கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

லாவண்டர்பூ குறிப்புகள்

Monday, April 23, 2018

Unlock

ண்பனாக இருந்தாலும், பிடிக்கவில்லை என்றால் திட்டித்தீர்ப்பதென்ற தீர்மானத்துடனே சென்றிருந்தேன். எனக்குத் தோன்றுவதைச் சொல்லும்போது ஏற்றுக்கொள்வாரோ இல்லையோ, ஆனால் Unlock   நிரு கேட்டுக்கொள்வார் என்ற நம்பிக்கை எனக்கிருந்ததும் ஒரு காரணம். 15 நிமிடங்களுக்குள் உட்பட்டது Unlock என்றாலும், பல்வேறு கதைகளை நேரடியாகவும் (மறைமுகமாகவும்) சொல்லியதோடல்லாது, திரைமொழிக்குரிய அழகியலையும் தவறவிடாது இருந்தது பிடித்திருந்தது.

என்னைப் போன்றவர்களின் குழந்தைப் பருவங்களில் கள்ளன் - பொலிஸ் விளையாடும் முறை ஒழிந்து, நாங்களே செய்த 'துவக்குகளில்' புலியும், ஆமியும் உள்நுழைந்த ஆட்டங்களே ஆடப்பட்டிருக்கின்றன. இராணுவம் துப்பாக்கிப் பிரயோகம் செய்யும் சன்னங்களைப் பொறுக்குவதும், உலங்குவானூர்திகளில் அன்றையகாலத்தில் அநேகமாய் ஏவப்படும் (50 கலிபர்/90 கலிபர்) கோதுகளைச் சேகரிப்பதும் எங்களின் பொழுதுபோக்காகவே இருந்தது. இந்த அனுபவங்களை 'எனக்கான தெருக்கள்' என்ற ஒரு அனுபவக் கட்டுரையில் எழுதியிருப்பேன். சோமீயும் 'எரியும் நூலகம்' ஆவணப்படத்தை கொழும்பில் திரையிட்டு, நடந்த கலந்துரையாடலில் சிங்கள நண்பர்களுக்கு, வானிலிருந்து ஹெலியால் சுட்டுச் சாவோம் என்பதைவிட, அதன் துப்பாக்கிச்சூடு தணியமுன்னரே யார் சன்னக்கோதுகளை முதலில் பொறுக்குவது என்பதற்காகவே ஓடுவோம் என்று குறிப்பிட்டதும் நினைவில் இருக்கின்றது.

ஒருவர் எமக்கான கதையைச் சொல்லும்போது ஆவல் வந்துவிடுகின்றது. நிரு, எமது கதையை மட்டுமில்லை, எனக்கான பருவத்திற்குரிய கதையையும் சொல்லியபோது இன்னும் நெருக்கமாகிவிட்டிருந்தது. எப்போதும் எவ்வளவு கூறினாலும், எனக்குள் அடங்கமறுக்கும் ஒரு விமர்சனக்குரலை இரண்டாவது முறையாக Unlockஐப் பார்த்தபோது நிதானமடையச் செய்வதற்குரிய எல்லாச் சிறப்பும், இதில் இருந்தது நிறைவாக இருந்தது.

நண்பா, நமது பாடசாலைக் காலத்தில் குடை வாகைமரத்துப் பூக்கள் நிலத்தில் விழமுன்னர் யார் கூடப் பூக்களைப் பிடிக்கிறார்கள் என்பதிலிருந்து, செய்த குழப்படிக்காய் பாடசாலை மைதானத்தில் நெருஞ்சி முள் விலக்கி முட்டுக்காலில் இருந்தப்பட்டதிலிருந்து, நான் கண்ணாடி போட ஆரம்பிக்கும் பருவத்தில் கண்குறைபாட்டை விளங்கிக்கொள்ளாது, என் பொருட்டு நீ எங்கள் வகுப்பாசிரியரிடம் அடிவாங்கியதிலிருந்து, சொல்வதற்கும் காட்சியாக்குவதற்கும் உன்வசம் நிறையக் கதைகள் இருக்கின்றன.

அதை என்றென்றைக்கும் நினைவில் கொள்க.

(Nov 20, 2017)

Jaffna Bakery

Jaffna Bakery என்கின்ற சர்ச்சையில் சிக்கியிருக்கும் குறுநாவலை நேற்று வாசித்து முடித்திருந்தேன். மிக மோசமான நாவலைக் கூட நேரம் செலவளித்து வீணாக உரையாடல் செய்வது, நம் தமிழ்ச்சூழலில் மட்டுமே சாத்தியம். அதன் பேசுபொருளுக்காக மட்டுமில்லை, ஒரு குறுநாவலாக வருவதற்குரிய கட்டிறுக்கமான எந்தவிதமான மொழியைக் கூட அது கொண்டிருக்கவில்லை என்பதால் எளிதாக விலத்தி வரவேண்டிய ஒன்று. பேச்சுமொழியில் கதையைச் சொல்கிறேன் (நான் வட்டாரமொழிக்கு எதிரானவன் அல்ல) என்று தொடங்கி வாசிப்பவருக்குத் தலையிடி கொடுத்தது ஒருபுறமென்றால், இன்னொருபக்கம் அந்தப் பேச்சுமொழிக்குள்ளேயே நிறைய எழுத்துப்பிழைகள்.

தமிழ்-முஸ்லிம் சமூகங்களிடையே இப்போதுதான் சற்று நிதானமாக உரையாடல்களே தொடங்கியிருக்கும் காலகட்டத்தில் வன்மமான இப்படிப்பட்ட பிரதியின் வரவு எதற்கான அரசியல் என்றும் புரியவில்லை. உண்மையான புலிகள் கூட இந்த நாவலில் சொல்வதைப்போல இப்படி அபத்தமான ஒரு காரணத்தைச் சொல்லி முஸ்லிம்களை வடபகுதியில் இருந்து வெளியேற்றினோம் என்று சொன்னதாகக் கூட நானிதுவரை அறிந்ததில்லை.

முஸ்லிம்கள் வெளியேற்றம் மட்டுமில்லை, முஸ்லிம்களை வெளியேற்றுவதில் அதிக கடுமையைக் காட்டுவதாய்ச் சித்தரிக்கப்படும் கிழக்கு மாகாண புலி(கள்), மோசமான செயல்களைச் செய்ததாகச் சொல்லப்படும் சில முஸ்லிம்களை வெளியேற்ற உதவும் கிறிஸ்தவப் பாதிரிமார்கள் என்று 'வேண்டுமென்றே' சிலரைத் தேர்ந்தெடுப்பதை முன்வைத்து இந்தப் பிரதியை வாசித்தால் ஒரு இந்துத்துவ மனோநிலை கூட இதில் மேலோங்கி நிற்பது நன்கு விளங்கும்.

எவரும் அவர் பக்க நியாயத்தைச் சொல்வதற்கு சுதந்திரமான வெளி எழுத்திலுண்டு. ஆனால் அந்த நேர்மையைக் கூட இந்தக் குறுநாவலில் காணமுடியாததுதான் துயரமானது.


பிரதி சார்ந்து இப்போது நிகழும் உரையாடல்களைப் பார்க்கும்போது எழும் கேள்வி என்னவென்றால், உண்மையில் முஸ்லிம் வெறுப்பு என்பது புலிகளுடையது மட்டுந்தானா இல்லை தமிழ் முழுச்சமூகத்தின் கருத்துதான் அப்படி திரண்டு எழுந்து வந்ததா என்பது. ஏனெனில் தொடக்க காலங்களில் பல இயக்கங்கள் இருந்தபோது, எல்லா இயக்கங்களுமே முஸ்லிம்கள் மீது ஒடுக்குமுறைகளை ஏவிவிட்டிருக்கின்றன.

இந்திய இராணுவ காலங்களில் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் மீது நிகழ்ந்த பல சம்பவங்களை இன்றும் வாசிக்கலாம். புலிகளை மட்டும் காரணமெனச் சொல்லி நீங்கள் X நாங்கள் என்று துவிதங்களுக்குள் தள்ளிவிடுவதன் மூலம் புலிகள் தவிர்த்து பிறர் எல்லோரும் பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியுமா என்றும் யோசிக்க வேண்டும். இல்லாதுவிட்டால் இந்த வெறுப்பின் ஆழங்களுக்குள் சென்று தீர்வுகளையோ, நம்மைத் திருத்தவோ முடியாதுவிடும் அவலம் வரலாற்றில் மீண்டும் நிகழ்ந்துவிடவும் கூடும்.

(Mar 01 , 2018)

Demons in Paradise

Selective narratives ஐக் கொண்டு, நடந்த மறக்கவோ/மன்னிக்கவோ முடியாத கொலைகளை மட்டும் முன்னிருத்தி, எளிதாக சிங்களப் பேரினவாதம் என்கின்ற meta narrativeஐ பிற்பகுதியில் வேண்டுமென்றே தவிர்த்து, ஒரு அரசியல் படைப்புக்கு முன்நிபந்தனையாக இருக்கக்கூடிய, இன்றிருக்கும் அதிகாரத்திற்கு எதிராக உரையாடலைச் செய்யாத, கிட்டத்தட்ட 20 வருட வரலாற்றை (1989-2009) மறைத்த ஒரு ஆவணப்படமான Demons in Paradiseற்குக் கூட ஒரு தார்மீகமான ஆதரவைக் கொடுக்கும் நிலை இந்தத் திரைப்படத்தைத் திரையிட விடாது குழப்ப வந்தவர்களால் வந்துவிட்டது.

பின்னுக்கு நின்று, இந்தத் திரைப்படத்தில் ஒரு முக்கியபாத்திரமாக வரும் NLFT உறுப்பினரைப் பார்த்து, அவர்களின் வரலாறு தெரியும், இரண்டு நாள்களில் இதையெல்லாம் முன்வைக்கின்றோம் என்ற குழப்பவாதிகள், ஆகக்குறைந்தது படத்தில் வரும் அதே நபர், சந்திரிக்காவின் காலத்தின் சிங்களப்பேரினவாதத்தோடு சேர்ந்து இயங்கவும், பிரச்சாரம் செய்யவும், அவர்கள் வழங்கிய பதவியையும் பெறவும் முடிந்தது எந்தவகையான அறம் எனக் கேட்பதற்கான எளிய வரலாற்று அறிவோ இல்லாதது என்பதுதான் துயரமானது.

புலிகளை அழிப்பதற்கு எந்த எதிரான சக்திகளுடன் இணைந்துக் கொள்ளத் தயாரென்று இந்த ஆவணப்படத்தில் சொல்லப்படுவதைப் போல, அங்கிருந்த அடுத்த தலைமுறைகளுக்கு  இலங்கைப் பேரினவாதத்தால் ஒடுக்கப்பட்டவர்களுக்கு, அதற்கு எதிராகப் போராட ஒரு இயக்கமாக (இந்தப் படத்தில் மறைக்கப்பட்ட 1989-2009ல்) புலிகள் இயக்கம் இருந்தது ஒருவகையில் நியாயந்தானே என்று ஒரு கேள்வியைக் கூட கேட்க இந்த 'விசர்' பிடித்த குழப்பவாதிகளுக்கு பொறுமை இல்லை. இதில் வரும் நெறியாளரின் குரலும் புலிகள் அழியவேண்டும் என்பதைத் தெளிவாக முன்வைக்கின்றது என்பதோடு, புலிகள் அழியவேண்டுமென்பதற்காய், அதனோடு எவ்வளவு மக்கள் அழிந்தாலும் ஏற்றுக்கொள்வேன் என்கின்ற மிக மோசமான குரலும் வைக்கப்படுவதைக் கவனிக்கவேண்டும்.

நண்பரொருவர், இதில் முக்கிய பாத்திரமாக வருபவரும், நெறியாளரும் வேறு வேறானவர்கள். அதை ஜூட் என்பவரின் படமாகப் பார்க்கவேண்டும் என்று -தனிப்பேச்சில்- குறிப்பிட்டிருந்தார். என்ன சிக்கலென்றால் நெறியாளராக வரும் ஜூட், 'தனது மாமா தன்னுடைய கதாநாயகன்' என்று இந்த ஆவணப்படத்திலேயே கூறுகின்றார். ஆகவே அவரது கதாநாயகனின் வரலாறு என்ன என்று என்னைப் போன்றவர்களும் இப்படி சந்திரிக்கா காலம் உட்பட பல்வேறு இடங்களில்/சந்தர்ப்பங்களில் என்ன செய்தார் அவரது அங்கிள் எனக் கேட்பதற்கும் இடம் இருக்கின்றது என்றே இப்போதும் நம்புகிறேன்.

(Feb 25, 2018)

0 comments: