நானுன்னை முத்தமிடுகையில்

நானுன்னை முத்தமிடுகையில்
அனுபவப்புனைவு

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

நாடற்றவனின் குறிப்புகள்

நாடற்றவனின் குறிப்புகள்
கவிதை

இந்த ஆண்டு வெளிவந்த சில நூல்கள் - சிறு அறிமுகம்

Wednesday, February 01, 2017


2016ம் ஆண்டு முடிவடைகின்ற இந்த நேரத்தில் ஈழத்து/புலம்பெயர்  இலக்கியச்சூழலை வைத்துப் பார்க்கையில் ஒரளவு நல்ல படைப்புக்கள் வந்திருக்கின்றதெனச் சொல்லவேண்டும். கடந்த ஆண்டில் ஷோபா சக்தியின்  'Box கதைப் புத்தகம்', சயந்தனின் 'ஆதிரை', குணா கவியழகனின் 'விடமேறிய கனவு' மற்றும் *ஜீவமுரளியின் 'லெனின் சின்னத்தம்பி'  என்பவை வெளிவந்து நம்பிக்கையளித்துமிருந்தன.

2016ம் ஆண்டில் குணா கவியழகனின் 'அப்பால் ஒரு நிலம்' போராளியான ஒரு உளவுக்காரரின் கதையைச் சொல்கின்றது. இந்த நாவல், முற்றுமுழுதாகப் புலிகளைப் பற்றிய நாவல்தான். இன்னும் சுருக்கமாய்ச் சொன்னால் புலிகள் கிளிநொச்சி முகாமை ஓயாத அலைகள்-02ன் மூலம் கைப்பற்றுவதற்கு முன்னர் நிகழும் சம்பவங்களைப் பற்றியது.  இதில் பால்ராஜும், தீபனும் வெவ்வேறு பெயர்களில் முக்கிய பாத்திரங்களாவதை ஈழப்போராட்டம் பற்றி அறிந்த எவரும் இலகுவில் அறிவர். சூரியக்கதிர் மூலம் யாழை இராணுவம் கைப்பற்றியது, பிறகு தோல்வியில் முடிந்த சில வலிந்த தாக்குதல்களுக்குப் பிறகு பால்ராஜ் பதவியிறக்கம் செய்யப்பட்ட காலம். அவர் போராளிகளுக்கும் தலைமைக்கும் தன்னை மீண்டும் நிரூபித்துக்காட்ட வேண்டிய பொழுதுகளிருந்து நீள்கிறது இந்த நாவல்.

இதேபோன்று  புலிகளின் அரசியல் பொறுப்பாளர்களில் ஒருவராக இருந்த தமிழினியின் தன் வரலாற்று நூலான 'ஒரு கூர்வாளின் நிழலும்' இந்த ஆண்டு வெளியாகின்றது. தமிழினி இந்த நூலில் போரின் பின் சிறைக்குள் அடைபட்டிருந்த அனுபவங்களிலிருந்து தன் கடந்தகால இயக்க வாழ்வைப் பதிவு செய்தபடிபோகின்றார். இது ஒருவகையில் ஒரு முன்னாள் போராளி தன்னைத்தானே சுயவிமர்சனம் செய்வதோடு, நம் போராட்ட செல்நெறிகள் மீதும் கேள்விகளை எழுப்பியதால் இந்த ஆண்டில் வந்த நூற்களில் மிகச் சர்ச்சைக்குரிய நூலாகவும் அமைந்திருந்தது.  இந்த நூலிற்கு வந்த விமர்சனங்களைத் தொகுத்து பதில் சொல்லியிருக்கவேண்டியவரும், இன்னும் சொல்லப்படாத பல கதைகளைச் சொல்லவேண்டியவரான தமிழினியை இதே ஆண்டு நாம் மரணத்திற்குக் காவுகொடுத்ததும் கவலைக்குரிய  ஒரு விடயம். இந்த நூல் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு பரவலான கவனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தே காலகட்டத்தில் கனடாவிலிருந்து செல்வம் அருளானந்தத்தின் 'எழுதித் தீராப் பக்கங்கள்' வெளிவருகின்றது. செல்வம், பாரிஸிலிருந்த நாட்களில் நிகழ்ந்த சம்பவங்களை மிகுந்த சுவாரசியத்துடன் ஒரு கதைசொல்லியின் நுட்பத்துடன் இத்தொகுப்பில் பதிவு செய்கின்றார். பாரிஸ்ற்குத் தமிழர்கள் அவ்வளவு செல்லத்தொடங்காத 80களின் தொடக்கம் மற்றும் மொழி தெரியாத் திண்டாட்டத்துடன் ஒரு புதிய வாழ்வைத் தொடங்கும் நம்மவர்களின் ஆரம்பச் சுவடுகளை நாம் இந்தப் புத்தகத்தில் அறிந்துகொள்ளமுடியும்.

கனடா-இலங்கை-இந்தியா என பல்வேறு நாடுகளில் மாறி மாறி வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ்நதியின் 'பார்த்தீனியம்' நாவலும் இந்த ஆண்டு வெளிவந்திருக்கின்றது. சயந்தனின் 'ஆதிரை'யைப் போல நிறையப் பக்கங்கள் கொண்ட நாவல் இது. இதன் முக்கிய பின்னணியாக இந்திய இராணுவம் இலங்கையில் வந்திறங்கிய காலம் இருக்கின்றது. பரணி வானதி என்கின்ற இரண்டு முக்கிய பாத்திரங்களுக்குள் முகிழும் காதலினூடாக,  அன்றைய காலகட்டத்தில் நிகழ்ந்த பல சம்பவங்களைப் பற்றி இந்த நாவல் பேசுகின்றதாயினும், அன்றைய காலகட்டத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த  முக்கிய சில சம்பவங்கள் ஏன் பேசப்படவில்லை என்கின்ற விமர்சனம் இந்த நாவலின் மீது வைக்கப்பட்டிருக்கின்றது. எனினும் இவற்றைத்தாண்டி 'அப்பால் ஒரு நிலம்' போல, 'பார்த்தீனியமும்' ஒரு முக்கிய நாவலாக பலரால் விதந்து உரைக்கப்பட்டிருக்கின்றது.

தமிழினியின் 'ஒரு கூர்வாளின் நிழலை'ப்போல, இன்னொரு முன்னாள் போராளியான வெற்றிச்செல்வியின் 'ஆறிப்போன காயங்களின் வலி' என்ற போருக்குப் பின்பாய் சிறைவைக்கப்பட்ட கால அனுபவங்களின் தொகுப்பாய் வந்திருக்கின்றது. இந்த நூல், முற்றுமுழுதாக சிறைக்குள் நிகழ்ந்த சம்பவங்களைப் பற்றிப் பேசுகின்றது. போர்களத்திலும் மற்றும் அரசியல் தளத்திலும் நின்ற பெண்போராளிகளின் உளவியலையும், பின்னர் தோல்வியை ஒப்புக்கொண்டு ஒரு புதிய வாழ்க்கையிற்குத் தம்மைத் தயார்ப்படுத்தவதையும் மிகுந்த வலிகளுடன் இது பதிவு செய்கின்றது. இன்னமும் சிறைக்குள் சென்ற பெண் போராளிகள் பற்றி புறம் கூறுவதையும், சிறையால் வெளிவந்தபின்னும் அவர்களை அக்கறையுடன் கவனிக்காத நம் தமிழ்ச்சமூகம் இந்த நூலை கட்டாயம் நிதானமாக வாசித்துப் பார்க்கவேண்டும்.

தே ஆண்டு, 'கனவுச்சிறை', 'கதா காலம்' போன்ற நல்ல நாவல்களை எழுதிய தேவகாந்தனின் 'கந்தில் பாவை'யும் வெளிவந்திருக்கின்றது. சில நூற்றாண்டுகளில் ஒரு குடும்பத்தில் நிகழும் கதையை கனடாவிலிருந்து கந்தரோடை வரும் நீள்கின்றபடி சுவாரசியமாக தேவகாந்தன் எழுதிச்செல்கின்றார். மேலும் தமயந்தியின் 'ஏழு கடல் கன்னிகள்', .மயூரரூபனின் 'மரத்தில் தொங்கும் பாம்பு' மற்றும் இளையவரான அனோஜனின் 'சதைகள்' போன்ற கவனிக்கத்தக்க சிறுகதைத் தொகுப்புக்கள் வெளிவந்திருக்கின்றன.

அத்துடன் ரெலோ இயக்கத்தைச் சேர்ந்த எல்லாளன் எழுதிய 'ஒரு தமிழீழ போராளியின் நினைவுக் குறிப்புகள்' எனும்அனுபவங்களின் தொகுப்பும்,  NLFT மற்றும் PLFT அமைப்புக்களைக் கட்டியமைத்தவரான விசுவானந்த தேவனைப் பற்றி அவரின் நண்பர்கள் எழுதி தொகுத்த நூலும்,  'தாங்கொண்ணா துன்பம்' என்ற NLFT ஐச் சேர்ந்த அன்ரனைப் பற்றி வெளிவந்த தொகுப்பும்,  நாம் தவறவிடாது வாசிக்கவேண்டிய புத்தகங்களாகும்.

இவை இந்த ஆண்டில் வெளிவந்து என் கைகளுக்குக் கிடைத்த சில நூல்களாகும். இதைவிட வேறு பல புத்தகங்கள் பல்வேறுபகுதிகளிலிருந்து வெளிவந்திருக்கும்.  இதை ஓர் ஆரம்பக்குறிப்பாக வைத்து, விடுபடல்களை பிறரும் எழுதத் தொடங்கினால் இன்னும் நன்றாகவிருக்கும்.

(நன்றி: 'பிரதிபிம்பம்')
* பிரதிபிம்பத்தில் வெளிவந்தபின், லெனின் சின்னத்தம்பி 2015ல் வெளிவந்தது என்பதை நண்பரொருவர் நினைவூட்டினார். திருத்தவேண்டிய குறிப்பு.

0 comments: