நான் படித்த பாடசாலையின் கோயில்
தினமும் காலை நேரப் பிரார்த்தனைக்காய் சுடும் வெயிலில் ஒருகாலத்தில் நாங்கள் நின்றிருக்கின்றோம். அதுவும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாணிக்காவாசகர் பாடிய திருவாசகத்தின் ஒருபகுதியான சிவபுராணத்தை யாரோ ஒருவர் பாட, அதை வரிசையில் நாங்கள் அனைவரும் திருப்பச் சொல்லும்படியான ஒரு கொடும் வழக்கமும் அப்போது இருந்தது. கொடும் வழக்கம் என்பதைச் சிவபுராணத்தைப் பாடியதற்காக அல்ல சொல்லவில்லை, அந்த வெயிலில் எங்களை நெடும்நேரம் நிறுத்தி வைத்திருந்தமைக்காய். அநேகமாய் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் யாரேனும் ஒரு பெண் மயக்கமாகி கீழே விழுந்து கொண்டிருப்பதும் நிகழ்ந்துகொண்டிருக்கும்.
நான் அப்படி ஒருநாளும் மயக்கமானதில்லை. எனெனில் சிவபுராணத்தில் வரும் "பேராது நின்ற பெருங்கருணைப் போராறே /ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே /ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே /நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே" என்று மாணிக்கவாசகர் பாடியதைப் பெண்பாலாக்கி, எதிர்ப்புறத்து நிற்கும் யாரோ ஒரு பெண்ணை நினைத்து உருகி "இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே" என்றொரு பித்துநிலைக்கு வந்துவிடுவதில் அந்தக் காலத்திலேயே நன்கு நான் தேர்ச்சி பெற்றிருந்தேன்.
இந்தக் கோயிலோடு தெரியும் கட்டடத்தைத்தான் சிலவருடங்களுக்கு முன் எங்களின் உறவினர் ஒருவர் கட்டுவதற்கு நிதியுதவி செய்தபோது, இதை கே.பத்மநாதன் (கேபி) இராணுவத்தின் துணையோடு கட்டுகின்றார் என்ற ஒரு செய்தி சுடச்சுட அடிபட்டது. நான் படித்தகாலத்தில் இப்போது போலில்லாது ஸ்கோர்போர்ட் கோயிலுக்கு இடப்பக்கத்தில் இருந்தது.
அப்படியே இன்னும் இடதுபக்கத்திற்கு பாடசாலை மதிலேறிக் குதித்தோ அல்லது மதிலேறாமலோ நேரே போனால் எங்கள் வீடு வரும்.
ஒழிவுதிவசத்து களி
நீண்டகாலமாய்த் தேடிக்கொண்டிருந்த ஒழிவுதிவசத்து களியை தற்செயலாய் Netflixல் கண்டுபிடித்து நேற்றிரவே பார்த்து முடித்திருந்தேன். தேர்தல் நாளில், காட்டுக்குள் சுற்றுலா செல்லும் ஐந்து நண்பர்களின் மகிழ்ச்சியிற்கான சந்திப்பு, குடியின் நிமித்தம் எப்படி விபரீதமாக மாறுகின்றது என்பது பற்றியது இந்தத்திரைப்படம். உன்னி.ஆரின் சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்டாலும், இதைப் படமாக்கியபோது திரைக்கதையே உருவாக்கவில்லை என்பதும், நடிகர்கள் தம் இயல்பில் நடிக்கவிடப்பட்டார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.
அந்தவகையில் திரைக்கதையே இல்லாது பரிட்சித்துப் பார்த்த ஒரு திரைப்படமாகவும் இது முக்கியமடைகின்றது.
அதேசமயம், இந்த உரையாடல்களிடையே வர்க்கம், சாதி, நிறம், ஆண் திமிர் எல்லாம் இயல்பாகக் கொண்டுவரப்படுகின்றது. மிகக்குறைந்த பட்ஜெட்டில் (20 லட்சம் இந்திய ரூபாய்) நம்மைச் சலனமடைய வைக்கும் திரைப்படம் எடுக்கலாம் என்பதற்கு சனல் குமார் ஓர் எடுத்துக்காட்டு. இதற்கு முதல் படத்தை (Oraalppokkam, மீனா கந்தசாமி இதில் நடித்திருக்கின்றார்) crowd fundingன் மூலம் எடுத்தவர். இப்போது ஒழிவுதிவசத்து களியிற்குப் பிறகு Sexy Durga என்ற சர்ச்சைக்குரிய படத்தோடு வந்திருக்கின்றார். கோவா திரைப்படவிழாவில், இந்து அடிப்படைவாதிகளால் இது திரையிடமுடியாது என்று ஒரு சர்ச்சையும் ஓடிக்கொண்டிருக்கின்றது.
ஒழிவுதிவசத்து களி பார்த்துக்கொண்டு இருந்தபோது, நண்பர்களாய் நாம் இலக்கிய/அரசியல் பேசும் பொழுதுகளும், காடுகளுக்குள் சுற்றுலா செல்லும் காட்சிகளும் என் கண்முன்னே விரிந்துகொண்டு இருந்தது. இதே போல உக்கிரமாய் (மதுவோம்/மதுவின்றியும்) நாங்களும் சாதி/ வர்க்கம்/தேசியம்/பெண்ணியம் என விவாதித்துக்கொண்டும் பிளவுபட்டும், மாறிமாறி காயப்படுத்திக்கொண்டிருப்பதும் நினைவுக்கு வந்தது. என்ன, இந்தப்படத்தின் இறுதியில் வரும் ஆபத்தான சூழலுக்கு, நாங்கள் இன்னும்வரவில்லை என்பதை நினைத்துக் கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சை விடவேண்டியதுதான்.
(Nov 09, 2017)
விழித்திரு
நான் தமிழகத்தில் பார்த்த ஒரெயொரு 'சூட்டிங்' விழித்திரு திரைப்படம் மட்டுமே. விழித்திரு இரவில் நிகழும் கதையென வாசித்திருந்தாலும், நான் பகலில் (சாய்)தன்ஷிகாவிற்கும், விதார்த்திற்கும் இடையில் நடக்கும் காட்சியைப் பார்த்திருந்தேன். மாலை ஆகிக்கொண்டிருக்கும்போது இரவுப் படப்பிடிப்பிற்காக தம்பி ராமையா வந்து நிற்பதைக் கண்டேன்.
இதெல்லாம் சாத்தியமாகியது நண்பர் ஹசீனால். அவர்தான் புத்தகக் கண்காட்சியில் அலைந்துகொண்டிருந்தபோது என்னைக் கண்டடைந்தார். அதுவரை நாம் சந்தித்ததுமில்லை; பேசியதுமில்லை. சில நட்புக்கள் தற்செயலாய் மலர்ந்தாலும், அவ்வளவு அழகாக இருக்கும். ஹசீனுடனான நட்பு, அவரின் அக்கறைப்பற்று வீட்டில் இந்த வருடத்தொடக்கத்தில் சிலநாட்கள் தங்கிநிற்பதுவரை விரிந்து வளர்ந்துகொண்டேயிருக்கின்றது.
ஹசீனாலேயே மீரா கதிரவனிற்கு நான் அறிமுகப்படுத்தப்பட்டேன். அடுத்தடுத்த நாட்களில் அவரின் காரிலேயே இருந்துகொண்டு பல்வேறு விடயங்களை (தமிழ்த்திரைச்சூழலில் பெண் இயக்குநர்கள் நிலை உட்பட) அவரோடு கதைக்க முடிந்தது. அவரது ஆற்காட்(?) தெருவிலிருக்கும் அலுவலகத்திற்கு ஹசீனோடு பலமுறை போயிருக்கின்றேன். மீரா கதிரவன் புத்தகங்களை வாங்கிக்குவிக்கும் ஒரு நல்ல வாசிப்பாளராகவும், அவர் அலுவலகம் எங்கும் புத்தகம் நிறைந்து கிடப்பதையும் பார்த்து மகிழ்ந்திருக்கின்றேன். அந்த அலுவலகத்திலேயே பெருமாள் முருகனின் 'கெட்டவார்த்தைகள் பேசுவோம்' நூலை ஷோபாவில் முடங்கிக்கிடந்தபடி வாசித்துமிருக்கின்றேன்.
மீரா கதிரவன் மட்டுமின்றி அவரோடு இருந்த உதவி இயக்குநர்கள்/நண்பர்கள் எல்லோரும் நிறைய புத்தகங்களை வாசிப்பவர்களாக இருந்ததைப் பார்த்திருக்கின்றேன். அவர்களில் இன்னுஞ்சிலர் ஈழப் பிரச்சினை பற்றி ஆழமாக அறிந்து வைத்திருப்பதைக் கண்டு வியந்திருக்கின்றேன். இதையேன் குறிப்பிடுகின்றேன் என்றால், எனக்கொரு கருணாநிதியை/உதயசூரியனைத் தன்னுடம்பில் பச்சை குத்தியிருக்கும் ஒரு வெறித்தனமான தி.மு.க. நண்பர் இருக்கின்றார். அவ்வாறு தன்னையொரு திராவிட அரசியலுக்குள் அடையாளங்காண்கின்ற அவருக்கே, இலங்கையில் இருக்கும் தமிழர்களின் வரலாறு என்பதே, ஆங்கிலேயரின் ஆட்சியில் கோப்பி/தேயிலை பயிரிடுவதற்காய்க் கொண்டு செல்லப்பட்ட தமிழர்களிடம் இருந்து தொடங்குவதாய் அவர் நினைத்துக்கொண்டிருப்பதைப் பார்த்து எனக்கு அதிர்ச்சி வந்ததால்தான் இதைக் குறிப்பிடுகின்றேன்.
நான் பார்த்த படப்பிடிப்பு தரமணிக்கு அருகில் நடந்துகொண்டிருந்தது. இன்னும் துல்லியமாகச் சொல்வதென்றால் அன்று ஜெயலலிதாவின் படத்துடன் இருந்த உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு அருகிலிருந்த பெருமரத்தின் கீழே காட்சியாக்கம் நிகழ்ந்துகொண்டிருந்தது. இங்கேதான் இசையமைப்பாளர் சத்யனையும் சந்தித்தேன். இப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிக்கொண்டிருந்த இன்னொரு மலையாள நண்பருடனும் அறிமுகமாகியிருந்தேன். அவரே நானும் ஹசீனும், கொச்சினுக்குப் போனபோது எங்களுக்கான தங்குமிடத்தை ஒழுங்கு செய்து தந்துமிருந்தார்.
புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு தர்கா பாபா பாடசாலைக்கு அருகிலிருந்த விடுதியில் தங்கியிருந்த நான், பின்னர் திருவண்ணாமலைக்குச் செல்கையில், எனது luggagesஐ எங்கே வைப்பதென யோசித்தபோது, மீரா கதிரவன் தனது அலுவலகத்திலேயே வைத்துவிட்டுப் போகாலமெனச் சொன்னார். அங்கேயே வைத்துமிருந்தேன்.
இன்று, நான் சூட்டிங் பார்த்த அதேபடம் எவ்வளவோ தடைகளுக்குப் பின் வெளியாகின்றது. ஒரு இயக்குநராக எவ்விதப் பெருமையும் கொள்ளாது, ஒரு நல்ல நண்பராக உரையாடி, அரவணைத்துச் செல்கின்ற இந்தப் பண்பு எல்லோருக்கும் வாய்க்காது. யாரென்றே தெரியாது தன்போக்கில் அலைந்துகொண்டிருந்த என்னைப்போன்ற ஒருவனையும் உள்ளிழுத்துக்கொண்ட மீரா கதிரவனின் அன்பு அருமையானது.
(Nov 03, 2017)
0 comments:
Post a Comment