதிரைகளுடனும், நேர்த்தியான ஆடைகளுடனும், திடமான ஆண்களுமாய் புரட்சிக்காரர்கள் இருப்பார்கள் என்ற எதிர்ப்பார்ப்பிற்கு எதிர்மாறாய் அவர்கள் இருக்கின்றார்கள்.
டிமிட்ரியோவின் காயம் ஆற, அவனது படை பெடரல்களின் அருகிலிருந்த நகரங்களில் தாக்கப் புறப்படுகின்றது. எவ்வித பயமுமின்றி பாய்ந்து போரிடும் அவர்களின் போர்த்திறமையைக் கண்டு பலர் டிமிட்ரியோவோடு வந்து இணைகின்றார்கள். அதுவரை பெடரல்களின் அடக்குமுறையில் இருந்த சாதாரண மக்களும் இவர்களை ஒவ்வொரு நகரிலும் ஆதரிக்கின்றார்கள். பெடரல்கள் பற்றிய தகவல்களை இவர்களுக்கு வழங்குகின்றார்கள். இன்னொரு திசையில் தலைமை தாங்கிக்கொண்டிருக்கும் புரட்சிப்படையின் கேணலால் கூட வெற்றி கொள்ள முடியாத பெடரல்களின் உறுதிமிக்க நகரொன்றை பின்புறத்தால் நுழைந்து, நுட்பமாய் டிமிட்ரியோவின் படையினர் வெற்றிகொள்ள இவனின் புகழ் எங்கும் பெறுகின்றது. புதியவர்கள் எல்லாத்திசையிலிருந்தும் இவர்களோடு சேர்ந்துகொள்கின்றார்கள்.
பெடரல்களின் இறுதிக்கோட்டையையும் டிமிட்ரியோவின் படைகள் ஏனைய புரட்சிப்படைகளோடு சேர்ந்து வெற்றிகொள்ள பெடரல்களின் அட்டகாசம் அடங்குகின்றது. புதிய ஆட்சிமாற்றம் நிகழ்கின்றது. டிமிட்ரியோ ஜெனரலாக பதவியுயர்வு பெறுகின்றான். அவனோடு கூடவே இருந்த செர்வாண்டிஸ் மேஜர் தரத்திற்கு வருகின்றான். இப்போது பெரும்படையோடு இருக்கும் டிமிட்ரியோடு பிளாண்டியும், இன்னொரு பெண்ணும் சேர்ந்தும் கொள்ள, டிமிட்ரியின் படைகள் நகரங்களில் புகுந்து சூறையாடத்தொடங்குகின்றார்கள். மதுவும், மாதுவும் வேண்டிய கொண்டாட்டத்தில் குடியானவர்களின் சொத்துக்களை அபகரித்து, எதிர்ப்பவர்களைச் சுட்டுந்தள்ளுகின்றார்கள். யாருக்காய் போராடப்போனார்களோ அவர்களே வெறுக்கின்ற படைகளாக டிமிட்ரியோவின் ஆட்கள் ஆகிவிடுகின்றனர்.
டிமிட்ரியோ தான் இப்படி மாறிவிட்டான் என்றால், புரட்சி மீது நம்பிக்கைகொண்ட மருத்துவனாய் இருக்கின்ற செர்வாண்டிஸ் எல்லோரையும் விட பணத்தாசை பிடித்தவனாக மாறுகின்றான். அவனைக் காதலித்த இரு பெண்களையும், சொத்துச் சேகரிக்கும் பேராசையில், பிறருக்கு அவர்களை அடகு வைக்கின்றான. அவன் மீதான காதல் பித்தத்தில் இருக்கும் கமீலாவின் காதலை மறுக்க அவனுக்கு தன் பிறப்பால் வந்த அந்தஸ்துதான் ஒரு காரணமென்றாலும், அவளை நம்பவைத்து டிமிட்ரியோவின் இச்சையிற்கு அடிபணியவைப்பது அதிகார இச்சையின் இன்னொரு பக்கம். படித்தவர்கள் விரும்பினால் சமூகத்தை எந்த இழிநிலைக்கும் கொண்டு செல்லத்தக்கவர்கள் என்பதற்கு செர்வாண்டிஸ் மிகச்சிறந்த உதாரணம்.
மீண்டும் தன் சொந்த ஊரான மலைகளின் தேசத்திற்குப் போய் தான் பழைய தோட்டக்காரனாக ஆகிவிடுவேன் என டிமிட்டிரியோ அடிக்கடி கனவு காண்கின்றான்.
ஒருகட்டத்தில் அவன் பெடரல்கள் தன்னைக் கடந்தகாலத்தில் துரத்தும்போது தப்பியோடச் சொன்ன தன் மனைவியையும், பிள்ளையும் காண்கின்றான். மனைவி எல்லாவற்றையும் விட்டுவிட்டு தன்னோடு வந்து சாதாரண வாழ்வு வாழச் சொல்கின்றாள். ஆனால் டிமிட்ரியோவின் காலம் கடந்துவிட்டது. இயல்பான வாழ்க்கையிற்கு இனி என்றென்றைக்குமாய்த் திரும்பிடமுடியாத ஒரு வாழ்வைத் தேர்ந்தெடுத்துவிட்டான்.
செர்வாண்டிஸ் தப்பி வேறிடத்திற்குப் போய், மக்களிடமிருந்து அபகரித்த சொத்தைவைத்து, தன் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டான். இப்போது டிமிட்ரியோவின் படையில் முக்கிய கேணலாய் இருக்கும் தன் நண்பனை, எல்லாவற்றையும் கைவிட்டு பணத்தை அபகரித்துக்கொண்டு மெக்ஸிக்கோ சிட்டிக்கு வரச்சொல்கின்றான். தானும், அவனுமாய்ச் சேர்ந்து ஒரு புதிய உணவகத்தைத் தொடங்கி நிறையச் சம்பாதிக்கலாமென ஆசை காட்டி கடிதம் எழுதுகின்றான்.
டிமிட்ரியோவின் படைகள் மலைக்கிராமத்தில் இருந்தாலும், ஒரு காலத்தில் அவனின் நண்பர்களாய் இருந்து இப்போது எதிர்ப்படைகளாய் இருந்தவர்கள் இவனைச் சுற்றி வளைக்கின்றார்கள். இவனின் மிகத்திறமை வாய்ந்த தளபதிகள் எல்லாம் இவன் கண்முன்னே கொல்லப்படுகின்றார்கள். இவர்களின் படையை விட எண்ணிக்கையில் அதிகமான எதிரிப்படைகள் சூழ்வதை அசட்டை செய்து எதிரிகளைக் குறி பார்க்க துப்பாக்கியை உயர்த்துவததோடு இந்நாவல் முடிகின்றது.
மெக்ஸிக்கோ புரட்சி ஒரு வரலாற்று நிகழ்வு. ஆனால் அதற்காய் மிகப்பெரும் விலையும் கொடுக்கப்பட்டிருக்கின்றது. ஒரு எதிரியை வீழ்த்தத் தொடங்கிய புரட்சி அது எதிர்பார்த்திருக்கவே முடியாத பல திசைகளில் மாறி மாறி இன்னுமின்னும் அழிவையும் கொடுத்திருக்கின்றது. ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்கள் எப்போதும் புரட்சியை இருகரங்கொண்டே ஆதரிக்கின்றார்கள். புரட்சியும், புரட்சிக்காரர்களுந்தான் பலவேளைகளில் தடம் புரண்டுவிடுகின்றார்கள். 30 வருடங்களாய் மேலாய் இருந்த ஒரு சர்வாதிகார ஆட்சியை வீழ்த்தத் தொடங்கிய மெக்ஸிக்கோப் புரட்சியில், புரட்சியில் பங்குபெற்றியவர்களே தங்களுக்குள் அடிபடவேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் ஏற்பட்டு விடுகின்றது.. எப்போதுபோல மக்களே Underdogsயாய் முன்பும் இருந்தார்கள், பிறகு புரட்சி நடந்தபின்னும் அதேநிலையில்தான் இருக்கவேண்டிய நிர்ப்பந்தம் வந்தது என்பதைத்தான் இந்த நாவல் மறைமுகமாய்ச் சொல்கின்றதோ?
(நன்றி: 'பிரதிபிம்பம்')
0 comments:
Post a Comment